மறுபடியும் அஞ்சரைப்பெட்டிக்குள்

அஞ்ஞரைப்பெட்டியைத் திறந்து பார்த்து சில வருடங்களாகி விட்டது. காலங்கள் கடந்துபோக வாழ்க்கையில் நாம் கேட்பதும், வாசிப்பதும், பிறரோடு பழகும் அனுபவத்தில் கிடைப்பதும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. எத்தனையோ விஷயங்கள் அவசியமில்லாதவையாகிவிடுகின்றன. அவற்றையெல்லாம் மனமாகிய அஞ்ஞரைப்பெட்டிக்குள் நாம் சேர்த்து வைப்பதில்லை. மறக்கமுடியாத, அவசியமான பல நிகழ்வுகளையும், செய்திகளையும், உண்மைகளையுந்தான் நாம் அஞ்ஞரைப்பெட்டிக்குள் வைத்திருப்போம். பசுமாடு தேவையான அளவுக்கு புல்லை வயிற்றில் சேமித்த பிறகு மரத்தடியில் ஆசுவாசமாக அமர்ந்து அதை மறுபடியும் வாய்க்குக்கொண்டுவந்து அசைபோடும். என் அஞ்ஞரைப்பெட்டியை இன்னொரு தடவை திறந்து பார்த்து அசைபோடும் சமயம் வந்துவிட்டது. நீங்களும் என்னோடு வாருங்களேன்!

படைப்பாளியாக நான்

என் இலக்கியப்பணி தீவிரமாக ஆரம்பமான வருடம் 1995. அதை நான் திட்டமிட்டு ஆரம்பிக்கவில்லை; எழுத வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அதுவரை, பத்துவருடங்களாக இருந்ததும் கிடையாது. திரும்பிப் பார்க்கிறபோதுதான் கர்த்தரின் பராமரிப்பு என்னை அதில் இழுத்துவிட்டிருப்பதை உணர்கிறேன். அது காலத்தின் கட்டாயம்; என் வாழ்க்கையில் கடவுளின் திட்டங்களில் ஒன்று. இலக்கிய வாசிப்பும் ஆர்வமும் பத்து வயதில் தொடங்கியது. அன்றிருந்து 20 வருடங்களுக்கு இலக்கியம் வாசித்திருக்கிறேன். அதுபற்றி இன்னொரு சமயம் எழுதுகிறேன். கிறிஸ்து என்னை ஆட்கொண்டபோது இலக்கியத்தை நான் இழக்கவில்லை; இலட்சியமும், இலக்கும் மட்டும் மாறின. 1995ல் ஆரம்பமான திருமறைத்தீபம் இப்போது 26 வருடங்களை நிறைவுசெய்துவிட்டது. அதன் ஏழாவது தொகுப்பு (வால்யூம்) அடுத்த வருடம் வெளிவர வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதேகால அளவு நான் படைப்பாளியாக இருந்து வந்திருக்கிறேன். இதுவரை அதைப்பற்றி நான் அதிகம் சிந்தித்ததில்லை; அதற்கு நேரமும் இருக்கவில்லை. இப்போது கோவிட் காலமல்லவா? எதையும் அலசிப் பார்ப்பதற்குத்தான் அதிகம் நேரமிருக்கிறதே. இத்தனை ஆண்டுகளும் என்னோடிருந்து என்னை வழிநடத்தி இலக்கியப்பணியில் தளர்ந்துவிடாமல் ஊக்கத்தோடு ஈடுபட்டுவர கர்த்தர் துணைசெய்திருக்கிறார். நான் படைப்பாளியாக உருவெடுக்கக் காரணமாக இரண்டு நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். (படைப்பாளி என்று என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளுவதுகூட இதுதான் முதல்முறை). அவர்களுடைய அடங்காத வற்புறுத்தலே என்னை எழுதவைத்தது. அவர்கள் ஊக்குவித்து இந்தப்பணியில் என்னை இழுத்துவிட்டிருக்காவிட்டால் எழுதவந்திருப்பேனோ தெரியாது; நிச்சயம் இல்லை என்றுதான் நினைக்கிறேன். எழுத்துப்பணிக்கு என் இலக்கியப் பின்புலம் என்னைத் தூக்கி நிற்கவைத்திருக்கும் தூண். எனக்கு ஆசான்களாக இருந்து மொழி இலக்கிய ஆர்வமூட்டி வளர்த்துவிட்டிருக்கும் ஒவ்வொருவரையும் இந்நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன்; சிரம் தாழ்த்துகிறேன். அவர்களில் இருவர் பின்னால் பிரபலமான தமிழறிஞர்களாக; பேராசிரியர்களாக; கலாநிதிகளாக; படைப்பாளிகளாக நாடறியச் சிறந்தவர்கள். இன்னொருவரை நான் துரோணரைப்போலப் பயன்படுத்திக் கற்றிருக்கிறேன்.

தீவிரமாக எழுத ஆரம்பித்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வு ஞாபகத்துக்கு வருகிறது. அது பதியப்பட வேண்டியதொன்று. அது 2000களின் ஆரம்பத்தில் நிகழ்ந்தது என்று நினைக்கிறேன். திடீரென அறிமுகமில்லாத ஒருவரிடம் இருந்து எனக்கு இமெயில் வந்தது. நான் வாழும் ஆக்லாந்து நகரில் இருந்து ஏழு மணிநேர கார் பிரயாண தூரத்தில் இருந்த நகரத்தில் இருந்து ஒரு மருத்துவர் அதை எழுதியிருந்தார். அவர் வெள்ளையர். எனக்கு சுவிசேஷ செய்தியை விளக்கும் கைப்பிரதி தமிழில் இருந்தால் அனுப்பிவைக்க முடியுமா? என்று கேட்டிருந்தார். வெள்ளையரான அவருக்கு தமிழ் சுவிசேஷ கைப்பிரதி ஏன் என்று ஆர்வங்கொண்டு அதுபற்றி பதிலெழுதிக் கேட்டேன். அதற்கு பதிலளித்த அவர் தமிழகத்தில் இருந்து ஒருவர் என்னிடம் ஜுரத்துக்கு மருந்து வாங்க வந்தார். அவருக்கு இயேசுவைப்பற்றிச் சொல்லியிருக்கிறேன். இயேசுபற்றி தமிழில் வாசிக்க ஏதாவது தரமுடியுமா, என்று கேட்டார் என்று சொன்னார். அந்த எழுத்துப்பணியின் ஆரம்பகாலத்தில் நான் சுவிசேஷ செய்திகளை எழுத ஆரம்பிக்கவில்லை. என்னிடம் இருந்த நூல்களைப் புரட்டிப்பார்த்துவிட்டு ‘கிறிஸ்தவ இறையியலுக்கு அறிமுகம்’ என்று நான் எழுதி வெளியிட்டிருந்த கையடக்கமுள்ள சிறுநூலையும், தமிழில் புதிய ஏற்பாட்டு நூலையும் அவருக்கு அனுப்பிவைத்தேன். அத்தோடு என்னை எப்படித் தேடிப்பிடித்தீர்கள், என்றும் கேட்டிருந்தேன். அதற்கு அவர் எத்தனையோபேரிடம் விசாரித்து இறுதியில் உங்கள் முகவரி எனக்குக் கிடைத்தது என்றார்.

அது நடந்து பத்து நாட்களுக்குப் பிறகு ஒரு இமெயில் வந்தது; அதுவும் எனக்கு அறிமுகமில்லாத ஒருவரிடம் இருந்து. அதை எழுதியிருந்தவர், அந்த வெள்ளையரான மருத்துவருக்கு நான் அனுப்பிவைத்திருந்த சிறுநுலைப் பெற்று வாசித்திருந்த மனிதர்; பெயர் அவ்வை நடராஜன் என்று குறிப்பிட்டிருந்தார். அவரைப்பற்றி அப்போது எனக்கு ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. அவருடைய இமெயில் தெளிவான ஆங்கிலத்தில் முறையான கடித நடையில் இருந்தது. அதில் அந்த மனிதர் தான் வாசித்த நூலில் சந்தித்திருந்த சத்தியத்தைப்பற்றி அல்லாமல், அந்த நூலில் காணப்பட்ட தமிழெழுத்து நடையின் அழகையும், இனிமையையும், வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருந்த விதத்தையும் இரசித்துப் பாராட்டி எழுதியிருந்தார். காரண காரியங்களோடு நூலின் கருப்பொருள் விளக்கப்பட்டிருந்தவிதத்தின் அருமைபற்றியும், அதன் முடிவுரைபற்றியும் ஒரு பேராசிரியர் தன் முனைவர் பட்டத்துக்கான மாணவனின் ஆய்வாக்கத்தை எப்படி விமர்சிப்பாரோ அந்தக்கோணத்தில் எழுதி என்னை வாழ்த்தியிருந்தார். அத்தோடு நிறுத்திவிடாமல் தான் கூடிய சீக்கிரம் ஆக்லாந்து வரவிருப்பதாகவும், அப்படி வருகிறபோது என்னை எப்படியாவது சந்தித்துப் பேசவேண்டும் என்று என் அனுமதியையும் கேட்டிருந்தார். அதற்கு நான், அப்படி வரும்போது எனக்கு முன்கூட்டியே தெரியப்படுத்துங்கள் என்று தொலைபேசி எண்ணையும் கொடுத்து பதில் அனுப்பினேன். அந்த இமெயிலை நான் பாதுகாத்து வைக்கத் தவறிவிட்டேன். இதுவரை எத்தனையோ பேர் என் படைப்புகளை வரவேற்று எழுதியிருந்தபோதும் இப்படியொரு அறிவார்ந்த நுணுக்கமான விமர்சனக் கோணத்தில் எதுவும் வந்ததில்லை.

ஒரு வாரத்திற்குப் பிறகு அந்த மனிதர் எனக்கு இமெயில் அனுப்பி, தான் ஆக்லாந்தில் இருக்கும் முகவரியைத்தந்து சந்திக்கமுடியுமா என்று கேட்டிருந்தார். அவர் கொடுத்திருந்த தொலைபேசி எண்ணோடு தொடர்புகொண்டு நாளையும், நேரத்தையும் கொடுத்தேன். அதன்படி அந்நாளில் அவரிருந்த வீட்டிற்கு சென்று அவரைச் சந்தித்தேன். கதவைத் தட்டியபோது கதவு திறக்க, தூரத்தில் ஒரு முதியவர் தன் கையில் இளம் நீள நிறத்தில் இருந்த ஒரு சரிகைக்கரையுள்ள பட்டுச் சால்வையை இருகரங்களிலும் தூக்கிக்கொண்டு என்னை நோக்கி வந்ததைக் கவனித்தேன். அவர் அருகில் வந்து என்னை உள்ளே அழைத்து, அந்தச் சால்வையை என்மேல் போர்த்தி தன் கரங்களால் என் இரண்டு கைகளையும் பிடித்துக் குழுக்கி கட்டியணைத்து அழைத்துச் சென்று வரவேற்பறையில் அமரச் செய்தார். இதெல்லாம் ஏன், எதற்காக என்று என் மனம் படுவேகமாக கேள்விகளுக்கு மேலாய்க் கேள்விகளை அள்ளியெறிந்து கொண்டிருந்தது. அப்போது அந்த முதியவர் தன்னை முறையாக அறிமுகப்படுத்திக்கொண்டார். தன் பெயர் அவ்வை நடராஜன் என்றும் தான் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் என்றும் ஆரம்பித்து நியூசிலாந்து வந்த நோக்கத்தையும், ஏற்கனவே நான் குறிப்பிட்டிருந்த அந்த மருத்துவர் மூலம் சுவிசேஷத்தைக் கேட்ட அனுபவத்தையும் அதன் காரணமாக என் சிறு ஆக்கத்தை வாசித்ததையும் பற்றி விளக்கினார். அதற்குப் பிறகு அவர், ‘ஐயா, நீங்கள் இத்தனை அருமையாக, அழகாக தமிழ் எழுத எங்கு கற்றுக்கொண்டீர்கள்? விளக்குவீர்களா, அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். என்னுடைய முனைவர்பட்ட மாணவர்களில் ஒருவர்கூட இத்தனை அழகாகத் தமிழெழுதி நான் கண்டதில்லை’ என்று சொன்னார். அவர் சுத்தமான தமிழில் தெளிவாகப் பேசினார்.

அவ்வை நடராஜன்

அதற்குப் பிறகு எங்கள் சம்பாஷனை ஒரு மணிநேரம் நீடித்தது. விடைபெற்றுக்கொள்ளும்போது அவர் சென்னையில் தன்னுடைய வீட்டுக்கு வந்து தன்னைச் சந்திக்கும்படி பெரிதும் வேண்டிக் கேட்டுக்கொண்டார். அடுத்த தடவை வரும்போது நிச்சயம் வருகிறேன் என்று சொன்னேன். அவரிடம் வீட்டு முகவரியையும் கேட்டேன். அதைத் தந்தபோது சொன்னார், ‘நீங்கள் ஆட்டோகாரரிடம் என் பெயரைச்சொன்னாலே போதும். அவர் என் வீட்டிற்கு உங்களை அழைத்துவந்துவிடுவார்’ என்றார். அந்தளவுக்கு பிரபலமானவரா இவர் என்று என் மனம் கேட்டது. அவரைப்பற்றி அந்தவேளையில் எனக்கு ஒன்றும் தெரிந்திருக்கவில்லை; பின்னால்தான் அவருடைய முக்கியத்துவத்தை அறிந்துகொண்டேன். ஒத்துக்கொண்டதுபோல், ஒருமுறை பிரயாணத்தில் தியாகராஜ நகரில் உள்ள அவருடைய வீட்டுக்கு நான் போக, அங்கேயும் இன்னொரு சரிகைச் சால்வையை அவர் என்மீது போர்த்தி தன் மனைவி டாக்டர் ராதா நடராஜனோடு அருமையான மதிய விருந்தையும் அளித்து உபசரித்தார். அதுமட்டுமல்லாமல் அவர், ‘ஐயா, நீங்கள் ஏன் கிறிஸ்தவ வேதத்தை நல்ல தமிழில் மொழிபெயர்க்கக்கூடாது, என்னைப் போன்றவர்கள் வாசிப்பதற்கு உதவுமே. இப்போதிருக்கும் வேதத்தமிழ் பலங்காலத்துத் தமிழாக வேதத்தை அறிந்துகொள்ளுவதற்கு தடையாக இருக்கிறதே’ என்றும் சொன்னார். அன்றும் எங்கள் சம்பாஷனை தமிழைப்பற்றியும், கிறிஸ்தவத்தையும் பற்றியும் நீடித்தது. நான் போவதற்கு முன்னால் நீங்கள் சிபாரிசு செய்து நான் போகக்கூடிய ஒரு திருச்சபை இருந்தால் சொல்லுங்கள் என்று அவர் கேட்டதும் என் நினைவுக்கு வருகிறது. அப்படியொரு சபை அன்று எங்கே இருந்தது? அவரிடமும் அவருடைய மனைவியிடமும் விடைபெற்றுக்கொண்டு நானிருந்த ஓட்டலுக்குக் திரும்பினேன்.

இதையெல்லாம் நான் விளக்குவற்கு ஒரு காரணமிருக்கிறது. திருமறைத்தீபத்தின் மைல்கல் கால சிறப்பு விழாக்களைக் கர்த்தருக்கு நன்றி செலுத்தும் ஒரே காரணத்திற்காக வாசகர்களோடும், சபைகளோடும் இணைந்து இதுவரை மூன்று தடவை நிகழ்த்தியது தவிர பாராட்டையோ, பட்டங்களையோ நான் படைப்பாளியாய் எதிர்பார்த்தது கிடையாது. என்னுடைய இலக்கியப் பணியில் ஆழ்ந்த அக்கறை காட்டும் நியூசிலாந்தில் வாழும் நெருங்கிய நண்பர் ஒருவர் சமீபத்தில், ‘உங்களுக்கு ஒரு டாக்டர் பட்டம் கிடைக்கவேண்டும்’ என்றார். நான் சிரித்துக்கொண்டே அது ஏற்கனவே கிடைத்துவிட்டது என்றேன். அவர் ஆச்சரியத்தோடு எப்போது கிடைத்தது, எனக்குச் சொல்லவில்லையே என்றார். மேலே நான் குறிப்பிட்டிருந்த சம்பவத்தை விளக்கி மதிப்புக்குரிய மூத்த தமிழறிஞர் அவ்வை நடராஜனின் வார்த்தைகள்தான் அந்த டாக்டர் பட்டம் என்றேன். தமிழகத்தின் பிரபலமான ஒரு முதுபெரும் தமிழறிஞர் தன் வாயால் என் படைப்புப்பற்றிச் சொன்ன வார்த்தைகளைவிட வேறு என்ன தேவை? அன்னத்திற்குத் தெரியும் பாலின் அருமை. தமிழை நேசித்து, தமிழ்த்தொண்டாற்றி, தமிழுக்காக வாழும் ஒருவருக்குத்தான் அதன் அருமை புரியும். சொல்ல மறந்துவிட்டேன். முனைவர் அவ்வை நடராஜன் அவர்கள் மிகச்சிறந்த தமிழிஞர், பேச்சாளர். பத்மஸ்ரீ, கலைமாமணி போன்ற விருதுகளைப் பெற்றவர். விரிவுரையாளராகவும், பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் இருந்திருக்கும் அவர் தமிழக அரசின் பல்வேறு தமிழ்தொடர்பான துறைகளில் இயக்குனராகவும், செயலாளராகவும் எம்ஜியார், கருணாநிதி அரசுகளின் காலத்தில் பணியாற்றியிருக்கிறார். அவருடைய தமிழாற்றலைக்கண்டு வியந்து எம்ஜியாரே அவரை முதன்முதலாக அரசு பணியில் நியமித்தார். இப்போது சென்னை பாரத் பல்கலைக்கழகத்தின் வேந்தராக அவ்வை நடராஜன் இருந்து வருகிறார். பல்வேறு ஆய்வாக்கங்களை அவர் படைத்திருக்கிறார். அவருடைய சொற்பொழிவுகள் நூல்களாகவும் வந்திருக்கின்றன. தமிழைப்போல ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர் இந்தத் தமிழறிஞர்.

தரையில் இருந்தாலும் தளர்வில்லை

கோவிட்-19 என்னை வீட்டில் இருக்கவைத்துவிட்டது; ஆறுமாத காலமாக விமானப்பயணம் இல்லை. உண்மையில் அதை நான் மிஸ் பண்ணவில்லை. அதிகம் எழுதவும், பேசவும் வாய்ப்புகள் அதிகமாகக் கிடைத்தன. ஏப்ரல் மாதத்தில் இருந்து நாலரை மாதங்களுக்குத் தொடர்ந்து வாரத்தில் ஐந்து தடவை பிரசங்கங்களையும், விரிவுரைகளையும் அளிக்க முடிந்தது. அதுவும் இரவு 11 மணிக்கு ஓய்வுநாளில் கடைசி செய்தியை அளித்திருந்தேன். இப்போது கொஞ்சம் குறைத்துக்கொண்டிருக்கிறேன். அந்த நாலரை மாதங்களிலும் நான் அளித்திருந்த பிரசங்கங்களையும், விரிவுரைகளையும் உயர்தரத்தில் தயாரிக்கக்கூடிய நேரத்தையும், வசதியையும் ஆண்டவர் கிருபையாய் அருளியிருந்தார். முக்கியமாக ‘சிக்கலான வேதப்பகுதிகள்’ என்ற தலைப்பில் தெரிந்தெடுத்து நான் விளக்கியிருந்த பகுதிகளை மிகுந்த ஆர்வத்தோடும் ஆவிக்குரிய சந்தோஷத்தோடும் தயாரித்து அளித்திருந்தேன். அந்தளவுக்கு வேதத்தை ஆராய்ந்து படிக்க நேரமிருந்தது. அதுமட்டுமல்லாமல் அப்படி ஆராய்ந்து படிப்பதில் இருக்கும் ஆனந்தமே விவரிக்கமுடியாதது. அதற்குக் காரணம் ஆவியானவர் வழிநடத்தி வெளிப்படுத்துகின்ற சத்தியங்கள்தான். வாசிப்பாகிய நீச்சல் குளத்தில் நீச்சலடிக்கும் அனுபவத்தை அனுபவித்திருக்கிறீர்களா? நீச்சலடிப்பதைப் பலர் தீவிர உடற்பயிற்சியாக வைத்திருக்கிறார்கள்; எனக்கு ஓடுவதைப்போல. வாசிப்பாகிய நீச்சலைத் தீவிரமாகக் கொண்டிருப்பது நித்திய வாழ்வுக்கு பிரயோஜனமளிக்கும்.

பிரசங்கங்களையும், விரிவுரைகளையும், படைப்புகளையும் இன்னொரு கட்டத்திற்குக் கொண்டுபோக ஆவியானவர் உதவியிருக்கிறார். அவருடைய அனுக்கிரகத்தை இந்தக் காலங்களில் அதிகம் அனுபவித்திருக்கிறேன். படித்துப் பிரசங்கம் செய்வதென்பது நம்மினத்துப் பிரசங்கிகளில் அறவேயில்லாதது என்பது ஆத்துமாக்களுக்கே தெரிந்த ஒன்றுதான். வெகுசிலர் மட்டுமே ஆங்காங்கு இதைச் செய்கிறவர்களாக இருக்கிறார்கள். படித்து, ஆராய்ந்து சிந்தித்து, ஆவியில் தங்கியிருந்து, ஜெபத்தோடு எழுதித் தயாரித்துப் பிரசங்கம் செய்வதை ஆவியில்லாதவன் செய்கிற காரியமாக கெரிஸ்மெட்டிக் பிரசங்கிகள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இப்படித் தயாரிக்கும் பிரசங்களை மட்டுந்தான் சத்திய ஆவியானவர் பயன்படுத்துகிறார்; வேறெதையும் பயன்படுத்துவதில்லை என்பது அந்த ஞானசூன்யங்களுக்குப் புரியவில்லை. ஆவிக்குரிய அறிவாளிகள் எல்லோருக்குமே ஞானத்தை அள்ளியள்ளி அளிக்கும், படிப்பாளிகளிலெல்லாம் பெரிய படிப்பாளியான பரிசுத்த ஆவியானவர், படித்து ஆராய்ந்து ஞானத்தை அடைய உழைக்கிறவர்களை உதாசீனப்படுத்துவாரா? வேதத்தைப் படித்து ஆராய்ந்து சிந்திக்காமல் இருப்பவர்கள் பக்கத்தில் அவர் வருவாரா?

என் வேதப்படிப்பையும், உழைப்பையும், பிரசங்கங்களையும் இந்தக் காலத்தில் ஆவியானவர் ஆசீர்வதித்திருக்கிறார். ஒன்று தெரியுமா? ஆவியில் தங்கியிருந்து, ஜெபித்து, உழைத்துத் தயாரிக்கும் பிரசங்கங்களைக் கொடுக்கிறபோதுதான் பிரசங்கிக்கு உள்ளுக்குள் ஆவிக்குரிய நம்பிக்கை பதிகிறது; ஆவிக்குரிய உற்சாகம் உண்டாகிறது. மனித பயமில்லாமல், அவனால் அப்போதுதான் பிரசங்கிக்க முடிகிறது. தான் செய்ய வேண்டிய பணியை (உழைத்துத் தயாரிப்பது) முறையாகச் செய்திருக்கிறோம் என்ற உணர்வு அவனுக்குள் குற்றவுணர்வில்லாமல் இருந்து ஆவிக்குரிய தைரியத்தோடு பிரசங்கம் செய்யவைக்கிறது; அவனால் ஆத்மீகத் திருப்தியோடும், ஆவிக்குரிய சந்தோஷத்தோடும் பிரசங்கிக்க முடிகிறது. ஆவியானவர் அப்படிப்பட்டவனை எப்படி ஆசீர்வதிக்காமல் இருப்பார்? இதற்குக் குறைந்த எதையும் செய்கிறவன் வேதப்பிரசங்கியல்ல.

இக்கோவிட் காலத்தில் ஓரிரு நூல்களை எழுதித் தயாரிக்க ஆண்டவர் வசதிசெய்து தந்தார். அதிகளவு நேரங்கொடுத்து ஆழமாக வாசித்து, ஆராய்ந்து படிக்க விமானப் பயணங்கள் இதற்குமுன் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. அந்தக்குறை இந்த ஆறுமாதகாலத்தில் இருக்கவில்லை. மனந்திரும்புதல் பற்றி விரிவுரைகளை அளித்து வருவதால் அதுபற்றிய பல நூல்களை வாசிக்கமுடிந்தது. தொமஸ் பொஸ்டன், தொமஸ் வொட்சன், ரால்ப் வென்னிங், ஜோன் கல்கூன், ஜோன் மரே, ஆர். சி. ஸிபிரவுல், சின்கிளெயர் பேர்கசன் என்று பலருடைய நூல்களை வாசித்தேன்; தொடர்ந்தும் வாசித்து வருகிறேன். பியூரிட்டன் பெரியவர்களைப்பற்றியும் அவர்களுடைய போதக ஊழியத்தின் தன்மை பற்றியும் வாசிக்க முடிந்தது. வாசிக்க வேண்டிய சில நூல்களையும் படிப்பறையில் கண்முன் மேசையில் அடுக்கிவைத்திருக்கிறேன்.

ஊழியப்பணியும், புத்தகக் கடைகளும், இசையும்

இந்தக் காலப்பகுதியில் புதிய வாசகர்களோடு உறவேற்பட்டிருக்கிறது. அவர்களோடு இமெயில் கடிதப் பறிமாற்றம் செய்யமுடிந்திருக்கிறது. சிலருக்கு சுவிசேஷத்தைச் சொல்லவும், அதுபற்றி விளக்கவும் முடிந்திருக்கிறது. கவிதைகள் பக்கம் போய்ப் பலகாலமாயிருந்தது. வாசகர் ஒருவர் அதை நினைவூட்டி மறுபடியும் அதன் பக்கம் போகவைத்திருக்கிறார். அவரும் அவருடைய மனைவியும் இலக்கிய ஆர்வலர்கள்; கவிதைகளை இரசிப்பவர்கள். நேரம்தான் இருக்கிறதே; ஏன் எழுதக்கூடாது? இலக்கிய ஆர்வலர்கள் சுற்றியிருந்தால் அந்த அனுபவம் தரும் சுகமே தனியானது தெரியுமா? இன்று கிறிஸ்தவர்களில் எங்கே பார்க்கமுடிகிறது, இலக்கிய ஆர்வலர்களை? தமிழையே தத்தித்தத்திப் பேசுகிறவர்களாக இருக்கிறபோது தென்னை மர உயரத்தில் இருக்கும் இலக்கியத்தில் அவர்கள் இளநீர் அருந்துவது எப்படி?

கோவிட்-19ஐ கர்த்தர் நிறுத்திவிடத் தொடர்ந்து சபையாக ஜெபிக்கிறோம். இருந்தாலும் இந்தக் கோவிட் வராமல் இருந்திருந்தால் இதையெல்லாம் செய்திருப்பேனா? நிச்சயம் இல்லை. கர்த்தரின் திட்டமே அலாதியானதுதானே. இருந்தாலும், அன்புக்குரியவர்களையும், ஆவிக்குரிய நண்பர்களையும் நேரில் பார்க்க, பேசிப்பழக முடியாமலிருப்பது மனதை நெருடுகிறதுதான். கோவிட்-19ல் வீட்டுக்குள் இருந்து பழகியிருப்பது வெளியில் போகும் ஆர்வத்தை அடியோடு குறைத்துவிட்டது. கோவிட் இல்லாமல் போகும் காலத்தில் வெளியில் போய்ப் பழக ஆரம்பிக்க வேண்டியிருக்குமோ! இதுதான் புதிய வழமையோ?

பிரயாணம் செய்யும் காலங்களில் போகும் நாடுகளில் புத்தகக் கடைகளுக்கு விசிட் அடிப்பதை ஓர் அங்கமாக வைத்திருந்திருந்தேன். முக்கியமாக தமிழ் நூல்கள் விற்கும் கடைகளான ஹிங்கின்ஸ்பொட்டம், தி நகரில் உள்ள கிழக்கு, நியூ புக் லேண்ட்ஸ் போன்ற சில கடைகளைத்தான் சொல்கிறேன். சிங்கப்பூரிலிலும் எனக்கு அறிமுகமான ஒரு கடை இருக்கிறது. கோவிட் காலத்தில் என்னென்ன புதிய நூல்கள் வந்திருக்கின்றனவோ தெரியாது. தமிழிலக்கியத்தின் வளத்திலும், வளர்ச்சியிலும் நான் எப்போதுமே ஒரு கண்வைத்திருப்பது வழக்கம். நூல்களை மட்டுமல்லாது, அவை அச்சிடப்பட்டிருக்கும் அழகையும் நான் ரசிக்காமல் இருந்ததில்லை. அச்சுத்தரம் இன்று பலமடங்கு உயர்ந்திருக்கிறது. அநேக சிற்றிதழ்களும் இன்றிருக்கின்றன. புத்தகக்கண்காட்சி பற்றியும் வாசித்தேன்; அசூயையாகவும் ஆதங்கமாகவும் இருந்தது. நூல்கள் வாசிக்கும் ஆர்வமிருப்பவர்களுக்குத்தான் தெரியும் நூல்களுக்கு மத்தியில் இருக்கின்ற சுகம்; குழந்தைகளுக்கு மிட்டாய் கடையில் கிடைக்கும் சுகத்தைப்போல. இதையெல்லாந்தான் மிஸ் பண்ணுகிறேன்.

எனக்கு இசையில் எப்போதும் ஆர்வம் இருந்திருக்கிறது. இந்தக் கோவிட் காலத்திலும் அதையும் கேட்டு மகிழும் சந்தர்ப்பம் கிடைத்தது. கிறிஸ்தவ பாடல்கள் என்று மட்டுமில்லாமல் பாடல்களற்ற வாத்திய இசை எனக்கு அதிகம் பிடிக்கும். அநேக காலத்துக்கு முன்பு ரவிசங்கரின் சித்தார் இசைக்கச்சேரியை நேரில் மூன்று மணிநேரம் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். இன்று அவருடைய இரண்டு மகள்களும் (அனுஷ்கா, நோரா ஜோன்ஸ்) பிரமாதமாக தகப்பனைப் பின்பற்றி இசையில் வளர்ந்திருக்கிறார்கள். இந்தக் காலத்தில் இளைஞர்கள் பெருமளவில் இசையில் தேர்ச்சிபெற்று முன்னுக்கு வந்திருப்பதைக் கவனிக்கிறேன். அதுவும் பாரம்பரிய செவ்வியல் சங்கீதத்தில் இளம் வயதிலேயே பயிற்சிபெற்று முன்னுக்கு வந்திருப்பவர்களைப் பார்த்து வியக்கிறேன். எனக்கு வயலின் இசையில் அலாதி பிரியம். லால்குடி ஜெயராமன் அதில் வித்தகர்; அவரின்றில்லை. டீ. எல். சுப்பிரமணியன் இன்னுமொரு செவ்வியல் இசை வித்தகர். அவருடைய பிள்ளைகள் இளம்வயதில் என்னவாய் இசைமேதைகளாகியிருக்கிறார்கள். அநேக நவீன டிஜிட்டல் இசை வாத்தியக்கருவிகளை இன்று இளைஞர்கள் பயன்படுத்துகிறார்கள். இசைப்பிரியனாக இருந்தாலும் ஒரு வாத்தியத்தையும் நான் கற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதற்கென்ன, அடுத்தவர்கள் வாசிப்பதைக் கேட்டு மகிழலாந்தானே! என்னடா, இசையில் இவருக்கு எப்படிப் பிரியம் வந்தது? சபையில் அடக்கிவாசிக்க வேண்டும் என்றெல்லாம் எழுதியிருக்கிறாரே என்று எவரோ சொல்லுவது கேட்கிறது. உண்மைதான்! ஆராதனையில் இசைக்கு இருக்கவேண்டிய இடம் வேறு, தனிநபராக ஒருவர் வாழ்க்கையில் இசையை வேறுநேரங்களில் கேட்டு இரசிப்பது வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக்கூடாது. இரண்டாவதைப் பற்றித்தான் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன், புரிகிறதா?

எங்கே போகிறது இளைய தலைமுறை?

இதெல்லாம் இன்றைய கிறிஸ்தவ இளைஞர்களைப்பற்றி என்னை அதிகம் சிந்திக்க வைக்கிறது. அவர்கள் எதில் வளர்ந்திருக்கிறார்கள்; உயர்ந்திருக்கிறார்கள்? என்று கேட்டுப்பார்க்காமல் இருக்கமுடியவில்லை. கிறிஸ்தவ இளைய சமுதாயம் தளர்வான நிலையில் இருப்பதை நான் காண்கிறேன். அவர்களுடைய பெற்றோர்களையும், வளர்ப்பு முறையையும் இதற்குக் குறைசொல்லலாம். கிறிஸ்தவ சபைகளும், தலைவர்களும் இதற்கு ஒரு காரணம் என்பதையும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கமுடியாது. சரியான வழிநடத்தலோ, முன்மாதிரிகளோ அவர்களுக்கு இல்லை. சரியானவிதத்தில் அவர்களுக்கு வழிகாட்டுதலும், ஊக்குவிப்பும் தேவை.

பணத்திற்காக மட்டும் கல்வி; பணத்திற்காக மட்டும் தொழில்; பணத்திற்காக மட்டும் திருமணம் என்றிருப்பதெல்லாம் என்று மாறுமோ? பணத்தை மட்டுமே வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டு எதையும் அணுகி வாழ்க்கையில் இருக்கவேண்டிய எத்தனையோ அருமையான அழகியல் விஷயங்களில் வறியவர்களாக இருக்கும் கிறிஸ்தவ இளைய சமுதாயத்துக்கு யார் விடுதலை தரப்போகிறார்கள்? சிந்திக்கவும், அறிவுபூர்வமாக சுவாரஷ்யத்தோடு கலையைப் பற்றியும், இலக்கியத்தைப்பற்றியும், சமூகத்தைப்பற்றியும், இசையைப்பற்றியும், தமிழைப்பற்றியும், நாட்டைப்பற்றியும் அரைமணி நேரத்துக்கு ஆனந்தத்தோடு பேசி இரசிக்கும் பக்குவமுள்ளவர்களை கிறிஸ்தவர்களில் நான் கண்டதில்லை. ஏன் தமிழிலேயே இருக்கும் மோட்ச பிரயாணம் நூலையோ, நாம் வெளியிடுகிற நூல்களையோகூட ஆர்வத்தோடு வாசித்து மனம்விட்டு அதன் சிறப்புக்களை நுணுக்கமாக சிந்தித்து ஆர்வத்தோடு பத்துநிமிடம் பகிர்ந்துகொள்ளுகிற பக்குவம் அவர்களுக்கு ஏன் இல்லாமலிருக்கிறது? இதை நினைத்துப் பலதடவை நான் ஆதங்கப்பட்டிருக்கிறேன். இயேசு நமக்களித்திருக்கும் பரலோக வாழ்க்கை வெறும் ஜெபத்தோடு மட்டும் நிற்கிற வாழ்க்கையா? நான் அதை நம்பவில்லை. பணம், வேலை, விலைவாசி, வீட்டுவாடகை, கடன் தொல்லை, மனைவி, பிள்ளைகள் என்று அன்றாட வாழ்க்கைப்போராட்டத்தை இயேசுவுக்குள்ளாக நடத்திவருவது மட்டுமா கிறிஸ்தவம்? நிச்சயமாக இருக்கமுடியாது; வேதம் அப்படிச் சொல்லவில்லையே. புலவனான தாவீது, ஞானியான சாலமோன், வீரனான சிம்சோன், கலைகளிலும், இலக்கியத்திலும், எழுத்திலும் அளவற்ற ஆற்றலோடிருந்த பவுல் என்று அருமையான கிறிஸ்தவர்களை நாம் வேதத்தில் காண்கிறோமே? கவிஞர்களாகவும், இலக்கியவாதிகளாகவும் இருந்தார்கள் கிறிஸ்தவ பெரியவர்களான ஜோன் நியூட்டனும், வில்லியம் கவுப்பரும். இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஒவ்வொரு நாளும் அவர்கள் இலக்கியத்தைபற்றி என்னென்னவெல்லாம் பேசி இரசித்திருப்பார்கள் என்று எண்ணால் எண்ணிப்பார்க்காமல் இருக்கமுடியவில்லை. இலக்கியவாதியாகிய ஜோன் பனியனையும் இந்த நேரத்தில் நினைவுகூருகிறேன். தமிழகத்துக்கு வந்து கிறிஸ்தவ பணிசெய்த ஜீ. யூ. போப் ஐயரும், கால்டுவெல்லும் தமிழ் கற்று தமிழுக்கு ஆற்றியிருக்கும் பணி எத்தனை எத்தனை. மோட்ச பிரயாணத்தை தன் வழியில் தமிழில் ‘இரட்சணிய யாத்திரிகம்’ எனும் பெயரில் செய்யுள் வடிவில் வடித்துத் தந்திருந்த எச். ஏ. கிருட்டிணப்பிள்ளை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாம் ஏன் ரசனையில்லாத கிறிஸ்தவர்களாக இருந்து வருகிறோம்?

கிறிஸ்தவனாக சாதித்து வாழ்வதெப்படி என்று இரண்டு செய்திகளை நான் சில வருடங்களுக்கு முன் கொடுத்திருந்தேன். மூன்றாவதைப் பதிவுசெய்ய மறந்துவிட்டார்கள். இரண்டு மட்டுமாவது இப்போது பதிவில் இருக்கிறதே! அந்தமட்டில் சந்தோஷந்தான். அச்செய்திகளில் என் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். அழகியலிலும், கலைகளிலும், இலக்கியத்திலும், வரலாற்றிலும், வாசிப்பிலும், எழுத்திலும் ஆர்வமோ, ஆற்றலோ இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் வாழ்க்கை அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் எந்தவிதத்தில் அவர்களை கிறிஸ்துவுக்கு மகிமையுள்ள வாழ்க்கையை வாழவைக்கப் போகிறது என்று கேட்டுப்பார்க்காமல் இருக்கமுடியவில்லை. படைப்பாளி ஜெயமோகன் இளைஞர்களைத் திரட்டி வருடத்தில் சிலதடவைகள் வாசிப்பிலும், சிந்திப்பதிலும், வாசிப்பவற்றைப் பகிர்ந்துகொள்ளச் செய்வதிலும், எழுதுவதிலும் ஊக்குவித்து, பயிற்சிதந்து சிந்திக்கவும் செயல்படவும் செய்வது எனக்குப் பிடித்திருக்கிறது. அதனால் அவருக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை. இளைஞர்களை வாசிக்கவும், சிந்திக்கவும் வைக்க அவரெடுக்கும் முயற்சியை நான் பாராட்டுகிறேன். அதற்கு ஆண்டவரை அறியாத அந்த இளைஞர்கூட்டம் ஒத்துழைக்கிறதே. கிறிஸ்தவ இளைஞர்களை இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வெட்கப்பட வைக்கிறார்களே என்ற ஆதங்கம் எனக்குள் தொடர்ந்திருக்கிறது. சமுதாயம் திரும்பிப் பார்க்கிறபடி செய்யப்போகிற கிறிஸ்தவ இளைஞர்கள் தலைமுறை என்று வரப்போகிறதோ?

பழம்பெருமைகளைப்பற்றித் தொடர்ந்து கச்சேரி நடத்திவருவதில் எனக்கு ஆர்வமில்லை. இளம் ஸ்பர்ஜனையும், ஜோன் பனியனையும் எத்தனை காலத்துக்குத்தான் நினைவுபடுத்திக் கொண்டிருப்பது? அவர்களுக்கு இளம்வயதில் இருந்த ஆவிக்குரிய ஆர்வம், துடிப்பு, வாசிப்புத் திறன், வேதஞானம், விடாமுயற்சி, உழைப்பு, முதிர்ச்சி, அனுபவம் எல்லாவற்றிற்கும் ஆவியானவர் மட்டும் காரணமென்று நான் நம்பவில்லை. அவர்கள் பொதுவான கிருபையின் கீழ் மானுடத்தில் எந்த ஆற்றலும் இல்லாதவர்களாக, சந்தர்ப்பங்களையும், சூழ்நிலைகளையும் குறைகாணுபவர்களாக வளரவில்லை. ஆவியானவர் அவர்களை அருமையாகப் பயன்படுத்தியபோதும், அவர்களில் இருந்ததை அவர் சிறப்பாக்கியிருக்கிறார்; அவர்களுடைய முயற்சியையும், திறமைகளையும் இன்னொரு கட்டத்திற்குக் கொண்டுபோயிருக்கிறார்.

நம் இளைஞர்களில் எதைக் காண்கிறோம்? திருச்சபை வாலிபர் கூட்டங்களில் கேலியும், கிண்டலும், வம்பளப்பும், பெரியவர்களை மதித்து நடக்காமல் புரளி பண்ணுபவர்களாகவும் இளைஞர்கள் ஏன் இருந்து வருகிறார்கள்? இளைஞனாக இருந்த காலத்தில், வேதப்படிப்புக்கு வழியில்லாமல் வெறும் கிட்டார் இசை மட்டுமே இருந்துவந்த இடங்களைவிட்டு நான் விலகிப்போயிருக்கிறேன். இசை பிடிக்கவில்லை என்பதற்காகவல்ல; அதற்கும் மேலானதொன்றுக்கு அங்கிடமிருக்கவில்லை என்பதால். உலக இச்சைக்கு இன்றைய இளைஞர்கள் விட்டில் பூச்சிபோல் பலியாகிவிடுகிறார்கள். மாம்சத்தை அவர்கள் மேற்கொள்ளுவதைவிட மாம்சம் அவர்களை ஆளுவதற்குக் காரணம் என்ன? கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டபோதும் கிறிஸ்தவ குணாதிசயங்களும், ஆவியின் கிருபைகளும் அவர்களில் நெருப்பாக எரியாமல் இருப்பதற்கு எது காரணம்? இளைஞர்களில் இல்லாமலிருப்பவற்றிற்கு நம் பண்பாடு ஒரு பெருங்காரணம் என்பதை எப்போதுமே சொல்லிவந்திருக்கிறேன். சீரழிந்த அந்த இந்துப் பண்பாடு சிதைக்கப்பட வேண்டும். அதற்கு இரையாகி அழிந்துவிடாமல் இந்துக்களில்கூட இளைஞர்கள் முன்னுக்கு வந்து நம்மை வியக்கவைக்கிறார்களே! சாக்கடைக்குப் பக்கத்தில் வாழ்கிறவர்கள் சாக்கடை மணத்திற்குப் பழகிப்போய்விடக்கூடாது; ஒன்று, தூரமாய்ப்போய் இருந்துவிடவேண்டும், இல்லாவிட்டால் அதைச் சுத்தப்படுத்த வேண்டும். இரண்டில் ஒன்றைச் செய்யாமலிருப்பது மனித தன்மைக்கே அழகானதல்ல.

இதை எழுதும்போது இன்னொரு நாட்டில் வாழும் ஒரு இளைஞனின் நினைவு வருகின்றது. என்னோடு தொடர்பு வைத்திருக்கும் நெடுங்காலத் தீவிர திருமறைத்தீப வாசகர் அவர். ஓய்வு நாளில் வேலை செய்வதில்லை என்ற நோக்கத்தைக் கொண்டிருந்ததால் வந்த வேலைகள் கைவிட்டுப் போயின். பெரிய படிப்பெதுவும் அவர் படித்திருக்கவில்லை; அதற்குப் பணம் செலவழிக்கக்கூடிய வசதியுள்ள குடும்பத்தில் அவர் பிறக்கவில்லை. இளவயதாக இருந்தாலும், வீட்டுப் பிரச்சனைகள் இருந்தபோதும், தளர்ந்துவிடாமல் இரண்டு தொழில்களைச் செய்து மிகுதி நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் அறுபதுக்கு மேற்பட்ட முதியவர்களைச் சந்தித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச்செய்து, முடிந்தவரை சுவிசேஷத்தையும் சொல்லிவருகிறார். இதையெல்லாம் எவரிடமும் கைநீட்டிப் பணம் வாங்காமல் தன் சொந்தச் செலவிலேயே செய்துவருகிறார். இதைப் பகிரங்கப்படுத்திப் பெயர் தேடவும் அவர் விரும்பவில்லை. தடைகளைத் தடங்கலாகப் பார்க்காமல் அவற்றைப் படிக்கற்களாகப் பயன்படுத்தி ஏறிப்போகும் பக்குவத்தை இந்த இளைஞன் கற்றிருக்கிறான். இப்போது ஒரு நல்ல தொழில் அவருக்குக் கிடைத்திருக்கிறது. இந்தக்காலத்தில் இப்படியும் நம்மத்தியில் ஒரு இளைஞனா, என்று கேட்கவைக்கும் இந்த விஷயம் என்னைச் சந்தோஷப்படுத்துகிறது.

மனதில் உறுதி வேண்டும்,
வாக்கினிலே இனிமை வேண்டும்;

கண் திறந்திட வேண்டும்,
காரியத்தில் உறுதி வேண்டும்;

பாரதியாரின் கவிதையில் சில வரிகள் இவை. பாரதி கிறிஸ்தவனல்ல. இந்த வார்த்தைகளை ஒரு கிறிஸ்தவன் எழுதியிருக்க முடியும். அந்தளவுக்கு இதில் கிறிஸ்தவனால் எதோடும் முரண்பட முடியாது; பாரதியின் தனிப்பட்ட இந்து நம்பிக்கைகளைவிட. பாரதி வீறுகொண்ட கவிஞனாக பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் அதை எதிர்த்து இளைஞர்களை உசுப்பிவிட்டிருந்தார். இன்று மனதில் உறுதிகொண்ட, வாக்கினில் இனிமை கொண்ட, காரியத்தில் உறுதிகொண்ட, பக்திவிருத்தியில் நாட்டம் கொண்ட கிறிஸ்தவ இளைஞர்கள் திருச்சபைக்கும், நாட்டுக்கும் தேவை. என் எண்ணங்களைக் கொட்டிமுடித்துவிட்டேன்; அஞ்ஞரைப்பெட்டியை அலசிப் பார்த்தாகிவிட்டது. அதைமூட வேண்டிய நேரமும் வந்துவிட்டது. கூடவந்த உங்களுக்கும் நன்றி. அடுத்த தடவை மறுபடியும் அஞ்ஞரைப்பெட்டியில் சந்திக்கலாம்.

————————————————————————————————————————

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 33 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

3 thoughts on “மறுபடியும் அஞ்சரைப்பெட்டிக்குள்

  1. Read this article Pastor. Truly amazing to see how God in his Providence had led you to this writing/literature ministry. Your books and articles has been a great blessing, specially to the Tamil speaking people, as we know there are very less Gospel books available in Tamil. I pray that your work inspires some of us to write. God bless you Pastor.

    Like

    • Thank you for your comments Vinoth. If I could inspire some to write, that would be a great blessing. As I have pointed out many times; reading is the key to writing. More a person reads intelligently and with curiosity, he would in no time become a writer. 🙂

      Like

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s