முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .

ஸ்ரீ லங்காவில் முல்லைத் தீவுப் பகுதியைச் சேர்ந்த முள்ளிவாய்க்கால் அழிவைத் தமிழ் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். மூன்று வருடங்களுக்கு முன் உலகில் பல நாடுகள் ஸ்ரீ லங்காவோடு இணைந்து புலிகளை அடியோடு இல்லாமலொழித்த சம்பவம் அது. கடற்கரை மணலில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பரிதாபமாக அழிந்த நாட்கள் அவை. எது நடக்கமுடியாது என்று நினைத்திருந்த சம்பவம் நிகழ்ந்த காலம் அது. இப்போது ஸ்ரீ லங்கா வரலாறு ‘முள்ளிவாய்க்காலுக்கு முன்’ என்ற அத்தியாயத்திலிருந்து ‘முள்ளிவாய்க்காலுக்குப் பின்’ என்ற அத்தியாயத்தை ஆரம்பித்திருக்கிறது. போரால் நாடு துண்டாடப்பட்டு ஒரே நாட்டுக்குள் இரண்டு நாடுகள் என்றிருந்த நிலைமை மாறி நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளுக்கு ஸ்ரீ லங்கா மக்கள் போய்வரக்கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கும் காலம் இது. போர், ஆட்கடத்தல், இராணுவ அட்டகாசம் என்ற பயமெல்லாம் சிறிது சிறிதாக மறைந்து இரவிலும் எங்கும் போகலாம் என்ற நிலை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு இன்னும் வந்துவிடாவிட்டாலும் நடுங்க வைத்துக்கொண்டிருந்த கரிய போர் மேகங்கள் களைந்து நீல வானில் அமைதி திரும்பியிருக்கிறது. இருந்தாலும் பழையதை மறக்க சிலருக்கு முடியவில்லை. ‘அனுபவத்தில் இருந்து நாம் படிப்பது ஒன்றுமில்லை’ என்ற வாசகத்தை உறுதிப்படுத்துவதுபோல் தமிழகத்தில் கருணாநிதி ‘டெசோ’வைக் கையிலெடுத்து பழசைப் புதுப்பிக்கப் பார்க்கிறார். செத்த பாம்புக்கு பால் வார்க்கிற கதை இது. ஸ்ரீ லங்கா தமிழர்கள் மீது உண்மையான அனுதாபம் இருக்குமானால் தூரப் பார்வையும், ஆழமான சிந்தனையும் அனுகுமுறையும் தேவையான காலமிது என்பது அவரைப் போன்ற சிலருக்கு புரியவில்லை. இதே நேரத்தில் தமிழர்கள் கதியும் ஸ்ரீ லங்காவில் அத்தனை சிறப்பானதில்லை. அரசியல், சமுதாய அந்தஸ்தை இழந்து நிற்கிறது அந்த இனம்.

எங்கெங்கெல்லாம் மக்கள் ஒரு நாட்டில் சிறுபான்மையினராக வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களுக்கு பிரச்சனைகள் இல்லாமலில்லை. மேலை நாடுகளில் மனிதாபிமானமும், தனியொருவரின் உரிமையைப் பாதுகாக்கும் சட்டங்களும், அரசியல் சட்டமளிக்கும் வசதிகளும், அனுகுமுறையும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பளிப்பதுபோல் கீழைத் தேய நாடுகளில் இல்லை. மேலைத்தேய நாடுகளிலும் இன மத வேறுபாடுகள் காணப்பட்டபோதும் தனிமனித சுதந்திரத்துக்கும், உரிமைகளுக்கும், தேவைகளுக்கும் அரசுகள் மதிப்புக் கொடுக்கின்றன; இனங்களுக்குப் பாதுகாப்பளிக்கின்றன. கீழைத் தேய நாடுகளில் மொழி, மதம், சாதி, பண்பாடு போன்றவைகள் பிரச்சனைகளை அதிகரிக்கும் ஏதுக்களாக இருக்கின்றனவே தவிர அவை எழாமல் இருப்பதற்கு உதவி செய்வதாக இல்லை. கீழைத்தேய நாடுகளில் இனங்களுக்கிடையிலான பிரச்சனைகள் இன்று நேற்றில்லாமல் இருந்திருக்கின்றன. இதைத் தீர்ப்பதற்கு பழைய வழிமுறைகள் இந்த நூற்றாண்டில் உதவுமா என்பது தெரியவில்லை. இருதயத்தில் ஆழமாக, அழுத்தமாகப் பதிந்திருக்கும் இன வேறுபாடு, சந்தேக நோக்கு என்பவற்றைத் தீர்ப்பதற்கு சாதாரண மனித நடவடிக்கைகள் மட்டும் போதுமானதாக இருந்துவிடாது. ஒருவரையொருவர் பிடிக்காத இரண்டு பேரை தனித்தனி அறையில் அடைத்து வைத்தாலும் இருதயத்தில் இருக்கும் வடு இல்லாமல் போய்விடாது. அப்படிப்பட்டதுதான் இந்த இனவேறுபாடு. பிரபாகரன்கூட விடாப்பிடியாகத் தனித் தமிழ் ஈழம் கேட்டதற்கும் அதுவே காரணம். அது கிடைத்திருந்தால் இனங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்குமா? நிச்சயம் இல்லை. எல்லைகளில் படைகளே (இன்றைக்கு பாகிஸ்தான், இந்திய எல்லைகளில் நிறைந்திருப்பதுபோல்) நிறைந்திருந்திருக்கும். இந்திய பாகிஸ்தான் பிரச்சனை ஒரு இனப்பிரச்சனையே. அதை ஏன் தீர்க்கமுடியாமலிருக்கிறது. நாடு துண்டாடப்பட்டுவிட்டபோதும் அது தொடருவதற்கு என்ன காரணம்? ஆழமாக இருதயத்தில் அகல முடியாமல் பதிந்திருக்கும் இனவேறுபாடு தான். தேசிய அளவில் அது இருந்து வருகிறது. இதேபோல்தான் ஸ்ரீ லங்காவிலும். தனிப்பட்ட சிலர் அந்த வேறுபாடில்லாமல் வாழ்ந்தபோதும் பெரும்பாலானவர்களால் அதை மறக்கவோ, மறைக்கவோ முடியவில்லை. சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் தங்களுடைய சுயலாபத்திற்காக இதைப் பயன்படுத்தி தேர்தல் நடக்கும் காலங்களில் இனவெறிக்கு தூபம் காட்டி இரத்தம் சிந்த வைத்துவிடுகிறார்கள். இது தொடருகின்ற ஒரு தொடர்கதை. அதனால்தான் வித்தியாசமான ஆழ்நோக்கும், சிந்தனையும், அனுகுமுறையும் இந்த விஷயத்தில் இன்று தேவை என்கிறேன். பழைய முறைகள் எல்லாமே பிரச்சனையோடிருப்பவர்களைத் தனித்தனி அறைகளில் அடைத்து வைப்பது என்பதில்தான் போய்முடியும். இன்றைக்கு அவை உதவாது. அந்தப் போக்கில் போவதால் பலனேதுமில்லை. அப்படியானால் உங்கள் வழிதான் என்ன என்று உடனேயே நீங்கள் என்னிடம் திரும்பிவிடுவீர்கள் என்பது எனக்கும் தெரியும். அதை விளக்கத்தான் போகிறேன். பொறுங்கள்.

நான் விளக்கப்போகும் தீர்வு ஒரிரு நாட்களிலோ, வருடங்களிலோ நடைமுறையில் வெற்றி பெற்றுவிட முடியாது. அது அரசியல் சார்ந்த முறையோ அல்லது இனங்களைச் சார்ந்த முறையோ அல்ல. இருக்கின்ற எல்லாப் பிரச்சனைகளுக்கும் இன, மதப் பிரச்சனைகளுக்கும் இது மட்டுமே என்னைப் பொறுத்தவரையில் தீர்வாக இருக்க முடியும். இதற்காக நான் விளக்கப் போகும் தீர்வை செயல்படுத்தினால் அது ஸ்ரீ லங்காவின் இரண்டு இனங்களையும் உடனடியாக இணைத்து உலகமே வியக்கும்படி அமைதியாக வாழும்படிச் செய்து விடாது. அந்த உத்தரவாதத்தை என்னால் அளிக்க முடியாது. ஆனால் ஒன்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். இந்தத் தீர்வை நடைமுறையில் அனுபவிக்கும் தனியொரு ஸ்ரீ லங்கா தமிழனும், சிங்களவனும் சுற்றியிருப்பவர்கள் பார்த்து அதிசயிக்கத் தக்க முறையில் நிச்சயம் இணைந்து வாழ்வார்கள். அதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். ஆகா! அந்தத் தீர்வுதான் என்ன என்று வாயைப் பிளக்கிறீர்களா? கவனமாகக் கேளுங்கள்.

மொழி, மத, இன, சாதிப் பிரச்சனைகளுக்கெல்லாமே காரணம் ஒன்றுதான். அதாவது நாம் பிறப்பிலிருந்தே அன்புகாட்டி வாழும் இருதயத்தோடு பிறக்கவில்லை என்பதுதான் அது. நம்மால் இயல்பிலேயே கடவுளில் அன்புகாட்ட முடியவில்லை; அன்பு காட்டவும் முடியாது. அப்படியிருக்கும்போது சுயநலமில்லாமல் சக மனிதன் மேல் மட்டும் நாம் அன்பு காட்டிவிடுவோமா? நிச்சயம் இல்லை. இப்படிக் கடவுள் மீதோ சக மனிதன் மீதோ நம்மால் அன்புகாட்ட முடியாமல் நாம் இருப்பதற்குக் காரணம் நாம் இயல்பிலேயே கோளாருள்ள இருதயத்தோடு பிறந்திருப்பதால்தான். ஒருவராகிலும் இந்த உலகத்தில் இருதயக்கோளாறில்லாமல் பிறக்கவில்லை. அந்தக் கோளாறு நம்மை ஒருவரோடு சேர்ந்துவாழ அனுமதிப்பதில்லை. நம் சொந்த மனைவி,  பிள்ளைகளில்கூட சுயநலமில்லாத உண்மையான அன்புகாட்ட விடுவதில்லை. இந்தக் கோளாறை ஊர்ப் பஞ்சாயத்தும், சமுதாய சீர்திருத்தமும், அரசியல் தீர்வுகளும் அடியோடு தீர்த்துவைக்க முடியுமா? முடியவே முடியாது. இனங்களுக்கிடையில் தற்காலிக சமாதானம் ஏற்பட்டாலும் பிரச்சனை நீருபூத்த நெருப்பாக எரிந்துகொண்டுதான் இருக்கும். கொழுந்துவிட்டெறியவும், வெடித்துச் சிதறவும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருக்க மட்டுமே அதனால் முடியும். இந்தக் கோளாறைத்தான் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வேதத்தில் பாவம் என்று விளக்கப்பட்டிருக்கிறது. பாவத்தினால் இயல்பிலேயே நன்மை செய்ய முடியாத இருதயம் தன்னில் சமாதானம் இல்லாததோடு, கடவுளோடும் மற்றவர்களோடும் சமாதானமில்லாமலும் இருக்கிறது. இது அதனுடைய இயல்பு. இதைப் படிப்பாலோ, அறிவாளோ, மந்திரத்தாலோ, பூஜையாலோ, ஜெபத்தாலோ, அரசியல் தந்திரத்தாலோ, சமுதாய மாற்றங்களினாலோ மாற்றியமைக்க முடியாது. கோளாறான இருதயமுள்ள மனிதனின் சிந்தனைகள் எல்லாமே நேராக இருக்க முடியாததால் அவனால் இதை உணரவும் வழியில்லாமல் இருக்கிறான். அதனால்தான் அவனால் தவற்றை மட்டுமே செய்ய முடிகிறது. ஸ்ரீ லங்காவில் தமிழனாக இருந்தாலும் சரி, சிங்களவனாக இருந்தாலும் சரி இரு சாரருமே பாவிகளாக, இருதயக் கோளாருள்ளவர்களாக, நேராக சிந்தித்து செயல்பட முடியாதவர்களாக ஒருவரை ஒருவர் சந்தேகித்து வாழ்ந்து வருவதற்கு இதுதான் காரணம். சமாதனமில்லாமல் இவர்கள் ஒருவரையொருவர் சந்தேகக்கண்ணோடு பார்த்து வாழ்வதற்கு காரணம் என்ன என்று பார்த்துவிட்டோம், இதெற்கென்ன தீர்வு என்ன என்பதுதானே கேள்வி. அதையுந்தான் பார்ப்போமே.

நாம் இதுவரை கவனித்த மனித இருதயக் கோளாறைத் தீர்க்க இந்த உலகத்தில் இருக்கும் எதனாலும் முடியாது. அப்படி முடியுமானால் காந்தியை கோட்சே சுட்டபோது கண் கலங்கிய இந்தியா எப்போதோ திருந்தியிருக்கும். பாகிஸ்தான் பிரிந்தபோது கொன்று குவிக்கப்பட்ட மக்கள் தொகையைப் பார்த்துப் பரிதவித்த பாரதம் பரிசுத்தமாகியிருக்கும். சுனாமி செய்த அழிவைக் கண்கூடாகக் கண்ட ஸ்ரீ லங்கா மக்கள் என்றோ மனந்திரும்பியிருப்பார்கள். அதெல்லாம் நடக்கவில்லையே. இதிலிருந்து என்ன தெரிகிறது? நம்முடைய இருதயக்கோளாறு மனித சக்தியால், மாறும் உணர்வுகளால் போக்கப்பட முடியாததொன்று என்பதுதான். அதனால்தான் கடவுளும், ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்து நிக்கொதேமு என்ற யூதனொருவனைப் பார்த்துச் சொன்னார், ‘நீ மறுபடியும் பிறக்க வேண்டும்’ என்று. அந்த வார்த்தைகள் பொருள் பொதிந்தவை, ஆழமான உண்மையை அழுத்தமாக வெளிப்படுத்தியவை. தலைமுறை தலைமுறையாக இருந்து வந்த யூத, புறஜாதி இனவேறுபாட்டைக் கிழித்தெறியும் அசகாய வல்லமையுள்ளமை. இனங்களை ஒன்றுபடுத்தி வாழவைக்கும் அற்புத வார்த்தைகள் அவை. இயேசுவின் வார்த்தைகளின் பொருள்தான் என்ன? சுயமாகத் தன்னைத் தானே மாற்றிக்கொள்ள முடியாத மனித இருதயம் கடவுளால் மாற்றப்பட வேண்டுமென்பதுதான். தன்னைத் தானே சீர்திருத்திக்கொள்ளும் வல்லமை மனித இருதயத்துக்கு இருந்திருக்குமானால் நாட்டிலுள்ள அத்தனை ஒழுக்க நூல்களையும், அறிவுரைகளையும், மதப் பெரியவர்களின் ஆலோசனைகளையும் கேட்டும், வாசித்தும் அது என்றோ தன்னைத் திருத்திக் கொண்டிருந்திருக்குமே. அதனால் பூஜை, புணஸ்காரங்களை செய்யத்தான் முடிகிறதே தவிர தனக்கு அழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் விஷத்தைப் போன்றப் பாவக்கோளாறைத் தீர்த்துக்கொள்ள முடியவில்லை. அந்தத் தீர்வுக்கு வெளியில் இருந்து உதவி தேவை. அந்தத் தேவையை நிறைவேற்றக்கூடியவர் கடவுள் மட்டுமே. மனிதனைப் படைத்த அவர் மட்டுமே மனிதனுடைய பாவ இருதயத்துக்கு பாவநிவாரணம் செய்ய முடியும். இதில் விசேஷம் என்ன தெரியுமா? அந்தப் பாவ நிவாரணத்தை மனிதன் அடையத் தேவையானதையெல்லாம் இயேசு கிறிஸ்து ஏற்கனவே செய்து முடித்திருக்கிறார். இஸ்ரவேலில் கல்வாரி என்ற இடத்தில் சிலுவையில் தன்னை இரத்தப்பலியாகக் கொடுத்து மனிதனின் பாவங்களையெல்லாம் தன்மேல் தாங்கி மனிதன் தன் பாவத்திலிருந்து விடுதலைபெறத் தன்னையே இயேசு தியாகம் செய்திருக்கிறார். அந்த இயேசு கிறிஸ்துவிடம் அடைக்கலம் அடைந்து தன் பாவத்தை அவருக்கு முன் அறிக்கை செய்து இருதயமாற்றத்துக்காகவும், அழிவில்லாத ஆத்மீக வாழ்க்கைக்காகவும் அவரை மட்டுமே கடவுளாகவும், ஆண்டவராகவும் விசுவாசிக்கின்ற எவரும் பாவவிடுதலையை உடனே அடைய முடியும். இதைத் தான் இயேசு அன்று யூதனான நிக்கொதேமுவுக்கு சொன்னார். அந்த அனுபவத்தை அடைகிற ஸ்ரீ லங்கா, தமிழனோ சிங்களவனோதான் தன்னுடைய கோளாறான இருதயம் இயேசுவால் புதுப்பிக்கப்பட்டு கடவுளையும், சக மனிதனையும் அன்போடு பார்த்து உறவாட முடியும்.

இதை வாசித்து நீங்கள் ஆச்சரியப்பட வேண்டிய அவசியமில்லை. நடக்கமுடியாத, நடக்காததொன்றை நான் எழுத்தியிருந்தால்தான் நீங்கள் ஆச்சரியப்படவோ இல்லை இது சரியில்லை என்று தள்ளிவிடவோ வேண்டும். நடந்துகொண்டிருக்கிற, நிதர்சனமான உண்மையைத்தான் நான் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஸ்ரீ லங்காவில் இந்தவிதமாதத் தன் பாவத்திற்கு இயேசுவிடம் நிவாரணம் தேடிக்கொண்ட ஒரு சிங்களவரை நான் சமீபத்தில் சந்தித்தேன். அதேவிதமாக பாவநிவாரணத்தை இயேசுவிடமிருந்து பெற்றுக்கொண்டிருக்கிற எனக்கு அவர் புறம்பான மனிதனாகத் தெரியவில்லை. இரத்த உறவைவிட அந்த மனிதனோடு எனக்கு இருக்கும் உறவு பெரியது. இருவரும் இயேசுவின் அன்பை ருசி பார்த்திருப்பதால் ஒருவர் மீது ஒருவர் அன்பைக் காட்ட முடிகிறது. இணைந்து ஒருமனத்தோடு வாழமுடிகிறது. தமிழன், சிங்களவன் என்ற எண்ணமே எங்களிடம் இல்லை. இந்த உலகத்தைச் சார்ந்த அந்த வேறுபாடுகளைக் கடந்தவர்களாக நாங்கள் மாறிவிட்டோம். இந்த மாற்றத்தை நாங்கள் இயேசு கிறிஸ்துவிடம் இருந்து பெற்றுக்கொண்டிருக்கிறோம். நாங்கள் இயேசுவை நம்பி வாழும் சகோதரர்கள். எங்கள் மொழியும், இனமும் வித்தியாசமானதுதான். ஆனால், அவை தடைகற்கள் அல்ல எங்களுக்கு. அவற்றையெல்லாம் கடந்தவர்களாகி விட்டோம் நாங்கள். இப்படியாக எங்களைப் போலவே இயேசு கிறிஸ்துவை தங்களுடைய பாவவிடுதலைக்காக மனந்திரும்பி விசுவாசிக்கிறவர்கள் நிச்சயம் எங்களைப் போல இனப்பாகுபாடற்ற உண்மையான உறவையும் அன்பையும் இயேசுவின் மூலம் அனுபவிக்கலாம். நான் ஸ்ரீ லங்காவுக்கு போனபோது இன்னுமொரு சிங்கள வாலிபர் தன் காரில் என்னை எங்கும் அழைத்துச் சென்றார். அவர் கிறிஸ்துவின் பிள்ளையல்ல. அவருடைய மதம் வேறு. இருந்தாலும் இயேசுவை விசுவாசிக்கின்ற எனக்கு அவரும் புறம்பானவராகத் தெரியவில்லை. அவரையும் என்னால் வேறுபாடு காட்டாமல் பார்க்கமுடிகின்றது. இயேசுவின் அன்பை அவருக்கு காட்டவும், சொல்லவும்கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

இன, மத, மொழிப்பாகுபாடுகளைப் போக்கி மனிதர் ஒருவரையொருவரில் அன்பு காட்ட, பாரபட்சம் காட்டாமல் நெருங்கி வாழ, இயேசுவைத் தவிர வேறு எவராலும் உதவி செய்ய முடியாது. இதுதான் நாம் உங்கள் முன் வைக்கக்கூடிய ஒரே தீர்வு. ஸ்ரீ லங்காவின் ஒவ்வொரு தமிழனும், சிங்களவனும் இயேசுவை விசுவாசிக்கும்போது அந்த நாட்டில் இனவேறுபாட்டுக்கு சாவு மணி அடிக்கப்படும். இன ஒற்றுமைக்கு கடவுள் ஏற்படுத்தியிருக்கும் வழியை அனுபவபூர்வமாக தனிமனிதன் உணர முடியும். இன ஒற்றுமைக்கு உலக வழிகளை நாடிப்போகாமல் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஆணித்தரமாக, அன்போடு தொடர்ந்து பிரசங்கித்தால் நாடு நலம் பெறும். கடவுளின் ஆசீர்வாதம் அங்கிருக்கும். கருணாநிதிக்கோ, ஸ்ரீ லங்காவின் அரசியல்வாதிகளுக்கோ இது எங்கே புரியப்போகிறது.

_____________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

One thought on “முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s