பண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்

இந்த மாதத்தில் இரண்டு திருமணங்களை நடத்தி வைத்து, இன்னொரு திருமண வைபவத்தில் செய்தி கொடுத்து, சிலருக்கு திருமணம் பற்றிய ஆலோசனையும் கொடுத்து, அதற்கும் மேல் ஒரு நாள் சிறப்புக் கூட்டமொன்றில் மூன்று தடவைகள் திருமணத்தைப் பற்றியும், குடும்பத்தைப் பற்றியும் பிரசங்கமும் செய்திருக்கிறேன். திருமணத்தோடு சம்பந்தப்பட்ட இத்தனையையும் செய்திருக்கும்போது நம்மினத்துத் திருமணங்களைப் பற்றிக் கொஞ்சம் ஆழமாக சிந்தித்துப் பார்க்காமல் இருக்க முடியுமா? கிறிஸ்தவர்கள் மத்தியில் நம்மினத்தில் திருமணத்தைப் பற்றிய சிந்தனைகள் வேதபூர்வமாக இல்லையென்பது என்னுடைய நீண்ட நாள் ஆதங்கம். திருமண நாளில், அது ஒரு சபையில் நிகழ்ந்துவிட வேண்டும், ஒரு போதகரால் நடத்தி வைக்கப்பட வேண்டும், கிறிஸ்தவ பாடல்களும், ஜெபமும் இருக்க வேண்டும் என்பதற்கு மேல் வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் கிறிஸ்தவ வேதம் போதிக்கின்ற முறையில் நம்மவர்கள் திருமணத்தைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை. திருமணம் செய்து கொள்ளப்போகிறவர்களுக்கும் அதுபற்றிப் பெரும்பாலும் அவசியமான எந்த ஆலோசனைகளும் அளிக்கப்படுவதில்லை. திருமணத்திற்கும் கிறிஸ்தவ வேதத்திற்கும் பெரிய தொடர்பிருப்பதாக பொதுவாகவே நம்மவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. திருமணத்தைப் பொருளாதார, சமுதாய அளவில் அவசியமானதொரு நிர்ப்பந்தமாக மட்டுமே நம்மவர்கள் எண்ணி வாழ்கிறார்கள் என்பதை மட்டும் என்னால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இதற்கெல்லாம் காரணங்கள் இல்லாமலில்லை. அந்தக் காரணங்களைப் பற்றி எழுதுவதானால் எங்கு ஆரம்பித்து எங்கே போய் முடிப்பது என்ற தவிப்பும் எனக்குள் ஏற்படாமலில்லை.

கிறிஸ்தவம் நம்மினத்தவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன் பொதுவாக நம்மில் பெரும்பாலானவர்கள் சிலை வணக்கத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கிறோம். ஒரு தலைமுறைக்கு மேல் கிறிஸ்தவர்களாக இருந்திருப்பவர்களும் சிலை வணக்க சமுதாயத்திலிருந்தே கிறிஸ்தவர்களாகியிருக்கிறார்கள். நம்மினத்து சிலை வணக்க தெய்வ வழிபாடு சாதியை அடிப்படையாகக் கொண்டது. சாதிகளில்லாத சிலை வணக்க வழிபாட்டை நம்மத்தியில் பார்க்க முடியாது. சாதியை அழிக்க முடியுமானால் சிலை வணக்க தெய்வ வழிபாட்டையும் இல்லாமலாக்கிவிடலாம். ஒன்றில்லாமல் மற்றது இருக்க வழியில்லை. அத்தோடு சாதியை அடித்தளமாகக் கொண்டிருக்கும் சிலை வணக்க வழிபாடு ஒரே சாதிக்குள் நெருங்கிய இரத்த உறவு கொண்டவர்கள் திருமணம் செய்துகொள்வதை அனுமதித்து சமுதாயத்தில் சாதீயத்தைப் பாதுகாக்கிறது. இதெல்லாம் சிலை வணக்க சமுதாயத்தில் ஊறிப்போய் இந்தவிதத்திலேயே திருமணத்தையும் குடும்ப வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலையை சாதாரணமாக்கிவிட்டிருக்கிறது. காலம் போகப் போக இதுவே தமிழ்ப் பண்பாடாக உருமாறியிருக்கிறது. உண்மையில் நம்மினத்தில் சிலை வணக்க சாதிப் பண்பாடு எது, தமிழ்ப் பண்பாடு எது? என்று பிரித்துப் பார்க்க முடியாதபடி இரண்டும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. இதெல்லாம் நம்மினத்துக் கிறிஸ்தவத்தைப் பாதிக்காமலில்லை. இயேசுவை ஆண்டவராக விசுவாசித்து சிலை வணக்கத்தை விட்டுவிட்டவர்கள்கூட சாதி வேறுபாடு பார்ப்பதையும், நெருங்கிய இரத்த உறவு முறையில் திருமணம் செய்து கொள்வதையும் இன்றும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அடிப்படையில் சாதி வேறுபாடு பார்ப்பதில்லை என்று சொல்லுகிறவர்களால்கூட ஏதோவொருவிதத்தில் தர வேறுபாடு பார்க்காமல் இருக்க முடியவில்லை.

நம்மினத்தில் சுவிசேஷம் அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்தே கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் நெருங்கிய இரத்த உறவு முறையில் இருந்தே பெண்ணெடுத்தும் பெண் கொடுத்தும் இருக்கிறார்கள். மாமா, அத்தை முறையில் இருப்பவர்களுடைய பிள்ளைகளைத் திருமணம் செய்வது நம்மவர்கள் மத்தியில் சர்வசாதாரணம். அப்படியில்லாதபோதுதான் வெளியில் இருந்து ஒருவரைத் தேட வேண்டியிருக்கிறது. இது ஒரு பண்பாடாக வளர்ந்திருக்கிறது. இதெல்லாம் சரியாக நடந்து சமுதாயப் பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால்தான் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு திருமணத்தை நிச்சயித்து நடத்தும் வழக்கம் ஏற்பட்டு அது இன்றும் தொடர்கிறது.  இந்தப் பண்பாடு எங்கிருந்து எப்படி வந்தது என்று கிறிஸ்தவர்கள் ஒருபோதும் கேட்டுப் பார்ப்பதில்லை. பொருளாதார அந்தஸ்து பார்ப்பதும் கிறிஸ்தவர்கள் மத்தியில் சாதாரணமாகவே இருந்து வருகிறது. ஒரு டாக்டர் டாக்டர் பெண்ணையும், இன்ஜினீயர் இன்ஜினீயர் பெண்ணையும், பேராசிரியர் பேராசிரியையும் திருமணம் செய்ய வேண்டும் என்பது நம் சமுதாயத்தில் எழுதப்படாத நியதியாக இருந்து வருகிறது. இந்த முறையில் சாதி, சமுதாய அந்தஸ்து, பொருளாதார வசதி, நெருங்கிய இரத்த உறவு பார்த்து திருமணத்தை அனுகுகின்ற தமிழ்ப் பண்பாடு கிறிஸ்தவர்கள் மத்தியில் சர்வ சாதாரணமாக தொடர்ந்திருந்து வருகிறது. இவையெல்லாம் வேத போதனைகளோடு தொடர்பில்லாத சிலை வணக்கப் பண்பாட்டு சிந்தனைகள் என்ற உணர்வில்லாமல் நம்மவர்கள் இருந்து வருகிறார்கள். இதனால் கிறிஸ்தவர்கள் மத்தியில் திருமணம் இன்று வேதத்துக்கு முரணான தமிழ்ப் பண்பாட்டுச் சிறையில் உட்கார்ந்து பரிதவித்துக் கொண்டிருக்கிறது.

கிறிஸ்தவ விசுவாசம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டது. கிறிஸ்தவ வாழ்க்கையில் எந்த விஷயமாக இருந்தாலும் வேதத்தை ஆராய்ந்து பார்த்து அதன் போதனையின்படி செயல்பட வேண்டியது கிறிஸ்தவர்களின் கடமையாக இருக்கின்றது. வேதத்தின் போதனைகளின்படி நம் பண்பாட்டில் இருக்கும் சகல சிலை வணக்கப் பண்பாட்டு சிந்தனைகளும், நடைமுறைகளும் அடியோடு மாற்றப்பட வேண்டும். கிறிஸ்தவ வேதத்தின்படி வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளும் அமையும்போதுதான் கிறிஸ்துவின் ஆளுகை நம் வாழ்க்கையில் நடக்கின்றது என்று நாம் உறுதியாக சொல்ல முடியும். கிறிஸ்தவ விசுவாசத்தோடு தொடர்பில்லாததாக எண்ணி திருமணத்தையும் குடும்ப வாழ்க்கையும் அனுகுவது நமது வேத அறியாமையையும், நம் வாழ்க்கையில் ஆழமாகப் பதிந்திருக்கும் சிலை வணக்கப் பண்பாட்டுச் சிந்தனையின் ஆளுகையையும் தான் சுட்டிக்காட்டுகின்றது. இது தொடருமானால் நாம் உண்மையிலேயே கிறிஸ்துவையும், அவர் வார்த்தையையும் நம்பி வாழ்கிறோமா என்றுதான் கேட்டுப்பார்க்க வேண்டும். வேத வார்த்தைகளை நம்பி வாழாமல் நம்மைச் சுற்றியிருக்கும் சமுதாய சிந்தனைப் போக்குக்கு கிறிஸ்தவத்தில் இடங்கொடுக்க ஆரம்பித்தபடியால்தான் மூன்றாம் நூற்றாண்டுகளுக்குப் பின் அதிவேகமாக ரோமன் கத்தோலிக்க மதம் உருவாகி, உயர்ந்து மெய்க் கிறிஸ்தவத்தை அழிக்க முனைந்தது. போலித்தனமான சிலை வணக்க சமுதாய சிந்தனைப் போக்குகள் தமிழ் கிறிஸ்தவ சமுதாயத்தில் தொடரும் வரை மெய்க்கிறிஸ்தவத்தின் வலிமையையும், ஆவிக்குரிய எழுப்புதலையும் அதில் நாம் பார்க்க வழியில்லை. நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் ஆளுகை செலுத்தி வரும் சிலை வணக்கப் பண்பாட்டு சிந்தனைகளை அகற்ற என்னதான் வழி? என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு பதில் கூறுவது சுலபம், ஆனால் நடைமுறையில் பின்பற்ற மிகுந்த மன வலிமையும், வைராக்கியமும் தேவை.

முதலில் திருமணத்தைப் பற்றிய வேத சிந்தனைகளும், நம்பிக்கைகளும் நமக்கு அவசியம். திருமணத்தை உருவாக்கியவர் கடவுளே. ஆதியில் அவர் ஆதாமைப் படைத்து அவனுக்குத் துணையாக ஏவாளையும் உருவாக்கி இருவரையும் திருமணத்தில் இணைத்தார். இதிலிருந்து திருமணம் மனித சிந்தனையில் உருவானதொன்றல்ல என்பதையும், அதைக் கடவுளே மனிதனுடைய நன்மைக்காக ஏற்படுத்தினார் என்பதையும் அறிந்துகொள்ளுகிறோம். அத்தோடு, ஆதாமும் ஏவாளும் தன்னுடைய கட்டளைகளைப் பின்பற்றி வாழ்கிற வரையில் அவர்கள் குடும்ப வாழ்க்கை நன்மையாக இருக்கும் என்று கடவுள் சொல்லியிருந்தார். கடவுளுடைய கட்டளையை மீறியதாலேயே ஆதாமும் ஏவாளும் பாவத்தில் வீழ்ந்து குடும்ப வாழ்க்கையை அழித்துக் கொண்டார்கள். ஒற்றுமையாக அன்புகாட்டி வாழ வேண்டியவர்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து நிற்கும் இருதயத்தை அடைந்தார்கள் (ஆதி. 3:16). அன்றிலிருந்து திருமணமும் சீர்குலைந்தது. பாவம் மனிதனைக் கடவுளை நாட முடியாத தூரத்தில் தள்ளிவிட்டது. பாவம் கடவுளின் கட்டளைகளைப் பின்பற்ற வழியில்லாத இருதயத்தை மனிதனில் ஏற்படுத்தியது. இதுவே மனிதன் திருமணத்தைப் பற்றியும், குடும்பத்தைப் பற்றியும் கடவுளுக்கெதிரான எண்ணங்களைக் கொண்டிருப்பதற்குக் காரணம். (ஆதி. 1-3).

பாவநிலையில் இருக்கும் நம்முடைய சமூகத்தின் பண்பாடு பாவக் கறையுடைய பண்பாடாகவே இருக்கிறது. அதிலிருக்கும் பாவத்தை பாவநிலையில் இருக்கும் மனிதனால் பார்க்க முடிவதில்லை. பாவிக்கு விடுதலை தேவைப்படுவதுபோல் நமது பண்பாட்டுக்கும் விடுதலை தேவைப்படுகிறது. கிறிஸ்துவை விசுவாசிக்கும்போதுதான் ஒருவருக்கு கிருபையின் மூலமாக பாவத்தில் இருந்து விடுதலை கிடைக்கிறது. அதேவேளை அந்த நபர் தன்னுடைய சமூக வழக்கங்களையும், பண்பாட்டையும் வேத அடிப்படையில் மாற்றிக்கொள்ளவும் வழி கிடைக்கிறது. வேதத்துக்கு முரணான, எதிரான அனைத்தையும் விலக்கிக் கொள்ள கிருபையின் மூலம் விடுதலை கிடைக்கிறது. இந்தக் கிருபையின் பார்வை அவன் பாவநிலையில் இருந்தபோது அவனுக்கு இருக்கவில்லை. அதை இப்போது கிறிஸ்துவின் மூலம் அவன் அடைந்திருக்கிறான். தன் பண்பாட்டை இப்போது அவனால் கிறிஸ்துவின் கண்களோடு, விசுவாசக் கண்களோடு, வேதக் கண்களோடு பார்க்கக்கூடிய வல்லமை கிடைத்திருக்கிறது.

தன் பண்பாட்டை சீர்திருத்திக்கொள்ள கிறிஸ்தவனுக்கு வேத அறிவு இருக்க வேண்டும். வேதத்தைப் பயன்படுத்தி நம் வாழ்க்கை முறையையும், பண்பாட்டையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் காணப்படும் அவலங்களையெல்லாம் அகற்றிக் கொள்ள வேண்டிய பெருங்கடமை தமிழ் கிறிஸ்தவனுக்கு இருக்கிறது. நம் பண்பாட்டின் பாவக்கறைகளை, அவற்றை நியாயப்படுத்தாமல் இந்த முறையில் அவன் நீக்கிக் கொள்ள வேண்டும். சாதி வித்தியாசம் பார்க்கும் கொடுமையை அவன் தன்னில் இனங்கண்டு அதைத் தன் இருதயத்தில் இருந்து அகற்றிக் கொள்ள வேண்டும். அதேபோல் அவன் திருமணத்தைப் பற்றிய சிந்தனைகளிலும் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியவனாக இருக்கிறான். பாவத்தினால் ஏதேனில் சீர்குலைந்துவிட்ட திருமணத்தை அவன் கிருபையின் துணையோடு மீட்டெடுத்து அதன் பயன்களை அடைய வேண்டியவனாக இருக்கிறான். திருமணத்திற்கு கிருபையின் மூலம், கிருபையின் நிலையிலேயே மறுபடியும் விடுதலை கிடைக்கிறது. தமிழ்ப் பண்பாடு சிலை வணக்கப் பண்பாட்டை ஆதாரமாகக் கொண்டிருப்பதால் தமிழ் கிறிஸ்தவன் அதன் பாவத்தன்மைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து வேத அடிப்படையில் திருமணத்தை அனுக வேண்டியவனாக இருக்கிறான். சாதி வேறுபாடு காட்டாமலும், நெருங்கிய இரத்த உறவில் பெண்ணெடுக்காமலும், அநாவசிய வயது வேறுபாடு பார்க்காமலும், பொருளாதார சமூக நிர்ப்பந்தமாக திருமணத்தைக் கருதாமலும் இருந்து பெற்றோரின் விருப்பத்துக்கு மட்டும் தலை சாய்க்கும் பொம்மையாய் இல்லாமல் தனக்குப் பிடிக்கிறவளை மணப்பதும், எல்லாவற்றுக்கும் மேலாக உண்மையாகவே இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து மனந்திரும்பியிருக்கிற ஒருத்தியை மட்டுமே கரம் பிடிப்பதும் அவனுடைய தலையாய கடமைகளாக இருக்கின்றன. இத்தனையையும் செய்ய அவன் தமிழ்ப் பண்பாட்டை வேத அடிப்படையில் ஆராய்ந்து பார்த்து வேத விரோத அம்சங்களை திருமணம் பற்றிய சிந்தனைகளில் இருந்து வைராக்கியத்தோடு அகற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அத்தோடு மெய்யான விசுவாசத்தோடு கிறிஸ்துவைப் பின்பற்றி திருமண காரியங்களில் ஈடுபட வேண்டியிருக்கிறது. இதையே கிறிஸ்துவை விசுவாசிக்கின்ற ஒரு பெண்ணும் செய்ய வேண்டியிருக்கிறது. நடைமுறையில் இது சுலபமானதாக இருக்காது. பல்வேறு பிரச்சனைகளையும், எதிர்ப்புகளையும் பாவசமூகத்தில் சந்திக்க நேரிடும். ஆனால், கிறிஸ்தவன் கிறிஸ்தவனாக இருந்து திருமணத்தைப் புனிதமானதாகக் கருதி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டுமானால் இதை எதிர்கொள்ளுவதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. இந்த விஷயத்தில் கிறிஸ்தவ பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளின் திருமண விஷயத்தில் வேதபோதனைகளை மட்டும் பின்பற்றி அவர்களுடைய சுதந்திரத்தையும், கடமைப் பொறுப்புகளையும் பாதிக்காமல் நடந்துகொள்ள வேண்டும்.

பெற்றோர் பார்த்து நிச்சயித்து காலாகாலத்தில் கல்யாணம் செய்து வைப்பார்கள், நமக்கிதில் எதுவுமில்லை என்று திருமணத்தைப் பற்றிய ஆரோக்கியமான வேத சிந்தனைகளில்லாமலும், தமிழ்ப்பண்பாட்டு அவலங்களை இந்த விஷயத்தில் எதிர்த்து நிற்க இருதயம் இல்லாமலும் வாளாவிருந்துவிடும் தமிழ் கிறிஸ்தவனும், கிறிஸ்தவப் பெண்ணும் உண்மையில் கிறிஸ்துவுக்கு அடிமைகளல்ல. பாவத்தால் சீர்குலைந்திருக்கும் திருமணத்தைக் கிருபையால் வெற்றிகொள்ளத் தவறும் கிறிஸ்தவர்களின் திருமணமும், குடும்ப வாழ்க்கையும் பாவக் கறையுடனேயே இருக்கும். இந்த நிலை தொடர்ந்தால் அவர்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் குளறுபடியுள்ளதாகவே தொடரும். இம்முறையிலேயே வேத வல்லமையில்லாத, ஆவிக்குரிய பலமற்ற பாரம்பரியக் கிறிஸ்தவம் நம்மினத்தில் உருவானது. வேத அறியாமையை கர்த்தர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளுவதில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையையும், பண்பாட்டு அவலங்களையும் எதிர்நோக்கும் சக்தியில்லாமல் தன்னை அவற்றிற்கு பலிக்கடாவாக்கிக் கொள்ளும் ‘கிறிஸ்தவன்’ மெய்க்கிறிஸ்தவனாக இருந்து கிறிஸ்துவின் கட்டளைகளை நேசித்துப் பின்பற்ற வழியில்லை. ‘என்னை நேசிப்பாயானால் என் கற்பனைகளைப் பின்பற்று’ என்று இயேசு சொல்லியிருக்கிறாரே.

ஏதேனில் கடவுள் ஏற்படுத்திய திருமணம் புனிதமானது. அதில் பாவக்கறை இருக்கவில்லை. ஆதாமும், ஏவாளும் பலகாலம் சமாதானத்தோடும், அன்போடும் குடும்பவாழ்க்கை நடத்திவர முடிந்தது. அந்நிலை தொடர வேண்டும் என்றே கடவுளும் விரும்பினார். அதற்காக மட்டுமே அவர் திருமணத்தை உருவாக்கியிருந்தார். அதை மனிதனின் பாவம் சீர்குலைத்து விட்டது. கடவுளின் கிருபையை இயேசுவின் மூலம் ருசி பார்த்து பாவத்தில் இருந்து விடுதலை பெற்றிருப்பவர்கள் திருமணத்தைக் கிருபையின் கண்களோடு பார்க்க வேண்டும். தமிழ்ப் பண்பாட்டுச் சிறையில் உட்கார்ந்து பரிதவித்துக்கொண்டிருக்கும் திருமணத்திற்கு கிருபையின் துணையோடு விடுதலை தேடித் தர வேண்டும். முடியுமா உங்களால்?

_____________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

7 thoughts on “பண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்

 1. there is a practical issue in this type of intercaste marriage people used to say tat if a boy of certain high class marry a girl of low class it becomes a problem with their both families because their family principles and the girls family principles r totally different because in our country marriage unites two families, this is wat many people say wen i asked abt why u r marrying in same caste wen god has made us all equal…

  Like

 2. I need tirumaraideepam in Tamil Version please send to the following address
  Sis.C.kANNAMMAL
  Plot No 11 Beathel Royal GARDEN 6TH STREET
  KARUPPAYURANI PO Madurai 625020

  Like

 3. கர்த்தருக்குள் பிரியமான திருமறை தீபத்தின் ஆசிரியருக்கு, நான் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக திருமறை தீபத்தை வாசித்துப் பயனடைந்து வருகிறேன். வேதத்திற்கு புறம்பாகவும் தற்புகழ் அறிவிக்கும் மீடியாவாகவும் வெளி வருகிற அனேக மாதப் பத்திரிக்கைகளின் மத்தியில் திருமறை தீபம் தனது அனைத்துக் கட்டுரைகளும் வேதத்தை ஆதாரமாக கொண்டுள்ளதை நினைத்து கர்த்தரை துதிக்கிறேன். உங்களின் இந்த உன்னதமான இறைப்பணி தொடர எனது வாழ்த்துக்கள். உங்களுக்காகவும் உங்கள் இறைப்பணிக்காகவும் தொடர்ந்து ஜெபிக்கிறேன். கர்த்தர் உங்களோடு இருப்பாராக!!!

  Like

 4. மிக அருமையாக தமிழ் கிறிஸ்தவ மக்களுக்கு திருமணம் பற்றி விழிப்பு ஏற்படுத்தி உள்ளீர். எங்களுடைய சந்ததியில் மற்றம் நிகழும் என்பதை உறுதி அளிக்கிறோம் .

  பிரவீன் – சென்னை

  Like

Leave a Reply to Judah Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s