நவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா

இதை நீங்கள் வாசிக்கும் போது அமெரிக்கா தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கும். கடந்த தேர்தலில் பலத்த அடி வாங்கிய குடியரசுக் கட்சியா அல்லது ஜனநாயகக் கட்சியா நாட்டை ஆளப் போகிறது என்ற கேள்விக்கு ஏழு எட்டு நாட்களில் பதில் தெரிந்து விடும். நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் மக்களுக்கு அநேக வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து “தேவை நமக்கு மாற்றம்” என்று எங்கும் பேசி மக்களைக் கவர்ந்து ஒபாமா வென்றார். மக்களும் பெரு மாற்றங்களை எதிர்பார்த்தனர். முக்கியமாக பொருளாதார வீழ்ச்சி அகல வழியேற்படும், வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பினர்.

அதேவேளை, லிபரல் எண்ணப் போக்குடையவர்கள் ஓரினச் சேர்க்கை, திருமணம், கருக்கலைப்பு, ஒழுக்கம் ஆகிய விஷயங்களில் ஒபாமா தாராளப் போக்குடன் நடந்துகொள்வார் என்று நம்பி ஹாலிவுட்டிலிருந்து அனைத்து லிபரல் டி.விக்களும், பத்திரிகைகளும் ஒபாமாவை ஆதரித்தன. இவர்கள் ஆசைப்படி ஒபாமாவே தேர்தலில் வென்றார்.

கடந்த நான்கு வருடங்களில் ஒபாமாவின் நிர்வாகத்தில் அமெரிக்க பொருளாதாரம் அடிவாங்கியது. வேலையின்மை அதிகரித்து மக்களின் நம்பிக்கையில் மண் விழுந்தது. ஆனால், லிபரல்வாதிகளின் நாக்கிலெல்லாம் தேன் சுரக்கும் வகையில், அவர்களுடைய எண்ணங்களுக்கேற்ற வகையில், ஒபாமாவின் நிர்வாகம் நடந்து கொண்டது. எந்த வாக்குறுதிகளையும் ஒபாமா நிறைவேற்றாவிட்டாலும் லிபரல்வாதிகள் அவரை அதிகம் நேசிக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்புதான் ஒபாமா ஓரினச் சேர்க்கையாளருக்கு திருமண அந்தஸ்து அளிப்பதில் தனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று சொல்லியிருக்கிறார். அமெரிக்க ஜனாதிபதிகளில் இப்படிச் சொன்ன முதலாம் நபர் ஒபாமாதான். ஒபாமாவின் நிர்வாகத்தில் ஓரினச் சேர்க்கையாளரின் சுய உரிமைகள் சட்டம் அமுலாக்கப்பட்டது. இந்த வகையில் லிபரல் சித்தாந்தங்களுக்கு உயிரளித்து வந்திருக்கிறார் ஒபாமா.

அமெரிக்கா பாரம்பரியக் கொள்கைகளையும், ஒழுக்கக் கோட்பாடுகளையும், குடும்ப வாழ்க்கை பற்றிய அடிப்படைக் கொள்கைகளையும் இன்னும் தூக்கியெறிந்துவிடவில்லை. வேறு எந்த நாட்டிலும் நான் கண்டிராத பொதுவான கிருபையின் ஆசீர்வாதங்கள் அமெரிக்காவில் தலைதூக்கி நிற்கின்றன. அமெரிக்க மக்களில் பெரும்பாலானோரும், கிறிஸ்தவர்களும் நாடு போய்க்கொண்டிருக்கும் நிலையைக் குறித்து பெருங்கவலை கொண்டிருக்கின்றனர்.

மெட் ரொம்னி யார்? குடியரசுக் கட்சி வேட்பாளரான ரொம்னி ஒரு மோர்மன். நிச்சயம் கிறிஸ்தவர்களுக்கு இதில் உடன்பாடில்லை. இருந்தபோதும் ரொம்னி குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். வியாபாரத்தின் மூலம் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கும் ரொம்னி பெருளாதாரக் கோட்பாட்டைப் பொறுத்தவரையில் ஒபாமாவுக்கு எதிர்புறமான கொள்கையைக் கொண்டிருக்கிறார். ஒபாமாவின் சோஷலிசக் கொள்கைகளில் ரொம்னிக்கு உடன்பாடில்லை. முக்கியமான ஒபாமாவின் சுகாதாரச் சீர்திருத்த சட்டத்தை பதவிக்கு வந்தவுடன் நீக்கப் போவதாக ரொம்னி அறிவித்திருக்கிறார். ஒபாமாவின் சோஷலிசக் கொள்கைகளையும், தாராளவாதக் கொள்கைகளையும் பிடிக்காதவர்களுக்கு ரொம்னியை விட்டால் வேறு வழியில்லை. மோர்மனாக ரொம்னி இருந்தபோதும் மறுபடியும் ஒபாமா வேண்டாம் என்கிறவர்கள் ரொம்னி தேர்ந்தெடுக்கப்படுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். சமீபத்தில் அமெரிக்க பத்திரிகை ஆய்வொன்றில் ஐந்தில் ஒரு (5-1) அமெரிக்கர் எந்த மதத்தையும் சேர்ந்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. இது மிகவும் கவலைக்குரியதும், அமெரிக்கா எங்குப் போய்க்கொண்டிருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. “நீதி ஜனத்தை உயர்த்தும் பாவமோ ஜனத்துக்கு இழுக்கு” என்ற வேத வாக்கியங்களின்படி இழுக்கை ஏற்படுத்தும் பாவத்தை நோக்கி அமெரிக்கா பெரு நடை போடுகின்றதை இது சுட்டிக் காட்டுகின்றதோ?

ஒபாமா மறுபடியும் தேர்ந்தெடுக்கப்படும் நிலை ஏற்படுமானால் நாடு நியாயத்தீர்ப்பையும் கர்த்தரின் தண்டனையையும் சந்திக்கத் தயாராகின்றது என்றுதான் அர்த்தம் என்று அநேக கிறிஸ்தவர்கள் வருந்துகிறார்கள். அரசியலிலும் நாட்டின் பெருளாதாரத்திலும் ஒருவர் அக்கறையில்லாமல் இருந்துவிட முடியாது. சில கிறிஸ்தவர்கள் அரசியலில் அக்கறை காட்டக்கூடாதென்ற தவறான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அந்த வகையிலான “அனாபாப்திஸ்து” கொள்கைக்கு எதிராக ரோமர் 13:1-7 போன்ற வசனங்கள் விளக்கங் கொடுக்கின்றன. கிறிஸ்தவர்கள் நிச்சயம் அரசியலைக் கவனிக்க வேண்டும். நாட்டுக்காகவும், நல்ல அரசைக் கர்த்தர் கொடுக்குமாறும் ஜெபிக்க வேண்டும். இந்தத் தேர்தல் முடிவு நாட்டுக்கு நன்மை தருவதாக அமைய ஜெபிப்பதோடு, அமெரிக்க மக்கள் கவனத்தோடும் வாக்களிக்க வேண்டும்.

சிலர் ஒபாமா, ரொம்னி இருவருமே நாட்டுக்கு நல்லதைச் செய்யப் போவதில்லை என்று முடிவெடுத்து யாருக்கும் வாக்களிக்காமல் இருக்கப் போகிறார்கள். அது அவர்களுடைய உரிமை. ரொம்னி வந்தால் எந்தளவுக்கு மோர்மன் நம்பிக்கைகள் நாட்டில் வளர்ந்துவிடுமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அது எனக்குப் புரிகிறது. பியூரிட்டன் நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவான அமெரிக்கா கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய ஆத்மீக அடித்தளக் கோட்பாடுகளை நம் கண் முன்னாலேயே இழந்து கொண்டிருக்கிறது என்பது மிகவும் வருந்தத்தக்க ஒரு விஷயம்தான்.

அமெரிக்காவை உருவாக்கிய கொள்கைகளில் உறுதியையும், பாரம்பரிய நம்பிக்கைகளில் தெளிவைவும் ஆண்மையாகிய அணிகலனையும் கொண்டு நாட்டை வழி நடத்தும் தலைமையை இன்று அமெரிக்க அரசியலில் பார்க்க முடியாமலிருப்பது ஏமாற்றத்தைத் தருகிறது. உலக நாடுகளின் போலீசாக அமெரிக்கா இருக்க வேண்டியதில்லை; நீதி நியாயத்திற்காகப் பேசுகின்ற உயர்ந்த நாடாக இல்லாமலிருப்பதுதான் வேதனையானது. என்னைப் பொறுத்தவரையில் ஒபாமா அமெரிக்காவை ஒழுக்கத்திலும் நீதியிலும் ஆன்மீகத்திலும் தலைமையிலும் மிகவும் பலவீனமாக்கி விட்டிருக்கிறார் என்பது தான் உண்மை. இதுதான் கர்த்தர் அமெரிக்காவிற்கு தந்திருக்கும் தண்டனையா?

எது இருந்தாலும் கர்த்தர் சர்வவல்லவராக தேசங்களின் ராஜாவாக என்றும் போல் இன்றும் இருக்கிறார் என்ற உண்மையே எனக்கு தைரியத்தை அளிக்கிறது. பொறுப்புள்ள கிறிஸ்தவர்களாக நல்ல குடிமக்களாக நாம் இருக்க வேண்டிய பொறுப்பிருந்த போதிலும் நம் நம்பிக்கைகள் இராஜாக்களிலோ அரசியல்வாதிகளிலோ இல்லை. கர்த்தரையே நாம் அனைத்திற்குமாக நம்பியிருக்கிறோம். கர்த்தர் அனுமதிக்கின்ற வரையிலுமே அமெரிக்கா தலை உயர்ந்து நிற்க முடியும். கர்த்தரின் கோபத்தை அது சந்திக்க வேண்டுமென்பதுதான் கர்த்தரின் தீர்மானமாக இருக்குமானால் ஒபாமா மறுபடியும் தலைவராக வருவதை யாரும் தடுக்க முடியாது. அமெரிக்காவில் எல்லா இடங்களிலும் “கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிக்கட்டும்” என்ற வாசகங்களைப் பார்க்கலாம். இனி “கர்த்தர் அமெரிக்காவைக் காப்பற்றட்டும்” என்று ஜெபிப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. நவம்பர் 6 க்குப் பிறகு எப்படிப்பட்ட அமெரிக்காவை நாம் பார்க்கப் போகிறோமோ?

_____________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

3 thoughts on “நவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s