எங்கும் தண்ணீர் மயம்

chennaifloods

சென்னையில் இந்தளவுக்கு நான் தண்ணீரைப் பார்த்ததில்லை. சோவென்று நிற்காமல் வாரக்கணக்கில் மழை பெய்வதையும் சென்னை மக்கள் கண்டதில்லை. நூறுவருடங்களுக்குப் பிறகு இந்தளவுக்கு மழைபெய்திருப்பதாகத் தகவல். தமிழகத்தின் பல பகுதிகளை மழை பாதித்திருக்கிறபோதும் சென்னையை அது அடித்து நொறுக்கிக்கொண்டிருக்கிறது. 8000 வீதிகள் பாதிப்பு. விமானநிலையம் தண்ணீரால் நிறைந்து ஒரு வாரம் மூடப்பட்டது. இரயில்கள் ஓடவில்லை. பாதைகள் தண்ணீருக்குள் தாழ்ந்துபோயின. வெளி மாகாணங்களோடு தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. அதன் வாழ்நாளிலேயே முதல் தடவையாக ‘இந்து’ பத்திரிகை வெளியிடப்படவில்லை. சென்னை வாசிகளை பிளைஓவர் சாலைகளில் கூடாரம் போட்டு வாழவைத்திருக்கிறது இந்த வெள்ளப்பெருக்கு. மழை ஒருபக்கம் தொடர்ந்தும் பெய்ய நிரம்பிவழியும் ஏரிகளில் இருந்து தண்ணீரைத் திறந்துவிட வேண்டிய அவசியநிலை. நிற்கும் தண்ணீர் ஓடவழியில்லாமல், திறந்துவிடப்படும் தண்ணீரும் அதோடு பெருக சென்னை மக்களைப் பாதித்திருக்கும் வெள்ளப்பெருக்கிலிருந்து எப்போது வருமோ விடுதலை என்று நினைத்துப் பார்க்காதவர்கள் இல்லை.

செல்வந்தவர்கள், வறியவர்கள் என்று பார்க்காமல் மழை எல்லோரையும் பாதித்திருக்கிறது. மழைக்கெங்கே தெரியும் இந்தப்பேதமெல்லாம். வசதியோடு வாழ்கிறவர்களையும் உணவுப் பொட்டலத்துக்காக கூரைகளில் நிற்கவைத்திருக்கிறது மழை. வீட்டில் வாழமுடியாமல் அகதி முகாமுக்குப் போகவைத்திருக்கிறது பலரை. மின்சாரம் இல்லாமல் ஒரு வைத்தியசாலையின் இன்டென்சிவ் கவனிப்புப் பிரிவில் 18 பேர் இறந்துவிட்டிருக்கின்றனர் என்கிறது ஒரு செய்தி. எனக்குத் தெரிந்த ஒருவர் மவுண்ட் ரோடு பக்கத்தில் வீட்டில் தண்ணீர் நிறைந்து பெட்டி படுக்கை, உடையெல்லாம் தண்ணீரால் பாதிக்கப்பட்டு உடுத்தியிருக்கும் ஒரே உடையோடு ஒவ்வொரு நாளும் சாப்பாட்டிற்காக அழைந்துகொண்டிருக்கிறார். ஒருவேளை சாப்பாட்டோடு நாளைக் கழித்துக்கொண்டிருக்கிறார். பாதிக்கப்பட்டிருக்கும் எத்தனையோ பேரில் இவரும் ஒருவர். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், மழை செய்திருக்கும், செய்துவரும் அட்டகாசத்தை. எனக்கு நினைத்துப் பார்க்கவும் பயத்தைக் கொடுப்பது எது தெரியுமா? வரலாறு காணாத இந்தத் தண்ணீர்த்தொல்லையால் நாம் மறக்க நினைக்கும் ‘கூவம்’ ஆறு கரைபுரண்டோடி அதன் ஆள்கொல்லித் தண்ணீர் ஊரெல்லாம் பொய்க்கொண்டிருக்கிறதே, அது எத்தனையெத்தனை பயங்கர நோய்களை உண்டாக்கப்போகிறோ என்பதுதான்.

இதில் அதிசயம் என்ன தெரியுமா? சென்னைக்கு குடிப்பதற்கு தண்ணீர் லாரி லாரியாக வழமையாக வெளியில் இருந்து கொண்டுவரப்படுகிறது. சாதாரண நாட்களில் தண்ணீரும், மின்சாரமும் இல்லாத குறைதான் சென்னை மக்களின் அன்றாடப் பேச்சில் தலைப்புச் செய்தியாக இருந்து வந்திருக்கிறது. இன்றைக்கு தண்ணீர் சோவென்று கொட்டியபோதும் அது சென்னை மக்களுக்கு சந்தோஷத்தைத் தரவில்லை. ஏங்கிக் காத்துக்கொண்டிருந்த தண்ணீர் இன்று எதிரியாக மாறிவிட்டிருக்கிறது சென்னை மக்களுக்கு.

இந்தளவுக்கு மழை சென்னையைப் பாதித்திருப்பது ஏன், என்று மீடியாக்கள் அன்றாடம் ஆய்வு நடத்தி வாதப்பிரதாபம் செய்து வருகிறார்கள். இதற்கு அரசின்மீது குறைசொல்லுபவர்களும், மறுத்து வாதம் செய்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள். எல்லார் கவனமும் வேறெதிலும் இல்லாமல் ‘தண்ணீரிலேயே’ இருக்கப்போகிறது கொஞ்சக்காலத்துக்கு. அரசியல்வாதிகள், மனித உரிமைகள் இயக்கம், கோலிவுட், மீடியா என்று எல்லோரும் தண்ணீரைப்பற்றிப் பேசிப் பேசி வரண்டுபோன தொண்டையையும் கொஞ்சம் தண்ணீரால் நனைத்துக்கொள்ளுவார்கள்.

கனமழை ஒரு நல்லகாரியத்தையும் செய்திருக்கிறது. சாதாரணமாகவே மற்ற மாகாணத்து மக்கள் பழித்துப் பேசும் சென்னைவாசிகள், அத்தனை மோசமானவர்கள் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறது. அகதிகளாகிவிட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கவனித்துக்கொள்ளுவதோடு, கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்ய அநேக சென்னைவாசிகள் முன்வந்திருக்கிறார்கள். கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கிறது என்பதை வெள்ளப்பெருக்கு வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்த மோசமான நிலையைத் தடுத்திருக்க முடியாதா என்று எண்ணிப்பார்க்கிறேன். இது அசாதாரண இயற்கைச் சூழ்நிலையால் நிகழ்ந்திருக்கிறது என்று ஒரு சாராரும், இல்லை இது மனிதன் உருவாக்கிவிட்டிருக்கும் மாபெரும் பிரச்சனை என்று இன்னொரு சாராரும் பேசி வருகிறார்கள். இதில் அரசியல் செய்து எவருக்கும் எந்த லாபமும் இருக்கப்போவதில்லை. நாளைக்கு நடக்க வேண்டியது என்ன என்பதை யோசித்து நடவடிக்கை எடுக்க இந்த அசாதாரண நிலைக்கு என்ன காரணம் என்று பாரபட்சமில்லாமல் சிந்தித்துப் பார்ப்பது அவசியம்.

இந்து பத்திரிகையின் யூடியூப் கிளிப் ஒன்று பார்த்தேன். அதில் இயற்கையின் கோரம் தவிர வேறுசில முக்கிய விஷயங்களை இதற்குக் காரணமாகக் காட்டியிருக்கிறார்கள். 330 சிறுகுளங்கள், வழமையாக தண்ணீரைத் தேக்கி வைப்பவைகளை மூடி அவற்றில் அரசு அனுமதியில்லாமல் கட்டடம் கட்டியிருக்கிறார்களாம் சென்னையில். தண்ணீர் தேக்கி வைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த அநேக பகுதிகளில் அரசு அனுமதியில்லாமல் பிளாட்டுக்களும், வீடுகளும் கட்டிவந்திருக்கிறார்கள் சென்னைவாசிகள். சரியான பராமரிப்பின்மை, கட்டடங்களைக் கழிவுநீர் போகும் வசதியுடன் கட்டாமல் விட்டகுறை, நீர் வடிய உதவும் குழிகளையெல்லாம் அடைத்துவிடுகின்ற கொடுமை போன்ற பல மானுடச் செயல்களும் இந்தளவுக்குத் தண்ணீர் நகரை மூச்சுமுட்டவைக்கக் காரணமாயிருந்திருக்கின்றன. சென்னையின் பல பகுதிகளிலும் பேராறுபோல் நிறைந்து நிற்கும் தண்ணீர் போக வழியில்லாமல் நின்றுகொண்டிருக்கிறது. மனிதன் மனிதனைச் சுரண்டி வாழ்வதைத் தவிர வேறு நோக்கங்கள் இல்லாமல் வாழ்கிறவரை சென்னை என்ன, தமிழ்நாடே சுடுகாடாகத்தான் மாறிவிட முடியும்.

சென்னை மக்களுக்காக தூரத்தில் இருந்து நம்மால் ஜெபம் செய்யத்தான் முடிகிறது. ஒரு சில சாதாரண மனிதர்கள் களத்தில் இறங்கிப் போக்கிவிடக்கூடிய சாதாரணப் பிரச்சனையல்ல இது. மத்திய அரசும் மாநில அரசும் மக்களை மனதில்கொண்டு துரிதமாக செயல்பட வேண்டிய நேரம் இது. தன்னார்வ நிறுவனங்கள் தங்குதடையில்லாமல் களத்தில் இறங்கிப் பணிபுரிய வேண்டிய நேரமிது.

இதில் எனக்கென்ன வந்தது என்று கேட்பீர்கள். இயற்கையின் சீற்றமும், செயற்கையான மனிதர்களின் சுயநலப்போக்கும் உருவாக்கியிருக்கும் சென்னையின் மழைப்பிரச்சனை மட்டுமல்லாமல் உலகின் பல பாகங்களில் சமீப காலத்தில் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் ஆரம்பித்து பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் என்று பல நாடுகளில் பொதுமக்களைக் கோரமாகத் தாக்கி அழிக்கின்ற கொடிய நிகழ்ச்சிகளைப் பற்றிக் கேள்விப்பட்டு வருகிறோம். மக்களுக்குப் பாதுகாப்பு தனிமனித உரிமைகளுக்கு அதிகம் மதிப்புக்கொடுக்கும் மேலைநாடுகளில் இல்லாமல் போய்வருகிறது. தீவிரவாதத்தின் உச்சநிலையை இந்தக் கொடூர சம்பவங்கள் நமக்கு இனங்காட்டுகின்றன. இதற்குத் தீர்வு மேலும் உக்கிரத்தோடு இத்தீவிரவாதத்துக்குக் காரணமான குழுக்களைத் தாக்குவதுதான் என்று மேலைநாடுகள் போர்க்கொடி உயர்த்தியிருக்கின்றன.

இதெல்லாம் ஒருவரை சிந்திக்க வைக்காமல் இருக்க முடியாது. கிறிஸ்தவ வேதத்தையும், இயேசு கிறிஸ்துவையும் நம்பி வாழ்கிற என்னால் இதைப்பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்னைப் பொறுத்தவரையில் ‘பாவம்’ மட்டுமே. எந்தக் கிறிஸ்தவனும் மறுதலிக்க முடியாத உண்மை அது. அநியாயமாக ஓர் உயிரை மாய்க்கும் அளவுக்கு உக்கிர கோபத்துடன் ஒருவன் செயல்படுகிறான் என்றால் அதற்கு உளவியல் ரீதியாக, அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக ஆயிரம் காரணங்களை அள்ளிவைத்தாலும் மறுக்கமுடியாத முக்கிய காரணம் பாவம் மட்டுமே. பாவத்தைப் பற்றி இன்று கிறிஸ்தவர்களுக்கே விளக்கமாகத் தெரியவில்லை. வேதம் பாவத்தைப்பற்றி பலவிதமான உதாரணங்களைப் பயன்படுத்தி விளக்குகிறது. பவுல் அப்போஸ்தலன் நாம் பிறப்பிலிருந்தே அதோடுதான் பிறந்திருக்கிறோம் என்கிறார். அதில்லாமல் பிறந்தவரோ, பிறக்கப்போகிறவரோ ஒருவருமில்லை.

இதன்படி மனிதனில் நிலைகொண்டிருக்கும் பாவம் எப்படிப்பட்டது? வேதம் அதை விளக்கும்போது சீழ்பிடித்து மனிதனை உருக்குலைத்து அழிக்கும் தொழுநோயோடு ஒப்பிடுகிறது. தொழுநோய் கொடூரமானது. சரீரத்தை உருக்குலைத்து கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடுவது. அத்தோடு அது மோசமாகப் போய்க்கொண்டிருக்குமே தவிர இடையில் தன்னுடைய உருக்குலைக்கும் செயலை நிறுத்திவிடாது. அதுமட்டுமல்லாமல் தொழுநோய் உள்ளேயும் மனிதனின் இரத்தத்தைப் பாழாக்கி, வெளியிலும் அவனுடைய தோற்றத்தை சீரழிக்கும். அதுபோலத்தான் பாவமும். பாவம் மனிதனின் இருதயத்தில் இருந்து அவனை முழுமையாக அவனுக்குள்ளே இருக்கும் அத்தனையையும் தீமைக்கேதுவானதாக்கி, வெளியிலும் தீமைகளை அவன் செய்யும்படியாகத் தீயவனாக்குகிறது.

பாவத்தின் இன்னொரு முகம், அது மனிதனை எந்த நன்மையும் செய்யவிடாது. அதாவது கடவுளுக்குரிய ஆத்துமரீதியில் எந்த நன்மையையும் செய்யவிடாது. அவன் செய்கின்ற நல்லகாரியங்களனைத்தும் ஏதோவொருவிதத்தில் சுயநலங்கொண்டதாகத்தான் இருக்கும். சுயநலக்கலப்பில்லாமல், கடவுளுக்கேற்ற நன்மைகளை மனிதன் செய்யமுடியாத நிலையில் பாவம் அவனை வைத்திருக்கிறது. ‘ஒருவனாகிலும் நன்மை செய்கிறவனில்லை’ என்று கடவுள் வேதத்தில் சொல்லியிருப்பது இதனால்தான். அவருடைய பார்வையில் நன்மை செய்கிற ஒருவனையும் அவர் காணாமலிருப்பதற்குக் காரணம் பாவமே. பாவம் நம்மை முழு நிர்வாணிகளாக்கி கடவுளுக்கு முன் வெட்கப்படுகிற நிலையில் வைத்திருக்கிறது. பாவத்தின் மாயத்தன்மைகளில் ஒன்று என்ன தெரியுமா? நாம் வெட்கப்படும்படியாக நிர்வாணியாக நிற்கிறோம் என்பதை அது நம்முடைய கண்களுக்குத் தெரியாமல் செய்கிறது. நமக்குள்ளேயே இருக்கும் நம்முடைய பரம எதிரி பாவம். உற்ற நண்பனைப்போல உள்ளேயே இருந்து நம்மை உருக்குலைத்து வரும் விரோதி பாவம்.

வேதம் பாவியாகிய மனிதனை நரிகளுக்கும் (லூக்கா 13:32), ஓநாய்க்கும் (மத்தேயு 7:15), கழுதைகளுக்கும் (யோபு 11:12), பன்றிகளுக்கும் (2 பேதுரு 2:22) ஒப்பிடுகிறது. வேதத்தில் ஆகூர் என்ற ஒரு நல்ல மனிதன், தான் ‘மனிதரெல்லோரிலும் மூடன்; மனிதருக்கேற்ற புத்தி எனக்கில்லை’ (நீதி 30:2) என்று சொல்லுகிறான். அதற்குக் காரணம் அவனுக்கு தன்னுடைய பாவநிலைபற்றிய உணர்வேற்பட்டிருப்பதுதான். பாவம் மனிதனை மிருகமாக்கிவிடுகிறது. சென்னையில் இத்தனை வெள்ளப்பெருக்கு இருந்தபோதும் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ளுகிறவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள்? இத்தனை கஷ்டங்கள் பெருவாரியான மக்களுக்கு ஏறபட்டிருக்கிறவேளையிலும் மிருகத்தனமாக நடந்துகொள்கிறவர்களை நீங்கள் பார்க்காமலா இருக்கிறீர்கள்? தேவதூதனுக்கும் சற்றுக் கீழான நிலையில் மனிதனை சிறப்பாகக் கடவுள் படைத்திருந்தும் பாவத்தால் மிருகத்தைப் போல மனிதன் நடந்து வருகிறான். கடவுளையும் ஏமாற்றுகிற துணிகரமான பாவியாக இருக்கிறான் மனிதன். வேதம் அனனியா என்ற மனிதன் தன் மனைவியோடு சேர்ந்து கடவுளுக்கு முன்னால் பொய் சொன்னான் என்கிறது (அப்போஸ்தலர் 5:3).

பாவத்தின் கூலி மரணம் என்கிறது வேதம். பாவம் மரணத்தைக் கொண்டு வந்தது. அது நம்மை நித்திய மரணத்தை நோக்கி அழைத்துச் செல்லுகிறது. பாவத்தைச் செய்து வாழ்கிறவனின் வாழ்க்கையில் அது அதிகரித்தே செல்லும்; குறையாது. பாவம் எல்லா நன்மைகளுக்கும் எதிரானது. அதனால் அது தன்னைத் திருத்திக்கொள்ளாது. எத்தனைப் போதனைகளைக் கொடுத்தாலும், சீர்திருத்த கல்வி நிலையங்களில் வளர்த்தாலும் அது திருந்தாது. அதை மனிதர்களிடம் நாம் பார்க்கவில்லையா? மனிதன் இன்றைக்கு மரண தண்டனையையும், கடுமையான தண்டனைகளையும் மனிதாபிமானம் என்ற பெயரில் நிராகரித்துப் பேசிவருகிறான். இயற்கையிலேயே மனிதன் நல்லவன்தான் என்றும், அவனுக்குத் திருந்துகிற வாய்ப்பைக்கொடுத்தால் திருந்திவிடுவான் என்ற போலி நம்பிக்கையில் இவ்வாறு பலர் நடந்து வருகிறார்கள். அவர்களுடைய எண்ணங்கள் மிகத் தவறானவை. உண்மை தெரியாமல் அவர்கள் இப்படிப் பேசி வருகிறார்கள். பாவத்தைத் திருத்த முடியாது என்று மனிதனுக்குத் தெரியவில்லை. இன்று அராஜகக் குணத்தோடு ஆணும், பெண்ணுமாக தீவிரவாதத்தில் மனிதன் ஈடுபட்டு வருவதற்கு அடிப்படைக் காரணம் பாவமே. பாவத்தைத் திருத்த வழியில்லை. தொழுநோயை அழிக்க வேண்டுமே தவிர திருத்த முடியாது. நாகத்தை யாராவது திருத்தி வெற்றிகண்டிருக்கிறார்களா? அதன் நச்சுப்பல்லைப் பிடுங்கிவிட்டுத்தான் பாம்பாட்டியே அதை வைத்து வித்தை காட்டுகிறான். அது தெரிந்த மனிதனுக்கு பாவத்தைப் பற்றிய உண்மை தெரியவில்லை. அதற்குக் காரணமே பாவமில்லாத ஒரு மனிதனும் இல்லை என்பதுதான்.

பாவம் மனிதனை அழித்துவிடும். அவனுக்கு வாழ்வளிக்காது. பாவத்தில் இருப்பதால்தான் மனிதன் பாவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறான். அரசியல்வாதி முதல் சாதாரண மனிதன்வரை பாவத்தின் காரணமாக தன்னையும் அழித்துக்கொண்டு சுற்றி இருப்பவர்களுக்கும் ஆபத்தானவனாக இருந்து வருகிறான். சென்னையின் அகோர மழையும் அதனால் நகரத்தையே விழுங்கியிருக்கும் வெள்ளமும் தண்ணீர்ப் பிரச்சனையை மட்டுமல்ல பாவத்தின் உண்மை நிலையை நமக்குக் காட்டுகின்றன. முக்கியமான ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேனே! அகோர மழைக்கும், அழித்துவிடுவேன் என்று மிரட்டும் வெள்ளத்திற்கும் காரணம் இந்தப் பாவந்தான். எப்படி என்று கேட்கிறீர்களா? மனிதனைப் படைத்த கடவுள் அவனை ஆதியில் பாவமில்லாமல்தான் படைத்தார். பாவத்தில் விழுந்த ஆதி மனிதனும், அவன் மனைவியும் மனித குலத்தையும் இயற்கையையும் பாதிக்கும் பாவத்தைப் பிறப்பித்தார்கள். அதனால்தான் இயற்கையும் இன்றைக்கு நன்மைக்கானதை மட்டும் நமக்களிக்கமுடியாதபடி பாவத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. பவுல் அப்போஸ்தலன் ரோமருக்கு எழுதிய நிருபத்தின் 8ம் அதிகாரத்தில் சொல்லுகிறார், பாவத்தில் இருக்கும் உலகம் தன்னுடைய விடுதலைக்காகப் பரிதவித்துக்கொண்டிருக்கிறது என்று. மனிதனின் நிலை மட்டுமல்ல இயற்கையும், நினைத்துப் பார் பாவத்தின் கோரத்தை என்று அறைகூவலிடுகின்றது.

அப்படியானால் இந்தப் பாவத்தில் இருந்து எப்படி விடுபடுவது என்ற கேள்வி சிந்திக்கின்ற மனிதனுக்குத் தோன்றும். அதற்கு விடுதலை இருக்கத்தான் செய்கிறது. அந்த விடுதலையைக் கொடுக்கக்கூடியவர் இயேசு கிறிஸ்து மட்டுமே. இதென்னடா, அங்கே கடித்து, இங்கே கடித்து கடைசியில் மதப்பிரச்சாரத்தில் இறங்கி விட்டீர்களா? என்று கேட்பீர்கள் என்று எனக்குத் தெரியும். நிச்சயம் அதை நான் செய்யவில்லை. மதம் பாவத்திலிருந்து விடுதலை கொடுக்காது. எத்தனை மதப்பிரச்சாரமும் பாவத்திலிருந்து விடுதலை தராது. மதமாற்றமும் பாவத்திலிருந்து விடுதலை கொடுக்காது. இப்போது திருப்தியா உங்களுக்கு? நான் மதத்தைப்பற்றிப் பேசுவதற்காக இதை எழுதவில்லை. உங்களில் உண்மையாகவே அக்கறைவைத்து இதை எழுதுகிறேன். இதனால் நான் அடையப்போகும் உலக நன்மைகள் ஒன்றுமேயில்லை. அதனால் கொஞ்சம் பொறுமையாக மிகுதியையும் வாசித்து விடுங்களேன்.

பாவத்திலிருந்து விடுதலைபெற மனிதனுக்கு இயேசு கிறிஸ்து தேவை என்று சொன்னேன். ஏன், என்றல்லவா நீங்கள் கேட்டிருக்க வேண்டும். அதற்குப் பதில் சொல்லிவிடுகிறேனே. முதலில் பாவத்தில் இருந்து மனிதன் விடுதலை அடைய அந்தப் பாவத்திற்கு முடிவுகட்டப்பட வேண்டும். பாவத்தில் உழன்று கொண்டிருக்கும் நானும், நீங்களும் அந்தக் காரியத்தைச் செய்யமுடியாது. கூவத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும் மனிதன் இன்னொருவனைக் காப்பாற்றுவதெப்படி? தொழுநோயாளி இன்னொரு தொழுநோயாளியின் நோயைத்தீர்க்க முடியுமா? நாமெல்லோருமே நமக்குள் இருக்கும் பாவத்தைப் போக்க வழியில்லாதவர்களாக இருந்துவருகிறோம். அதற்கு வேதம் சொல்லுகிற வழிதான் இயேசு கிறிஸ்து. பாவம் கொடூரமானமானதாக இருப்பதால், நாமும் பாவத்தில் இருப்பதால் நமக்குப் புறத்தில் இருந்து பாவமேயில்லாத ஒருவர் நம்மைப் பாவத்திலிருந்து விடுவிக்க ஒரு பெரிய காரியத்தைச் செய்யவேண்டும். அவர் தன்னுடைய பூரணமான நீதியைவைத்து நமக்காக, பாவத்தினால் நம்மேல் இறங்கியிருக்கும் கடவுளின் கோபத்திலிருந்தும், நித்திய அழிவிலிருந்தும் நம்மை விடுவிப்பதற்காக நாமிருக்க வேண்டிய இடத்தில் தானிருந்து நமக்குப் பலியாக வேண்டும். இத்தனையையும் அவர் நமக்காகச் செய்ய வேண்டும். எந்தச் சுயநலமுள்ள, பாவத்தை சுமந்து வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதன் இதைச் செய்யக்கூடியவனாக இருக்கிறான்? ஒருவனுமில்லையே; வேதமும் சொல்லுகிறது, கடவுளின் பார்வையில் நீதியானவன் ஒருவனுமில்லை என்று.

இப்போது தெரிகிறதா, பாவத்திற்கு முடிவுகட்டுவதென்பது மனிதனால் ஆகக்கூடிய காரியமல்ல என்று. அப்படியானால் பூரண நீதியான ஒருவரைத் தேடி எங்கே போவது? அதற்கெல்லாம் நமக்கு இடம் வைக்காமல் கடவுளே ஒரு வழியைத் தீர்மானித்திருக்கிறார். பாவமேயில்லாத பூரண நீதியுருவான கடவுள் இந்த உலகத்தில் மனிதனாகப் பிறந்து நாம் செய்த பாவங்களுக்கான பழியையும், தண்டனையையும் தன்மேல் சுமந்து, சிலுவையில் தன்னைப் பலியாகக் கொடுத்தார். அவருடைய மகத்தான இரத்தப்பலியை வேதம் பரிகாரப்பலி என்று அழைக்கிறது. ஏன் தெரியுமா? அவர் நமக்குப் பரிகாரம் செய்யவந்த பாவநிவாரணியாக இருப்பதால்தான். நிதீயே உருவான கடவுள் இயேசு கிறிஸ்துவாக இந்த உலகத்தில் பிறந்து நம்மைப் பாவத்தில் இருந்து விடுவிக்கத் தேவையான அனைத்தையும் செய்து முடித்து உயிர்த்தெழுந்து இப்போது தொடர்ந்தும் கடவுளாக இருந்து வருகிறார். யாரால், எந்த மனிதனால் இயேசு கிறிஸ்து செய்ததை செய்திருக்க முடியும்?

இப்போது தெரிகிறதா, நீங்கள் உங்களுடைய பாவத்தில் இருந்து விடுதலை அடைந்து கடவுளுக்குப் பிரியமான வாழ்க்கையை அவருக்காக வாழ இயேசு வழி ஏற்படுத்தித் தந்திருக்கிறார். வாழ்க்கையில் எந்தக் கஷ்டமும் துன்பமும் வந்தாலும், அதையெல்லாம் சுமந்து உண்மையான சந்தோஷத்தோடும், மனச்சமாதானத்தோடும் நீதியான வாழ்க்கையை நீங்கள் வாழ அவர் வழியேற்படுத்தியிருக்கிறார். நீங்கள் செய்யவேண்டியது என்ன தெரியுமா? உங்களுடைய பாவத்துக்கு மன்னிப்புப்பெற, அதிலிருந்து விடுதலை அடைய, கடவுளாகிய இயேசு கிறிஸ்துவை முழுமனத்தோடும், உண்மையோடும் உங்களுடைய ஆண்டவராக நீங்கள் விசுவாசிக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது இயேசுவின் நீதியை நீங்கள் அடைந்து கடவுள் உங்களை அன்று முதல் நீதியானவனாகப் பார்ப்பார். நீதியும், உண்மையுமுள்ள வாழ்க்கையை அதன்பிறகு நீங்கள் வாழ ஆரம்பிப்பீர்கள். ‘என்னிடம் வருகிறவனை நான் புறம்பே தள்ளிவிடுவதில்லை’ என்று இயேசு சொல்லியிருக்கிறார் (யோவான் 6:36). ‘தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்’ என்று வேதம் சொல்லுகிறது (யோவான் 3:16). இயேசு கிறிஸ்துவை உங்களுடைய பாவமன்னிப்புக்காகவும், விடுதலைக்காகவும் விசுவாசிப்பதைத் தவிர கடவுள் உங்களிடம் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை. ‘நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற செயலாயிருக்கிறது’ என்று வேதம் சொல்லுகிறது (யோவான் 6:29)

சென்னையைச் சூழ்ந்திருக்கும் வெள்ளத்திற்கும், உலகத்தில் இன்று நடந்து வரும் தீவிரவாதச் செயல்களுக்கும், சமுதாயத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலைக்கும், பக்கத்தில் இருப்பவனை அழித்துத் தான் வளரப்பார்க்கும் இருதயமற்ற மனித செயல்களுக்கும், பொறுத்துப்போய் சமாதானத்துடன் சொந்த நாட்டு மக்களோடு வாழமுடியாதிருக்கும் தன்மைக்கும் காரணம் நம்மை ஆட்டிப்படைத்து சீரழித்து வரும் பாவமே. அதிலிருந்து விடுதலை தரக்கூடியவர் இயேசு மட்டுமே. இன்றே இப்போதே அவரை உங்களுடைய பாவநிவாரணத்துக்காக விசுவாசியுங்கள்.

பவுல் சொல்லுகிறார், ‘இயேசுவை உன் வாயினாலே அறிக்கையிட்டு . . . உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் (ரோமர் 10:9). இயேசுவே சொல்லுகிறார், ‘நான் உலகத்துக்கு ஒளியாக இருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவன் இருளில் நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்’ (யோவான் 8:12). காலத்தை வீணாக்காமல், சாக்குப்போக்குச் சொல்லி உங்கள் பாவத்தில் தொடர்ந்திராமல், கடவுளின் அழைப்புக்குத் தலைசாய்த்து அவர் உங்களுக்கு தந்திருக்கும் நல்ல செய்தியை நம்புங்கள். இயேசு உங்களுக்குப் பாவவிடுதலை தந்து பரலோகத்துக்குரியவனாக்குவார்.

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 28 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s