அரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்

வரவிருக்கும் தமிழகத் தேர்தல்

electionதமிழகத்தில் வெகுசீக்கிரமே தேர்தல் நடைபெறவிருக்கிறது. உலகத்தில் அநேக நாடுகளில் அரசியலும், தேர்தல்களும் சமுதாயத்துக்கு உதவுவனவாக இல்லை. ஜனநாயகம் சமுதாயத்துக்கு நல்லதானாலும் அதை நல்லமுறையில் அமுலில் வைத்திருக்கத் தேவையான சுயநலமின்மை, ஞானம், முதிர்ச்சி போன்றவை நம்மக்களிடம் இல்லை. ஜனநாயகத்தின் பெயரில் இத்தாலியின் முசோலினி போன்று எதேச்சாதிகாரத்துடன் ஆள்கிறவர்களே எங்கும் அதிகம். வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி எதேச்சாதிகாரத்தையே அதிகாரவர்க்கங்கள் ஆபிரிக்காவிலும், வெனிசுவேலாவிலும், பொலிவியாவிலும் வேறு பல தேசங்களிலும் நடத்திவருகிறார்கள். அந்தளவுக்கு தமிழகம் போயிராவிட்டாலும் இரண்டு கட்சிகள் மட்டும் பணபலத்தையும், வசீகரத்தையும் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றி மாநிலத்தைத் தொடர்ந்து ஆண்டுவருகின்றன. இரண்டுமே அதிகார துஷ்பிரயோகத்திற்கும், பணவிஷயத்தில் நேர்மையின்மைக்கும் பேர்போனவை. அவற்றிற்கெதிராகக் கோர்டில் இருக்கும் வழக்குகளே இதற்கு அத்தாட்சி. இதெல்லாம் மக்களுக்குத் தெரியாததல்ல. இருந்தும் சமுதாயத்தில் தொடர்ந்திருக்கும் அரசியல் முதிர்ச்சியின்மையும், அறிவின்மையும், சுயநலமும் இந்த இரண்டு கட்சிகளுக்கே மக்களை மாறிமாறி வாக்களிக்க வைத்துப் பதவியில் அமர்த்துகின்றன. மக்களைக் கேட்டுப்பாருங்கள் சலிப்போடு, ‘வேறு என்ன சார் செய்வது’ என்பார்கள். இது தமிழகத்தைப் பிடித்திருக்கும் வைரஸ். ஜனநாயகத்தில் சமுதாயத்திடம் இருக்கும் முக்கிய துருப்புச்சீட்டு வாக்குச்சீட்டு மட்டுமே. அதை சரிவரப் பயன்படுத்தாவிட்டால் சமுதாயம் பாதிக்கப்படும். சிறுகட்சிகள் சுயலாபத்துக்காகப் போட்டிபோட்டுப் பேரம்பேசிப் பெரியகட்சிகளுடன் இணைந்துகொள்ளப் பார்க்கும்; தேர்தல் காலம் மட்டுமே இவர்களுக்கு லாபம் சம்பாதிக்கக் கிடைக்கும் நல்ல வாய்ப்பு. வரப்போகிற தேர்தல் காலத்தில் கோடிக்கணக்கில் பணத்தைக் கட்சிகள் பட்டிதொட்டி எங்கும் பட்டுவாடா செய்யப்போகின்றன. மக்களின் வசதியின்மையையும், சுயநலத்தையும் அறிந்துவைத்திருக்கின்ற கட்சிகள் அவற்றை மூலதனமாக்கி வாக்குகளைப்பெற பெருமுயற்சி செய்யப்போகின்றன. மறுபடியும் இன்னொரு மாநிலத் தேர்தல் நிகழ்ந்து, அதில் எந்தக் கட்சி அதிக சாமர்த்தியசாலியோ அதுவே வெல்லும். இது தமிழக அரசியலில் தொடரும் நெடுங்கதை.

கிறிஸ்தவர்களும் அரசியலும்

தேர்தல் காலத்தில் கிறிஸ்தவர்கள் என்ன செய்யவேண்டும்? இது முக்கியமான கேள்வி. கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினராக தமிழகத்தில் இல்லாதிருந்தபோதும், இதில் அவர்களுக்குப் பொறுப்பு இல்லாமலில்லை. நேரடி அரசியலில் அவர்கள் ஈடுபடவேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் அதையும், தேர்தல்களையும் அவர்கள் புறக்கணிக்க முடியாது. ஒலிவர் குரோம்வெல் இங்கிலாந்தின் பிரதமராக இருந்தார். பியூரிட்டன் பெரியவர்களுக்கு அமெரிக்க தேசத்தை உருவாக்கியதிலும், சீர்திருத்த விசுவாசத்தைப் பின்பற்றியவர்களுக்கு அந்நாட்டின் அரசியல் சாசனத்தை வரைந்ததிலும் பங்கிருந்திருக்கிறது. அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தின்போது கொன்சிடரேட்டுகளைப் போரில் வழிநடத்தி பல வெற்றிகளைச் சாதித்த ஜெனரல் லீயும், அவருடைய படைத்தலைவருமான சாமுவேல் ஜெக்சனும் அருமையான கிறிஸ்தவ விசுவாசிகள். சீர்திருத்த விசுவாசியான ஆபிரகாம் கைப்பர் ஹாலந்து நாட்டின் பிரதமராக இருந்தவர். முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் கிறிஸ்தவ விசுவாசி; அவருடைய வாழ்க்கை சரிதத்தை வாசித்துப் பாருங்கள். இவர்களெல்லாம் அரசியலையும், தேர்தல்களையும் புறக்கணிக்கவில்லை. இதையெல்லாம் நாம் எங்கே தெரிந்துவைத்திருக்கிறோம்; தெரிந்துவைத்திருந்தால்தானே சிந்தித்துப் பார்க்க வசதியாயிருக்கும். மறுபடியும் வாசிப்பைப்பற்றி நான் புலம்ப விரும்பவில்லை.

நம்மினத்துக் கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டம் கிடையாது. அரசியலுக்கும் ஆத்மீகத்துக்கும் சம்பந்தமில்லை என்று எண்ணுவதால் அரசியலை அவர்களுக்கு கிறிஸ்தவ வேதக்கண்ணோட்டத்தோடு அணுகத் தெரியவில்லை. ஒன்று, ஒரு காலத்தில் இருந்த Piatism நம்பிக்கையுடையவர்களைப்போல அரசியலை அவர்கள் முற்றாகப் புறக்கணிக்கிறார்கள், இல்லையெனில் உலகத்தானைப்போல அரசியலில் பாய்ந்து கிறிஸ்தவ சாட்சியை இழந்துபோகும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஒன்று, அரசியலைப் புறக்கணிக்கத் தெரிகிறது இல்லாவிட்டால் புலிகளை ஆதரிக்கத் தெரிகிறது. கிறிஸ்தவ சுவிசேஷத்தை அறிவிப்பதில் காட்டாத ஆர்வத்தை மனித உரிமைகள் இயக்கத்தில் இணைந்து காட்டுவதையும், மனிதநலவாத செயல்களில் ஈடுபடுகிறவர்களையும் நான் அறிந்திருக்கிறேன். இந்த விஷயங்களில் வேதக்கண்ணோட்டத்தைக் கொண்டு முடிவுகள் எடுக்க இவர்களுக்குத் தெரியவில்லை.

இயேசுவும், பவுலும் நமக்கு அரசியலை எப்படி எதிர்கொள்ளுவது என்று சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். அரசுக்கு விசுவாசமாக இருந்து வரிசெலுத்தவேண்டும் என்று இயேசு சொல்லியிருக்கிறார். அரசை வன்முறையால் சாய்த்துவிடும் எண்ணம் கொண்டிருந்தவர்களோடு அவர் இணையவில்லை. ரோம அரசுக்கு எதிராக ஓர் இயக்கத்தை நடத்தவும் அவர் இடங்கொடுக்கவில்லை. அதற்காக அவர் ரோம அரசை ஆதரித்தார் என்பதில்லை. உலகத்தை உருவாக்கிய கடவுளே அரசாங்கங்களை அமைத்திருக்கிறார். அதனால்தான் அரசுகளுக்காக ஜெபிக்கும்படி பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் எழுதியிருக்கிறார். கிறிஸ்தவர்கள் இந்த விஷயத்தில் ஏனோதானோவென்று நடந்துகொள்ளக்கூடாது. முதிர்ச்சியில்லாதவர்களாக, சிந்திக்க மறுத்து கட்சிகளின் அரசியல் நோக்கங்களையும், திட்டங்களையும், செயல்முறைகளையும் ஆராய்ந்து பார்க்காது வாக்களிப்பது நமக்குத் தரப்பட்டிருக்கும் பொறுப்பை அலட்சியப்படுத்துவதாகும். கிறிஸ்தவம் இந்த விஷயத்திலும் கிறிஸ்துவின் பார்வையைக் கொண்டு வாக்குச்சீட்டைப் பயன்படுத்தும்படி கிறிஸ்தவனை நிர்ப்பந்திக்கிறது.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேலைத்தேய நாடுகளில் அரசும், மக்களும் சட்டத்துக்கும், மனித உரிமைகளுக்கும் மதிப்புக்கொடுத்து நடந்துவருகிறார்கள். அதனால் கிறிஸ்தவர்கள் அரசியலில் ஈடுபட்டு சாட்சியை இழக்காமல் நடந்துகொள்ளக்கூடிய நிலைமை இருக்கிறது. ஏற்கனவே பார்த்தபடி கிறிஸ்தவர்கள் பெரும் பதவிகளை அரசியலில் வகிக்கக்கூடியதாக இருப்பதற்கும் அதுவே காரணம். கீழைத்தேய நாடுகளில் அப்படிப்பட்ட நிலைமை இல்லை. பெரும்பாலான நாடுகளில் சட்டம் மதிக்கப்படுவதில்லை. ஆளுகிறவர்கள் தங்களுடைய சுயலாபத்துக்காக அதைப் பயன்படுத்திக்கொள்ளுவதே பெரும்பாலும் வழக்கமாக இருக்கிறது. மனித உரிமைகளுக்கும் மதிப்புக்கொடுக்கப்படுவதில்லை. அத்தோடு கிறிஸ்தவர்கள் இந்நாடுகளில் பெரும்பான்மையினராக இல்லை. இத்தகைய பிரச்சனைகள் கிறிஸ்தவர்கள் அரசியலில் நாட்டம் காட்டுவதற்குப் பெருந்தடையாக இருந்துவிடுகின்றன. சிலவேளைகளில் அப்படி ஈடுபடுவது கிறிஸ்தவ சுவிசேஷத்துக்கும், திருச்சபைப் பணிகளுக்கும் பேராபத்தாக இருந்துவிடுகிறது. இதனால் கிறிஸ்தவர்கள் முன்யோசனையுடன் நடந்துகொள்ள வேண்டிய பெரும்பொறுப்பைக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் கிறிஸ்தவ சாட்சியை இழந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமைப்பொறுப்பு கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது.

தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் எஸ்றா சற்குணத்தைப்போல திமுக அடிவருடியாகவோ அல்லது அதிமுக அடிவருடியாகவோ மாறிவிடுவது நல்லதல்ல. ஒரு கிறிஸ்தவன் வேதபோதனைகளுக்கு முரணாக நடந்து, ஒழுக்கத்தையும், சமுதாய, நாட்டுநலனையும் ஒதுக்கிவைத்துவிட்டு கட்சிகளுக்கு சார்பாக இருக்கக்கூடாது; கட்சிப்பணிபுரியப் போகக்கூடாது. தமிழக அரசியல் சூழ்நிலையில் கிறிஸ்தவப் போதனைகளைக் குழிதோண்டிப் புதைக்காமல் கிறிஸ்தவர்கள் கட்சிப்பணிபுரிவது பெருங்கஷ்டம். கிறிஸ்துவுக்கு களங்கம் ஏற்படுத்தி அரசியலில் ஈடுபடத்தான் வேண்டுமா? சிந்தியுங்கள். தேர்தல் காலத்தில் மாநில நலனுக்காகவும், மக்களுடைய நலனுக்காகவும் உழைக்கப் போகிற கட்சிகள் யார், என்பதை ஆராய்ந்து பாருங்கள். வாக்குகளைக் கேட்டு நிற்கிறவர்களுடைய வாழ்க்கையை, அவர்களுடைய பணிகளை ஆராய்ந்து பாருங்கள். நேர்மையில்லாதவர்களைப் புறக்கணியுங்கள். இயேசு இன்று வாழ்ந்தால் எப்படி நடந்துகொள்ளுவாரோ அதேபோல் இந்தவிஷயத்தில் நடக்கவேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. முக்கியமாக நீங்கள் வாக்களிக்கப்போகும் கட்சி கிறிஸ்தவர்களுக்குத் தொல்லை கொடுக்கிற கட்சியா என்று ஆராய்ந்து பாருங்கள். பெரிய கட்சிகள் நேர்மையற்றவை என்று உங்களுக்குத் தோன்றினால் சிறிய கட்சிகளை ஆராய்ந்து பாருங்கள்.

அதிமுக சரியில்லை என்றால் திமுகவிற்கு வாக்களிக்கவேண்டிய அவசியமில்லை; அப்படிச் செய்வதும் முழுத்தவறு. ஆட்சி அமைப்பதற்கு சின்னக்கட்சிகளால் முடியாமல் போகலாம்; இருந்தாலும் அந்தக் கட்சிகளையும் அவற்றின் கொள்கைகளையும் ஆராய்ந்து பார்க்காமல் இருக்கக்கூடாது. அநேக சின்னக்கட்சிகளும் சுயலாபத்தையே தேடி அலைகின்றன என்பது உண்மைதான். இருந்தாலும் அவற்றையும் ஆராய்ந்து பார்க்கத் தவறக்கூடாது. அவையும் நேர்மையற்றவையாகப்பட்டால் கட்சி சார்பற்றவர்கள் நல்ல நோக்கங்களுக்காக தேர்தலில் நிற்கிறார்களா என்று பாருங்கள். அவர்கள் பக்கம் நேர்மையும், நாட்டுக்கு உழைக்கும் சிந்தனையும் இருந்தால் அவர்களுக்கு வாக்களிப்பதில் தப்பில்லை. இதில் எது முக்கியமானது தெரியுமா? உங்களுடைய மனச்சாட்சியை இதுபற்றிய வேதபோதனைகளுக்கு அடிமையாக்கி அந்த மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்துகொள்ளாமல் இருப்பதுதான். அநேக கிறிஸ்தவர்கள் தங்களுடைய மனச்சாட்சியை உலகசிந்தனைக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். அரசியல், தேர்தல்பற்றிய விஷயங்களில் தங்களுடைய மனச்சாட்சி ஆண்டவருடைய சிந்தனைப்படி நடக்க அவர்கள் அதற்குப் பயிற்சியளிக்கவில்லை. சரீரப்பயிற்சியில்லாமல் கால்பந்தாட முடியாது; மனச்சாட்சிக்கு வேதப்பயிற்சி தராமல் அது ஆண்டவருடைய சிந்தனைகளைக்கொண்டிருக்க முடியாது.

அநேக கிறிஸ்தவர்கள் எந்தக் கட்சி தேர்தலில் வெல்லக்கூடிய வாய்ப்பிருக்கிறதோ அதற்கு வாக்களிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அது முழுத்தவறு; அது சுயநலம் சார்பானது. உங்களுடைய சுயநல லாபத்திற்காக வாக்குச் சீட்டைப் பயன்படுத்தாதீர்கள். வெற்றிபெறப்போகிறவர்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று கிறிஸ்தவன் நினைக்கக்கூடாது. நீங்கள் வாக்களிக்கப்போகிறவர் தேர்தலில் வெல்லாவிட்டாலும், நேர்மைக்கும், நல்ல கொள்கைகளுக்கும் வாக்களித்திருக்கிறோம் என்று சந்தோஷப்படுங்கள். அதைத்தான் கிறிஸ்து எதிர்பார்க்கிறார். தேர்தல் விஷயத்தில் நீங்கள் நீதியாக, வேதபூர்வமாக நடந்துகொள்ள வேண்டும் என்று வேதம் எதிர்பார்க்கிறது என்பதை மனதில் வைத்து தேர்தலை அணுகுங்கள். எல்லா விஷயத்தைப்போலவும் இந்த விஷயத்திலும் உங்களுடைய மனச்சாட்சி வேதத்தைப் பின்பற்றவேண்டும். மனச்சாட்சி கிறிஸ்துவுக்குரியதானால் அதற்கெதிராக உலகத்தானைப்போல வாக்குச்சீட்டைப் பயன்படுத்துவது கிறிஸ்துவுக்கு இழைக்கும் பெருந்துரோகம். உங்களுடைய மனச்சாட்சியில் கிறிஸ்துவுக்கு விசுவாசமாக நடந்துகொள்ளுங்கள். நமக்கெல்லாம் மேலாக இருக்கும் இறையாண்மைகொண்ட ஆண்டவர் மற்றவற்றைப் பார்த்துக்கொள்வார். நிச்சயம் ஜெபத்தோடு இந்நேரத்தில் சிந்தித்து செயல்படுவது அவசியம்.

நவம்பர் மாத அமெரிக்கத் தேர்தல்

usa-votinghandஇந்த ஆண்டு நவம்பரில் நிகழப்போகும் அமெரிக்கத் தேர்தலில் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடப் போகிறவர்களுக்கான கட்சித்தேர்தல்கள் சூடுபிடித்து நடந்துவருகின்றன. ஜனநாயக கட்சிப் பிரதிநிதியாக ஹிளரி கிளின்டன் தெரிவு செய்யப்பட்டுவிடுவார் போலத்தெரிகிறது. குடியரசுக்கட்சியில் அதற்காகப் பதினேழுபேர் போட்டியிட்டு இப்போது அது மூன்றுபேர் வரையில் வந்து நிற்கிறது. பல்லாண்டுகாலமாக குடியரசுக்கட்சியில் செல்வாக்கு செலுத்திவந்த புஷ் குடும்பத்தின் வாரிசான ஜெப் புஷ் தேர்தலில் இருந்து விலகிக்கொண்டார். கட்சித்தேர்தல் ஆரம்பிப்பதற்கு முன் அவர்தான் நியமனமாவார் என்ற பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அதற்கெல்லாம் சமாதி கட்டியது குடியரசுக்கட்சி ஆதரவாளர்களின் தற்போதைய மனநிலை. ஜெப் புஷ் அமைதியான மனிதர். கட்சியால் விரும்பப்படுகிறவர். நல்ல மனிதர் என்பதை அனைவருமே ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், நாட்டின் தற்போதைய நிலையை மாற்றி அமைக்க அவை மட்டும் போதாது என்று குடியரசுக்கட்சி ஆதரவாளர்கள் தீர்மானித்துவிட்டார்கள்.

ஏன் இந்த மாற்றம், என்னதான் நடந்தது? என்று கேட்பீர்கள். பில் கிளின்டன் ஆரம்பித்து வைத்து ஒபாமா வெற்றிகரமாக செயல்படுத்திய லிபரல் திட்டங்கள் அமெரிக்க சமுதாயத்தை ஐரோப்பாவையும், கனடாவையும்போல் வெகுவேகமாக மாற்றி அதன் பாரம்பரிய கிறிஸ்தவ அடித்தளத்தை சுக்குநூறாக்கியிருக்கிறது. தொலைக்காட்சியில் சமீபத்தில் அலன் டீஜெனரஸ் தன்னுடைய சொந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒபாமாவை வரவழைத்து, தன் தன்னினச் சேர்க்கைத் திருமணம் நிகழக்காரணமாக இருந்ததற்காக ஒபாமாவுக்கு எல்லோர் முன்னிலையிலும் பாராட்டும் நன்றியும் தெரிவித்தார். இதுதான் ஒபாமா அமெரிக்காவுக்குக் கொடுத்திருக்கும் பெருங்கொடை. இதன் மூலம் அமெரிக்க சமுதாயத்தின் ஒழுக்கநெறிப்போக்கின் அடித்தளத்தையே சிதைத்திருக்கும் ஒபாமா உலக நாடுகளின் மத்தியிலும் அமெரிக்காவுக்கு இருந்த தலைமை ஸ்தானத்தை குறைவுபடுத்தி எவரும் அந்த நாட்டைப் பெரிதாக நினைக்காதபடி செய்திருக்கிறார். இன்று அமெரிக்காவைப் பார்த்து எந்த நாடும் பயப்படுவதில்லை. பொருளாதாரம், சமூக ஒழுங்கு, அரசியல், படைபலம் எல்லாவற்றிலும் அமெரிக்காவை என்றுமில்லாதளவுக்கு ஒபாமாவின் கொள்கைகளும், செயல்களும் பாதித்து உள்நாட்டிலும், உலக ஸ்தானத்திலும் அதை மிகவும் பலவீனப்படுத்தியிருக்கின்றன. இந்நிலையில் அமெரிக்காவுக்கு மறுபடியும் ரொனல்ட் ரீகனைப்போன்ற, முடிந்தால் அவரையும்விட உயர்ந்த, பாரம்பரியமாக அமெரிக்க சமுதாயம் பின்பற்றி வந்திருக்கின்ற கோட்பாடுகளை மறுபடியும் நிலைநாட்டுகின்ற தைரியசாலியான, செயல்வீரரான ஒரு தலைவர் தேவை என்று குடியரசு கட்சி ஆதரவாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை அவர்கள் நல்ல மனிதரான ஜெப் புஷ்ஸில் காணமுடியவில்லை என்று தீர்மானித்துவிட்டார்கள். இதுவே வேறு ஒரு காலப்பகுதியாக இருந்திருந்தால் நிச்சயம் ஜெப் புஷ் வென்றிருப்பார். அமெரிக்கா இன்றிருக்கும் நிலையில் ஒரு தைரியமான செயல்வீரர் தேவை என்று அவர்கள் கருதுகிறார்கள்.

Donald-Trumpஅத்தோடு குடியரசுக் கட்சியின் மேலிடத்தின் மீது அவர்களுக்கு பெருங்கடுப்பு ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸில் கட்சிக்குப் பெரும்பான்மை பலமிருந்தும் அவசியமானளவுக்கு ஒபாமாவின் கொள்ளைகளை எதிர்த்துநின்று அவருக்குத் தொல்லை கொடுக்கவில்லை என்பதும் அவர்களுக்குக் கோபத்தையூட்டியிருக்கிறது. அதனால் கட்சியின் ஆதரவோடு தேர்தலில் நிற்கும் அரசியல்வாதிகளின்மீது அவர்களுக்கு நம்பிக்கையில்லாமல் போயிருக்கிறது. மேலிடத்து ஆதரவில்லாத ஒருவரை அவர்கள் விரும்புகிறார்கள். வாஷிங்டன் அரசியல் விளையாட்டை அவர்கள் விரும்பவில்லை. அரசு எல்லாவிஷயங்களிலும் தலையிடுவதையும், எல்லாவற்றையும் செய்யப்பார்ப்பதையும் அவர்கள் வெறுக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இன்று அவசியமானதாக இருப்பது நாட்டின் பொருளாதார உயர்வும், வேலைவாய்ப்பும், சட்டத்தைமீறி நாட்டுக்குள் குடியேறுபவர்களைத் தடைசெய்வதும், நாட்டின் பாதுகாப்பையும், எல்லைகளையும் பலப்படுத்துவதே. இதெல்லாம் அவர்களை யாருக்கு வாக்களிக்க வைத்திருக்கிறது தெரியுமா? இதுவரை நான்கில் மூன்று தேர்தல்களை வென்றிருக்கும் பில்லியனுக்கு மேல் சொத்துக்களை வைத்திருக்கும், அரசியல் அனுபவம் கொஞ்சமும் இல்லாத, வியாபாரச் சக்கரவர்த்தியாகிய டொனல்ட் டிரம்ப்புக்கு. டொனல்ட் டிரம்ப் குடியரசுக்கட்சி ஆதரவாளர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் பேசிவருகிறார்; அரசியல் இங்கிதமெல்லாவற்றையும் ஓரங்கட்டிவிட்டு தன் மனதில்பட்டதை ஆணித்தரமாக, எந்தப்பயமுமில்லாமல் பேசி வருகிறார். ஜனாதிபதி தேர்தலுக்காக தன் சொந்தப்பணத்தை மட்டும் செலவிட்டு வாக்குக் கேட்கும் முதல் மனிதராகவும் இருக்கிறார். 2016 அமெரிக்கத் தேர்தலில் டொனல்ட் டிரம்ப் புதிய மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறார்.

இந்தத்தடவை குடியரசுக் கட்டியின் ஜனாதிபதி நியமனத்தேர்தல் என்றுமில்லாதவகையில் சூடுபிடித்திருப்பது மட்டுமல்ல, நியமனத்துக்காகப் போட்டியிடுகிறவர்கள் எப்போதுமில்லாதவகையில் ஒருவரையொருவர் காரசாரமாகத் தாக்கித் திட்டி விளாசிக்கொண்டிருக்கிறார்கள்; ஒருவரையொருவர் அடிக்காததுதான் குறை. இதுவரை நடந்துள்ள மூன்று விவாதங்களில் இரண்டு சிறுபிள்ளைகள் காதுகொடுத்துக் கேட்பதற்கு கூசவேண்டிய விதத்தில் இருந்தன. அந்தளவுக்கு தாக்குதலும், இழிவுப் பேச்சுமிருந்திருக்கிறது. எதைச்செய்தும், எதைப்பேசியும் வெற்றியடைய வேண்டும் என்ற நினைப்பில் அவர்கள் பேசுவதுபோல் இருந்தது. வாய்ப்பேச்சு எப்படி இருக்கவேண்டும் என்று யாக்கோபு தன்நிருபத்தில் எழுதியிருப்பதை இந்நேரம் நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியவில்லை.

அமெரிக்க அரசியலில் கிறிஸ்தவம்

இந்தத் தேர்தலில் நான் கவனித்த முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? எல்லாக் குடியரசுக் கட்சி அரசியல்வாதிகளும் இதுவரை இல்லாதளவுக்கு கடவுளைப்பற்றிப் பேசுவதுதான். எதற்கெடுத்தாலும் கடவுளுடைய பெயரைச் சொல்லுவதும், அமெரிக்காவை ஆசீர்வதிக்கும்படிக் கேட்பதும் அவர்களுடைய பேச்சுக்களில் சகஜமாக இருந்தது. அதுவும் தென் கரலைனா தேர்தல் துவங்குமுன் இந்தக் கடவுள் பேச்சு உச்சகட்டத்தை அடைந்தது. இதெல்லாம் எதைக்காட்டுகிறது தெரியுமா? அமெரிக்காவின் தற்போதைய கிறிஸ்தவம் எந்த நிலையில் இருக்கிறது என்பதைத்தான். நானும் கிறிஸ்தவன் என்று அரசியல்வாதி சொல்லுவதும், இன்னொரு அரசியல்வாதியின் மதநம்பிக்கையைப்பற்றி நான் கருத்துச் சொல்லமாட்டேன் என்று வேறொரு அரசியல்வாதி சொல்லுவதும் வழக்கமாகிவிட்டது. அமெரிக்க மக்களைப் பொறுத்தவரையில் சுவிசேஷக் கிறிஸ்தவம் பலவீனப்பட்டிருப்பதையே இது காட்டுகிறது. ஒபாமா பதவிக்கு வருமுன் தான் ஒரு பாப்திஸ்து என்று சொன்னதன் அர்த்தத்தை இன்று நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். கிறிஸ்தவம் அமெரிக்க சமுதாயத்தில் வெறும் மதமாக மட்டும் இன்று பரவலாக மாறிக்கொண்டிருக்கிறது. பியூரிட்டன் பெரியவர்கள் ஆரம்பித்து வைத்த சமுதாயம் இன்றைக்கு வெகுவேகமாக அந்த நம்பிக்கைகளைக் குழிதொண்டிப் புதைத்து பலவீனமான கிறிஸ்தவ நம்பிக்கையுடையதாக இருக்கிறது. இவெஞ்சலிக்கள் கிறிஸ்தவர்களின் வாக்குக்காக அரசியல்வாதிகள் தங்களைக் கிறிஸ்தவர்களாக அறிமுகப்படுத்திக்கொள்ளுவது சர்வசாதாரணமாகிவிட்டது. இவர்களில் எத்தனைபேர் உண்மையாகவே மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும் அடைந்து, திருச்சபையில் திருமுழுக்கையும் திருச்சபை அங்கத்துவத்தையும் அடைந்து வாராவாரம் விசுவாசத்தோடு குடும்பமாக சபைக்குப்போய் வாழ்கிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் இவர்களுடைய கிறிஸ்தவத்தின் சுயரூபம் தெரிந்துவிடும்.

அமெரிக்க கிறிஸ்தவர்கள் எப்போதும் கன்ஸர்வெட்டிவ் கட்சியான குடியரசுக் கட்சியையே ஆதரித்து வந்திருக்கிறார்கள். இன்று அவர்களும்கூட கட்சியில் வழமைக்கு மாறாகக் கட்சி ஆதரவில்லாத டொனல்ட் டிரம்ப்பை விரும்புகிறார்கள். இது குடியரசுக்கட்சித் தலைமையையே திகைக்க வைத்திருக்கிறது. கட்சிக்காரர்கள் ஜெப் புஷ்ஸுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை பொய்த்துவிட்டது. தென் கரலைனாவில் ஜெப் புஷ் தன் சகோதரரான முன்னால் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஸைப் பேச வைத்தார். அவருடைய தாயும்கூட கூட்டங்களில் கலந்துகொண்டார். தென் கரலைனாவில் இன்றும் ஜோர்ஜ் புஷ்ஸுக்கு 85% ஆதரவு குடியரசுக்கட்சி ஆதரவாளர்களிடம் இருக்கிறது. இது தன்னுடைய நிலைமையை வலிமையுடையதாக்கும் என்று நம்பிய ஜெப் புஷ் முழு வேகத்தோடு இயங்கினார். ஆனால், ஒன்றும் பலிக்காமல் போய்விட்டது. இவெஞ்சலிக்கள் சமுதாயத்தில் 31 வீதமானோர் டிரம்ப்புக்கே வாக்களித்தார்கள். நெவாடாவிலும், இவெஞ்சலிக்கள் கிறிஸ்தவர்கள் டிரம்புக்கே அதிகமாக வாக்களித்திருக்கிறார்கள். குடியரசுக்கட்சியில் எல்லோருமே தைரியசாலியான ஒருவரின் தலைமைத்துவத்தை இன்று நாடுகிறார்கள். அதை அவர்களால் டிரம்ப்பில் மட்டுமே காணமுடிகிறது. கட்சியில் டொனல்ட் டிரம்ப்பைப் பிடிக்காதவர்கள் அவரை வீழ்த்த அவருக்கெதிராக என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள். டொனல்ட் டிரம்ப்பின் பேச்சுக்களும், நடவடிக்கைகளும் கவனிக்கப்படுவதைப்போல வேறு எதுவும் இன்று அமெரிக்காவில் கவனிக்கப்படவில்லை என்றுகூட சொல்லலாம். அதிகார இயந்திரங்கள் அவரை அரசியலில் வீழ்த்த அந்தப்பாடுபடுகிறது. ஒபாமாகூட, ஜனாதிபதியாவதற்கு இருக்க வேண்டியவை டிரம்பில் இல்லை என்று சொல்லியிருக்கிறார். ஜனாதிபதி பதவியில் இருக்கும் ஒருவர் இப்படிக் கருத்துத் தெரிவித்திருப்பது ஆச்சரியமே. வத்திக்கானின் போப்பும் இதில் இணைந்துகொண்டு டிரம்ப் கிறிஸ்தவரில்லை என்று சொல்லியிருக்கிறார். இதுவரை எந்தப் போப்பும் வரலாற்றில் அமெரிக்க அரசியலில் தலைநுழைத்துக் கருத்துத் தெரிவித்ததில்லை. இது வியப்பானது. போப் சொன்னதும் பொதுவாகவே அமெரிக்கர்களுக்குப் பிடிக்கவில்லை. யார் என்ன சொன்னாலும், செய்தாலும் டொனல்ட் டிரம்புக்கு ஆதரவு பெருகிக்கொண்டிருக்கிறது. அவர் இதுவரை வெற்றியையே சந்தித்திருக்கிறார். டிரம்ப், தன்னைப் பிரஸ்பிடீரியன் கிறிஸ்தவன் என்று அழைத்துக்கொள்கிறார்! அதையும்விட அவருடைய தைரியமும், வழமையான அரசியல் நடவடிக்கைகளுக்கெல்லாம் முரண்பட்ட, அரசியலில் செய்யக்கூடாத காரியங்களையெல்லாம் செய்து வருவது அநேகருக்குப் பிடித்திருக்கிறது. அமெரிக்க குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் டிரம்ப் தங்களை தைரியத்தோடு வழிநடத்துவார் என்று நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களுடைய நம்பிக்கைகள் வீண்போகாமல் இருக்குமா? தேர்தல் நியமனத்துக்கு இன்னும் நாள் இருக்கிறது.  வரப்போகிற ‘சூப்பர் செவ்வாய்’த் தேர்தல் டிரம்ப்புக்கு சோதனையாய் அமையுமா, அவருடைய நியமனத்தை உறுதிப்படுத்துமா? என்பதைக் காட்டுவதாக இருக்கும். பல மாநிலங்களில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புக்கள் எல்லாம் இப்போது டிரம்புக்கு ஆதரவானதாகத்தான் இருக்கின்றன. இந்த ‘டிரம்ப் அலை’ எதுவரை போகிறதென்று பொறுத்திருந்துதான் பார்ப்போமே.

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 32 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.