முழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .

Reformed Faith-3dபன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு ‘சீர்திருத்த விசுவாசம்’ என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதி ஸ்ரீ லங்காவில் வெளியிட்டிருந்தேன். அது தீர்ந்துவிட்டிருந்ததால் அதைத் திருத்திய பதிப்பாக மறுபடியும் தமிழகத்தில் ‘சீர்திருத்த விசுவாசமும் ஐங்கோட்பாடுகளும்’ என்ற தலைப்பில் 2014ல் சென்னையைச் சார்ந்த சீர்திருத்த வெளியீடுகள் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டிருந்தேன். இந்நூலில் சீர்திருத்த விசுவாசம் என்பது என்ன என்பதை விளக்கி அதற்குப் பிறகு கல்வினித்துவ ஐம்போதனைகளை முறையாக, சுருக்கமாக விளக்கியிருந்தேன். இந்த நூலை முதன் முறையாக 2003ல் எழுதுவதற்கு முக்கிய காரணமிருந்தது. நம்மினத்தில் கல்வினித்துவ ஐம்போதனைகளில் (இதற்கு இன்னொரு பெயர், கிருபையின் போதனைகள்) ஆர்வம்காட்டி வருகிறவர்கள் கடந்த இருபத்தைந்து வருடங்களில் அதிகரித்து வந்திருக்கிறார்கள். இருந்தபோதும் அவர்களில் அநேகர் கல்வினித்துவ ஐம்போதனைகளை மட்டுமே சீர்திருத்த விசுவாசமாகக் கருதி வந்திருக்கிறார்கள். அந்தத் தவறைச் சுட்டிக்காட்டி இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை சுருக்கமாக விளக்குவதே என்நூலின் நோக்கமாக இருந்தது. இதன் மூலம் புதிதாக கிருபையின் போதனைகளை அறிந்துகொள்ளுகிறவர்களுக்கு துணை செய்வதே என் இலக்காக இருந்தது.

கிருபையின் போதனைகளையும் சீர்திருத்த விசுவாசத்தையும் முழுமையாகப் புரிந்துகொள்ளுவதற்கு ஓரளவுக்கு சீர்திருத்த திருச்சபை வரலாறும், வரலாற்று இறையியலும் தெரிந்திருக்க வேண்டும். நம்மினத்தில் அத்தகைய வரலாற்றோடு தொடர்புடைய இறையியல் ஞானத்தைக் கொடுத்து வரும் திருச்சபைகள் அரிது. கிறிஸ்தவம் பெரிதும் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் இயக்கங்களினதும், கூடில்லாக் குருவிகளான கிறிஸ்தவ நிறுவனங்களினதும் ஆர்மீனியப் போதனைகளின் செல்வாக்குக்குட்பட்டு இயங்கி வருவதால் பொதுவாக கிறிஸ்தவப் பார்வை நம்மினத்தில் சீர்திருத்த விசுவாசத்தை ஒத்ததாக அமையவில்லை. இதன் காரணமாக புதிதாக கிருபையின் போதனைகளை அறிந்துகொள்ளுகிறவர்கள் இரண்டுவித பாதிப்புக்குள்ளாகிறார்கள். (1) சிலர் ஐம்போதனைகளை தங்களுக்கேற்றவிதத்தில் புரிந்துகொண்டு அதில் நான்கை மட்டும் ஏற்றுக்கொண்டு ஒன்றை (குறிப்பிட்டவர்களுக்கான பரிகாரப்பலியை) நிராகரித்துவிடுகிறார்கள். வேறு சிலர் மூன்றை மட்டும் ஏற்றுக்கொண்டு இரண்டை (நிபந்தனையற்ற முன்குறித்தல், குறிப்பிட்டவர்களுக்கான பரிகாரப்பலி) நிராகரித்து விடுகிறார்கள். இந்தவிதமாக மனம்போன போக்கில் ஆளுக்காள் ஐம்போதனைகளில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என்பது அவர்களுக்குத் தெரியாமலிருக்கிறது. அதற்குத் திருச்சபை வரலாறும், வரலாற்று இறையியல் ஞானமும் இல்லாதது முக்கிய காரணம். (2) அடுத்ததாக, கல்வினின் ஐம்போதனைகளை மறுப்பில்லாமல் ஆர்வத்தோடு ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் அதை மட்டுமே சீர்திருத்த விசுவாசமாகக் கருதி அதற்குமேல் போக இருதயமில்லாதவர்களாக இருந்து வருகிறார்கள். இதற்குக் காரணம், இவர்கள் சீர்திருத்த திருச்சபை வாழ்க்கை அனுபவத்தை வாழ்வில் அடைந்திராததும், சீர்திருத்த விசுவாச அறிக்கை, வினாவிடைப்போதனைகளில் பரிச்சயமில்லாதிருப்பதும், திருச்சபை அமைப்பு, பணிகள், ஆராதனை, கிறிஸ்தவ வாழ்க்கை என்பதெல்லாம் சமகால சமுதாயப் பண்பாட்டுக்கேற்ப அமைந்திருக்க வேண்டும் என்றும் நினைப்பதுதான். இந்த விஷயங்களில் வேதம் தெளிவான போதனைகளை அளித்திருக்கிறது என்பதை இவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அல்லது அறிந்து நடைமுறைப்படுத்த விரும்பாதிருக்கிறார்கள். இந்த இருசாராருக்கும், புதிதாக கிருபையின் போதனைகளை அறிந்துகொள்ளுகிறவர்களுக்கும் துணைசெய்யும் வகையிலேயே என் நூலை வெளியிட்டேன்.

என்நூலில் நான், முழுமையான சீர்திருத்த விசுவாசம் தொடர்கின்ற சீர்திருத்தத்தை திருச்சபையில் எதிர்பார்க்கின்றது என்பதை வலியுறுத்தி, அத்தகைய சீர்திருத்தத்திற்கு அவசியமான நான்கு தூண்களை சுருக்கமாக விளக்கியிருந்தேன். (1) கர்த்தரின் வேதத்தை அதிகாரமாகக் கொண்டு எல்லா விஷயத்திலும் அதன் போதனைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். (2) திருச்சபைக்கு முக்கிய இடத்தை அளித்து வேதம் விளக்கும் விதத்தில் அதன் அமைப்பும், பணிகளும் அமைய வேண்டும். (3) கர்த்தரின் ஆராதனை அவருடைய வார்த்தை விளக்கும் விதத்தில் திருச்சபையில் அமைய வேண்டும். (4) கிறிஸ்தவர்கள் பத்துக்கட்டளைகளைப் பின்பற்றி அன்றாட வாழ்க்கையை வாழ வேண்டும். இவையே நான் விளக்கிய நான்கு தூண்கள். இவற்றோடு இன்னும் சிலவற்றைச் சேர்த்திருந்திருக்க முடியும்; இந்த நான்கு தூண்களை மேலும் விரிவாக விளக்கி எழுதியிருந்திருக்கவும் முடியும். இருந்தாலும் இதற்கு மேல் விளக்கி எழுதி எவரும் புரிந்துகொள்ள முடியாதவகையில் நூல் இருந்துவிடக்கூடாது என்ற காரணத்தினால் சீர்திருத்த விசுவாசத்திற்கு ஓர் அறிமுக நூலாக மட்டுமே என்நூலை எழுதியிருந்தேன். (‘சீர்திருத்த விசுவாசமும் கிருபையின் கோட்பாடுகளும்’ என்ற நூலை சென்னை முகவரியில் வாசகர்கள் பெற்றுக்கொள்ளலாம்).

கிருபையின் போதனைகள் (ஐம்போதனைகள்) மட்டுமே சீர்திருத்த விசுவாசமாகிவிடாது என்பதை சீர்திருத்த இறையியலறிஞர்கள் விளக்காமலில்லை. ஜே. ஐ. பெக்கர் தான் ஜோன் ஓவனின் The Death of Death in the Death of Christ என்ற நூலுக்கு அளித்திருந்த அருமையான அறிமுக உரையில் இதை விளக்கியிருக்கிறார். ஆர். சி. ஸ்பிரவுலும் இந்த உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார். ஐம்போதனைகளையும், சீர்திருத்த விசுவாசத்தையும் விளக்கும் நூல்கள் ஆங்கிலத்தில் அநேகம் இருந்தபோதும், ஐம்போதனைகள் மட்டுமே சீர்திருத்த விசுவாசமாகிவிடாது என்பதைக் குறிப்பிட்டு விளக்கும் நூல்களை நான் காணவில்லை. அதற்குக் காரணமிருக்கிறது. மேலைத்தேய நாடுகளில் சீர்திருத்த திருச்சபைகள் அனைத்தும் விசுவாச அறிக்கைகள் மற்றும் வினாவிடைப்போதனைகளின் அடிப்படையில் போதனைகளை அளித்து வந்திருப்பதால் சபையாருக்கு சீர்திருத்த விசுவாசத்தில் ஐம்போதனைகளின் பங்கு எது என்பது தெளிவாகத் தெரிந்திருக்கிறது.

அந்த நிலையில் நம்மினத்துத் திருச்சபைகள் இல்லை. கிருபையின் போதனைகளை அறிந்துகொள்ளுகிற நம்மவர்கள் கிருபையின் போதனைகளுக்கு அப்பால் போய் சீர்திருத்த விசுவாசத்தைப் பார்க்க முடியாத கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதற்கு இதுவும் முக்கிய காரணம்.

இந்த இடத்தில் (கல்வினித்துவ) ஐம்போதனைகளைப்பற்றிய முக்கியமான உண்மையை சுருக்கமாக விளக்கிவிட விரும்புகிறேன். கர்த்தரின் வழிநடத்தலால் வரலாற்றில் திருச்சபையின் இறையியல் பாதுகாப்புக்காகத் தொகுக்கப்பட்ட இந்தப் போதனைகள் (Synod of Dort, 1618), கர்த்தர் இறையாண்மையுடன் அளிக்கும் இரட்சிப்போடு தொடர்புடைய சத்தியங்களை மட்டுமே விளக்குகின்றன. இந்தவிதத்தில் இரட்சிப்பின் போதனைகளை அவை விளக்குவதற்கான காரணம் அந்தக் காலத்தில் இரட்சிப்பைப்பற்றி செயற்கையாக வேத ஆதாரமற்று உருவான ஆர்மீனியனிசமே. ஆர்மீனியனிசம் இரட்சிப்பில் மனிதனுக்குப் பங்கிருப்பதாக விளக்கி, மனிதன் தன்னைக் கர்த்தரின் துணையோடு இரட்சித்துக்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் இரட்சிப்புப்பற்றிய போதனைகளை அளித்தது. அந்தத் தவறான போதனையைத் தோலுரித்துக்காட்டி திருச்சபைகளைக் காப்பாற்றுவதற்காகவே ஐம்போதனைகள் தொகுத்தளிக்கப்பட்டன. அவை கல்வினித்துவ ஐம்போதனைகள் என்ற பெயரையும் பெற்றன. கர்த்தரின் இறையாண்மையுள்ள கிருபையின் அடிப்படையில் இரட்சிப்புப்பற்றிய உண்மைகளை இவை அணுகுவதால் இவற்றிற்கு கிருபையின் போதனைகள் என்ற பெயரும் சூட்டப்பட்டது. இதில் நாம் கவனிக்க வேண்டிய அம்சம், இந்தக் கல்வினித்துவ ஐம்போதனைகள் இரட்சிப்போடு தொடர்புடைய சத்தியங்களை மட்டுமே விளக்குகின்றன என்பதுதான். அதற்குமேல் வேதத்தில் காணப்படும் ஏனைய முக்கிய போதனைகளையெல்லாம் இது விளக்க எத்தனிக்கவில்லை.

ஜே. ஐ. பெக்கர் இதுபற்றி விளக்கியிருப்பதைக் கவனியுங்கள், ‘கல்வினிச ஐம்போதனைகளை சீர்திருத்த விசுவாசமாகக் கருதுவது முறையானதல்ல’ என்று கூறும் பெக்கர் அதற்கான காரணங்களைக் கூறத் தவறவில்லை.

சீர்திருத்த விசுவாசத்தைக் ‘கல்வினிசம்’ என்ற பெயரில் விளக்கும் பெக்கர், ‘கல்வினிசம் ஐம்போதனைகளைவிட  மிகவும் விரிவானது, அதுமுழு உலகத்தையும் அதை உருவாக்கிய சர்வவல்லவரான கர்த்தரின் பார்வையின் அளக்கின்ற போதனை’ என்கிறார். தொடர்ந்து அவர், ‘ஐம்போதனைகள் குறிப்பாக இரட்சிப்பை மட்டுமே இறையாண்மையின் அடிப்படையில் கர்த்தருடையதாகப் பார்க்கிறபோது, கல்வினிசம், அவர் படைத்த இயக்குகின்ற அனைத்தையும் இறையாண்மையின் அடிப்படையில் அணுகி அவர் தான் ஏற்கனவே திட்டமிட்டுள்ள திட்டங்கள், நோக்கங்கள் அனைத்தையும் படைப்புயிர்களுக்காகவும், தன்னுடைய திருச்சபைக்காகவும் எவ்வாறு கொண்டு நடத்துகிறார் என்று விளக்குவதாகும்’ என்கிறார். (Introduction to the Death of Death in the Death of Christ, J. I. Packer).

சீர்திருத்த விசுவாசம் இரட்சிப்பு சம்பந்தமான ஐம்போதனைகளை மட்டுமல்லாமல் அதற்கு அப்பால்போய் வேதத்தில் காணப்படும் ஏனைய முக்கிய போதனைகளையும் விளக்குகின்றது; அவற்றின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. கர்த்தரின் இறையாண்மையின் அடிப்படையில் அவருடைய வேதத்தில் தரப்பட்டிருக்கும் அனைத்துப் போதனைகளையும் நடைமுறையில் பின்பற்ற வேண்டும் என்கிறது சீர்திருத்த விசுவாசம். வேதம் போதிக்கும் திருச்சபை அமைப்பும் அதன் பணிகளும், வேதம் போதிக்கும் பத்துக்கட்டளைகளைப் பின்பற்றி வாழவேண்டியதன் அவசியம், கர்த்தர் வரையறுத்துக்காட்டியிருக்கும் வழிமுறையின்படி திருச்சபை ஆராதனை அமைய வேண்டியதன் அவசியம், அவருடைய உடன்படிக்கையின் அடிப்படையில் கிறிஸ்தவர்கள் அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்து அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற வேண்டியதன் அவசியம் போன்றவற்றையும் சீர்திருத்த விசுவாசம் வலியுறுத்துகிறது. இதன் மூலம் கல்வினித்துவ ஐம்போதனைகளை மட்டுமே சீர்திருத்த விசுவாசமாகக் கருதிவிடக்கூடாது என்பதைக் கவனத்தில் வைக்க வேண்டியது அவசியமாகிறது. ஐம்போதனைகளை ஒருவர் அறிந்து விசுவாசிப்பது அவருடைய இறையியல் சிந்தனைகளில் சீர்திருத்தத்தின் ஆரம்பமே தவிர அதுவே முடிவல்ல.

Going Beyond‘சீர்திருத்த விசுவாசமும் கிருபையின் கோட்பாடுகளும்’ என்ற என் நூலைப்பற்றியும், சீர்திருத்த விசுவாசத்தைப்பற்றிய இந்த விளக்கத்தையும் இப்போது எழுதுவதற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கலாம். அதை விளக்கத்தான் வேண்டும். என் நண்பர் ரொப் வென்சூராவை நான் 2014ல் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தபோது சீர்திருத்த விசுவாசத்தைப்பற்றிய புதிய நூலை ஆங்கிலத்தில் வெளியிடத் தயாரித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். அந்த நூல் நான் வெளியிட்ட நூலின் கருப்பொருளின் அடிப்படையில் விரிவானதாக இருக்கப்போவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அந்த நூல் இப்போது 2015ல் வெளிவந்திருக்கிறது. அதன் தலைப்பு Going Beyond the Five Points: Pursuing a More Comprehensive Reformation என்பதாகும். இதனைத் தமிழில், ‘ஐம்போதனைகளுக்கு அப்பால் போய் முழுமையான சீர்திருத்தத்தை நாடுதல்’ என்று கூறலாம். இந்நூலுக்கு ஆசிரியராக இருந்து, அறிமுகத்தை ரொப் வென்சூரா தந்திருக்கிறார். நூலுக்கான முன்னுரையை ஜேம்ஸ் வைட் அளித்திருக்கிறார். சீர்திருத்த விசுவாசத்தின் முக்கிய தூண்களாக ஐந்து அம்சங்களை இனங்காட்டி நான்குபேர் நூலை எழுதியிருக்கின்றனர். நால்வரும் எனக்கு நன்கு அறிமுகமான சீர்திருத்த பாப்திஸ்து போதகர்கள். இந்த நூலில் வந்திருக்கும் ஆக்கங்கள் ஏற்கனவே வேறு இடங்களில் வெளிவந்திருப்பவை. அவற்றை இந்நூலுக்குத் தகுந்தவிதத்தில் அவற்றை எழுதியவர்கள் அமைத்துத் தந்திருக்கிறார்கள்.

நூலின் தலைப்புகளும் அவற்றை எழுதியவர்களும்:

  1. பத்துக்கட்டளைகளும் கிறிஸ்தவனும், ரிச்சர்ட் பார்சிலஸ் (Richard Barcelos)
  2. வரையறுக்கப்பட்ட தத்துவம், சாம் வோல்டிரன் (Sam Waldron)
  3. உடன்படிக்கை இறையியல், ஏர்ல் பிளெக்பர்ன் (Earl Blackburn)
  4. திருச்சபை, ஏர்ல் பிளெக்பர்ன் (Earl Blackburn)
  5. விசுவாச அறிக்கைகளின் அவசியமும், பயன்பாடும், ரொபட் மார்டின் (Robert Martin)

நூலாசிரியர் ரொப் வென்சூரா தன்னுடைய அறிமுகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார், ‘இந்த நான்கு தலைப்புகளையும் நான் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இவையே எப்போதும் வரலாற்று சீர்திருத்த கிறிஸ்தவத்தைப் பிரதிபலிப்பவையாக இருந்திருக்கின்றன. இவற்றை விளங்கிக்கொண்டு விசுவாசித்துப் பின்பற்றுகிறவர்கள் கிறிஸ்தவ திருச்சபை பற்றியும், கிறிஸ்தவ வாழ்க்கை பற்றியும் முழுமையான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளுவார்கள். வேறுசிலர் இன்னும் சில போதனைகளை இவற்றோடு சேர்த்திருக்க வேண்டும் என்று கருதுவார்கள். இருந்தபோதும் கிறிஸ்தவ வரலாற்றில் இந்தக் காலப்பகுதியில் இவற்றையே முக்கியமானவையாக நான் கருதுகிறேன்.’

இதற்கு முகவுரை அளித்துள்ள ஜேம்ஸ் வைட், ‘இந்நூலை எழுதியவர்கள் கிருபையின் போதனைகள் கிறிஸ்தவ வாழ்க்கையின் அனைத்துப் பகுதியோடும் தொடர்புடையவையாக இருப்பதை அறிந்திருக்கிறார்கள். ஐம்போதனைகளோடு நாம் நிறுத்திக்கொண்டால், அதாவது தன்னுடைய மகிமைக்காக சுயாதீனமாக அவர் இரட்சிப்பதில் மட்டும் ஆனந்தமடைந்து, அவருடைய வல்லமையும், கிருபையும் நம்முடைய ஆராதனையில் வெளிப்படுவதையும், நம்முடைய போதனைகளிலும் நம்முடைய வாழ்க்கையில் அனைத்துப் பகுதிகளிலும் அவற்றின் வெளிப்பாட்டை அறிந்துகொள்ளாமல் போனால் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கை ஊனமுற்றதாக இருந்து இந்த உண்மைகளும் நம்மூலம் வெளிப்படாமல் போய்விடும்’ என்கிறார்.

முதலாவது அதிகாரம்: பத்துக்கட்டளைகளும் கிறிஸ்தவனும்

முதலாவது ஆக்கத்தை எழுதியிருப்பவர் ரிச்சர்ட் பார்சிலஸ். இந்த ஆக்கத்தில் காணப்படும் பல விஷயங்களை அவர் ஏற்கனவே தன்னுடைய அருமையான நூலான In Defence of the Decalogue (பத்துக்கட்டளைகளுக்கு ஆதரவாக) எனும் நூலில் வெளியிட்டிருக்கிறார். கடந்த இருபதாண்டு காலப்பகுதியில் பேசப்பட்ட ‘புதிய உடன்படிக்கை இறையியல்’ என்ற போதனைக்கு எதிராக பத்துக்கட்டளைகளின் நிரந்தரத் தன்மையை விளக்கி எழுதப்பட்ட நூலிது. இன்று அது பதிப்பில் இல்லை. வெளிவந்தபோதும் பலருக்கு அதை நான் அறிமுகப்படுத்தியிருந்திருக்கிறேன்.

இந்த அதிகாரத்தில் ஆரம்பத்தில் இந்த ஆக்கத்திற்கான காரணத்தை விளக்கும் பார்சிலஸ், இன்றைக்கு சரி எது, தவறு எது என்று உறுதியாக நிலை நிறுத்த மறுக்கும் சமுதாயத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டு, அந்த சிந்தனை கிறிஸ்தவர்களையும் பாதித்திருப்பதை நினைவுறுத்துகிறார். பத்துக்கட்டளைகளின் நிரந்தரத் தன்மைக்கு எதிரான பல குரல்களைக் குறிப்பிடும் அவர் அலிஸ்டர் பெக்கின் கூற்றை நினைவூட்டுகிறார். ‘சமகால சுவிசேஷக் கிறிஸ்தவத்தில் ஆண்டவருடைய நாளுக்கு எதிராகக் காணப்படும் துக்ககரமான நிலை, வேறு எதையும்விட பத்துக்கட்டளைகளின் நிரந்தரப் பரிசுத்தத் தன்மையை நிலைநிறுத்துவதில் நமக்குள்ள சவால்களை அதிகம் விளக்குகிறது’ என்கிறார் அலிஸ்டர் பெக்.

இந்த அறிமுகத்தோடு அதிகாரத்தை ஆரம்பிக்கும் ரிச்சர்ட் பார்சிலஸ் நியாயப்பிரமாணம் நம்மை நீதிமானாக்கவோ, பரிசுத்தப்படுத்தவோ முடியாது என்பதை ஆணித்தரமாக முதலில் சுட்டிக்காட்டுகிறார். அதனால் நம்முடைய குற்றவுணர்வைப்போக்க முடியாது; நமக்கு இரட்சிப்பை அளிக்க முடியாது என்றும் நம்முடைய கடமையை மட்டுமே சுட்டிக்காட்டும் நியாயப்பிரமாணம் அதை நாம் செய்யவைக்கும் தன்மையைத் தன்னில் கொண்டிருக்கவில்லை என்பதையும் விளக்குகிறார். பரிசுத்தம் எப்படி இருக்கும் என்று காட்டுகின்ற நியாயப்பிரமாணத்தால் (பத்துக்கட்டளைகள்) நம்மைப் பரிசுத்தப்படுத்த முடியாது என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறார். இரட்சிப்புக்கு நமக்கு வழிகாட்டுவது சுவிசேஷம்; இரட்சிப்பை நமக்கு அளிப்பது கிறிஸ்து; பரிசுத்தமாக நம்மை வாழவைப்பவர் பரிசுத்த ஆவியானவர் என்று கூறும் ரிச்சர்ட், கிறிஸ்தவர்கள் ஏன் பத்துக்கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை விளக்க ஆரம்பிக்கிறார்.

திருச்சபை வரலாற்றில், பதினாறாம் நூற்றாண்டு திருச்சபை சீர்திருத்த காலத்தில் ஜோன் கல்வின் போன்ற சீர்திருத்தவாதிகள் பத்துக்கட்டளைகளின் நிரந்தரத் தன்மையை உணர்ந்து போதித்திருப்பதை சுட்டிக்காட்டும் பார்சிலஸ் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உருவாகிய ஓர் இயக்கம் கிறிஸ்தவ வாழ்க்கையில் பத்துக்கட்டளைகளைப் பின்பற்ற அவசியமில்லை என்றும் அன்பு மட்டுமே அவசியம் என்று விளக்க ஆரம்பித்தை சுட்டிக்காட்டுகிறார். இவர்கள் கிறிஸ்தவ வாழ்க்கையில் பத்துக்கட்டளைகளின் அடிப்படையிலான ஒழுக்கத்தின் அவசியத்தை நிராகரித்து அதன் இடத்தில் தன்னல மறுப்போடு கூடிய அன்பை வலியுறுத்தினார்கள். இவர்களைப் பொறுத்தவரையில் மனித இருதயமே நியாயப்பிரமாணத்தின் இடத்தை எடுத்துக்கொள்ளுகிறது. பேராசிரியர் ஜோன் மரே சுட்டிக்காட்டுவதுபோல், ‘அன்பை வலியுறுத்தும் இவர்கள் அன்பை நியாயப்பிரமாணத்திற்கு எதிரான இடத்தில் வைத்திருக்கிறார்கள். அன்பு நியாயப்பிரமாணத்திற்கு எதிரானதல்ல; அது நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறது.’

நியாயப்பிரமாணத்திற்கும் நமக்கும் இடையிலுள்ள பிரச்சனை நியாயப்பிரமாணம் அன்பாக இல்லாமல் இருப்பதல்ல; பிரச்சனை நமக்குள்ளேயே இருக்கிறது, காட்ட வேண்டியவிதத்தில் அன்புகாட்ட முடியாத நிலையில் நாமிருக்கிறோம்.

பத்துக்கட்டளைகளைக் கிறிஸ்தவர்கள் ஏன் பின்பற்ற வேண்டும் என்பதை விளக்கும் பார்சிலஸ் அதற்கு 1689 விசுவாச அறிக்கையின் 19ம் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார். அந்த அதிகாரத்தின் போதனைகளை நான்கு தலைப்புகளில் விளக்குகிறார். (1) படைப்பும் பத்துக்கட்டளைகளும். (2). சீனாயில் பத்துக்கட்டளைகள். (3) கிறிஸ்தவர்களும் பத்துக்கட்டளைகளும், (4) அவிசுவாசிகளும் பத்துக்கட்டளைகளும். 1689 விசுவாச அறிக்கையின் 19ம் அதிகாரம் தெளிவாக நியாயப்பிரமாணத்தின் நிலையை விளக்கி பத்துக்கட்டளைகளின் நிரந்தரத் தன்மையை ஆணித்தரமாக உறுதிப்படுத்துகிறது. படைப்பில் நியமிக்கப்பட்ட ‘சபத்து நாள்’ இன்றைக்கு ஆண்டவருடைய நாளாகக் கிறிஸ்தவர்களால் பின்பற்ற வேண்டிய அவசியத்தையும் நிலைநாட்டுகிறது. 1689 விசுவாச அறிக்கை வேதபோதனைகளைத் தெளிவாகத் தொகுத்து அளிக்கும் வரலாற்று சாதனம். அதன் அவசியத்தை மறுதலிக்க முடியாதிருந்தபோதும் பார்சிலஸ் அதோடு மட்டும் நிறுத்துக்கொள்ளவில்லை. விசுவாச அறிக்கையைப் பயன்படுத்தி தான் விளக்கியிருக்கும் உண்மைகளை வேதவசனங்களின் மூலம் அடுத்து விளக்க ஆரம்பிக்கிறார். அதை அவர் மூன்று தலைப்பில் தந்திருக்கிறார். (1) பத்துக்கட்டளைகளும் பழைய உடன்படிக்கையும், (2) பத்துக்கட்டளைகளும் புதிய உடன்படிக்கையும். (3) பத்துக்கட்டளைகளும் ஒழுக்கநியதிக்கோட்பாடும் (Moral Law). இவற்றின் மூலம் பழைய உடன்படிக்கையில் பத்துக்கட்டளைகளின் இடத்தையும், புதிய உடன்படிக்கையில் கர்த்தரின் மக்களின் மத்தியில் அதன் நிரந்தரமான தன்மையையும் விளக்கும் பார்சிலஸ் இறுதியில் பத்துக்கட்டளைகளை ஒழுக்க நியதிக்கோட்பாட்டோடு ஒப்பிட்டு விளக்குகிறார். முடிவாக பத்துக்கட்டளைகள் மூன்றுவிதத்தில் வேதத்தில் விளக்கப்பட்டிருப்பதாகக் காட்டுகிறார் பார்சிலஸ்: பழைய உடன்படிக்கையில் அது அடிப்படை நியாயப்பிரமாணமாகவும், புதிய ஏற்பாட்டிலும் அதேவிதத்தில் அடிப்படை நியாயப்பிரமாணமாகவும் அமைந்திருந்து, எல்லா மனிதர்களுக்கும் அடிப்படை நியாயப்பிரமாணமாக, ஒழுக்க நியதிக்கோட்பாடாகவும் அது இருப்பதாகக் கூறி முடிக்கிறார். ஏதேன் தோட்டத்தில் மனித வாழக்கையில் இயங்க ஆரம்பித்த பத்துக்கட்டளைகள் பின்பு கர்த்தரின் கையால் எழுதப்பட்டு இஸ்ரவேலின் வாழ்க்கையில் இடம் பெற்றது. பின்பு புதிய உடன்படிக்கை மக்களின் இருதயத்தில் எழுதப்பட்டு அவர்களின் வாழ்க்கை நியதியானது. பத்துக்கட்டளைகள் அடிப்படைக் கட்டளைகளாக, நியாயப்பிரமாணமாக, ஒழுக்கநீதிச் சட்டங்களாக இருப்பதால் அவை உடன்படிக்கைகளையெல்லாம் கடந்தவையாக இந்த உலகமிருக்கும்வரை நிலைத்திருப்பவையாக இருக்கின்றன.

பத்துக்கட்டளைகளை விசுவாச அறிக்கையின் போதனைகள் மூலமும், வேத வசனங்கள் மூலமும் நிலைநாட்டிக் காட்டும் ரிச்சர்ட் பார்சிலஸ் அடுத்ததாக பத்துக்கட்டளைகளுக்கு எதிரான நான்கு வாதங்களைச் சுட்டிக்காட்டி அவற்றின் நியாயமற்ற தன்மையை விளக்கி அவற்றிற்குப் பதிலளிக்கிறார். அவருடைய விளக்கங்கள் மறுதலிக்க முடியாதவை. இறுதியில் மூன்று நடைமுறைப் பயன்களோடு அவருடைய ஆக்கம் முடிவுக்கு வருகிறது.

  1. பழைய, புதிய உடன்படிக்கைகளின் அடிப்படை நியாயப்பிரமாணமே (பத்துக்கட்டளைகள்) கர்த்தரில் ஆரம்பித்து நம்முடைய முதல் பெற்றோரின் இருதயத்தில் எழுதப்பட்டதாக இருந்தது. (ரோமர் 2:14-15).
  2. கிறிஸ்தவனின் வாழ்க்கையில் நியாயப்பிரமாணம் (பத்துக்கட்டளைகள்) ஒரு வழிகாட்டியே தவிர வல்லமை அல்ல. அதாவது, பத்துக்கட்டளைகளை நிறைவேற்றக்கூடிய வல்லமை பரிசுத்த ஆவியிடம் இருந்து வருகிறதே தவிர பத்துக்கட்டளைகளில் அது காணப்படவில்லை. அது பத்துக்கட்டளைகள் இறக்கைகளற்ற வழிகாட்டியாக இருக்கின்றது. ரயில் தண்டவாளங்களைப்போல இருக்கும் பத்துக்கட்டளைகள் ரயிலை ஓட வைக்க முடியாது; ரயிலுக்கு அவை வழிகாட்டிகள் மட்டுமே. பத்துக்கட்டளைகளை நிறைவேற்றக்கூடிய வல்லமை புதிய உடன்படிக்கை மக்களனைவருக்கும் கிடைத்திருக்கும் ஈவு.
  3. நம்முடைய அன்பை வெளிப்படுத்த உதவும் சாதனம் நியாயப்பிரமாணம் (பத்துக்கட்டளைகள்). பத்துக்கட்டளைகளை நாம் பின்பற்றுவதன் மூலமே அன்பை வெளிப்படுத்த முடியும்; வேறு வழிகளாலல்ல. என்மேல் அன்பு காட்டுவீர்களானால் என் கற்பனைகளைப் பின்பற்றுங்கள் என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

ரிச்சர்ட் பார்சிலஸின் இந்த அதிகாரம் பத்துக்கட்டளைகளின் நிரந்தரத் தன்மையைத் தெளிவாக வேதபூர்வமாக விளக்கியிருக்கிறது. அதற்கு எதிரான சிந்தனைகளுக்கெல்லாம் முறையான பதில்களை ஆக்கத்தின் ஆசிரியர் அளித்திருக்கிறார். புதிய உடன்படிக்கை விசுவாசிகள் பத்துக்கட்டளைகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை மன்னிப்புக்கேட்கும் முதுகெலும்பற்ற தோரணையில் எழுதாது, உறுதியோடு பார்சிலஸ் விளக்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நாலுபேர் உரக்கச் சத்தமிட்டு பத்துக்கட்டளைகள் இன்று அவசியமில்லை என்று சொல்லிவிட்டால் மசிந்துபோகிற கூட்டம் அதிகரித்து வருகின்ற நாளில் சீர்திருத்த விசுவாசத்தின் ஓர் அடிப்படை அம்சமான பத்துக்கட்டளைகளின் அவசியத்தை ஆணித்தரமாக, அதேநேரம் அன்போடு ரிச்சர்ட் விளக்கியிருக்கிறார். இந்த ஆக்கத்தைப்பற்றிக் குறிப்பிடும் பிரெட் மலோன், ‘கிருபையின் கீழ் வாழும் கிறிஸ்தவனுக்கு பத்துக்கட்டளைகள் அவசியமானவை எனும் பார்சிலஸின் வாதங்கள் தகர்க்க முடியாதவையாக இருக்கின்றன’ என்று எழுதியிருக்கிறார்.

கல்வினித்துவ ஐம்போதனைகளில் ஆர்வம் காட்டி அவற்றை விசுவாசிக்க ஆரம்பித்திருப்பவர்கள் நிச்சயம் பத்துக்கட்டளைகளின் அடிப்படையில் விசுவாச வாழ்க்கை நடத்தவேண்டியதன் அவசியத்தை உதாசினப்படுத்த முடியாது; ஓய்வுநாளை அனுசரிப்பதையும் அலட்சியப்படுத்த முடியாது. வேதமும், விசுவாச அறிக்கையும் தெளிவாக விளக்கும் இந்த சீர்திருத்தவாத சத்தியத்தைப் புறந்தள்ளி கிறிஸ்தவ வாழ்க்கையையும், சபையையும் நடத்துவதில் பயனில்லை. அது கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கே எதிரான செயல். வாழும் சமுதாயத்தின் பண்பாட்டைக் காரணம் காட்டி பத்துக்கட்டளைகளை ஒதுக்கிவைத்துவிட முடியாது. அது கர்த்தரையே ஒதுக்கி வைப்பதற்கு சமமானது. பத்துக்கட்டளைகள் இல்லையெனில் ஒழுக்கத்துக்கே இடமில்லை என்றாகிவிடும். ஓய்வுநாளும் கர்த்தரைப் பற்றும் நல்லொழுக்கத்தோடு சம்பந்தமானது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அன்பு ஒழுக்கத்துக்கு விரோதமானதல்ல; அதேநேரம் அன்பே ஒழுக்கமாகிவிடாது. அன்பிருக்குமிடத்தில் ஒழுக்கம் நிச்சயம் இருக்கும். அந்த ஒழுக்கம் அன்போடு பத்துக்கட்டளைகளைப் பின்பற்றுவதால் மட்டுமே வாழ்க்கையில் நிலைநிற்கும். பத்துக்கட்டளைகள் பரிசுத்தமாக இருப்பதற்கு நம்மை வழிநடத்துகின்றன; ஆவியின் வல்லமையால் அவற்றை நாம் பின்பற்றுகிறபோது நாம் மேலும் மேலும் பரிசுத்தமடைகிறோம்; அன்பும் நம்மில் ஒளிவீச ஆரம்பிக்கிறது.

(இதன் மறுபாகம் விரைவில் வரும்)

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s