வேதம் மட்டுமே! வேறெதுவும் வேண்டாம்

நான் வாசித்த மூன்று நூல்கள்

சமீபத்தில் அருமையான மூன்று ஆங்கில நூல்களை வாசிக்க முடிந்தது. என் மனைவிக்கு அறுவை சிகிச்சை நடந்திருந்ததால் அவரைக் கவனித்துக்கொள்ளுவதற்காக ஊழியப்பணிகளில் இருந்து இரண்டு வாரம் ஓய்வெடுத்திருந்தேன். அந்தக் காலங்களைப் பிரயோஜனமாகப் பயன்படுத்தி இந்த நூல்களை வாசிக்கமுடிந்தது. உண்மையில் இந்த மூன்று நூல்களையும் ஒரே நேரத்தில் மாறி மாறி வாசித்தேன். ஒன்று கர்த்தரின் உடன்படிக்கையைப்பற்றி நண்பர் கிரெக் நிக்கல்ஸ் எழுதிய இறையியல் நூல் (The Covenant Theology, Greg Nichols, 365pgs). இது கவனத்தோடு பொறுமையாக வாசிக்கவேண்டிய இறையியல் ஆக்கம். இரண்டாவது, விசுவாச அறிக்கைகளின் அவசியத்தைப் பற்றி கார்ல் ட்ரூமன் எழுதிய நூல் (Creedal Imperative, Carl Trueman). மூன்றாவது போதக, பிரசங்க ஊழியப்பணி பற்றி ரொபட் ரேமன்ட் எழுதிய நூல் (The God Centered Preacher, Robert Reymond, 351pgs).

இந்த மூன்று நூல்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததுபோல் காணப்பட்டாலும் ஒரு முக்கிய விஷயத்தில் மூன்று நூலாசிரியர்களும் ஆணித்தரமான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அதை அவர்கள் வெளிப்படையாகவே நூலில் பல்வேறு விதங்களில் விளக்கியிருக்கிறார்கள். அதாவது இவர்கள் மூவரும் 16ம், 17ம் நூற்றாண்டு விசுவாச அறிக்கைகளின் அடிப்படையிலான சீர்திருத்த விசுவாசத்தை உறுதியோடு விசுவாசிக்கிறவர்கள். இவர்களில் இருவர் பிரஸ்பிடீரியன் சபைப் பிரிவைச் சேர்ந்தவர்கள்; ஒருவர் சீர்திருத்த பாப்திஸ்து, என் நல்ல நண்பர். கார்ல் ட்ரூமனும், ரேமன்டும் வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கையையும், நண்பர் நிக்கல்ஸ் 1689 விசுவாச அறிக்கையையும் விசுவாசிக்கிறவர்கள். முதலிரு பிரெஸ்பிடீரியன் இறையியலறிஞர்களும் சீர்திருத்த பாப்திஸ்துகளை மதிக்கிறவர்கள். அதேபோல் நண்பர் நிக்கல்ஸ் தன் நூலில் சினாட் ஆப் டோர்ட் மற்றும் பியூரிட்டன் வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கைகளுக்கு மதிப்புக் கொடுத்து தன் நூலை எழுதியிருக்கிறார். சாதாரணமாக பிரெஸ்பிடீரியன் பிரிவினர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் பாப்திஸ்துகள் சீர்திருத்தவாதத்தை நம்புகிறவர்களாக இருக்க முடியாது (Baptists cannot be Reformed) என்று கருதி வந்தபோதும் இந்த இருவருக்கும் அந்த வியாதி இல்லை. இந்த இருவரும் சீர்திருத்த பாப்திஸ்து இறையியலறிஞர்களோடும், திருச்சபைகளோடும் நல்லுறவு வைத்து பல விஷயங்களில் இணைந்துழைக்கிறார்கள். அதேபோல் நண்பர் நிக்கல்ஸும் இருந்து வருகிறார். இந்த மூவருக்கும் 17ம் நூற்றாண்டில் பியூரிட்டன் பிரெஸ்பிடீரியன்களும், பியூரிட்டன் ஜோன் ஓவனின் கொங்கிரிகேஷனலிஸ்டுகளும், பியூரிட்டன் சீர்திருத்த பாப்திஸ்துகளும் நல்லறவு வைத்திருந்து இணைந்து பணியாற்றியிருந்ததை நன்கு அறிந்திருக்கிறார்கள்.

நண்பர் கிரெக் நிக்கல்ஸின் கர்த்தரின் உடன்படிக்கைபற்றிய நூல், 16, 17ம் நூற்றாண்டு சீர்திருத்த பியூரிட்டன் காலப்பகுதிகளில் வெளிவந்த விசுவாச அறிக்கைகளைப் பின்னணியாகக் கொண்டு கர்த்தரின் உடன்படிக்கை பற்றிய சத்தியத்தை, அதுவும் அதுபற்றிய சீர்திருத்த பாப்திஸ்துகளின் நிலைப்பாட்டை ஆய்வு செய்கிறது. ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த இறையியல் அறிஞரான கார்ல் ட்ரூமன், சத்தியத்தில் திருச்சபை நிலைத்திருக்க விசுவாச அறிக்கை எத்தனை அவசியமானது என்பதைத் துல்லியமாக விளக்குகிறார். இதுபற்றி இதுவரை நான் வாசித்திருக்கும் நூல்களில் இது சிறப்பானது என்று சொல்வேன். ரொபட் ரேமன்ட் போதக, பிரசங்க ஊழியப்பணி வேதபூர்வமானதாக இருப்பதற்கு அது சீர்திருத்த விசுவாசத்தின் அடிப்படையில், விசுவாச அறிக்கைகள் விளக்கும் சத்தியங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கவேண்டும் என்று விளக்குகிறார். இத்தனை தைரியத்தோடு இதை இவர் எழுதியிருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டேன்; மறுபுறம் ஆனந்தமும்கூட. ஆகவே, இவர்கள் மூவரும் வரலாற்று விசுவாச அறிக்கை விளக்கும் சத்தியங்களில் ஆழமான நம்பிக்கைகொண்ட, அவற்றை அறிக்கையிடும் இறையியல் அறிஞர்கள் (Confessional theologians).

வேதம் மட்டுமே

‘வேதம் மட்டுமே வேறெதுவும் தேவையில்லை’ என்ற சுலோகம் இன்று நேற்றில்லாமல் இருந்து வந்திருக்கிறது. இதை யெகோவாவின் சாட்சிகளில் இருந்து இன்றிருக்கும் சுவிசேஷக் கிறிஸ்தவ சபைப்பிரிவுகள்வரை அனைவரும் அறிக்கையிட்டு வருகிறார்கள். இவர்கள் வேதத்திற்கு மட்டுமே நாம் அடிபணிவோம், வெறெதற்கும் அடிபணிய மாட்டோம் என்று மட்டுமல்லாமல், வேதத்தைத் தவிர வெறெதையும் வாசிக்க மாட்டோம், சபைக்குள்ளும் அனுமதிக்கமாட்டோம் என்று அறைகூவலிடுகிறார்கள். ஆங்கிலத்தில் இந்த நிலைப்பாட்டை ‘No Creed, No Confession, Bible alone’ என்று சொல்லுவார்கள். இதை மேலைத்தேய சபைகள் மத்தியில் மட்டுமல்லாமல் கீழைத்தேய நாடுகளிலும் எங்கும் பரவலாகக் காணலாம்.

உண்மையில் ‘வேதம் மட்டுமே’ (Scripture alone) என்ற வார்த்தைப் பிரயோகம் 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாத காலத்தில் எழுந்தது. மார்டின் லூத்தரும், ஜோன் கல்வினும் இதை வலியுறுத்திப் பேசி எழுதியிருக்கிறார்கள். அதற்குக் காரணம், அன்று ரோமன் கத்தொலிக்க மதம் வேதத்தை அடியோடு புறக்கணித்து பெயரளவில் மட்டும் அதைப் பயன்படுத்தி வேதத்தில் இல்லாத எல்லாவற்றையும் கத்தோலிக்கர்கள் தங்களுடைய ஆத்மீக விருத்திக்காகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். கிரியையினாலேயே இரட்சிப்பு கிடைக்கும் என்று போதித்த கத்தோலிக்க மதம், பரிசேயர்களைப்போல ஆயிரக்கணக்கான நிபந்தனைகளை உருவாக்கி கத்தோலிக்கர்கள் அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. இயேசு பிரசங்கித்த மலைப்பிரசங்கம் பரிசேயர்களுக்கு எதிரானது மட்டுமல்லாமல் வார்த்தைக்கு வார்த்தை கத்தோலிக்க மதத்திற்கும் எதிரானதாகும். கத்தோலிக்க மதம் அன்று இந்த விதத்தில் வேதத்தின் அதிகாரத்தையும், பயன்பாட்டையும் சிதைத்து தான் சுயமாக உண்டாக்கிய நிபந்தனைகளுக்கு மக்களை அடிமைப்படுத்தியதால் அதற்கு எதிராகப் போராடி வெற்றிகண்ட சீர்திருத்தவாதிகள் ‘வேதம் மட்டுமே’ என்ற சுலோகத்தை உருவாக்கினார்கள். இந்த வார்த்தைப்பிரயோகத்தில் ‘மட்டுமே’ (alone) என்ற வார்த்தை வேதத்தைத் தவிர வெறெதுவும் நமக்கு அதிகாரமாக இருக்கக்கூடாது என்ற அர்த்தத்தையும், அதிலிருந்து மட்டுமே எந்தப் போதனையையும் பெற்றுக்கொள்ள வேண்டும், பின்பற்ற வேண்டும் என்ற போதனையையும் விளக்குவதாக இருந்தது. இந்த வார்த்தைப் பிரயோகத்தைப் புரிந்துகொள்ளுவதற்கு நமக்கு வரலாற்று ஞானம் அவசியமாகிறது. 16ம் நூற்றாண்டு வரலாற்றில் இந்த வார்த்தைப் பிரயோகம் உருவாகியிருப்பதால் அதன் அடிப்படையில் மட்டுமே இதை விளங்கிக்கொண்டு விளக்கங்கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த வார்த்தைப் பிரயோகம் பொருளற்றதாகிவிடும்; தவறான கருத்தைத் தந்துவிடும். இந்த வார்த்தைப் பிரயோகத்தை உருவாக்கிய சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன் பெரியவர்களுமே வரலாற்று விசுவாச அறிக்கைகளையும், வினாவிடைப்போதனைகளையும் எழுத்தில் வடித்து நமக்குத் தந்திருக்கிறார்கள். ‘வேதம் மட்டுமே’ என்று அறைகூவலிட்ட இந்த தேவமனிதர்கள் விசுவாச அறிக்கைகளைப் பயன்படுத்துவது வேதத்திற்கு எதிரான செயல் என்று எண்ணியிருந்தால், அவற்றை எழுதி, வெளியிட்டு, பயன்படுத்தியோடு திருச்சபைக்கு உதவட்டும் என்று விட்டுச் சென்றிருப்பார்களா? சிந்தித்துப் பாருங்கள். ஆகவே, ‘வேதம் மட்டுமே’ என்ற சீர்திருத்தவாத வார்த்தைப் பிரயோகம் விசுவாச அறிக்கைகளுக்கும், வினாவிடைப்போதனைகளுக்கும் எதிரான வார்த்தைப் பிரயோகமல்ல; அப்படி எண்ணுவது மிகப் பெரிய தவறு. சமீபத்தில், இயன் மரே எழுதி வெளிவந்த ஒரு நூலில், ‘வேதத்தை அடியோடு அகற்றி அதன் இடத்தை எடுத்துக்கொள்ளுவதல்ல விசுவாச அறிக்கைகளின் நோக்கம்; சத்தியத்திற்கு மாறாக அதற்கு விளக்கங்கொடுப்பதைத் தவிர்ப்பதுதான்’ என்று விளக்கியிருக்கிறார்.

இன்று சுவிசேஷத் திருச்சபைகளில் பெரும்பாலானவை இந்த வரலாறெல்லாம் தெரியாமல் வார்த்தைக்கு வார்த்தை ‘வேதம் மட்டுமே’ என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதைப் பயன்படுத்துகிற இவர்கள் இதன் மூலம் விளக்குவதென்ன தெரியுமா? ‘நாங்கள் எந்த விசுவாச அறிக்கையையும் வைத்துக்கொள்ள மாட்டோம், நாங்கள் விசுவாசிப்பதைத் தெளிவாக துல்லியமாக விளக்கமாட்டோம். வேதத்தை விசுவாசிக்கிறோம், இயேசுவை விசுவாசிக்கிறோம், அது மட்டுமே முக்கியம் வேறெதுவும் முக்கியமில்லை’ என்று சொல்லுகிறார்கள். அதனால்தான் இவர்களுடைய சபைகளில் எதை விசுவாசிக்கிறோம் என்பதை விளக்கும் எந்தவித அறிக்கையும் இருக்காது. சட்டவிதிகள் இருக்காது. கிறிஸ்துவை விசுவாசிக்கிறோம், வேதத்தை விசுவாசிக்கிறோம் என்ற வார்த்தைகளைக் தவிர வேறெதையும் இவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. விசுவாச அறிக்கை தேவையில்லை, நாங்கள் விசுவாசிப்பதைத் தெளிவாக சொல்லமாட்டோம் என்று இவர்கள் சொல்லுகிறபோது இவர்கள் ஏற்கனவே அந்த அறிக்கைக்கு தங்களை ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள் என்பதை இவர்கள் உணரவில்லை. உலகத்தில் எவருமே ஏதாவதொரு நம்பிக்கை இல்லாமல் வாழ்வதில்லை. ஆண்டவர் இல்லை என்று மறுக்கிறவனுக்கு அதுவே அவனுடைய நம்பிக்கையாக, அறிக்கையாக இருக்கிறது. தன் விசுவாசம் எப்படிப்பட்டதென்று தெளிவாக விளக்க மறுக்கிறவனுக்கு அதுவே அவனுடைய அறிக்கையாக இருக்கிறது. அதாவது, குறைந்தளவுக்கு மட்டுமே என் விசுவாசம் இருக்கும் என்பது அவனுடைய அறிக்கை.

விசுவாச அறிக்கை அலர்ஜி

கார்ல் ட்ரூமன் தன்னுடைய நூலில் சொல்லுகிறார், ‘எதையும் அறிக்கையிட மாட்டோம் என்று சொல்லுகிற இவர்கள் ஏற்கனவே ஒரு அறிக்கையை வெளிப்படையாக அறிக்கையிட்டிருப்பதை மறந்துவிடுகிறார்கள். தங்களுடைய விசுவாசத்தை அறிக்கையிட மாட்டோம் என்பது இவர்களுடைய அறிக்கையாக இருக்கிறது என்பது இவர்களுக்குத் தெரியவில்லை.’ நீங்களே ஆராய்ந்து பாருங்கள், விசுவாச அறிக்கை அவசியமில்லை என்றும், தாங்கள் விசுவாசிப்பதை விளக்கிச் சொல்லமாட்டோம் என்றும், வேதத்தை மட்டுமே நம்புகிறோம் என்றும் சொல்லுகிற சபைப்பிரிவுகளெல்லாம் எந்த அறிக்கையையும் கொண்டிருக்கவில்லையா? நிச்சயமாகக் கொண்டிருக்கிறார்கள். எந்த விசுவாச அறிக்கையையும் கொண்டிராத கெரிஸ்மெட்டிக் சபை அந்நிய பாஷையில் பேசாதவர்கள் ஆவியில்லாதவர்கள் என்பதை அடித்துச் சொல்லிவருகிறது. சீர்திருத்த சத்தியம் வேண்டாம், விசுவாச அறிக்கை வேண்டாம், சபை சட்டஅமைப்பு வேண்டாம் என்று சொல்லுகிற சகோதரத்துவ சபைகள் விடமாட்டேன் சாமி என்று, காலக்கூறு கோட்பாட்டைப் பின்பற்றி வருகின்றன. எனவே ‘வேதம் மட்டுமே’ என்று அறிக்கையிடுகிற இவர்கள் உண்மையில் பல விஷயங்களை ஆணித்தரமாக விசுவாசிக்கும் அதேவேளையில் அவற்றை விளக்கிச் சொல்ல மட்டும் மறுக்கிறார்கள்.

தாங்கள் விசுவாசிக்கின்றவற்றை வெளிப்படையாக சொல்ல மறுத்து, தாங்கள் யார் என்பதை இனங்காட்டிக் கொள்ளாமல் அதை மறைத்து, விசுவாச அறிக்கை கூடாது என்று இவர்கள் சொல்லுவதற்குப் பல காரணங்கள் உண்டு.

  1. இவர்களில் பலருக்கு உண்மையில் எதை விசுவாசிக்கிறோம் என்பதில் ஆணித்தரமான உறுதியில்லை. அதனால் விசுவாசிப்பவற்றை இவர்களால் தெளிவாக அறிக்கையிட முடியாதிருக்கிறது. விசுவாச அறிக்கை தேவையில்லை என்று இவர்கள் கூறுவது உண்மையை மறைப்பதற்காகவே.
  2. பலர் தாங்கள் விசுவாசிப்பதை அறிக்கையிட்டு தங்களை இனங்காட்டிவிட்டால் எல்லாத்தரப்பாரும் சபைக்கு வராமல் போய்விடுவார்கள் என்று பயப்படுகிறார்கள். அதனால் கிறிஸ்துவை விசுவாசிக்கிறோம், வேதத்தை விசுவாசிக்கிறோம் என்பதை மட்டுமே சொல்லுவதோடு நிறுத்திக்கொள்ளுகிறார்கள். இதனால் பலதரப்பட்ட நம்பிக்கை கொண்டவர்களும் சபைக்கு வருகிற வாய்ப்பு இருக்கிறது.
  3. வேதம் மட்டுமே என்று சொல்லுவதோடு நிறுத்திக்கொண்டால் ஒரு போதகன் தான் எதை விசுவாசிக்கிறேன் என்பதை மறைத்து ஆளாளுக்கு ஏற்றவிதத்தில் போதனைகளைத் தந்து தன்னுடைய தொழிலைக் காப்பாற்றிக்கொள்ள முடிகிறது.
  4. சிலர் வேதசத்தியங்களை ஆழமாக அறிந்திருப்பது அவசியமில்லை என்றும், அப்படி ஆழமாக அறிந்திருப்பது ஐக்கியத்துக்கு உதவாது என்றும் கருதி விசுவாச அறிக்கை பிரிவினையை உண்டாக்கும் என்று அதற்கு விலகி நிற்கிறார்கள்.
  5. சிலர் எந்த விசுவாச அறிக்கையும் வேதத்திற்கு முரணானது என்ற முற்றிலும் தப்பான எண்ணத்தில் அதை நிராகரிக்கிறார்கள்.
  6. சிலர் மனிதனால் எழுதப்பட்ட விசுவாச அறிக்கையை வைத்திருப்பதும், நம்புவதும் வேதத்தில் இருக்க வேண்டிய நம்பிக்கையை சிதைத்துவிடும் என்று நம்பி அதற்கு விலகி நிற்கிறார்கள்.
  7. வேறு சிலர் விசுவாச அறிக்கைகள் மிகவும் பழமையான வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்ததால் (16, 17ம் நூற்றாண்டு) அவற்றால் நவீன கால கிறிஸ்தவத்துக்குப் பயனில்லை என்ற மிகத் தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

சுவிசேஷ கிறிஸ்தவர்களில் அநேகர் தரும் இந்தக் காரணங்களுக்கெல்லாம் பதிலளிப்பது அவசியம். விசுவாச அறிக்கைகளை நிராகரித்து அவற்றை வேதத்திற்கு முரணானவையாகப் பார்க்கிறவர்களைப்பற்றி கார்ல் ட்ரூமன் முக்கியமானதொரு உண்மையை நம்முன் வைக்கிறார். ‘விசுவாச அறிக்கை மனிதன் எழுதியது, அது தேவையில்லை என்கிறவர்கள் தங்களுடைய நம்பிக்கைகளை இரகசியமாக வைத்திருந்து, அவற்றை எழுத்தில் வெளியிடாமலும், எவரும் அவற்றை ஆராய்ந்து அவை வேதபூர்வமானவையா என்று தீர்மானிக்க வழியில்லாமலும் செய்கிறார்கள்.’ இதுவே இவர்களைப்பற்றிய உண்மை. இவர்கள் எந்த விசுவாச அறிக்கையையும் எதிர்ப்பதற்குக் காரணம் தங்களுடைய இரகசியமான நம்பிக்கைகளை இரகசியமாக வைத்திருந்து எவரும் அவற்றை அறிந்துகொள்ளாமல் இருக்கச் செய்வதுதான்.

விசுவாசத்தை அறிக்கை செய்யாவிட்டால் ஆபத்து

விசுவாச அறிக்கைகளை ஏற்று அவற்றிற்கு நம்மை ஒப்புக்கொடுப்பதில் இல்லை ஆபத்து; அவற்றை வேதத்தைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து வேதபூர்வமானவையா என்று தீர்மானிக்காமல் இருப்பதுதான் ஆபத்து. எதுவுமே வேதத்தின் போதனைகளால் ஆராயப்பட வேண்டும். வரலாற்றில் எழுந்திருக்கும் விசுவாச அறிக்கைகள் வேதத்தில் இருந்து எடுக்கப்பட்டு, வேதத்தினால் ஆராயப்பட்டு, ஆவிக்குரிய இறையியலறிஞர்களால் பரிசீலிக்கப்பட்டு 300 வருடங்களுக்கு மேலாக சீர்திருத்த திருச்சபைப் பிரிவுகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தளவுக்கு ஆய்வுக்குள்ளாகி, அங்கீகரிக்கப்பட்டு, வரலாற்றில் நிலைத்திருக்கும் விசுவாச அறிக்கைகள் எப்படி திருச்சபைகளுக்கு ஆபத்தானவையாக அமைய முடியும்? உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? சீர்திருத்த விசுவாச அறிக்கைகள் எதுவுமே தனிமனிதனால் எழுதப்பட்டவையல்ல. அவை சீர்திருத்தவாத, பியூரிட்டன் திருச்சபை இறையியல் அறிஞர்களால் திருச்சபைகளின் அனுமதியோடு பலகாலம் கூடி ஆய்வுசெய்து, விவாதித்து, திருச்சபைகளால் பரிசீலிக்கப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்பட்டு, அங்கீகரித்து திருச்சபைகளின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டவை. அதனால்தான் இவை திருச்சபை விசுவாச அறிக்கைகளாக இன்றும் இருந்துவருகின்றன. இந்த வகையிலேயே சினாட் ஆப் டோர்ட், பெல்ஜிக் விசுவாச அறிக்கை, ஹைடில்பேர்க் வினாவிடைத் தொகுப்பு, வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை மற்றும் வினாவிடைத் தொகுப்புகள், 1689 பாப்திஸ்து விசுவாச அறிக்கை ஆகியவை வெளியிடப்பட்டன.

விசுவாச அறிக்கைகள் பழங்காலத்தைச் சேர்ந்தவை; அவற்றால் நவீன காலத்துக்கு நடைமுறைப்பயனில்லை என்ற வாதம் உப்புச்சப்பில்லாதது. வேதமும் மிகவும் பழமையானதுதான். அதனால் அதை ஒதுக்கிவிடப் போகிறீர்களா? விசுவாச அறிக்கைகளைப் பொறுத்தவரையில் அவை எப்போது எழுதப்பட்டவை என்பதல்ல முக்கியம், அவை எதைப் போதிக்கின்றன என்பதுதான் முக்கியம். இறையியலில், ஏனைய இறையியல் பயிற்சிகளைப்போல வரலாற்று இறையியல் (Historical theology) மிகமுக்கியமானது. இது வேதசத்தியங்கள் எந்தெந்தக காலத்தில் என்னென்ன ஆபத்துகளைச் சந்தித்தன என்றும், திருச்சபை அவற்றை எவ்வாறு எதிர்கொண்டு சத்தியத்தில் உறுதியாக இருந்தன என்றும் விளக்குகின்றது. வரலாற்று இறையியலை வாசிக்கின்றபோது ஆதிசபை முதல் மூன்று நூற்றாண்டுகளைக் கடப்பதற்கு முன்பே பல போலிப்போதனைகளைக் கர்த்தரைக் குறித்த போதனைகள் தொடர்பாக சந்தித்திருப்பதையும் அதன் காரணமாக எழுந்த விசுவாச அறிக்கைகளையும் விளக்குவதைக் காண்கிறோம். (அப்போஸ்தலர்கள் விசுவாச அறிக்கை, நைசீன் விசுவாச அறிக்கை 381, கெல்சிடோனியன் விசுவாச அறிக்கை 451). இந்தப் பழம்பெரும் வரலாறில்லாமல் நவீனகாலத்தில் சத்தியத்துக்கு எதிராக உருவாகும் ஆபத்துக்களை ஒருவரால் எப்படித் தடுத்து வெற்றிகொள்ள முடியும்? திருச்சபை வரலாறு நமக்கு வலிமையூட்டுகிறது; வரலாற்றை நிராகரிக்கிறவர்களின் ஆவிக்குரிய எதிர்காலம் வளமையாக இருக்கமுடியாது. ‘விஞ்ஞான உலகம் பெற்றுத்தந்திருக்கும் குழந்தையே வரலாற்றை நிராகரிக்கும் நவீன காலத்தவறு’ என்கிறார் கார்ல் ட்ரூமன்.

வார்த்தைகளுடையதும், வார்த்தைப் பிரயோகங்களினதும் முக்கியத்துவத்தை ஆரம்பத்திலேயே விளக்கியிருந்தேன். சிந்தித்துப் பாருங்கள்; வரலாற்றில் எழுந்த விசுவாச அறிக்கைகளும், வினாவிடைப் போதனைகளும் தேவையற்றவையாக இருக்குமானால் எங்கிருந்து நாம் இறையியல் வார்த்தைப் பிரயோகங்களைப் பெற்றுக்கொள்ளப் போகிறோம்? நீதிமானாக்குதல், பரிசுத்தமாக்குதல், பரிகாரப்பலி, விசுவாசத்தினால் மட்டும், கிருபையின் அடிப்படையிலான உடன்படிக்கை, நிபந்தனையற்ற தெரிந்துகொள்ளுதல், முழுமையான பாவச்சீரழிவு போன்ற இறையியல் வார்த்தைப் பிரயோகங்களை அறியாமல் தட்டுத்தடுமாறி அரைகுறை வேத அறிவோடு 16ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்த கத்தோலிக்க காட்டாட்சிக்காலத்தில் இருந்ததைப்போலல்லவா தள்ளாடிக்கொண்டிருந்திருப்போம். வரலாற்று விசுவாச அறிக்கைகள் நமக்கு இந்த வார்த்தைப் பிரயோகங்களை அறிமுகப்படுத்தி வேதஞானத்தை வளர்த்துக்கொள்ள துணை செய்கின்றன.

விசுவாச அறிக்கைகள் தெளிவாக துல்லியமாக வேத சத்தியங்களை முறைப்படுத்தி வழங்குவதால் சத்தியத்தைப் பாதுகாத்துக்கொள்ளவும், போலிப்போதனைகளைத் தவிர்த்துக்கொள்ளவும் முடிகிறது. ‘கிறிஸ்து எல்லோருக்குமாக மரித்தார்’ என்பது பரவலாக சுவிசேஷக் கிறிஸ்தவம் நம்பிவரும் ஒரு போதனை. இது தவறு என்பதை அறியாமலேயே பெரும்பாலானோர் இருந்து வருகிறார்கள். இது எத்தனை ஆபத்தானது என்ற உணர்வும் அவர்களுக்கில்லை. இது ஒன்றும் அத்தனை பெரிய ஆபத்தான விஷயமல்ல என்று அசட்டை செய்கிறவர்களும் அநேகம். வரலாற்று விசுவாச அறிக்கைகளையும், வினாவிடைப்போதனைகளையும் ஆராய்ந்து வாசிக்கின்றபோதுதான் இது சாதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டிய விஷயமல்ல; மிகவும் ஆபத்தான, கிறிஸ்துவின் வருகையின் காரணத்தையும், அவர் நிறைவேற்றிய பரிகாரப்பலியின் தன்மையையும், சுவிசேஷத்தையும் மாற்றிப்போதிக்கின்ற மோசமான போலிப்போதனை என்பது தெரியவரும். வரலாற்று விசுவாச அறிக்கைகளையும், வினாவிடைப்போதனைகளையும் பயன்படுத்தாதவர்கள் மத்தியில் நடமாடி வரும் இந்தப் போதனை எந்தளவுக்கு விசுவாச அறிக்கைகள் அவசியமானவை என்பதை உணர்த்துகிறதா, இல்லையா?

‘நாம் கிருபையின் காலத்தில் இருக்கிறோம், அதனால் பத்துக் கட்டளைகளை நடைமுறையில் பின்பற்றவேண்டிய அவசியமில்லை’ என்பதைக் காலக்கூறு கோட்பாட்டைப் பின்பற்றுகிறவர்களும், அன்டிநோமியனிச புதிய உடன்படிக்கை இறையியலைப் பின்பற்றுகிறவர்களும், பொதுவாகவே அனைத்து சுவிசேஷ கிறிஸ்தவ திருச்சபைகளும் நம்பி வருகின்றன. இது எத்தனை தவறான போதனை என்பதை வரலாற்று விசுவாச அறிக்கைகள் நமக்கு விளக்கி சத்தியத்துக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன. இந்தக் கோட்பாட்டைப் பின்பற்றுகிறவர்கள் வரலாற்று விசுவாச அறிக்கைகளை நிராகரிக்கிறார்கள். அதில் ஆச்சரியமில்லை; ஏனெனில் அவர்களுடைய போதனையில் அது மண்ணை வாரிக்கொட்டுகிறது.

இதேபோல் திரித்துவம் பற்றியும், கிறிஸ்து பற்றியும், கிறிஸ்துவின் பரிகாரப்பலி பற்றியும், நீதிமானாக்குதல் பற்றியும், பரிசுத்தமாக்குதல் பற்றியும் விசுவாச அறிக்கைகள் தெளிவான வேதவிளக்கத்தைத் தந்து போலிப்போதனைகளை இனங்காட்டி சத்தியப்பாதுகாப்புத் தூணாக நிற்கின்றன. இந்த அடிப்படை வேத சத்தியங்களில் வேதத்துக்கு முரணான கருத்துக்களைக் கொண்டிருக்கிறவர்களல்லவா விசுவாச அறிக்கைகளைக் கண்டு பயப்பட வேண்டும்? சத்தியத்துக்கு மட்டுமே கட்டுப்படுவேன் என்கிற கிறிஸ்தவ விசுவாசி, விசுவாச அறிக்கைகளைக் கைநீட்டி வரவேற்கிறவனாக அல்லவா இருப்பான்.

மூன்று நல்ல நூல்களை வாசித்த சுகமான அனுபவம் மட்டுமல்லாது, ‘வேதம் மட்டுமே’ என்ற சீர்திருத்த வார்த்தைப் பிரயோகத்தின் மெய்யான அர்த்தத்தைத் தெரிந்து வைத்திருந்து இந்நூல்களை எழுதியிருக்கும் ஆசிரியர்களின் விசுவாசமும் எனக்கு மனநிறைவைத் தந்தது. வரலாற்று சீர்திருத்தவாதத்தின் ஐந்நூறாவது ஆண்டைக் கடந்து வந்திருக்கும் இக்காலத்தில் இனியாவது ‘வேதம் மட்டுமே’ என்று விஷயம் தெரியாமல் உளறிவராமல் அந்த வார்த்தைப் பிரயோகத்தின் உள்ளர்த்தத்தை அறிந்துகொள்ள சுவிசேஷ கிறிஸ்தவர்கள் முயலவேண்டும் என்பதே என் விருப்பம்.

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 31 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s