ஆண்டவர் சிரிக்கிறார்!

சாதாரணமாக மனிதர்களிடம் நாம் நகைச்சுவையை எதிர்பார்க்கலாம். ஆனால், கர்த்தருக்கும் நகைச்சுவை தெரியும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? சங்கீதம் 2ல், “பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்” என்கிறது. உலகத்தில் மனிதர்கள் மத்தியில் நடக்கும் அத்தனைக்கு பின்னும் கர்த்தரே இருக்கிறார். அவரை மீறி எதுவும் நடந்துவிட முடியாது என்பது வேத சத்தியம் மட்டும் அல்ல; சீர்திருத்த சத்தியத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. அத்தோடு மனிதர்களின் ஆர்ப்பாட்டமான, அகங்காரப்போக்குகளையெல்லாம் மேலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் கர்த்தர் நகைக்கவே செய்கிறார். ‘மனிதன் ஒன்றை நினைக்க தேவன் ஒன்றை நினைக்கிறார்’ என்ற வார்த்தைப் பிரயோகம் கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் நிச்சயம் உண்மை.

கர்த்தர் நகைக்கிறார் என்று வேதம் சொல்லுவதால் கடவுளும் மனிதனைப்போலத்தான் அவருக்கும் மானுட உணர்வுகள் இருக்கின்றன என்று நினைத்துவிடக்கூடாது. ஆண்டவர் ஆவியாக இருக்கிறார் என்கிறது வேதம். அவருக்கு மனிதனைப்போல சரீரமோ, உணர்வுகளோ இல்லை; அதற்கெல்லாம் அப்பாற்பட்டவராக இருக்கிறார் ஆண்டவர். இருந்தபோதும் அவரால் மனிதனோடு அவனைப் புரிந்துகொண்டு உறவாட முடியும். மனிதன் ஆண்டவரைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் மனித மொழியில் ஆண்டவருடைய எண்ணங்கள் வேதத்தில் இந்த முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பரலோகத்தில் இருக்கிறவர் மனிதனுடைய திட்டங்களையும், ஆட்டங்களையும், கூத்துக்களையும் பார்த்து நகைக்கிறார் என்கிறது வேதம். நகைத்தல் என்பது வடமொழி வார்த்தை; அத்தோடு நகைப்பு என்பது அமைதியான சிரிப்பு. வேதம் ஆண்டவர் சிரிக்கிறார் (laughing) என்கிறது. இது என்னை சிந்திக்க வைக்கிறது. உலகம் கர்த்தர் இருக்கிறார் என்பதையே மறந்து பாவத்தின் காரணமாக என்னென்னவோ திட்டங்களையெல்லாம் தீட்டி அவை நிச்சயம் நிறைவேறும் என்ற மமதையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கர்த்தருக்கு மதிப்புக்கொடுக்காத உலகம் கண்கள் இருண்டுபோய் போடும் மமதைத் திட்டங்கள் வெற்றி பெறும்போது அதற்குத் தாங்களே காரணம் என்று எண்ணி மார் தட்டிக்கொள்ளுகிறது. ஆனால், எல்லாவற்றிற்கும் காரணகர்த்தாவான கர்த்தர் அமைதியாக அனைத்தையும் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்; தன்னுடைய திட்டங்கள் அனைத்தும் பூரணமாக நிறைவேற அவற்றையெல்லாம் பயன்படுத்திக்கொள்ளவும் செய்கிறார்.

சமீபத்தில் என் மாமனார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக தங்கியிருந்தபோது அவரை விசாரிக்கப் போன நான் பக்கத்துப் படுக்கையில் இருந்த ஒரு வியாதியஸ்தரோடு அவருடைய டாக்டர் செய்த சம்பாஷனையைக் கேட்க நேர்ந்தது. அவர்களுக்கு நானிருப்பது தெரியவில்லை. அது தெரியாமல் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பேச்சு அந்த சம்பாஷனையைக் கூர்ந்து கேட்க வைத்தது. அந்த வியாதியஸ்தர் அந்த வைத்தியசாலையில் குணமடையாமல் மூன்று மாதங்கள் இருந்திருக்கிறார். அவருக்கு வயது எழபத்தைந்துக்கு மேலிருக்கும். இறந்துபோக வேண்டும் என்று தன்னுடைய ஆசையை அவர் டாக்டரிடம் பகிர்ந்துகொள்ள அதற்கு டாக்டர் அதைத் தன்னால் நிறைவேற்றி வைக்க முடியும் என்று நம்பிக்கையளித்து வருகிற வார விடுமுறைக்குள் மனைவி மற்றும் உறவினர்களுக்கு இறுதி வார்த்தைகளை சொல்லிவிடும்படிச் சொன்னார். அதற்குப் பிறகு, அவருடைய வாழ்க்கையை முடித்துவிடுகிறேன், அது மிகவும் இலகுவானதுதான், உங்களுக்கும் தொல்லையில்லை என்று மிகச் சாதாரணமாகச் சொன்னது என்னைத் திகைத்துப் போக வைத்தது. யூத்தனேசியா என்ற நவீன சமுதாயத்தின் மரியாதையான கொலையை அந்த டாக்டர் அன்று விளக்கிக் கொண்டிருந்ததை இதுதான் முதல் தடவை நான் காதால் கேட்டிருக்கிறேன். பரலோகத்தில் இருக்கும் தேவன் இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறார், ‘சிரிக்கிறார்’ என்ற உணர்வே அந்த டாக்டருக்கு இருக்கவில்லை என்பது நிச்சயம்.

இந்த சம்பவம் அல்ல நான் இந்த ஆக்கத்தை எழுத ஆரம்பித்ததற்குக் காரணம். சமீபத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் உலகத்தில் நிகழ்ந்திருக்கின்றன. அவை பற்றி விளக்கவே இதை எழுத ஆரம்பித்தேன். ஒன்று, அமெரிக்கத் தூதரகம் இஸ்ரவேலின் எருசலேமில் அமைக்கப்பட்டது. இரண்டாவது, மலேசிய நாட்டில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களுந்தான் என்னை சங்கீதம் கர்த்தரைப்பற்றிச் சொன்ன வார்த்தைகளை நினைக்க வைத்தன.

அமெரிக்கா 22 வருடங்களுக்கு முன்பே தன் தூதரகத்தை எருசலேமுக்கு மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை காங்கிரஸில் எடுத்திருந்தபோதும் அதை நிறைவேற்றும் தைரியம் எந்த அமெரிக்கத் தலைவர்களுக்கும் இருந்ததில்லை. அது அரசியல் பிரச்சனைகளை உருவாக்கும் என்று எல்லோரும் அமைதியாக இருந்துவிட்டார்கள். பொதுவாக அமெரிக்கா எப்போதும் இஸ்ரவேலுக்கு நண்பனாக இருந்து வந்திருக்கிறது. இஸ்ரவேலுக்கு அதிக ஆயுத சப்ளை செய்வதும் அமெரிக்காவே. இஸ்ரவேலின் தலைநகராக எருசலேமை அமெரிக்கா ஏற்றுக்கொண்டிருந்தபோதும் பாலஸ்தீனியர்கள், இஸ்லாமிய நாடுகள் மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பினால் அமெரிக்கா இந்த விஷயத்தில் அமைதி காத்து வந்திருக்கிறது. இன்று அமெரிக்கா தன்னுடைய தூதரகத்தை டெல் அவீவிலிருந்து எருசலேமுக்கு மாற்றிக் கொண்டுள்ளது. அதற்கான முடிவை எடுத்தது மட்டுமல்லாமல் அதை உடனடியாகவே காலதாமதமில்லாமல் செய்து முடித்திருக்கிறது. ஐநா, பாலஸ்தீனியர்கள் மற்றும் பல உலக நாடுகள் இதைக் கண்டித்தபோதும் அமெரிக்கா அதைப்பற்றியெல்லாம் சட்டை செய்யாமல் இதைச் செய்திருக்கிறது. அமெரிக்காவின் டொனல்ட் டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவின் புதிய நிலைப்பாட்டை இதன் மூலம் பறைசாற்றியிருக்கிறது. அதாவது, எது நியாயமானது, சரியென்று படுகிறதோ அதை மற்றவர்கள் என்ன சொல்லுவார்களோ என்றெல்லாம் தயக்கம் காட்டி பயந்து நிற்காமல் உடனடியாக செய்து முடிப்பதே நல்ல தலைமைக்கு அழகு என்பதை அமெரிக்கா உலகுக்கு அறிவித்திருக்கிறது.

மைக் பென்ஸ்

அமெரிக்காவின் இந்தச் செயல் அந்நாட்டின் சுவிசேஷ கிறிஸ்தவர்கள் எந்தளவுக்கு பொதுவாழ்வில் செல்வாக்குள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறது. உதவித் தலைவராக இருக்கும் மைக் பென்ஸ் ஒரு கிறிஸ்தவர். இஸ்ரவேலும், எருசலேமும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகளில் முக்கிய இடத்தைக் கொண்டிருக்கின்றன. அமெரிக்க தூதரகத்தைத் திறந்து வைத்து மைக் பென்ஸ் எருசலேமில் உரையாற்றியிருக்கிறார். பாலஸ்தீனியர்களும், ஹமாஸ், ஹிஸ்பொலா போன்ற தீவிரவாத இயக்கங்களும், பாலஸ்தீனிய அமைப்பும் தீவிரமாக எதிர்த்து வந்திருந்த, எதைச் செய்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று உலக அரசுகள் பயந்திருந்தனவோ அந்தச் செயலை அமெரிக்க தலைமை மிகச் சாதாரணமாக செய்து முடித்திருக்கிறது. அதுவும் இஸ்ரவேல் நாடாக மலர்ந்த 70 வருட நினைவு நாளில் அதைச் செய்திருக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு சார்பான செயல், யூதர்களுக்கு ஆதரவளிக்கும் செயல் என்றெல்லாம் பயந்து நிற்காமல் அமெரிக்க தலைமை செய்திருக்கும் இந்தக் காரியம் வரலாற்றில் முக்கியமானதுதான். எது ஒருபோதும் நடக்காது என்று உலகம் நினைத்திருந்ததோ அது நடந்துவிட்டது. அத்தோடு அமெரிக்கா பகிரங்கமாக இஸ்ரவேலின் தலைநகரம் எருசலேம் என்பதை இதன் முலம் ஒத்துக்கொண்டிருக்கிறது. ஆண்டவர் நகைக்கிறார்!

மகாதீர் முகமட்

சமீபத்தில் மலேசிய நாட்டில் நிகழ்ந்த தேர்தலில் வரலாறு காணாத நிகழ்ச்சியொன்று நடந்திருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து அதை ஒரேயொரு கட்சி (அம்னோ) 61 ஆண்டுகள் ஆண்டு வந்திருக்கின்றது. நாட்டின் பிரதமர்களெல்லாம் அக்கட்சியைச் சேர்ந்தவர்களாகவே இருந்திருக்கின்றனர். அதுவும் அந்தக் கட்சி நாட்டில் அதிகத் தொகையினராக இருக்கும் மலே இனத்தவர்களுக்கு சார்பான கட்சியாக அவர்களுடைய நலத்திற்கே முக்கியத்துவம் தந்து வந்த கட்சியாக இருந்தது. ஏனைய இனத்தவர்களான சீனர்களும், இந்தியர்களும் அவர்களுக்கு அடுத்த இடத்திலேயே இத்தனை காலமும் இருந்து வந்திருக்கிறார்கள். அந்த நாட்டில் அதிக காலம் பிரதமராக இருந்து வந்திருந்தவர் மகாதீர் முகமட். இருபத்தி இரண்டு வருடங்கள் அவர் பிரதமராக இருந்து மலே இனத்தவர்களுக்கு அதிகம் செய்து வந்திருந்தார். அக்காலப்பகுதியில் இந்தியர்கள் வாழ்க்கையில் மிகவும் பின்னடைந்த நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். அவருடைய கட்சிக்கு கால்வருடும் கட்சியாகவே மலேசியாவின் இந்தியர்களின் கட்சியும் இருந்து வந்தது. வயது போய்க்கொண்டிருக்கிறது என்பதால் மகாதீர் முகமட் தன்னுடைய உதவிப் பிரதமராக இருந்த படாவியை பிரதமராக நியமித்து ஓய்வு எடுத்துக்கொண்டார்.

மகாதீர் பிரதமராக இருந்தபோது படாவிக்கு முன் அவருக்கு உதவிப்பிரதமராகவும், நிதியமைச்சராகவும் இருந்தவர் அன்வார் இப்ராகிம். இளமையும் திறமையும் கொண்டிருந்த அன்வாரின் செல்வாக்கு நாளடைவில் அதிகரித்ததைக் கண்ட மகாதீர் அதை விரும்பவில்லை. அத்தோடு அவருக்கும் நாட்டின் பொருளாதாரம் சம்பந்தமான விஷயத்தில் அன்வாருக்கும் கருத்துவேறுபாடு உருவாகியது. மகாதீர் அன்வாரைப் பதவியில் இருந்து நீக்கி இல்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தி ஜெயிலில் தள்ளினார். சிலவருடங்களுக்குப் பின் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அன்வார் புதுக்கட்சியொன்றை (பக்கட்டான் ரெக்யெட் & மக்கள் நீதிக்கட்சி) ஆரம்பித்தார். மக்கள் சுதந்திரம் என்ற கோட்பாட்டை முன்வைத்து தேர்தலில் நின்ற அந்தக் கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றது. அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் அன்வாரின் கட்சி அதிக பலமடைந்து முதன் முறையாக பெருந்தொகையினர் எதிர்க்கட்சி பாராளுமன்ற அங்கத்தவர்களாகினர். ஆளும் கட்சியில் பெரும்பான்மை இல்லாமல் போனது. இருந்தும் அன்வாரின் கட்சியால் ஆட்சியைப் பிடிக்குமளவுக்கு இடங்கள் கிடைக்கவில்லை. படாவிக்குப் பின் பிரதமராக வந்த நஜீப் ரசாக் (அவருடைய தந்தை முன்னாள் பிரதமர்) அன்வாரின் செல்வாக்கு உயர்வதைப் பிடிக்காமல் மறுபடியும் போலிக்குற்றச்சாட்டுகளை சுமத்தி ஆட்சியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜெயிலில் தள்ளினார். அன்வாரின் மனைவி வென் அசீசா கட்சியின் தலைவரானார். அவருடைய மகள் நூருளும் நாடாளுமன்ற அங்கத்தவராக இருந்தார். அவர்கள் அன்வாரின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடி வந்தனர்.

அன்வார் ஜெயில் தள்ளப்பட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு பிரதமர் நஜீப் ரசாக்கின் எல்லையற்ற பணமோகத்தையும், அதிகார துஷ்பிரயோகத்தையும், கோடிக்கணக்கான அரச நிதிச் சுரண்டலையும் கண்டு கோபமுற்ற முன்னாள் பிரதமரான மகாதீர் முகமட் ஓய்வில் இருந்து வெளிவந்து அன்வாரின் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அத்தோடு நஜீப்புக்கு எதிராக மக்கள் முன் கூட்டங்களில் பேச ஆரம்பித்தார். அன்வாரின் கட்சித் தலைவராக இருந்த அன்வாரின் மனைவியும் மனம் மாறி தன் கணவனுக்கு துரோகம் செய்திருந்த மகாதீரை மன்னித்தார். சமீபத்தில் நிகழ்ந்த தேர்தலில் அன்வாரின் கட்சி ஏனைய எதிர்க்கட்சிகளோடும் மகாதீரோடும் இணைந்து நஜீப்புக்கு எதிராக தேர்தலில் நின்றது. பிரதமர் நஜீப்பும், ஆளும் அம்னோ கட்சியும், அரச இயந்திரங்களும் எதிர்க்கட்சிகள் வெற்றிபெறாமல் இருக்க அவர்களுக்கு எதிராக என்னென்ன தடைகளை உண்டாக்க முடியுமோ அதையெல்லாம் செய்தனர். தேர்தலை எப்போதும் இல்லாதவாறு வாரநாளிலும் வைத்தனர். இருந்தும் தேர்தலில் பெரும்பான்மை இடங்களையும், வாக்கையும் பெற்று எதிர்க்கட்சி மலேசியா வரலாற்றில் முதன் முறையாக ஆட்சியைப் பிடித்தது. ஏற்கனவே எதிர்க்கட்சிகளால் தீர்மானிக்கப்பட்டிருந்தபடி மகாதீர் முகமட் அவருடைய அனுபவத்தின் அடிப்படையில் 93ம் வயதில் பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டார். நிச்சயம் மலே மக்கள் மத்தியில் மகாதீருக்கு தொடர்ந்து இருந்த செல்வாக்கு எதிர்க்கட்சிகளுக்கு உதவிசெய்தது. உலகத்தில் இத்தனை வயதில் ஆட்சியில் இருக்கும் ஒரே தலைவர் மகாதீர்.

மகாதீர் ஒரிரு வருடங்களுக்கு மட்டுமே பிரதமராக இருப்பேன் என்றும் அதற்குப் பிறகு அன்வார் பிரதமராவார் என்றும் அறிவித்தார். பிரதமரானதும் அவர் செய்த முதல் காரியமே நாட்டு அரசரைச் சந்தித்து அன்வாரை விடுதலை செய்யும்படி கேட்டுக்கொண்டதுதான். அதன்படி முழு மன்னிப்புப் பெற்று அன்வார் இப்போது விடுதலையாகியிருக்கிறார். மகாதீரின் உதவிப் பிரதமராக அன்வாரின் மனைவி வென் அசாசி பதவியில் இருக்கிறார். தேர்தல் முடிந்து முதல் முறையாக மலே, சீன மற்றும் இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி இப்போது நாட்டை ஆளுகிறது. தனக்கு என்ன நடந்தது என்பதை ஆட்சியில் இருந்த மலே கட்சியான அம்னோ இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறது; அது இன்னும் ஆட்சியை இழந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. தன்னை அசைக்க முடியாது என்று எண்ணி வாழ்ந்த முன்னாள் பிரதமர் நஜீமும் அவருடைய மனைவியும் கணக்கற்ற அரச குற்றச்சாட்டுகளுக்கும், தொடரப்படப்போகும் நீதிமன்ற வழக்குகளுக்கும் முகங்கொடுத்து பயத்தோடு வாழ்ந்து வருகின்றனர். நஜீப்பின் மனைவி அரச நிதியைப்பயன்படுத்தி வாழ்ந்திருக்கும் சொகுசு வாழ்க்கை பற்றிய விபரங்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பத்திரிகைகளில் வர ஆரம்பித்திருக்கின்றன. அது தமிழகத்து ஜெயலலிதாவை நினைவுபடுத்துவதாக இருக்கிறது.

மலேசியாவில் நடந்திருக்கும் ‘அரசியல் சுனாமி’ நாட்டு மக்களை முதல்தடவையாக சுதந்திரக் காற்றை சுவாசிக்கும்படிச் செய்திருக்கிறது. அரசு மக்களாட்சி நடத்தும் என்ற நம்பிக்கை வலுத்திருக்கிறது. அதையெல்லாம் விட மேலாக நாட்டில் மதசுதந்திரத்துக்கு மதிப்பளிக்கப்படும் என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறது. இதுவரை மலே மக்களின் இஸ்லாமிய மதநம்பிக்கைக்கு மட்டுமே முதலிடம் தரப்பட்டிருந்தது. கிடைத்திருக்கும் சுதந்திரமும், அரசியல் மாற்றங்களும் மலேசியாவில் முழு மத சுதந்திரத்துக்கு வழிவகுத்து கிறிஸ்தவ சுவிசேஷம் எந்தளவுக்குப் பரவி நாட்டு மக்களின் ஆத்மீக விடுதலைக்கு வழிவகுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். கிடைத்திருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி திருச்சபைகள் வேதபூர்வமான வழிமுறைகளை மட்டும் நாடி கிறிஸ்துவை மனந்திரும்புதலோடு மகிமைப்படுத்த வேண்டிய பொன்னான காலங்கள் இவை. பரலோகத்தில் அமைதியாக இருந்து ஆண்டவர் நகைக்கிறார்!

————————————————————————————————————

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 32 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.