புத்தகங்களும் வேதப்பிரசங்கப் பஞ்சமும்

புத்தகங்கள்

ஜோன் கல்வினைப் பற்றிய நூல் இப்போது விற்பனைக்கு வந்துவிட்டது. அமேசான் மூலமும், தமிழக விநியோகஸ்தர்கள் மூலமும் நூலைப்பெற்றுக்கொள்ளலாம். இன்னும் இரு புதிய நூல்களை முடிப்பதற்கு முயன்றுகொண்டிருக்கிறேன். எப்போது மூன்றாவது பாகம் திருச்சபை வரலாறு வரும் என்று கேட்கிறவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. முடிந்தவரை இருக்கும் நேரத்தைப் பயன்படுத்தி எழுதிக்கொண்டிருக்கிறேன். அதையும் எழுதி வெளியிட கர்த்தர் வழிவகுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வாசிப்பதற்காக நான் முன்பதிவில் ஆர்டர் செய்திருந்த சில நூல்கள் சமீபத்தில் கூரியரில் வந்து கிடைத்தன. ‘கிறிஸ்தவ சபத்து’ (Christian Sabbath) பற்றிய அதாவது ஓய்வு நாளைப் பின்பற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி ஆங்கிலத்தில் 400 பக்கங்களுக்கு மேல் அருமையான ஒரு நூலை மறைந்த போதகரும், இறையியல் வல்லுனருமான ரொபட் மார்டின் வெளியிட்டிருக்கிறார். இந்த நூல் எளிமையான ஆங்கிலத்தில் எழுதப்பட்டு ஓய்வுநாளைக் கவனத்தோடு பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை ஆணித்தரமான வாதங்களோடும் ஆதங்கத்தோடும் வாசகர்கள் முன் வைக்கிறது. ஓய்வு நாளைப் பின்பற்ற வேண்டும் என்ற சிந்தனையே இல்லாத இனமாக கிறிஸ்தவ தமிழினம் இருந்து வருகிறதைப் பார்த்து வருந்தத்தான் முடிகிறது. என்னைப் பொறுத்தவரையில் பழைய ஏற்பாட்டைப் பற்றிய அடிப்படையில் தவறான மனப்பான்மையும், கீழ்ப்படிவின்மையும், ஆணவப்போக்குமே பலரை இந்நிலையில் வைத்திருக்கிறது. பரிசுத்தமாக வாழ்வது என்பதற்கு வேதத்திலில்லாத விளக்கங்களைக் கொடுத்து வருகிறவர்களிடம் ஓய்வு நாளைப் பரிசுத்தத்தோடு பின்பற்றுகிற வழிமுறையை எங்கே காணமுடியும்? இந்த விஷயத்தில் தமிழினத்துப் போதகர்கள் மிகவும் பின்தங்கிப்போயிருக்கிறார்கள். மற்றவர்களை வழிநடத்தவேண்டிய அவர்களிடமே ஓய்வு நாள் அனுசரிப்பை எதிர்பார்க்க முடியாமல் இருக்கும்போது சாதாரண மக்களிடம் அதை எப்படிக் காணமுடியும்? இருந்தபோதும் ஓய்வு நாளைப்பற்றிய அக்கறையிருந்து முடிந்தவரை ஆத்துமாக்களுக்கு அதுபற்றி விளக்கிப் போதித்துப் பின்பற்றி வரும் ஒருசில போதகர்கள் நம்மினத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை உணர்ந்து நான் உள்ளுக்குள் மகிழ்கிறேன். அவர்களும் அவர்கள் பணிசெய்து வரும் திருச்சபையும் நிச்சயம் ஆசீர்வதிக்கப்படும்.

ஓய்வு நாளைப் பின்பற்றுகிற வழிமுறை இல்லாத சமுதாயத்தில் கிறிஸ்தவத்தைக் காணமுடியாது என்று ஜே. சி. ரைல் அடித்துச் சொல்லியிருக்கிறார். ‘ஓய்வு நாளை சட்டரீதியாக இல்லாமலாக்குகிற நாள் வருமானால் பிசாசின் ராஜ்யமே இந்த உலகத்தில் முன்னோக்கி வளரும். அது அவிசுவாசிகளுக்கு ஆனந்தத்தைத் தரும்; ஆனால் கர்த்தரை அவமதிக்கும் செயல்’ என்றார் ரைல். அந்தளவுக்கு அந்த தேவமனிதரில் ஓய்வு நாள் பற்றிய போதனை ஊறிப்போயிருந்திருக்கிறது. ஓய்வு நாளுக்கு வாழ்க்கையில் ஒருவித மதிப்பும் தராமல் ரைலின் எழுத்துக்களில் மட்டும் ஆர்வம் காட்டுவதுபோல் பாசாங்கு செய்கிறவர்களுக்கு ரைலின் இந்த வார்த்தைகள் பிடிக்கப்போவதில்லை. சார்ள்ஸ் ஸ்பர்ஜனும், ஜோன் ஓவனும், ஜோன் பனியனும், இன்னும் எத்தனையோ தேவ மனிதர்களும் ஓய்வு நாளை கிறிஸ்தவத்தின் அடித்தளமாக விளக்கியிருக்கிறார்கள். விஷயம் தெரியாமலா விசுவாச அறிக்கைகளும், வினாவிடை நூல்களும் ஓய்வு நாளை அனுசரிப்பது பற்றிய விளக்கங்களைத் தந்திருக்கின்றன. எல்லா நாட்களும் ஒன்றுதான் என்று விதண்டாவாதம் செய்து இருதயம் கடினப்பட்டுப்போய் மெல்லிய தோலளவு கிறிஸ்தவர்களாக இருந்து வருகிறவர்களுக்கு இதை எப்படிப்புரிய வைப்பது? ஓய்வு நாளைப் பரிசுத்தத்தோடு அனுசரித்து வரும் போதகர்களையும், குடும்பங்களையும் கொண்டிருக்கும் திருச்சபைகளே ஆசிர்வதிக்கப்பட்ட சபைகள். அந்த சபைகள் மத்தியிலேயே பரிசுத்த ஆவியானவரின் மெய்யான நடமாட்டத்தை நிச்சயம் காணமுடியும்.

அல்பர்ட் என். மார்டின் அவர்கள் எழுதி வெளிவந்திருக்கும் இன்னுமொரு ஆங்கில நூல், ‘உங்கள் சரீரத்தில் கர்த்தரை மகிமைப்படுத்துதல்’ (Glorifying God in your body). இதற்கு ‘சரீரம் உங்களுடையதா, கர்த்தருடையதா?’ என்ற உப தலைப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. பரிசுத்த வாழ்க்கைக்கும் சரீரத்திற்கும் என்ன தொடர்பு என்பதைப்பற்றி நம்மினத்தில் விளக்கமுள்ளவர்களாக இருப்பவர்கள் மிகவும் குறைவு. சுவரில்லாமல் சித்திரம்வரைய முடியாது என்ற பழமொழி இருப்பதை மட்டும் நாம் அறிந்துவைத்திருக்கிறோம். ஆனால், சரீரமாகிய சுவரில்லாமல் பரிசுத்தமாக வாழ வழியில்லை என்பது மட்டும் நமக்குப் புரியாமலிருக்கிறது. இந்த மரணத்துக்கேதுவான சரீரத்திலேயே நாம் பரிசுத்தமாக இந்த உலகத்தில் வாழ்ந்து முடிக்கவேண்டிய கடமையைக் கொண்டிருக்கிறோம். மறுபிறப்பை அடைந்திருக்கும் நம்முடைய சரீரத்தின் அத்தனை அங்கங்களையும் அடக்கிக் கட்டுப்படுத்தி அவை பாவத்தைச் செய்துவிடாதபடி தடுத்து ஆளவேண்டிய தகுதியையும், வல்லமையையும் நாம் மறுபிறப்பின் மூலமாகப் பெற்றிருக்கிறோம். அதேவேளை உயிர்த்தெழப்போகும் நம்முடைய சரீரத்தின் தேவைகளையும் கர்த்தரின் துணையோடு சந்தித்து அவருடைய மகிமைக்காக அதைப் பயன்படுத்த வேண்டிய கடமைப்பாடும் நமக்கு இருக்கிறது.

இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் சமுதாயம் சரீர ஆராதனையில் ஈடுபட்டிருக்கிறது. ஆண்களும் பெண்களும் சரீரத்தை அழகுபடுத்தி பூரணப்படுத்தும் செயலில் கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு வழிகாட்டும் வியாபார நிறுவனங்களுக்கு அளவில்லை. மீடியாவில் இதுபற்றித்தான் அன்றாடம் அலசலும் அலம்பலும். அழிவுக்குரிய இந்த சரீரத்தை நாம் பூரணப்படுத்த வழியில்லை. அதை உணர்கிறவர்களாக சரீர ஆராதனைக்காரர்கள் இல்லை. அதேசமயம். சரீரம் அழிவுக்குரியது என்பதால் அதை அலட்சியப்படுத்தி ஏனோதானோவென்று வாழ்கின்ற எதிர்மறையான எண்ணப்பாட்டைக் கொண்டிருக்கிறவர்களும் இருக்கிறார்கள். பரிசுத்த வாழ்க்கைக்கும் சரீரத்திற்கும் தொடர்பில்லை என்ற தவறான எண்ணத்தைக் கொண்டிருந்து உண்ணும் உணவில் கவனமில்லாமல் சரீரத்தைக் கெடுத்து, பரிதாபத்துக்குரிய தோற்றத்தையும் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கர்த்தரை எப்படித் தங்கள் சரீரத்தில் மகிமைப்படுத்த முடியும்? இவர்களுடைய எண்ணமும் செயலும் சரியல்ல. அழிவுக்குரியதாக இருந்தாலும், உயிர்த்தெழப்போகும் இந்தச் சரீரம் கர்த்தருடைய மகிமைக்குரியது. அது அவருடைய மகிமைக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். இதை அருமையாக, ஆணித்தரமாக, இறையியல்பூர்வமாக முதலில் விளக்கி அதற்குப் பிறகு சரீரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்ற நடைமுறை விஷயங்களை அல்பர்ட் என். மார்டின் விளக்கியிருக்கிறார். சரீரத்தைப் பொருட்படுத்தாமல், கவனித்து அதன் தேவைகளை நிறைவேற்றாமல், இருக்கவேண்டிய காலம்வரை இருக்கமுடியாமல் மரித்த கர்த்தருடைய பிள்ளைகள்தான் எத்தனைபேர். அத்தகைய அவசியமான சரீரக் கவனிப்பில் ஈடுபடாமல் அசதியும், நோய்களும் சரீரத்தைவாட்ட கர்த்தருடைய பணிகளைத் தொடர்ந்து செய்யமுடியாமல் போனவர்கள் எத்தனைபேர். இதை எழுதிக்கொண்டிருக்கிறபோதே சரீரத்தை அசட்டைசெய்து வாழ்ந்துகொண்டிருக்கும் நானறிந்திருக்கும் சிலபேருடைய முகம் என் கண்முன்னால் நிற்கிறது. சரீரத்தை வேதபூர்வமாகக் கவனித்து அதன் தேவைகளை நிறைவேற்றுவது நமது தொடருகின்ற பரிசுத்த வாழ்க்கைக்கு (continuing sanctification) அசைக்க முடியாதவிதத்தில் அவசியமானது என்பதையும் நாம் எப்படி மறுக்கமுடியும்? இதையெல்லாந்தான் அல்பர்ட் என். மார்டின் தன் நூலில் சுட்டிக்காட்டியிருக்கிறார். சுருக்கமாக, அதேவேளை வேதரீதியில் தெளிவாக சரீரத்தைக் கவனிக்கவேண்டிய கடமையை மறுக்க வழியில்லாதபடி மார்டின் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சவரின் கிரேஸ் புத்தகங்கள்

எங்களுடைய சபையில் கிட்டத்தட்ட 40 வருடங்களாக இயங்கிவந்த புத்தக விற்பனையகத்தை இந்த வருடத்தில் மூடினோம். உண்மையில் அது ஒரு ஏஜன்சியாகத்தான் இயங்கி வந்தது. அதாவது புத்தகக்கடைகளுக்கு புத்தகங்களை விநியோகம் செய்வதே அதன் ஆரம்ப நோக்கமாக இருந்தது. இருந்தாலும் புத்தகக் கடைகள் நல்ல சத்தான கிறிஸ்தவ நூல்களை ஸ்டொக்கில் வைத்து விற்பனை செய்யத்தவறியதால் சில்லறை வியாபாரத்தையும் நாமே செய்யவேண்டியிருந்தது. இதை வருடக்கணக்காக செய்து வந்திருக்கிறோம். இதைக் கடமைப்பாட்டோடு எங்களுடைய சபை உதவிக்காரர்களில் ஒருவரே மேற்பார்வை செய்துவந்தார். புத்தக வியாபாரத்தைப் பொறுத்தவரையில் தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் பலநல்ல மாற்றங்களே இந்த புத்தக ஏஜன்சி பணியை நாம் நிறுத்திக்கொண்டதற்கு முக்கியகாரணம். அத்தோடு அதை மேற்பார்வை செய்துவந்தவருக்கும் வயதாகிக்கொண்டிருக்கிறது. இந்த ஏஜன்சி பணியை நிறுத்திக் கொள்ளும் முடிவைத் தன் பராமரிப்பின் மூலம் கர்த்தரே எங்களுக்கு காட்டித் தந்திருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

புத்தகங்களை வெளியிடுவதிலும், விற்பனை செய்வதிலும் அதீத மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இன்று நூல்களை வெளியிட நாம் ஒரு பதிப்பகத்தாரைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. விற்பனை செய்வதற்கும் ஒரு மார்கெட்டிங் கம்பேனியை நம்பவைக்கத் தேவையில்லை. நவீன கணினி மற்றும் இன்டர்நெட்யுகம் இதையெல்லாம் தலைகீழாக மாற்றி அச்சிடுதல், பதிப்பித்தல், விற்பனை செய்வதிலெல்லாம் நவீன யுத்திகளைப் பயன்படுத்தி வருகிறது. இது மிகவும் வசதியானது. நூல்கள் தேவையானவர்கள் இன்று அமேசான் போன்ற எத்தனையோ இன்டர்நெட் கம்பேனிகளிடம் மிக இலகுவாக குறைந்தவிலையில் ஒரே வாரத்தில் நூல்களை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். எந்தக் கடையையும் தேடிப்போய் வாங்க வேண்டிய அவசியமில்லாமல் இருக்கிறது. (இதற்காக புத்தகக் கடைகளைப் புறக்கணிக்காதீர்கள். அங்கு போவதில் இருக்கும் வசதி நூல்களைத் தொட்டுப் பிரித்துப் பார்த்து வாங்கமுடிவதுதான்.) புத்தகக் கடைகள் ஸ்டொக் செய்யாத நூல்களையும் இன்டர்நெட் மூலமாக பெற்றுக்கொள்ளும் வசதி இன்று இருக்கிறது. இத்தகைய காரணங்களும் எங்களுடைய விற்பனையகத்தை மூட முக்கிய காரணம். இருந்தாலும் எங்களுடைய சபைத்தேவைகளை நிறைவேற்ற முக்கியமான நூல்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி தேவையான அளவு நூல்களை மட்டும் வைத்திருக்கப் போகிறோம்.

புத்தகங்களைப் பற்றி எழுதுகிறபோது ஒரு விஷயத்தை சொல்லாமல் இருக்க முடியாது. தமிழகத்தில் இன்று பல மாநிலங்களில் புத்தக விழாக்களை வருடந்தோறும் நடத்தி வருகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் இந்த விழாக்களுக்குப் போய் புத்தகங்களை வாங்க முடிகிறது. நூலாசிரியர்களும் இதில் கலந்துகொண்டு வாசகர்களை சந்திக்கிறார்கள்; செய்தியளிக்கிறார்கள். இதெல்லாம் நான் புத்தகம் வாசிக்க ஆரம்பித்த காலத்தில் நிகழவில்லை. இதற்கெல்லாம் நூல்கள் விஷயத்தில் இன்று ஏற்பட்டிருக்கும் நவீனமயமாக்கம் பெருங்காரணம். புத்தகம் பேசுது என்ற பெயரில் ஒரு மாத இதழும் கூட வெளிவருகின்ற புத்தகங்கள் பற்றியும், புத்தக விழாக்கள் பற்றியும் விபரங்களை அள்ளித்தருகின்றன. ஒருவிதத்தில் இதை எண்ணி மனமகிழ முடிந்தாலும் இதுவே கிறிஸ்தவர்கள் மத்தியில் நிகழந்தால் எத்தனை நன்மையாக இருக்கும் என்று சிந்திக்காமல் இருக்கமுடியவில்லை.

வேதப்பிரசங்கப் பஞ்சம்

சமீபகாலமாக நான் பணிபுரிந்து வருகின்ற சபைக்கு வருடக்கணக்காக வேதப்பிரசங்கத்தைக் கேட்கமுடியாமலும் வேதஞானமே இல்லாமலுமிருந்து வந்திருக்கின்ற பலர் அத்தகைய பிரசங்கத்தையும், நல்ல சபை அமைப்பையும் நாடி வருவதைக் காண்கிறேன். இது சுற்றி வர சபைகளில் என்னதான் நடக்கிறது என்பதைக் காட்டுகிறது. வேதப்பிரசங்கத்தில் நம்பிக்கை வைக்காமல் உணர்ச்சிவசப்படுத்தக்கூடிய சாட்சிகளுக்கும் அனுபவங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஆத்தும அழிவை நோக்கி அநேகரை வழிநடத்தி வரும் ஊழியங்கள் எல்லா நாடுகளிலும் பெருகிக் காணப்படுகின்றன. கீழ்ப்படிவெதுவுமின்றி பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் தற்காலிகமாக தங்களுடைய ஆத்மீகத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுவதற்காக இத்தகைய சபைகளை நாடிப்போகிறவர்கள் அநேகர். அவர்களுக்கு உடனடித் தேவைகள் நிறைவேறினாலே போதும்; தங்களுடைய நித்திய இருதயத் தேவைகளை அவர்கள் சிந்தித்துப்பார்ப்பதில்லை. இத்தகையவர்களை மடக்கிப் பிடிப்பதற்காகவே சுவிசேஷப்பணி என்ற பெயரில் எலிவலைகளைப்போல பெருமளவு ஊழியங்கள் பெருகிக் காணப்படுகின்றன. இந்த இடங்களில் இறையியல்பூர்வமான வேதபோதனைகளுக்கும், வேத சிந்தனைகளுக்கும் இடமிருக்காது. கிறிஸ்துவின் பெயரையும், வேதத்தையும் பயன்படுத்தி உலகப்பிரகாரமான ஆத்மீக வழிமுறைகளை ஆத்துமாக்கள் பின்பற்றவைத்து தங்களுடைய சுயநல நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளுவதிலேயே இத்தகைய ஊழியங்களில் ஈடுபட்டிருக்கிறவர்கள் கருத்தாக இருப்பார்கள். ஜொயல் ஒஷ்டின், பெனிஹின் போன்றோரின் ஊழியங்கள் இதற்கு உதாரணம். ஆண்டவரின் நாமத்தை இவர்கள் எந்தவிதத்திலும் தங்களை வளர்க்கப் பயன்படுத்திக்கொள்ளத் தயங்கமாட்டார்கள். தற்காலிகமாக மனதுக்கு இதமளிக்கும் சரீரத்தின் மேல்தோலைக்கூடத் தொடமுடியாத ஆத்துமசுகத்துக்காக அலைபவர்களுக்கு இந்த இடங்கள் தோதானவைதான்.

இதெல்லாம் என்னை சிந்திக்கவைக்காமல் போகவில்லை. சபைக்கு ஆட்கள் தேவை என்பதற்காக இருதயத்தை விற்று, வேதத்தை ஒதுக்கிவைத்து ஊழியம் செய்வதுபோன்ற கொடுமை இல்லை என்பது எனக்குத் தெரியும். மனச்சாட்டி இல்லாதவர்கள் செய்கின்ற மனுஷத்தனமான ஊழியம் அது. அத்தகைய ஊழியங்களைச் செய்கிறவர்கள் மெய்யான ஆத்தும பாரமில்லாதவர்கள்; சுயநலக்காரர்கள். அவர்கள் ஆத்துமாக்களின் வாழ்க்கைக்கு ஆபத்தானவர்கள். ஆத்துமாக்களை வைத்து பிழைப்பு நடத்துகிற இவர்கள் ஆத்துமரீதியிலான எந்த விஷயத்துக்கும், எந்த மனிதர்களுக்கும் தங்களுடைய ஊழியங்களில் இடம்கொடுப்பதில்லை. முதலில் இவர்களுடைய ஊழியங்களில் மெய்யான வேதப்பிரசங்கத்தைப் பார்க்கமுடியாது. ஒப்புக்காக வேதத்தை தங்களுடைய சுயநலத்துக்காக இவர்கள் பயன்படுத்தினாலும் மார்டின் லூத்தருக்கு இருந்ததுபோன்ற நம்பிக்கை இவர்களுக்கு வேதத்தில் இருப்பதில்லை. ‘நான் செய்ததெல்லாம் வார்த்தையைப் பிரசங்கித்ததுதான். அதற்குமேல் வார்த்தை அனைத்தையும் செய்தது’ என்று லூத்தர் தன் பிரசங்க ஊழியத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். வேதப்பிரசங்கமும் போதனையும் இல்லாமல் ஆத்துமவிருத்தி ஆத்துமாக்களுக்கு எப்படி, எங்கிருந்து ஏற்பட முடியும்? வெறும் துதியும், உபவாச ஜெபமும், சினிமாவை நினைவூட்டும் பாடல்களும், கைதட்டல்களும் ஆத்துமவிருத்தியை எந்தக் காலத்தில் யாருக்கு ஏற்படுத்தியிருக்கிறது? பிரசங்கப் பஞ்சகாலத்தில் நம்மினம் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. ஆவியின் பலத்தோடு கொடுக்கப்படும் வேதப்பிரசங்கம் (1 தெசலோ 1:5) நடக்குமிடங்களை விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய நிலையில் நம்மினம் இருந்துவருகிறது. இதையும்விட பரிசுத்தம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் பிரபஞ்சத்திற்குரிய வேஷத்தைத் தரித்துக்கொண்டு (ரோமர் 12:2) ஊழியம் செய்துவருகிறவர்களால் திருச்சபைப் பணி அவிசுவாசிகள் மத்தியில் கெட்டபெயரை வாங்கிக்கொண்டிருக்கிறது.

வேதத்தை மட்டும் வேதபூர்வமாக பிரசங்கித்து திருச்சபை அமைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து சபை நடத்த முற்படுகிறவர்களுக்கு ஆவியற்றவர்கள், சுவிசேஷ வாஞ்சையற்றவர்கள் என்று இத்தகைய போலி ஊழியக்காரர்கள் பெயர்சூட்டுவார்கள் என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும் கர்த்தரின் வார்த்தையை மட்டும் பிரசங்கித்து ஆவிக்குரிய ஆத்துமதாகத்தோடு இருப்பவர்களுக்கு கடைசிவரை பணிசெய்து வருவதில் இருக்கும் ஆத்தும சந்தோஷமும் திருப்தியும் வேறெதிலும் கிடைப்பதில்லை. அத்தகைய வைராக்கியத்தோடு உழைக்கிறவர்களை மனதில்கொண்டுதான் இயேசு, அறுவடை மிகுந்திருக்கிறது, ஆனால் ஊழியக்காரர்கள் குறைவு என்று சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 30 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.