மனந்திரும்புதல்: தவறைச் சரிசெய்தலும் (Restitution), அதற்கு ஈடு செய்தலும் (Reparation)

‘நம்முடைய இறையியல் தவறாக இருந்தால் நாம் விசுவாசிக்கும் அத்தனையும் தவறானவையாகிவிடும்’ என்று ஓர் இறையியலறிஞர் சொன்னதாக வாசித்திருக்கிறேன். அது உண்மைதான். கிறிஸ்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பின்பற்றுகிற எந்த விசுவாசத்திற்குரிய விஷயத்திற்கும் வேதத்தில் இருந்து பதிலளிக்க முடியும். வேதம் அத்தகைய பதிலை அளிக்கமுடியாவிட்டால் அவர்கள் செய்துவரும் செயல் தப்பானது என்று நிச்சயம் முடிவெடுக்கலாம். அதனால் வேத இறையியல் நமக்குத் துல்லியமாகத் தெரிந்திருப்பது அவசியம். அதில் தவறிருந்தால் நம் விசுவாசமும், நம் செயல்களும் தவறானவையாகிவிடும். வேதம் மட்டுமே தவறில்லாதது; அது மட்டுமே நம் விசுவாசத்திற்கான அடித்தளமாயிருக்கிறது.

தலைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு விஷயங்களையும் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவை இரண்டும் பொதுவாக மனந்திரும்புதல் (Repentance) எனும் ஆழமானதும், அவசியமானதுமான இறையியல் போதனைக்குள் அடங்கியிருப்பவை. எந்த சீர்திருத்த முறைப்படுத்தப்பட்ட இறையியல் (Systematic Theology) நூலிலும் இந்த இரண்டும் மனந்திரும்புதலாகிய சத்தியத்தின் கீழேயே விவாதிக்கப்பட்டிருக்கும். அதுவும், மனந்திரும்புதலுக்குள் அடங்கிக் காணப்படும் தவிர்க்கமுடியாத ஆறு அம்சங்களில் இரண்டான ‘பக்திக்குரிய துக்கம்’ மற்றும் ‘பாவ அறிக்கை‘ ஆகிய அம்சங்களின் கீழ், அவைபற்றித் தரப்படும் விளக்கங்களில் இவை சுருக்கமாக விளக்கப்பட்டிருக்கும். புதிய ஏற்பாடு இவை பற்றிப் பெரிதான விளக்கங்களைத் தராததால் எல்லா முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூல்களிலும் இவை விளக்கப்பட்டிருக்கும் என்று சொல்லமுடியாது. இவை பற்றிய இந்த அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ளுவது மிகவும் அவசியமானது. எந்த சீர்திருத்த இறையியலறிஞரும் இவை இரண்டையும் தனியாகப் பிரித்துப் பெரியளவுக்கு விளக்கமளிப்பதில்லை; இதுவரை அதைச் செய்ததுமில்லை. அதற்குக் காரணமிருக்கிறது.

  1. இவற்றைத் தனியாகப் பிரித்து ஏனைய சத்தியங்களோடு தொடர்பில்லாத வகையில் விளக்கமளித்தால் இவை அடங்கிக் காணப்படும் இறையியல் போதனைக்கு பாதிப்பு உண்டாகும். அதனால்தான், ஆரம்பத்திலேயே இந்த இரண்டும் மனந்திரும்புதலுக்குள் அடங்கியிருக்கின்றன என்று தலைப்பில் கொடி காட்டியிருக்கிறேன்.
  2. வேத இறையியலில் எந்த சத்தியமும் ஏனைய சத்தியங்களோடு பிரிக்கமுடியாத தொடர்புடையது. அதனால், ஏனைய சத்தியங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமலும், அவற்றோடு பொருந்திப்போகும் விதத்திலுமே நாம் எந்தவொரு சத்தியத்திற்கும் விளக்கங்கொடுக்க வேண்டும்.
  3. ஒரு சத்தியத்தை, வேதம் அதை வெளிப்படுத்தியிருக்கும் அளவைப் பொறுத்தே அளவோடு விளக்கமளிக்கவேண்டும் (proportionate to the truth). மனந்திரும்புதலில் உள்ளார்ந்து காணப்படும் ஆறு முக்கிய அம்சங்களின் பகுதியான இவை இரண்டையும், இவை மட்டுமே மனந்திரும்புதல் என்றவிதமாகவோ, அல்லது இவை இல்லாவிட்டால் மனந்திரும்புதல் இருக்கமுடியாது என்றவிதமாகவோ விளக்கினால் அது இந்த உண்மைகளை, வேதம் இவற்றை வெளிப்படுத்தியிருக்கும் அளவை மீறி விளக்கியதாகிவிடும். ஒவ்வொரு சத்தியத்திற்கும் அது வேதத்தில் விளக்கப்பட்டிருக்கும் அளவைக் கடந்துபோய் விளக்கமளிக்கக்கூடாது.
  4. புதிய ஏற்பாட்டில் இவற்றைப் பற்றிப் பெரிதாக வெளிப்படையான விளக்கங்கள் (Explicit) தரப்படவில்லை. உள்ளடக்கமாகக் (Implicit) காணப்படுபவைகளை வைத்தே இதுபற்றி விளக்கங்கொடுக்க முடிகிறது.

‘தவறைச் சரி செய்தலும், அதற்கு ஈடுசெய்தலும்’ என்ற விஷயம் பற்றி நான் சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது, “பியூரிட்டன்களின் பார்வையில் மனந்திரும்புதல்” என்ற நூலைக் கடந்த வருடம் (2021) எழுதியபோதுதான். அதில் தோமஸ் வொட்சன், தொமஸ் பொஸ்டன், ஜோன் கல்கூன் ஆகிய பியூரிட்டன் பெரியவர்கள் மனந்திரும்புதல் பற்றித் தந்திருக்கும் விளக்கங்களை ஆய்ந்து எழுதியிருக்கிறேன்.  ஜோன் கல்ஹூன் தன் நூலில் இவை இரண்டைப் பற்றியும் விளக்கவில்லை.

தோமஸ் வொட்சன்

WATSON-Thomas_detail

தோமஸ் வொட்சன் மனந்திரும்புதல் எனும் தன் நூலில், முதலாவதாக, மனந்திரும்புதலின் ஓர் அம்சமான பக்திக்குரிய துக்கம் எனும் தலைப்பில் அது பற்றி விளக்கும்போது தந்திருக்கும் ஆறு அம்சங்களில் ஒன்றில் செய்த தவறுக்கு ஈடுசெய்தலைப்பற்றி (Reparation) நேரடியாகவே குறிப்பிட்டிருக்கிறார். வொட்சன், “தேவனுக்கேற்ற துக்கம் சிலசமயங்களில் யாருக்காவது நாம் ஏற்படுத்தியிருக்கும் இழப்பை சரிசெய்வதில் போய் முடியும்” என்கிறார். இதில் வொட்சன் “சில சமயங்களில்” என்று குறிப்பிட்டிருப்பதைக் கவனிக்கவேண்டும். அதாவது, இதை மனந்திரும்பும் எல்லோரும் செய்யவேண்டிய சூழ்நிலை இருக்காது என்பதையும், மோசமான பாவத்தைச் செய்திருந்து அதற்குத் தக்க பக்திக்கேற்ற துக்கத்தைக் கொண்டிருப்பவர்களும் சில சமயங்களில் மட்டுமே இன்னொருவருக்கு செய்திருக்கும் தீமைக்கான இழப்பைச் சரிசெய்யும் சூழ்நிலை அமைந்திருக்கும் என்கிறார் வொட்சன். இயேசுவுக்குப் பக்கத்தில் இருந்த சிலுவையில் இருந்த மனந்திரும்பிய கள்வன் தான் மற்றவர்களுக்குச் செய்த பாவத்திற்கான இழப்பை ஈடு செய்யக்கூடிய சூழ்நிலையில் இருக்கவில்லை. இருந்தும் அவனுடைய மனந்திரும்புதல் முழுமையானதாக இருந்தது; அவன் பரலோகத்தை அடைந்தான். ஆனால், மனந்திரும்பிய சகேயுவால் அதைச் செய்யக்கூடிய சூழ்நிலை இருந்தது. (பியூரிட்டன்களின் பார்வையில் மனந்திரும்புதல், ஆர். பாலா, பக்கம் 165-166).

அடுத்ததாக தோமஸ் வொட்சன், மனந்திரும்புதலில் அடங்கியிருக்கும் ஆறு அம்சங்களில் ஒன்றான ’பாவத்திற்கு மன்னிப்புக் கேட்பது’ என்ற சத்தியத்தை விளக்கும்போது சுருக்கமாக செய்த தவறைச் சரிசெய்வதைப்பற்றி (Restitution) விளக்கியிருக்கிறார். அதுவும் ஆரம்பத்தில் ஓர் எச்சரிக்கையைச் தந்துவிட்டே இதை விளக்கியிருக்கிறார். அந்த எச்சரிக்கை: மனிதர்கள் முன்பு பாவ அறிக்கை செய்வது சரியா? என்பதே. அதாவது, பாவமன்னிப்பைப் ‘பொதுவாக’ ரோமன் கத்தோலிக்க மதம் செய்வதுபோல், ஒரு குருவானவரின் காதில் செய்யக்கூடாது என்ற எச்சரிக்கையைத் தந்து வொட்சன் இதை விளக்கியிருக்கிறார். கத்தோலிக்க மதம் இந்த முறையைப் பயன்படுத்துவதற்கு யாக் 5:16ஐப் பயன்படுத்துகிறது என்று விளக்கும் வொட்சன், நகைச்சுவையாக, ‘இந்த வசனம் ஆத்துமாக்கள் மட்டுமட்டுமல்ல, குருவானவரும் ஆத்துமாக்களிடம் பாவ அறிக்கை செய்யவேண்டும்’ என்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். வொட்சனின் வார்த்தைகளில் சொல்லப்போனால், ‘போப்பின் தங்க ஆபரணங்களான கோட்பாடுகளில் இதுவும் ஒன்று.’ போப்பு சொல்லுவதைப்போன்ற பாவ அறிக்கை செய்வது பற்றி நான் குறிப்பிடவில்லை எனும் வொட்சன், மனிதர்கள் முன் பாவ அறிக்கை செய்யவேண்டிய மூன்றே மூன்று சந்தர்ப்பங்கள் மட்டுமே காணப்படுகின்றன என்று சுட்டுகிறார்.

  1. ஒருவன் பாரதூரமான பாவத்தைச் செய்து (scandalous) அதன் மூலம் (சபையில்) மற்றவர்களும் பாதிக்கப்பட்டிருந்தால். இது மற்றவர்களைப் பாதித்திருப்பதால், பொதுவில் செய்யப்படும் பாவத்திற்கு பொது மன்னிப்பு அவசியமாகிறது. (2 கொரி 5-7).
  2. ஒருவன் கடவுளிடம் பாவ அறிக்கை செய்தபின், தொடர்ந்தும் அவனுடைய மனச்சாட்சி அவனை உறுத்திக்கொண்டிருந்தால், ஞானமும் பக்திவிருத்தியும் உள்ள நண்பரொருவரிடம் அல்லது போதகரிடம் அது பற்றி ஆலோசனை பெறலாம்.
  3. 3d-2யாராவது இன்னொருவரைப் பற்றித் தவறாகத் தீங்கிழைக்கும் விதத்தில் எவரோடாவது பேசி அவருடைய நற்பெயருக்குக் களங்கம் உண்டாக்கியிருந்தால் அதைச் சரிசெய்யும் விதத்தில் அவரிடத்தில் மன்னிப்புக் கேட்கவேண்டும். (மத் 5:23-24). (பியூரிட்டன்கள் பார்வையில் மனந்திரும்புதல், ஆர். பாலா, பக் 183-185; Repentance, Thomas Watson, pg 36-37)

இந்த மூன்று சந்தர்ப்பங்களையும் புதிய ஏற்பாட்டின் அடிப்படையில் விளக்கியிருக்கும் தோமஸ் வொட்சன் இதற்கு மேல் எந்த விளக்கத்தையும் தரவில்லை. வொட்சன் விளக்கியிருக்கும் மூன்று சந்தர்ப்பங்களிலும் ஒருவருடைய பாவம் அவரோடும், கடவுளோடும் மட்டும் நின்றுவிடாமல் புறத்தில் இன்னொருவரையோ, சிலரையோ பாதித்திருக்கிறது என்பதை உணரவேண்டும். இதில் 2வதில், ஒருவனுடைய இருதயம் அவனைத் தொடர்ந்து காயப்படுத்திக்கொண்டிருந்திருப்பதற்குக் காரணம், அவன் இன்னொருவரோடு உறவைச் சரிசெய்யவேண்டியிருந்ததுதான்.

தோமஸ் பொஸ்டன்

thomas boston

தோமஸ் பொஸ்டன் பாவ அறிக்கையில் காணப்படும் இந்த இரண்டு அம்சங்ளையும் (தவறைச் சரிசெய்வதும், அதற்கு ஈடு செய்வதும்) பற்றி வொட்சனைப்போலவே, மனந்திரும்புதலின் ஓர் அம்சமான பாவ அறிக்கையைப் பற்றி விளக்கும்போது கடைசியாக விளக்கியிருக்கிறார். பொஸ்டன், தவறைச் சரிசெய்வதும், அதற்கு ஈடு செய்வதும் என்ற தலைப்புகளின் கீழ் இதை விளக்கியிருக்கிறார் (Repentance, pg 85). ஒருவனுடைய மனந்திரும்புதல் ‘அரைகுறையாக இருந்துவிடக்கூடாது’ என்று கூறும் பொஸ்டன் ஒருவனுடைய மனச்சாட்சி அவனுடைய பாவத்தைச் சுட்டிக்காட்டி (ஆவியானவரால்) அவனைக் குத்திக் கிழித்துக்கொண்டிருந்தால் அவன் அதற்கான விடுதலையை அடைவதற்கு செய்யவேண்டிய அனைத்தையும் செய்யவேண்டும் என்று விளக்கியிருக்கிறார். இந்த இடத்திலேயே, தவறைச் சரிசெய்வதும் (Restitution), அதற்கு ஈடு செய்வதும் (Reparation) என்ற வார்த்தைப் பிரயோகங்களை அவர் பயன்படுத்தி அவற்றை விளக்கியிருக்கிறார். இந்தப் பதங்களை தோமஸ் வொட்சன் தன் நூலில் பயன்படுத்தவில்லை. தவறைச் சரிசெய்வது என்பது, பாவகரமாகவும், நீதியற்ற முறையிலும் ஒருவரிடம் இருந்து அடைந்த பொருளைத் திருப்பிக் கொடுப்பது என்று பொஸ்டன் விளக்குகிறார். அதை உணர்ந்திருந்தும், அதை நிவர்த்தி செய்யக்கூடிய நிலையில் இருந்தும் அதை நிவர்த்தி செய்யாவிட்டால் அவனுடைய மனந்திரும்புதலில் குறைபாடிருக்கிறது என்கிறார் பொஸ்டன். இதற்கு அவர் சகேயுவை (லூக்கா 19:8) உதாரணமாகக் காட்டுகிறார். ஒருவன் மனந்திரும்புதலை அடையும்போது, அவன் நீதியற்ற முறையில் பிறரிடம் இருந்து எதையும் அடைந்திருந்து, அதற்கு ஈடு செய்யக்கூடிய சூழ்நிலை காணப்படுமானால் எடுத்ததை அவன் சுயமாக மீளக்கொடுக்க வேண்டும் என்கிறார் பொஸ்டன்.

இதேபோல், செய்த தவறுக்கு ஈடுசெய்யவேண்டும் (Reparation) என்ற தலைப்பில் விளக்கும் பொஸ்டன், ஒருவர் தான் செய்த பாவத்தை, தவறைச் சரிசெய்ய முடியாத நிலையில் இருக்கும் சந்தர்ப்பங்களையே மனதில் கொண்டு விளக்கியிருக்கிறார். அதாவது, ஒருவருடைய பெயரை நாம் நீதியற்ற முறையில், பாவகரமாகக் கெடுத்திருந்தால் அதை முழுமையாகச் சரிசெய்ய முடியாமல் போகலாம். அத்தகைய நிலையில் அந்தப் பாவம் உணர்த்தப்படுகிறபோது அதற்காக நாம் சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்காமல் இருக்கக்கூடாது (யாக் 5:16). அப்படி மன்னிப்புக்கேட்காமல் இருக்கும்வரை கர்த்தரை நாம் மகிமைப்படுத்தாமலேயே வாழ்கிறோம் என்கிறார் பொஸ்டன். அதற்கு ஈடு செய்யும் நிலையில் இருந்தும் ஒருவன் ஏதாவது செய்யக்கூடிய நிலையில் இருந்தும் செய்யாமல் இருந்தால் அவன் மனந்திரும்பியும் குறைபாடுள்ளவனாகவே வாழ்கிறான் என்கிறார் பொஸ்டன்.

17ம் நூற்றாண்டைச் சேர்ந்த தோமஸ் வொட்சனும், தோமஸ் பொஸ்டனும் தவறைச் சரிசெய்தலும், அதற்கு ஈடுசெய்தலுமாகிய உண்மைகளை விளக்கும்போது நான்கு காரியங்களை நிச்சயமாகச் செய்யவில்லை. (1) அவர்கள் இருவரும் புதிய ஏற்பாட்டைத் தவிர, பழைய ஏற்பாட்டுப் பகுதிகளைப் பயன்படுத்தி விளக்கம் கொடுக்கவில்லை. இதற்கான காரணத்தை நான் பின்பு விளக்கப்போகிறேன். (2) இந்தவிதமாக பாவ அறிக்கை செய்வதையும், தவறிற்கான ஈடு செய்வதையும் இரட்சிப்பை ஒருவர் அடைவதற்கான நிபந்தனைகளாக அவர்கள் விளக்கவில்லை. (3) தவறைச் சரிசெய்வதையும், அதற்கு ஈடு செய்வதையும் மனந்திரும்பும் ஒவ்வொரு விசுவாசியும் தவறாமல் செய்யவேண்டும் என்று வற்புறுத்தவில்லை. அத்தகைய பாவத்தை செய்தவர்கள் மட்டுமே அது உணர்த்தப்பட்டு சுயமாகச் செய்யவேண்டும் என்று விளக்கியிருக்கிறார்கள். (4) செய்த தவற்றிற்கு, ஈடு செய்ய விரும்பியும் ஈடு செய்ய முடியாத நிலையிலிருப்பவர்கள் தங்களுடைய இரட்சிப்பை இழந்துபோவார்கள் என்றும் ஒருவராவது விளக்கவில்லை.

DABNEY-Robert-Lewis_3

19ம் நூற்றாண்டைச் சேர்ந்த லூயிஸ் டெப்னி எனும் சீர்திருத்த இறையியல் அறிஞர், “செய்த தவறுக்கு ஈடு செய்வது நடைமுறைக்கு சாத்தியமான சூழ்நிலை இருந்தால் மட்டுமே செய்யவேண்டும்” என்று விளக்கியிருக்கிறார். “அத்தகைய பாவம் உணர்த்தப்படுகிறவர் அதை நிவர்த்தி செய்வதற்கான வல்லமையிருக்கிறபோதே அதைச் செய்வார்” என்றும் விளக்கியிருக்கிறார். இதன் மூலம் டெப்னி மிகக்கவனமாக, மனந்திரும்புகிற எல்லோரிலும் அது நிபந்தனையாக இருக்கவேண்டும் என்ற கருத்தை நிராகரிக்கிறார். ஆகவே, டெப்னி, வொட்சனோடும், பொஸ்டனோடும் ஒத்துப்போகிறபோதும், அவர்களைப்போலவே இத்தகைய செய்த தவறுக்கு ஈடு செய்வதை கிரியைவாதமாக (Legalism) மாற்றிவிடவில்லை. மூவருமே இதைக் கத்தோலிக்க மதம் போதிக்கும் கிரியைவாத சடங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டியிருக்கின்றனர்.

BERKHOF-Louis_detail

20ம் நூற்றாண்டு இறையியலறிஞரான லூயிஸ் பேர்கொவ் சொல்லுகிறார், “வேதத்தைப் பொறுத்தவரையில் மனந்திரும்புதல் ஒருவரில் உள்ளார்ந்து ஆழமாக நிகழும் செயல்; அச்செயலின் காரணமாக ஒருவருடைய வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களோடு அதைத் தொடர்புபடுத்திக் குழப்பமடையக்கூடாது. பாவ அறிக்கையும், பாவத்திற்கு ஈடு செய்தலும் மனந்திரும்புதலின் கனிகள். மனந்திரும்புதல் எதிர்மறையானது மட்டுமே, அது இரட்சிப்பை அளிக்கும் நேர்மறையான கிருபையல்ல.” பேர்க்கோவ்வும், ஏனைய சீர்திருத்த அறிஞர்களைப்போலவே மனந்திரும்புதலை இரட்சிப்புக்கான நிபந்தனையாக மாற்றிவிடாமல் இருப்பதில் அக்கறை காட்டுகிறார். இருந்தபோதும், பேர்கோவ்வைப் பொறுத்தவரையில், மெய்யான விசுவாசம் இருக்கும் இடத்தில் மனந்திரும்புதலும் காணப்படும். இரண்டையும் பிரிக்கமுடியாது. கத்தோலிக்க மதத்தைப் பொறுத்தவரையில் அது மனந்திரும்புதலை ஒரு மனிதனில் முற்றிலும் அவனுக்குப் புறத்திலிருக்கும் செயலாக்கிவிடுகிறது.

பழைய ஏற்பாட்டில் தவறைச் சரிசெய்தலும், அதற்கு ஈடு செய்தலும்

தவறைச் சரிசெய்வதையும், அதற்கு ஈடு செய்வதையும் பழைய ஏற்பாடு வலியுறுத்தி விளக்குகிறது. யாத் 22:2-3; யாத் 22:5-6; லேவி 6:1-6; எண் 5:6-7. இந்தப் போதனைகளும், விளக்கங்களும் கர்த்தர் மோசேயோடு சீனாய் மலையில் ஏற்படுத்திய உடன்படிக்கையின்போது அவனுக்குக் கொடுத்த நியாயப்பிரமாணத்தில் அடங்கியிருக்கின்றன. எகிப்தில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட மக்களைக் கர்த்தர் இஸ்ரவேல் என்ற நாடாக ஒன்றுகூட்டித் தன்னுடைய அதிகாரத்தின் கீழ் அவர்களை ஆளுவதற்காக இந்த நியாயப்பிரமாணத்தை அவர்களுக்குக் கொடுத்தார். இந்தக் கட்டளைகளில் பத்துக்கட்டளைகளைத் தவிர (Moral law), ஏனைய கட்டளைகளை நீதிச் சட்டங்கள் (Judicial law), சடங்குச் சட்டங்கள் (Ceremonial law) என்று பிரிக்கலாம். இவற்றில் பத்துக்கட்டளைகள் மட்டுமே எக்காலத்துக்கும் உரிய கட்டளைகள். அவை ஒழுக்கவிதிக் கட்டளைகளாக இருப்பதால் அவை புதிய ஏற்பாட்டுக் காலத்திலும் தொடர்கின்றன. இந்த ஒழுக்கவிதிக் கட்டளைகளை ஆதாமும், ஏவாளும் ஏதேனில் அறிந்திருந்து அவற்றின்படி வாழ்ந்தனர். மனிதன் பாவத்தில் வீழ்ந்தபிறகும் அந்தக் கட்டளைகளை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியவனாயிருந்தான்.

நீதிச் சட்டங்களும், சடங்குச் சட்டங்களும் ஒழுக்கவிதிக் கட்டளைகளைப்போல புதிய ஏற்பாட்டில் தொடரவேண்டியவை அல்ல. அவை கிறிஸ்துவில் நிறைவேறி புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்களுக்கு அவசியமற்றவையாகிவிட்டன. இதைத்தான் பவுலும் (ரோமர், கலாத்தியர், கொலோசெயர்), எபிரேயருக்கு எழுதியவரும் விளக்குகின்றனர். அவை, இஸ்ரவேலைக் கர்த்தருடைய நாடாக, அவருடைய மக்களாகப் பிரித்துக் காட்டுவதற்காக அவர்களுக்குக் கொடுக்கப்பட்டவை. அந்தச் சட்டங்கள் கர்த்தரின் நீதியையும், பரிசுத்தத்தையும் வெளிப்படுத்துவனவாக இருந்தன. அவற்றை இஸ்ரவேலர் முழுமையாகவும், தவறில்லாமலும் பின்பற்றவேண்டிய கட்டாயம் இருந்தது. அவற்றைப் பின்பற்றாதவர்கள் கர்த்தரின் சாபத்திற்கும், தண்டனைக்குமுள்ளானார்கள். அந்தச் சட்டங்கள் கிறிஸ்துவுக்குள் இனி வரப்போகும் மீட்பின் ஆசீர்வாதங்களுக்கு அடையாளமாக இருந்தனவேயன்றி பழைய ஏற்பாட்டுக் காலத்திற்குப் பிறகு தொடர்வதற்காகக் கொடுக்கப்படவில்லை. இஸ்ரவேல் கர்த்தருடைய நாடாகத் தொடர முடியாமல் அவரால் அழிக்கப்பட்ட பின்னர் அந்தச் சட்டங்களுக்குப் பயனில்லாமல் போய்விட்டது. அதனால் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரவேலுக்கு கொடுக்கப்பட்டிருந்த சட்டங்களைக் கிறிஸ்தவர்கள் தொடரவேண்டுமென்று எதிர்பார்ப்பது கிரியைவாதத்தைத் தவிர வேறில்லை.

பழைய ஏற்பாட்டுச் சடங்குகளில் இருந்து கிடைத்திருக்கும் புதிய உடன்படிக்கையின் விடுதலையையே எபிரேயர் 8ம் அதிகாரம் விளக்குகிறது. அதனால் இன்றைக்கு பழைய ஏற்பாட்டுச் சடங்குகளையும், இஸ்ரவேலுக்கு மட்டுமே உரியதாக இருந்த நாட்டு நீதிச் சட்டங்களையும் புதிய ஏற்பாட்டு சபையோ, ஒரு நாடோ (Theonomy) பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. தவறைச் சரிசெய்வதையும், அதற்கு ஈடு செய்வதையும் வலியுறுத்தும் பழைய ஏற்பாட்டு சட்டவிதிகளை அதேமுறையில் இன்று நாம் பின்பற்ற வேண்டிய கட்டாயமோ அவசியமோ இல்லை.  அத்தகைய கடுமையான விதிகளைக் கிறிஸ்து நமக்குத் தரவில்லை (1 யோவான் 5:3). மாறாக அந்த விதிகளிலெல்லாம் பொதுவாகக் காணப்படும் தத்துவம் மட்டுமே புதிய ஏற்பாட்டில் தொடருகின்றது. அது என்ன தத்துவம்? புதிய உடன்படிக்கைக் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்குள் நீதியோடும், பரிசுத்தத்தோடும் நடந்துகொள்ள வேண்டுமென்பதுதான். அத்தகைய நீதியோடும், பரிசுத்தத்தோடும் வாழக்கூடிய வாழ்க்கையைத்தான் பரிசுத்த ஆவியின் மறுபிறப்பு கிறிஸ்தவர்களுக்குத் தந்திருக்கிறது. அதனால் இருதய மாற்றத்தைக் கிறிஸ்துவுக்குள் அடைந்திருக்கிற மனந்திரும்புதலைப் பெற்றவர்கள், சக கிறிஸ்தவர்கள் மத்தியில் அவர்களுடைய பாவங்களை மன்னித்தும், தங்களுடைய தவறுகளைத் திருத்திக்கொண்டும், தாங்கள் தவறிழைத்திருப்பவர்களிடம் மன்னிப்புக்கேட்டும், இயலுமானால், முடிந்தபோது இழைத்த தீங்கிற்கு ஈடு செய்தும் வாழவேண்டியவர்களாக இருக்கிறார்கள் (யாக் 5:16; எபேசி 4:32; கொலோ 3:13; லூக்கா 17:3-4).

ஆர். சி. ஸ்பிரவுல்

செய்த தவறுக்காக ஈடுசெய்யக்கூடிய இருதயம் இருந்தும், அதைச் செய்ய முடியாத நிலையில் கிறிஸ்தவன் இருப்பானானால், அவன் தன் இரட்சிப்பை ஒருபோதும் இழந்துபோக மாட்டான். “மனந்திரும்புதலுக்கு பிறகு எப்பொழுது முடிகிறதோ அப்பொழுது தவறைச் சரிசெய்தல் ஒருவரில் நிகழ்கிறது” என்கிறார் ஆர். சீ. ஸ்பிரவுல் (Repentance in Action, Ligonier.org). ஸ்பிரவுல் குறிப்பிடும் “எப்போது முடிகிறதோ” என்பது இந்த விஷயத்தில் மிகமுக்கியமானது. ஏனெனில், தவறுக்கான ஈடு செய்வது மெய்யான மனந்திரும்புதலில் அடங்கியிருந்தபோதும், அதை ஒருபோதும் கிறிஸ்தவ வாழ்க்கையில் நிபந்தனையாக்கிவிடக்கூடாது. மேலும் ஸ்பிரவுல், “சகேயுவின் தவறைச் சரிசெய்ததும், அதற்கான ஈடு செய்தலாகிய கிரியையும் அவனுக்கு இரட்சிப்பை அளிக்கவில்லை. அவனுடைய விசுவாசமே அவனை ஆபிரகாமின் புத்திரனாக்கியது; அவனுடைய கிரியை அல்ல” என்கிறார். ஆகவே, ஒருவர் எந்தளவுக்கு தவறுக்கான ஈடு செய்திருக்கிறார் என்பதை வைத்து அவருடைய மனந்திரும்புதலினதும், இரட்சிப்பினதும் தரத்தை எடைபோடக்கூடாது. இதுவரை நாம் கவனித்து வந்திருக்கும் அத்தனை இறையியலறிஞர்களும் அவ்வாறு செய்வதைக் கிரியைவாதமாகவே விளக்கியிருக்கின்றனர். மெய்யான மனந்திரும்புதல் அது தானாகவே கனிகொடுக்க ஆரம்பிக்குமே தவிர, அதைத் தார்க்குச்சியைப் பயன்படுத்திக் குதிரையை ஓடவைப்பதுபோல் கனிகொடுக்க வைக்க முயற்சிக்கக்கூடாது. அப்படிச் செய்தால் அது கிரியைவாதமாகிவிடும்.

PINK-Arthur-W.

தவறைச் சரிசெய்வதும், அதற்கு ஈடு செய்வதும் அவசியமென்பதை மெய்யான மனந்திரும்புதல் சுட்டுகிறதுதான். இருந்தாலும் ஆர்தர் பின்கின் எச்சரிக்கையையும் கவனிப்பது நல்லது. “நீங்கள் மனந்திரும்புதலுக்கு அடையாளமான கிரியைகளைச் செய்தும், மனந்திரும்பாமலிருக்கலாம். ஒரு பாவி தன் கேட்டை உணர்ந்து, தான் செய்த தவறைத் திருத்திக்கொள்ள அவசியமானவற்றைச் செய்தும் அழிந்துபோகலாம். இதற்கான தெளிவான உதாரணமாக யூதாஸிருக்கிறான் (மத் 27:3-5). தன் பாவங்களை அவன்  ஆசாரியர்கள் முன் அறிக்கை செய்து, தான் வாங்கிய பணத்தையும் திரும்பக்கொடுத்துவிட்டு அந்தக் கேடான மனிதர்களைவிட்டு விலகிப்போனான். அவன் இரட்சிப்படைந்திருந்தானா? அவன் தூக்குப் போட்டுக்கொண்டான். அவனுடைய செயல் எப்படியெல்லாம் நம் இருதயத்தை ஆராயத் தூண்டுகிறது!” மெய்யான மனந்திரும்புதலைக் கொண்டிராமல் வெறுமனே தவறைத் திருத்திக்கொள்வதும், அதற்கு ஈடு செய்வதும் மட்டும் போதாது என்பதை பின்ங்கின் வார்த்தைகள் தெளிவாக விளக்குகின்றன.

தவறைச் சரிசெய்வதும், அதற்கு ஈடுசெய்வதையும் பற்றிய தற்கால கிரியைவாத (Legalism) விளக்கங்கள்

கத்தோலிக்க மதம் செய்த பாவத்துக்கு ஈடு செய்வதை இரட்சிப்பின் அதிமுக்கிய அம்சமாக விளக்குகிறது. “ஓர் ஆத்துமாவின் இரட்சிப்பு அதன் பாவமன்னிப்பில் தங்கியிருக்கின்றது; பாவத்திற்கான ஈடு செய்யாமல் ஒருபோதும் அது நிகழவழியில்லை” என்கிறார் யோகான் சுவிசேஷகர். (Restitution Theology, Johann Evangelist 1883, Wikipedia). இது கிரியைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட மத போதனை. கத்தோலிக்க மதம் பாவத்திற்கான ஈடு செய்வதை இரட்சிப்பிற்கான நிபந்தனையாகக் கருதுகிறது. இந்த மதபோதனையில் கிருபைக்கு எந்த இடமுமில்லை.

பெந்தகொஸ்தே சபைகளின் மத்தியில் சிலர் தவறுக்கு ஈடு செய்வதை (Reparation) இரட்சிப்புக்கான நிபந்தனையாகக் கருதுகிறார்கள் என்று இணையத்தில் ஓர் ஆக்கத்தில் வாசித்தேன். அத்தகைய கருத்தே மனந்திரும்புதலைக் கிரியைவாதமாக்குகிறது (Legalism). தெரிந்தோ, தெரியாமலோ அநேக சுவிசேஷக் கிறிஸ்தவப் பிரிவுகளின் மத்தியில் தவறுக்கு ஈடு செய்யும் கிரியை, கிரியைவாதமாக்கப்பட்டிருக்கிறது. இது கிறிஸ்துவின் சுவிசேஷத்தையும், இரட்சிப்பையும் முறையாக விளங்கிக்கொள்ளாததால் நிகழ்ந்துவருவதாக இருக்கலாம்.

மெத்தடிஸ்ட் பிரிவினர் தவறைச் சரிசெய்வதையும், அதற்கு ஈடு செய்வதையும் தவிர்க்கக்கூடாத கடமையாக விளக்கியிருக்கிறார்கள். இதை அவர்களுடைய வினாவிடைப் போதனையில் காணலாம். அதுவும் அத்தகைய “தவறைச் சரிசெய்தலாகிய கிரியை மனந்திரும்புதலுக்குப் பிறகு நிகழுவதாகவும், அதுவே இரட்சிக்கும் கிரியையை அடைவதற்கு ஒருவருக்குத் தகுந்த தயாரிப்பு நிலையாகவும் இருக்கிறதாக” மெத்தடிஸ்ட் பிரிவு விளக்குகிறது. (Evangelical Methodist Church Catechism, Wikipedia). மனந்திரும்புதலுக்குப் பிறகே இரட்சிப்பு கிடைப்பதாக விளக்குவது ஆர்மீனியனிசக் கோட்பாடு.  கல்வினிசம், மறுபிறப்பின் விளைவுகளில் ஒன்றாக மனந்திரும்புதலைக் கணிக்கிறது. அதை இரட்சிப்புக்கு அவசியமான தவிர்க்கமுடியாத கிருபையாக விளக்குகிறது. மெத்தடிஸ்டு பிரிவு தவறான ஆர்மீனியனிசப் போதனையைப் பின்பற்றுகிறது. இதிலும் கிரியைவாதத்தைக் கவனிக்கலாம். ஒருவன் தன் தவறைச் சரிசெய்து, அதற்குத் தகுந்த ஈடு செய்து இரட்சிப்புக்குத் தன்னைத் தயாராக்குவது என்று கூறுவது கிரியையின் அடிப்படையிலான இரட்சிப்பாகிய கிரியைவாத போதனை.

சமீபத்தில் ஓர் இந்தியக் கிறிஸ்தவ அமைப்பின் இணைய தளத்தில் அவர்களுடைய விசுவாச அறிக்கையைக் கவனித்தேன். நாம் இப்போது ஆராய்ந்து கொண்டிருக்கும் பொருளைப் பற்றி அதில் குறிப்பிடப்பட்டிருந்ததே அதை இங்கு குறிப்பிடுவதற்கான காரணம். அந்த அறிக்கை மிகக் குறைவான, சுருக்கமான எட்டு விளக்கங்களை மட்டுமே கொண்டதாகத், தெளிவற்றதாக இருந்தது. விசுவாச அறிக்கைகள் ஒருபோதும் தெளிவற்றவையாக இருக்கக்கூடாது. அவை துல்லியமாக அமைந்திருக்கவேண்டும். அந்த அறிக்கையில் நான் கவனித்த மிக முக்கியமான ஒரு விளக்கம் அதில் நான்காவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

“The Holy Spirit is the divine agent in convicting man of sin and of cleansing and sanctification. Repentance and restitution for wrongs which need to be righted will follow. This does not detract from the cardinal truth that salvation is by faith and faith alone.“

இதைத் தமிழாக்கினால் பின்வருமாறு அமையும்.

“பரிசுத்த ஆவியானவரே மனிதனுடைய பாவத்தை உணர்த்தும், சுத்தமாக்கும், பரிசுத்தப்படுத்தும் தெய்வீகப் பிரதிநிதி. மனந்திரும்புதலும், சீர்படுத்தவேண்டிய தவறுகளுக்கான சரிசெய்தலும் இதைத் தொடரும். இது மிகமுக்கியமான உண்மையான இரட்சிப்பு விசுவாசத்தினால் உண்டாகும், விசுவாசத்தினால் மட்டுமே என்பதைக் குறைவுபடுத்துவதில்லை.”

மேல்குறிப்பிட்ட வசனங்களில் ஓரளவுக்கு உண்மைகள் காணப்பட்டபோதும், இறையியலடிப்படையில் இது கோர்வையாகத், துல்லியமாகத், தெளிவாக எழுதப்படவில்லை. இதில் எத்தனையோ குழப்பமான அம்சங்கள் இருந்தபோதும், என் கண்களைத் தொட்டது, “மனந்திரும்புதலும், சீர்செய்யவேண்டிய தவறுகளுக்கான சரிசெய்தலும்” என்ற வார்த்தைப் பிரயோகங்களே.  நான் குறிப்பிட்ட அந்த எட்டு விசுவாச அறிக்கைக் குறிப்புகளிலும், தவிர்க்கப்படக்கூடாத அடிப்படை இறையியல் சத்தியங்களான வீழ்ச்சியைப் பற்றியோ, பாவத்தைப் பற்றியோ, மறுபிறப்பைப் பற்றியோ, நீதிமானாக்குதலைப் பற்றியோ துளிக்கூட விளக்கமளிக்கப்படவில்லை. கிருபையினால் மட்டுமே அடையக்கூடிய கிறிஸ்தவ இரட்சிப்பைக் குறித்த எந்தத் தெளிவான விளக்கத்தையும் கொண்டிராத இந்த அறிக்கை, மனந்திரும்புதலோடு இணைத்து சீர்படுத்தவேண்டிய தவறுகளுக்கான சரிசெய்தலுக்கு அடிப்படை சத்தியத்துக்கான இடத்தைக் கொடுத்திருக்கிறது. மெய்யான மனந்திரும்புதலை அடைந்த ஒரு கிறிஸ்தவனில் அதைத் தெளிவாக உணர்த்தும், அவனால் இயலுமானபோது மட்டுமே அவன் செய்யக்கூடிய, வெளிப்புறக் கிரியையான தவறுகளைச் சரிசெய்து, அவற்றிற்கு ஈடளிப்பதை இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளக்கியிருப்பது பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது. அது என்ன தெரியுமா? இந்த விளக்கத்திற்கும் பின்னால், இதைப் பின்பற்றுகிறவர்கள் மத்தியில் கோவிட் வைரஸ் போன்ற கிரியைவாதம் பரவிக் காணப்படுகிறதா? என்பதே அந்த சந்தேகம்.

அமெரிக்காவில் இந்த 21ம் நூற்றாண்டில் இன்று “சமூக நீதி” (Social Justice) என்ற புதிய பிரச்சனை கிறிஸ்தவ சபைகளைப் பாதித்துக்கொண்டிருக்கிறது. இதற்கும் நான் விவாதித்துக் கொண்டிருக்கும் விஷயத்திற்கும் பெருந்தொடர்பிருக்கிறது. அங்கே இருக்கும் கருப்பு இன மக்களை வரலாற்றில் அடிமைகளாக வெள்ளை அமெரிக்கர்கள் பயன்படுத்தி அவர்களைச் சுரண்டியிருக்கிறார்கள் என்ற எண்ணப்போக்கின் அடிப்படையில், தற்காலத்தில் வாழுகின்ற அத்தனை வெள்ளையர்களும், தங்களுடைய மூதாதையர் செய்திருக்கும் தவறுக்காக மனம்வருந்தி, மன்னிப்புக்கேட்டு, தவறைச் சரிசெய்வதோடு, அதற்கு ஈடுசெய்யும் விதத்தில் அவர்கள் கருப்பினத்தவர்களிடம் இருந்து சுரண்டிய அத்தனைப் பணத்தையும் திருப்பிச் செலுத்தவேண்டும் என்பதே இந்தப் புதிய “சமூக நீதி” யின் வற்புறுத்தலாக இருக்கிறது. இது அநேக சுவிசேஷ மற்றும் சீர்திருத்த சபைகளையும், சீர்திருத்தப் போதகர்களையும் பாதித்து இவ்வுலக நீதியை சபைக்குள் திணிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

அமெரிக்காவில் உருவான இந்த “சமூக நீதி” இயக்கத்தின் கருத்தில் அடியோடு உண்மையில்லை என்று வாதாட முடியாது. அடிமை வியாபாரமும், அடிமை முறையும் அதன் இழிவான முகத்தையும் அமெரிக்க சமுதாயத்தில் காட்டாமல் இருக்கவில்லை. இருந்தபோதும் கிறிஸ்தவர்கள் தங்களுடைய மூதாதையர்களின் செயல்களுக்காகப் பொதுமன்னிப்புக் கேட்கவேண்டும் என்பதும், அதற்கு ஈடாக என்னவெல்லாம் செய்யமுடியுமோ அவற்றைச் செய்யவேண்டும் என்பதும் நம் கையிலிருக்கும் வேதத்தில் காணப்படாத கிரியைவாத வற்புறுத்தல். அதற்கு வேதம் அடியோடு இடங்கொடுக்கவில்லை. கிறிஸ்தவ சமுதாயத்தில் வெள்ளையர், கருப்பர் போன்ற இனவேறுபாட்டுக்கோ, சாதி வேறுபாட்டுக்கோ அடியோடு இடமில்லை.  சமூக நீதி இயக்கம் பேசும் “பாவ ஈடு செய்தலுக்கும்” வேதம் போதிக்கும் மனந்திரும்புதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இக்காலத்தில் வாழுகிறவர்கள் தங்கள் “மூதாதையரின் பாவங்களுக்காக” மன்னிப்புக் கேட்க வேண்டுமென்பது மிகவும் முட்டாள்தனமான வாதம். கிறிஸ்துவின் அகராதியில் காணப்படாத கருத்து இது. இதெல்லாம் கிரியைவாதம் எத்தனை ரூபங்களில் கிறிஸ்தவத்தில் நுழைந்துவிடும் ஆபத்து இருக்கிறது என்பதைக் கிறிஸ்தவர்களும், போதகர்களும் உணர்வது அவசியம். இயேசு இரத்தம் சிந்தி, விலைகொடுத்து நிறைவேற்றி இலவசமாக நமக்களித்திருக்கும் கிருபையின் விளைவான இரட்சிப்பைக் கிரியைவாதமாக்குகிறபோதே கிறிஸ்துவின் போதனைகளைவிட்டு நாம் விலக ஆரம்பித்திருக்கிறோம் என்பதை நிதர்சனமாக விளங்கிக்கொள்ள வேண்டும். அந்த ஆபத்தைத் தவிர்த்துக்கொள்ள நாம் நிதானத்தோடு வேதசத்தியங்களை மட்டும் ஆராய்ந்து, பின்பற்றி வாழ்வது அவசியம்.