நடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை!

என்னுடைய கடந்த முப்பதொரு வருட கிறிஸ்தவ, சபைப் போதக ஊழியத்தில் கர்த்தரின் அளப்பரிய கிருபையால் திருச்சபைகளில் சிலருடைய ஊழிய அழைப்பிலும், போதக ஊழியப் பிரதிஷ்டையிலும், உதவிகாரர் பிரதிஷ்டையிலும் பங்கேற்கும் ஆசீர்வாதத்தை நான் அடைந்திருக்கிறேன். அந்த ஆசீர்வாதத்தை நான் மிகவும் பொறுப்புள்ளதாகக் கருதுவதோடு, என்னில் காணப்படும் எந்தவிதத் தகுதியின் அடிப்படையிலும் அடைந்ததாக நான் கருதவில்லை. கர்த்தர் செய்துவருகின்ற பெருங்காரியங்களில் அவர் இஷ்டப்பட்டு பயன்படுத்திக் கொண்ட சாதாரண கருவியாக மட்டுமே என்னை அடையாளங் காணுகிறேன். அவருக்கே சகல மகிமையும் சேர வேண்டும்.

ஊழிய அழைப்பும், போதகப் பிரதிஷ்டையும் சாதாரணமானவையல்ல. மிகவும் பயபக்தியோடு அணுக வேண்டிய பக்திக்குரிய விசேஷ அம்சங்கள். துரதிஷ்டவசமாக நம் தமிழினத்தில் இவை மிகவும் சாதாரணமானதாக, பலரும் உலக இச்சைகள்கூடிய நோக்கங்களோடு இணைந்துகொள்ளும் தொழிலாகக் கருதப்படுகின்றன. இந்தப் பணிகளுக்குரிய வேத இலக்கணங்களை ஒரு துளியும் சபைகளும், இப்பணியை நாடுகிறவர்களும் கவனித்துப் பார்ப்பது கிடையாது. இதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. உங்களுக்கே இது நன்றாகத் தெரியும்.

சிலருடைய ஊழிய அழைப்பிலும், பிரதிஷ்டையிலும் பங்குகொள்ளும் ஆசீர்வாதம் எனக்கிருந்ததாக சொன்னேன் இல்லையா? அவர்களை நினைத்துப் பார்க்கிறேன். அவர்களில் அநேகர் தொடர்ந்து தங்களுடைய இருதயத்தைக் காத்துக் கொண்டு கர்த்தரின் பணியை ஆத்தும தாகத்தோடு தங்களை இழந்து செய்து வருவது எனக்கு ஆனந்தத்தை அளிக்கிறது. எனக்காக மட்டுமல்லால் அவர்களுக்காகவும் நான் தொடர்ந்து ஜெபிக்கிறேன்.

போதக ஊழியத்தில் இருக்கின்ற எல்லோருமே கர்த்தருடைய மனிதர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது. கர்த்தருடைய ஆசீர்வாதத்தை இழந்து சிலர் அப்பணியிலிருந்து இறக்கப்பட்டு விட்டாலும், சிலர் ஆசீர்வாதங்களை எப்போதோ இழந்துவிட்டு நடைப்பிணமாக அந்தப் பணியில் தொடர்ந்திருப்பது எல்லோரும் அறிந்ததுதான். போதகப் பணியில் தொடர்ந்திருப்பதல்ல கர்த்தர் ஒருவனோடிருக்கிறார் என்பதற்கு அர்த்தம். அவன் அந்தப் பணியில் இருக்கும்போது எப்படி வாழ்கிறான்? எந்தவிதமாகத் தன் பணிகளைச் செய்கிறான்? என்னவிதமாகத் தன்னை இழந்து ஆத்துமாக்களை ஈடுபாட்டோடு மேய்க்கிறான்? என்னவிதமாக கர்த்தருடைய ஐக்கியத்தில் ஏனோக்கு போல ஆனந்தமடைந்து வருகிறான்? சத்தியத்தில் எந்தவிதமாக வளர்ந்து தன்னையும் சத்தியத்தையும் காத்துக்கொள்ளுகிறான்? சத்தியத்தை சத்தியமாக ஆவிக்குரிய வல்லமையோடு பிரசங்கித்து ஆவியின் அனுக்கிரகத்தை பிரசங்க ஊழியததில் காண்கிறானா? கைச்சுத்தம், மனச்சுத்தம், சரீர சுத்தம் என்று உலக ஆசைகள் அனைத்திலும் இருந்து தன்னைத் தொடர்ந்தும் காத்துக்கொண்டு அந்தப் பணியைத் தன் குடும்பத்துக்கும், சபைக்கும் விசுவாசமாக இருந்து செய்துவருகிறானா? என்பவற்றிலிருந்தே கர்த்தர் அவனோடிருக்கிறாரா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இதையெல்லாம் இழந்து போதகப் பணியில் நடைப்பிணமாகத் தொடர்ந்திருந்து வருவது மிகவும் கொடூரமானது.

இதையெல்லாம் நான் எழுதுவதற்குக் காரணம் என்னுடைய நெருங்கிய நண்பரொருவர், என்னைவிட மிக இளையவராயிருந்தபோதும் சமீபத்தில் போதகப் பணியில் நியமிக்கப்பட்டார். அதில் கலந்துகொள்ள சூழ்நிலை என்னை அனுமதிக்கவில்லை. கலந்துகொள்ள முடிந்திருந்தால் அதைப் பெரும் ஆசீர்வாதமாகக் கருதியிருப்பேன். பல வருடங்களாக அவரையும் அவருடைய குடும்பத்தையும் தெரிந்திருந்து, போதகப் பணிக்கான இதயமும், ஈவுகளும் அவரிடம் இருப்பதை அடையாளங்கண்டு அதை வெளிப்படையாகவும் தெரிவித்திருக்கிறேன். சபை மூப்பர்களுக்கும் தெரிவித்திருக்கிறேன். நான் செய்து வருகிற பணிகளிலும் பங்கேற்க வைத்து, அது பற்றி நேரம் போவது தெரியாமல் கலந்துரையாடி, கருத்துக்களைப் பரிமாறி ஆவிக்குரிய நன்மைகளைப் பரஸ்பரம் அடைந்திருக்கிறோம். அவருடைய வாழ்க்கையில் இந்த முறையில் நான் ஓரளவுக்கு பங்கேற்க கர்த்தர் வழியேற்படுத்தி எங்களை இணைத்திருப்பது அவருடைய வழிநடத்தல்களில் ஒரு பகுதிதான். கர்த்தர் அவரை வழிநடத்தி தன்னுடைய சித்தப்படி போதகப் பணிக்கு பிரதிஷ்டை செய்ய சபையையும் ஊக்குவித்து ஆசீர்வதித்திருக்கிறார். அவரால் சபைக்கு அநேக ஆசீர்வாதங்கள் கிடைத்து கர்த்தரும் மகிமையடைய வேண்டுமென்பது தான் என்னுடைய ஜெபம்.

_____________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s