இந்தியாவின் மகளும் விடியாத இரவும்

India's daughter2012ல் டெல்லியில் இருபத்தி மூன்றே வயதான வைத்தியத்துறை மாணவியான ஜோதி சிங் ஓடுகின்ற பஸ்ஸில் அகோரமான முறையில் ஐந்துபேரால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பிரிட்டனைச் சேர்ந்த சினிமாத் தயாரிப்பாளரான லெஸ்லி உட்வின் ‘இந்தியாவின் மகள்’ (India’s Daughter) என்ற பெயரில் ஆவணப்படமாகத் தயாரித்திருந்ததை பெண்கள் தினத்தை முன்னிட்டு பிபிசி (BBC) சமீபத்தில் பிரிட்டனில் வெளியிட்டது. படம் வெளியிடப்படப்போவதை முன்கூட்டியே அறிந்த பிஜேபி (BJP) அரசு அது இந்தியாவில் வெளியிடப்படக்கூடாது என்று கூக்குரலிட்டு அதைத் தடைசெய்தது. வெளிநாடுகளில் அது வெளியிடப்படாமல் இருப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டது. அதை வெளியிட்டால் இந்தியாவின் மானம் கப்பலேறிவிடும் என்பது பிஜேபி அரசின் வாதம். வெங்கையா நாயுடு, இது வெளிநாட்டார் இந்தியாவை மோசமாகக் காட்ட எடுத்த பிரச்சார சதி என்று சொல்லியிருக்கிறார். அரசினதும், வேறு சிலரினதும் எதிர்ப்பு ஒருபுறமிருக்க நாடாளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் படம் வெளியிடப்பட்டுத்தான் ஆகவேண்டும் என்றும், அப்படி வெளியிடப்பட்டால்தான் நம் சமுதாயத்தின் ஆண்வர்க்கத்தின் மனப்போக்கு அப்பட்டமாகத் தெரியவந்து மக்களை சிந்திக்க வைக்கும் என்று எழுத்துத்துறை, திரைத்துறை சம்பந்தப்பட்டவர்களும், பெண்வர்க்கத்தினரும், மாணவர்கள் சமுதாயமும், பொதுமக்களில் அநேகரும் சொல்லிவருகிறார்கள். இப்படியாக விவாதம் வலுத்து வருகிறது. இதற்கு மத்தியில் இதோடு நேரடியாக சம்பந்தப்படாவிட்டாலும், நாகலாந்தின் திம்மபூரில் கற்பழிப்பு செய்ததற்காக ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த கல்லூரி மாணவன் ஒருவனை ஒரு பெரிய கும்பல் ஜெயிலைத்தாக்கி வெளியில் கொண்டுவந்து அடித்துக்கொன்று எல்லோரும் பார்க்கும்படியாகத் தொங்கவிட்டிருக்கிறது. உலக நாடுகள் எல்லாவற்றிலும் இத்தகைய கற்பழிப்பு சம்பவங்கள் அங்குமிங்கும் நிகழுகின்றபோதிலும் இந்தியா அளவுக்கு நிகழ்வதில்லை, நாட்டையே உலுக்கும் பெரும் பிரச்சனையாக உருவெடுப்பதுமில்லை. பிபிசி வெளியிட்டிருக்கும் ஆவணப்படத்தை இந்தியாவில் பார்க்கத் தடையிருந்தபோதும் யுடியூபில் (Youtube) வெளிநாட்டில் இப்போதும் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இந்தியாவிலும் பலரும் அதை எப்படியோ பார்த்துவிடுகிறார்கள்.

இத்தனை ஆரவாரத்தையும் கிளப்பிவிடுமளவுக்கு ஆவணப்படத்தில் என்னதான் இருக்கிறது என்று அறிந்துகொள்ள நானும் அதை யுடியூபில் பார்த்தேன். 2012ல் நடந்த அந்த சம்பவம் இந்தியாவை மட்டுமல்லாது உலகையே அதிரவைத்தது. இப்போது மறுபடியும் ஆவணப்படம் தரும் மேலதிக விபரங்களைப் பார்த்தபோது மறுபடியும் அதிர்ந்துதான் போனேன் என்று சொல்லவேண்டும். ஆவணப்படத்தைப்பற்றி முதலில் சொல்லிவிடுகிறேன். லெஸ்லி உட்வின் படத்தை ஒரு செய்தியாளனுடைய கண்ணோட்டத்தோடு நடந்ததையும், கேள்விப்பட்டதையும் விபரிக்கும் காரியத்தை மட்டும் ஆவணப்படம் மூலம் செய்திருக்கிறார். சம்பந்தப்பட்டவர்களுடைய கருத்துக்களை நேர்காணல்கள் மூலம் அது வெளியிட்டிருக்கிறது. படம் எல்லோரையும் அதிர வைத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை.

என்னைப்பொறுத்தவரையில் இந்த ஆவணப்படம் எதிர்ப்பாளர்கள் சொல்லுவதுபோல் அப்படியொன்றும் டிரமேட்டிக்காக, நாம் இதுவரையிலும் அறிந்திராத, உலகத்துக்கும் தெரிந்திராததை சொல்லி நம் மானம்போகும்விதத்தில் எதையும் காட்டிவிடவில்லை. அதன் நேர்காணல்கள் நிச்சயம் நிலைகுலைய வைப்பவைதான். கற்பழிப்பில் ஈடுபட்டு தூக்குத்தண்டனையை எதிர்பார்த்து நிற்கும் கும்பலைச் சேர்ந்த முகேஸ் சிங் குற்றவுணர்வெதுவுமின்றி முகத்தை வெகுசாதாரணமாக வைத்துக்கொண்டு தான் செய்த கொடூரமான குற்றத்திற்காக ஜோதி சிங்கைக் குறைகூறுவது இதயத்தைப் பிளக்கிறதுதான். அவனுக்கு சார்பாக இருந்து வழக்காடிய இரு வக்கீல்களும் இந்தியப் பெண்வர்க்கத்தைப்பற்றிய தங்களுடைய மனப்போக்கை அப்பட்டமாக தங்கள் வாயாலேயே சொல்லுவதைக் கேட்ட அனைவருக்கும் பேரதிர்ச்சியைத் தந்திருக்கும். இப்படி இவர்கள் பேசுவதற்கு இடங்கொடுத்திருக்கக்கூடாது என்று கலாச்சாரப் பின்னணியின் அடிப்படையில் சிலர் எதிர்க்கிறார்கள். குற்றவாளி இதன் மூலம் சமுதாயத்தில் ஹீரோவாகிவிடும் ஆபத்திருக்கின்றது என்கிறது ஒரு குரல். ஒரு செய்தியாளன் என்ற அடிப்படையில் படத்தைத் தயாரித்தவர் சம்பந்தப்பட்டவர்களைப் பேசவைத்து பார்ப்பவர்களை சிந்திக்கவைப்பதை மட்டுமே கருத்தில் கொண்டிருந்திருக்கிறார்.

படத்தைக் குறைகூறுவதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளுவது என்ன என்பதுதான் முக்கியம். மொத்தத்தில் அது மறுக்கமுடியாததொரு உண்மையை வெளிப்படுத்துகிறது. இந்திய சமுதாயத்தில் காணப்படும் பெண்வர்க்கத்திற்கெதிரான ஆணாதிக்க மனப்போக்கை அது பகிரங்கப்படுத்தியிருக்கிறது. படித்தவர்களாக இருந்தாலும் சரி, எழுத்தறிவில்லாத சமுதாயத்தின் கீழ்நிலையில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, பொதுவாகவே பெண்ணைப்பற்றிய மனப்போக்கு பாரதி தன் கவிதைகளில் வெளிப்படுத்தியிருக்கும் புதுமைப் பெண்ணையொத்துக் காணப்படவில்லை. ‘ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார். வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார். கும்மியடி’ என்று பாரதி கனவு கண்ட புதுமைப் பெண்வர்க்கம் உருவாக எத்தனை நூற்றாண்டுகளாகவேண்டுமோ தெரியவில்லை. இந்த விஷயத்தில் கண்ணுக்கெட்டாத தொலைதூரத்தில் நம் சமுதாயம் இருந்துவருவது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

ஆவணப்படம் வெளிப்படுத்தியிருக்கும் இந்திய ஆணாதிக்க சமுதாயத்தின் பெண்ணைப்பற்றிய மனப்போக்கு சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட சிறுபான்மையருடையதாக இருந்திருந்தால் நாம் கூப்பாடு போடுவதற்குக் காரணமுண்டு. ஆனால், இந்த மனப்போக்கு பொதுவாகவே சமுதாயத்தில் பலநிலைகளில் எல்லாத் தரப்பாரிடமும் காணப்படுவதுதான் இந்த 21ம் நூற்றாண்டின் வெட்கத்துக்குரிய அம்சம். இந்த மனப்போக்கு நடந்த சம்பவத்துக்கு மூல காரணமே தவிர நேரடிக்காரணமல்ல. முகேஸ் சிங்கும், வக்கீல்களும் இந்த மனப்போக்கை பகிரங்கமாக வெளிப்படுத்தி தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குற்றத்தைத் திரைபோட்டு மறைக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் அப்படிச் செய்வதிலிருந்தே குற்றம் பாரதூரமானதாகுவது மட்டுமன்றி பெண்ணினத்தைப் பற்றிய அவர்களுடைய கேவலமான மனப்போக்கை முழு உலகுக்கும் அம்பலப்படுத்திவிட்டிருக்கிறது.

ஆவணப்படத்தைக் குறைகூறுவதை நிறுத்திவிட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பவர்கள் மீது முதலில் அரசு துரித நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்டப் பார்க்கவேண்டும். ‘இப்படி ஒவ்வொரு தடவையும் நம் தெருக்களில் நிகழும்போது நமக்குத் தலைகுனிவு ஏற்படுகிறது’ என்று பெண்கள்தினப் பேச்சில் மோடி தெரிவித்திருப்பது உண்மையானால், பேச்சோடு நின்றுவிடாமல் உடனடியாக குற்றவாளிகளுக்கான தண்டனையை நிறைவேற்ற வேண்டும். அது அத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்குப் பாடமாக இருக்கவேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் அது சமாதானமளிப்பதாக இருக்கும். அந்தக் குடும்பத்தின் பெருங்கனவுகள் சிதறிப்போனதையும், அவர்களுடைய ஈடுசெய்யமுடியாத பேரிழப்பையும், தற்போதைய மனநிலையையும் எண்ணிப்பார்க்காமல் இந்தியாவின் மானத்தையும், பிபிஸியின் சதியையும் பற்றிப் பேசுவது நகைக்க வைக்கிறது.

கல்வி வளர்ச்சியும், தொழில்நுட்ப வளர்ச்சியும், பொருளாதார மாற்றங்களும், தொழில் துறை வளர்ச்சியும் இன்றைய சமுதாயத்தில் பெண்கள் கற்கவும், வேலை செய்யவும் வசதிகளை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. இவை நிச்சயம் பாரதி கனவுகண்டதுபோல் அவர்கள் வீட்டிலேயே பூட்டப்பட்டு இருக்கவேண்டிய நிலையை மாற்றி அமைத்திருக்கின்றன. அவற்றால் சமுதாயமும் தாக்கமுற்று பெண்களின் வாழ்வியல் முன்னேற்றத்துக்கு வழியேற்படுத்தி வைத்திருக்கின்றது. அதுவும் செல்வாக்கும், பணவசதியுமுள்ள குடும்பத்தில் இருப்பவர்கள் தொழில் துறை, அரசியல், செய்தித்துறை போன்ற பெருந்துறைகளில் முன்னுக்கு வரவும் முடிந்திருக்கிறது. ஆனால், இந்த முன்னேற்றங்கள் எல்லாம் ஆண்வர்க்கத்தின் அடிப்படை மனப்போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இவற்றை மட்டும் முன்னேற்றமாகக் கருதுவது அடிப்படைப் பிரச்சனையைப்பற்றி நாம் இன்னும் கொஞ்சமும் சிந்தித்துப் பார்க்கவில்லை என்றாகிவிடும். இத்தகைய மாற்றங்களும் சமுதாயத்தில் பெண்களுக்குப் பிரச்சனையை ஏற்படுத்திவிடுகின்றன. ஆவணப்படத்தில், பெண்கள் ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வெளியில் என்ன செய்கிறார்கள்? என்றும், அவர்களுக்கு ஜீன்ஸ் ஒரு கேடா? என்றும் இன்னொரு ஆணோடு திருமணத்திற்கு முன்பு என்ன பேச்சு? என்றும் முகேஸ் சிங்கும், படித்த வக்கீல்களும் கேட்பது பெண்கள் படிப்பதையும், வேலைக்குப் போவதையும், ஆண்களோடு சரிசமமாகப் பழகுவதையும் சமுதாயத்தின் பெரும்பகுதியால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதைத்தானே காட்டுகிறது. அதற்குக் காரணமென்ன? பெண்களைப்பற்றிய ஆணாதிக்க சமுதாயத்தின் அடிப்படை மனப்போக்கு இன்னும் சுத்தமாக மாறவில்லை என்பதுதானே. இந்த மனப்போக்கு மாறாமல் எத்தனைப் புறமாற்றங்களைக் கொண்டுவந்தாலும் நம் சமுதாயத்தில் பெண்களுக்கு சமத்துவம் இருக்க வழியில்லை. பாரதியின் புதுமைப் பெண் இந்திய சமுதாயத்தில் உருவாக முதலில் ஆணாதிக்க வர்க்கத்தின் இருதயத்தில் ஆழமாகப் பதிந்திருக்கும் பெண்கள்பற்றிய மனப்போக்கு அடியோடு மாறவேண்டும்.

ஆணாதிக்க சமுதாயத்தின் இந்த அடிப்படை மனப்போக்கை ஆராய்வோம். முதலில், அது ஆண்களைப் பெண்களைவிடத் தாழ்ந்த நிலையில் கருதுகிறது. அதற்குக் காரணம் இந்து சமுதாயக் கலாச்சாரப் பின்னணியே. ஆவணப்படத்தில் ஜோதி சிங்கின் தாய் சொல்லுகிறார், ‘ஜோதி சிங் பிறந்தபோது நாங்கள் அதைக் கொண்டாடியதைப் பார்த்து சிலர், இதென்ன ஆண்பிள்ளை பிறந்ததுபோல அவளைக் கொண்டாடுகிறீர்களே என்றார்கள்.’ இதற்குக் காரணம் ஆணைவிடப் பெண்ணைத் தாழ்வாகப் பார்ப்பதே. ஆணை அடிப்படையாக வைத்தே இந்து சமுதாயம் இயங்குகிறது. அந்த சமுதாயத்தில் பெண்ணுக்கு இடமிருந்தபோதும் அது ஆணைவிட மிகவும் தாழ்வானது. ‘இந்த சமூகத்தில் பெண்களுக்கு இடமில்லை’ என்று தைரியமாக வக்கீல்களில் ஒருவர் சொல்லியிருப்பதே அதிர்ச்சி தருகிறது. சமூகத்தில் குடும்பத்தின் சமூக அந்தஸ்து, பொருளாதார நிலை எல்லாமே ஆணை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. பெண் பிறப்பதே குடும்பத்துக்குப் பாரமானதாக நினைப்பதால்தான் பெண்பிள்ளைகளைப் பிறந்ததும் அழித்துவிடுகின்ற செயல் இன்றும் சமுதாயத்தில் நடந்துவிடுகிறது. குழந்தை பிறக்கவிருக்கும் ஒருவரிடம் டாக்டர் என்ன குழந்தை பிறக்கப்போகிறது என்று சொல்லிவிட்டாரா? என்று கேட்டேன். அப்படியெல்லாம் சொல்லக்கூடாது என்று கட்டுப்பாடு இருக்கிறது, அது கிரிமினல் குற்றம் என்று ஆஸ்பத்திரியில் பல இடங்களில் நோட்டீஸும் ஒட்டிவைத்திருக்கிறார்கள் என்று அவர் சொன்னார். அதற்குக் காரணமே பிறக்கப்போவது பெண்ணாக இருந்தால் பெற்றோர்கள் சங்கடப்படுவார்கள் அல்லது விரும்பமாட்டார்கள், ஏதாவது செய்துவிடுவார்கள் என்பதற்காகத்தான். ஜோதி சிங்கின் பெற்றோர்கள் தங்கள் பெண்ணை அந்தவிதத்தில் பார்க்காமல் இருந்திருப்பது ஆச்சரியம் மட்டுமல்ல பாராட்டக்கூடிய விஷயந்தான். இப்படிச் சிலவிதிவிலக்குகளும் இந்த சமுதாயத்தில் இல்லாமலில்லை.

பெண்ணைக் குடும்பத்திற்கு பாரமாகக் கருதுவதும், திருமணம் ஆகும்வரை வயிற்றில் கல்லைக்கட்டிக்கொண்டிருப்பதுபோல் அவளை வளர்ப்பதும், திருமணம் தகுந்த வயதில் ஆகாவிட்டால் அப்படி ஆகவில்லையே என்று அவளைத் தூற்றுவதும் சமுதாயத்தில் இன்றும் தொடர்ந்திருந்து வருவதற்கு ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்ணைத் தாழ்வாக நினைப்பதுதான் காரணம். திருமணம் செய்துகொள்வதற்காகக்கூட பெண் எவரையும் விரும்புவதையும், விரும்புகிறவர்களோடு பேசிப்பழகுவதையும் இந்த சமுதாயம் தடைசெய்து வைத்திருக்கிறது. அப்படி இல்லை என்று வாதிடுபவர்கள், ஜோதி சிங் தன் வைத்தியக் கல்லூரி நண்பனோடு படம் பார்க்கப்போனதைக் குறைகூறுவதேன்? கலாச்சாரக் காவலர்கள் என்ற பெயரில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் வீதியில் நடந்துபோவதைத் தடைசெய்யப் புறப்பட்டிருப்பதும், வெலன்டைன் நாளைக் கொண்டாடுவதை எதிர்ப்பதும் ஏன்? காதல் என்ற விஷயம் இல்லாமல் ஒரு சினிமாப்படத்தைக்கூட எடுக்கத் தெரியாதிருக்கிற சமுதாயத்துக்கு ஆணும் பெண்ணும் காதலிப்பதில் ஏன் அத்தனை ஆத்திரம்? இதற்கெல்லாம் காரணம் சுயநலத்தால் பெண்ணை சமுதாயத்தில் தாழ்வாகப் பார்ப்பது மட்டுமே. இந்த சமுதாயத்தைப் பொறுத்தவரையில் பெண் அதன் மீது திணிக்கப்பட்ட நிர்ப்பந்தமாகத்தான் கணிக்கப்படுகிறாள். சமுதாயத்தில் எத்தனை புதிய அம்சங்கள் தோன்றி வளர்ந்து அதிலெல்லாம் இடம்பெறப் பெண்ணுக்கு வாய்ப்புக்கிடைத்திருந்தபோதும் பெண்ணப்பற்றிய அடிப்படை மனப்பாங்கு கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறி அவளை சமுதாயத்தில் மனதில் தாழ்நிலையில் வைத்திருக்கிறது. பெண்விடுதலையைக் கனவாகக் கொண்டு கவிதைகள் தீட்டிய பாரதி எதிர்பார்த்த நிலையை நம் சமுதாயப் பெண் இன்னும் அடைய முடியாமல் இருந்துவருவதற்கு இதுவே அடிப்படைக் காரணம்.

ஜோதி சிங்கின் வைத்தியக் கல்லூரி விரிவுரையாளர் ஒரு விஷயத்தை ஆவணப்படத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார். நம் சமுதாயத்தில் பொதுவாக பிறப்பில் இருந்தே ஆண்பிள்ளையையும், பெண்பிள்ளையையும் சேர்ந்து பழகாமல் வைத்திருக்கின்ற வழமையிருக்கின்றது. இது ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் பிறப்பிலிருந்தே புரிந்துகொண்டு வாழ்வதைத் தடைசெய்து வைத்துவிடுகிறது. இதற்கு விதிவிலக்குகள் சமுதாயத்தில் இருந்தபோதும் இதுதான் பொதுவான வழக்கம். கிராமங்களில் இது சகஜம். இப்படி ஆணையும், பெண்ணையும் தனித்து வைத்து வளர்ப்பது ஒருவித புத்திக்கெட்டாத உணர்வுகளை அவர்களில் தூண்டிவிட இடங்கொடுத்து கெடுத்துவிடுகிறது. பெண்களைக் கண்களால் பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் அதிகம் தெரியாமலேயே வளர்ந்து வந்திருக்கிற வாலிபர்களை நம் சமுதாயம் பெருமளவில் கொண்டிருக்கிறது. சுய விருப்பு, வெறுப்பு எதுவுமில்லாமல் பெற்றோர் கண்ணைக் காட்டுகிறவளுக்கு கண்ணை மூடிக்கொண்டு தாலிகட்டத்தயாராக இருக்கிற வாலிபர்களும், பெண்களும் நம்மினத்தில் ஏராளம். சமீபத்தில் இப்படியாகத் தன் தாய் சொன்ன பெண்ணுக்கு தட்டாமல் தாலிகட்டியதாக நேர்காணலொன்றில் பறைசாட்டிக்கொண்டார் ஒரு நவீன இளம் சினிமா நடிகர். இருவருக்கும் அது ஓகேதான் என்றாலும் அத்தகைய ஏற்பாட்டுக்கு, தங்களிருவருக்கும்தான் திருமணம் நடைபெறப்போகிறதென்பது தெரியாமலேயே தங்களைத் தயார் செய்துகொண்டு திருமண நாள்வரை வாழ்ந்திருக்கிறார்கள் என்பதுதான் விசேஷம். இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் இப்படியும் ஒரு வழக்கம் தொடரத்தான் செய்கிறது.

ஒரு வாலிபனோ, வாலிபப் பெண்ணோ தனக்குப்பிடித்த யாரையாவது நேசித்துவிட்டால் அதற்கேற்படும் சமுதாயத்தடைகள்தான் எத்தனையெத்தனை இந்த சமுதாயத்தில். ஆணாதிக்க மனப்பான்மையை ‘இந்தியாவின் மகள்’ அம்பலமாக்கியிருப்பதைப் போலத்தான், தமிழகத்தில் தர்மபுரியில் இளவரசனைக் கொன்று சாதிபேய் தன் கோரமுகத்தை உலகுக்கு அம்பலமாக்கியது கடந்த வருடம். இருபது நிமிடங்களுக்கொரு கற்பழிப்பு நாட்டில் நிகழ்வதாக செய்தி சொல்லுகிறது. அதேபோல சாதிப்பேயால் எத்தனையெத்தனை காதல் ஜோடிகள் கொலை செய்யப்பட்டோ அல்லது தற்கொலையை நாடியோ இல்லாமல் போய்விடுகிறார்கள் வருடாவருடம். சாதிக்குள் மட்டுந்தான் திருமணம் நடக்க வேண்டும் என்று ஒரு கட்சி பேசிவருகிறது தமிழ்நாட்டில்.

நம் சமுதாயத்தில் பெண்ணின் நிலையைப் பற்றிக் கருத்துத்தெரிவித்தால் மேல்நாட்டுக் கலாச்சாரத்தைத் திணிக்கிறார்கள் என்ற உப்புச்சப்பற்ற, நகைப்புக்கிடமான குற்றச்சாட்டு எழுவது இன்றில்லாமல் என்றும் இருந்திருக்கிறது. மேல்நாட்டு வழக்கங்களை ஒழுக்கமற்றதென்றும், அங்குள்ள பெண்களின் நடையுடை பாவனைகள் ஆண்களைத் தூண்டிவிடுவதாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டி ஒழுக்கத்திற்கு புதுவிளக்கம் கொடுப்பது நம்மினத்தில் புதிதல்ல. நம் பார்வை தப்பானதாக இருக்கிறது என்ற எண்ணமே இல்லாமல் அவர்களைக் குறை சொல்லுகிற கூட்டம் ஒரு முறைகூட தன் இனத்தின் அவல நிலையைத் திரும்பிப் பார்க்க மறுக்கிறது. அதற்குக் காரணம் உண்மை கசக்கிறது என்பது மட்டுமல்ல, நம் கலாச்சாரத்தின் மெய்ரூபத்தைத் திரும்பிப் பார்ப்பதற்கு மறுக்கின்ற மனப்போக்குந்தான். இந்துத்துவம் மறுபடியும் தலைதூக்கியிருக்கின்ற இந்நாட்களில் அந்த மனப்பான்மை தீவிரமாகத் தன்போக்கை நிலைநிறுத்திக்கொள்ளத்தான் போராடும்.

பெண்விடுதலைக்கு என்ன வழி?

சமுதாயத்தில் பெண்ணைப்பற்றிய அடிப்படை மனப்பாங்கு அடியோடு மாறவேண்டும். அப்படி மாறுவது அத்தனை சுலபமானதல்ல. ஆணாதிக்க சமுதாயத்தின் மத, சமூக, பொருளாதாரக் கட்டமைப்பில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பகடைக்காயாகப் பெண்ணிருப்பதால் அவளுக்கு சுதந்திரம் கிடைப்பது அந்தக் கட்டமைப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. அது மாறுவது இந்த சமூதாயத்திற்கு விருப்பமில்லை. அதனால்தான் அந்தக் கட்டமைப்புக்கு ஆபத்துவராத விஷயங்களில் ஈடுபட மட்டும் பெண்ணுக்கு இந்த சமுதாயம் சுதந்திரம் அளிக்கிறது. உண்மையில் அது விடுதலை அல்ல; கட்டுப்பாட்டோடு கூடிய ஒரு அனுமதி மட்டுமே; கைதிகளுக்கு காலில் கட்டப்பட்டிருக்கும் இலெக்டிரோனிக் கன்ட்ரோலர் போலத்தான். அதேவேளை ஆணுக்கு சமுதாயத்தில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்பதை மறக்கக்கூடாது. ஏன் என்று கேட்டால் கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் ‘ஆண்’ என்ற பதிலே  கிடைக்கும்.

பெண்ணைப்பற்றிய மனப்பான்மை இந்து சமுதாய கலாச்சாரத்தோடு பிண்ணிப்பிணைந்து காணப்படுவதால் ஒன்று மாறாமல் மற்றது மாறமுடியாது. இது கல்வியாலோ, சீர்திருத்தத்தாலோ மாறிவிடக்கூடியதல்ல. இந்து சமுதாய அமைப்பில் பிரிக்க முடியாதபடி ஒன்றிணைந்து காணப்படும் சாதிஅமைப்பு, கூட்டுக்குடும்ப வாழ்க்கை, திருமணம்பற்றிய ஆழமான ஆணாதிக்க எண்ணப்போக்கு அனைத்தும் அடிப்படையில் மாறவேண்டும். எத்தனை காந்தியும், பாரதியும், பிறந்தாலும், பகுத்தறிவு இயக்கங்கள் எழுந்தாலும் மாறிவிடக்கூடியவையல்ல இவை. வெறும் மனித சக்தி அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தும் வலிமையற்றதாக இருந்திருப்பதை வரலாறு காட்டுகிறது. பெண்விடுதலையைப்பற்றி எத்தனையெத்தனைக் கவிஞர்கள் பாடி, எழுத்தாளர்கள் எழுதிக்குவித்திருக்கிறார்கள். இருந்தும் இன்றுவரை அடிப்படை மனப்பான்மை இந்த விஷயத்தில் மாறுவதற்கு ஒன்றும் நடக்கவில்லையே. அப்படியானால் எதுதான் வழி?

எனக்குத்தெரிந்து சுவிசேஷம் மட்டுமே இந்த அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவரமுடியும். ஏன் தெரியுமா? பிறப்பு வளர்ப்பு முறையால் இரும்புபோல் இருகிப்போயிருக்கும் அடிப்படை மனப்பான்மையை வெறெதுவும் மாற்ற உதவாது என்பதால்தான். உலகத்து விஷயங்கள் இதை மாற்றியிருக்க முடியுமானால் எப்போதோ இம்மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும், பாரதியின் கனவுப் புதுமைப்பெண் இன்று உலவி வந்துகொண்டிருப்பாள். உலகத்தை மீறிய நம்மையெல்லாம் படைத்த ஆண்டவர் மட்டுமே இந்த ஆணாதிக்க மனப்பான்மையை மாற்றக்கூடியவர். அவர் நம்வாழ்க்கையில் இடைப்பட்டு நம்முடைய இருதயத்தை மறுபிறப்பால் ஆவிக்குரியவிதத்தில் அடியோடு மாற்றி அமைக்கின்றபோதுதான் எந்தவிஷயத்தையும்பற்றியும் நம் பார்வை மாறும்; பெண்ணைப் பெண்ணாக மட்டும் பார்க்கின்ற, அவளைக் கடவுளின் படைப்பாக, அவளுக்குரிய இடத்தில் வைத்துப் பார்க்கின்ற பார்வை கிட்டும். அடிப்படை மாற்றம் இந்து சமுதாயத்தில் ஏற்படுவதற்கு இதைத்தவிர என்னைப் பொறுத்தவரையில் வேறெதுவும் உதவாது. அந்த மாற்றம் என்னில் ஏற்பட்டதே சுவிசேஷத்தால்தானே!

வில்லியம் கேரி இந்தியாவுக்கு வந்தபோது கணவன் இறந்தபிறகு உடனேயே உடன்கட்டை ஏறும் விதவைப் பெண்களைப்பார்த்து உள்ளம் பதைத்து அதற்கு எதிராக ஏச்சையும் பேச்சையும் வாங்கி எதிர்த்துப் போராடியிருக்கிறார். ஏன் தெரியுமா? சுவிசேஷத்தின் நாயகனான இயேசு அவருடைய இருதயத்தை மாற்றிப் பெண்ணைப் பெண்ணாகப் பார்க்கும் இருதயத்தை அவருக்குக் கொடுத்திருந்ததால்தான். அன்னை ஏமி கார்மைக்கள் தமிழகத்தின் தென்னகத்தில் பெண்குழந்தைகளை, தேவையில்லை இந்த வீண் ஜென்மங்கள் என்று வீதியில் எறியப்பட்டதைப் பார்த்துப் பதைபதைத்து ஒவ்வொன்றாக அவர்களை இரு கரங்களால் வாரியணைத்து வளர்த்தெடுத்தற்குக் காரணம் அந்தக் குழந்தைகளைக் கடவுளின் படைப்பாக மட்டும் பார்க்கும் இருதயத்தைக் கொண்டிருந்ததால்தான். இந்த சமுதாயத்தின் தூஷணைகளையும், மிரட்டல்களையும், உயிராபத்தையும் பொருட்படுத்தாமல் அந்த அன்னை மடிந்து கருகிப்போயிருக்க வேண்டிய எத்தனைக் குழந்தைகளைக் காத்து வளர்த்து வாழ வைத்திருக்கிறார். சுவிசேஷம் அந்தப் பெண்மணியில் ஏற்படுத்திய மாற்றமே அவரை அந்தவகையில் பெண்களுக்காக வாழவைத்தது.

இதைவாசித்துவிட்டு, அப்படியென்றால் இன்றும் சுவிசேஷ கிறிஸ்தவர்கள் இந்த சமுதாயத்தின் அழுக்குகளையெல்லாம் தொடர்ந்தும் பின்பற்றி பெண்களை இரண்டாந்தரப் பிரஜையாக வைத்திருப்பதேன்? என்று யாராவது கேட்காமல் இருக்கமாட்டீர்கள். அந்தக் கேள்வி நியாயமானதே. சுவிசேஷத்தைக் கேட்டு இயேசுவிடம் வந்துவிட்டோம் என்று சொல்லி வாழ்கின்ற ஆயிரக்கணக்கானோர் இயேசுவைப் பெயரளளில் ஏற்றுக்கொண்டபோதும் அவர் வழிப்படி (வேதபோதனையின்படி) வாழமுடியாமலும், வாழமறுத்தும் இருப்பதுதான் இந்த நிலைக்குக் காரணம், வேறெதுவுமில்லை. இதுவரை வணங்கி வந்த சிலையை எறிந்துவிட்டு அந்த இடத்தில் இயேசுவை வைத்திருக்கிறதே தவிர இந்தக்கூட்டம் உண்மையில் ஆவிக்குரியவிதத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டமல்ல. அது இயேசுவின் வேதசத்தியங்களை ஒதுக்கிவைத்துவிட்டு புறமத சமுதாய வழக்கங்களைத் தொடர்ந்தும் பின்பற்றி அழுகிய வாழ்க்கை வாழ்ந்துவருகிறது. சாதிச் சபைகளை அமைத்தும், சாதித்திருமணங்களை நடத்தியும் இயேசுவுக்கு பேரவமானத்தை ஏற்படுத்திவருகிறது. அலங்கோலமான புறஜாதிப்பண்பாட்டை சுயநலத்திற்காக நியாயப்படுத்தி வேதப்பண்பாட்டுக்கு புறமுதுகு காட்டிவருகிறது. அது சுவிசேஷ கிறிஸ்தவமாகத் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டாலும் ஆவியற்ற போலித்தனம் மட்டுமே.

பெரும் பாவத்தைச் செய்துவிட்டாள் என்று குற்றஞ்சாட்டிக் கல்லெறிந்து கொல்லுவதற்காக ஒரு பெண்ணை இயேசு முன் கொண்டு நிறுத்தி, நீர் என்ன சொல்லுகிறீர் என்று யூதர்கள் கேட்டபோது, அந்தப் பெண்ணைப்பார்த்து, “போ, பெண்ணே! தொடர்ந்து பாவம் செய்யாதே” என்று சொன்னார் இயேசு. ஏன் தெரியுமா? சமுதாயத்தின் இழிவான மனப்போக்கை அவர் புரிந்துகொண்டு, அதைச்சுட்டிக்காட்டி அந்தப் பெண்ணுக்கு மெய்யான விடுதலைக்கான வழிகாட்டினார் மனித ரட்சகர். இயேசுவின் இந்தப் பார்வை நம்மினத்துக் கிறிஸ்தவ சமுதாயத்தில் இல்லாமலிருப்பதற்குக் காரணம் அது தன் சமூக வாழ்க்கையை மாற்றியமைத்துக்கொள்ள மறுத்து வருவதால்தான். இந்த உலகத்தில் எனக்கு சாட்சியாக இருக்க மறுக்கிறவனுக்கு பரலோகத்தில் நான் சாட்சி சொல்லமாட்டேன் என்று அவர் உறுதியாக சொல்லியிருக்கிறார். இயேசுவின் பெயரில் சமூக அழுக்குகளையெல்லாம் பண்பாடு என்ற பெயரில் தொடர்ந்து பின்பற்றி வேதபோதனையின்படி வாழ்க்கையின் சகல பகுதிகளிலும் மாற்றங்களைக் கொண்டுவராத போலிவேஷதாரிகளின் குட்டு நியாயத்தீர்ப்பு நாளில் வெளிவரத்தான் போகிறது. இன்றில்லாவிட்டாலும் அன்றைக்கு அவர்கள் தப்பமுடியாது அவர் கையிலிருந்து.

போலிக் கிறிஸ்தவர்கள் இயேசுவுக்கு சாட்சியாக வாழவில்லை என்பதற்காக ஆண்டவரின் வேதம் வல்லமையற்றது என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது. சுவிசேஷத்தின் மூலம் உண்மையாகவே பரிசுத்த ஆவியினால் இருதயம் மாறி இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் அவருடைய வார்த்தையை அன்றாடம் வாசித்து தங்களுடைய சொந்த வாழ்க்கை, சமூக வாழ்க்கை என்று அத்தனையிலும் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்து பண்பாட்டின் புரையோடிப்போன வழக்கங்களைக் குழிதோன்றிப் புதைத்துவிடுவார்கள். அப்படி செய்கின்றவர்களே உண்மையாக இயேசுவுக்கு பிள்ளைகள். இது ஆண், பெண் எல்லோருக்கும்தான் சொல்லுகிறேன். இயேசுவிடம் மட்டுந்தான் கிடைக்கும் இந்த சமுதாயத்துப் பெண்ணுக்கு விடுதலை. பாரதிக்கு கனவு மட்டுந்தான் காணமுடிந்தது; இயேசு கனவுகளை நனவாக்குகிற ஆண்டவர். இந்தியாவின் மகளுக்கு இரவு இன்னும் விடியாமல்தான் இருக்கிறது.

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 28 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

One thought on “இந்தியாவின் மகளும் விடியாத இரவும்

  1. we listen your speech ( 21 st century youngers, Christ family faced challenges) very much useful for our spiritual life. thanks to my pastor. now we study India’s daughter wrote by yours. PRITHIVIRAJKIRUBA, KARUR

    Like

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s