அர்த்தமுள்ள தாழ்மை

mahatma-gandhi-227x300இந்த நாட்களில் தாழ்மையைப் பற்றிச் (Humility) சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். தாழ்மையைப் பற்றி அதிகமாக பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அதன் முழுப்பொருளையும் உணர்ந்துதான் பேசுகிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. தாழ்மை பேசுகிற, விவாதிக்கிற ஒரு விஷயமல்ல; அது வாழ்க்கையில் மற்றவர்கள காணும்விதத்தில் இருக்க வேண்டியது. தாழ்மையென்ற உடனேயே பலருக்கு காந்தி தாத்தா நினைவுக்கு வந்துவிடுகிறார். அவரைப்போல மேல் சட்டை இல்லாமல் அரைவேட்டி கட்டியிருந்தால் அதுதான் தாழ்மைக்கு அடையாளமாகப்படுகிறது பலருக்கு. எளிமையாக உடுப்பதும், வாழ்வதும் தாழ்மைக்கு அடையாளம் என்பதே பலருடைய மனதிலும் பொதுவாக இருக்கும் கருத்து. தாழ்மைக்கும் வெளித்தோற்றத்திற்கும் தொடர்பு இருந்தாலும்கூட தாழ்மை உண்மையில் புறத்தோற்றத்தோடு மட்டும் சம்பந்தமானது அல்ல.

தாழ்மையும் புறத்தோற்றமும்

ஒருவர் கனிவான முகத்தோடும், தேனூரும் வார்த்தைகளோடும், அமைதியான தோற்றத்தோடும் இருந்துவிடலாம். அது தாழ்மைக்கு அடையாளமா? உண்மையில் நிச்சயம் இல்லை. இப்படிப் பார்த்தே நமக்குப் பழகிவிட்டிருக்கிறது. தாழ்மை துப்புரவாக இல்லாதவர்களிடம்கூட இவை இருந்துவிடலாம். வெளித்தோற்றத்திற்கு அமைதியும், எளிமையுமுள்ளவர்போல் இருந்து உள்ளத்தில் சாக்கடையை வைத்துக்கொண்டிருந்திருக்கிற பலரை வேதம் நமக்கு இனங்காட்டிக் கொடுக்கவில்லையா? தாழ்மையைப் பற்றி சிந்திக்கும்போது நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. ஒருமுறை ஒரு வாலிபன் என்னைப்பார்த்து, ‘ஐயா, நீங்கள் இப்படி நல்ல சர்ட் போடுகிறீர்களே, இது தாழ்மைக்கு அடையாளமா?’ என்று கேட்டான். அதுதான் முதல் தடவை அப்படி எவரும் என்னைப்பார்த்துக் கேட்டிருக்கிறார்கள். அந்த வாலிபனுடைய பிரச்சனையை நான் புரிந்துகொண்டிருந்தேன். கட்டுப்பாட்டோடு பணத்தை இறுக்கிப்பிடித்து செலவுகளை செய்து வாழவேண்டும் என்பதில் அவன் உறுதியாக இருந்தது மட்டுமல்ல, அவனுடைய அந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே அவன் மற்றவர்களைப் பார்த்தவிதமும் இருந்தது. இதற்காக அவன் கிழிந்த சட்டையைப் போட்டிருக்கவில்லை. அவனுக்கு நல்ல ஆலோசனை தரத் தீர்மானித்து வெளியில் தெரிவதை மட்டும் வைத்து எவரையும் எடைபோட்டுவிடக்கூடாது என்று புத்தி சொன்னேன். மற்றவர்களுடைய தோற்றத்தைப் பார்த்து நியாயந்தீர்ப்பது நம்முடைய இருதயத்தின் நிலையையே காட்டுகிறது என்பதை விளக்கி உதாரணங்களைக் கொடுத்துத் திருத்தினேன். எத்தனை இலகுவாக மற்றவர்களை நாம் நியாயந்தீர்த்துவிடுகிறோம். அதேநேரம் நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து பார்க்க நமக்கு எத்தனைக் கஷ்டமாக இருக்கிறது.

தாழ்மை ஆவிக்குரியது

9_4_Blessed-MotherTeresakamalதாழ்மை என்பது விலைகுறைந்த சர்ட் போடுவதிலோ, செருப்பில்லாமல் தெருவில் நடப்பதிலோ, குடிசையில் வாழ்வதிலோ, அரைவயிற்றுக் கஞ்சியோடிருப்பதிலோ தங்கியிருக்கவில்லை. அது அடிப்படையில் இருதயம் சம்பந்தப்பட்டது. அப்படித்தான் வேதமும் அதற்கு விளக்கங்கொடுக்கிறது. தாழ்மையை ஆவிக்குரிய குணாதிசயமாக வேதம் காட்டுகிறது. உண்மையில் கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு தாழ்மையைப் பற்றித் தெரியாது. இது கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கலாம், இருந்தாலும் உண்மை அதுதான். இல்லாவிட்டால் வேதம் அதை ஆவிக்குரியதாக விளக்கியிருக்காது. அன்னை தெரேசா கொல்கத்தாவில் உலகம் வியக்க சேவை செய்தார். அதைத் தாழ்மைக்கு அறிகுறியாத உலகம் பார்க்கும். உண்மையில் கடவுளையே வாழ்க்கையில் கொண்டிராமல் அத்தகைய நல்ல பணிகளை நாம் செய்துவிடக்கூடிய விதத்தில்தான் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். கடவுளின் சாயலில் இருக்கிற மனிதன் பாவியாக இருந்தபோதும் மனிதத்தன்மையை இழந்துவிடவில்லை. அந்த மனிதத்தன்மையே அன்னை தெரேசாவை சேவை செய்ய வைத்தது. அதை எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும், மதமே இல்லை என்கிறவர்களும் செய்துவிடலாம். கடவுளே இல்லை என்று சொல்லுகிற கமலஹாசன் தன்னுடைய உடல்பூராவையும் தானமாக எழுதிவைத்துவிடவில்லையா? எத்தனையோ நற்பணிகளை நாள்தோறும் செய்துவிடவில்லையா? பிறப்பிலிருந்து வரும் மனிதத்தன்மை மனிதனை அத்தகைய காரியங்களைச் செய்யும்படிச் செய்கிறது. இதிலிருந்தே கடவுள் இருப்பதையும் மனிதன் புரிந்துகொள்ள வேண்டும். அவரால் படைக்கப்பட்டவனாக மனிதன் இருப்பதாலேயே அவனால் மற்றவர்களுக்கு சேவை செய்ய முடிகிறது.

ஒரு மனிதன் தன்னுடைய பாவத்தை உணர்ந்து அதிலிருந்து கடவுளின் கிருபையால் விடுதலை அடைகிறபோதே தாழ்மையோடு வாழும் நிலையை ஆவியின் மூலம் அடைகிறான். தாழ்மைக்கு எதிர்மறையானது ஆணவம், அகங்காரம். பாவத்தில் இருக்கும் மனிதன் ஆணவத்தோடு வாழ்கிறான். அவனால் கடவுள் முன் தன்னைத் தாழ்த்திக்கொள்ள இயலாமல் இருக்கிறது. கடவுள் வேண்டும் என்கிற எண்ணங்கொண்ட மனிதனுக்கும் அவரை விலைகொடுத்து வாங்கவும், அவருக்கே லஞ்சம் கொடுக்கவுந்தான் முடிகிறது. அவன் தன்னைத் தாழ்த்திக்கொள்ள அவனில் இருக்கும் பாவம் இடங்கொடுக்காது. அவனுடைய ஆணவம் அவனை அழிவை நோக்கிக் கொண்டு செல்கிறது. தாழ்மையும் ஆணவமும் ஒன்றுக்கொன்று முரணானது. ஆவியால் மறுபிறப்படைந்தவனுக்கே தாழ்மையைத் தன்னில் நடைமுறையில் கொண்டிருக்க முடியும்.

கிறிஸ்தனுக்கு தாழ்மை இல்லாமல் இருக்க முடியாது. தாழ்மையை அவன் தன்னில் வளர்த்துக்கொள்ளக்கூடிய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அவன் அழைக்கப்பட்டிருக்கிறான். யாக்கோபு சொல்லுகிறார், ‘கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்போது அவர் உங்களை உயர்த்துவார்’ என்று (யாக் 4:10). கிறிஸ்தவனில் தொடர்ந்திருக்கும் பாவம் (மரணத்தின் சரீரம், ரோமர் 7:27), அவன் சோதனைக்குள்ளாகி தொல்லைப்படுகிறபோது ஆணவத்தை அவனில் தலைதூக்க வைத்துவிடலாம். கிறிஸ்தவன் அதை எதிர்த்துப் போராடித் தன்னுடைய இருதயத்தில் தாழ்மை இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளக்கூடிய கடமையுள்ளவனாக இருக்கிறான். தாழ்மையை அவன் அன்றாடம் தன்னில் வளர்க்காவிட்டால் ஆணவம் தலைதூக்கி அவன் இருதயத்தை மாசுபடுத்திவிடும். ‘தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.’ (நீதி 22:4). இதில் தாழ்மையையும் கர்த்தருக்குப் பயப்படுதலையும் இணைத்து எழுதியிருக்கிறான் சாலமோன். கர்த்தருக்குப் பயமிருக்கிற இருதயத்திலேயே தாழ்மை இருக்கும். இயேசு பிள்ளைகளை உதாரணங்காட்டி அவர்களைப்போல நாம் தம்மைத் தாழ்த்திக்கொள்ளும்படி அறிவுரை சொன்னார் (மத் 18:4). குழந்தைகளுக்கு கபடம் தெரியாது, சூதுவாது அறியாதவர்கள் அவர்கள். வெள்ளை உள்ளம் கொண்டவர்கள். அங்கேதான் தாழ்மை இருக்கும். வேதபாரகர்களிடமும், பரிசேயர்களிடம் தாழ்மை இருக்கவில்லை. எப்படி இருக்க முடியும்? அவர்கள் மாயக்காரர்கள் என்று இயேசு சொல்லியிருக்கிறாரே. அவர்கள் தங்களை உயர்த்திக்கொள்ளுவதிலேயே எப்போதும் குறியாக இருந்தார்கள். அதனால்தான் இயேசு, ‘தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்’ என்று சொன்னார் (மத். 23:12). நேபூகாத்நேச்சார் ஆணவத்தோடு தன்னைப் பெருமைப்படுத்தியதால் கர்த்தர் அவனைத் தரைகவிழ வைத்தார்; தாழ்த்தினார்.

கிறிஸ்தவனின் அடிப்படைக் குணாதிசயம்

தாழ்மையைப் பற்றி வேதம் இத்தனை தூரம் விளக்குவதற்குக் காரணம் அது கிறிஸ்தவனின் அடிப்படைக் குணாதிசயமாக இருப்பதால்தான். கிறிஸ்து இருக்கும் இருதயத்தில் அது இருந்தாக வேண்டும்; அன்றாடம் வளர்க்கப்பட்டிருக்க வேண்டும். அது தாழ்ந்த நிலையில் இருக்கும் இருதயத்தில் ஜெபம் குறையும், வேத வாசிப்பு குறையும். உலக எண்ணங்களும், ஆசையும் அதிகரிக்கும். சகோதரர்களைப் பார்த்துப் பொறாமைப்படச் செய்யும். மற்றவர்களோடு இருக்கும் உறவைக் கொச்சைப்படுத்தும். குடும்பத்தில் இருப்பவர்களிடமும் ஆணவத்தோடு நடந்துகொள்ள வைத்துவிடும். இந்தத் தவறையெல்லாம் கிறிஸ்தவன் தன்னைத் தாழ்த்திக்கொள்ளத் தவறுவதால் செய்துவிடலாம் தெரியுமா? சமீபத்தில் ஒரு போதகர் என்னிடம் சொன்ன ஓர் உண்மை நிகழ்ச்சியை உதாரணமாகச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். இது அவர் அனுபவத்தில் பார்த்த ஒன்று. இளம் போதகனான ஒருவன் ஓர் அருமைப் போதகருடைய பிரசங்க ஊழியத்தால் கவரப்பட்டு அவரைப்போலப் பணிசெய்ய ஆசைப்பட்டு அவரைப் போலப் பேசியும், நடந்தும் வர ஆரம்பித்தான். அந்தப் பிரபலமான போதகர் இதை எப்படியோ அந்த இளம்போதகனின் பேச்சிலும் நடவடிக்கையிலும் கவனித்து அவனுக்கு உதவ எண்ணி அவனைப் பார்த்து, ‘சகோதரா, உன்னில் இருக்கின்ற ஆணவத்தை இல்லாமல் ஆக்கிக்கொள்ளப் பார்’ என்று அன்போடு அறிவுரை சொன்னார். அந்த இளம்போதகனால் அதை சிறிதும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தான் உயர்வாக நினைத்திருந்தவர் இப்படித் தன்னைப் பற்றிச் சொல்லிவிட்டாரே என்று அன்று முதல் அவரை எதிரியாகப் பார்க்க ஆரம்பித்தான். அவருக்கெதிராக நடந்துகொள்ள ஆரம்பித்தான். அவனுடைய இருதயத்தை இறுமாப்பு ஆளத்தொடங்கி சரீரத்தின் இச்சைகளான கோபம், மூர்க்கம், பொறாமை, வெறுப்பு, புறம்பேசுதல், கூடாப்பேச்சு எல்லாவற்றையும் அவனில் வளர்ந்து அதிகரிக்கச் செய்தது. வெளிப்பார்வைக்கு அவன் கனிவானவனாக நடந்துகொண்டபோதும் அவனுடைய இருதயம் இருட்டாகி இரட்டை வாழ்க்கை வாழவைத்தது. தான் உயர்வாக நினைத்திருந்த அந்தப் பிரபலப் போதகரை இல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்று கங்கணம்கட்டி அவன் வாழ ஆரம்பித்தான். இதை ஏன் சொல்லுகிறேன் தெரியுமா? கிறிஸ்தவன் தன்னை அன்றாடம் திருத்திக்கொண்டு வாழாமல் போனால் இறுமாப்பு அவன் இருதயத்தை இருட்டாக்கி அவிசுவாசியைப்போல வாழவைத்துவிடும். ஆவிக்குரிய குணாதிசயங்களை அவனில் காணவழியில்லாமல் செய்துவிடும். ஆணவம் நரகத்தை நோக்கிக் கொண்டு செல்லும்; தாழ்மையோ பரலோகக் கதவைத் திறந்து வைக்கும்.

பவுல் கொலோசெயருக்கு எழுதிய நிருபத்தில், ‘பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு . . . தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய் . . . மனத்தாழ்மையையும் . . . தரித்துக்கொள்ளுங்கள்’ என்று காரணமில்லாமலா சொல்லியிருக்கிறார் (கொலோ 3:9-12). இங்கே தாழ்மையை ‘மனத்தாழ்மை’ என்று பவுல் எழுதியிருப்பதைக் கவனியுங்கள். தாழ்மை மனதில், இருதயத்தில் இருக்கவேண்டியது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. அத்தோடு, மனத்தாழ்மைக் கொண்டிருக்கக்கூடியவனாக கிறிஸ்தவன் இருந்தபோதும் அது தானே இயல்பாக வந்துவிடாது என்பதையும் பவுல் சுட்டிக்காட்டி அதை அணிந்துகொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகிறார். சட்டையை எடுத்து அணிந்துகொள்ளுவதுபோல் மனத்தாழ்மையை நம்மில் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையே பேதுருவும், ‘ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்’ என்று கூறி ‘பெருமையுள்ளவர்களுக்கு (இறுமாப்பு) தேவன் எதிர்த்து நிற்கிறார்’ என்று எச்சரிக்கிறார் (1 பேதுரு 5:5). அடுத்த வசனத்தில் அவர், ‘ஏற்றகாலத்தில் தேவன் உங்களை உயர்த்தும்படி அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்’ என்கிறார். இந்த வசனத்தில் ‘அடங்கியிருங்கள்’ என்ற வார்த்தைக்கு ‘தாழ்ந்திருங்கள்’, ‘தாழ்மையைக் கொண்டிருங்கள்’ என்பதே முறையான எழுத்துபூர்வமான மொழிபெயர்ப்பு. பெருமையுள்ள இருதயத்தைக் கொண்டிருப்பதால் நமக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை உணர்ந்துதான் யாக்கோபுவும் பேதுரு தந்துள்ள அதே அறிவுரையை நினைவுபடுத்தி, ‘கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள்’ என்கிறார் (யாக் 4:10).

தாழ்மை எளிதில் வந்துவிடாது

இத்தனையும் உண்மையாயிருந்தும் தாழ்மையோடிருப்பது என்பது இட்லிபோல் இலகுவாக வெந்துவிடாது. சரீரத்தை ஒடுக்கி, மனதை அன்றாடம் அடக்கித் தாழ்மையை நாம் அணிந்திருக்க வேண்டும். அதனால்தான் வேதம் இயேசுவையே நமக்கு முன்னுதாரணமாகக் காட்டுகிறது. பிலிப்பியர் 2ம் அதிகாரத்தைக் கவனியுங்கள்.

‘கிறிஸ்து இயேசுவில் இருந்த சிந்தையே நம்மிலும் இருக்கக் கடவது. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்கு சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம் அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தானே தாழ்த்தினார்.’ (பிலி 2:5-8).

இந்த வசனப்பகுதியில் ஆழமான சத்தியங்கள் பொதிந்து காணப்படுகின்றன. முதலில் இது இயேசு கிறிஸ்துவின் மானுட ரூப வருகையையும், வாழ்க்கையையும் பற்றி விளக்குகிறது. தேவனாயிருந்தும் மனிதனாக அவர் பிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து சிலுவையில் தன்னைப் பலியாகக் கொடுத்த தாழ்த்துதலைப் பற்றி இது விளக்குகிறது. அது இந்த வசனங்களின் அடிப்படைப்போதனை. பவுல் கிறிஸ்துவின் அந்தத் தாழ்த்துதலை உதாரணமாகக் காட்டி நாம் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து பயத்தோடும் நடுக்கத்தோடும் நம்முடைய இரட்சிப்பு நிறைவேறப் பொறுப்போடு உழைக்க வேண்டும் என்று விளக்கி அதற்கு இயேசு தன்னைத் தாழ்த்திக்கொண்டவிதமாக நாம் நம்மைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார். கடவுளாக இருக்கின்ற தேவகுமாரன் மனிதனாக உருவேற்று மானுடத்திற்கு தன்னை உட்படுத்திக்கொண்டு பிதாவுக்குக் கீழ்ப்படிந்திருக்கிறார் என்பதை எண்ணிப்பாருங்கள். சர்வ வல்லவரான அவர் தனக்கிருந்த அத்தனை அதிகாரத்தையும் பயன்படுத்தாமல் முழுமையாக மானுடத்தில் வாழ்ந்து தான் வந்த நோக்கத்தைக் கீழ்ப்படிவோடு நிறைவேற்றினார் என்பதை நாம் வாழ்நாளென்றும் சிந்தித்துத் தியானித்து அவரைப் போற்றவேண்டும். கிறிஸ்து அந்தளவுக்குத் தாழ்மையைக் கைக்கொண்டார்; அவரே நமக்கு முன்னுதாரணம். இப்போது சொல்லுங்கள் வந்துவிடுமா தாழ்மை நமக்கு இலகுவாக? ஜெபத்தோடும், தேவபயத்தோடும் நாம் நம்மில் கருத்தோடு வளர்க்க வேண்டிய கிருபையல்லவா அது.

annaduraiமுன்னால் தமிழக முதலமைச்சர் அண்ணாத்துரை தாழ்மையானவர் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். எம்ஜியாரையும் அப்படித்தான் சொல்லுவார்கள். இன்னும் காந்தி, இராமலிங்க வள்ளலார் என்று ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது மக்கள் கைவசம் தாழ்மைக்கு உதாரணங்காட்டுவதற்கு. இவர்களெல்லோரும் கிறிஸ்தவர்களல்ல. தங்களுடைய மானுடத்தில் படைப்பிலிருந்து தேவ சாயலோடு இருப்பதால் பொதுவான கிருபைக்கு அடையாளமாக இவர்களிடம் கனிவும், சில நல்ல பண்பாடுகளும் இருந்திருக்கின்றன. வேதம் போதிக்கும் தாழ்மையை அடைய இவை மட்டும் போதாது. காந்தி தன் எளிமையான வாழ்க்கையையும், அன்னை தெரேசா தன்னுடைய அருஞ்சேவையையும் மட்டும் சொத்தாகக் கொண்டு பரலோகத்தை அடைந்திருக்க முடியுமா? ‘ஒருவனாகிலும் நற்கிரியைகளைச் செய்கிறவர் இல்லை’ என்று கர்த்தர் தெளிவாகச் சொல்லியிருக்கிறாரே. இவர்களுடைய செய்கைகள் அனைத்தையும் அவர்களில் இருக்கும் பாவம் கர்த்தர் முன் செயலிழக்கச் செய்துவிடுகிறதே. இரட்சிப்பை அடையாமல் இவர்களால் கர்த்தருக்கேற்ற எந்த நற்கிரியையும் ஒருபோதும் செய்திருக்க முடியாது. நாமோ கர்த்தரை ருசித்திருக்கிறோம். அவரை இனங்கண்டு கிறிஸ்து இயேசுவை விசுவாசித்திருக்கிறோம். நற்கிரியைகளைச் செய்யக்கூடியவர்களாக ஆவியால் உருமாற்றப்பட்டிருக்கிறோம். அதனால்தான் நம்மால் முடியும் தாழ்மையோடு வாழ. தாழ்மையாயிருப்பது – இருக்கலாம், இல்லாமலும் இருந்துவிடலாம் என்பது போன்ற விஷயமல்ல நமக்கு. நாம் தாழ்மையோடிருந்தாக வேண்டும். அது கிறிஸ்தவத்தின் அடையாளம்; கிறிஸ்தவனின் இலக்கணம்.

இன்று நடைமுறையில் நம்மினத்தில் இருந்துவரும் கிறிஸ்தவம் ஆவிக்குரிய வல்லமையற்றதாக, பெயரளவில் மட்டும் கர்த்தரைச் சார்ந்ததாகக் காணப்படுவதற்கு காரணம் இப்போது உங்களுக்குத் தெரிகிறதா? அதில் ஆவியானவரின் கிரியை இல்லை, கிறிஸ்தவத்தின் அடிப்படை இலக்கணத்தை அதில் பார்க்கமுடியாமல் இருக்கிறது. அதனால்தான் கிறிஸ்தவனுக்கிருக்கவேண்டிய முக்கிய அடையாளமான மனத்தாழ்மையை அதில் காண முடியாமல் இருக்கிறது. ஊழியத்தில் இருப்பவர்களானாலும் சரி, சராசரிக் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி மனத்தாழ்மையில்லாதவர்களாக இருதயத்தை அடக்கிப் பாதுகாக்காமல் இருந்து வருகிறார்கள். பெரிய பாவங்களை செய்யவில்லை என்று மனதைத் திருப்திப்படுத்திக்கொள்ளும் கிறிஸ்தவ பரிசேயக்கூட்டமே நம்மத்தியில் அதிகமாக இருக்கிறது. இருதயத்தில் ஆணவம் (பெருமை, ஈகோ) இருக்கின்ற உணர்வுகூட இல்லாமல் சக கிறிஸ்தவர்களைப்பற்றி புறம்பேசியும், தூஷித்தும் இருதயம் பூராவும் கழிவுகளை ஊறி வளரவிட்டு பேருக்கு ஜெபித்தும், தியானித்தும் வாழ்கிற ஆவியற்ற மதச் சடங்கு வாழ்க்கையில் தாழ்மைக்கேது இடம்? மனத்தாழ்மை என்பது பெரிய விஷயம்; ஆழமான விஷயம். அதில் எவ்வளவோ உண்மைகள் அடங்கியிருக்கின்றன. அதன் பேரவசியத்தை உணர்ந்திருந்ததால்தான் பியூரிட்டன் பெரியவர்களான தொமஸ் வொட்சன், ரிச்சட் சிப்ஸ், ஜோன் பனியன், ஜோன் ஓவன், ஜெரமாயா பரோஸ் போன்றோர் அதுபற்றித் தாராளமாக எழுதித் தள்ளியிருக்கிறார்கள்.

தாழ்மையும் கோழைத்தனமும்

மத்தேயு 5:3ல் இயேசு, ‘ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகம் அவர்களுடையது’ என்கிறார். ஆவியில் எளிமையானவர்களுக்கே தாழ்மையிருக்கும். இயேசு தொடர்ந்து, ‘சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்’ என்று (5:5) சொல்லுகிறார். இங்கே ‘சாந்தகுணம்’ (Meekness) என்பது ஆவியில் எளிமையாயிருக்கின்றவர்கள் கொண்டிருக்கும் தாழ்மையைக் குறிக்கிறது. பலர் சாந்தமாயிருப்பதைக் கோழைத்தனமாகக் கருதிவிடுவதுண்டு. தாழ்மைக்கும் கோழைத்தனத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை. அடிக்கிறவனைத் திருப்பி அடிக்கிறவனே உண்மையில் கோழை. அதை அவன் ஏன் செய்கிறான் தெரியுமா? தன்னுடைய அகங்காரத்தால் ‘ஈகோ’ பாதிக்கப்பட்டு உணர்ச்சிவசப்பட்டு தீய இருதயத்தால் செய்கிறான். மூர்க்கம் பட்டென்று வந்துவிடும். அசிங்கமாகப் பேசுவதற்கு நேரமெடுத்து சிந்திக்கத் தேவையில்லை. சாந்தமாக, தாழ்மையோடிருப்பதற்குத்தான் பொறுமை அதிகம் தேவை. அடிக்கிறவனைப் பார்த்து மறுகன்னத்தைக் காட்டி சாந்தத்தோடு நிற்கிறவன் இயேசுவைப்போல இருதயத்தைப் பாதுகாத்துக்கொண்டிருக்கும் வல்லவன். தாழ்மையிருக்கும் இடத்திலேயே தைரியமும் இருக்கும். மார்டின் லூதருக்கும், ஜோன் நொக்ஸுக்கும், ஹியூ லத்திமருக்கும், ஜோன் கல்வினுக்கும், ஜோர்ஜ் விட்பீல்டுக்கும் இருந்ததுபோல. இவர்களெல்லோரையும் உலகம் தைரியமற்ற, கையாளாகதவர்களாகத்தான் பார்க்கும். ஏன் தெரியுமா? அவர்கள் திருப்பி அடித்ததில்லை. விட்பீல்ட் பிரசங்கம் செய்த பல இடங்களில் கூட்டத்திலிருந்த சிலர் அவர் மீது மனிதக்கழிவுகளை எறிந்திருக்கிறார்கள். விட்பீல்ட் ஆத்திரமடையவில்லை. இருதயத்தைக் கட்டுக்குள் வைத்திருந்ததாலேயே இவர்கள் எல்லோராலும் தாழ்மையைக் கொண்டிருக்க முடிந்தது.

இயேசுவைப்போன்ற தைரியசாலியை உலகம் கண்டதில்லை. எத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர் சாந்தத்தோடு நின்றிருக்கிறார். கன்னத்தில் அடித்தும், முகத்தில் துப்பியும், தூஷண வார்த்தைகள் பேசியும் மக்கள் அவரை நிந்தித்தபோது கண்மூடிக் கண்திறக்கும் நேரத்தில் அவர்களை அவரால் பொசுக்கி சாம்பலாக்கி இருக்க முடியும். அது தைரியத்தின் அறிகுறியா? அதுவே பலவீனத்தின் அறிகுறி. தான் வந்த காரியத்தை மறக்காமல், எதிர்ப்பாளிகளின் அஜன்டா நிறைவேறத் தன் நடவடிக்கைகள் காரணமாக இருந்துவிடாமல், தான் வந்த நோக்கத்தைத் நிறைவேற்றியதிலேயே அவருடைய இருதயக் கட்டுப்பாட்டையும், தைரியத்தையும், தாழ்மையையும் பார்க்கிறோம். வாழ்நாளெல்லாம் பரிசேயர்கள் தன்னை உசுப்பிவிட்டு மூர்க்கமடையவைக்கப் பிரயத்தனம் செய்தபோதும் அவர் அவற்றாலெல்லாம் இருதயம் பாதிக்கப்படாமல், நிலைதளும்பாமல் தாழ்மையோடு தன் பணியைச் செய்து வந்தார். அவர் தைரியத்திற்கு, தாழ்மைக்கு முன்னுதாரணம்.

மனத்தாழ்மையை நினைக்கும்போது என்னுடைய நண்பரொருவரையும், என்னுடைய இறையியல் கல்லூரி புரொபஸரொருவரையும் என்னால் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. முதஸ்துதி செய்வது எனக்குப் பிடிக்காது. உண்டு என்றிருந்தால் மட்டுமே ஒருவரை நான் பாராட்டுவேன். ஒருவரைப்பற்றி இல்லாதது பொல்லாததை சொல்லுவது கிறிஸ்தவத்திற்கு அழகல்ல. என்னைப் பற்றியும் முகஸ்துதியாக எவரும் பேசுவது எனக்குப் பிடித்தமில்லாதது. அப்படி எவராது பேசுகிறபோது நான் கூனிக்குறுகிப் போயிருக்கிறேன். அப்போதெல்லாம் ஆண்டவரே! இந்த மாயவலையில் விழுந்துவிடாமல் என் இருதயத்தைப் பாதுகாத்துக்கொள்ள உதவும் என்று ஜெபித்திருக்கிறேன். என் நண்பரையும், புரொபஸரையும் பற்றிய உண்மையைச் சொல்லத்தான் வேண்டும். நான் சந்தித்திருக்கின்ற மனிதர்களில் இவர்கள் இருவரிலும் நான் தாழ்மையைக் கண்டிருக்கிறேன். இதுவரை நான் விளக்கிவந்திருக்கின்ற தாழ்மை அது. தன்னலமில்லாத தாழ்மை அது. இருவருமே முகஸ்துதி செய்யத் தெரியாதவர்கள். தங்களுடைய நிலையையும், தராதரத்தையும் நன்கு உணர்ந்தவர்கள். இல்லாததை இருப்பதாகக் காட்டிக்கொள்ளாதவர்கள். அவர்களோடு பழகும்போது எனக்குப் பாதுகாப்பான இடத்தில் இருப்பதுபோன்ற உணர்வு ஏற்படும். தாழ்மை இருவருடைய வாழ்க்கையையும் அலங்கரிக்கிறது. புரொபஸர் கர்த்தரை அடைந்துவிட்டார். மற்ற நண்பர் இன்னும் வாழ்கிறார், தன்னலமற்று தன்னால் முடிந்ததைக் கர்த்தருக்காக செய்து வருகிறார். இப்படிப்பட்டவர்கள் ஏன் அருகிக் காணப்படுகிறார்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. இவர்களிடம் தாழ்மையை நான் பார்க்கிறேன்; கற்றுக்கொள்கிறேன். இப்போது தெரிகிறதா தாழ்மை அர்த்தமுள்ளதென்று.

Bishop-J.C.-Ryle_2-optமுடிவாக ஜே. சி. ரைல் தாழ்மையைப் பற்றிச் சொல்லியிருக்கும் சில வார்த்தைகளோடு இந்த ஆக்கத்தை முடிக்கிறேன்.

‘கிறிஸ்தவ கிருபைகள் அனைத்திற்கும் அரசியாக இருப்பது தாழ்மை என்று சொல்லலாம். நம்முடைய பாவத்தையும் பலவீனத்தையும் அறிந்துகொள்ளுவதும், கிறிஸ்து நமக்கு தேவையாக இருக்கிறார் என்பதை உணர்வதுமே இரட்சிக்கும் கிறிஸ்தவத்தின் ஆரம்பமாக இருக்கிறது. எந்தக் காலப்பகுதியிலும் வாழ்ந்திருக்கும் மிகப்பரிசுத்தமான கிறிஸ்தவர்களை ஏனையோரில் இருந்து பிரித்துக்காட்டுகிற, அவர்களிடம் காணப்பட்ட முக்கிய கிருபையாக இதுவே இருந்திருக்கிறது. ஆபிரகாம், மோசே, யோபு, தானியேல், பவுல் எல்லோருமே தாழ்மையில் சிறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு கிறிஸ்தவனும் அடையக்கூடிய கிருபையாக இது இருக்கிறது. எல்லோரிடத்திலும் மற்றவர்களுக்குக் கொடுக்கக்கூடிய அளவுக்கு பணமிருக்காது. உலகத்துக்கு நன்மை செய்யக்கூடியளவுக்கு பேசும் வரமும், ஞானமும் இல்லாமலிருக்கலாம். ஆனால், அனைத்து கிறிஸ்தவர்களும் தாங்கள் விசுவாசிப்பதாக சொல்லிக்கொள்ளும் போதனைகள் வாழ்க்கையில் தாழ்மையை அணிகலனாகக் கொண்டு காணப்படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.’ – ஜே. சி. ரைல், Expository Thoughts on the Gospels: Luke, volume 2, The Banner of Truth, UK.

‘அறிவு, பணம், நம்முடைய நற்தன்மைகள் போன்ற எந்த ரூபத்திலும் நம்மில் இருந்துவிடக்கூடிய ஆணவத்தைக் (பெருமை) குறித்து நாம் கவனத்தோடு இருக்க வேண்டும். கிறிஸ்துவை நோக்கிப் பார்க்க முடியாமலும், பரலோகம் போகமுடியாமலும் செய்துவிடக்கூடியது ஆணவம். நம்மைப் பற்றிப் பெரிதாக எண்ணிக்கொண்டிருக்கிறவரையில் நாம் இரட்சிப்படையப்போவதில்லை. ஜெபத்தோடு நாம் தாழ்மையை நம்மில் வளர்த்துக்கொள்ள வேண்டும். நம்மைப் பற்றி சரியாகத் தெரிந்துவைத்திருந்து பரிசுத்த தேவனுக்கு முன்பாக நம்முடைய இடத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.’ – ஜே. சி. ரைல்.

‘நாம் உண்மையிலேயே கிறிஸ்தவர்களாக இருந்தால் நம்மில் யோவான் ஸ்நானனுக்கிருந்த இருதயம் இருக்க வேண்டும். தாழ்மையைப் பற்றி நாம் படிப்பது அவசியம். இரட்சிப்படையப்போகிற அனைவரும் இந்தக் கிருபையுடனேயே ஆரம்பிக்க வேண்டும். நம்மைப் பற்றிய உயர்வான எண்ணங்களைத் தூக்கியெறிந்துவிட்டு, நாம் பாவிகள் என்பதை உணரும்வரையில் நாம் கிறிஸ்தவர்களாக இருக்க வழியில்லை. யாருமே சாக்குப்போக்குச் சொல்லி உதாசீனப்படுத்திவிட முடியாத, எல்லாக் கிறிஸ்தவர்களும் பின்பற்ற வேண்டிய கிருபை இது. கர்த்தரின் பிள்ளைகள் எல்லோருக்கும் வரங்களோ, பணமோ, வேலையோ, நேரமோ, நல்லபணிகளைச் செய்யும் வாய்ப்போ இல்லாமல் போனாலும் அவர்களெல்லோருமே தாழ்மையுடையவர்களாக இருக்கவேண்டும். நமக்கிருக்கும் கிருபைகளனைத்திலும் இந்தக் கிருபையே கடைசிக்காலத்தில் மிக அழகானதாகத் தோன்றும். மரிக்கும் தருவாயில் நியாயத்தீர்ப்பைச் எதிர்நோக்கி நிற்கின்ற வேளையில்தான் தாழ்மையின் தேவையை வேறெப்போதும் இல்லாதவகையில் நாம் மிக ஆழமாக உணர்வோம். அப்போதுதான் நாம் வெறுமையாயிருந்து, கிறிஸ்துவே எல்லாமாக பரிபூரணப்பரிசுத்தமில்லாத நம்முடைய முழு வாழ்க்கையும் படமாக விரியும்.’ (Expository Thoughts on the Gospels: John, volume 1, The Banner of Truth).

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 28 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

3 thoughts on “அர்த்தமுள்ள தாழ்மை

 1. என் வாழ்க்கையை மாற்றியது இவருடைய இந்த செய்தி மிகவும் அருமையாக இருந்தது கிறிஸ்துவம் தாழ்மைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை அறிந்து கொண்டேன்

  Like

  • மிகமிக முக்கியமான தேவ வார்த்தையான தாழ்மையை குறித்து மிக எளிமையான நடையில் வேதவசனங்கள் மூலம்
   விளக்கம் தந்துள்ள தேவ மனிதருக்கு மிக்க நன்றி

   என் ஆவிக்குரிய கிறிஸ்தவ வாழ்க்கைக்கு மிகவும்
   பயனுள்ளதாக இருந்தது

   தேவனுக்கே மகிமை உண்டாவதாக
   ஆமென்

   Like

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s