நூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”

நூல் அறிமுகம்:

“அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”

அல்பர்ட் என். மார்டின்

அழிவில்லாத ஆத்மீக ஆலோசனைகள்கர்த்தரின் வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ள போதனைகளைப் பின்பற்றி உள்ளூர் சபை அமைத்து ஆத்துமாக்களுக்கு வேத போதனைகளையும், தகுந்த ஆலோசனைகளையும் அளித்து வழிநடத்துவதென்பது இந்தக் காலத்தில் சாதாரணமான காரியமல்ல. அதுவும் அத்தகைய விசுவாசமுள்ள பணியை 45 வருடங்களுக்கு மேல் ஒரே சபையில் இருந்து தன்னுடைய சக மூப்பர்களோடு இணைந்து ஒருவர் செய்து வந்திருப்பாரானால் அது நிச்சயம் கர்த்தரின் கிருபையால் மட்டுமே நிகழ்ந்திருக்க முடியும். 40 வருடங்களுக்கு மேல் ஒருவர் போதகராக இருந்திருப்பதில் ஆச்சரியமில்லை; அதை அநேகர் செய்திருக்கிறார்கள். 40 வருடங்களுக்கு மேல் கொள்கை மாறாமலும், எதிர்ப்புகளை சட்டை பண்ணாமலும், சத்தியத்தை காலத்துக்குக் காலம் மாற்றிக்கொள்ளாமலும், விற்றுவிடாமலும், விடாப்பிடியாக வேதத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டு வேத போதனைகளை மட்டுமே தந்து போதகராக சபை நடத்துவதென்பது இலேசான செயலல்ல. அத்தகைய விசுவாசமுள்ள ஊழியத்தை செய்திருக்கும் ஒரு மனிதனின் ஆலோசனைகள் எப்போதுமே நம்பத்தகுந்தவை; ஆத்துமாக்களுக்கு நல்லதே செய்பவை. இந்த விதத்தில்தான் போதகர் அல்பர்ட் என். மார்டினின் “அழிவில்லாஆத்மீகஆலோசனைகள்” நூலை உங்களுக்கு அறிமுகம் செய்துவைக்க விரும்புகிறேன். இந்த நூல் இப்போதைக்கு தமிழில் மட்டுமே இருக்கின்றது. அல்பர்ட் என். மார்டின் இந்தத் தலைப்பில் செய்துள்ள ஆங்கிலப் பிரசங்கங்களைக் கேட்டு அப்படியே குறிப்பெடுத்து, பின்னால் தமிழில் மொழிபெயர்த்து, இலகு தமிழில் வடிவமைத்து இப்போது இலவசமாக தமிழகத்தில் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இதை ஸ்ரீ லங்காவிலும் அச்சிட்டு விநியோகிக்கும் திட்டம் இருக்கிறது.

ஆரம்பத்திலேயே ஒன்றை சொல்லிவிட விரும்புகிறேன். உங்களுக்கு சபை வாழ்க்கையில் அக்கறையிருந்தால் மட்டும் இந்த நூலை வாங்கி வாசியுங்கள். ஒழுங்கான சபையொன்றிற்கு தங்களை ஒப்புக்கொடுத்து வாழாமல் என்னென்னவோ செய்துகொண்டிருப்பவர்களுக்கு இந்த நூல் பயனளிக்காது. சபை நடத்துகிறோம் என்ற பெயரில் தனி மனித சிந்தனைகளைப் பின்பற்றி ஏனோதானோவென்று ஊழியம் செய்து வருகிறவர்களுக்கும் இதனால் பிரயோஜனமில்லை. சபை வாழ்க்கையின் அருமையைத் தெரிந்துகொள்ள வேண்டும், ஒழுங்கான சபையிருந்து வாழ வேண்டும் என்ற ஆதங்கமுள்ளவர்களுக்கு இந்த நூல் நிச்சயம் கைகொடுக்கும் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை. நம்மினத்தில் சபையும், சபை வாழ்க்கையும் வேத போதனைகளின்படி இல்லாமலிருக்கும் நிலையை உணர்ந்திருப்பதாலும், அதைப்பற்றிய உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தி சிந்திக்கும்படிச் செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடனேயே இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. 78 வயதுள்ள அல்பர்ட் என். மார்டின் சில வருடங்களுக்கு முன் தன்னுடைய போதக ஊழியத்தில் இருந்து விலகி எழுத்துப்பணியிலும், போதகர்களுக்கு ஆலோசனையளித்து உற்சாகப்படுத்துவதிலும், போதகர்களுக்கான கூட்டங்களில் செய்தியளிப்பதிலும் தன்னுடைய இறுதிக் காலங்களைப் பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தார். அப்போது தன்னுடைய சபை மக்களை உற்சாகப்படுத்தி சத்தியத்தில் நிலைத்திருக்குமாறு அவர்களுக்கு அவரளித்த இறுதிப் பிரசங்கங்களின் தொகுப்பே இந்த “அழிவில்லா ஆத்மீக ஆலோசனகள்” நூல்.

நூலின் ஆரம்பத்திலேயே ஆசிரியர் தன்னுடைய நோக்கத்தைத் தெளிவாக அறிவித்திருக்கிறார். அத்தோடு தான் இந்தத் தலைப்பில் பேசத் தீர்மானித்த காரணத்தையும் விளக்கியிருக்கிறார். திருச்சபையை அடிப்படையாகக் கொண்டு இந்த நூலிலுள்ள போதனைகள் காணப்படுவதால் ஆரம்பத்திலேயே கிறிஸ்துவையும் அவருடைய வேதத்தையும் வைராக்கியத்தோடு பற்றிக்கொண்டு விசவாச வாழ்க்கையை வாழ வேண்டிய அவசியத்தை நூலாசிரியர் வலியுறுத்துகிறார். கிறிஸ்துவையும் அவருடைய வேதத்தையும் தங்களுடைய விசுவாசத்தின் உயிர்நாடியாகக் கருதி வாழாதவர்களால் சபை வாழ்க்கையை விசுவாசத்தோடு வாழ முடியாது என்பது நூலாசிரியரின் அசையா நம்பிக்கை.

அடுத்ததாக, ஒரு சபைப் போதகர் என்ற பொறுப்புணர்வோடு சபையைப் பற்றி விளக்கமளிக்கிறார் அல்பர்ட் என். மார்டின். இது இன்றைய கால கட்டத்தில் மிக அவசியமானது. சபை என்றால் என்னவென்று நமக்குத் தெரியும் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்களே தவிர அநேகருக்கு சபையைப் பற்றிய வேதபூர்வமான சிந்தனைகளோ, ஞானமோ இல்லை. தனிமனிதனுடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் இருந்து சபையைப் பிரித்து வைத்துப் பார்ப்பதே நம்மினத்துக் கிறிஸ்தவனுடைய சிந்தனைப் போக்காக இருக்கிறது. வேதம் கிறிஸ்தவ வாழ்க்கையை சபையோடு தொடர்பில்லாததாக பார்க்கவில்லை என்ற உண்மையை நம்மினத்துக் கிறிஸ்தவம் இன்னும் உணராமலிருக்கிறது. ஆராதனைக்கும், ஞானஸ்நானத்திற்கும், திருவிருந்திற்கும், திருமணத்திற்கும், மரணச் சடங்கிற்கும்தான் சபை என்ற அளவிலேயே நம்மவர்களுடைய சிந்தனை இருக்கிறது. இந்த சிந்தனைகளுக்கு மாறாக நூலாசிரியர் சபையைப் பற்றிய தெளிவான விளக்கத்தைக் கொடுக்கிறார். இந்நூலில் தொடர்ந்து இவர் விளக்கப்போகின்ற அனைத்து சத்தியங்களுக்கும் இது மிகவும் தேவையாக இருக்கிறது. சபை பற்றிய நூலாசிரியரின் விளக்கங்களை நன்றாக உணர்வது இந்த நூலின் ஏனைய பாகங்களைப் படித்துப் பலனடைவதற்கு அவசியமானது. நூலாசிரியர் சபையின் அங்கத்துவம், ஆராதனை, அமைப்பு, தலைமை என்று சபையின் முக்கியமான அம்சங்களையெல்லாம் சுருக்கமாகவும், தெளிவாகவும் வேத வசனங்களைக் கொண்டு விளக்கியிருக்கிறார்.

சபையைப் பற்றி விளக்குகின்ற ஆசிரியர், சபை வாழ்க்கையின் அவசியத்தை வலியுறுத்துகிறார். நம்மினத்தில் சபை அமைப்பும், தலைமையும் வேத அடிப்படையில் அமைய முடியாதளவுக்கு தனி மனித ஆதிக்கம் சபைகளில் தலைவிரித்தாடுவதால் சபை வாழ்க்கையின் ஆசீர்வாதங்களை ஆத்துமாக்கள் அனுபவிக்க முடியாதபடி கிறிஸ்தவ ஊழியம் இருந்து வருகிறது. சபை வாழ்க்கை என்பது வெறுமனே ஓய்வு நாளில் ஓர் ஆராதனைக்கு தலையைக் காட்டிவிட்டு காணிக்கை கொடுப்பது என்பது அல்ல என்பதை நூலாசிரியர் சபை வாழ்க்கை பற்றித் தரும் விளக்கங்களில் இருந்து புரிந்துகொள்ளலாம். சபை வாழ்க்கைக்கு அத்தியாவசியமான சபை அங்கத்துவ அமைப்பை இன்று தமிழ் சபைகளில் காணமுடியாமலிருக்கிறது. அப்படியொன்று இருக்கிறதென்ற உணர்வே அநேகருக்கு இல்லை. இத்தகைய ஆத்மீகக் குழப்பத்தோடிருக்கும் தமிழினக் கிறிஸ்தவ சூழ்நிலையில் நூலாசிரியர் தரும் வேத விளக்கத்தின்படி சபை வாழ்க்கையை என்று காணப்போகிறோமோ? அதன் பலன்களை ஆத்மீக வளர்ச்சியும், முதிர்ச்சியும் கொண்ட தலைமையின் கீழிருந்து நம்மினம் எப்போது அனுபவிக்கப்போகின்றதோ? இருந்தாலும் இந்த நூலாவது அத்தகைய எதிர்பார்ப்பையும், சபை வாழ்க்கையையும் வாசகர்களைத் தேடும்படிச் செய்ய வேண்டும் என்ற ஆதங்கத்தோடுதான் நூல் வெளியிடப்பட்டிருக்கின்றது

மேலைத்தேய நாடுகளானாலும் சரி, கீழைத்தேய நாடுகளானாலும் சரி திருச்சபை ஆராதனையைப் பொறுத்தவரையில் இன்றைக்கு பிசாசு திருச்சபையை பலமாகவே தாக்கிக்கொண்டிருக்கிறான். ஆராதனை கர்த்தரின் வார்த்தையைப் பின்பற்றி அதன் வழிப்படி அமைய வேண்டுமா, அல்லது மனித உணர்வுகளின் மாற்றங்களுக்கும், விருப்பு வெறுப்புக்களுக்கும் ஏற்ப அமைய வேண்டுமா என்ற பெரும் போராட்டம் தொடர்ந்து நடக்கிறது. இதற்குப் பலியாகியிருக்கும் சபைகளின் எண்ணிக்கைக்கு அளவில்லை. ஆராதனை கர்த்தருக்கு உகந்தவிதத்தில் எப்படி அமைய வேண்டும் என்று நூலாசிரியர் விளக்கமளிப்பதோடு கிறிஸ்தவர்கள் ஆராதனை பற்றிய எந்தெந்த விஷயங்களில் விழிப்போடிருந்து ஆராதனையை கர்த்தரின் மகிமைக்காக நடத்த வேண்டும் என்றும் ஆலோசனையளிக்கிறார். வேத வல்லுனராகவும், முதிர்ந்த போதகராகவும், பல்வேறு அனுபவங்களை சபை வாழ்க்கையில் கடந்துபோய் ஒரு தீர்க்கதரிசியின் முன்னுணர்வோடு ஆராதனை பற்றி ஆசிரியர் அளித்திருக்கும் ஆலோசனைகள் நிச்சயம் சிந்திக்கக்கூடிய எந்த சந்ததிக்கும் பயனுள்ளவை.

அருமையான இந்நூல் இதுவரை நாம் பார்த்தவற்றைத் தவிர, ஓய்வுநாள் அனுசரிப்பு, திருமணம், குடும்ப வாழ்க்கை, பிள்ளை வளர்ப்பு, சுவிசேஷ ஊழியம் என்ற திருச்சபை வாழ்க்கையோடு தொடர்புடைய அத்தனை அவசியமான அம்சங்களையும் விளக்குகின்றது. நூலாசிரியர் இந்த வேத போதனைகளையெல்லாம், இவை தொடர்பாக கிறிஸ்தவர்கள் இன்று சந்தித்துவரும் போராட்டங்களைக் கருத்தில் கொண்டு அனுகி, காலத்துக்குப் பொறுத்தமான அவசியமான எச்சரிப்புகளோடு நல்ல பயனுள்ள பயன்பாடுகளைத் தந்திருக்கிறார். திருச்சபை சம்பந்தமான நல்ல நூல்கள் இல்லை என்ற குறையை நிச்சயம் இந்நூல் தீர்த்துவைத்திருக்கிறது. இதுபோன்ற இன்னும் அநேக நூல்கள் அவசியம் என்பது மட்டுமல்லாமல், நம்மினத்துக் கிறிஸ்தவர்கள் இவற்றை வாசித்து, சிந்தித்து, மனந்திருந்தி தங்களுடைய ஆத்மீக வாழ்க்கையை சீரமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆவல்.

உண்மையில் உங்களில் பலர் திருச்சபை வாழ்க்கையைப் பற்றி இந்த நூல் விபரிக்கும் விதத்தில் சிந்தித்துப் பார்த்திருக்க மாட்டீர்கள் என்பது நிச்சயம். அதற்குக் காரணம் அந்த விதத்தில் திருச்சபைகள் நம்மினத்தில் அமைக்கப்பட்டு நடைமுறையில் இயங்கி வராததுதான். கிறிஸ்துவை நீங்கள் விசுவாசிப்பவராக இருந்தால் அவர் நேசிக்கும் திருச்சபையை நேசித்து அதற்கு உங்களை ஒப்புக்கொடுத்து வாழவேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. அந்தக் கடமையை நீங்கள் நிறைவேற்ற இந்த நூல் நிச்சயம் உதவும். கிறிஸ்தவ ஊழியங்களில் ஈடுபட்டிருப்பவர்களும், போதகர்களும்கூட தங்களுடைய ஊழியங்களையும், சபைகளையும் வேதபோதனைகளுக்கு ஏற்றவிதத்தில் மாற்றியமைத்துக்கொள்ள இந்நூல் நிச்சயம் உதவும். கர்த்தருடைய வேதத்தின்படி நடந்துவராத எதுவும் அவருக்கு மகிமையளிக்க முடியுமா? கிறிஸ்துவுக்கு சொந்தமான சபையை இந்த உலகத்தில் நாம் மனித சித்தத்தின்படி நடத்திவருவது எத்தனை பாவமானது தெரியுமா? சபைத் தலைவர்களாக இருப்பவர்கள் திறந்த மனத்தோடும், தாழ்மையோடும் இந்த நூலை வாசித்தால் கர்த்தர் நிச்சயம் இதன் மூலம் பேசாமலிருக்கமாட்டார்.

இன்றைக்கு வேதத்தையும், நல்ல நூல்களையும் வாசித்து, சிந்தித்து, ஆராய்ந்து முடிவெடுக்கும் பழக்கமும் நம்மினத்தில் அநேகருக்கு இல்லாமலிருக்கிறது. எதையும் கஷ்டப்படாமல் பட்டன்களைத் தட்டி இலகுவாக அடைந்துவிடும் தொழில்நுட்ப வளர்ச்சிக் காலப்பகுதியில் வாசித்து, சிந்தித்து, ஆராய்ந்து முடிவெடுத்து நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்தி ஆத்மீக வளர்ச்சியடைவதென்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் தெரியும். கிறிஸ்தவ வாழ்க்கையை வெறும் உணர்ச்சிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டோ அல்லது ஆப்பிள் ஐ-பேடைத் தட்டியோ வாழ்ந்துவிடக்கூடிய விதத்தில் கிறிஸ்து நமக்குத் தரவில்லை. தன்னுடைய வேத வசனங்களை சிந்தித்து ஆராய்ந்து பின்பற்றி வாழும்படியே இந்த ‘ஆப்பிள்’ யுகத்திலும் எதிர்பார்க்கிறார். நீங்கள் தனிநபராக இருந்தாலும் சரி, குடும்பஸ்தராக இருந்தாலும் சரி இந்த நூலை உடனடியாக வாங்கி வாசியுங்கள். அநேக தவறுகளில் இருந்து உங்களைக் காத்துக்கொள்ளவும், கர்த்தருக்குப் பிரியமான முறையில் உங்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும் இது உங்களுக்கு உதவும். அதில் எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது.

இந்த வலைப்பூ தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் தமிழக முகவரியிலோ அல்லது திருமறைத்தீப பத்திரிகையிலுள்ள தமிழக முகவரிகளிலோ தொடர்புகொண்டு இந்நூலை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். இது இலவசமாகவே விநியோகிக்கப்படுகின்றது. ஆனால், நீங்கள் தபால் செலவை மட்டும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். நூல் தேவையானவர்கள் உங்களுடைய முகவரியோடு தொலைபேசி எண்ணையும் அனுப்பி வைப்பது அவசியம். நன்றி!

_____________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

2 thoughts on “நூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”

 1. “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்
  புத்தகத்தை பெற விரும்புகிறேன்
  M. R.Rajesh
  8/157, Chemmankalavilai, Vellamcode, Chitharal Post,
  Pin – 629151, K. K. District, Tamil Nadu.
  Cell: 9786107950.

  Like

  • புத்தகத்தைப் பெற நீஙகள் சென்னை முகவரியோடு தொடர்பு கொள்ளுங்கள். – Pr. James +91 9445671113 (6/87 Kamarajar St, Thiruvalluvar Nagar, Ayanavaram 600023, Chennai. TN.)

   Like

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s