தேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று

Lee kuan yewசமீபத்தில் மூன்று நாடுகளுக்குப் போகும் வழியில் சிங்கப்பூர் போயிருந்தேன். சிங்கப்பூரைப்பற்றி ஏற்கனவே இந்தப் பக்கத்தில் கடந்த வருடம் எழுதியிருந்தேன். சிங்கப்பூரின் வளர்ச்சி என்னை எப்போதுமே பிரமிக்க வைத்திருக்கிறது. நியூசிலாந்தைவிட ஒரு மில்லியன் அதிக ஜனத்தொகை. ஒரு சிறு நகரத்தின் அளவேயுள்ள, சிங்கப்பூரைப்போல ஒன்றரை மடங்கு அளவுள்ள நிலப்பரப்பை ஆக்லாந்து நகருக்குள் அடக்கிவிடலாம். இத்தனைச் சிறிய நாடு வளர்ச்சியடைந்த நாடாக எப்படி மாறியது என்பதை விளக்கும் அநேக நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இந்நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டு அதன் எதிர்காலத்தையே மாற்றியமைத்த ஒரே மனிதர் அதன் முன்னால் பிரதமரும், தேசபிதா என்று அழைக்கப்படுகிறவருமான லீ குவான் யூ. முப்பது வருடங்கள் பதவியில் இருந்திருக்கும் லீ தனது 91ம் வயதில் மார்ச் 23ம் தேதி மரணமானார்.

தேசபிதா லீ முரண்பாடுகள் கொண்ட மனிதர். அவரிடம் குறைகள் இல்லாமல் இல்லை. அவருடைய அரசியல் கருத்துக்கள் எல்லோருக்கும் ஏற்புடையதல்ல. தனது அரசியல் எதிரிகளை அவர் வளரவிடுவதில்லை. முக்கியமாக தனிமனித சுதந்திரத்தைப்பற்றிய அவருடைய கருத்துக்கள் விவாதத்துக்குரியவை. இத்தனையும் இருந்தும் தன்னுடைய நாட்டை அவர் இந்தளவுக்கு உயர்த்தியிருப்பது எப்படி என்று கேட்காமல் இருக்கமுடியாது. லீயின் அரசியல், சமூக, பொருளாதாரக் கோட்பாடுகளே இதற்குக் காரணம். அவற்றை இன்றைக்கு பல நாடுகளும் ஆராய்ந்து பின்பற்ற முயற்சி செய்கின்றன என்பது பகிரங்கமான செய்தி. பிரிட்டிஷ் ஆட்சிக்குப்பிறகு 1963ல் சிங்கப்பூர் மலேசியாவின் ஒருபகுதியாக இருந்தது. லீயின் கொள்கைகள் பிடிக்காமல் மலேசியா இரண்டு வருடங்களுக்குப் பிறகு அதைத் தனிநாடாகக் கழற்றிவிட்டது. நாட்டின் பிரதமராக இருந்த லீ பெரிய சவால்களைச் சந்திக்க நேர்ந்தது. சிங்கப்பூரைப் பிரமிக்கத்தக்களவுக்கு வளர்ச்சியடையச் செய்ய அவர் கொள்கைகளைத் தீட்டினார். வளர்ச்சிக்கு பொருளாதாரத்திட்டங்கள் மட்டும்போதாது அதற்கு சமுதாய மாற்றங்களும் தேவை என்று லீ உணர்ந்தார். தன்னுடைய மக்கள் தியாகம் செய்ய முன்வந்தால் மட்டுமே தன் திட்டங்கள் நிறைவேறி நாடு முன்னேற முடியும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். நாட்டு மக்களின் சுதந்திரத்துக்கு லீ கட்டுப்பாடு விதித்தார். அதைச் செய்யாமல் சிங்கப்பூர் வளரமுடியாது என்பது அவருடைய உறுதியான கருத்து. தெருவில் அழுக்குப்போடுவதோ, எச்சில் துப்புவதோ, சிறுநீர் கழிப்பதோ சிங்கப்பூரில் பெருங்கட்டணத்தைச் செலுத்த வேண்டிய குற்றம். சில பெரிய குற்றங்களுக்கு பிரம்படியும், கொலைத்தண்டனையும் உண்டு. சமுதாய வளர்ச்சிக்காக ஒழுங்கைக் கடைப்பிடித்து தனிமனிதன் சில விஷயங்களைத் தியாகஞ்செய்தாக வேண்டுமென்பது லீயின் நம்பிக்கையாக இருந்தது.

ஏனையோர் சிந்தித்துப் பார்த்திராத, செய்ய முன்வராத திட்டங்களையெல்லாம் லீ தீட்டினார். அவற்றை நிறைவேற்றும் வழியில் ஒரே கட்சி ஆட்சிமுறையையும், பாராளுமன்ற அதிகாரத்தையும் அரசியலில் கொண்டுவந்தார். இது ஜனநாயகம் அல்ல என்று ஜனநாயகவாதிகள் குறைசொல்லுவார்கள். லீயைப் பொறுத்தளவில் தன் சமுதாயமும், நாடும் உயர வேண்டும் என்பது மட்டுமே முக்கியம், ஜனநாயகத்தையும் அதற்கேற்றவகையில் அவர் மாற்றி அமைத்தார். தனி மனிதனைவிட சமூகத்தையே பெரிதாகக் கருதினார் லீ. இனங்களுக்கிடையில் நல்லெண்ணம் இருப்பதையும் வற்புறுத்தினார். இன, மத வேறுபாடுகளுக்கு அவர் எந்தவிதத்திலும் இடங்கொடுக்கவில்லை. சிறந்த அறிவுஜீவியான லீ அத்தகையவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். நாட்டின் வளர்ச்சி அவர்கள் கையில் இருப்பதாக நம்பினார். அறிவுஜீவிகளை அறிவுஜீவிகள் திருமணம் செய்வதை ஊக்குவித்தார். அறிவுஜீவிகள் சமுதாயத்தில் பெருகுவதை அவர் விரும்பினார். நேர்மையின்மையையும், ஊழலையும் அடியோடு வெறுத்தார். குடும்பக்கட்டுப்பாட்டை வற்புறுத்தினார். லீயின் அதிரடித் திட்டங்களும், சமூக, பொருளாதாரக் கோட்பாடுகளும், நிர்வாகத் திறமையும் இன்றைக்கு சிங்கப்பூரை முன்னணி நாடுகளில் ஒன்றாக உயர்த்தியிருக்கின்றன. வியாபாரம், தொழில்துறை, விமானத்துறை, கப்பல்துறை, ஏற்றுமதி என்று எல்லாத்துறைகளிலும் சிங்கப்பூர் வளர்ச்சியுற்று கட்டுக்கோப்புள்ள நாடாக வளர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு லீ குவான் யூதான் முக்கிய காரணம். இதை எவராலும் மறுக்கமுடியாது. லீ அடைந்த முன்னேற்றங்களை வேறு எவரும் அடைவதும் சுலபமல்ல. சிங்கப்பூருக்குக் கிடைத்த அருமையான தேசபிதா லீ என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தனிமனிதனொருவர் இந்தளவுக்கு ஒரு நாட்டை மாற்றியிருப்பது அதிசயந்தான். மதநல்லுணர்வுக்கு நாட்டில் ஊக்கமளித்த லீ இறையனுபவத்தில் எந்த நாட்டமும் காட்டவில்லை. அறிவும், திட்டங்களும், தேச வளர்ச்சியும் மட்டுமே அவருக்கு மதமாகத் தெரிந்தன. ஆப்பிள் கம்பியூட்டர் தயாரித்த ஸ்டீவ் ஜோப்பும் இதேபோல தொழில்நுட்பத்தை மட்டுமே கடவுளாகக் கருதி வாழ்ந்திருந்தார். பாவநிலையிலிருக்கும் மனிதன் படைத்தவர் தந்திருக்கும் அனைத்து ஆற்றல்களைப் பயன்படுத்தி எந்தளவுக்கு உயரமுடியும், ஒரு தேசத்தையே உயர்த்த முடியும் என்பதற்கு லீ குவான் யூ நல்ல உதாரணம். கடவுளின் அளப்பரிய பொதுவான கிருபையை ஆழமாக அனுபவித்த லீ அவரை அறிந்துகொள்ள எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. கடவுளை எந்தவிதத்திலும் அறிந்துகொள்ள முடியாது என்று அவர் நம்பியிருந்தார். மரணம் மட்டும் இறுதிக்காலத்தில் அவரை ஓரளவுக்கு சிந்திக்க வைத்திருக்கிறது. சகல வசதிகளையும் ஒன்று தவறாமல் இந்த உலகத்தில் அனுபவித்தாலும், சக மனிதனின் சந்தோஷத்துக்காக உயிரையே கொடுத்து வாழ்ந்தாலும் கடவுளில்லாத வாழ்க்கை மரணத்திற்குப் பிறகு மனிதனுக்கு நல்வாழ்வை அளிக்காது. தேசத்தை உயர்த்திய இந்த தேசபிதா தேவனில்லாமலேயே மறைந்துவிட்டார்.

சிறகிழந்த சிட்டுக்குருவி

சமீபத்தில் நான் விஜயம் செய்த இன்னொரு நாட்டில் அந்நாட்டுப் பூர்வீக மக்கள் கிறிஸ்தவர்களாவதற்குப் பெருந்தடை இருக்கிறது. நண்பரொருவர் வீட்டில் அகஸ்மாத்தாக சமீனாவைச் சந்திக்க நேர்ந்தது. அறிமுகம் செய்துகொண்டபோது சமீனா கிறிஸ்தவர் என்று அறிந்தேன். கிறிஸ்துவை எப்படி அறிந்துகொண்டீர்கள் என்று கேட்டேன். இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்த சமீனா கிறிஸ்தவ வேதத்தை ஆராய ஆரம்பித்தாராம். மேலும் மேலும் வேதத்தை வாசித்த அவருக்கு ஜீவனுள்ள தேவனான கர்த்தர் இயேசுவாக சந்தேகமில்லாமல் தெரிய ஆரம்பித்தார். வேதம் அவருக்கு விடுதலை தந்தது. ஆவியின் கிரியையால் கிறிஸ்துவை விசுவாசித்த சமீனா உடனடியாகப் பிரச்சனைகளைச் சந்திக்க நேர்ந்து ஒருவாரம் சிறையில் இருந்திருக்கிறார். தன் விசுவாசத்திற்காக ஆறுவருடங்களுக்கு வழக்கைச் சந்தித்து நீதிமன்றம் போயிருக்கிறார். அவருக்காக வாதாட அநேக வக்கீல்கள் முன்வராத நிலையில் ஒரு பெண் வக்கீல் மட்டும் உதவ முன் வந்தார். தகுந்த சாட்சியங்கள் இல்லாததால் இறுதியில் வழக்கு பிசுபிசுத்திருக்கிறது. இருந்தும் அவர் மீது அரச அதிகாரிகள் ஒரு கண்ணை வைத்திருக்கிறார்களாம். சொந்தநாட்டில் குயிலாகக் கூவிப் பறந்து வாழமுடியாதிருந்தபோதும் தெளிவான, ஆழமான விசுவாசத்தைக் கொண்டிருந்து கர்த்தரின் இறையாண்மையை நம்பி வாழ்ந்துகொண்டிருக்கும் அந்தச் சகோதரி கர்த்தருக்காகப் பணிசெய்யவும், வாழவும் தீர்மானித்திருக்கிறார். சுதந்திரக் காற்றை இஷ்டத்துக்கு சுவாசித்துக்கொண்டிருக்கும் நாம் கிறிஸ்துவுக்காக இந்தப் பெண்ணளவுக்கு வாஞ்சையும், வைராக்கியமும் கொண்டிருக்கிறோமா, பணி செய்கிறோமா? என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. சிறகிழந்த சிட்டுக்குருவியாகத் தன் நாட்டில் சமீனா இருந்தும் கிறிஸ்து அளிக்கும் ஆவிக்குரிய சுதந்திரத்தை அளவில்லாமல் அருந்தி வருகிறார். அந்தச் சகோதரியோடு கழித்த அந்த மாலைப்பொழுது மிகவும் இனிமையானதாக இருந்தது.

வீசாத விடுதலைக் காற்று

சமீபத்தில் ஸ்ரீலங்காவில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து புதிய அதிபரோடு, புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. அங்குபோனபோது அந்த மாற்றங்கள் தமிழர்களுக்கு என்ன செய்திருக்கிறது என்று அறிந்துகொள்ள ஆசைப்பட்டேன். அதுபற்றி சிலரைக் கேட்டபோது அவர்கள் பெரிதாக ஒன்றுமில்லையென்றே கூறினார்கள். பேச்சில் விரக்தி இருந்தது. ஆர்வத்தையும் நம்பிக்கையையும் அதில் என்னால் அவதானிக்க முடியவில்லை. யாரையும் நம்ப முடியாது என்ற வார்த்தைகளையே நான் கேட்க முடிந்தது. நம்ப முடிகிற அளவுக்கு பெரிதாக மாற்றங்கள் ஏற்படாதவரை எவரும் எதையும் நம்பப்போவதில்லை என்பது தெரிந்தது. விமான நிலையத்தில் இருந்து என்னை அழைத்துச்சென்ற சிங்களவரான கார் ஓட்டுனரை அதுபற்றிக் கேட்டேன். மகிந்த ராஜபக்ச பதவியிழந்தது அவருக்கு சந்தோஷத்தை அளிக்கவில்லை என்பது பேச்சில் தெரிந்தது. அரசு மாறியது எல்லோருக்குமே ஆச்சரியத்தையும், பலருக்கு அதிர்ச்சியையும் அளித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ராஜபக்ச போய்விட்டாலும் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து எங்கும் கண்ணில் தெரியும்படி இருக்கிறார்கள். விலைவாசி பெரியளவுக்கு இறங்கியதாகத் தெரியவில்லை. புதிய அதிபரும், புதிய அரசும் உடனடியாக மக்கள் எதிர்பார்க்கும் பெரிய மாற்றங்களைக் கொண்டுவராவிட்டால் அவர்களும் இருந்த இடந்தெரியாமல் போய்விடலாம். ஈழத்தமிழர்களுக்கு விடுதலைக் காற்று இன்னும் வீச ஆரம்பிக்கவில்லை.

TCஇனிய போதக நண்பரொருவரின் அன்பு அழைப்பையேற்று பத்துக்கட்டளைகளைகளின் முதல் நான்கு கட்டளைகளைப்பற்றிப் பன்னிரெண்டு விரிவுரைகள் அளிப்பதற்காகவே ஸ்ரீலங்கா சென்றிருந்தேன். நண்பரின் சபையின் ஓய்வுநாள் ஆராதனையில் பங்குபெற்ற பிறகு செவ்வாயன்று ஆரம்பமாகிய மூன்று நாள் கூட்டங்களில் செய்திகளைக் கொடுத்தேன். பங்குகொண்டவர்கள் ஆர்வத்தோடு கடைசிவரை ஒவ்வொரு நாளும் செய்திகளைக் கேட்டு ஆசீர்வாதமடைந்தார்கள். ஆழமான இறையியல் போதனைகளைப் புரிந்துகொள்ள அவர்களால் முடியுமோ என்ற ஆதங்கம் இருந்தது. ஆனால், ஒரு பிரச்சனையும் இருக்கவில்லை என்று எல்லோருமே சொன்னார்கள். செய்திகள்பற்றி அநேக கேள்விகளும் கேட்டார்கள்.

கர்த்தரின் கட்டளைகளைப்பற்றி ஆழமான ஞானமில்லாதவர்களாக பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அங்கு இருப்பதாக அறிந்தேன். அவைபற்றி அதிகம் சட்டைசெய்யத் தேவையில்லை என்ற மனப்பான்மையே அநேகருடைய உளக்கருத்தாக இருப்பதாகச் சொன்னார்கள். இவ்வகையிலேயே மேலைத்தேய நாடுகளிலும், கீழைத்தேய நாடுகளிலும் இன்று கிறிஸ்தவம் இருந்து வருகிறது. இதெல்லாம் எதற்கு, சுவிசேஷத்தை மட்டும் சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கவேண்டும் என்ற மனநிலையோடு பெரும்பாலான ஊழியங்கள் நடந்து வருகின்றன. ஆத்துமாக்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகிறது. வேதத்தை அடிப்படையாகக் கொண்டு, அதை உள்ளது உள்ளபடியாகத் தெளிவாக முரண்பாடின்றிப் போதித்து ஆத்துமாக்களைப் போஷித்து வளர்க்கும் ஊழியத்தில் நாட்டமிருப்பவர்கள் தொகை அதிகமில்லை என்பது தெரிந்தது. அத்தகைய நாட்டமிருப்பவர்களுக்கும் சத்தியத்தை சத்தியமாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளும் அருகிக் காணப்படுவதை உணர முடிந்தது.

இயேசுவின் வார்த்தைகள் எத்தனைப் பொருள்பொதிந்தவை – ‘அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால் அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்’ (மத்தேயு 9:37-38). இந்த வார்த்தைகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேவனை அறிந்துகொள்ளவும், இரட்சிப்பை அடையவும் ஆத்துமாக்கள் தயாராக எங்கும் இருக்கிறார்கள் என்பதையே இயேசு ‘அறுப்பு மிகுதி’ என்ற வார்த்தைகள் மூலம் விளக்குகிறார். ஆனால் வேலையாட்களோ கொஞ்சமாக இருக்கிறார்கள் என்கிறார். அதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? சுயலாபத்திற்காகவும், பெயர் தேடிக்கொள்ளுவதற்காகவும், கூட்டத்தைச் சேர்த்துக்கொள்ளுவதற்காகவும் அநேகர் இருக்கிறார்கள் என்பது இயேசுவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ஆனால் மெய்யான மனந்திரும்புதலை அடைந்து, பரிசுத்தமாகத் தாழ்மையோடு வாழ்ந்து, வேதப்பிரகாரமான சபைவாழ்க்கை அனுபம்பெற்று, கிறிஸ்துவால் அழைக்கப்பட்டு, சத்தியத்தைத் தெளிவாக சந்தேகமறக் கற்றுத்தேர்ந்து, வேதப்பிரசங்க வரமிருந்து, சபையால் அங்கீகரிக்கப்பட்டு சபை அமைக்க அனுப்பப்பட்டு, பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் ஆத்துமாக்களைப் பண ஆசையில்லாமல் வார்த்தையின் மூலமாகவும், போதகக் கவனிப்பின் மூலமாகவும் ஆத்தும ஆதாயம் செய்து வளர்த்து வரக்கூடிய, அப்போஸ்தலர்களைப் போன்ற வேலையாட்கள் கொஞ்சம் என்பதுதான் இயேசுவின் வார்த்தைகளின் மெய்பொருள். அது அவருக்கே அன்று நன்றாகத் தெரிந்திருந்தது. அது எத்தனை உண்மையாக இருக்கிறது இந்த நாட்டில். நான் போயிருந்த நாட்களில் மோகன் சி. லாசரஸும் இன்னொரு இடத்தில் கூட்டம் நடத்திக்கொண்டிருந்தார் என்று கேள்விப்பட்டேன். அத்தகைய வேலையாட்களுக்குத்தான் இன்று பஞ்சம் இல்லாமல் இருக்கிறது என்று இயேசு விளக்குகிறார்.

பத்துக்கட்டளைகள்பற்றி நான் செய்தியளித்த கூட்டங்கள் காரணமாக அநேக தமிழ் இலக்கிய நூல்களை நான் வரவழைத்திருந்தேன். ஆத்துமாக்கள் ஆர்வத்தோடு அவற்றை வாங்கினார்கள். வினாவிடைப் போதனைகள், திருச்சபை வரலாறு, தாம்பத்திய உறவில் நெருக்கம் (அலன் டன்), ஜோன் ஓவன் போன்ற நூல்களில் அதிக ஆர்வம் காட்டினார்கள். கண்ணுக்கெட்டாத தூரம் காணப்படும் பெருங்கடல் போன்ற கிறிஸ்தவ இலக்கியப் பஞ்சகாலத்தில் இந்தத் தமிழிலக்கியங்கள் குசேலின் கையில் இருந்த அவல் பிடிப்போலத்தான். இருந்தாலும் அவையாவது இருக்கின்றனவே இந்த மக்களுக்கு சத்தியத்தை விளக்கிப்போதிக்க. திருமறைத்தீபத்தை ஆர்வத்தோடு பலவருடங்களாக வாசித்து வருகின்ற பலரை அங்கே சந்தித்தேன். இவர்களுக்கெல்லாம் கிடைக்காதவற்றைக் கொடுத்துவர முடிகிறதே என்று கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன். இன்னும் எழுதுங்கள், இதைப்பற்றி எழுதுங்கள் என்று விஷயங்களைச் சிலர் தந்தார்கள். பத்துக்கட்டளைகளை நூலாக சீக்கிரமே வெளியிட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள் ஒரு சிலர். அதைச் செய்வதையே உடனடிப்பணியாகக் கொண்டிருக்கிறேன்.

John-J-Murrayவீடு திரும்பியவுடன் ஸ்கொட்லாந்தில் ‘தொடர்கின்ற சுயாதீன திருச்சபைப்’ பிரிவின் போதகர்களில் ஒருவராகிய ஜோன் ஜே. மரேயின் சமீபத்திய ஆக்கமொன்றை வாசிக்க நேர்ந்தது. ‘நல்ல நூல்களை வாசித்து நன்மையடைவது எப்படி’ என்பது அதன் தலைப்பு. அந்த ஆக்கத்தில் மரே தற்காலத்து சுவிசேஷ கிறிஸ்தவத்தின் மூன்று குறைகளை அடையாளங்காட்டுகிறார். (1) இறையியல் போதனைகளை அறியாமலிருப்பது – சபைத் தலைவர்கள்கூட இறையியல் நுண்ணுணர்வில்லாதவர்களாக இருப்பது பேராபத்து. (2) ஆழமான கிறிஸ்தவ அனுபவத்தைக் கொண்டிராமலிருப்பது – கிறிஸ்து பெற்றுத்தந்திருக்கும் பலன்களை அடைந்திருக்கிறோம் என்று சாட்சியமளித்தாலும் கிறிஸ்துவால் ஏற்படும் தீவிரமாற்றங்களை உறவுகளிலும், வாழ்க்கையிலும் கொண்டிராமல் இருக்கும் ஒருவகைக் கிறிஸ்தவம் இருந்து வருகிறது. (3) கிறிஸ்தவ சபை வரலாற்றை அறிந்துகொள்வதைத் தவிர்ப்பது – லொயிட் ஜோன்ஸ் ஒருதடவை சொன்னதுபோல் அநேகர் இன்று டி. எல் மூடியோடேயே சுவிசேஷ கிறிஸ்தவம் ஆரம்பித்ததாகவும், பெந்தகொஸ்தே ஆசீர்வாதங்கள் இருபதாம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு சபை வரலாறு தெரிந்திராத சமூகமாக தற்கால கிறிஸ்தவம் இருக்கிறது என்கிறார் மரே. இந்தக் கருத்துக்களை ஜோன் ஜே. மரே முக்கியமாக மேலைத்தேய கிறிஸ்தவத்தை அவதானித்து எழுதியிருந்தாலும் இதையெல்லாம்விடக் கடைமோசமான நிலையிலேயே கீழைத்தேச கிறிஸ்தவம் இருக்கிறது என்பது நமக்குத் தெரிந்ததே.

இந்தக் குறைகளைத்தீர்க்க நல்ல நூல்களை வாசிக்கும்படி மரே தன் ஆக்கத்தில் அறிவுறுத்துகிறார். அதுவே இந்த நோய்க்கு மருந்தாக இருக்கும் என்கிறார். அறியாமையே போலிப்போதனைகள் எழுவதற்கும், கண்மூடித்தனமான நம்பிக்கைகள் உருவாவதற்கும் விதைநிலமாக இருக்கின்றது என்பதை சீர்திருத்தவாதிகள் அறிந்திருந்தார்கள் என்கிறார். அதனால்தான் மார்டின் லூத்தரும், ஜோன் கல்வினும், ஜோன் நொக்ஸும் கிறிஸ்தவ விசுவாசத்தைப் பற்றிய ஆக்கங்களை அள்ளி வழங்கினார்களாம். சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன் பெரியவர்களும் எழுதிய நல்ல நூல்களை வாசிக்க ஆரம்பிக்கிறவர்கள் பெருகிறபோதே மெய்யானதும், ஆழமானதுமான ஆவிக்குரிய கிறிஸ்தவ அனுபவத்தைக் கொண்டிருப்பவர்களை அடையாளங்கண்டுகொள்ள முடியும் என்கிறார் ஜோன் ஜே. மரே. தனிப்பட்டவிதத்தில் நம் வாழ்க்கையிலும், சபையாகவும் நாம் எது இல்லாமல் இன்றைக்கு தொடர்ந்திருந்து வருகிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் திருச்சபை வரலாற்று அறிவு நமக்கிருக்க வேண்டுமென்கிறார் மரே. கிணற்றுத்தவளை எப்போதும் தான் நினைப்பதும் செய்வதும் மட்டுமே சரி என்று எண்ணி வாழ்ந்து வரும். திருச்சபை வரலாற்றைப் படிக்கும்போதே நாம் எவ்வளவு தாழ்ந்த நிலையிலிருக்கிறோம் என்றும், எந்தளவுக்கு ஆவிக்குரிய வாழ்க்கையில் உயர வேண்டும் என்றும் அறிந்துகொள்ள முடியும். பெரியவர் ஆகஸ்தீனுடன் நாமும் சேர்ந்து, ‘நூலை எடுத்து வாசி’ என்ற அறைகூவலுக்கு செவிகொடுப்போம் என்கிறார் மரே. இந்த ஆக்கத்தில் ஜோன் ஜே. மரே சொல்லியிருக்கும் அனைத்திற்கும் நான் ஆணித்தரமாக ‘ஆமென்’ சொல்லுவேன்.

ஈழத்தமிழர்களுக்கு அரசியல் வாழ்க்கையிலும், பொதுவாழ்க்கையிலும் மட்டுமல்ல விடுதலைக்காற்று வீசாமலிருப்பது, கிறிஸ்தவ வாழ்க்கையிலும், சுவிசேஷப் பணியிலுங்கூடத்தான்.

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 28 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s