தனி மனிதன் சமூகமாகிறான்

சமீபத்தில் ஒழுக்கத்தைப் பற்றி ஒரு முக்கிய தமிழ் எழுத்தாளர் தந்திருந்த விளக்கத்தை வாசிக்க நேர்ந்தது.

‘ஒழுக்கம் என்பது ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒவ்வொன்றாக உள்ளன. அவை உருவாவதற்கான சமூகப்பின்னணியும் வாழ்க்கைச் சூழலும் பல்வேறுபட்டவை. அவை சமூகத்தில் ஆழமான நம்பிக்கைகளாக வேரூன்றச் செய்யப்படுகின்றன. அந்த சமூகப் பின்னணியும் சூழலும் மாறிய பின்னரும் அவை அவ்வளவு எளிதாக மாறுவதில்லை. இதுவே ஒழுக்கஞ்சார்ந்த விஷயங்களில் உள்ள மிகப் பெரிய பிரச்சனை’ என்று அவர் விளக்கமளித்திருந்தார். இந்த விளக்கம் ஓரினச் சேர்க்கையாளர் ஒருவர் மனந்திறந்து கேட்டிருந்த வினாவுக்கு அவர் தந்திருந்த விளக்கத்தின் ஒருபகுதி. விளக்கம் தந்த எழுத்தாளர் ஒழுக்கமென்பது சமூகத்தால் உருவாக்கப்படுகிறதென்றும், அது காலத்துக்குக் காலம் மாறுகிறதென்றும், காலப்போக்குக்குத் தக்கதாக அது மாறாவிட்டால்தான் பிரச்சனை என்றும் ஆதங்கப்படுகிறார். இந்த எழுத்தாளரைப் பொறுத்தவரையில் ஒழுக்கமும், பண்பாடும் ஒன்றே. வீட்டுக்குள் போவதற்கு முன் செருப்பைக் கழட்டி வாசலில் வைத்துவிட்டுப் போவதற்கும் (பண்பாடு) ஓரினச்சேர்க்கையையும் (ஒழுக்கம்) அவர் ஒன்றாகத்தான் பார்க்கிறார். இதை வாசித்தபோது எந்தளவுக்கு தமிழ் சமுதாயத்தின் சிந்தனைப்போக்கில் ஒழுக்கத்தைக் குறித்த தீவிர மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை என்னால் ஆழமாக எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை.

நாற்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு புரட்சிகரமாக எழுதிப் பிரபலமாக ஆரம்பித்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். ஆண், பெண் உறவு, திருமணம் பற்றிய அவருடைய சுதந்திரமான, சமுதாயம் வாசித்துப் பழகாத எண்ணங்களை அவர் தன் சிறுகதைகளிலும், நாவல்களிலும் வெளியிட ஆரம்பித்தபோது சமுதாயம் அவரைப் பார்த்துச் சீறியது. முக்கிய பத்திரிகையொன்று அந்தச் சீற்றம் தாங்கமுடியாமல் தான் வெளியிட்ட அவருடைய கதைக்காக பொதுமன்னிப்புக் கேட்டது. அன்று சமுதாயம் பொதுவாக ஒழுக்கத்தைப் பற்றிய வலுவான எண்ணப்பாட்டைக் கொண்டிருந்தது மட்டுமல்ல அதைப் பாதுகாக்கவும், அதற்காகப் போராடவும் தவறவில்லை.

இன்றைக்கு தமிழினத்தில் ஒழுக்கத்தைப் பற்றி எதை எழுதினாலும் எவரும் கவலைப்படுவதாக இல்லை. இதுவரை ஒழுக்கமாகக் கருதப்பட்டவைகளில் சமுதாய மாற்றங்கள் தேவையென எண்ணுபவர்களின் தொகை அதிகரித்திருக்கிறது; முக்கியமாக பெருநகர்ப்புறங்களில் இது பெருகிவருகிறது. இதற்கெல்லாம் மேலைத்தேய நாடுகளின் விபரீதமான எண்ணப்போக்கைத்தான் நான் காரணமாகச் சொல்லுவேன். சமுதாயத்தில் ஆண், பெண் இருபாலாரின் பங்கு, ஆண் பெண் உறவு, ஓரினச்சேர்க்கை என்பவை பற்றிய கருத்துக்கள் அடியோடுமாறி வைரஸ்போல பரவி, சமுதாயப் பரிணாம வளர்ச்சி என்ற பெயரில் தன்னை அழித்துக்கொண்டிருக்கும் மேலை நாடுகள் இணையதளங்கள், சஞ்சிகைகள், தொலைக்காட்சி மூலம் கீழைத்தேய சமுதாயத்திற்கு இவற்றை ஏற்றுமதி செய்து சமுதாய மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. விஷயம் தெரியாமல் கண்மூடித்தனமாக அனைத்திலும் மேலைநாடுகளைப் பின்பற்றுபவர்கள் இந்த எண்ணங்களை முற்போக்குச் சிந்தனைகளாக நினைத்து நம்மக்கள் மத்தியில் வெளிப்படையாகப் பேசியும், எழுதியும் அறிமுகஞ் செய்துவைக்கிறார்கள். இணையதளங்களில் முகத்தையே காட்டாமல் எவரும் எதையும் எழுதி வெளியிடும் வசதியும் ஏற்பட்டிருப்பதால் இத்தகைய கருத்துக்களும், எண்ணங்களும் எவர் கண்ணையும் ஈர்க்கும்படி வெளிப்படையாகவே நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நாற்பது வருடங்களுக்கு முன் சீறியெழுந்திருக்கக்கூடிய மக்கள் இன்றைக்கு அமைதிகாக்கப் பழகியிருக்கும்வரை காலம் மாறிப்போயிருக்கிறது.

இந்த மாற்றங்களுக்கெல்லாம் உதாரணமாக இந்தியா டுடே சஞ்சிகையை எடுத்துக்காட்டலாம். வருடத்தில் ஓரிரு தடவையாவது இந்திய தேச மக்களின் பாலுறவுச் சிந்தனைகள், நடைமுறைகள் பற்றி அப்பட்டமாக கருத்துக்கணிப்பு நிகழ்த்தி, அவற்றை விளாவாரியாக விளக்கி அட்டைப்படம் தொடக்கம் படங்களோடு முத்திரைக் கட்டுரையாக அது வெளியிட்டு வருகிறது. நாற்பது வருடங்களுக்கு முன் இந்தப் பத்திரிகை இதைச் செய்திருந்தால் தெருவில் எரித்து ஆர்ப்பாட்டம் செய்திருப்பார்கள் மக்கள். பத்திரிகை ஆபிஸுக்கும் ஆபத்து நேர்ந்திருந்திருக்கும். இன்று அதைப் பற்றிக் கருத்துத் தெரிவிப்பவர்கள் ஒருவருமே இல்லை. எந்தளவுக்கு சமுதாயம் மாறியிருக்கிறது தெரிகிறதா? அந்தக் காலத்தில் குமுதம் பத்திரிகை மட்டுமே மட்டமான செய்தி வெளியிடும் பத்திரிகை என்ற எண்ணம் இருந்தது. அதுவும் வெறும் சாதாரண சினிமா ஸ்டில்களையும், செய்திகளையும் வெளியிட்டதற்கே அந்தப் பெயர். அன்று அது குடும்பப் பத்திரிகையாகக் கணிக்கப்படவில்லை. இன்றைக்கு காலம் எப்படித்தான் மாறியிருக்கிறது? ஓரினச் சேர்க்கையை ‘மனிதநேயக்’ கண்ணோட்டத்தோடு அணுகும்வரைக்கும் காலம் தமிழினத்தில் மாறித்தான் போயிருக்கிறது.

இதையெல்லாம் நான் ஏன் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று வாசகர்கள் எண்ணலாம். அதற்குக் காரணம் இருக்கிறது. முதல் பத்தியில் நான் குறிப்பிட்ட எழுத்தாளரின் ஒழுக்கம் பற்றிய சிந்தனையை மறுபடியும் கவனிப்போம். ஒழுக்கத்தை அவர் ஒவ்வொரு சமுதாயமும் ஒவ்வொரு காலப்பகுதியில் பின்பற்றுகிற ஒன்றாகத்தான் பார்க்கிறார். காலத்துக்குக் காலம் ஒழுக்கத்தில் மாறுதல் ஏற்படுவது மட்டுமல்ல; மாறுவதும் நல்லது என்பது அவருடைய எண்ணம்.

இதைத்தான் மேலை நாடுகளில் பின்நவீனத்துவ சிந்தனை என்று அழைக்கிறார்கள். இதுவே பின்நவீனத்துவமல்ல. இது பின்நவீனத்துவ சிந்தனைப் போக்கின் அடிப்படை அம்சம். எதுவும் நிலையானதாக இல்லாமல் பரிணாம வளர்ச்சி அடையும்; அடையவேண்டும் என்கிறது பின்நவீனத்துவம். இந்தப் போக்கு தமிழினத்தில் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், மனித உரிமைக்குக் குரலெழுப்புகிறவர்கள் மத்தியில் பரவலாகப் படர்ந்து மீடியா மூலம் வலுப்படுத்தப்பட்டு வருகிறது. மீடியா ஒரு சக்தி வாய்ந்த சாதனம். சிறுபான்மைக் குழுவான மீடியா எங்கும் சமுதாய சிந்தனைகளில் மாற்றமேற்படுத்த உழைத்து வருகிறது. பின்நவீனத்துவம் அதன் கையில் கிடைத்திருக்கும் ஆயுதம். இன்றைக்கு ஜெயமோகன், சாருநிவேதிதா, எஸ். இராமகிருஷ்ணன் போன்றோர் பின்நவீனத்துவ எழுத்துக்களுக்கு ஒருசில உதாரணங்கள் (Tamil Literature, Wikipedia). இவர்களெல்லாம் எல்லா விஷயத்திலும் பின்நவீனத்துவவாதிகளல்ல. இவர்களுடைய எழுத்துக்களில் அந்தப் போக்கைப் பல விஷயங்களில் காணமுடியும். ஓரினச்சேர்க்கையைப் பொறுத்தவரையில் இவர்கள் நிச்சயம் பின்நவீனத்துவவாதிகள்தான்.

பின்நவீனத்துவத்தைக் தவறாகக் கணிப்பதில் ஆபத்து இருக்கிறது. அது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் தொடர்கின்றன. கட்டுக்கோப்பில்லாமல் எழுதுவது, பாலியல் பற்றி அப்பட்டமாக எழுதுவது என்பதுதான் பின்நவீனத்துவமாகக் கருதுகிற எண்ணம் எப்படியோ ஏற்பட்டிருக்கிறது. இது முழுத்தவறு. அதுவல்ல பின்நவீனத்துவம். ஒரு காலத்தில் சமூகம் நவீனத்துவத்தைப் பின்பற்றியது. அன்று எல்லாம் கட்டுக்கோப்போடு இருந்து வந்தது; தெளிவான விளக்கம் ஒவ்வொன்றிற்கும் இருந்தது. வரைமுறை இருந்தது. உதாரணத்திற்கு ஒழுக்கத்தை எடுத்துக்கொண்டால் எது ஒழுக்கம், ஒழுக்கமில்லை என்ற வரையறை இருந்தது – இது நவீனத்துவம். சமூகம் நவீனத்துவ காலத்தில் இருந்து இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பின்நவீனத்துவத்தை நோக்கி நடைபோட ஆரம்பித்தது. பின்நவீனத்துவம் நவீனத்துவத்துக்கு எதிர்புறமானது.

பின்நவீனத்துவம் மாற்றத்தை விரும்புகிறது. அதனால் மாற்றங்களே தவறு என்றும் நினைத்துவிடக்கூடாது. பின்நவீனத்துவத்தை எதிர்ப்பவர்களை மாற்றங்களை விரும்பாதவர்களாக நினைப்பது அபத்தம். மாற்றங்கள் அவசியம். படைப்பு மாற்றங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. வண்ணத்துப் பூச்சி புழுவாக இருந்து மாற்றமடைந்துதான் அழகாக சிறகடித்துப் பறக்க ஆரம்பிக்கிறது. இயற்கையில் மாற்றங்களைக் காண்கிறோம்; நான்கு காலங்களைப் பார்க்கிறோம். மாற்றங்கள் முன்னேற்றத்துக்கு வழிகோலுகின்றன. சமூகத்தின் எண்ணங்களில் பலவித மாற்றங்கள் நிகழ்ந்து முன்னேற்றம் உண்டாகியிருக்கின்றது. மக்கள் குக்கிராமங்களிலேயே இருக்க அவசியமில்லாதபடி மாற்றங்கள் ஏற்படவில்லையா? அரசியல், கலை, பொருளாதாரம், தொழில்நுட்பம் என்று அனைத்திலும் மாற்றங்கள் அவசியம்; முன்னேற்றம் அவசியம். இதிலெல்லாம் தப்பில்லை.

பின்நவீனத்துவ மாற்றங்கள் இதுவரை நான் விளக்கிய விஷயங்களில் இல்லை. அது சமூகத்துக்கு எது அடித்தளமோ அதில் மாற்றத்தை நாடுகிறது. சமூகத்தை சமூகம் இல்லை என்று விளக்கப் பார்ப்பது அது நாடுகிற மாற்றம். நான் நானில்லை என்று நிரூபிக்கப் பார்ப்பது பின்நவீனத்துவம். ஒன்றின் அடையாளத்திற்கு மறுவிளக்கம் கொடுக்கிறது பின்நவீனத்துவம். இதுவரை ஒருவிஷயத்தைப் பற்றி பொதுவாக எல்லோரும் கொண்டிருந்த நம்பிக்கைகளின் அடிப்படையைத் தகர்த்து அது அதுவல்ல என்று காட்ட முயல்கிறது பின்நவீனத்துவம். இதனை ஆங்கிலத்தில் deconstruction என்று சொல்லுவார்கள். இதைத்தான் அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது பின்நவீனத்துவம். அதன் இன்னொரு அம்சம் அது எதையும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பது (scepticism); ஒன்றின் மெய்த்தன்மையை சந்தேகிப்பது. அதை இந்தளவுக்கு விளங்கிக் கொண்டிருக்கிறவர்கள் இருக்கிறார்களா?

பின்நவீனத்துவம் வரையறையோடும், கட்டுமானத்தோடும் இருக்கும் அனைத்தின் மையத்தையும் அசைக்கும் முயற்சியில் இறங்குகிறது. அதிகாரம் அதற்குப் பிடிக்காத ஒன்று; அதிகாரத்தின் மையத்தை அது அசைக்கிறது. ஒழுக்கம் அது விரும்பாத ஒன்று; அதன் ஆணிவேரை அது அகற்றுகிறது. எதெல்லாம் ஒரு வட்டத்துக்குள் வரையறையோடு இருக்கின்றதோ அதன் மையங்களையெல்லாம் தகர்த்துச் சின்னாபின்னமாக்குகிறது பின்நவீனத்துவம். இதுவரை அடிப்படையானது என்று எதைக் கருதி வந்திருக்கிறோமோ அதை இல்லாமலாக்குவது பின்நவீனத்துவம். இயல்பாக இருப்பதை அது இயல்பற்றதாக மாற்ற முயல்கிறது. இயல்பு, ஒழுக்கம், அதிகாரம் என்பதெல்லாம் பின்நவீனத்துவ அகராதியில் இல்லை. அதனால்தான் அது ஒழுக்கமென்று இதுவரை கருதப்பட்டதற்கு மறுவிளக்கமளிக்கிறது. ஓரினச்சேர்க்கையை அது ஒழுக்கமற்ற செயலாகக் கணிக்க மறுக்கிறது. ஒழுக்கம் பற்றிய சிந்தனைகளுக்கு மறுவடிவம் கொடுக்க முனைகிறது.

பின்நவீனத்துவம் தனிமனிதனுக்கும் அவனுடைய சிந்தனைகளுக்கும் முக்கியத்துவமளிக்கிறது. அவனே அவனுக்கு அதிகாரி. அவனுடைய எண்ணங்களே அவனை ஆளுகின்றன. அவைகூட தொடர்ந்து மாற்றமுறலாம். அவனுடைய விருப்ப வெறுப்புகளே அவனைப் பொறுத்தவரையில் எல்லாமாகிவிடுகின்றன. அவனைப் பொறுத்தவரையில் அவையே உண்மை. அவன் எதைச் சொன்னாலும் அது உண்மையே என்கிறது பின்நவீனத்துவம். சரி, தவறு என்பதெல்லாம் பின்நவீனத்துவத்தில் இல்லை; அவை வெறும் வேறுபட்ட கருத்துக்கள் மட்டுமே.

No man is an island என்று சொல்லுவார்கள். தனிமனிதன் சமூகத்தோடு சம்பந்தப்பட்டவன். மனிதன் ஒரு சமூக விலங்கு என்று தத்துவவாதியான அரிஸ்டோட்டில் சொல்லியிருக்கிறார். மனிதன் தனிமைக்காகப் படைக்கப்படவில்லை. தனக்காக வாழ்வதற்காக அவன் உருவாக்கப்படவில்லை. அவன் சமூகத்தோடு வாழப் படைக்கப்பட்டவன். பின்நவீனத்துவத்தின் தாக்கத்தால் சமூகம் என்பது பலபேர் என்றிருந்த நிலைமாறி தனிமனிதன் சமூகமாகி விடுகிறான். அவனுடைய சுதந்திரம், அவனுடைய உரிமை என்பதே இதன் மூச்சாக இருக்கிறது. சமூகத்துக்காக தனிமனிதன் என்றிருந்த காலம் போய் மனிதன் தானே ஓர் உலகமாகிவிடுகிறான். அவனுடைய எண்ணங்களும், விருப்பங்களும், போக்குகளும் பாதிக்கப்படக்கூடாது என்ற பார்வைக்குப் பெயர் மனிதநேயமாகிறது. தனி மனிதனும் அவனுடைய லாபங்களுமே பின்நவீனத்துவத்தின் இலட்சியப் பார்வை. இந்த அடிப்படையிலேயே தனி மனிதன் சம்பந்தப்பட்ட எதையும் அணுகி, எந்தக் கட்டுக்கோப்பையும் அவனுக்காகத் தகர்த்து அவனுடைய சுதந்திரத்தை நிலைநாட்டப்பார்க்கிறது பின்நவீனத்துவம். இந்தப் பார்வை கலை, அரசியல், சமுதாய ஒழுக்கம், தத்துவம், வரலாறு, பொருளாதாரம், கட்டடக்கலை, புனைகதை, இலக்கிய விமர்சனம் என்று எதையும் விட்டுவைப்பதில்லை. பின்நவீனத்துவப் பார்வையில் எல்லாத் துறைகளிலும் அனைத்தின் மையங்களும் தகர்க்கப்படுகின்றன.

ஓரினச்சேர்க்கையாளர்களை பின்நவீனத்துவப் பார்வையோடு கணிக்க தமிழ் சமுதாயம் இலக்கியவாதிகளாலும், பத்திரிகையாளர்களும், மீடியாக்களாலும் வழிநடத்தப்படுகிறது. மேலைத்தேய நாடுகளைப் போல ஓரினச் சேர்க்கைக்கும், அதோடு தொடர்புடைய ஏனைய சுதந்திரங்களுக்கும் சட்ட உரிமையளிக்கும் காலம் தமிழினத்தில் ஒருகாலத்தில் ஏற்படாமல் இருக்கப்போவதில்லை. தனி மனிதன் சமூகமாகிற நிலை அதிகரிக்க அதிகரிக்க ஒருங்கிணைந்த சமுதாயப் பார்வை இல்லாமல்போய் சமுதாயம் தன்னை அழித்துக்கொள்ளும் நிலைக்குப் போய்விடும். அதை மேலை நாட்டு சமுதாயங்களில் இன்று உணர முடிகின்றது. அழிவை அது வளர்ச்சியின், முன்னேற்றத்தின் அறிகுறியாகக் கருதுகிறது.

இதுவரை மதங்களும், ஒழுக்க நெறிகளும் சமுதாயத்தை ஒருங்கிணைத்து வைத்திருந்தன. பின்நவீனத்துவம் அதற்கு எதிரி. எதெல்லாம் சமுதாயத்தை இறுக்கமாக இணைக்க உதவியதோ அதையெல்லாம் களைவதுதான் பின்நவீனத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடு. இன்றைக்கு மேலைநாட்டு சமுதாயங்களில் ஒழுக்கம் என்ற வார்த்தைக்குப் பொருளில்லை. தனி மனிதனுடைய விருப்பு, வெறுப்பே அவனைப் பொறுத்தவரையில் ஒழுக்கம். அதுவும் நிலையானது அல்ல. சமூகக் கட்டுப்பாடு, சமூக ஒழுங்கு என்பதெல்லாம் இல்லாமல் போய் சமூகம் என்பது தனி மனிதன் என்ற நிலைக்கு உலகம் போய்க்கொண்டிருக்கிறது.

இங்குதான் கிறிஸ்தவனான என்னால் பின்நவீனத்துவத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாற்றங்களை அறவே வெறுப்பவனல்ல நான். மாற்றங்கள் படைப்போடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறதை நான் புரிந்துகொண்டிருக்கிறேன். மாற்றங்களில்லாமல் முன்னேற்றத்திற்கு வழியில்லை என்பதையும் படைப்பு எனக்குக் காட்டுகின்றது. படைப்பின் அஸ்திவாரத்தை அசைக்கப்பார்க்கிற மாற்றங்களுக்குத்தான் நான் விரோதி. ஒரு கிறிஸ்தவனால் மாற்றங்களை இருகரம் நீட்டி வரவேற்க முடியும்; அவை எந்த அடிப்படை அம்சங்களையும் நிராகரிக்காமல் இருக்கும்வரை.

பின்நவீனத்துவம் கர்த்தரின் வேதத்திற்கு எதிரி. வேதம் நிலையானது, கர்த்தர் நிலையாக இருப்பதைப்போல. அது என்றும் மாறாதது, கர்த்தர் மாறாதவராக இருப்பதைப்போல. ஒழுக்கத்தை வரையறுத்துக் காட்டுகிறது அது. ஒழுக்கம் கடவுளால் உருவாக்கப்பட்ட வாழ்க்கை முறையாக விளக்குகிறது வேதம். மனிதன் ஒழுக்கத்தை உண்டாக்குவதில்லை; சமுதாயம் அதைக் கண்டுபிடிக்கவில்லை. இங்கேயே பின்நவீனத்துவத்தோடு நான் முரண்படுகிறேன். பின்நவீனத்துவம் ஒழுக்கத்தை இந்த முறையில் கணிப்பதில்லை. இந்து மதமும்கூட ஒழுக்கத்தை சமுதாயப் பண்பாடாக மட்டுமே காண்கிறது. ஒழுக்கத்தைப் பொறுத்தவரையில் வேதம் மனித சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட விளக்கத்தை அளிக்கிறது. அதுவே உண்மையும்கூட. சமூகத்தில் பண்பாடு காலத்துக்குக் காலம் மாறலாம். ஒழுக்கம் எல்லா சமுதாயத்துக்கும் பொருந்துவதாக கடவுளால் தரப்பட்டிருக்கும் வாழ்க்கை முறை; அது மாறமுடியாது, மாறாது. அதனால்தான் பத்துக்கட்டளைகளை ஒழுக்கநியதிக் கோட்பாடுகள் என்று அழைக்கிறோம். ஒழுக்கம் நிரந்தரமானது. பண்பாடு அப்படிப்பட்டதல்ல. ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் ஒன்றாகப் பார்த்து குழப்பமடையக்கூடாது.

சமூகம் என்பது என்ன என்பதை நாம் வேதத்திலேயே கண்டுகொள்கிறோம். தனிமனிதனையும் அவனுடைய சுதந்திரத்தின் எல்லைகளையும் நிர்ணயிக்கிறது வேதம். எல்லாவற்றிற்கும் எது அடிப்படை என்பதை வேதத்தில் பார்க்கிறோம். நிலையானது எது, நிலையற்றது எது என்பதற்கு வேதமே விளக்கமளிக்கிறது. எல்லா விஷயங்களிலும் வேதம் பின்நவீனத்துவத்துக்கு எதிர்புறமானது.

ஓரினச்சேர்க்கை பின்நவீனத்துவதைப் பொறுத்தவரையில் தனிமனிதனின் பாலியல் விருப்பு வெறுப்போடு சம்பந்தப்பட்ட வெறும் நடத்தை மட்டுமே. அதைத்தான் முதல் பத்தியில் நான் குறிப்பிட்ட எழுத்தாளரின் கூற்று விளக்க முயல்கிறது.

அந்த எழுத்தாளர் இன்னோரிடத்தில் ‘அந்த உந்துதல் இயற்கையானது’ என்றும் ‘எல்லா உயிரினத்திலும் காணப்படுகிறது’ என்றும் எழுதியிருக்கிறார். ஏனைய உயிரினங்களைவிட மனிதன் வித்தியாசமானவன் என்பது அவருக்குத் தெரியவில்லை. மனிதன் அழிவில்லாத ஆவியோடு (ஆன்மா) படைக்கப்பட்டிருக்கிறான். கடவுளோடு உறவுகொள்ளும் வகையில் படைக்கப்பட்டிருக்கிறான். அவனும் மிருகமும் ஒன்றல்ல. ஏனைய உயிரினங்களைப் போலல்லாது அவன் பெண்ணோடு மட்டுமே வாழவேண்டியவனாக, வாழக்கூடியவனாகப் படைக்கப்பட்டிருக்கிறான். அதனால்தான் ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு (படைப்புக்கு) மாறானது.

இன்றைக்கும் தமிழ் சமூகம் ஓரினச்சேர்க்கையை அருவருப்போடு பார்த்தாலும் அப்படிப்பார்ப்பது தவறு என்றும், அதை ஒழுக்கக்கேடாகப் பார்க்காமல் மனிதநேயத்தோடு அணுகி அதைப் பின்பற்றுகிறவர்கள் துன்புறுத்தலுக்கும், வசைக்கும் ஆளாகாமல் அதைத்தொடர வழிகாண வேண்டும் என்பதே பின்நவீனத்துவம். அதையே அந்த எழுத்தாளரும் விளக்க முனைகிறார். பின்நவீனத்துவ எழுத்தாளர்களும், பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், மீடியாக்களும் இந்தப் பிரச்சாரத்திலேயே வலுவாக ஈடுபட்டிருக்கின்றார்கள். நான் வாசிக்கும் கர்த்தரின் வேதம் இந்த எண்ணப்போக்கை ஒழுக்கவீனமாகக் காட்டுகிறது. என்னால் இதை வேதக்கண்ணோட்டத்துடன் மட்டுமே அணுக முடியும். அதற்காக நான் வெட்கப்படவோ, பலரின் பாராட்டுதலுக்கும் ஆளாக முடியாதே என்று வருத்தப்படவோ முடியாது. அந்த அரசியல் வித்தைகள் கிறிஸ்தவனுக்குத் தெரியக்கூடாது. இதற்காக எனக்கு மனிதாபிமானம் இல்லை என்றில்லை. மெய்யான மனிதாபிமானம் இருக்கிறவர்கள் ஓரினச்சேர்க்கையால் ஏற்படக்கூடிய அழிவை நினைத்துப் பார்க்காமல் இருக்க மாட்டார்கள். மருத்துவ வல்லுனர்களே இதைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறார்கள். கடவுள் இதை இயல்பானதாகக் கருதவில்லை. இதைக் கேவலமானதாகக் கருதி அவர் வெறுக்கிறார் (ரோமர் 1:16-32). படைப்பில் இதற்கு இடமேயில்லை. பத்துக்கட்டளைகளும் இதை நிராகரிக்கின்றன (யாத் 20:14). சோதோமும், கொமோராவும் கர்த்தரின் கடுங்கோபத்துக்கு ஆளாகி அழிவைச் சந்திக்குமுன் ஓரினச்சேர்க்கை அங்கே எல்லைமீறிப் போயிருந்திருக்கிறது (ஆதி. 19).

பின்நவீனத்துவம் ஒன்றை நினைத்துப் பார்க்க மறுக்கிறது. ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுவருகிறவர்கள் அதிலிருந்து விடுபடத் தவிக்கிறவர்களாகவும் இருந்துவிடலாம் என்பதை அது மறந்துவிடுகிறது. எல்லோரும் அந்த உறவையே நாடுவது போலவும், நாம் அனுதாபத்தோடு அவர்களுக்குத் துணைபோக வேண்டும் என்பதுபோலவும் எழுத்தாளர்களும், மீடியாக்கள் எழுதியும், பேசியும் வருகிறார்கள். உண்மை அதுவல்ல. சமூகத்தில் சிறுபான்மையினர் இந்த உறவில் விழுந்து விடுதலைக்கு வழிதெரியாமல் வாழ்ந்து வரலாம்; உள்மனத்தின் ஆழத்தில் குற்ற உணர்வால் அதிலிருந்து விடுபடத் தவித்துக்கொண்டும் இருந்து வரலாம். எங்கிருந்தாவது உதவி வராதா? என்று ஆழ்மனத்தில் ஏங்கிக்கொண்டிருக்கலாம். அதிலிருந்து விடுபட வழிதெரியாமல் வழிதேடிக்கொண்டிருக்கலாம். அவர்களுடைய விடுதலைக்கு பின்நவீனத்துவத்தில் சொட்டு மருந்தும் இல்லை. ஏன் தெரியுமா? பின்நவீனத்துவம் அதை நோயாகவே பார்க்க மறுப்பதால்தான்; தவறான உறவாகவே அதை ஏற்றுக்கொள்ள பின்நவீனத்துவம் மறுக்கிறது. ஓரினச்சேர்க்கையிலிருந்து விடுதலை அடைய விரும்புகிறவர்களுக்கு யாரிடம் இருக்கிறது மருந்து? நம்மைப் படைத்தவர் மட்டுமே அதற்கு விடுதலை கொடுக்கக்கூடியவராக இருக்கிறார்; கிறிஸ்து மட்டுமே துணைசெய்யக்கூடியவராக இருக்கிறார்.

ஓரினச்சேர்க்கை விருப்பு வெறுப்பு சம்பந்தப்பட்டதொன்றல்ல. கர்த்தரின் நீதிக்கும், மனிதனின் தன்மைக்கும் இயல்புக்கும் முற்றிலும் மாறானது. மனிதன் இதை நாடுவதற்குக் காரணம் அவனில் இருக்கும் பாவமே. அதிலிருந்து அவனுக்கு விடுதலை கிடைக்கும் வரையில் அவனால் அதில் ஈடுபடக்கூடிய இச்சையைத் தவிர்த்துக்கொள்ள முடியாது. பாவத்தில் இருக்கின்ற எல்லா மனிதர்களுமே இதில் ஈடுபடுகின்றார்கள் என்றில்லை. சமுதாயத்தில் அநேகர் இதை வெறுக்கத்தான் செய்கிறார்கள். சமூகக் கட்டுப்பாடுகளும், பொதுவான கிருபையும் அவர்கள் இதில் ஈடுபடாமல் இருக்க துணை செய்கின்றன. இருந்தாலும் அவர்களுடைய இருதயம் இதை நாடக்கூடிய இச்சையோடுதான் இயங்குகிறது. அதற்கு நிரந்தர விடுதலை கிறிஸ்துவிடம் இருந்து மட்டுமே வரமுடியும். வேதம் மட்டுமே இந்த விடுதலைக்கு வழிகாட்டுகிறது. தன்னுடைய பாவ இயல்பை உணர்ந்து அதிலிருந்து விடுபட கிறிஸ்துவை நாடி வந்து பாவமன்னிப்புக்காகவும், அழிவற்ற வாழ்வுக்காகவும் அவரை விசுவாசிக்கிறவர்களால் மட்டுமே ஓரினச்சேர்க்கை போன்ற முறைகேடான ஒழுக்கக்கேட்டிலிருந்து விடுபட முடியும். கிறிஸ்து நிச்சயம் அவர்களை மன்னித்து விடுதலை கொடுப்பார். எல்லாப் பாவங்களுக்கும் அவரிடம் மன்னிப்பு உண்டு. மனிதாபிமானமும், மனிதநேயமும் என்னிடம் இருப்பதால்தான் உண்மையை மறைக்காமல் இதிலிருந்து விடுபடுவதற்கான வழியை விளக்கிக் கொண்டிருக்கிறேன். மனிதனில் பிறப்பில் இருந்து தொடர்ந்து அவனை சீரழித்துக் கொண்டிருக்கும் பாவத்தை சுட்டிக்காட்டாமல் இருப்பதுதான் மனிதநேயமற்ற செயல். மனிதனுடைய அழிவை அல்ல, விடுதலையையே கடவுள் விரும்புகிறார். ‘எல்லா மனிதரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்’ என்று வேதம் சொல்லுகிறது (1 தீமோ. 2:4).

_____________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s