ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது

மதம் மாற்றுகிறோமா!

Sheet-Wolfகிறிஸ்தவர்களைப் பற்றி கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் பொதுவாக வைக்கும் ஒரு குற்றச்சாட்டு ‘அவர்கள் மக்களை மதம் மாற்றுகிறார்கள்’ என்பது. என்னைப் பொறுத்தவரையில் இது ஓர் அநியாயக் குற்றச்சாட்டுத்தான். கிறிஸ்தவர்கள் என்ற பெயரை வைத்துக்கொண்டு மனிதர்களை மதம் மாற்றுகிறவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது. இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் கிறிஸ்துவோ அல்லது கிறிஸ்தவ வேதமோ மற்றவர்களை மதம் மாற்றும்படி எங்குமே எப்போதுமே சொன்னதில்லை. வேதத்தை வாசித்துப் பாருங்கள், யாரும் எவரையும் மதம் மாற்றும்படியான போதனைகளை அதில் பார்க்கவே முடியாது.

கிறிஸ்தவ சுவிசேஷத்தை சிலர் தவறான முறையில் போதித்து, பிரசங்கம் செய்து கிறிஸ்தவத்திற்கு இழுக்குத் தேடி வைத்துவிடுகிறார்கள். சில காலங்களுக்கு முன்பு இந்தியாவில், முக்கியமாக தென் மாநிலங்களில் இந்து மதத்தில் இருந்துகொண்டே இயேசுவை அறிந்துகொள்ளலாம் என்று சாது செல்லப்பாவும், திராவிட மதங்கள் ஆரம்பத்தில் இருந்தே இயேசுவைத்தான் கடவுளாக விவரித்தன, பிராமணர்கள்தான் அதை மாற்றி இந்து தெய்வங்களை அறிமுகப்படுத்தி தமிழினத்தைக் கெடுத்துவிட்டார்கள் என்று புலவர் தெய்வநாயகம் போன்றவர்களும் அநாவசியத்துக்கு அறிவுக்குப் பொருத்தமில்லாததும், உண்மையில்லாததுமான கட்டுக்கதைகளை உருவாக்கி கிறிஸ்தவத்திற்கு இழுக்குத் தேடித் தந்தார்கள். இவர்களுடைய கதைகள் எல்லாம் கேட்பதற்கு சுவையாகவும், கேட்பவர்களை சினிமாவைப்போல கவருவதற்கு உதவினாலும் உண்மையானவையல்ல. கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வேதம் இதையெல்லாம் போலிப் போதனைகள் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

சாது செல்லப்பா, தெய்வநாயகம் போன்றோருடைய விளக்கங்கள் அநாவசியத்துக்கு இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு கிறிஸ்தவத்தைப் பற்றிய தவறான எண்ணத்தை ஊட்டிவிடுகிறது. சமீபத்தில் அப்படியான ஒரு கருத்தை நான் ஒரு வலைப்பூவில் வாசிக்க நேர்ந்தது. செல்லப்பா போன்றவர்களின் போதனையைப் பற்றிக் குறிப்பனுப்பியிருந்த ஒருவருக்கு பதிலளிக்குமுகமாக அந்த வலைப்பூவின் சொந்தக்காரரான பிரபல எழுத்தாளர், ‘இப்படியெல்லாம் இந்திய வேதங்களில் இயேசு இருக்கிறாரென்று எழுதி இந்துவை மதம் மாற்றி அதற்குப் பிறகு கிறிஸ்தவ வேதத்தை நம்ப வைக்கும் ஒரு முயற்சி இது’ என்று எழுதியிருந்தார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த எழுத்தாளர் நான் இது பற்றி எழுதியிருந்த இன்னொரு ஆக்கத்தில் இருந்த ஒரு குறிப்பைத் தன்னுடைய வாதத்துக்கு சார்பாகப் பயன்படுத்தியிருந்தார். அதாவது, மரபு சார்ந்த கிறிஸ்தவர்களுக்கு சாது செல்லப்பாவின் போக்கில் சம்மதமில்லை என்பதை நிரூபிப்பதற்காக அவர் என் குறிப்பைப் பயன்படுத்தியிருந்தார். கிறிஸ்தவரல்லாதவர்களுக்கு கிறிஸ்தவத்தின் மேல் தவறான எண்ணம் ஏற்படும் நிலை உருவாகிவிடுவதை எண்ணும்போதுதான் மனதுக்குக் கஷ்டமாகி விடுகிறது.

உண்மையில் இவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இந்தமுறையில் கிறிஸ்தவரல்லாதவர்கள் கிறிஸ்தவத்தைப் பார்க்கும் நிலைக்கு சாது செல்லப்பா, தெய்வநாயகம் போன்றோர் அவர்களைத் தள்ளிவிட்டிருக்கிறார்கள். ‘இந்திய வேதங்களில் இயேசுவா!’ என்ற ஒரு நூலில் நான் இந்திய வேதங்களில் இயேசுவைக் கண்டுகொள்ள வழியில்லை என்று விளக்கி எழுதியிருந்தேன். அதை நான் எழுதக் காரணமே இவர்கள் கிறிஸ்தவ வேதத்தையும், கிறிஸ்தவத்தையும் பற்றிய தவறான எண்ணத்தை மற்ற மதத்தவர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறார்கள் என்பதற்காகத்தான். அதுமட்டுமல்லாமல் அவர்களுடைய வலையில் கிறிஸ்தவர்கள் விழுந்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அதை எழுதினேன். (இப்போது அந்த நூல் அச்சில் இல்லை).

புலவர் தெய்வநாயகத்தின் திராவிட சமயம்

இந்த இருவரில் புலவர் தெய்வநாயகத்தின் நோக்கம் வேறு. அவர் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த பிராமண எதிர்ப்பாளர். திராவிட மதங்கள் இந்து மதத்தில் இருந்து உருவாகவில்லை என்று காட்டுவதற்காகவும், அவை ஆதியில் ஒரே தெய்வ வழிபாட்டைக் கொண்டிருந்தன என்று நிரூபிப்பதற்காகவும் கிறிஸ்தவமே திராவிட சமயமாக தோமாவின் போதனைகளால் தென்னிந்தியக் கலாச்சாரத்துக்கு ஏற்ற முறையில் மாற்றியமைக்கப்பபட்டிருந்தது என்ற கோட்பாட்டை அவர் உருவாக்கியிருந்தார். இவரது நோக்கம் மதம் மாற்றுவது அல்ல, திராவிட மதம் தனித்தன்மையுடையது என்றும், இந்திய ஆரிய மதங்களில் இருந்து வேறுபட்டது என்றும் காட்டுவது மட்டுமே. இவரது ஆய்வு வரலாற்று உண்மைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல; அது வேத உண்மைகளுக்கும் முரணானது. வரலாற்று உண்மையாக இன்னமும் நிரூபிக்கப்படாத அப்போஸ்தலனான தோமாவின் இந்திய வருகையை மட்டும் வைத்து அவர் திராவிடத்துக்கு ஏற்ற ஒரு கிறிஸ்தவத்தை உருவாக்கினார் என்ற கட்டுக்கதையை தெய்வநாயகம் அவிழ்த்து விட்டிருந்தார். கிறிஸ்துவின் எந்த அப்போஸ்தலனும் சுவிசேஷத்தை அப்படித் திரிபுபடுத்தி கலாச்சாரத்துக்கு ஏற்றதொரு கிறிஸ்தவத்தை உருவாக்க மாட்டான் என்ற அடிப்படை வேத உண்மை இவருக்குத் தெரிந்திருக்க வழியில்லை. இவருடைய உண்மையில்லாத ஆய்வு திராவிட இயக்கத்திற்கு மகிழ்வை ஏற்படுத்தி அவர்களிடம் அங்கீகாரம் பெறச் செய்திருக்கிறது. அது மட்டுமே.

சாது செல்லப்பாவும் மதமாற்றமும்

சாது செல்லப்பாவின் இந்திய வேதங்களைப் படித்து அவற்றில் இயேசுவைக் கண்டுகொள்ளலாம் என்ற போதனை நிச்சயம் இந்துக்களைக் கவர அவர் பயன்படுத்தப்படுகின்ற ஒரு கவர்ச்சிப் போதனை. இந்திய வேதங்கள் சுட்டிக்காட்டும் ‘பிரஜாபதி’ இயேசுவே என்பது இவரின் முடிவு. இவருடைய விளக்கங்களினால் கவரப்பட்டு ஓர் இந்து கிறிஸ்தவ மதத்தை நாடக்கூடும்; ஆனால், கிறிஸ்தனாகிவிட முடியாது. மதம் மாறுவது வேறு; கிறிஸ்தவனாவது வேறு. இரண்டுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. மதம் மாறுவது என்பது, ஒரு மனிதன் இன்னொரு மதத்தின் மேல், ஏதோவொரு சுயநலனுக்காக ஆசைப்பட்டு அதை ஏற்றுக்கொள்ளுவது. அப்படி அந்த மனிதன் வேறு ஒரு மதத்தைத் தழுவிக்கொள்ளும்போது அவனுடைய மனத்தளவில் அதை ஏற்றுக்கொள்ளுகிறான்; புறவாழ்க்கையிலும் சில மாற்றங்களைக் கொண்டுவருகிறான். மதம் மாறுவது என்பது இதோடு மட்டுமே நின்றுவிடும், அதற்குமேல் அதால் போகமுடியாது. இப்படி மதம் மாறுகிறவர்கள் மறுபடியும் இன்னொரு மதத்திற்கு மாறிக்கொள்ளலாம். அவர்களுடைய மனதையும், விருப்பத்தையும் பொறுத்தளவில் அது நிகழும். சமுதாயம் அனுமதிக்கின்றவரை, அந்த மனிதனுக்குப் பிடித்தவரை ஒரு மனிதன் எத்தனை தடவையும் மதம் மாறிக்கொள்ளலாம்; பல மதங்களை ஒரே தடவை பின்பற்றவும் செய்யலாம். இந்த முறையில் பெயர் கிறிஸ்தவராக பெயரளவில் மனிதர்கள் மதம் மாறுவது இன்று நேற்றில்லாமல் நிகழ்ந்து வந்திருக்கின்றது. இத்தகைய மதமாற்றங்களால் அடிப்படை இருதய மாற்றமோ வாழ்க்கை மாற்றமோ ஏற்பட முடியாது.

பதினைந்தாம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர்கள் ஸ்ரீ லங்காவை ஆண்ட காலத்தில் அவர்களுக்குப் பயந்து ரோமன் கத்தோலிக்க மதத்தைத் தழுவிக்கொண்ட நாட்டின் வட பகுதி இந்துக்கள் இருந்திருக்கிறார்கள். இருந்தபோதும் அவர்களால் தங்களுடைய இந்து முறைகளைக் கைவிட முடியாததால் வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து முடித்தபிறகு சாப்பிட்ட வாழை இலையைக் கூரையில் சொருகி மறைத்து வைப்பது வழமையாக இருந்திருக்கிறது. யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக இதைச் செய்திருக்கிறார்கள். இதே முறையில்தான் இந்தியாவிலும் சுயநலனுக்காகப் பெயரளவில் கிறிஸ்தவத்தைத் தழுவிக்கொண்ட பெருந்தொகையினர் பின்னால் அம்பேத்கருடன் சேர்ந்து புத்த மதத்திற்கு மாறியிருக்கிறார்கள். இதெல்லாம் மதமாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள். இதன் மூலம் பக்தி போன்று வெளிப்பார்வைக்குத் தோன்றும் வேஷத்தை மட்டுமே ஒருவரால் போட முடியுமே தவிர மெய்யான பக்தியின் வல்லமையை வாழ்க்கையில் கொண்டிருக்க முடியாது. ஆட்டுத் தோலைப் போர்த்துக் கொண்டிருப்பதால் ஓநாய் ஆடாகிவிடாது.

கிறிஸ்தவம் என்பதென்ன?

ஒருவர் கிறிஸ்தவராவது இதுவரை நாம் பார்த்தவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது. அது எப்படி நிகழ்கிறது தெரியுமா? அதைக் கடவுளே ஒருவருடைய இருதயத்தில் நிகழ வைக்கிறார். அது மனிதனால் நிகழ்கிற காரியமல்ல. சுவிசேஷத்தில் சொல்லப்படுகிற கிறிஸ்து மனிதனுடைய பாவத்தைப் போக்குவதற்காக செய்திருக்கும் பலியைப் பற்றிய செய்தியை வாஞ்சையோடு கேட்கிற ஒருவரின் இருதயத்தில் கடவுளின் பரிசுத்த ஆவியானவர் யாருடைய தலையீடும் இல்லாமல் தானே சர்வ அதிகாரத்துடன் கொண்டுவருகிற மாற்றமே ஒருவனைக் கிறிஸ்தவனாக்குகிறது. இதை எந்த ஒரு மனிதனாலும் ஒருவரில் நடத்திவிட முடியாது. அப்படிப் பரிசுத்த ஆவியின் கிரியையினால் இருதயம் மாற்றமடைந்த ஒருவனே கடைசிவரைக் கிறிஸ்துவைத் தலையே போனாலும் போகட்டும் என்று விசுவாசிப்பான். அவன் சுயநலத்துக்காக, மற்றவர்களைத் திருப்பிப்படுத்துவதற்காக மதத்தை மாற்றிக்கொள்ளவில்லை; கடவுளின் வல்லமையான செயலால் அவன் மாற்றப்பட்டிருக்கிறான். அதுதான் மெய்கிறிஸ்தவம் காட்டுகிற பாதை. ‘மதம் மாறு’ என்று மெய்கிறிஸ்தவம் சொல்லவில்லை; ஒருபோதும் சொல்லாது. உன் பாவம் போக கிறிஸ்துவை விசுவாசி என்று மட்டுமே அது சொல்லுகிறது. அதைக் கேட்கிறவர்கள் கிறிஸ்துவை விசுவாசிக்கிறபோது அந்த விசுவாசத்தைக் கொடுத்து அவர்களுடைய இருதயத்தை மாற்றுகிறவர் சர்வ வல்லவரான கடவுளே. இதுதான் கிறிஸ்தவம். இதற்கு மாறானதெல்லாம் வெறும் போலி.

கிறிஸ்தவ வேதம் மட்டுமே கடவுளின் வெளிப்படுத்தல் (Revelation of God)

உண்மையில் ஏனைய மதங்களின் நூல்களில் இருந்து இயேசு கிறிஸ்துவைக் கண்டுகொள்ளலாம் என்றும் வேதத்தை வாசிப்பதால் மட்டும் அது நிகழ்வதில்லை என்று சொல்லுவது கிறிஸ்தவத்தை உயர்த்துகிற காரியமல்ல; அதன் மதிப்பையும், உயர்வையும் அது அடியோடு சரித்துவிடுகிற காரியம் என்பது சாது செல்லப்பா போன்றோருக்குப் புரியவில்லை. கிறிஸ்தவ வேதமும், கிறிஸ்தமும் தனித்தன்மை வாய்ந்தவை. அதன் போதனைகளை வேறு எங்கும் பார்ப்பதற்கு வழியில்லை. உலகத்து மதங்களிலும், மனிதர்களுடைய எழுத்துகளிலும் கிறிஸ்தவ வேத சத்தியங்களை அறவே காணவே முடியாது. ஏன் தெரியுமா? அந்த சத்தியங்களைக் கடவுளே நேரடியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதனால்தான் வேதத்துக்கு கடவுளின் வெளிப்படுத்தல் என்ற பெயரும் உண்டு. ஆறு நாட்களில் உலகம் கடவுளால் உருவாக்கப்பட்டது என்று அறிவிக்கும் ஒரே நூல் வேதம் மட்டுமே. கடவுள் மனிதனாக உருவேற்று மனிதனின் பாவத்தைப் போக்க வழியேற்படுத்தினார் என்று விளக்குவதும் வேதம் மட்டுமே. (இதற்கும் அவதாரமெடுப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது). சுவிசேஷத்தின் மூலம் அனைத்து மனிதர்களும் தம்மை அறிந்துகொள்ள கடவுள் தொடர்ந்தும் மனிதர்களோடு பேசுகிறார் என்றுரைப்பதும் வேதம் மட்டுமே. வேதத்தில் மட்டுமே இவற்றை வெளிப்படுதியிருப்பதாக வேதநாயகனாகிய கடவுளே சொல்லும்போது அதை மறுத்து அவரை இந்திய வேதங்களைப் படித்து அறிந்துகொள்ளலாம் என்று சொல்லுவது எந்தவிதத்தில் கிறிஸ்துவை உயர்த்தும்? அது அவருடைய மதிப்பைக் குறைத்து இந்திய வேதங்களை உயர்த்துவதில் மட்டுமே போய்முடிகிறது. இந்திய வேதங்களில் வெளிப்படுத்தல் (Revelation) இருக்கிறது என்ற எண்ணத்தை அது ஏற்படுத்தி விடுகிறது. இதை சாது செல்லப்பா சிந்திக்கவில்லை. கடவுளின் வெளிப்பாடான வேதத்தை வேறு எந்த நூலுக்கும் சமமாகப் பயன்படுத்துவதைக் கடவுள் அனுமதிக்கவில்லை.

‘மதம் மாறு’ என்று கிறிஸ்தவம் சொல்லவில்லை

மதம் மனிதனால் உருவாக்கப்பட்டது. கார்ல் மார்க்ஸ் ‘மதம் ஓர் அபின்’ (போதைப் பொருள்) என்றார். மனிதன் தன்னுடைய ஆத்மீகத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள நாடுகிற ஒரு வழி மதம். ஒருவர் ஆஸ்திகராக ஏதாவதொரு மதத்தைப் பின்பற்றுவதுபோலத்தான் இன்னொருவர் நாஸ்திகராக மதமே இல்லை என்று வாழ்கிறார். இவர்கள் இருவருமே தங்களுடைய வழிகளில் நம்பிக்கை வைத்து வாழ்கிறார்கள். இது ஒரு நம்பிக்கைதான். அந்த நம்பிக்கை அவர்களுக்கு அவசியமாயிருக்கிறது; திருப்தியளிக்கிறது. இந்த நம்பிக்கையை ஒருதரம் சிந்தித்துப் பாருங்கள் என்றுதான் கிறிஸ்தவம் அவர்களைப் பார்த்துக் கேட்கிறது. அப்படிக் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? உங்கள் நம்பிக்கை தவறாக இருந்துவிட்டால் என்ன செய்யப் போகிறீர்கள்? கடவுளைப் பற்றி தவறான ஒரு நம்பிக்கையோடு வாழ்வது எப்படி ஒருவருக்கு உதவப்போகிறது? நீங்கள் நம்புவதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள், அந்த நம்பிக்கை உங்களுக்கு நிச்சயமாக ஆத்மீக விடுதலையைக் கொடுக்கப் போகிறதா என்றுதான் கிறிஸ்தவம் கேட்கிறது. யாரையும் மதம் மாறும்படிக் கிறிஸ்தவம் சொல்லவில்லை. உண்மையில் மதம் மாறுவதால் ஒருவருக்கு ஆத்மீக விடுதலை கிடைக்காது என்று கிறிஸ்தவம் நிச்சயமாக நம்புகிறது. யூதர்கள் கடவுளை நம்பி யூதமதத்தைப் பின்பற்றி வாழ்ந்தார்கள். யூதனாகப் பிறந்த இயேசு கிறிஸ்து யூதர்களைப் பார்த்து உங்கள் நம்பிக்கை சரியானதுதானா என்று சிந்தித்துப் பாருங்கள் என்று கேட்கவில்லையா? யூதர்களின் மத வாழ்க்கை இயேசு கிறிஸ்துவுக்கு சரியாகப் படவில்லையே. அதனால் கிறிஸ்தவம் மற்றவர்களை மதம் மாறச் சொல்லுகிறது என்று தவறாக கிறிஸ்தவத்தைக் குறை சொல்லாதீர்கள்.

கிறிஸ்தவம் சொல்லுவதெல்லாம் ஒரு தடவை கடவுளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள் என்பதுதான். கடவுள் யாரென்பதை எண்ணிப் பாருங்கள் என்பதுதான். கடவுளிடம் இருந்து வந்த இயேசு கிறிஸ்துவின் போதனைகளை ஒரு தடவை ஆராய்ந்து பாருங்கள் என்றுதான் கிறிஸ்தவம் சொல்லுகிறது. இயேசு கிறிஸ்துவின் போதனை உண்மையாக இருந்து அதன் மூலம் நீங்கள் பரலோகம் போக முடியுமானால் அதை ஏன் நீங்கள் உதறித்தள்ளிவிட்டு வெறும் சாதாரண ‘ஆஸ்திகராகவோ’, ‘நாஸ்திகராகவோ’ வாழ வேண்டும்? அதில் உங்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது என்றுதான் கிறிஸ்தவம் கேட்கிறது. ஒரு மதவாழ்க்கையைக் கொண்டிருப்பதாலோ, மதம் மாறுவதாலோ எவரும் கடவுளை அறிந்துகொள்ள முடியாது என்கிறது கிறிஸ்தவம். மத வாழ்க்கை மார்க்ஸ் சொன்னதுபோல் ஒருவருக்கு ‘அபின்’ போன்ற ஒரு தற்காலிக திருப்தியை, ஒரு மயக்கத்தைக் கொடுக்கும் போதைப் பொருள் மட்டுமே.

கிறிஸ்தவம் ஒரு மதமல்ல; அது கடவுளோடு, இயேசு கிறிஸ்துவோடு ஒரு நிலையான உறவை ஏற்படுத்திக்கொண்டு வாழ்கின்ற வாழ்க்கை. அத்தகைய வாழ்க்கையை ஒரு ‘மதம்’ கொடுத்துவிட முடியாது. அதனால்தான் கிறிஸ்தவம் ஒரு மதமல்ல என்கிறேன். கிறிஸ்தவத்தை மதமாக மாற்றி வாழ்ந்துகொண்டிருக்கிறவர்கள் இருக்கிறார்கள். அது போலிக் கிறிஸ்தவம். அந்த முறையிலான கிறிஸ்தவம் அவர்களை இந்த உலகத்தில் வாழ்ந்து தற்காலிக மனத்திருப்தி அடைந்து இறப்பதோடு அவர்களை நிறுத்திவிடும். அத்தகைய செயலைத்தான் சாது செல்லப்பா செய்யப் பார்க்கிறார். அவர் இந்துவுக்கு இன்னொரு ‘மதத்தைக்’ காட்டப் பார்க்கிறார். அவர் காட்டப் பார்ப்பது மெய்யான கிறிஸ்தவமல்ல. அவரைப்போல இன்னும் அநேகர் அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்தவ வேதம் ஒருவரை மதம் மாறும்படி ஒருபோதுமே அழைக்கவில்லை. கடவுளை அறிந்துகொள், கடவுளோடு மெய்யான, நிதர்சனமான உறவை அனுபவிக்க இயேசு கிறிஸ்தவின் போதனைகளை ஆராய்ந்து சிந்தித்துப் பார் என்றுதான் கிறிஸ்தவம் அறைகூவலிடுகிறது. அதில் என்ன தவறிருக்கிறது?

சுவிசேஷத்தை ஏன் அறிவிக்க வேண்டும்?

வேறு மதத்தார் தங்களுடைய மதத்தைப் பற்றிப் பேசுவதில்லையே, சுவிசேஷத்தை நீங்கள் ஏன் மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும்? என்று யாராவது கேட்கலாம். அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.  (1) கிறிஸ்து மட்டுமே தரமுடிந்த பாவமன்னிப்பையும், அழிவில்லாமல் நிலைத்திருக்கும் ஜீவனைப்பற்றியும் அன்போடு மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் என்று கடவுள் வேதத்தில் கட்டளையிட்டிருப்பதால் அதை சொல்லுவதை மட்டுமே நாம் கடமையாகக் கொண்டிருக்கிறோம். (2) கிறிஸ்தவ சுவிசேஷத்தின் மூலமாக மட்டுமே எந்தவொரு மனிதனும் உண்மையான கடவுளை கிறிஸ்துவின் மூலம் அறிந்து விசுவாசிக்க முடியும் என்பதால் அதைச் சொல்லுகிறோம். (3) பாவத்தோடு ஒருவரும் இந்த உலகத்தில் அழிந்துபோகக்கூடாது என்ற ஆத்தும பாரம் எங்களுக்கிருப்பதால் கிறிஸ்துவைப் பற்றி அன்போடு சொல்லுகிறோம்.

ஒரு இந்துவோ அல்லது வேறு மதத்தவரோ இதை வாசித்துவிட்டு உங்கள் மதம் மட்டுந்தான் கடவுளிடம் ஒருவரைக் வழிகாட்டுமா? என்று கேட்கலாம். அது நியாயமான கேள்விதான். அதற்கு நான் கடவுளின் வேதத்தில் இருந்து மட்டுமே பதில் சொல்லமுடியும். கடவுள் தன்னை மனிதன் அறிந்துகொள்ளும்படி வேதத்தில் சுவிசேஷ உண்மையை வெளிப்படுத்தியிருப்பதால் அதன் மூலம் மட்டுமே ஒருவர் கடவுளை அறிந்துகொள்ளவும், அவரோடு உறவை ஏற்படுத்திக்கொள்ளவும் முடியும். ஏன் தெரியுமா? மனிதனைப் பிடித்திருக்கின்ற பாவம் போக்கப்பட்டாலொழிய எவரும் கடவுளை அறிந்துகொள்ள முடியாது. மனிதனுடைய பாவங்களை முற்றாக அகற்ற இயேசு கிறிஸ்து மட்டுமே இந்த உலகத்தில் பிறந்து, வாழ்ந்து, மனிதனுடைய பாவங்களுக்காகத் தன்னைப் பலிகொடுத்து, உயிர்தெழுந்து இன்றும் ஜீவிக்கிறார். அதனால் இயேசு மட்டுமே பாவங்கள் அகன்று மனிதன் பரலோகத்தை அடையச் செய்யக்கூடியவராக இருக்கிறார். அதனால்தான் இயேசுவை விசுவாசிக்கும்படி கிறிஸ்தவ சுவிசேஷம் அழைக்கிறது. இந்த உண்மையை மற்றவர்களுக்குப் போய் சொல்லுவதால் அது மதம் மாற்றும் முயற்சியாகிவிடாது. இதைச் சொல்லுவதை மட்டுமே மெய்க் கிறிஸ்தவர்கள் கடமையாக வைத்திருக்கிறார்கள்.

இந்தவிதத்தில் மனிதனுடைய பாவம் போக்கப்பட வழிசொல்லும் வேறு மதமோ, வாழ்க்கை நெறிகளோ இந்த உலகத்தில் இல்லை. இந்த சுவிசேஷ உண்மையையும் ஒரு மெய்க் கிறிஸ்தவன் மற்றவர்களுக்கு அவர்களுடைய அனுமதியோடு சொல்லி விளக்குவானே தவிர அவர்களை வற்புறுத்தவோ, மதம் மாற்றவோ எந்த முயற்சியும் எடுக்கமாட்டான். ஏன் தெரியுமா? சுவிசேஷத்தை சொல்லுவது மட்டுமே அவனுடைய கடமை; அதைக் கேட்டு ஒருவர் இருதய மாற்றமடையச் செய்வது கடவுளின் செயல். கடவுள் மாற்றினால் தவிர எந்த மனிதனுடைய இருதயமும் மாறுவதற்கு வழியில்லை என்கிறது கிறிஸ்தவ வேதம். இதைத்தான் சாது செல்லப்பா விளங்கிக்கொள்ளவில்லை. மெய்க் கிறிஸ்தவம் எவரையும் மதம் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை; எல்லோரும் தங்களுடைய பாவத்தில் இருந்து கிறிஸ்துவின் மூலமாக விடுதலை அடைந்து பரிசுத்தமாக இந்த உலகத்தில் வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் மட்டுமே சுவிசேஷத்தை அது அறிவிக்கிறது. மனிதனுடைய இருதயத்தை மாற்றுகிற வேலையை அது உலகத்தையும், மனிதனையும் படைத்த கடவுளின் கையில் விட்டுவிடுகிறது.

தவறான போதனைகளுக்குக் என்ன காரணம்?

கல்லில்லாத அரிசி நாட்டில் இருக்க முடியாது. கற்களே இல்லாமல் அரிசி கிடைத்தால் வேலை குறைவாக இருக்கும்; வயிறும் நன்றாக இருக்கும். அரிசியில் எப்போதும் கல் இருந்துவிடுகிறது. அதைத் தடுக்க முடியாது. அது யதார்த்தம். அதுபோலத்தான் உலகத்தில் மெய்க்கிறிஸ்தவர்கள் மத்தியில் சாது செல்லப்பாக்கள் போன்றோரின் போதனைகளும் இருந்து விடுகின்றன. எதையும் சோதித்துப் பார் என்கிறது வேதம். கள்ளப்போதனைகளுக்கு விலகி நில் என்கிறது வேதம். திருச்சபை வரலாறும் இதை நமக்குக் காட்டாமலில்லை. இத்தகைய போதனைகள் திருச்சபைக்கும், வேதத்துக்கும் ஆபத்தாய் அமைந்துவிடுகின்றன; மற்ற மதத்தார் மனத்தையும் புண்படுத்தி விடுகின்றன. மேலாக இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கொச்சைப்படுத்தி விடுகின்றன.

நல்லரிசி மட்டும் வேண்டுமென்கிறவர்கள் முதலில் சோதித்துப் பார்த்து அதை மட்டுமே வாங்குவார்கள். அதையும் அலசிப்பார்த்து இருக்கும் கற்களை எறிந்துவிட்டு சமைப்பார்கள். அப்படித்தான் நாமும் மெய்க்கிறிஸ்தவத்தை இனங்கண்டு பின்பற்றி வாழவேண்டியவர்களாக இருக்கிறோம். பாவம் இந்த உலகத்தில் தொடர்ந்திருக்கும்வரை அரிசியில் கல்லிருப்பதைப்போல தவறான போதனைகளும், தவறான சுவிசேஷ அறிவிப்பு முறைகளும் இருக்கத்தான் செய்யும். அவற்றை இனங்கண்டு ஒதுக்கி வைக்க வேண்டியதே நம் கடமை. மற்ற மதத்தவர்களையும் இவை பாதித்து மெய்சுவிசேஷப் பணிக்குத் தடையாக வந்துவிடும்போதுதான் அதில் சாத்தானின் கைவேலையைப் பார்க்கிறோம். இத்தகைய முயற்சிகள் நியாயத்தீர்ப்பு நாளில் கடவுளின் கண்களுக்குத் தப்பாது என்பது மட்டும் நிச்சயம்.

கிறிஸ்தவர்களுக்கு ஒரு வார்த்தை

இப்போது மெய்க் கிறிஸ்தவர்களுக்கு சொல்லுகிறேன். சுவிசேஷத்தை ஆவியில் தங்கியிருந்து அறிவியுங்கள். மனிதனின் இருதய மாற்றத்துக்கு உங்களுடைய ஞானத்திலும், வல்லமையிலும் தங்கியிருக்காதீர்கள். உங்களால் ஒரு மனிதனையும் மாற்ற முடியாது. மனித இருதய மாற்றத்துக்கான பெலம் சுவிசேஷத்தின் மூலமாக கிரியை செய்யும் பரிசுத்த ஆவியில் காணப்படுகிறது. எந்த மனிதனுக்கும் சுவிசேஷத்தைச் சொல்லுகிறபோது அதை வேதத்தில் இருப்பதுபோல் உண்மையோடு சொல்லுங்கள். அதோடு எதையும் கலந்து சொல்லவோ அல்லது சுய வல்லமையைப் பயன்படுத்தி மனிதனுடைய மனதை மாற்றவோ முயலாதீர்கள். முக்கியமாக மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறோம் என்று எவரும் நினைத்துவிடுவதற்கு இடம் கொடுக்காதீர்கள். பெயர் கிறிஸ்தவர்கள் உருவாவதற்கு நீங்கள் காரணமாக இருந்துவிடாதீர்கள். அவர்கள் மதத்தை மாற்றிக்கொள்ளலாம்; மனதைச் சமாதானப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் பரிசுத்தமாக வாழ முடியாது; பரலோகமும் போகமுடியாது. சுத்தமான சுவிசேஷத்தை மட்டும் நீங்கள் சொல்லி, மனிதனின் பாவத்தைப் போக்கித் தன்னோடு இணைத்துக்கொள்கிற வேலையைக் கடவுளிடம் விட்டுவிடுங்கள். சொல்லுகிற சுவிசேஷத்தை மெய்யான ஆத்தும வாஞ்சையோடும், அன்போடும் மனிதர்களை மதித்துச் சொல்லுங்கள். எந்தவிதத்திலும் அவர்கள் உங்களைத் தவறாக எண்ணிவிட இடங்கொடாதீர்கள். கிறிஸ்தவம் மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபடுவதில்லை; மனிதனின் பாவத்தைப் போக்குகிற கடவுளான கிறிஸ்துவை எல்லோரும் அறிந்துகொள்ளும்படிச் செய்வதை மட்டுமே  கடமையாகக் கொண்டிருக்கிறது என்பதை நாடு உணரச் செய்யுங்கள்.

___________________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

3 thoughts on “ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s