ஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020

ஜே. ஐ. பெக்கர்

கடந்த வாரம் சனிக்கிழமை நான் என்னுடைய வழமையான உடற்பயிற்சிக்கான ஆறு கிலோமீட்டர் ஒட்டத்தை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது நண்பரொருவரின் இமெயில் ஒன்று ஜிம் பெக்கர் மறைந்துவிட்டார் என்ற செய்தியைக் கொண்டுவந்தது. இன்னுமொரு இவென்ஜலிக்கள் இறையியலறிஞர் இறைபதம் அடைந்துவிட்டார். ஜிம் பெக்கர் என்றும், ஜே. ஐ. பெக்கர் (J. I. Packer) என்றும் கிறிஸ்தவ உலகில் பலராலும் அறியப்பட்டிருந்தார் ஜேம்ஸ் பெக்கர். முப்பது வருடங்களுக்கு முன் ஜே. ஐ. பெக்கரின் முக்கிய நூலோன்று எனக்குப் பெரும் பயனளித்தது. இப்போதும் நினைவிருக்கிறது; கர்த்தரின் முன்குறித்தலுக்கும் சுவிசேஷத்தை அறிவிப்பதற்கும் இடையில் முரண்பாடிருக்கிறதா என்ற விஷயத்தில் பெக்கரின் ‘சுவிசேஷ அறிவித்தலும் கர்த்தரின் இறையாண்மையும்’ (Evangelism and the Sovereignty of God) என்ற சிறு நூல் பால் வார்த்ததுபோல் அக்காலத்தில் எனக்கு உதவியது. எத்தனையோபேரை அதை வாசிக்கும்படி ஊக்குவித்திருக்கிறேன்; என் பிரசங்கங்களிலும், போதனைகளிலும் பயன்படுத்தியிருக்கிறேன். பெக்கர் இவை இரண்டிற்கும் முரண்பாடில்லை என்பதை மிக அழகாகவும், வேதபூர்வமாகவும், ஆணித்தரமாகவும் அந்நூலில் விளக்கியிருந்தார். இன்றும் அந்தப் பிரதி என் படிப்பறையில் இருக்கிறது.

ஜே. ஐ. பெக்கர் ஆங்கிலிக்கன் சபைப்பிரிவைச் சேர்ந்தவர்; கடைசிவரை விசுவாசமுள்ள ஆங்கிலிக்கனாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார். இன்று ஆங்கிலிக்கன் சபைப்பிரிவு லிபரல் வழிகளில் ஊறிப்போய் சத்தியத்தை முழுவதுமாகத் தூக்கி எறிந்துவிட்டிருக்கிறது. அதில் இருக்கும் மிகச் சிறிய எண்ணிக்கையுள்ள இவென்ஜலிக்கள் தலைவர்களில் பெக்கரும் ஒருவராக இருந்தார்.

கிறிஸ்தவ விசுவாசமும், பியூரிட்டன் இலக்கிய ஆர்வமும்

பெக்கர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். அவருடைய முழுப்பெயர் ஜேம்ஸ் இன்னெல் பெக்கர் (James Innell Packer). அவர் ஆங்கிலிக்கன் குடும்பத்தில் பிறந்து தன்னுடைய பதினெட்டாம் வயதில் கர்த்தரை விசுவாசித்து மனந்திரும்புதலை அடைந்தார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இணைந்து தன் படிப்பை அவர் ஆரம்பித்த ஆரம்பகாலத்தில் (1944) இது நிகழ்ந்தது. படிப்பதிலும், சிந்திப்பதிலும் சிரத்தை காட்டிய பெக்கர் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்தார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக கிறிஸ்தவ யூனியனுக்கு ஒருவரால் நன்கொடையாகக் கொடுக்கப்பட்டிருந்த பழங்கால இலக்கியங்களைச் சரிபார்த்து அவற்றை முறைப்படுத்திவைக்கும் பொறுப்பு பெக்கருக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதற்குக் காரணம் பெக்கர் ஒரு புத்தகப் பூச்சி என்பது பலருக்கும் பல்கலைக்கழகத்தில் தெரிந்திருந்ததுதான்.

அந்த நூல்களில் 16ம் 17ம் நூற்றாண்டு இலக்கியங்களும் இருந்தன. கர்த்தரின் வழிமுறைகளே விநோதமானவைதானே! அந்த நூல்களைப் பெக்கர் ஆராய்ந்து கொண்டிருந்தபோது 17ம் நூற்றாண்டு பியூரிட்டன் பெரியவரான ஜோன் ஓவனின் இன்னும் பிரிக்கப்படாமல் இருந்த முழுத்தொகுப்பு ஒன்று அவற்றில் இருந்ததைக் கண்டார். அதுவே பெக்கருக்கு முதல்முதலாக ஓவனின் எழுத்துக்களோடு ஏற்பட்ட அறிமுகம். அந்தத் தொகுப்பைப் பிரித்து அவற்றிற்குள் காணப்பட்ட ஓவனின் ‘சோதனையும் பாவமும்’ பற்றிய வால்யூமைக் கவனித்தார். அது ஓவனின் தொகுப்புகளில் ஆறாவது வால்யூம். ஆர்வத்தோடு அதை வாசிக்க ஆரம்பித்த பெக்கர் பின்னால் சொல்லியிருக்கிறார், ‘வேறெந்த இறையியலறிஞர்களுடைய எழத்துக்களையும்விட ஜோன் ஓவனின் எழுத்துக்களுக்கே நான் அதிகம் கடன்பட்டிருக்கிறேன்’ என்று. ஓவனின் எழுத்துக்களின் தொகுப்பில் ‘பாவத்தை அழித்தல்’ (Mortification of Sin) என்ற பகுதி பெக்கரை அதிகம் ஈர்த்தது. அதுவே ஜோன் ஓவனின் எழுத்துக்களில் எல்லாம் தலையானது என்பது பெக்கரின் கருத்து.

மார்டின் லொயிட் ஜோன்ஸோடு தொடர்பு

டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ்

இந்தவகையிலேயே பெக்கருக்கு 17ம் பியூரிட்டன் பெரியவர்களின் எழுத்துக்களில் நாட்டம் அதிகமானது. பியூரிட்டன் பெரியோரின் எழுத்துக்களில் அவர் காதல் கொண்டார் என்றே சொல்லலாம். வெகு விரைவிலேயே பெக்கர் வாசிப்பதில் மட்டுமல்லாமல் எழுத்துப்பணியிலும் அக்கறை காட்டினார்.  அவருடைய முதலாவது ஆக்கம் 1952ல் வெளியானது  “The Puritan Treatment of Justification by Faith.” அவர் தன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆரம்பக் கல்வியை 1948ல் முடித்தபிறகு இலண்டனில் இருந்த ஓக் ஹில் இறையியல் கல்லூரியில் ஆசிரியராக சேர்ந்து கிரேக்கத்தையும், இலத்தின் மொழியையும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். அப்போது பெக்கருக்கு வயது 22. அந்த ஒருவருட காலப்பகுதியிலேயே அவர் வெஸ்ட்மின்ஸ்டர் செப்பல் திருச்சபைக்கு ஒவ்வொரு ஞாயிறு மாலை ஆராதனைக்கும் போக ஆரம்பித்தார். வெஸ்ட்மின்ஸ்டர் செப்பலில் அன்று போதகராக இருந்தவர், இங்கிலாந்தின் பிரபலமான சீர்திருத்த பிரசங்கியாக இருந்த டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ். லொயிட் ஜோன்ஸுக்கு அப்போது வயது 50 ஆக இருந்தது. பெக்கர் லொயிட் ஜோன்ஸ்ஸின் பிரசங்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டார்.

இந்த 21ம் நூற்றாண்டு இளைஞர்களுக்கு லொயிட் ஜோன்ஸின் பிரசங்க ஊழியத்தைப்பற்றி அதிகம் தெரிந்திருக்க வழியில்லை; அதுவும் தமிழினத்தில். என்னுடைய வாழ்க்கையில் கிறிஸ்தவ அனுபவத்தை அடைய ஆரம்பித்த ஆரம்ப காலத்தில் லொயிட் ஜோன்ஸினுடைய பிரசங்கங்களும் (பழைய ஆடியோ டேப்பில் கேட்டவை), எழுத்துக்களுமே என்னில் அதிக பாதிப்பை ஏற்படுத்தின. அவருடைய நூல்களில் ஒன்றான “Faith on Trial” அந்தவிதத்தில் எனக்குப் பேருதவி செய்தது. சங்கீதம் 73ன் விளக்கவுரையே அந்தநூல். அந்தக் காலத்தில் கிறிஸ்தவ அனுபவத்தை அடைந்தபின் கையில் கிடைத்த அத்தனை லொயிட் ஜோன்ஸின் நூல்களையும் நான் வாசிக்க ஆரம்பித்தேன். இதைச் சொல்லுவதற்குக் காரணம், லொயிட் ஜோன்ஸின் பிரசங்க ஊழியமும், எழுத்துக்களும் அவருடைய காலத்தில் மட்டுமல்லாது பின்வந்த காலப்பகுதிகளிலும், ஏன் இன்றும்கூட கர்த்தரால் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

லொயிட் ஜோன்ஸின் பிரசங்கத்தைக் கேட்டு இதயம் நெகிழ்ந்த பெக்கர் அதுபற்றி விளக்கியிருக்கிறார். “அவருடைய பிரசங்கம் தனக்கு இலெக்டிரிக் சொக் கொடுத்தது போல் இருந்தது” என்றும், “வேறு எந்த மனித ஆசிரியர்களையும்விட அவர்மூலம் நான் அதிகம் பயனடைந்திருக்கிறேன்” என்றும் பெக்கர் எழுதியிருக்கிறார். லொயிட் ஜோன்ஸோடு பெக்கருக்கு அதிகம் பரிச்சயம் ஏற்பட்டு இருவரும் நண்பர்களானபோது பியூரிட்டன் இலக்கியங்களில் பேரார்வம் கொண்டிருந்த பெக்கர் லொயிட் ஜோன்ஸோடு தன்னுடைய ஆர்வத்தைப் பகிர்ந்து கொண்டார். கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்வதற்காக நாம் ஏன் ஒரு தொடரான ஒரு கூட்டத்தை ஆரம்பித்து பியூரிட்டன் போதனைகளை அளிக்கக்கூடாது என்பது தான் அந்த ஆலோசனை. உடனேயே அவர்கள் இருவரும் “பியூரிட்டன் கொன்பரன்ஸ்” என்ற பெயரில் ஒரு வருடாந்த கூட்டத்தை ஆரம்பித்தனர். அதில் மார்டின் லொயிட் ஜோன்ஸ் தலைவராகவும், பெக்கர் உப தலைவராகவும் இருந்தனர்.

இந்த இடத்தில் இன்னொன்றையும் லொயிட் ஜோன்ஸைப்பற்றிச் சொல்லவேண்டும். லொயிட் ஜோன்ஸினுடைய வாழ்க்கையிலும், பெக்கரின் வாழ்க்கையில் நிகழ்ந்ததுபோலவே பியூரிட்டன் இலக்கியங்களின் அறிமுகம் ஏற்பட்டது. அகஸ்மாத்தாக அவர் கையில் பழங்கால பியூரிட்டன் இலக்கியங்கள் கிடைத்து அவற்றை லொயிட் ஜோன்ஸ் வாசிக்க ஆரம்பித்தார். அவருடைய வாழ்க்கையில் அந்தப் போதனைகள் பெருமாற்றத்தை ஏற்படுத்தின. தன்னுடைய நண்பர் ஒருவரின் நூலகம் முழுவதும் அத்தகைய பழம் இலக்கியங்கள் எவருக்கும் பயன்படாமல் ஒரு சிற்றூரில் நிரம்பியிருந்ததைக்கண்ட லொயிட் ஜோன்ஸ், அவற்றை எல்லோரும் வாசிக்கும்படியான வசதி ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக நண்பரை வற்புறுத்தி அந்த நூலகத்தை தலைநகரான இலண்டனின் சில்டர்ன் தெருவின் ஒரு கட்டடத்தில் அமையும்படிச் செய்தார். அது இன்றும் இலண்டனில் வேறொரு இடத்தில் இருந்து வருகிறது. சில்டர்ன் தெருவில் இருந்த அந்த நூலகத்திற்கு நான் இரண்டு தடவை போயிருக்கிறேன். லொயிட் ஜோன்ஸின் ஊக்குவிப்பாலேயே அன்று எவரும் அறியாதபடி இருந்து வந்த 17ம் நூற்றாண்டு பியூரிட்டன் இலக்கியங்களை பேனர் ஆவ் டுரூத் வெளியீட்டு நிறுவனம் வெளியிட ஆரம்பித்தது. லொயிட் ஜோன்ஸும் பெக்கரும் பியூரிட்டன் இலக்கியங்களில் பேரார்வம் கொண்டு அவற்றைக் கருத்தோடு வாசித்தது மட்டுமல்லாமல் மற்றவர்களையும் வாசிக்கச் செய்து தங்களுடைய எழுத்துக்களிலும் பயன்படுத்திக்கொண்டனர்.

திருச்சபைப் பணியும், குடும்பமும்

பெக்கர் அடுத்த மூன்று வருடங்களுக்கு (1952-1954) ஆங்கிலிக்கன் திருச்சபையில் குருவாக இணைவதற்கான படிப்பைத் தொடர்ந்தார். 1953ல் அவர் பெர்மிங்காம் கெதீட்ரலில் மதகுருவாக நியமனம் பெற்றார். அதேவேளை அவர் தன்னுடைய இறையியல் டாக்டர் பட்டத்திற்கான படிப்பையும் தொடர்ந்தார். 1954ல் அவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். அவருடைய 400 பக்கங்கள் கொண்ட டாக்டர் பட்டத்திற்கான ஆய்வுத் தொகுப்பு பியூரிட்டனான ரிச்சர்ட் பெக்ஸ்டரைப்பற்றி இருந்ததில் எந்த ஆச்சரியமுமில்லை. 1954ல் பெக்கர் வேல்ஸைச் சேர்ந்த கிட் மல்லட் (Kit Mullett) என்பவரைத் திருமணம் செய்தார். பின்னால் அவர்களுக்கு இரண்டு பெண்பிள்ளைகளும், ஒரு ஆண்மகனும் பிறந்தார்கள். 1955ல் பெக்கர் பிரிஸ்டல் நகருக்கு குடிபோய் அங்கே டின்டேன் ஹாலில் அடுத்த ஆறுவருடங்களுக்கு விரிவுரையாளராக பணியாற்றினார்.

தொடர்ந்த எழுத்துப்பணி

இந்தக் காலப்பகுதியில் பெக்கர் மேலும் எழுத்துப் பணியில் ஈடுபட்டு இரு முக்கிய ஆக்கங்களை வெளியிட்டார். முதலாவது அன்று இருந்து வந்த பரிசுத்தமாக்குதல் பற்றிய கெஸ்சிக் போதனைகளுக்கெதிரானது. கெஸ்சிக் போதனைகள் அமெரிக்காவில் உதயமான ஹையர் லைப் போதனைப் பரிசுத்தமாக்குதலை ஒத்தது. பெக்கர் இந்த ஆக்கத்தை இவென்ஜலிக்கள் காலாண்டு பத்திரிகையில் வெளியிட்டார் (Keswick and the Reformed Doctrine of Sanctification). இதில் அவர் கெஸ்சிக் போதனைகளை முழுமுற்றும் பெலேஜியப் போதனைகள் என்று விளக்கியிருந்தார். இது கெஸ்சிக் பரிசுத்தமாக்குதலுக்கு எதிரான மிகவும் கடுமையான விமர்சனம். பெக்கரின் கெஸ்சிக் பற்றிய விமர்சனம் அறிவார்ந்த திறமையான தத்துவார்த்த ரீதியில் எழுதப்பட்டதாக இருந்தது. அன்று அநேக இவென்ஜலிக்கள் வாலிபர்கள் கெஸ்சிக் போதனையில் விழுந்துவிடக்கூடிய ஆபத்தில் இருந்தனர். அதற்கு பெக்கரின் விமர்சனம் தடைபோட்டுத் தடுத்தது. மார்டின் லொயிட் ஜோன்ஸும் ஜிம் பெக்கரும் கெஸ்சிக் விஷயத்தில் ஒத்த கருத்தைக் கொண்டிருந்தனர். அத்தோடு இருவரும் கெஸ்சிக் கூட்டங்களில் ஒருபோதும் பேசியதில்லை. இதற்கும் காரணம் இந்த இருவரும் சீர்திருத்தவாத பியூரிட்டன் பரிசுத்தமாக்குதல் போதனைகளில் ஊறிப்போயிருந்ததுதான்.

பெக்கர் தன்னுடைய முதலாவது நூலை 1958ல் வெளியிட்டார். அதன் பெயர், Fundamentalism and the Word of God, IVP. இந்நூல் வரலாற்றுக் கிறிஸ்தவ நம்பிக்கையான வேதத்தின் அதிகாரத்தைப்பற்றியது. பெக்கரின் எழுத்துக்களில் இது முக்கியமானது. வேதத்தைப்பற்றிய அடிப்படை சத்தியமான அதன் பூரண அதிகாரத்தை பெக்கர் ஆணித்தரமாக இதில் விளக்கியிருந்தார். அன்றைய இவென்ஜலிக்கள் கிறிஸ்தவத்தைத் தூக்கி நிறுத்த இந்நூல் அவசியமாக இருந்தது. இந்நூல் வெளிவந்தபோதே 20,000 பிரதிகள் விற்றது. 1961ல் மறுபடியும் பெக்கர் ஆக்ஸ்போர்டுக்கே போய் அங்கிருந்த லெட்டிமர் ஹவுஸின் நூலகத்தை நிர்வகிப்பராகவும், அதன் வோர்டனாகவும் ஒன்பது வருடங்கள் பணியாற்றினார். அங்கிருந்தபோதே இன்னுமொரு ஆங்கிலிக்கன் இறையியலறிஞரான ஜோன் ஸ்டொட்டோடு இணைந்து அவர் இவென்ஜலிக்கள் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை அமைத்தார். இது ஆங்கிலிக்கன் திருச்சபைப் பிரிவின் இறையியல் நம்பிக்கைகளை வலிமைப்படுத்த ஆரம்பிக்கப்பட்டது. இங்கேயும் பெக்கரின் எழுத்துப்பணி தொடர்ந்தது.

1970ல் பெக்கர் மறுபடியும் பிரிஸ்டலுக்குத் திரும்பி வந்து டின்டேல் ஹோலில் பிரின்ஸிபல் பதவியேற்றார். அடுத்தவருடமே அது புதிய கல்லூரியாக டிரினிடி காலேஜ் என்ற பெயரில் இன்னுமொரு ஆங்கிலிக்கன் போதகரான அலெக்ஸ் மோட்யரை பிரின்ஸிபலாகவும் பெக்கரை அசோஸியேட் பிரின்ஸிபலாகவும் கொண்டு இயங்க ஆரம்பித்தது. இது பெக்கருக்கு இன்னும் அதிகமாக எழுத்துப்பணிகளில் ஈடுபடும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது.

1973ல் பெக்கரின் மிகமுக்கிய நூலான Knowing God வெளிவந்தது. இதை ஹொடர் அன்ட் ஸ்டௌட்டன் வெளியீட்டாளர்கள் வெளியிட்டனர். இது ஏற்கனவே தொடராக இவென்ஜலிக்கள் மெகசீன் என்ற சிறு பத்திரிகையில் வெளிவந்திருந்தது. இதன் தொகுப்பே Knowing God என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. வெளிவந்தவுடனேயே இந்நூல் ஒன்றரை மில்லியன் பிரதிகள் விற்பனையாயின. இந்நூல் பற்றி எழுதிய பெக்கர், “திருச்சபை இன்று பலவீனமான நிலையில் இருப்பதற்கு கடவுளைப்பற்றிய அறியாமையே முக்கிய காரணமாக இருந்துவருகிறது” என்று குறிப்பிட்டார்.

கனடாவில் பணிபுரிய அழைப்பு

இதுவரை இங்கிலாந்தில் இருந்து பணியாற்றிவந்த பெக்கருக்கு கனடாவில் வந்து பணிபுரிய அவருடைய நண்பரொருவரிடமிருந்து அழைப்பு வந்தது. வென்கூவரில் இருந்த ரீஜனட்ஸ் கல்லூரியில் அதன் விரிவுரையாளர்களில் ஒருவராக இருந்து பணியாற்ற பெக்கருக்கு வாய்ப்பு கிடைத்தது. எந்தவித நிர்வாக சம்பந்தமான பணியுமில்லாமல் விரிவுரையாளராக மட்டும் செயல்படும் வசதியிருந்ததால் அதற்கு உடன்பட்டு பெக்கர் குடும்பத்தோடு வென்கூவருக்குப் போனார். அங்கு 1996ம் ஆண்டுவரை பெக்கர் முழுநேர விரிவுரையாளராக பணிபுரிந்து அதற்குப் பிறகு ஓய்வு எடுத்து பகுதிநேர விரிவுரையாளராக கடைசிவரை இருந்தார்.

இறையியல் வல்லுனர்

ஜிம் பெக்கர் அநேக இறையியல் கல்லூரி மேடைகளிலும், பல்கலைக்கழகங்களிலும், கிறிஸ்தவ மகாநாடுகளிலும் பேச அழைக்கப்பட்டிருக்கிறார். எழுத்தால் அநேகரைக் கவர்ந்தது போலவே அவர் பேச்சும் பலரை ஈர்த்தது. பெக்கர் அதிரடிப் பிரசங்கத்துக்குப் பேர்போனவரல்ல; ஆங்கிலேய பண்பாட்டுக்கு உரிய முறையில் அமைதியாகவும் ஆணித்தரமாகவும் அவர் உரையாற்றினார். ஒரே ஒரு முறை நான் நியூசிலாந்தில் பெக்கரை சந்தித்திருக்கிறேன். அது நியூசிலாந்து வேதாகம கல்லூரியில் அவர் உரையாற்ற வந்திருந்தபோது என்று நினைக்கிறேன். உயரமாகவும், மெலிந்த உடற்கட்டும் கொண்டிருந்த பெக்கரோடு சில நிமிடங்கள் மட்டுமே கழித்திருக்கிறேன். பெக்கர் அநேக இறையியல் கமிட்டிகளில் அங்கத்தவராகவும், ஆலோசகராகவும், தலைவராகவும் இருந்து வந்தார். தங்களுடைய நூல்களை வெளியிட அவருடைய ஒப்புதல் குறிப்பைப் பெற வராதவர்கள் கிடையாது. அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைவிட அத்தகைய ஒப்புதல் அளித்திருந்த நூல்கள் எண்ணிக்கையில்லாமல் இருந்திருகின்றன. பெக்கர் குறைந்த கால அளவு மட்டுமே ஆங்கிலிக்கன் போதகப் பணியில் இருந்திருக்கிறார். அவருடைய வாழ்நாளில் அதிக காலம் அவர் இங்கிலாந்திலும், கனடாவிலும் இறையியல் கல்லூரிகளிலேயே பணிபுரிந்திருக்கிறார். போதகராக, மேடைப்பேச்சாளராக, விரிவுரையாளராக, எழுத்தாளராக, நூலாசிரியராக, இறையியல் கமிட்டிகளில் அங்கத்தவராக என்று பல்வேறு பணிகளைத் தன் வாழ்நாளில் பெக்கர் செய்துவந்திருந்தபோதும் அவர் தன்னை ஒரு இறையியல் வல்லுனராகவே பெரிதும் கருதினார்.

முரண்பாடுகள்

எத்தனை பெரிய ஆவிக்குரிய மனிதர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது முரண்பாடுகள் இல்லாமலிருந்திருக்கவில்லை; ஜிம் பெக்கரும் அதற்கு விதிவிலக்கல்ல. அவர் ஆரம்பத்தில் டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸோடு இணைந்து பியூரிட்டன் கொன்பரஸ் நடத்துவதில் ஈடுபட்டிருந்த காலத்தில் 1966ல்  நடந்த ஒரு தேசிய இவென்ஜலிக்கள் மகாநாட்டில் லொயிட் ஜோன்ஸும், ஜோன் ஸ்டொட்டும் பிரதான பேச்சாளர்களாக இருந்தனர். அந்த மகாநாட்டில் லொயிட் ஜோன்ஸ் இவென்ஜலிக்கள் விசுவாசத்தைக் கொண்டிருந்த அனைவரும் இங்கிலாந்து திருச்சபை போன்ற வேதத்திற்கு முரண்பட்ட நம்பிக்கைகளைக் கொண்டிருந்த திருச்சபைப் பிரிவுகளில் இருந்து வெளியே வந்து சுயாதீன இவென்ஜலிக்கள் அமைப்புகளோடு இணைய வேண்டும் என்று அறைகூவலிட்டார். அன்றைய நிகழ்சிக்கு தலைமை தாங்கிய ஜோன் ஸ்டொட் எவரும் எதிர்பாராத முறையில் லொயிட் ஜோன்ஸ் பேசி முடித்த பிறகு அவருடைய அறைகூவலுக்கு அந்தக் கூட்டத்திலேயே அடியோடு மறுப்புத்தெரிவித்தார். ஜிம் பெக்கர் அன்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இருந்தபோதும் நடந்த நிகழ்ச்சியை மாலையில் தெரிந்துகொண்டார். சக ஆங்கிலிக்கனான ஜோன் ஸ்டொட்டையே அவர் ஆதரித்தார். இதனால் பெரும் பிளவு உண்டானது. 1970ல் பெக்கர் சக இவென்ஜலிக்கள் ஆங்கிலிக்கன் ஒருவரோடும் இரண்டு ஆங்லோ-கத்தோலிக்கர்களோடும் இணைந்து இவென்ஜலிக்கள் நம்பிக்கை கொண்டிருந்தவர்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் இங்கிலாந்தில் ஒற்றுமையை வலியுறுத்தும் நூலொன்றை வெளியிட்டார். இந்த நூலே லொயிட் ஜோன்ஸ் பெக்கரோடு இருந்த உறவை நிறுத்திக்கொள்ள காரணமாக இருந்தது. அத்தோடு லொயிட் ஜோன்ஸ் பெக்கரை இவென்ஜலிக்கள் மெகசீன் கமிட்டியில் இருந்தும், பியூரிட்டன் கொன்பரன்ஸ் நிர்வாகத்தில் இருந்தும் அகற்றினார். அதுமுதல் பியூரிட்டன் கொன்பரன்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் கொன்பரன்ஸ் என்ற புதிய பெயரில் கூட ஆரம்பித்தது. இதற்குப் பிறகு வெஸ்ட்மின்ஸ்டர் கொன்பரன்ஸில் பெக்கருக்கு எந்தப் பங்கும் இருக்கவில்லை.

மார்டின் லொயிட் ஜோன்ஸ் பியூரிட்டன் பெரியவர்களின் ஒத்துழையாமை கொள்கையை (Nonconformist) முக்கியமானதாகக் கருதினார். சீர்திருத்தவாத பியூரிட்டன் கோட்பாடுகளை விசுவாசித்து வருகிற அதேவேளை முரண்பாடான இறையியல் போதனைகளுக்கு இடங்கொடுத்து வரும் கலப்பட திருச்சபைப்பிரிவுகளில் போதகர்களாக இருந்துவருகிறவர்கள் முரண்பட்டு நடப்பதாகக் கருதினார். அன்று அத்தகைய சூழ்நிலை உருவாக ஆரம்பித்து  லொயிட் ஜோன்ஸின் ஆதரவாளர்கள் எல்லோரும் அவர் தன்னுடைய ஸ்தானத்தைப் பயன்படுத்தி இவென்ஜலிக்கள் விசுவாசிகள் கலப்பட திருச்சபைப்பிரிவுகளில் இருந்து வெளியே வரவேண்டும் என்ற அறைகூவலை விடுக்க அவரை வற்புறுத்தினர். இருந்தபோதும் அத்தகைய அறைகூவல் பலருடைய காதுகளில் விழவில்லை; எதிர்பார்த்த அளவுக்கு அது வெற்றிபெறவில்லை. ஆங்கிலிக்கன் விசுவாசிகளான ஜோன் ஸ்டொட்டும், பெக்கரும் தங்களுடைய திருச்சபைப்பிரிவைவிட்டு விலகத் தயாராக இருக்கவில்லை. இந்த விஷயத்தில் நன்கொன்போர்மிஸ்டான என் ஆதரவு நிச்சயம் லொயிட் ஜோன்ஸுக்குத்தான். இந்த நிகழ்ச்சி நடந்து நாற்பத்தி நான்கு வருடங்களுக்குப் பிறகு இன்று அதைத் திரும்பிப்பார்த்து சிந்திக்கிறபோது லொயிட் ஜோன்ஸின் அறைகூவல் சரியானதாகவே படுகிறது. ஆங்கிலிக்கன் திருச்சபைப்பிரிவு இன்று அன்றிருந்ததைவிட பலமடங்கு மோசமாகப் போய் லிபரலிசத்தின் இருப்பிடமாக இருந்து வருகிறதை எவரால் மறுக்கமுடியும்.

இதற்குப் பிறகு 1994ல் பெக்கரின் சமயசமரசப் போக்கு (Ecumenism) மேலும் பிரச்சனைகளை உண்டாக்கியது. அவர் சில இவெஞ்சலிக்கள் விசுவாசிகளோடும், ரோமன் கத்தோலிக்கர்களோடும் இணைந்து, இவென்ஜெலிக்கள் விசுவாசிகளும், கத்தோலிக்கர்களும் இணைய வேண்டுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்குமுகமாக வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் கையெழுத்திட்டார். இது அநேக இவென்ஜலிக்கள் தலைவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. அந்த அறிக்கை இறையியல் அம்சங்களைத் தெளிவாக விளக்குவதாக இல்லாமல் மேலெழுந்தவாரியாக எழுதப்பட்டதாக இருந்தது. கிறிஸ்தவ விசுவாசத்திற்கு கிறிஸ்து அவசியம் என்ற சுவிசேஷ நம்பிக்கையில் மட்டும் ஒத்துப்போய் ஏனைய இறையியல் நம்பிக்கைகளைப்பற்றி பெரிதுபடுத்தாதவிதத்தில் அந்த அறிக்கை எழுதப்பட்டிருந்தது. சீர்திருத்த இறையியல் அறிஞராக இருந்த ஆர். சி. ஸ்பிரவுல்

ஆர். சி. ஸ்பிரவுல்

(R. C. Sproul) போன்றவர்களுக்கு பெக்கர் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டதை நம்பமுடியவில்லை. எந்தளவுக்கு நீதிமானாக்குதல் கோட்பாடு அவசியமானது என்பதில் பெக்கர் முரண்பாடான நிலையை எடுத்தார். அது இறையியல் கோட்பாடுகளில் முக்கியமானது என்பதை அவர் ஒத்துக்கொண்டபோதும் அது அத்தியாவசியமானது என்பதை வலியுறுத்த அவர் உடன்படவில்லை. இவென்ஜெலிக்கள்-கத்தோலிக்க ஒத்துழைப்புக்கு நீதிமானாக்குதல்பற்றிய சீர்திருத்தவாத கோட்பாடு தடையாக அமைவதை அவர் விரும்பவில்லை. இது நிகழ்ந்த பிறகு இந்த அறிக்கையில் கையெழுத்திட்டதற்கான காரணத்தை பெக்கர் விளக்கியிருந்தார்.

எந்தளவுக்கு ஆங்கிலிக்கன் திருச்சபைப்பிரிவு வேதபோதனைகளைவிட்டு விலகிப்போயிருந்தது என்பதை மேலும் உறுதிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி 2002ல் கனடாவில் நிகழ்ந்தது. அப்போது கனடாவில் பணிபுரிந்துகொண்டிருந்த பெக்கர் அங்கிருந்த ஆங்கிலிக்கன் திருச்சபைப்பிரிவில் பெரிதாக இருந்த ஒரு திருச்சபைக்குப் போய்க்கொண்டிருந்தார். அந்த ஆண்டு வென்கூவர் நகரத்தில் இருந்த ஆங்கிலிக்கன் டயோஸிஸ் ஓரினத் திருமணத்தை வரவேற்று ஆங்கிலிக்கன் பிஷப்பொருவர் அத்தகைய திருமணத்தை நடத்தி ஆசீர்வாதம் அளிக்க ஒப்புதல் அளித்தது. இது பெக்கருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அந்த டயோஸிஸில் அங்கத்தவராக இருந்த பெக்கர் வேறுசிலரோடு இணைந்து இதை எதிர்த்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இது “சுவிசேஷத்தை மாசுபடுத்தி, வேதத்தின் அதிகாரத்தை நிராகரித்து, சக மனிதர்களுக்கான இரட்சிப்பை சரியச் செய்து, தெய்வீகமான வேத சத்தியங்களைப் பாதுகாக்கவேண்டிய பெரும்பணியைச் செய்யவேண்டிய கர்த்தரால் அளிக்கப்பட்டிருக்கும் பொறுப்புக்கு திருச்சபை துரோகம் செய்கிறது” என்று இதுபற்றி பெக்கர் குறிப்பிட்டிருந்தார். கனடாவின் ஆங்கிலிக்கன் பிரிவில் பெரிய சபையாக இருந்த அவர் அங்கத்துவம் வகித்த சபை

St. Johns, Shaughnessy

(St. Johns, Shaughnessy) கனடாவின் ஆங்கிலிக்கன் திருச்சபைப்பிரிவில் இருந்து விலகி ஆர்ஜன்டீனாவில் இருந்த ஒரு ஆங்கிலிக்கன் பிரிவோடு இணைந்தது. அதற்குப் பிறகு பெக்கரும் அவருடையதைப்போன்ற நிலையை எடுத்த ஏனைய ஆங்கிலிக்கன் குருக்களும் கனடாவின் ஆங்கிலிக்கன் திருச்சபைப்பிரிவில் இருந்து அதிரடியாக விலக்கப்பட்டனர். விலக்கப்பட்ட எவரும் தொடர்ந்து தங்களுடைய போதகப் பணிகளை கனடாவின் ஆங்கிலிக்கன் திருச்சபைகளில் செய்யமுடியாதபடி அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த ஆர்டினேசனும், அதிகாரங்களும் பறிக்கப்பட்டன.

இலக்கியப்பணி

ஜிம் பெக்கரின் எழுத்துக்களின் தொகுப்பு ஒருநாள் நிச்சயம் வெளிவரும். அது இவென்ஜலிக்கள் கிறிஸ்தவர்களுக்கு பெரும்பயன் அளிக்கும். பெக்கரின் எழுத்துக்கள் அனைத்தையும் பட்டியலிட்டுத் தருவது என்பது கஷ்டமான செயலென்று அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார். அந்தளவுக்கு பெருந்தொகையாக அவர் நூல்களை மட்டுமல்லாது, ஆய்வுக்கட்டுரைகளை மெகசீன்களுக்கும், ஜேர்னல்களுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் எழுதியிருக்கிறார். அத்தோடு அவருடைய நூல்கள் பல நாடுகளில் வெவ்வேறு தலைப்புகளிலும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இது பெக்கரின் எழுத்துக்களைத் தொகுத்துத் தருவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. பெக்கர் ஏன் ஒரு முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூலை (Systematic Theology) எழுதவில்லை என்பது தெரியவில்லை; நிச்சயம் அதற்கான அனைத்துத் தகுதிகளும் அவருக்கு இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஒரு புதிய ஆங்கில வேதமொழிபெயர்ப்புக்கான பொது ஆசிரியராக இருக்கும் பொறுப்பை ஏற்கும்படி அமெரிக்க குரொஸ்வே நூல்கள் (Crossway Books) நிறுவனத்தின் தலைவராக இருந்த டாக்டர் டெனிஷ் லேன் அவரைக் கேட்டுக்கொண்டார். அந்த மொழிபெயர்ப்பு 2001ல் வெளிவந்தது. அதற்கு English Standard Version (ESV) என்ற பெயரை பெக்கரே சிபாரிசு செய்திருந்தார். கிறிஸ்துவின் இராஜ்யத்துக்குத் தான் செய்த பணிகள் அனைத்திலும் இதுவே மிக முக்கியமானது என்று பெக்கர் குறிப்பிட்டிருக்கிறார்.

என்னைப் பொறுத்தவரையில் பெக்கரின் நூல்களில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த மூன்றை முக்கியமாக குறிப்பிட்டாக வேண்டும். Fundamentalism and the Word of God, Knowing God, Evangelism and the Sovereignty of God என்பவையே அவை. அத்தோடு இன்னொன்றையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். இது நூலாக அல்லாமல் ஒரு நூலுக்கு அறிமுக உரையாக, கட்டுரையாக வெளிவந்தது. அது Saved by His Precious Blood: Introduction to John Owen’s the Death of Death in the Death of Christ (1958) என்பதே. இதை மொழிபெயர்த்து நீண்ட காலத்துக்கு முன் திருமறைத்தீபத்தில் வெளியிட்டிருந்தேன். பியூரிட்டன் இறையியல் அறிஞரான ஜோன் ஓவன் கிறிஸ்துவின் பரிகாரப்பலியின் அற்புதத்தைப்பற்றி விளக்கிய நூலுக்கு பெக்கர் இந்த அறிமுகத்தைத் தந்திருந்தார். குறிப்பிட்டவர்களுக்காக மட்டுமே கிறிஸ்து சிலுவையில் பலியானர் என்ற போதனையை பெக்கர் அருமையாகவும் ஆணித்தரமாகவும் இந்த ஆய்வுரையில் விளக்கியிருந்தார். இதில் ஜிம் பெக்கரின் ஆழ்ந்த நுண்ணிய இறையியல் புலமையைக் காணமுடிகிறது. சில பக்கங்களே இருக்கும் இந்த அறிமுகம் அவருடைய சிந்தனைத் திறனையும், ஆய்வுத்திறனையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. நீண்டகாலத்துக்கு முன்பு இதை ரசித்து வாசித்துப் பயனடைந்திருக்கிறேன். தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கான கிறிஸ்துவின் சிலுவை மரணப்பலியின் மகத்துவத்தைத் தத்துவார்த்த ரீதியில் பெக்கர் அசைக்கமுடியாத ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து விளக்கி இதன் மூலம் வாசகர்களை வாசிக்கத் தூண்டியிருந்தார். அதை எத்தனையோ பேருக்கு நான் அறிமுகம் செய்து வாசிக்கும்படி சொல்லியிருக்கிறேன்.

ஜிம் பெக்கர் பியூரிட்டன் இலக்கியங்களில் காதல் கொண்டிருந்தார் என்று சொன்னால் அதில் தவறில்லை. அவர் தன்னைப் பியூரிட்டன்களின் வழிவந்தவராகவே கண்டார். பெக்கர் பரிசுத்தமாக வாழ்வதில் அதிக அக்கறைகாட்டி திருச்சபைப் பரிசுத்தத்தை எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கிறார். பியூரிட்டன்கள் கிறிஸ்தவ வாழ்க்கையைப்பற்றிக் கொண்டிருந்த நம்பிக்கைகளை அவருடைய Quest for Godliness: The Puritan Vision of the Christian Life என்ற நூலில் காணலாம். இது பிரிட்டனில், Among God’s Giants (1990) என்ற தலைப்பில் வெளிவந்தது. நான் இப்போது பணிபுரியும் என் சபையில் முதல் ஐந்து வருடங்களைப் பூர்த்திச் செய்தபோது (1991), இந்த நூலை எனக்கு அன்பளிப்பதாக கொடுத்தது இப்போது என் நினைவுக்கு வருகிறது. ஜே. சி. ரைலின் “பரிசுத்தமாகுதல்” நூலை அவர் அதிகம் விரும்பி தான் அறிமுகப்படுத்தும் நூல்களில் முக்கிய நூலாகக் கருதினார். எவரோடும் இறையியல் ரீதியில் முரண்பட வேண்டிய தருணங்களில் அமைதியோடு நடந்து அது உறவுகளைப் பாதிக்காமல் இருந்துவிடவேண்டும் என்பதில் பெக்கர் அக்கறை காட்டியிருக்கிறார். அமைதியான சுபாவம் கொண்டிருந்த பெக்கர் ஆங்கிலிக்கன் திருச்சபைக்கு வெளியில் அநேகரோடு நட்புப் பாராட்டிப் பழகிவந்திருக்கிறார். பெக்கர் தனக்கென தன்னைப் பின்பற்றும் ஒரு கூட்டத்தை வளர்த்துக்கொள்ளவில்லை; அதை ஒருபோதும் அவர் நாடியதோ விரும்பியதோ இல்லை. அமைதியாக இறையியலறிஞராக, விரிவுரையாளராக இருந்து இறையியல் போதனைகளைத் தருவதையும் எழுதுவதையுமே அவர் விரும்பினார். அவர் லொயிட் ஜோன்ஸைப் போன்ற நீண்டகாலத்துக்கு சபைப் போதக ஊழியத்தில் இருக்கவில்லை; அவரைப்போல அதிரடிப்பிரசங்கியாகவும் இருக்கவில்லை. இருந்தபோதும் தனக்கேயுரிய பாணியில் தனக்கென ஓர் இடத்தைக் கிறிஸ்தவ உலகில் நிலைநாட்டியிருந்தார் பெக்கர். ஜிம் பெக்கர் பிரிட்டனின் முக்கிய இவென்ஜலிக்கள் தலைவர்களின் ஒருவராக இருந்திருக்கிறார். அவர் நமக்கு விட்டுச் சென்றிருப்பதெல்லாம் அவருடைய எழுத்துக்களும், கிறிஸ்தவனாக பரிசுத்தத்தோடு எப்படி வாழவேண்டும் என்ற உதாரணமுந்தான்.

ஜிம் பெக்கர் லொயிட் ஜோன்ஸைவிட்டுப் பிரிந்தபோது 1970ல் லொயிட் ஜோன்ஸ் அவருக்கு எழுதிய ஒரு கடிதத்தின் ஒரு பகுதி பின்வருமாறு இருந்தது,

“உங்களை நான் அறிந்திருந்த காலம் முழுவதும் ஈவாக உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த சிந்தனைத் திறத்தையும், புத்திக்கூர்மையையும் நான் எந்தளவுக்கு வியந்தேன் என்றும், உங்கள் மீது எத்தனை மதிப்பு வைத்திருந்தேன் என்பதும் உங்களுக்குத் தெரியும். இதுவரை வோர்பீல்டினுடைய (Benjamin Warfield) பாரம்பரியத்தைப் பின்பற்றி ஒரு பெரும் இறையியல் படைப்பை நீங்கள் அளித்திருப்பீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால், திருச்சபை சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடும்படி அழைக்கப்பட்டதாக நீங்கள் உங்களைக் கருத ஆரம்பித்துவிட்டீர்கள். என்னைப் பொறுத்தவரையில் இது மிகப்பெரிய அவலமாகவும், திருச்சபையின் இழப்பாகவும் கருதுகிறேன்.”

ஜிம் பெக்கர் லொயிட் ஜோன்ஸை விட்டுப் பிரியாமல் இருந்திருந்தால், இவெஞ்சலிக்கள்-கத்தோலிக்கர் இணைவது பற்றிய சமயசமரசப்போக்கைக் கொண்டிராமல் இருந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று எண்ணிப்பார்க்கிறேன். யாருக்குத் தெரியும்? அந்தந்த காலகட்டத்தில் ஒரு மனிதன் எத்தனைப் பிரபலமானவராக இருந்தாலும், எத்தனை ஆசீர்வாதம் பெற்றவராக இருந்தாலும், எத்தனை விசுவாசமுள்ளவராக இருந்தாலும் எந்த முக்கிய விஷயத்தைப் பொறுத்தவரையிலும் ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டியிருக்கிறது. அந்தத் தீர்மானங்கள் அவரையும், வரலாற்றையும், சுற்றியிருப்பவர்களையும் பாதிக்காமல் போகாது. இந்த விஷயத்தில் நமக்கு எத்தனை ஞானமும் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்தலும் தேவையாக இருக்கிறது என்பதைத்தான் பெக்கர் விஷயத்தில் நிகழ்ந்தவை காட்டுகின்றன. தன் வாழ்நாளின் இறுதிக்காலத்தில் பெக்கர் தான் விசுவாசமாக இருந்த கிறிஸ்துவுக்காக கனடாவின் ஆங்கிலிக்கன் சபைப்பிரிவில் இருந்து வெளியே வர நேர்ந்தது. அந்தத் தடவை பெக்கர் எடுத்த தீர்மானம் சரியானதே.

இறையியல் பணிகளில் இருந்து ஓய்வு எடுத்தபிறகு பெக்கரின் உடல்நலம் பெரிதும் குறைய ஆரம்பித்தது. பேசுவதும், எழுதுவதும் முதுமையினாலும், உடல்நிலை பாதிப்பாலும் நின்றுபோனது. அவர் ஜூலை மாதம் 17ம் நாள் தன்னுடைய 93 வயதில் தான் நேசித்த கிறிஸ்துவை சென்றடைந்தார். ஒரு சகாப்தம் மறைந்தது.

————————————————————————————————————————

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 33 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.