கோவிட்-19: ‘இதையும் சிந்திக்காமல்’

புதிய வழமை (New normal)

இப்போதெல்லாம் அடிக்கடி நம் பேச்சில் வந்துபோகும் வார்த்தைகள் ‘புதிய வழமை’ (New normal) அதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம் என்றும், அது எப்படியெல்லாம் இருக்கப்போகிறதென்றும் அடிக்கடி மீடியாக்கள் யூகம் செய்து அறிவித்துக்கொண்டிருக்கின்றன. இந்த வார்த்தைப்பிரயோகம் புதிய அகராதிகளில் நிச்சயம் இணைந்துகொள்ளும்.

எதைக் குறிக்கிறது இந்த வார்த்தைப்பிரயோகம்? கோவிட்-19 நம்மையெல்லாம் முதலில் வீட்டுக்குள் அடைத்தது. எந்தவித வெக்சீனோ மருந்தோ இல்லாமலிருக்கும்போது இந்த வைரஸ் ஆபத்தில் இருந்து தப்ப வேறு என்னதான் வழியிருக்கிறது? உலக நாட்டரசாங்கங்கள் எல்லாமே மக்களை வீட்டுக்குள் இருக்கும்படிச் செய்ததற்கு இதுதான் காரணம். அதோடு சேர்ந்து வழமையாக சமூகக்கூடிவருதலுக்காக நாம் செய்துவந்த பல விஷயங்களுக்கும் முடிவுகட்டப்பட்டது. மனிதன் சமூக உறவில்லாமல் இருக்கமுடியாது. குடும்ப உறவும், சபை ஐக்கியமும் கோவிட்-19ல் பாதிக்கப்பட்டன. போகவேண்டிய அவசியம் ஏற்படும்போது எங்குபோனாலும் இன்னொரு நபருக்கு இரண்டு மீட்டர் தள்ளி நின்றே எதையும் செய்யவேண்டும் என்ற வழக்கமும் தொடருகிறது. இதெல்லாம் எப்போதும் நாம் செய்துவந்திராத புதிய சமுதாய வழக்கங்கள். இந்த வைரஸுக்கு வெற்றிகரமாக வெக்சீன் கண்டுபிடித்து அது பயன்பாட்டுக்கு வந்து உயிராபத்துக்கு முடிவு வரும்போதே இப்போது நாம் வித்தியாசமான முறையில் வெவ்வேறு நாடுகளில் செய்துவருகின்ற காரியங்களுக்கு எல்லாம் இறுதி முடிவு வரும். அது எப்போது வரும்? யாருக்குத் தெரியும்! நாம் கடவுளா என்ன?

ஒரு பொருளாதாரப் பேராசிரியர் மீடியா இன்டர்வியூவில் சொன்னார், ‘நாம் ஒரு குழியைத் தோண்டுகிறபோது எந்தளவுக்கு ஆழமாகத் தோண்டுகிறோமோ அந்தளவுக்கு அந்தக் குழியில் இருந்து மேலே ஏறிவருவதும் கஷ்டமாகத்தான் இருக்கும்’ என்று. அதனால் வீட்டுச்சிறைவாசத்தால் நாட்டுப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிற இக்காலத்தில், அந்த வீட்டுச்சிறைவாசம் எந்தளவுக்கு நீளுகிறதோ அந்தளவுக்கு பொருளாதாரச் சரிவும் நீளும். கடன்தொல்லையும், பொருட்கள் தட்டுப்பாடும், விலைவாசி அதிகரிப்பும், வேலை இல்லாமையும், ஏன் சமுதாய அமைதியின்மையும் நாடுகளில் அதிகரிக்கலாம். கோவிட்-19 பணக்கார நாடு, பணமில்லாத நாடு என்ற எந்தவித பொருளாதார, ஜாதி, மத, இன வேறுபாடுகள் காட்டாமல் சோஷலிச நோக்கோடு உலக மக்கள் எல்லோரையும் பயமுறுத்தி, பாதித்து தொடர்ந்து தன் ஆட்சியை நடத்தி வருகிறது. அமைதியாக உட்கார்ந்து எதிர்காலத்தைப்பற்றி சிந்தித்துப் பார்த்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும்.

மீடியா பர்சனாலிட்டியாக மாறிவிட்ட முன்னால் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மார்க் ரிச்செட்சன் சமீபத்தில் சொன்ன ஒரு விஷயம் எனக்கு சிரிப்பை உண்டாக்கியது. ஆறுவாரங்கள் வீட்டில் அடைபட்டு இருந்தது அவருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியதால் அவர் உளவியல் நிபுணரின் ஆலோசனையைத் தேடவேண்டியிருந்ததாம். என்ன மனஉளைச்சல் தனக்கு ஏற்பட்டது என்பதை அவர் விளக்கியதுதான் எனக்கு சிரிப்பை உண்டாக்கியது. வீட்டில் அடைபட்டு இருந்தகாலத்தில் ஒவ்வொருநாளும் தனக்கு வேலை தொடர்ந்து இருக்குமா? பணத்திற்கு என்ன செய்வது? கடன் வாங்க வேண்டியிருக்குமா? தான் கட்டவேண்டிய பில்களையெல்லாம் எப்படிக்கட்டப் போகிறேன்? என்ற கவலைகளெல்லாம் அன்றாடம் தோன்றி அவர் மனதை அலைக்கழித்ததாம். அதனால்தான் உளவியலாளரின் உதவியை நாடினாராம். மார்க் ரிச்செட்சன் கிரிக்கெட் விளையாட்டிலும், டிவியிலும், ஏனைய வியாபாரங்களிலும் பணம் சம்பாதித்து தொடர்ந்தும் நல்லநிலையில் இருந்து வருகிற மனிதன். அப்படியிருந்து வருகிற மனிதனுக்கே இந்தக் கவலைகள் என்றால் அந்தளவுக்கு உயரத்தில் இல்லாதவர்கள் கதி என்னவாயிருக்கும்?

இருந்தாலும் நியூசிலாந்து தன் 3ம் கட்ட லொக்டவுனில் இருந்து 2ம் கட்டத்திற்கு வந்துவிட்டது. அடுத்த வாரம் இன்னும் அது தளர்த்தப்பட்டு சபை கூடிவர அனுமதி கிடைக்கலாம். அதைத்தவிர மற்றெல்லா வியாபார ஸ்தலங்களும், தொழிலகங்களும், உள்ளூர் விமானசேவை வரை ஆரம்பித்துவிட்டன. கொரோனா வைரஸ் பிடித்தவர்கள் தொகை மிகச் சிறிதாக இருப்பதும் அதனால் இறப்பவர்கள் அதிகரிக்காமல் இருப்பதுமே இந்த சட்டத் தளர்வுக்குக் காரணம்; கொரோனா வைரஸை இல்லாமலாக்கிய காரணத்தாலல்ல. அப்படியானால் மீண்டும் பழைய நிலைமை நியூசிலாந்துக்கு வந்துவிட்டதா? நிச்சயம் இல்லை! வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தொகை அதிகரிக்கவில்லை என்ற ஒரே காரணத்தை வைத்தும், மக்கள் கவனத்தோடு நடந்துகொள்ளுவார்கள் என்ற ஒரே நம்பிக்கையை வைத்தும், தொடர்ந்து லொக்டவுன் இருந்தால் நாடு மீளமுடியாத பொருளாத வீழ்ச்சியை சந்தித்துவிடும் என்ற பயத்தால் அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை இது. நாளை எப்படி இருக்கும் என்பது அரசுக்கோ நாட்டு மக்களுக்கோ தெரியாது. அதிகம் பாதிப்பு இருக்காது என்ற ஒரே நம்பிக்கைதான் அரசை இப்படியொரு முடிவுக்குத் தள்ளியிருக்கிறது.

‘இதையும் சிந்திக்காமல்’

இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? ஒருவன் உயிருக்கு ஆபத்துவரும்போதுதான் குய்யோ முய்யோ என்று கதறி கடவுளை நோக்கி, ‘உதவி செய்யும் ஆண்டவா!’ என்று கூக்குரலிடுவான் என்று நினைப்போம். நீச்சல் தெரியாத ஒருவன் கடலில் விழுந்து மூச்சுத் திணறுகிறபோது, உயிர்பயத்தோடு நம்மையாரும் காப்பாற்ற மாட்டார்களா என்று, இருக்கின்ற கொஞ்ச மூச்சையும் பயன்படுத்தி ‘கடவுளே’ என்று ஒரு வார்த்தையாவது சொல்லுவான் என்றுதான் நாம் நினைப்போம். கோவிட்-19 ஒரே மாதத்தில் உலகம் பூராவும் மின்னல் வேகத்தில் செய்து வந்திருக்கின்ற மலைக்க வைக்கின்ற செயல்களைக் கண்ணிருந்து பார்த்தும், காதிருந்து கேட்டும் மனிதன் அசையமாட்டேன் சாமி, என்று இருதயம் கடினப்பட்டுப்போய் கடவுள் இருக்கிறார் என்ற எண்ணமே இல்லாமல் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எடுத்துவரும் நடவடிக்கைகள் என்னை மலைக்க வைக்கின்றன; என் நாட்டு மக்கள் உட்பட. உண்மையில் என் நாட்டுக்கு கடவுளின் பொதுவான கிருபை இந்த விஷயத்தில் அளவுக்கு அதிகமாகவே கிடைத்திருக்கிறது. எத்தனையோ நாடுகளில் கோவிட்-19 பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிரைக் குடித்து நாட்டை அல்லோலகல்லோலப் படுத்திக்கொண்டிருக்கும்போது என் நாடு அந்தப் பிரச்சனையெல்லாம் இல்லாமல் அமைதியாக தொடர்ந்து இருந்துவருகிறது. இதுதான் என்னைப் பயமுறுத்துகிறது. இத்தனை பொதுவான கிருபையை அனுபவித்து வரும் நாடு நம்மையெல்லாம் மூச்சுவிட வைத்து வாழவைத்து வரும் ஆண்டவரை ஒரு கணமும் நினைத்துப் பார்க்க மறுகிக்கிறதே! இந்த இருதயக்கடினமே என்னை பயமுறுத்துகிறது; எந்தவிதத்தில் என்று கேட்கிறீர்களா? அளவுகடந்த பொறுமைகாத்து வரும் நம் தேவனின் பொறுமைக்கும் எல்லையுண்டு அல்லவா? அந்தப் பொறுமை நீங்கி அவருடைய பொதுவான நியாயத்தீர்ப்பின் விளைவாக அவருடைய கோபப் பார்வை நாட்டின் மேல் வந்தால் என்ன கதி என்பது தெரியாமல் இவர்கள் வாழ்கிறார்களே; நியூசிலாந்து நாட்டு மக்களின் அந்த உதாசீன மனப்போக்குதான் எனக்கு பயத்தை உண்டாக்குகிறது.

இதுபற்றி வேதம் நமக்கு உணர்த்தாமலில்லை. யாத்திராகமத்தை வாசிக்கின்றபோது, எகிப்தின் பார்வோனை ஒருவழிக்குக் கொண்டுவந்து தன் பேச்சைக் கேட்டுநடக்கும்படிச் செய்ய கர்த்தர் செய்த காரியங்களில் ஒன்று, எகிப்தின் நீர்நிலைகளெல்லாம் இரத்தமாக மாறி ஒருவனும் எதையும் குடிக்கமுடியாத நிலையை உருவாக்கி, குடிக்கத் தண்ணீரே இல்லை என்றாகி தேசமெல்லாம் இரத்தக்காடானது. அமெரிக்காவும், ஐரோப்பாவும், பிரிட்டனும் இன்று ஒரு புறம் பயம் இருதயத்தைக் கவ்விக்கொள்ள, மறுபுறம் கோவிட்-19ஐ எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் அன்றாடம் நூற்றுக்கணக்கானவர்கள் மடிந்துபோகும் காட்சியைக்கண்டு தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கின்ற நிலையைக் கோவிட்-19 கொண்டுவந்திருக்கிறது. தேசமே இரத்தக்காடானபோது பார்வோன் என்ன செய்தான்? ‘அவன் இருதயம் கடினப்பட்டது . . . . பார்வோன் இதையும் சிந்திக்காமல் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான்’ என்று யாத்திராகமத்தில் வாசிக்கிறோம். இன்று பார்வோனைப்போல அதிகாரவர்க்கங்களும், மக்களும் ‘சிந்திக்காமல்’ தங்கள் வழியில் கோவிட்-19ல் இருந்து தப்ப எதையெதையோ செய்து வரவில்லையா?

சமுதாயம் பார்வோனைப்போல இன்று எதைப்பற்றி ‘சிந்திக்கவில்லை’? ஜீவனுள்ளவரும், சர்வவல்லவரும், என்றும் இருக்கிறவருமான தேவனை இந்த நேரத்தில் நினைத்துப் பார்த்து அவர் பேச்சைக் கேட்கவேண்டும் என்ற சிந்தனை அவர்களுக்கில்லை. கடவுளைப்பற்றி சிந்திக்க மறுத்து மனிதன் தன்வழியில் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறான். எலிசாவின் காலத்தில் இஸ்ரவேல் நாடுபூராவும் கடுமையான பஞ்சம் வந்தது. அந்தப் பஞ்சம் பாகுபாடு காட்டாமல் திமிர்பிடித்தலைந்து சிலைவணக்கத்தில் ஈடுபட்டிருந்த இஸ்ரவேலரையும், கொஞ்சப்பேராக அக்காலத்தில் இருந்த தேவனுடைய மக்களையும் சமத்துவ நோக்கத்தோடு பட்டினியால் வாட்டியது. நாட்டில் பயிர்கள் விளையவில்லை; சாப்பாட்டுக்கு எந்த வழியும் இருக்கவில்லை. எலிசா கில்காலுக்கு ஒருமுறை வந்தபோது அவருடைய பேச்சைக்கேட்டு கூழ் செய்வதற்காக தீர்க்கதரிசிகளின் புத்திரர்களில் ஒருவன் வெளியில் போய் கீரைவகை என்று நினைத்து விஷச்செடியைக் கொண்டுவந்து குடிப்பதற்குக் கூழ் செய்தான். அந்தளவுக்கு உணவு தயாரிக்க அவசியமான எந்தப் பயிர்வகையும் நாட்டில் இல்லாமல் பஞ்சம் மக்களைப் பட்டினியில் வாட்டியது (2 இராஜாக்கள் 4). அந்தக் கொடுமையான பஞ்சத்தின் மத்தியில் கடவுளை நினைத்து ஆராதித்து வழிபட்டவர்கள் தீர்க்கதரிசிகளின் புத்திரர்களைப்போன்ற கடவுளின் பிள்ளைகள் மட்டுமே; ஏனையோர் கடும் பஞ்சத்திலும் கடவுளைப் புறக்கணித்து சிலை வணக்கத்தை வாழ்க்கையில் தொடர்ந்து ‘இதையும் சிந்திக்காமல்’ வாழ்ந்தார்கள்.

பார்வோன் தொடர்ந்தும் இருதயம் கடினப்பட்டுப்போய் இஸ்ரவேலரை விடுவிக்கமறுத்தபோது கர்த்தர் தொடர்ந்து அற்புதங்களைச் செய்து அவன் மனந்திரும்ப வசதி ஏற்படுத்திக்கொடுத்தார். ஆனால், அத்தனை அற்புதங்களிலும் அவன் கர்த்தரின் சர்வவல்லமையை அறிந்துணராமல் அவற்றை உதாசீனம் செய்து இருதயம் கடினப்பட்டுப்போனான். இறுதியில் கர்த்தர் எகிப்தின் தலைச்சன் பிள்ளைகளைக் கொன்டு, பார்வோன் தன் தலைச்சன் பிள்ளையை இழந்தபோதே அவனுடைய இருதயம் பயத்தால் இளகி இஸ்ரவேலரை விடுதலை செய்தான். ஆனால் அதுவும் நிலையான ஒரு மனந்திரும்புதல் அல்ல. இஸ்ரவேலர் செங்கடலைக் கடக்குமுன்பாகவே அவன் மனம்மாறி அவர்களைப் பின்தொடர்ந்துபோய் அழிக்கமுயற்சித்தான். அவனுடைய இருதயம் கர்த்தர் செய்த எந்தச் செயலையும் கவனித்து சிந்திக்க அடியோடு மறுத்தது. இப்படி ‘சிந்திக்காமல்’ வாழ்வதே மனிதனின் அழிவுக்கு வழிவகுக்கிறது.

இந்தக் கோவிட்-19 காலத்தில் மனிதர்கள் சிந்திப்பதெல்லாம், வேலையில் தொடர்ந்திருக்கவேண்டும்; தொடர்ந்து பில் கட்ட பணம் வேண்டும்; வைரஸ் நமக்கு வந்துவிடக்கூடாது; பிஸ்னசைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்; எப்படியாவது தொடர்ந்து நிம்மதியாக வாழ்ந்துவிட வேண்டும் என்பவைபற்றி மட்டுந்தான். ஆண்டவரை அறியாத அவிசுவாசி இதையெல்லாம் நினைத்து கவலைப்படுவதற்கும், தலையைப் பிடித்துக்கொள்ளுவதற்கும் காரணமுண்டு. அவனுடைய இருதயம் இன்னும் இருண்டுபோய் அங்கே பரிசுத்த ஆவியானவர் கொடுக்கும் இருதயமாற்றம் ஏற்படாமல் இருப்பதே அந்தக் காரணம். இந்தக் கவலைகளெல்லாம் கிறிஸ்தவனுக்கு இருக்கலாமா? அவிசுவாசிகளைப்போல இந்தக் காலத்தில் அழிந்துபோகும் உலக நன்மைகளுக்காக ஆதங்கப்பட்டு ஆவிக்குரியவிதத்தில் சிந்திக்காமல் வாழ்ந்து வருகிறீர்களா? உங்களைப்போல கிறிஸ்துவுக்கு துரோகம் செய்கிற எவரும் இருக்கமுடியாது. எத்தனைப் பெரிய இரட்சிப்பை அவர் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார் தெரியுமா? எபிரெயருக்கு எழுதியவர் கேட்கிறார், ‘இத்தனை பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பிக்கொள்வோம்’ என்று (எபிரெயர் 2:4). இதை ஒரு எச்சரிக்கையாகத்தான் எபிரெயருக்கு எழுதியவர் சொல்லியிருக்கிறார்.

கஷ்ட துன்பங்கள் வருகிறபோதுதான் ஒரு விசுவாயின் உண்மை நிலையை அறிந்துகொள்ள முடியும். பொன் சுத்தமானதா என்று அறிந்துகொள்ளுவதற்கு கொல்லன் அதைப் புடம்போடுவான். புடம்போடாமல் தங்கம் சுத்தமாகாது; அதுபோலத்தான் நமக்கு வரும் தொல்லைகளும். அவை நம் விசுவாசத்தைச் சோதிக்க அனுப்பப்படிருக்கும் கர்த்தரின் டெக்ஸ் மெசேஜுகள். அந்தச் சோதனைகளின் மத்தியில்தான் விசுவாசி தன் விசுவாசச் செயல்களின் மூலம் தங்கத்தைப் போலப் பிரகாசிப்பான். அவனிலும் சின்னச் சின்ன பலவீனங்கள் இருந்தாலும், விசுவாசம் இல்லாதவிதமாக அவன் தொல்லைகளின் மத்தியில் நடந்துகொள்ள மாட்டான். அவனில் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் அவனைத் தொடர்ந்து காக்கிறவராக இருக்கிறார். உண்மையில் மெய்யான விசுவாசி இந்தக் கோவிட்-19 காலத்தில் தன் விசுவாசத்தில் தொடர்ந்து வளர்கிறவனாக, கர்த்தரின் தித்திப்பூட்டாத சந்தோஷத்தைத் தொடர்ந்து அனுபவிப்பான். உலகக் கவலைகள் அவனுக்கும் இருக்கும். அவன் அவற்றை இறையாண்மையுள்ள கர்த்தரிடம் ஒப்புவித்து, அவர் பார்த்துக்கொள்வார் என்று அவரை நம்பி முன்னோக்கிப் போய்க்கொண்டிருப்பான். உங்கள் விசுவாசம் இந்தக் காலத்தில் உங்களை எப்படி வாழவைக்கிறது? உலகத்தானைப்போல உலகக் கவலைகள் உங்களைத் தூங்க முடியாமல் செய்கிறதா? கர்த்தர் பார்த்துக்கொள்ளுவார் என்று எல்லாக் கவலைகளையும் அவர் மேல் போட்டுவிட்டு சந்தோஷத்தோடு தூங்குகிறீர்களா?

பொதுவான கிருபை

கர்த்தரின் பொதுவான கிருபை (Common grace) என்றொன்றில்லை என்று சில கிறிஸ்தவர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இதுபற்றி விளக்கமளிக்கும்படி ஒரு சகோதரர் இந்தக் காலங்களில் என்னிடம் கேட்டுவருகிறார். அவர் இந்தப் போதனைக்கு ஓரளவுக்கு இருதயத்தில் இடங்கொடுத்துவிட்டிருக்கிறார். இது மோசமான போதனை. இந்தப் போதனையைப் பின்பற்றுபவர்களே கர்த்தர் இலவசமாக அளிக்கும் சுவிசேஷத்தை அனைவருக்கும் சொல்ல மறுக்கிறார்கள். அவர்கள் சுவிசேஷத்தின் மூலம் கர்த்தரின் பொதுவான கிருபை தெரிந்துகொள்ளப்படாதவர்களுக்கு கிடைப்பதை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். பொதுவான கிருபை என்றால் என்னவென்று சொல்ல மறந்துவிட்டேனே! கர்த்தரின் விசேஷ கிருபை (Special grace) தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை ஏற்கனவே சொல்லிவிட்டேன். இரட்சிப்பு விசேஷ கிருபையின் மூலம் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு விசுவாசத்தின் மூலம் கிடைக்கிறது. பொதுவான கிருபை என்பது கர்த்தர் இரட்சிப்பைத் தவிர ஏனைய எல்லா கிருபைகளையும் அனைவருக்கும் பொதுவாக அளிப்பதாகும். இதை மறுத்தால் நாம் எவருக்கும் பொதுவாக சுவிசேஷத்தை சொல்லமுடியாது.

பொதுவான கிருபையை எதிர்ப்பவர்களுடைய வாதம், சுவிசேஷம் சொல்லுவது ஒருவனுக்கு நிச்சயமாக இரட்சிப்பைக் கொடுக்காதுபோனால் அவனுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதால் என்ன பயன் என்பதாகும். இது கேட்பதற்கு சுவாரஷ்யமாக இருந்தாலும், இது தவறான வாதம். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் யார் என்பது நமக்குத் தெரியாததால் நாம் எல்லோருக்குமே சுவிசேஷத்தைப் பாரபட்சமில்லாமல் சொல்ல வேண்டும். யார் இரட்சிப்பை அடைகிறார்கள் என்பது கர்த்தருக்கு மட்டுமே தெரியும். அவருக்கே முன்குறித்தவர்களைத் தெரிந்திருப்பதால் அவர், அவர்களுக்கு நித்தியஜீவனை அளிக்கிறார். நம் வேலை சுவிசேஷத்தைச் சொல்லுவது மட்டுமே. யார், யார் இரட்சிப்பு அடையப்போகிறார்கள் என்பதைத் தெரிந்திருந்து சுவிசேஷத்தைச் சொல்லும்படி இயேசு நமக்கு கட்டளையிடவில்லை. இயேசுவை விசுவாசிக்கிறவர்களை அவர்கள் சுவிசேஷத்தைக் கேட்டு விசுவாசித்த பின்பே நாம் தெரிந்துகொள்ளுகிறோம். அதனால் சுவிசேஷத்தை அனைவருக்கும் சொல்லவேண்டியது நம் கடமை. இதைப் பொதுவான கிருபையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறவர்கள் தங்கள் முட்டாள்தனத்தினால் எதிர்க்கிறார்கள்.

கர்த்தரே கிருபையின் தேவன். அவர் தன் விசேட கிருபையைத் தான் முன்குறித்து தெரிந்துகொண்டிருக்கிற மக்களுக்கு மட்டுமே காட்டினாலும் உலகத்தைப் படைத்த தேவன் அந்த உலகத்தைத் தொடர்ந்து பராமரித்து வருகிற தேவனாக இருக்கிறார். அதனால்தான் உலகம் பாவத்தால் இந்த நொடியில் அழிந்துபோகாமல் அவருடைய நோக்கம் நிறைவேறுவதற்காக அவரால் தொடர்ந்து பராமரிக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருகிறது. உலகத்துக்கு மழையையும், வெயிலையும், கால வேறுபாடுகளையும் கொடுத்து வருகிறவர் கர்த்தரே. கர்த்தரின் பொதுவான கிருபையே உலகம் சுனாமியாலும், போர்களாலும், பெரும் வாதைகளாலும் உடனடியாக அழிந்துவிடாபடி உலகத்தைப் பாதுகாக்கிறது. பாவத்தினால் உலகம் தொடர்ந்து அழிவை நாடிப்போய்க்கொண்டிருந்தபோதும் அது வேகமாக அழிந்துவிடாதபடியும், அதன் கோரப்பாவத்தால் சபையும், விசுவாசிகளும் பேராபத்துகளைச் சந்தித்துவிடாதபடியும் கர்த்தர் தன் பொதுவான கிருபையால் பாவிகளின் பாவத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கிறார். அவர் தன் கையை எடுத்துவிட்டால் மனிதன் உலகத்தையே சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிடுவான்; அந்தளவுக்கு மனித பாவம் கொடூரமானது. அத்தோடு பாவம் மனிதனின் எல்லாப் பாகங்களையும் பாதித்து அவனை முழுப்பாவியாக மாற்றியிருந்தாலும் அவன் முற்றாக நன்மைகளைச் செய்யமுடியாத நிலையில் இருக்கவில்லை; அவன் தன் பாவநிலையில் செய்யமுடியாத நன்மைகள் ஆவிக்குரிய நன்மைகளே. அவை தவிர அவன் சாதாரணமாக எந்த மனிதனும் ஒருவனுக்குக் காட்டக்கூடிய அன்பு, கருணை, பொதுவாக செய்யக்கூடிய உதவிகள் போன்றவற்றை செய்யக்கூடியவனாகத்தான் இருக்கிறான். இதற்குக் காரணம் அவன் பாவியாக இருந்தாலும் அவனில் தொடர்ந்திருக்கும் கர்த்தரின் சாயல்தான். பாவியான மனிதன் தொடர்ந்தும் கர்த்தரின் சாயலைப் பிரதிபலிக்கிறான்; அவன் மிருகமல்ல. கர்த்தரின் பொதுவான கிருபை இந்தவகையில் அனைவருக்கும் பயன்கொடுக்கிறது.

இந்தப் பொதுவான கிருபையே மனிதன் மிருகத்தைப்போல மாறிவிடாதபடி அவனைத்தடுத்து ஒரு கட்டுக்குள் நிறுத்தி சுவிசேஷத்தைக் கேட்கச் செய்கிறது. அவன் தான் கேட்கிற சுவிசேஷத்தின் மூலம் அனேக பொதுவான பலன்களை அடைகிறான். அந்தப் பொதுவான கிருபைகளில் ஒன்று அவன் தன் இருதயத்தில் வார்த்தையினால் குத்தப்படுவது; அவனுடைய இருதயம் குற்றஉணர்வடைகிறது. இன்னொன்று அவனுக்கு சுவிசேஷத்தின் மீதும் இயேசு கிறிஸ்துவின் மீதும் நல்லெண்ணம் உண்டாவது. இதன் காரணமாக அவன் சபைக்குக்கூட வரலாம்; அங்கே சிலகாலம் தொடரவும் செய்யலாம். பொதுவான கிருபையின் காரணமாக வெளிப்புறமான அனேக சுவிசேஷ நன்மைகளை பாவத்தில் இருக்கும் மனிதன் அடைகிறான்; இரட்சிப்பைத் தவிர. இந்தப் பொதுவான கிருபையின் காரணமாகத்தான் கடின இருதயம் கொண்ட ஏரோது ராஜா உடனடியாக யோவான் ஸ்நானனைக் கொன்றுவிடாமல் சில காலம் அவனைச் சிறையில் சந்தித்து சுவிசேஷத்தைக் காதுகொடுத்து கேட்டான்; அதனால் ஓரளவுக்கு இருதயம் பாதிக்கப்பட்டு வெளிப்புறமாக கர்த்தருக்கும் பயந்தான். ராஜா அகிரிப்பா பவுலின் சாட்சியத்தைக் கேட்டபின் ‘நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சம் குறைய நீ என்னை சம்மதிக்கப்பண்ணுகிறாய்’ என்றான். அதாவது, இன்னுங்கொஞ்ச நேரம் உன் பேச்சைக்கேட்டால் நானே கிறிஸ்தவனாகிவிடுவேன் போலிருக்கிறது என்று அகிரிப்பா சொன்னதற்குக் காரணம் கர்த்தரின் பொதுவான கிருபை என்பதை மறந்துவிடாதீர்கள். பொதுவான கிருபை ஒருவனை இரட்சிக்கக்கூடிய வல்லமையைத் தன்னில் கொண்டிராவிட்டாலும், ஒருவன் நியாயத்தீர்ப்பு நாளில் எந்தவித சாக்குப்போகும் சொல்லமுடியாதபடி கர்த்தருக்கு முன் குற்றவாளியாக நிற்கும்படிச் செய்கிறது.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இன்னும் விசுவாசிக்காமல் பார்வோனைப்போல இருதயத்தைக் கடினப்படுத்திக்கொண்டு வாழ்ந்து வருகிறவர்கள் இந்தக் கோவிட்-19 காலத்தில் நிச்சயம் சிந்திக்க வேண்டும். உங்களை எது இனி காக்கப்போகிறது? எதற்காக நீங்கள் வாழ்ந்து வருகிறீர்கள்? இறையாண்மைகொண்ட ஆண்டவர் அன்போடு, பொதுவான கிருபையின் அடிப்படையில் உங்களை வெறுத்து ஒதுக்கிவிடாமல் நீங்கள் மனம்மாற வேண்டும் என்பதற்காகவும், உங்களுடைய எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் சுவிசேஷத்தை நீங்கள் கேட்கும்படியான வசதியை செய்து தந்திருக்கிறார்; தொடர்ந்து உங்களோடு தன் வார்த்தையின் மூலம் பேசி உங்கள் இருதயத்தின் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறார். அவருடைய அன்பை நீங்கள் அலட்சியப்படுத்தி நிராகரிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? உடனடியாக மனம்மாறி ஆண்டவராகிய இயேசுவை இன்றே விசுவாசியுங்கள். இனியும் தொடர்ந்து ‘இதையும் சிந்திக்காமல்’ இருந்துவிடாதீர்கள்.

————————————————————————————————————

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 33 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.