தமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா?

பல வருடங்களுக்கு முன்பு என் நாட்டில் எனக்கு ஒரு தொலை பேசி செய்தி வந்தது. தொடர்பு கொண்டவர் தமிழ் வேதாகமம் ஒன்று வேண்டுமென்றும், சுவிசேஷ செய்தியை விளக்கும் கைப்பிரதி வேண்டும் என்றும் கேட்டார். கேட்டவர் என் நாட்டைச் சேர்ந்த வெள்ளையர் என்பதால் உங்களுக்கு எதற்கு இதெல்லாம் என்று கேட்டேன். அதற்கு அவர், நான் ஒரு டாக்டர். சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் மருந்து வாங்க வந்தார். அவர் கர்த்தரை அறியாதவர். அவருக்கு இயேசுவைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன். அவருக்குக் கொடுப்பதற்காகத்தான் கேட்கிறேன் என்று சொன்னார். இந்த டாக்டரையும் எனக்கு முன்பின் தெரியாததால் எப்படி என்னைத் தேடிப்பிடித்தீர்கள் என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. அதற்கு அவர் பல இடங்களில் விசாரித்துப் பார்த்து கடைசியில் நண்பரொருவர் உங்களைப் பற்றிச் சொன்னதாகக் கூறினார். என்னால் முடிந்ததைச் செய்கிறேன் என்று அவரிடம் சொல்லிவிட்டு யோவான் சுவிசேஷ நூலொன்றையும், கிறிஸ்தவத்தைப் பற்றி நானெழுதிய ஒரு சிறு நூலையும் அவருக்கு அனுப்பி வைத்தேன். நான் பயன்படுத்தும் தமிழ் வேதாகமம் மட்டுமே அப்போது என் கையில் இருந்தது. அதனால் அதை அவருக்குக் கொடுக்க முடியவில்லை.

இது நடந்து முடிந்து இரண்டு வாரங்களில் எனக்கு ஒரு இ-மெயில் வந்தது. அதை அனுப்பியவர் தன்னைப் பற்றிச் சுருக்கமாக விளக்கியிருந்தார். யாருக்காக நான் யோவான் சுவிசேஷ நூலையும், என்னுடைய நூலையும் அனுப்பியிருந்தேனோ அவரே அந்த இ-மெயிலை எழுதியிருந்தார். தன் பெயர் அவ்வை நடராஜன் என்றும், தான் தஞ்சாவூர் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் என்றும் அறிமுகப்படுத்தியிருந்தார். நான் அனுப்பிவைத்திருந்த நூலைப் பற்றி எழுதியிருந்த அவர், தான் அநேக தமிழ் பட்டதாரிகளுடைய ஆய்வுகளை சரிபார்த்து அவர்கள் டாக்டர் பட்டம் பெறுவதற்கு காரணமாக இருக்கிற பதவியில் இருந்ததாகவும், இதுவரையில் அழகான தமிழில் இனிமையாக என் நூலில் இருக்கும் தமிழ் போல் வாசித்தது குறைவு என்றும் என் தமிழ் நடையைப் பாராட்டி எழுதிவிட்டு, உடனடியாக என்னைப் பார்க்க வேண்டும், எப்படிப் பார்க்க முடியும் என்று எழுதிக் கேட்டிருந்தார். அவர் கேட்டுக் கொண்டபடியே அவரை நான் என் ஊரில் சந்திக்க நாளைக் குறித்துக் கொடுத்தேன். சொன்னபடியே அந்த நாளில் நானிருந்த ஊருக்கு வந்து எனக்கு போன் செய்தார். நன்பரொருவருடைய வீட்டில் தங்கியிருந்த அவரை சந்திக்க போனபோது கையில் ஒரு நீல நிற சால்வையோடு வந்து அதை என் கழுத்தில் போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தார். அதற்குப் பிறகு அந்த வீட்டு ஹாலில் அமர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருவரும் மனம் விட்டு பேசினோம். அவர் முன்னாள் துணை வேந்தர், தமிழ்ப் பேராசிரியர் மட்டுமல்ல மேடைப்பேச்சாளர் என்பதையும் அறிந்துகொண்டேன். தமிழகத்தில் தன்னைத் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை என்றும் சொன்னார். பேச்சு ஆரம்பத்தில் தமிழையும், தமிழ் இலக்கியத்தையும், தமிழ் எழுத்தாளர்களையும் பற்றியதாக இருந்தது. பின்னால் கிறிஸ்தவத்திற்குத் திரும்பியது. சென்னையில் தான் போகக்கூடிய சபையிருக்கிறதா, வேத சத்தியங்களை யாராவது விளக்கிச் சொல்லக்கூடியவர்கள் இருக்கிறார்களா என்றெல்லாம் ஆர்வத்தோடு கேட்டார்.  சென்னைக்கு வந்தால் நிச்சயம் தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டுக் கொண்டார். திருமறைத் தீபத்தை அவருக்கு வாசிக்கும்படி கொடுத்தேன். (அதன்படி சென்னைக்கு போனபோது அவருடைய வீட்டுக்குப் போய் அங்கே அவரும் அவருடைய துணைவியாரும் அன்போடளித்த விருந்துபசாரத்தை பின்னால் அனுபவித்திருக்கிறேன். அப்போதும் அவர் எனக்கு சால்வை போர்த்தி மரியாதை செய்ய மறக்கவில்லை!)

அவ்வை நடராஜன் அவர்களோடு பேசிக்கொண்டிருந்தபோது தான் வாசித்த யோவான் சுவிசேஷத்து தமிழ் இலகுவாக புரிந்துகொள்ள முடியாத தமிழில் இருப்பதாகத் தெரிவித்தார். தமிழ்ப் பேராசிரியரும், முன்னாள் துணை வேந்தருமல்லவா, அதை மறுத்தா சொல்ல முடியும்? தமிழ் வேதாகமத்தை நீங்கள் ஏன் நல்ல தமிழில் எழுதக்கூடாது என்று கேட்டார். தன்னைப் போன்ற கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு அது பலனளிக்குமே என்றார். கிறிஸ்தவர்கள் அல்லாத மக்கள் புரிந்துகொள்ளக் கூடிய தமிழில் வேதாகமம் இருக்க வேண்டுமே என்றெல்லாம் அவர் சொன்னது என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. பலரும் இன்று தமிழில் பொதுவாகப் பயன்படுத்தி வரும் ஹென்றி போவரின் (Henry Bower) பழைய திருத்தப் பதிப்பைத் (O.V.) தவிர தமிழில் அநேக மொழிபெயர்ப்புகள் வந்திருந்தாலும் புதிய மொழிபெயர்ப்புகள் எதுவுமே நம்பக்கூடியளவுக்கு எழுத்துபூர்வமான மொழிபெயர்ப்புகளாக இல்லை. மொழிபெயர்ப்பில் மட்டுமல்லாமல் அவற்றில் இறையியல் தவறுகளும் அநேகம் காணப்படுகின்றன. பழைய திருத்தப் பதிப்பையே இன்றும் தமிழ் கிறிஸ்தவர்கள் பழக்க தோஷத்தால் பயன்படுத்தி வந்தபோதிலும் அதில் அளவுக்கு அதிகமான வடமொழி வாடையும், தற்காலத்தில் நடைமுறையில் அறவே பயன்படுத்தப்படாத வார்த்தைகளும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கும், புதிய கிறிஸ்தவர்களுக்கும் பெரும் இடையூராகவே இருக்கின்றன. அதைப் பயன்படுத்தி வருகின்ற தமிழ் கிறிஸ்தவர்களும் அதை எந்தளவுக்கு புரிந்துகொண்டு பயன்படுத்துகின்றார்கள் என்பது தெரியவில்லை. போதக ஊழியத்திலிருப்பவர்களுக்கும் அந்தத் தமிழ் தடையாகவே இருக்கின்றது. வெறும் வாக்குத்தத்த வசனங்களை மட்டும் சபையாருக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கும் ஊழியக்காரர்களுக்கு தெளிவான தமிழ் வேதாகமம் அவசியமாயிருக்காது. வேதாகமப் போதனைகளை ஆராய்ந்து சபையாருக்கு விளக்கிப் போதிக்கும் போதகர்களுக்கு நல்ல தமிழில் வேதாகமம் அவசியம் தேவை.

தமிழ் வேதாகமத்தில் எந்தவொரு வசனத்தை விளக்கிச் சொல்லுவதற்காக எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொரு முறையும் அதிலிருக்கும் நான்கு அல்லது ஐந்து வார்த்தைகளுக்கு தற்காலத் தமிழில் நான் விளக்கங் கொடுக்காமல் இருந்ததில்லை. அந்தளவுக்கு வடமொழித் தாக்கமும், புரிந்துகொள்ளக் கடினமான வார்த்தைகளும் நிறைந்திருக்கிறது. உதாரணத்திற்கு சில வார்த்தைகளைக் கவனியுங்கள்: அரோசிகம், நிணம், நொதிக்கிற, லகுவடைய, விக்கினம், பிழைப்பூட்டு, உள்ளிந்திரியங்கள், அவிழ்தங்கள், தவசம், சொஸ்தமாவான், அவமாக்கி, சங்கதி, பிரதியுத்தரமாக, பண்ணக்கடவது, அந்தகாரம், அசுசிப்படாமல், சிலாக்கியம், வர்த்தமானம், பெத்தரிக்கம், முகாந்திரம், அருக்களிப்பு, நிர்விசாரம், பலட்சயம், சாமாசி, பிராணன், பிரமாணம் என்று இப்படிப் பல வார்த்தைகளை உதாரணங் காட்டலாம். இவற்றையெல்லாம் நான் தேடித் தேடிப் பார்த்து தெரிவுசெய்யவில்லை. மேலெழுந்தவாரியாக பழைய, புதிய ஏற்பாடுகளை வாசிக்கும்போதே இத்தகைய வார்த்தைகள் எங்கும் பரவலாகக் காணப்படுவதைப் பார்க்கலாம்.

இவற்றில் சிலவற்றை ஓரளவுக்கு புரிந்துகொள்ள முடிந்தாலும் இவற்றைவிடக் கடினமான வார்த்தைகள் அநேகம் இருக்கின்றன. எசேக்கியேலில் ‘பரிசுத்தக்குலைச்சல்’ என்று ஒரு வார்த்தை இருக்கிறது. முதல் தடவையாக வேதாகமத்தை வாசிக்கின்ற எத்தனை பேரால் அதை விளங்கிக்கொள்ள முடியும்? தற்கால வாசகர்களால் புரிந்துகொள்ள முடியாத இவை போன்ற வார்த்தைகளைத் தவிர எழுத்து நடையும் கொச்சைத் தமிழில் இருப்பதைப் பார்க்கிறோம். உதாரணத்திற்கு, ‘சரிக்கட்டுவேன்’, ‘வாய் சொல்லிற்று’, ‘மிதியுண்டுபோம்’, ‘இருண்டுபோம்’, ‘நடப்பிக்கட்டும்’, ‘தப்பவிடான்’, ‘சாவவே சாவாய்’, ‘படவு’, ‘இராத்திரி’, ‘சாயங்காலம்’, ‘தோய்த்து’ என்பது போன்ற வார்த்தைப் பிரயோகங்களை அடிக்கடி பார்க்கிறோம். தமிழ் வேதாகமத்தை நான் இன்றும் ஆங்கில வேதாகமத்தை வாசித்தே விளங்கிக் கொள்ளுகிறேன். அந்தளவுக்கு வேதாகமத் தமிழ் வெளிநாட்டார் இந்தியாவுக்கு வந்த காலத்தில் இருந்த தமிழாக, வடமொழித் தமிழாகவும், நடைமுறையில் பயன்படுத்தப்படாததாகவும் இருக்கிறது. இதற்காக நல்ல தமிழ் வழக்கத்தில் இல்லாமல் இருக்கவில்லை. பாரதியாரும், பாரதிதாசனும் அந்தக் காலத்தில் வாழாமலா இருந்திருக்கிறார்கள்? அவர்கள் பேசி எழுதிய தமிழ் நல்ல தமிழ்தானே. அவருடைய தமிழைக் கவனியுங்கள்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்தி
பிறக்குது மூச்சினிலே

– பாரதியார்

தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

– பாரதிதாசன்

இலகு தமிழில் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று எழுதிப் பாடியிருக்கிறார்கள் பாரதியாரும் பாரதிதாசனும். தமிழில் வேதத்தை மொழிபெயர்த்தவர்களுக்கு துணை செய்ய நல்ல தமிழ் தெரிந்தவர்களின் துணை கிடைக்காமல் போயிருக்கிறது. அதுவும் மொழிபெயர்த்தவர்கள் எல்லோருமே பெரும்பாலும் வெளிநாட்டவர்களாக இருந்திருப்பதும் வேதத் தமிழ் நல்ல முறையில் இல்லாமல் போயிருப்பதற்கு காரணமாக இருந்திருக்கிறது. (இப்படிச் சொல்வதால் அவர்களுடைய தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் நான் அசட்டை செய்வதாக நீங்கள் தவறாக எண்ணிவிடக்கூடாது.) பின்னால் தமிழகத்தையும், ஸ்ரீ லங்காவையும் சேர்ந்த தமிழர்களின் பங்கு வேத மொழிபெயர்ப்பில் இருந்திருந்த போதும் தமிழ் எழுத்து நடை பெரிய மாற்றங்களுக்குள்ளாகாமலேயே இருந்திருக்கிறது.

மொழிக்கு இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? என்று நீங்கள் கேட்கலாம். மொழி வல்லமையான கருத்துப் பரிமாற்ற ஊடகம். அதைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. அதுவும் தமிழ் மொழி மிகவும் சிறப்பான உலக மொழிகளில் ஒன்று. இன்றைக்கு அதற்கு இந்தியாவில் செம்மொழித் தகுதி கிடைத்திருக்கிறது. சுதந்திரப் போராட்ட காலத்தில் பாரதியாரின் கவிதைகள் மக்களுக்கு புத்துயிரளித்து சுதந்திர தாகத்தை ஊட்டின. தமிழைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்த கட்சி தி.மு.க. கட்சி. மொழியின் பலத்தை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். மொழியின் மூலமே கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள முடியும். காலத்துக்குக் காலம் மொழிகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவுக்கு 1706ல் வந்த டேனிஷ் மிஷனரியான சீகன்பால்க் தரங்கம்பாடிக்கு வந்து ஊழியப் பணி செய்தபோது புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழி பெயர்த்தார். அது இன்றும் தஞ்சாவூர் மியூசியத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தமிழை நம்மால் வாசித்துப் புரிந்துகொள்ள முடியாது. காரணம், தமிழ் எழுத்து வரி வடிவங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு இன்று நாம் பயன்படுத்தும் எழுத்துக்கள் வித்தியாசமானவையாக இருக்கின்றன. அதுவும் அந்தக் காலத்தில் தமிழ் எழுத்துக்கு மேல் குத்து வைப்பது போன்ற குறியீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இவை பிற்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. அதற்குப் பிறகு எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தட்டச்சு செய்வதற்கும், கணினிக்கும் வசதியாக ஒருசில எழுத்துக்களில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதையெல்லாம் கவனத்தில் எடுக்காமல் இருக்க முடியாது. இவை தவிர மக்கள் பயன்படுத்தும் தமிழ் எழுத்து நடையும் பேச்சு வழக்கும் பெரிதும் மாறியிருக்கின்றன. அதுவும் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கட்சியின் எழுச்சியால் இந்தியும், பிராமண ஆதிக்கமும் புறக்கணிக்கப்பட்டு, தனித் தமிழில் எழுதப் பேச வேண்டும் என்ற எண்ணப்போக்கால் கடந்த ஐம்பது வருடங்களில் தமிழில் வடமொழித் தாக்கம் (பிராமணத் தமிழ்) அறவே இல்லாமல் போயிருக்கிறது.

தமிழில் வேதம் மொழிபெயர்க்கப்பட்ட விதம் குறித்த ஒருசில குறிப்புகளை நாம் தெரிந்துகொள்வது இந்த இடத்தில் பயனளிக்கும். பதினெட்டாம் நூற்றாண்டில் புரட்டஸ்தாந்து மிஷனரியான சீகன்பால்க் (Ziegenbalg) தரங்கம்பாடிக்கு வந்து தமிழைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். அதற்காக அவர் பெருமுயற்சிகள் செய்திருக்கிறார். அவருக்கு முன்பு ஸ்ரீ லங்காவில் ஊழியம் செய்திருந்த பால்தேயூஸ் என்ற ஒல்லாந்து தேசத்தவர், போர்த்துக்கேயர் மொழிபெயர்த்திருந்த தமிழையே அதிகம் பயன்படுத்தியதால் அந்தத் தமிழில் அவர் எழுதியிருந்த நூல்களில் தமிழ் நல்ல முறையில் இல்லை என்ற கருத்தைக் கொண்டிருந்த சீகன்பால்க் தமிழில் அக்காலத்தில் இருந்த நூல்களைக் கஷ்டப்பட்டு வாசித்து தமிழைக் கற்றுக்கொண்டார். செந்தமிழ் இலக்கியங்களைக்கூடக் கற்றுக்கொண்டார் என்று செய்தி இருக்கின்றது. இரண்டு வருடங்களில் நன்றாகத் தமிழ் கற்றுக்கொண்டு 1708ல் ஜெபத்தோடு தமிழில் வேதத்தை மொழிபெயர்க்கும் பெரும் பணியில் ஈடுபட்டார். இது சாதாரண முயற்சியல்ல. அப்போது தமிழில் வேதம் இருக்கவில்லை. அதை எவரும் மொழிபெயர்க்க முற்படவில்லை. சீகன்பால்க் இதுவரை யாரும் செய்திராத இந்தப் பணியை முதன் முறையாகத் தனியாகவே செய்ய வேண்டியிருந்தது. அவர் காலத்தில் தென்னிந்தியாவிலோ அல்லது இந்தியாவின் வேறெந்தப் பகுதியிலோ புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ ஊழியங்களும் நிகழவில்லை. இந்த நிலையில் வெளிநாட்டாரொருவர் தமிழில் வேதத்தை மொழிபெயர்ப்பதென்பது சாதாரணப் பணியல்ல. வேதத்தில் காணப்பட்ட மூல வார்த்தைகளுக்கு தமிழில் வார்த்தைகளை எவரும் உருவாக்கியிருக்கவில்லை. ரோமன் கத்தோலிக்கர் எழுதி வெளியிட்டிருந்த சில நூல்களைத் தவிர வேறு நூல்களும் இருக்கவில்லை. இரண்டரை வருடங்களுக்குள் சீகன்பால்க் புதிய ஏற்பாட்டில் சில பாகங்களை முடித்திருந்தார். புரட்டஸ்தாந்து சீர்திருத்த கிறிஸ்தவ ஊழியம் தமிழ்நாட்டில் ஆரம்பித்து ஒன்பது வருடங்களுக்குள் புதிய ஏற்பாடு தமிழில் வெளிவந்திருந்தது.

சீகன்பால்க் அன்று தமிழில் பயன்படுத்தியிருந்த சில வார்த்தைகளைக் கவனியுங்கள். கடவுளை அவர் ‘சருவேசுரன்’ என்றும், நித்திய ஜீவனை ‘நித்திய சீவன்’ என்றும், உலகத்தை ‘லோகம்’ என்றும், ஒரேபேரான என்பதை ‘தமக்கொண்ணான’ என்றும், அன்பை ‘சினேகம்’ என்றும், தேவர் என்பதை ‘சமமனசு’ என்றும் மொழிபெயர்த்திருந்தார். சீகன்பால்க்கினுடைய மொழிபெயர்ப்பை வாசிக்கும்போது அவருடைய தமிழ் கொச்சைத் தமிழாய் அதாவது பேச்சுத் தமிழாய் இருப்பதைக் கவனிக்கிறோம். உதாரணத்திற்கு, கொடுத்தாலும் என்பதை அவர் ‘குடுத்தாலும்’ என்று எழுதியிருந்தார். இதற்குக் காரணமில்லாமல் இருக்கவில்லை. அவர் தமிழ் கற்றுக்கொள்ளும்போது புலவர்களை வைத்துப் படித்திருந்தாலும், படித்த பிராமணர்களோடும், பண்டிதர்களோடும் பேசிப் பழகியிருந்தாலும் அவருடைய ஊழியம் பெரும்பாலும், பாமர மக்கள் மத்தியில் அதுவும் கொச்சைப் பேச்சுத் தமிழைக் கொண்டிருந்த சாதாரண மனிதர்கள் மத்தியில் இருந்ததால் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கத்தோடு அந்தத் தமிழிலேயே வேதத்தை மொழிபெயர்த்திருந்தார். அந்தப் பாமரர்களுக்கு வேதம் புரிய வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே அவருக்கிருந்திருக்கிறது. அவர்கள் பேசிய தமிழே அவருக்கும் சரளமாக வந்தது. நம்மையெல்லாம் மனதில் வைத்து சீகன்பால்க் அன்று வேத மொழிபெயர்ப்பில் ஈடுபடவில்லை, ஈடுபட்டிருக்கவும் வழி இல்லை. உண்மையில் மிகவும் கடுமையான, சவாலான, யாரும் அதுவரை செய்திராத ஒரு பணியைத் தனிமனிதனாய் பல துன்பங்களுக்கு மத்தியில் அர்ப்பணத்தோடு அவர் செய்து முடித்ததே அவருடைய ஊழியத்தின் அருஞ் சாதனை.

சீகன்பால்க் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட புதிய ஏற்பாட்டின் ஒரு பக்கம்

அவருக்குப் பின்வந்த ஜெசுயிஸ்ட் (Jesuist) ரோமன் கத்தோலிக்க துறவியான கொன்ஸ்ரன்டைன் பெஸ்கி, 1710ல் மதுரைக்கு வந்தார். இவர் தமிழில் அதிக பாண்டித்தியம் பெற்றவராயிருந்தார். தமிழ் காப்பியமான ‘சிந்தாமணி’யைப் போல இவர் எழுதிய ‘தேம்பாவணி’ என்னும் காப்பியம் சிறப்பானது. இதன் அரங்கேற்றத்தின்போது அவருடைய தமிழ்ப் பாண்டித்தியம் காரணமாக ‘வீரமாமுனிவர்’ என்ற பட்டம் அவருக்கு மதுரையில் கொடுக்கப்பட்டது. இவர் அகராதியொன்றையும் ‘சதுரகராதி’ எனும் பெயரில் தொகுத்திருந்தார். அதுவே பிற்காலத் தமிழ் அகராதிகளுக்கு ஆதாரமாக இருந்தது. இவருடைய தமிழ் வடமொழி கலந்த (பிராமணத்) தமிழாக இருந்தபோதும் நல்ல இலக்கியத் தமிழாக இருந்தது. இருந்தாலும் இவர் வேதத்தை மொழிபெயர்க்க எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ரோமன் கத்தோலிக்க மதத்துறவியொருவர் அதைச் செய்யும்படி எதிர்பார்ப்பதும் தவறுதான். சீகன்பால்க்கினுடைய மொழிபெயர்ப்பின் தமிழ் நடையை வீரமாமுனிவர் சிரித்து ஏளனஞ் செய்திருக்கிறார். (கத்தோலிக்கரான வீரமாமுனிவருக்கு புரட்டஸ்தாந்தியர்களைப் பிடிக்காமல் இருந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கிறது.) ரோமன் கத்தோலிக்க துறவிகள் மக்களை மதம் மாற்றுவதற்கு செய்த முக்கியமான காரியங்களில் ஒன்று அவர்களுடைய மொழியிலும் பழக்க வழக்கங்களிலும் பாண்டியத்துவம் அடைந்து அவர்களைப் போல நடந்துகொள்ள முயல்வதுதான். இதன் காரணமாக பல ரோமன் கத்தோலிக்க மதத்துறவிகள் தமிழறிவில் சிறந்தவர்களாயிருந்ததில் ஆச்சரியமில்லை. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடமிருக்கிறது. மக்களுடைய மொழியில் நாம் தேர்ச்சி பெறுவது சுவிசேஷமும், சத்தியமும் அவர்களிடம் போய்ச் சேரப் பேருதவி செய்யும். இந்த விஷயத்தில் சீகன்பால்க்கினுடைய நிலையையும் எண்ணிப் பார்ப்பது அவசியம். நல்ல தமிழில் இல்லாமல் பேச்சுத் தமிழில் அவர் வேதத்தை மொழிபெயர்த்த காரணம் அவர் ஊழியம் செய்த மக்கள் அந்த முறையில் பேசியதால்தான். அவர்களுக்காகவே அவர் மொழிபெயர்ப்பை ஆரம்பித்திருந்தார். வீரமாமுனிவருடைய இலக்கியத் தமிழில் சீகன்பால்க் அன்று வேதத்தை மொழிபெயர்த்திருந்தால் அவர் ஊழியம் செய்த மக்களுக்கு அது புரிந்திருந்திருக்காது. சீகன்பால்க்கின் வேதத் தமிழ் நடை பாமரத் தமிழில் இருந்த போதும் அவருடைய மொழிபெயர்ப்பு உண்மையானதாக இருந்தது. மூலத்தோடு ஒத்ததாக யதார்த்தமாக இருந்தது. ஒரு தனி மனிதன் இந்தளவுக்கு உழைத்திருந்தது பெரிய காரியந்தான். எது எப்படியிருந்தபோதும் வேத மொழிபெயர்ப்புகள் நிச்சயம் மூலமொழிகளில் இருப்பதுபோல் கருத்துச் சுத்தத்தோடு அமைந்திருப்பதோடு, மொழிபெயர்க்கப்படும் மொழியின் சமகால இலக்கிய, இலக்கண அமைப்பிலும் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

சீகன்பால்க்கிற்குப் பிறகு அநேகர் வேத மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு இறுதியில் இன்றைக்கு எல்லோரும் பொதுவாகப் பயன்படுத்தும் பழைய திருப்புதல் (O.V.) தமிழில் நமக்குக் கிடைத்திருக்கிறது. இந்த விதத்தில் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டவர்களில் பிலிப் டீ மெல்லோ (Philip De Mello), யொகான் பெப்ரீசியஸ் (Johann Febricius), சார்ள்ஸ் ரேனியஸ் (Charles Rhenius), பீட்டர் பேர்சிவல் (Peter Percival), ஹென்றி போவர் (Henry Bower) ஆகியோரைக் குறிப்பிட்டுக் கூறலாம். மொழிபெயர்ப்பு பற்றிய அனைத்து விபரங்களையும் இந்த ஆக்கத்தில் எழுதுவது என்பது முடியாத காரியம். ஆரம்பத்தில் இருந்த மொழிபெயர்ப்பின் தமிழில் மாற்றங்களைக் கொண்டுவந்தவர்களில் சிறப்பானவராக சார்ள்ஸ் ரேனியஸ் (Charles Rhenius) என்பவரைக் குறிப்பிடலாம். இவர் தமிழ்ப்புலமையில் வீரமாமுனிவருக்கு சமமாகக் கருதப்பட்டவர். இவர் வெளிச்சத்தை ‘ஒளி’ என்றும், சினேகத்தை ‘அன்பு’ என்றும், ஓசை தரும் கிண் கிணி என்பதை ‘ஓசை தரும் கைத்தாளம்’ என்றும், நம்புகிற காரியங்களில் திட அஸ்திபாரம் என்றிருந்ததை ‘நம்பப்படுகிறவைகளில் உறுதி’ என்றும் பல நல்ல மாற்றங்களை மொழி நடையில் கொண்டு வந்தார். இவர் ஜெர்மனியில் பிறந்தவர். 1814ல் இந்தியாவுக்கு வந்து சர்ச் மிஷன் சங்கத்தின் (C.M.S.) கீழ் ஊழியம் செய்தார். இவர் மொழி நடையில் நல்ல மாற்றங்களை செய்திருந்தபோதும், மொழிபெயர்ப்பில் அதேவித அக்கறையை எல்லாப் பகுதிகளிலும் காட்டவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டு. இவருக்குப் பிறகு தொடர்ந்தும் தமிழ் மொழிபெயர்ப்பில் பலரும் ஈடுபட்டிருந்தபோதும் இன்றுவரை தமிழ் நடையில் காலத்துக்கேற்ற அவசியமான மாற்றங்கள் செய்யப்படாத நிலையிலேயே தமிழ் வேதம் தொடர்ந்தும் வடமொழித் தாக்கமுள்ளதாக, இலக்கியத் தரத்தில் குறைவானதாக இருக்கிறது. பொதுவாக உலகமெங்கும் அனைத்து தமிழர்களும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் வேதாகமம் இருப்பதானால் இன்றைக்குப் பயன்படுத்தப்படும் தமிழில் அந்த மொழிபெயர்ப்பு இருப்பது அவசியம் என்பதை மறுக்க முடியாது.

தமிழ் கிறிஸ்தவர்களில் ஒரு பகுதியினர் வேதாகமத் தமிழை கிறிஸ்தவ தமிழாகப் பார்க்கிறார்கள். அதை ஒருவித பரலோக மொழி போல் கருதுகிறார்கள். அவர்களுடைய ஜெபமும், எழுத்தும்கூட வேதாகமத் தமிழில் இருப்பதைப் பார்க்கலாம். அவர்கள் வேதாகமத் தமிழை தெய்வீகம் பொருந்தியதாகக் கருதுகிறார்கள். அதனால் அந்தத் தமிழில் மாற்றங்களை ஏற்படுத்துவது அவர்களுக்குப் பிடிக்காமல் இருக்கிறது. அந்தத் தமிழை அவர்கள் நடைமுறையில் பயன்படுத்தாவிட்டாலும் அதையே வாசித்துப் பழகிப்போயிருப்பதால் அதை விட அவர்களுக்கு மனதில்லை. தமிழகத்தில் இந்திய வேதாகம இலக்கிய நிறுவனம் (India Bible Literature) ஆங்கிலமும் தமிழும் இணைந்த வேதப் புத்தகமொன்றை வெளியிட்டது. இது கிங் ஜேம்ஸ் ஆங்கில மொழிபெயர்ப்பை (King James Version) மூலமாகக் கொண்டு பழைய திருத்தப் பதிப்பில் காணப்பட்ட புரிந்துகொள்ள முடியாத வார்த்தைகளுக்கு மட்டும் தற்கால வார்த்தைகளைக் கொடுத்து வெளியிடப்பட்டது. இருந்தபோதும் அதிலும் வடமொழித்தாக்கம் அப்படியே இருந்தது. உதாரணத்திற்கு பழைய திருத்தப்பதிப்பில் யோவான் 1:1, ‘ஆதியிலே வார்த்தை இருந்தது’ என்றிருக்கிறது. இந்திய வேதாகம இலக்கிய மொழிபெயர்ப்பில் அது ‘துவக்கத்திலே வார்த்தை இருந்தது’ என்றிருக்கிறது. பிறமொழித்தாக்கமே இல்லாமல் தமிழ் எழுதிவிட முடியாது. எல்லா மொழிகளிலுமே ஏனைய மொழிகளில் இருந்து வந்த சொற்களும், சொற்பிரயோகங்களும் இருக்கும். ஆனால், அவசியமான அளவுக்கு தேவையான இடங்களில் மட்டுமே அவை பயன்படுத்தப்பட வேண்டும். இந்திய வேதாகம இலக்கிய நிறுவனத்தின் இந்தப் புதிய மொழி பெயர்ப்பில் தமிழில் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு மட்டுமே மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். பழைய திருத்தப் பதிப்பில் இருந்த நடைமுறையில் பயன்படுத்தப்படாத வார்த்தைகளை அகற்றிவிட்டு வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ‘நியாயப் பிரமாணம்’ இதில் ‘நியாயவிதிகள்’ என்றிருக்கிறது. ‘அதிசயப்பட வேண்டாம்’ என்ற பதங்கள் ‘வியப்படைய வேண்டாம்’ என்று மாறியிருக்கிறது. ‘நித்திய ஜீவன்’ என்பது ‘நித்திய வாழ்வு’ என்று மாறியிருக்கிறது. இருந்தபோதும் இந்தப் பதிப்பு அதிகம் விற்பனையாகாததால் அடுத்த பதிப்பிற்கு பழைய திருத்தப் பதிப்பையே (O.V.) மாற்றங்கள் செய்யாமல் மறுபடியும் பயன்படுத்தப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். வாசித்துப் பழகிப்போன பழைய திருத்தப் பதிப்பை விடுவதற்கு நம் மக்களுக்கு மனதில்லை. இந்தவிதத்தில் ஒரு மொழிபெயர்ப்பை தெய்வீகத் தன்மையுடையதாகக் கருதிப் பயன்படுத்த கர்த்தர் வேதாகமத்தை நமக்குத் தரவில்லை. மூலமொழியில் ஆரம்பத்தில் கர்த்தர் தந்த வேதப் பிரதிகளே தெய்வீகத் தன்மை கொண்டவை. அந்தப் பிரதிகள் இன்று நம்மிடம் இல்லை. அதிலிருந்து எடுத்த பிரதிகளிலிருந்தே மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டுள்ளன. செய்யப்பட்டிருக்கும் மொழிபெயர்ப்புகளை நிச்சயம் நாம் நம்பலாம்; அவை நல்ல மொழிபெயர்ப்புகளாக இருந்தால் மட்டும். மூல மொழியில் இருந்த அர்த்தத்தில் இருந்து எந்தவிதத்திலும் மாறாமலும், தவறுகள் இல்லாமலும் அதே நேரம் தற்கால மொழிநடையில் விளங்கிக் கொள்ளும்படியும் மொழிபெயர்ப்புகள் இருக்க வேண்டும். அதுவே ஒரு வேதாகம மொழிபெயர்ப்பை சிறப்பானதாக்குகிறது. அப்படி இருக்கும்போதே அதைக் கர்த்தருடைய வார்த்தையாக நம்மால் நம்பி ஏற்றுக்கொள்ள முடியும். அதற்கு மேல் ஒரு குறிப்பிட்ட மொழிபெயர்ப்பிற்கு மட்டும் தெய்வீக அந்தஸ்தைக் கொடுக்கக்கூடாது. இன்றைக்கு வாழ்கின்ற தமிழனால் படித்துப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கும் எதனாலும் அவனுக்குப் பயனில்லை. இன்று தமிழ் பேசி வாழ்ந்து வருகிறவர்கள் தடையில்லாமல் புரிந்துகொள்ளும்படி அவர்களுக்குப் பரிச்சயமான மொழியில் வேதாகமம் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து. அவ்வை நடராஜன் அவர்களும் அதைத்தானே சுட்டிக் காட்டியிருக்கிறார்.

தமிழ் கிறிஸ்தவர்களும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறியாத தமிழ் மக்களும் வாசித்துப் பயனடையும் விதத்தில் நல்ல தமிழில் வேதாகமம் இருக்க வேண்டிய அவசியத்தை யாரால் மறுக்க முடியும்? அதற்கு தடையாக இருப்பது என்ன என்பதைப் பற்றி சிந்திக்கத்தான் வேண்டும்.

  1. எபிரெயம், கிரேக்கம், ஆங்கிலம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளிலும் பாண்டியத்தியம் பெற்ற தமிழர்கள் இந்தப் பணிக்குத் தேவை. இந்த நான்கு மொழிகளிலும் அவர்களுக்கு நல்லறிவும், நடைமுறைப் பயிற்சியும் இருக்க வேண்டும். அத்தகைய திறமை வாய்ந்தவர்கள் நம்மத்தியில் தற்காலத்தில் இருக்கிறார்களா என்பது சந்தேகம் தான்.
  2. இந்தப் பணியைத் தனியொரு மனிதனால் செய்துவிட முடியாது. அதற்கு ஒரு குழு சேர்ந்து செயல்பட வேண்டும். பல படிகளில் மொழிபெயர்ப்பு பணி நடக்க வேண்டியிருப்பதால் பல ஆண்டுகளுக்கு அர்ப்பணிப்போடு அந்தப் பணியை செய்யக்கூடியவர்கள் தேவை.
  3. தமிழ் மொழி, தமிழகத்திலும் அதற்குப் புறத்தில் ஸ்ரீ லங்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பேசப்பட்டு வருவதால் இந்நாடுகளைச் சேர்ந்த தமிழில் இலக்கண, இலக்கிய பாண்டித்தியமுள்ளவர்களும் இந்தப் பணிக்கு தேவைப்படுகிறார்கள். எந்த மொழிபெயர்ப்பும் இலக்கண, இலக்கிய சுத்தத்தோடிருப்பது அவசியம்.
  4. ஏற்கனவே இருக்கும் சில மொழிபெயர்ப்புகள் இறையியல் கோளாறுள்ளவையாக இருக்கின்றன. அதாவது, மொழிபெயர்த்தவர்கள் தங்களுக்குப் பிடிக்காத இறையியல் போதனைகளை மொழிபெயர்ப்பின்போது மாற்றியமைத்திருக்கிறார்கள் அல்லது மொழி பெயர்ப்பில் இணைத்திருக்கிறார்கள். இந்தத் தவறு நடக்காமல் இருக்க, சுவிசேஷ இயக்கத்தைச் (Evangelical) சேர்ந்த தெளிவான, பாரபட்சமற்ற இறையியல் வல்லுனர்கள் இந்தக் குழுவில் பணியாற்றி அத்தகைய தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.
  5. எழுத்து நடையைவிட பேச்சுத் தமிழ் எப்போதும் தமிழ் பேசும் நாடுகள் அனைத்திலும் வித்தியாசமாகத்தான் இருக்கும். தமிழகத்தில் மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபட்டிருக்கும். சகல நாடுகளிலும் உள்ளவர்கள் இடையூரில்லாமல் வாசித்துப் பயன்படக்கூடிய விதத்தில் பேச்சுத் தமிழாகவோ, கொச்சைத் தமிழாகவோ, கடுந்தமிழாகவோ இல்லாமல் நல்ல நடைமுறைத் தமிழில் வேதாகமம் அமையக்கூடிய விதத்தில் அதன் மொழி நடை இருக்குமாறு பார்த்துக்கொள்ளக்கூடிய தமிழ் வளம் உள்ளவர்களும் இந்தப் பணிக்குத் தேவை.

இத்தனையும் இருந்து அர்ப்பணிப்போடு இந்தப் பணியில் ஈடுபடுவதால் மட்டுமே நல்ல தமிழில் நமக்கு வேதாகமம் கிடைக்க முடியும். அது நடக்குமா? அந்தக் காலமும் வருமா?

(இந்த ஆக்கத்தின் சில குறிப்புகளுக்கு ‘கிறிஸ்தவ தமிழ் வேதாகமத்தின் வரலாறு’ என்ற குலேந்திரன் சபாபதி, 1967ல் எழுதிய நூல் உதவியாக இருந்தது.)

One thought on “தமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா?

  1. படித்ததில் பிடித்தது ❕
    உள்ளிந்திரியம் எனபதற்கு கூகுள் செய்தபோது 👆கிடைக்க பெற்ற பதிவு,
    மிகவும் அவசியமான ஒன்று,
    தமிழ் பேசும் மக்களின் பிள்ளைகள் வேறு மாநிலத்தில் கல்வி கொள்கையால் தமிழை படிக்க முடியவில்லை, ஏன் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும், போதகர்களும் கடின படும் நிலை உள்ளது, ஆகவே இது மிகவும் தேவையான பணி, சிறக்க வாழ்த்துகள் 👍🙏

    Like

மறுமொழி தருக