கற்றனைத் தூரும் அறிவு

(திருமறைத்தீபத்தின் இருபது வருடப் பணியின் நிறைவை நினைவுகூருகிறது இந்த ஆக்கம்)

20thyearநம்முடைய திருமறைத்தீபம் காலாண்டு இதழ் தன்னுடைய இருபது வருடப் பணியை இந்த வருடத்தோடு நிறைவு செய்திருக்கிறது என்பதைத் தாழ்மையோடு தெரிவிக்க விரும்புகிறேன். 2015ன் முதல் இதழ் இதை நினைவுகூரும் இதழாக, வாகர்களின் எண்ணங்களோடு வெளிவரவிருக்கிறது. இருபது வருடங்கள் என்பது ஒரு பெரிய விஷயம்தான். அதுவும் இத்தனை வருடங்களாக இலவசமாகப் பத்திரிகையை விநியோகம் செய்ய கர்த்தர் அனுமதித்திருக்கிறார். அதுவே மிகப் பெரிய கிருபை. இதுபற்றியும் அடுத்து வரவிருக்கின்ற இதழில் எழுதியிருக்கிறேன். இருந்தபோதும் இந்தப் பகுதியில் அதில் நான் வெளிப்படுத்தாத சில அவசியமான உண்மைகளை எழுதலாமென்றிருக்கிறேன்.

பல நாடுகளில் தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் பவனி வரும் இந்தப் பத்திரிகை ஒரு தெளிவான நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. சுவிசேஷ ஆர்வமுள்ள இரு நண்பர்கள் தரமான போதனைகளைத் தொடர்ச்சியாக தமிழினக் கிறிஸ்தவர்களுக்கு வழங்கவேண்டுமென்று என்னை அணுகிக் கேட்டார்கள். எழுதுவதெல்லாம் சபை வேலையைப் பாதிக்கும் என்று அவர்களுக்கு நான் பதில் சொன்னேன். நீங்கள் எழுதி உதவாவிட்டால் அவர்களுக்கு யார் வேதபூர்வமான சீர்திருத்த சத்தியங்களைத் தருவது என்று எழுதும்படி என்னைத் தொடர்ந்து வற்புறுத்தினார்கள். பத்திரிகையெல்லாம் நடத்திப் பழக்கப்பட்டவனல்ல நான். கல்லூரியில் படிக்கும் காலத்தில் தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்து ஆண்டுமலர் வெளியிட்டதும், பல்கலைக்கழக வாழ்க்கையின்போது அதேவகையில் ஆண்டு மலர் வெளியிட்டதும், கட்டுரைகளும், கவிதைகளும் எழுதியதும், இலக்கியத்தில் ஆர்வம்காட்டி இலக்கியக்கூட்டங்களில் கலந்து கொண்ட அனுபவங்கள் மட்டுமே இருந்தது. எழுதுவதும் பத்திரிகை வெளியிடுவதும் சாதாரணமான காரியங்களல்ல. அதனால் அதிகபட்சம் ஒரு வருடமாவது அவர்களுக்கு எத்தனையோ சாக்குப்போக்குச் சொல்லி எழுதுவதைத் தவிர்த்து வந்தேன். ஆனால், கர்த்தர் இதில் சம்பந்தப்பட்டிருந்ததால் தொடர்ந்தும் சாக்குப்போக்குச் சொல்ல என்னால் முடியவில்லை. அவர்களுடைய கோரிக்கைக்கு என்னைக் கர்த்தர் இணங்க வைத்தார்.

ஆரம்பத்தில் இந்தப் பணியில் சம்பந்தப்பட்டிருந்தவர்கள் மூன்றே மூன்று பேர்தான். அவர்களில் ஆசிரியர் மட்டுமே பாப்திஸ்து. மற்ற இருவரும் பிரஷ்பிடீரியன் சபை அமைப்பைச் சேர்ந்தவர்கள். எழுத வேண்டியது ஆசிரியர் பொறுப்பாக இருந்தது. வெளியிடும் வசதிகளைச் செய்து தரவேண்டியது மற்ற இருவரின் பொறுப்பாக இருந்தது. இது எப்படி நடைமுறையில் சாத்தியம் என்று கேட்பீர்கள்? உண்மைதான். ஆசிரியர் வெறும் பாப்திஸ்தாகவும், மற்ற இருவரும் வெறும் பிரெஸ்பிடீரியன்களாகவும் இருந்திருந்தால் இது சாத்தியமில்லாமல் போயிருக்கும். ஆனால், மூவருமே சீர்திருத்த விசுவாசத்தில் உறுதியான நம்பிக்கை கொண்ட விசுவாசிகளாக இருந்ததால் பாப்திஸ்து, பிரெஸ்பிடீரியன் பிரச்சனைகளுக்கு இடமிருக்கவில்லை. மூவரின் நோக்கமும் சீர்திருத்த விசுவாசத்தை தமிழ் கிறிஸ்தவர்கள் அறிந்துகொள்ள பத்திரிகை உழைக்க வேண்டுமென்பதாகவே இருந்தது. இந்த விஷயத்தில் அவர்கள் ஒத்தகருத்துக் கொண்டிருந்ததால் இணைந்து செயல்படுவது ஒரு பிரச்சனையாகவே இருக்கவில்லை. இது சத்தியம் இணைத்த இணைப்பு.

நண்பர்கள் இருவரும் பத்திரிகை ஆசிரியருக்கு முழுச் சுதந்திரமும் தந்தார்கள். ஆசிரியர் சீர்திருத்த பாப்திஸ்தாக இருந்ததால் நிச்சயம் அந்தப் பிரிவுக்குரிய போதனைகளும், கருத்துக்களும் பத்திரிகையில் வெளிவரும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இருந்தாலும் சீர்திருத்தப் போதனை தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் தலைதூக்க வேண்டுமென்பது அவர்களுக்கு முக்கியமானதாகப்பட்டதால் இந்த விஷயத்தை அவர்கள் பெரிதுபடுத்தவில்லை. பத்திரிகை ஆரம்பித்த முதல் ஐந்து வருடங்களுக்கு அவர்களே எல்லாச் செலவுகளையும் ஏற்று பத்திரிகை ஊழியத்திற்கு ஆர்வத்தோடு ஒத்துழைப்பு கொடுத்து வந்தார்கள். ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்பது வள்ளுவர் வாக்கு. அதன்படி நன்றியோடு இதை இப்போது நான் நினைவுகூருகிறேன். அந்தக் காலத்தில் இத்தனை செலவுகளையும் ஆசிரியர் பணிபுரியும் சபையால் செய்திருக்க முடியாது. கர்த்தரே இந்த இருவரையும் எழுப்பி இந்த விஷயத்தில் பயன்படுத்தியிருக்கிறார் என்பதை நிதர்சனமாக நான் உணர்கிறேன். கர்த்தரின் வழிகளில் நாம் எப்படிக் குறைகாண முடியும்? இந்த இருபது வருடங்களை பத்திரிகை நிறைவு செய்திருக்கும் இந்த நாட்களில் அந்த இரண்டு நண்பர்களில் ஒருவர் பல வருடங்களுக்கு முன் கர்த்தரை அடைந்துவிட்டார். மற்றவர் இன்னும் இந்த ஊழியத்தில் அக்கறைகாட்டித் தொடர்ந்து ஊக்கங்கொடுத்து வருவது சந்தோஷத்துக்குரியது.

printersஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பத்திரிகையின் தேவைகளைச் சந்திக்க அநேக நண்பர்களைக் கர்த்தர் எழுப்பினார். சபையும் ஆசிரியருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து பத்திரிகை ஊழியத்தைத் தங்களுடைய சுவிசேஷப் பணியாகக் கருதி ஜெபத்தில் தாங்கி வருகிறார்கள். மெயிலிங் லிஸ்டைப் பயன்படுத்தி ஒவ்வொரு இதழையும் உலகமெங்கும் இருக்கும் வாசகர்களுக்கு வருடத்தில் நான்கு தடவைகள் அனுப்பி வைப்பது அவர்களுடைய பணி. அதைத் தளராமல் இன்றுவரை செய்து வருகிறார்கள். பத்திரிகையை பிரின்ட் செய்கின்ற கம்பேனியையும் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. இத்தனை வருடங்களாக விசேஷ அக்கறைகாட்டி எந்தவித தர்மசங்கடமான நிலைக்கும் நம்மை உட்படுத்திவிடாமல் பத்திரிகையை அழகாக, நேரத்தோடு பிரின்ட் செய்து அனுப்பி அதில் விசேஷ அக்கறை காட்டி வரும் அவர்களுக்கு எப்படி நன்றி கூறாமல் இருக்க முடியும். ஆரம்பத்தில் அட்டை கலரில் வரவில்லை. கலரில் வந்தால் நல்லது என்று கூறி அதற்குப் பணம் கொடுக்கத் தேவையில்லை என்று சொல்லி இன்றுவரையும் அட்டைப்படத்துக்குப் பணம் வாங்காமல் பத்திரிகையை அச்சிட்டு வருகின்ற அவர்களுடைய நல்ல இருதயத்துக்கு நன்றி கூறாமல் இருக்க முடியுமா? அதுவும் கம்பேனியைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல.

எதற்காக இந்தப் பத்திரிகை? இதுபற்றி நான் பத்திரிகையில் ஏற்கனவே எழுதியிருந்தாலும் இந்த இருபது வருட நிறைவு வருடத்தில் அதை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியுமா? பதினாறாம் நூற்றாண்டு உயிர்கொடுத்த சீர்திருத்த வேத சத்தியங்களை தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் தெளிவான முறையில் அறிமுகப்படுத்தி அந்தப் போதனைகளின் அடிப்படையில் தரமான ஆக்கங்களை அவர்களுக்கு வழங்குவதுதான். பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அத்தகைய போதனைகளைத் தந்து வரும் தரமான பத்திரிகை இல்லாதிருந்தது. அந்தக்குறையைத் தீர்க்கவும், ஆசிரியரின் ஊழியப்பணிகளின் மூலமாக வளர்ந்து வருகின்ற சபைகளுக்கும், சபைப்போதகர்களுக்கும் தொடர்ச்சியான போதனைகளைப் பத்திரிகை மூலம் வழங்குவதுமே பெரு நோக்கமாக இருந்தது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு திரும்பிப்பார்க்கின்றபோது அந்த நோக்கத்தில் சிறிதளவும் மாற்றமில்லாமல் பத்திரிகை வெளிவந்திருக்கிறது என்பது கர்த்தரின் கிருபை எந்தளவுக்கு நம்மோடு இருந்திருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது. உருண்டோடியிருக்கும் வருடங்கள் புதிய வாசகர்களையும், நண்பர்களையும், சபைகளையும் அறிமுகப்படுத்தி அவர்களுக்கும் பத்திரிகை பயனுள்ளதாக இருக்கும்படிச் செய்திருக்கின்றது.

miltonஇன்று பத்திரிகை நியூசிலாந்திலும், ஸ்ரீ லங்காவிலும் பிரின்ட் செய்யப்படுகிறது. நியூசிலாந்திலிருந்து அனுப்பப்படுவதைத் தவிர, பத்திரிகை ஊழியப்பணியோடு தொடர்புள்ள பல சபைகளும், நண்பர்களும் அதனை ஏனைய நாடுகளில் விநியோகித்து வருகிறார்கள். இவர்களில் வைராக்கியத்தோடு சத்தியத்தை மற்றவர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்று உழைத்துவருகிறவர்கள் அதிகம்.

ஒரு காலத்தில் நம் பத்திரிகையைப் போலத் தரமான ஆக்கங்களைத் தந்து தமிழில் இன்னொரு பத்திரிகை வெளிவருமானால் இதை நிறுத்திக்கொள்ளலாம் என்ற எண்ணம் எனக்கிருந்தது. இன்றுவரை அது நடக்காததால் பத்திரிகையைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். இனியும் இதைத் தொடர்ந்து வெளியிட தகுந்த காரணங்கள் உண்டா என்று நினைத்துப் பார்க்கிறேன். அத்தகைய காரணங்கள் நிச்சயம் இருக்கின்றன. கர்த்தர் அனுமதிக்கும்வரை அந்த நோக்கங்கள் நிறைவேற பத்திரிகை தொடர்ந்து வெளிவரும். அந்தக் காரணங்கள்தான் என்ன? இன்று அநேக புதிய வாசகர்களை பத்திரிகை சந்தித்திருக்கிறது. இவர்களுக்கு சீர்திருத்த வேதசத்தியங்கள் போய்ச் சேர வேண்டும். அத்தோடு சீர்திருத்த விசுவாசத்தை உள்ளது உள்ளபடி விளக்காமல், அதில் மாற்றங்களைக் கொண்டுவந்து திரித்து விளக்குகின்றவர்களும், காலத்துக்கும் நடைமுறைக்கும் ஏற்றபடி அதை மாற்றித் திரித்துப் போதிக்க வேண்டும் என்று புறப்பட்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். இதையெல்லாம் தோலுரித்துக்காட்டி மெய்யான சீர்திருத்தப் போதனைகளை வேதபூர்வமாக விளக்கி தமிழ் வாசகர்களுக்கு தொடர்ந்து உதவ வேண்டிய கடமை இருக்கின்றது. தொடர்ந்தும் தமிழ் கிறிஸ்தவர்களையும், சபைகளையும் பாதித்து வருகின்ற உலக இச்சைகளை வளர்க்கும் செழிப்புபதேசமும், வேதத்தில் காணப்படாத பல்வேறு குழப்பப் போதனைகளிலும் இருந்து அவர்களை விடுவிக்க நம்மாலானதைச் செய்யும் பணி இருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக வேதபூர்வமான சுவிசேஷத்தையும், வேத அடிப்படையிலான மெய்க்கிறிஸ்தவ அனுபவத்தையும், கர்த்தருடைய கட்டளைகளுக்கு அன்போடு கீழ்ப்படிந்து நடக்கின்ற பரிசுத்தவாழ்க்கை பற்றியும் அவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கி வேதசத்தியங்களை அவர்கள் அறிந்துகொள்ள துணைபோக வேண்டியிருக்கிறது. இந்த நோக்கங்களையெல்லாம் நிறைவேற்ற நாம் கர்த்தரின் துணையை நாடி நிற்கிறோம்.

Srilanka booksஆரம்பகாலத்தைப் போலல்லாது இன்று பத்திரிகை பணியில் பலருடைய பங்கும் இருக்கின்றது. நண்பர் ஜேம்ஸின் பங்கு இதில் அதிகம். அதன் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு, இந்திய விநியோகப் பணிகளை அவர் பார்த்துக்கொள்கிறார். நம் நூல்களைத் தயாரித்து வெளியிட்டு வரும் பணியிலும் அவர் தன்னலமின்றி ஈடுபாட்டோடு உழைத்து வருகிறார். அச்சுத் திருத்தப் பணிகளில் ஜேம்ஸ்ஸோடு நண்பர் பாலாவும் உதவி வருகிறார். மோசேயின் தோல்களைத் தாங்கி நின்றவர்களைப்போல இன்றைக்கு இந்த இலக்கியப் பணியில் அநேகர் ஒவ்வொரு விதத்தில் எனக்குத் துணைபுரிந்து வருகிறார்கள். பாசத்தோடும், நேசத்தோடும் பத்திரிகையை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி ஆவிக்குரிய வெளிச்சத்தை அவர்கள் அடைய உழைத்து வருகிறவர்களும் அநேகர். இவர்களுக்கெல்லாம் நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அதற்கும் மேலாக இந்தப் பணியில் நாங்கள் சக ஊழியர்களாக இருந்து ஒத்தகருத்துள்ளவர்களாக கர்த்தரின் மகிமையை மட்டுமே இலக்காகக் கொண்டு பணி செய்து வருவதுதான் சிறப்பு. ‘எங்களுக்கு அல்ல, கர்த்தாவே எங்களுக்கு அல்ல, உமது கிருபையின் நிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும்’ (சங் 115:1) என்ற சங்கீத வரிகளை நினைவில் வைத்து இந்தப் பணியில் நாமனைவரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.

இத்தனை வருட காலப் பத்திரிகை பணியில் மனதுக்கு நிறைவு தருவது எது என்று எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை.

(1) முதலில், எங்கெங்கோ இருக்கும் வாசகர்கள், ‘ஐயா, இதுவரை அறியாதிருந்த சத்தியங்களை அறியத் தந்து, வேத வசனங்களுக்கு இதுவரைத் தெரியாதிருந்த விளக்கங்களை அளித்து உதவுகிறீர்கள். அதற்கு மனமார்ந்த நன்றி’ என்று கடிதமோ, இமெயிலோ அனுப்பி அல்லது தொலைபேசியில் தெரிவிப்பது மனநிறைவைக் கொடுக்கிறது. இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நாளிலும் அத்தகைய இமெயில்கள் ஆவிக்குரிய ஆலோசனைகள் கேட்டு வந்திருக்கின்றன. அத்தகைய நோக்கங்களை நிறைவேற்றி வைப்பதற்குக்தானே இது ஆரம்பிக்கப்பட்டது.

(2) அடுத்து, எங்கெல்லாம் போகப்போகிறோம் என்று தெரியாமல் பத்திரிகையை ஆரம்பித்தபோதும் இன்று அது தன் நோக்கத்தைத் தொடர்ந்து நிறைவேற்றிவருவதோடு, மேலும் பல நல்ல நூல்களைத் தமிழில் வெளியிடுமளவுக்கு வளர்ந்திருப்பது மனநிறைவைத் தருகிறது. அவை போதகர்களுக்கும், சபைகளுக்கும் உதவி வருவதறிந்து நெகிழ்கிறோம்; கர்த்தருக்கு நன்றி கூறுகிறோம்.

(3) எத்தனையோ ஆத்துமாக்களையும், நல்ல நண்பர்களையும், தன்னலமற்ற உதவியாளர்களையும் கர்த்தரின் மகிமைக்காக நடந்துவரும் இந்தப் பணியில் பத்திரிகை நமக்கு அறிமுகப்படுத்தியிருப்பது மனநிறைவைத் தருகிறது.

இதை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் இரண்டு நல்ல உள்ளங்கள், வாசகர்கள் என்னோடு தொடர்பு கொண்டார்கள். ஒருவர் பல வருடங்களுக்கு முன் பத்திரிகையில் வெளிவந்த ஒரு ஆக்கத்தைக் குறிப்பிட்டு அதை இப்போது வாசித்தபோது அதன் மூலம் கர்த்தர் தன்னோடு பேசி தான் விட்ட குறைகளைச் சுட்டிக்காட்டியதாகவும், அதை எண்ணி வருந்தி கர்த்தரிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் அந்த சகோதரர் சொன்னார். அத்தோடு பத்திரிகையில் இருந்து தான் பல ஆழமான புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு வருவதாகவும், அத்தகைய போதனைகள் தன் நாட்டில் கிடைப்பதில்லை என்றும் சொன்னார். பத்தாயிரம் கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் இந்த சகோதரருக்கு பத்திரிகை இப்படிப் பயன்பட்டிருப்பதும், தொடர்ந்து பயன்பட்டு வருவதும் கர்த்தரின் கிருபையால்தான்.

அதேபோல் அத்தனைத் தூரத்தில் இருந்து இன்னுமொரு வாசகர் தன்னுடைய ஊழியப்பணி பற்றி ஆலோசனைகள் கேட்டு எழுதியிருந்தார். தான் பெந்தகொஸ்தே போதனைகளில் இருந்து விடுபட்டு சபை நடத்தி வருவதாகவும், பத்திரிகையைப் பல வருடங்களாக வாசித்து வருவதாகவும், சீர்திருத்த சத்தியங்களைக் கற்றுக்கொள்ள பத்திரிகை பேருதவி புரிந்து வருவதாகவும் சொன்னார். இந்த சகோதரர் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் இருந்தபோதும் இத்தகைய ஆத்மீக விடுதலையைப் பத்திரிகை இவரைப் போன்ற அநேகருக்கு அளித்து வருவது இதயத்துக்கு இதமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் உழைக்கும் உழைப்பின் களைப்பை இத்தகைய வாசகர்கள் பனிபோலப் போக்கிவிடுகிறார்கள்.

கடைசியாக, ஒரு ஆவிக்குரிய ஆலோசனையைத் தந்து இதை நிறைவு செய்யப்போகிறேன். இதை ஏற்கனவே பல தடவைகள் நினைவுறுத்தியிருக்கிறேன். இருந்தாலும் அவசியமான நல்ல விஷயங்களைத் திரும்பத் திரும்ப நினைவூட்டுவது அவசியம். சார்ள்ஸ் ஸ்பர்ஜனும், ஜொனத்தன் எட்வர்ட்ஸும் தந்திருக்கும் கீழ்வரும் அறிவுரைகளை வாசித்துப் பாருங்கள். பகுத்தறிந்து வாசிக்கும் பழக்கத்தைத் தன்னில் கொண்டிராத தமிழ் கிறிஸ்தவர்கள் இவற்றை சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

‘தொட்டனைத் தூரும் மணற்கேணி மாந்தர்குக்
கற்றனைத் தூரும் அறிவு’

என்கிறார் வள்ளுவர். இதற்கு அர்த்தமென்ன தெரியுமா? நாம் எந்த அளவுக்கு தோண்டுகிறோமோ அந்த அளவுக்கு நீர் மணற்கேணியில் ஊரும். அதுபோல் எந்த அளவுக்கு வாசிக்கிறோமோ அந்த அளவுக்கு அறிவும் பெருகும். ஆகவே, நேரத்தை விரயம் செய்யாமல் நாம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

‘கண்டதையும் எழுத முற்படக்கூடாது, கண்டதையும் வாசிக்கக் கூடாது, கண்டதையும் மற்றவர்கள் வாசிக்க வைத்துவிடக்கூடாது’ என்று ஜே. சி. ரைல் ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார். அப்படியானவற்றைப் பார்த்து, ‘எனக்கும் அதை வாசிக்கக்கொடு’ என்று கர்த்தர் கேட்கும் நிலைக்கு அவரை ஆளாக்கிவிடக்கூடாது என்றும் நகைச்சுவையாக ரைல் சொல்லியிருக்கிறார். இன்றைக்கு தகுதியெதுவும் இல்லாதவர்களெல்லாம் எழுதப் புறப்பட்டிருக்கிறார்கள்; கர்த்தரின் பெயரில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் எழுதிக் கொட்டுகிறார்கள். சிந்திக்கத் தெரிகிறவர்கள் வாசித்துவிட்டு நம்மைப் பார்த்து சிரிப்பார்களே என்பதில் எல்லாம் அவர்களுக்கு அக்கறை இல்லாமல் இருப்பதற்கு யார் காரணம்? நாம் தான்! அவற்றைக் காசு கொடுத்தோ அல்லது சும்மாக் கிடைக்கின்றதென்பதாலோ வாங்கி வாசித்து நேரத்தை வீணாக்கிக்கொள்கிறோம். அதை முதலில் தவிர்த்துவிட்டு பகுத்தறிந்து நாம் எதையும் வாசிக்க வேண்டும்; கற்றுக்கொள்ளப் பழக வேண்டும். வாசிக்காமல் இருப்பது நம் அறிவு வளர்ச்சிக்கும், ஆத்தும வளர்ச்சிக்கும் ஊறு செய்யும். வாசிக்கும்போது ஆராய்ந்து பார்த்து வேதரீதியில் அமைந்திருந்து ஆத்தும வளர்ச்சிக்கு துணைபோகிற எழுத்துக்களை மட்டுமே வாசிக்க வேண்டும்.

‘வாசிப்புக்கு நேரத்தை ஒதுக்குங்கள். வாசிக்காத ஒருவனைப் பற்றி ஒருவரும் தெரிந்துகொள்ள முடியாது; தான் வாசித்தவற்றைப் பகிர்ந்துகொள்ளாதவனைப் பற்றி எவரும் பேச மாட்டார்கள். மற்றவர்களுடைய சிந்தனையைப் (அறிவை) பயன்படுத்திக் கொள்ளாதவன் தனக்கு சிந்திக்கின்ற மூளை இல்லை என்பதையே நிருபிக்கிறான். நீங்கள் வாசிக்க வேண்டும்.’ – சார்ள்ஸ் ஹெடன் ஸ்பர்ஜன்.

‘நல்ல விதத்தில் உங்களுடைய ஓய்வு நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ள நீங்கள் வாசிக்கவோ அல்லது ஜெபிக்கவோ வேண்டும் என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம். நீங்கள் வாசிக்கும் நூல்களில் இருந்து கற்றுக்கொள்கின்ற அனைத்தையும் உங்களுடைய ஆண்டவருக்காக நீங்கள் செய்யும் பணிகளில் நல்ல ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பவுல் சத்தமிட்டுச் சொல்லுகிறார், ‘புஸ்தகங்களைக் கொண்டுவா’ – அதில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.’ – சார்ள்ஸ் ஹெடன் ஸ்பர்ஜன்.

‘அனைத்து சத்தியங்களும் வெளிப்படுத்தல் மூலமாகவே தரப்பட்டிருக்கின்றன. அதாவது பொது வெளிப்படுத்தல் மூலமாகவோ அல்லது சிறப்பான வெளிப்படுத்தல் மூலமாகவோ அவை தரப்பட்டிருக்கின்றன. அப்படித் தரப்பட்டிருக்கும் சத்தியங்களை நாம் பகுத்தறிந்தே (Reason) ஏற்றுக்கொள்ள வேண்டும். தன்னுடைய உலகத்தின் மூலமோ அல்லது வார்த்தையின் மூலமோ கடவுள் வெளிப்படுத்தும் சத்தியங்களை நாம் ஏற்றுக்கொள்ளுவதற்காக அவரளித்திருக்கும் ஊடகமாகவே பகுத்தறிவு (Reason) இருக்கிறது.’ – ஜொனத்தன் எட்வர்ட்ஸ்

இன்னும் இரண்டே வாரங்களில் முடியப்போகிறது இந்த வருடம். புதிய வருடம் வெகுதூரத்தில் இல்லை. நம் ஆண்டவரின் வருகையின் நாளும் வருடா வருடம் சமீபித்துக்கொண்டே வருகிறது. உலகத்தின் நிலையைப் பார்க்கிறபோது அந்த நாளும் வெகுதூரத்தில் இல்லை என்பது தெரிகிறது. நாமிருக்கப் போகும் நாட்களும் அதிகம் இல்லை. செய்ய வேண்டிய பணிகளோ அநேகம். மரணத்தின் சரீரத்தோடு, போராட்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்ற நாம் இருக்கின்ற நாட்களைப் பயன்படுத்தி கர்த்தரின் கிருபையில் மட்டும் தங்கியிருந்து தாழ்மையோடு அவருக்காகப் பணி செய்வோம்.

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 28 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s