தேவகோபம்: இறையியலறிஞர்கள் சொன்னவை!

ஜோனத்தன் எட்வர்ட்ஸ்

அமெரிக்காவின் பெருஞ்சிந்தனையாளரும், பிரசங்கியும், இறையியல் வல்லுனருமான ஜொனத்தன் எட்வர்ட்ஸ் (Jonathan Edwards, 1703-1758) 1 தெசலோனிக்கேயர் 2:16ல் கொடுத்த பிரசங்கத்தின் ஒருபகுதி.

அதனுடைய முழு வல்லமையோடும் அது கொட்டப்படும்போது கர்த்தரின் கோபம் எத்தனை பயங்கரமானது. ஓரளவுக்கு அதைப்பற்றி அறிந்துகொள்ள தேவகோபம் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். கர்ஜிக்கும் சிங்கத்தைப் போன்றது ஓரரசனின் கோபம்; ஆனால், இது சர்வவல்லமையுள்ள யேகோவாவாகிய ஆண்டவரின் கோபம். இதைப்பற்றி அறிவுபூர்வமாக அறிந்துகொள்ளப் பார்ப்போம். எந்தவிதமான அனுதாபமோ, கருணை காட்டுவதற்கான எந்தவிதமான சந்தர்ப்பங்களோ இல்லாமல் முழுமையாக தேவகோபம் வெளிப்படும்போது அது எத்தனை பயங்கரமானது! உலகத்தைத் தன் வல்லமையினால் வார்த்தையைப் பயன்படுத்தி கட்டளையிட்டுப் படைத்த ஆண்டவரின் கோபம் எப்படிப்பட்டது? சூரியனைப்பார்த்து உதிக்காதே என்று கட்டளையிட்டு அதை உதிக்காமல் இருக்கச்செய்து, நட்சத்திரங்களை அதனதன் இடத்தில் இருக்கச் செய்கிறவரின் கோபம் எப்படிப்பட்டது? உலகத்தை அசையச்செய்து, பரலோகத்தின் தூண்களை நடுங்கச் செய்கிறவரின் கோபம் எத்தகையது? கடலைக் கண்டித்து, தண்ணீரில்லாமலாக்கி, மலைகளை அவை இருக்கும் இடங்களில் இருந்து அகற்றித் தன்கோபத்தைக் காண்பிப்பவரின் உக்கிரகோபம் எப்படிப்பட்டதாயிருக்கும்? எந்த மனிதனும் அதன் முன் நிற்கவழியில்லாத பிரகாசத்தைக் கொண்டிருக்கும் கர்த்தரின் கோபம் எப்படிப்பட்டது? தீயமனிதர்கள்மீது தன் பிரகாசமான நெருப்புப்போன்ற ஒளியை வீசச்செய்யும் மகோன்னதமானவரின் கோபம் எப்படிப்பட்டது? வல்லமையுள்ள பிசாசுகளும் தாங்கி நிற்கமுடியாது அதனடியில் நசுங்கிப்போகின்ற உக்கிரத்தோடு வெளிப்படும் தேவகோபத்தின் முன் மண்புழுப்போலிருக்கும் மனிதன் என்னவாவான்? அதைக்கொஞ்சமாவது ருசித்துப்பார்க்க, இந்த உலகத்தின் மீது தேவகோபம் எப்படி வெளிப்படுகின்றது என்பதை அறிந்துகொள்ள வாருங்கள். தன்னுடைய கோபத்தைக் கொஞ்சம் உணரும்படியாக கர்த்தர் மனிதனின் மனச்சாட்சியை உருத்தும்போது கடின இருதயமுள்ள அவன் கதறுவான். சொட்டுத் தேவகோபத்தின் வெளிப்படுத்தலின் கீழ் அவனுடைய மானுடம் நசுங்கிப் போகிறது. இதை நாம் அநேக உதாரணங்களில் காண்கிறோம். இந்தக் கொஞ்சக் கோபத்தின் பயங்கரமே அவனைக் கலங்கிப்போகச் செய்யுமானால் அந்தக் கோபம் முழுமையாக வெளிப்படுத்தப்படும்போது அது எப்படியிருக்கும்! தண்ணீர் தெளிப்பதுபோன்ற கர்த்தரின் சின்னக்கோபமே இந்தளவுக்கு மனிதனைத் தொல்லைப்படுத்திக் கலங்கடிக்குமானால், கர்த்தர் வெள்ளக்கால்வாய்களைத் திறப்பதுபோல் தன்னுடைய தீராக் கோபத்தைக் குற்றவாளியாக நிற்கும் மனிதர்கள் மேல் கொட்டி, பெருங்கடலலைகளைப்போல் அந்த உக்கிரக்கோபம் அவர்களைத் தாக்கும்போது அவர்கள் என்ன செய்வார்கள். கர்த்தரின் கொஞ்சக்கோபமே எப்படி மனிதனை மூழ்கச் செய்துவிடுகிறது!

சங்கீதம் 2:12
குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.

சார்ள்ஸ் ஸ்பர்ஜன்

அக்டோபர் 23, 1881ம் ஆண்டில் பெரும் பிரசங்கி சார்ள்ஸ் ஹெடன் ஸ்பர்ஜன் (Charles Haddon Spurgeon , 1834-1892) மத்தேயு 3:7ல் கொடுத்த பிரசங்கத்தின் ஒருபகுதி.

பாவம் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். அவர் உண்மையிலேயே தேவனாக இருந்தால், அவர் இந்த உலகத்தின் நியாயாதிபதியாக இருந்தால், எல்லாத் தீமைகளையும் அவர் அடியோடு வெறுக்கிறவராக இருக்க வேண்டும். நீதியற்றவர்களையும் நீதிமான்களையும், ஒழுக்கமற்றவர்களையும் ஒழுக்கமுள்ளவர்களையும், குடியைத் தொடாதவர்களையும் குடித்து வெறிக்கிறவர்களையும், உண்மை பேசுகிறவர்களையும் பொய்யர்களையும் அவர் ஒரேவிதத்தில் நடத்தமுடியாது. அப்படி நடந்துகொள்ளுகிற கடவுளை மனிதன் நிராகரிக்கத்தான் வேண்டும். ஆனால், நாம் அறிந்து விசுவாசிக்கின்ற மெய்யான தேவன் எல்லாப் பாவங்களையும் அடியோடு வெறுக்கவேண்டும். அவருடைய சுத்தமான பரிசுத்த இருதயம் அனைத்து கேடுகளையும் பார்த்து முகஞ்சு-ழிக்க வேண்டும். அதை அவரால் செய்யமுடியும் என்பதற்காக அல்ல; அப்படி அவர் செய்தேயாக வேண்டும். வெகு சீக்கிரமே இந்தக் காலங்களில் அவர் எல்லாப் பாவங்களுக்கு எதிராகவும் தன்னுடைய உக்கிரக்கோபத்தை அவர் கொட்டித்தீர்க்கவேண்டும். இயற்கையமைப்பின்படி கர்த்தர் படைத்துள்ள உலகம் அவசியமான சில ஒழுங்குகளின்படி நிர்வகிக்கப்பட வேண்டும். அதேபோல் இயற்கையின் முறைமையின்படி பாவம் தண்டிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பாவமும், கீழ்ப்படியாமையும் அவற்றின் தன்மையின்படி அவற்றிற்கான பலனை அனுபவிக்கவேண்டும். இதுவே பாவத்தின் தவிர்க்க முடியாத விளைவு; அதைப்பற்றிய எந்த விவாதத்திற்கும் இடமில்லை. இது நிலையானதாக தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. “மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார் இயேசு. தேவனுடைய கோபத்தைப்பற்றி விளக்குகிறபோது அவரை அதிகாரவெறிபிடித்த கொடுமைக்காரராக நாம் படம்பிடித்துக் காட்டுகிறோம் என்று எண்ணிவிடாதீர்கள். நாம் சொல்லுவதெல்லாம் இயற்கையின்படி நடக்கவேண்டியவைகளைத்தான்; நீங்கள் விஷத்தைக் குடித்தால் அது உங்கள் உயிரை மாய்த்துவிடும்; நீங்கள் குடித்து வெறித்து நடந்துகொண்டால் அல்லது எந்த நோயினால் பாதிக்கப்பட்டாலோ அது உங்களுக்கு தாங்கமுடியாத வருத்தத்தையும் கேட்டையும் கொண்டுவரும். அதுபோல் பாவம் தேவகோபத்தை சந்தித்தேயாக வேண்டும்; வேறுவழியேயில்லை. வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்தில் உள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் சிறு எழுத்தாகிலும், எழுத்தின் உருப்பாகிலும் ஒழிந்து போகாது; அந்த நிறைவேறுதலின் ஓர் அம்சமாக கர்த்தர் எல்லாப் பாவங்களையும், மீறுதல்களையும் ஒட்டுமொத்தமாக அழிக்கவேண்டும்.

ஆர்தர் பின்க்

ஆர்தர் பின்க் (A. W. Pink, 1886-1952) எழுதிய ஆக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட பகுதி.

கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளுகிற அநேகர் தேவகோபம் என்று ஒன்றிருப்பதாக நம்புவதில்லை. தேவகோபம் என்பது தெய்வீகத்தில் காணப்படும் குறைபாடு என்று வெளிப்படையாக சொல்லுமளவுக்கு போகவிரும்பாதவர்கள், அந்த உண்மையை ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. அவர்களுடைய இருதயத்தில் அந்தப் போதனைக்கு எதிராக இரகசியமான ஒரு வெறுப்பு காணப்படுவதால் அதைப்பற்றி அவர்கள் நினைக்கவோ, கேட்கவோ விரும்புவதில்லை. தேவகோபத்தை முழுதாக நிராகரித்துவிடாதவர்களில் சிலர், அதைப்பற்றி பெருமளவுக்கு சிந்திக்க வேண்டிய அளவுக்கு, அதில் பயப்படுமளவுக்கு கோரமான எந்தத் தன்மையுமில்லை என்கிறார்கள். வேறு சிலர், தேவனுடைய குணாதிசயங்களில் ஒன்றான நன்மை தேவகோபத்தோடு பொருந்திவராததொன்றாகக் கருதி அவர்களுடைய எண்ணங்களில் இருந்து அதைத் தவிர்த்துவிட முயல்கிறார்கள்.

ஒத்தவாக்கிய அகராதியைக் கவனத்தோடு ஆராய்ந்து பார்த்தால் அதில் ஆண்டவருடைய கோபம், ஆக்ரோஷம், தேவகோபம் ஆகிய வார்த்தைகளே, அவருடைய அன்பையும், கனிவையும்விட அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன் (சங்கீதம் 7:11).

உண்மை, வல்லமை, கருணை ஆகியவை கர்த்தருடைய பூரணத்துவங்களில் ஒன்றாக இருப்பதுபோல் தேவகோபமும் அவற்றில் ஒன்றாக இருக்கின்றன. கர்த்தருடைய குணாதிசயத்தில் எந்தவிதமான குறைபாட்டிற்கும் இடமில்லை; ஒரு சிறு கலங்கத்தையும் அதில் காணமுடியாது; தேவகோபம் அதில் அடங்காமல் இருந்தால் மட்டுமே அதில் குறைபாட்டிற்கு இடமுண்டு. பாவத்தை உதாசீனப்படுத்துவது ஒழுக்கக்குறைவாகும். பாவத்தை வெறுக்கிறவன் ஒழுக்கத்தொழுநோயாளியாவான்! சகலவிதமான பரிசுத்தப் பூரணத்துவத்தைக் கொண்டிருக்கும் ஒருவர் நீதியையும் அக்கிரமத்தையும், ஞானத்தையும் முட்டாள்தனத்தையும் எப்படி சமமானவையாக ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க முடியும்? நித்திய பரிசுத்தத்தைக் கொண்டிருப்பவர் எப்படி பாவத்தை உதாசீனம் செய்து அதன்மீது தன்னுடைய கண்டிப்பைக் காட்டாமல் இருக்கமுடியும்? (ரோமர் 11:22). பரிசுத்தமாயிருப்பவற்றில் மட்டுமே ஆனந்தம் காணும் கர்த்தர் பரிசுத்தமற்றவற்றை எப்படி வெறுக்காமல் இருக்கமுடியும்? கர்த்தருடைய தன்மை எப்படி அவசியமானதாகவும், நித்தியமானதாகவும் பரலோகத்தை உண்டாக்கியிருக்கிறதோ அதேபோல் நரகத்தையும் உண்டாக்கியிருக்கிறது. கர்த்தரில் எப்படி எந்தக் குறைபாடும் இல்லையோ அதேபோல் அவரில் எந்தக் குணாதிசயமும் இன்னொன்றதைவிடப் பூரணமற்றதாக இல்லை.

சகலவிதமான அநீதிகளையும் நித்தியத்துக்கும் வெறுப்பதுதான் தேவகோபம். அது தீமைகளுக்கெதிரான தெய்வீக நீதியின் வெறுப்பும் கோபமுமாகும். அது பாவத்திற்கெதிராகப் புறப்பட்டிருக்கும் கர்த்தரின் பரிசுத்தமாகும். அது கர்த்தர், பாவத்தைச்செய்து வருகிறவர்களுக்கெதிராக அறிவித்திருக்கும் நீதியான தண்டனை. கர்த்தருடைய அதிகாரத்துக்கு எதிராக பாவம் இருப்பதாலேயே அவர் அதன் மீது கோபமுள்ளவராக இருக்கிறார்; அவருடைய இறையாண்மைக்கெதிரானதாக பாவம் இருக்கிறது. அவருடைய ஆளுகைக்கெதிராக இருப்பவர்கள் அனைவரும், அவரே ஆண்டவர் என்பதைக் கர்த்தர் அறிந்துகொள்ளும்படிச் செய்வார். மனிதர்கள் அவருடைய மகத்துவத்தை அலட்சியப்படுத்துவதால் அது எத்தகையது என்பதை அவர்கள் உணரும்படிச் செய்வார் கர்த்தர். மனிதர்கள் மிகச் சாதாரணமானதாகக் கருதும் பயமுறுத்துகின்ற கோபத்தை, அது எத்தனை பயங்கரமானது என்று அவர்கள் அறிந்துகொள்ளும்படிச் செய்வார் கர்த்தர். தனக்கெதிராக நிகழ்ந்த எந்தப் பாதிப்பின் காரணமாகவோ அல்லது மனிதர்களுக்கு காரணகாரியமெதுவுமில்லாமல் காயத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவோ கர்த்தர் காட்டும் பழிவாங்கும் கொடுஞ்சினம் அல்ல தேவகோபம். உலகத்தின் இராஜா தான்தான் என்பதை நிச்சயம் கர்த்தர் நிரூபிக்கத்தான் போகிறார்; ஆனால் அவருக்கு பழிவாங்கும் குணமில்லை.

ரொபட் ஹெல்டேன்

ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த இறையியலறிஞரும், வேதவிளக்கவியலாளருமான ரொபட் ஹெல்டேன் (Robert Haldane, 1764-1842) ரோமர் 1:18 வசனத்திற்கு தந்திருக்கும் விளக்கத்தின் பகுதி இது.

மனிதனுக்கு மரணம் எனும் தண்டனை விதிக்கப்பட்டு அவன் ஏதேனில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட, இந்த உலகம் சாபத்துக்குள்ளான ஆரம்பகாலத்திலேயே தேவகோபம் வெளிப்படுத்தப்பட்டுவிட்டது. அதற்குப் பிறகு நோவாவின் காலத்து வெள்ளத்தின் மூலமும், சோதோம், கொமோரா நகரங்களின் எரிநெருப்பிலாலான அழிவின் மூலமும், இதற்கெல்லாம் மேலாக உலகத்தில் மரணத்தின் ஆளுகை மூலமும் உதாரணங்களாக அது வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பாவத்திற்கும் எதிரான நியாயப்பிரமாணத்தின் சாபத்தில் இதைக் காண்கிறோம்; கர்த்தர் ஏற்படுத்தியிருக்கும் தகனபலிகளில் இதைக் காண்கிறோம்; மோசேயின் காலத்து அத்தனை பிரமாணங்களும் இதை வெளிப்படுத்துகின்றன. இந்நூலின் (ரோமர்) எட்டாவது அதிகாரத்தில் பவுல், உலகமும், படைப்போடு தொடர்புடைய அனைத்தும் தவித்துப் பிரசவவேதனைப்படுவதாக விளக்குகிறார். கர்த்தர் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தி அவருடைய மகிமையைப் பறைசாற்றுகின்ற அதே உலகம், அவர் பாவத்துக்கு எதிரி என்றும், மனிதரின் தீமைகளனைத்தையும் தண்டிக்கிறவர் என்றும் நிரூபிக்கிறது. அனைத்திற்கும் மேலாக, தேவகுமாரன் இந்த உலகத்திற்கு வந்து தன் தெய்வீகத்தை வெளிப்படுத்தி தன்னுடைய துன்பங்கள் மற்றும் சிலுவை மரணத்தின் மூலம், இதற்கு முன் வெளிப்படுத்தப்பட்டிருந்த தேவகோபத்தின் கோரமான விளைவுகள்பற்றிய அனைத்து உதாரணங்களுக்கெல்லாம் மேலான உதாரணமாக பாவத்திற்கெதிரான தன்னுடைய வெறுப்பை வெளிப்படுத்தினார். இதைவிட, இனி வரப்போகும் கோடானவர்களுக்கான நித்திய தண்டனை புதிய உடன்படிக்கையின் காலத்தில் அதிகாரபூர்வமாகவும் வெளிப்படையாகவும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. புதிய உடன்படிக்கையின் கீழ் பரலோகம் வெளிப்படுத்தும் இரண்டு வெளிப்படுத்தல்களைக் காண்கிறோம் & ஒன்று தேவகோபம்; இரண்டாவது, கிருபை.

மார்டின் லொயிட் ஜோன்ஸ்

தேவகோபத்தைப் பற்றி பிரபல பிரசங்கி மார்டின் லொயிட் ஜோன்ஸ் (Martyn Lloyd-Jones, 1899-1981) எழுதியிருக்கும் ஆக்கத்தின் ஒரு பகுதி இது.

தேவகோபத்தையும், கர்த்தரின் நியாயத்தீர்ப்பையும் பற்றிய போதனைகளை விளங்கிக்கொண்டால் மட்டுமே நித்திய தேவகுமாரரான இயேசு கிறிஸ்து ஏன் இந்த உலகத்திற்கு வந்தார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். தன்னுடைய மகிமையை ஒதுக்கிவைத்துவிட்டு குழந்தையாக பெத்லகேமில் பிறந்து, சகலவிதமான துன்பங்களையும் வாழ்க்கையில் கிறிஸ்து ஏன் அனுபவித்தார் என்பது நமக்குத் தெரியும் & அது நம்முடைய இரட்சிப்பிற்காகவே. இருந்தபோதும், இரட்சிப்பிற்கு அது ஏன் அவசியம் என்ற கேள்வி எழுகிறது. நாம் இரட்சிக்கப்படும்படியாக இவையெல்லாம் ஏன் நிகழவேண்டும்? தேவகோபத்தைப்பற்றியும் நியாயத்தீர்ப்பைப்பற்றியும் முழுமையாக விளக்காமல் எவரால் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க முடியும் என்று நான் சவால்விடுகிறேன். சிலுவையையும், இயேசு கிறிஸ்துவின் மரணத்தையும் பற்றிய போதனைகளை நாம் கவனிக்கும்போது இது நமக்கு மேலும் தெளிவாகின்றது. கிறிஸ்து ஏன் மரித்தார்? அவருடைய இரத்தத்தினால் இரட்சிக்கப்படுவதற்காக என்று நாம் இதற்கு பதிலளிப்போமானால், அவருடைய இரத்தத்தினால் நாம் ஏன் இரட்சிக்கப்பட வேண்டும்? நாம் இரட்சிப்படைவதற்காக கிறிஸ்து கல்வாரியில் மரித்து, புதைக்கப்பட்டு, உயிர்த்தெழுவது ஏன் அத்தனை முக்கியமானது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தகுந்த ஒரேயொரு விளக்கம் தேவகோபம்பற்றிய வேதபோதனைதான். இந்தப் போதனை உண்மையானதாக இல்லாதிருக்குமானால் கிறிஸ்துவின் சிலுவை மரணம் நிச்சயமாக அவசியமேயில்லாததொன்று என்றுதான் கூறவேண்டும்.

இந்த வசனத்தில் (எபேசியர் 2:3) காணப்படும் இரண்டு விஷயங்களை ஆராய்வோம். முதலாவதாக, பவுல் சொல்லுகிறார், இந்த உலகத்தில் பிறந்திருக்கும் அனைவரும் தேவகோபத்தின் கீழ் இருக்கிறார்கள் என்று. அவர் சொல்லுகிறார், “நாமெல்லோரும் . . . சுபாவத்தினால் மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.” மனித குலத்தின் ஏனைய மக்களனைவரையும்போல நாமெல்லோரும் கோபாக்கினையின் பிள்ளைகள் என்பதே இதற்கு அர்த்தம். இந்தக்காலத்தில் மிகவும் பிரசித்தமில்லாத, அதேநேரம் மிகவும் அருமையான ஒரு போதனையை நாம் இங்கு சந்திக்கிறோம். இது பிரசித்தமில்லாதது மட்டுமல்ல அநேகரால் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டிருக்கும் சத்தியம். இதைப்பற்றிய விவாதத்தில் ஈடுபடுகிறபோது அநேகரால் தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் போகிறது. சில வருடங்களாகவே பிரபலமாகியிருக்கும் ஒரு போதனை, ஆண்டவர் அன்புடையவராக இருக்கிறார் என்றும் அவரை அன்புள்ளவராக மட்டுமே பார்க்க வேண்டும் என்று சொல்லுகிறது. தேவகோபத்தைப்பற்றி நாம் பேசுவோமானால் அது ஆண்டவர் அன்புள்ளவராயிருக்கிறார் என்பதற்கு முற்றிலும் ஒத்துப்போகாத எதிர்மறையான போதனை என்கிறார்கள் அவர்கள். . . . நாம் இப்போது பழைய ஏற்பாட்டுக் கடவுளை நம்புவதில்லை; நாம் இப்போது புதிய ஏற்பாட்டுக் கடவுளையே நம்புகிறோம். அவரே இயேசு கிறிஸ்து என்பது இவர்களின் வாதம். வேறு சிலர் இன்னும் ஒருபடி மேலேபோய், கடந்த நூற்றாண்டில்தான் இந்த விஷயங்கள்பற்றி நமக்குத் தெளிவான விளக்கம் கிடைத்தது என்றும், இந்த நூற்றாண்டின் ஆரம்பகாலம்வரை மக்கள் தேவகோபம் என்று ஒன்றிருப்பதாக நம்பிவந்ததோடு, கடவுளைப்பற்றிய தவறான நம்பிக்கைகளைக் கொண்டிருந்தனர் என்கிறார்கள்.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலிருக்கிறதா? முதலாவதாக, ஒரு தவறான எண்ணத்தைத் திருத்தப் பார்ப்போம்.

சிலர் கோபம் என்ற வார்த்தையைத் தவறாக விளங்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வார்த்தையைக் கேட்டவுடனேயே அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அது கட்டுப்படுத்தமுடியாத ஆத்திரம் என்று எண்ணிவிடுகிறார்கள். சுயக்கட்டுப்பாட்டை இழந்து, மகா ஆத்திரத்துடன் சரீரம் நடுங்க, சரீரத்தோலெல்லாம் வெளுப்படைந்து, இழிவான வார்த்தைகளைப் பேசி இழிவான செயல்களைச் செய்கின்ற ஒருவனின் கோபத்தை மட்டுந்தான் அவர்களால் நினைத்துப் பார்க்கமுடிகிறது. இது கோபத்தைப்பற்றிய மிகத்தவறான கருத்து. பாவமனிதன் சிலவேளைகளில் இந்தவிதமாக நடந்துகொள்வதுண்டு; ஆனால் வேதம், கோபம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது இதெல்லாம் அந்த வார்த்தையில் அடங்கவில்லை. நீதியின் அடிப்படையில் வெளிப்படுத்தப்படும் கோபத்தைத்தான் வேதம் விளக்குகிறது. இன்னும் மேலும் விளக்குவதானால், வேதபோதனையின்படி கர்த்தரின் அன்பின் மறுபக்கமே தேவகோபம். இது கர்த்தரின் அன்பை நிராகரிப்பதனால் ஏற்படுகின்ற தவிர்க்கமுடியாத விளைவு. அன்பே உருவாயிருக்கின்ற ஆண்டவர், நியாயத்தின் தேவனாகவும், நீதியின் தேவனாகவும் இருக்கிறார். தேவனின் அன்பு வெறுத்து ஒதுக்கப்பட்டு நிராகரிக்கப்படும்போது அதன் விளைவாக அங்கே தேவனின் நியாயத்தையும், நீதியையும், கோபத்தையும் மட்டுமே காணமுடியும்.

————————————————————————————————————

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 33 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.