கண்கள் திறக்க. . .!
அன்புள்ள வாசகர்களுக்கு,
கிறிஸ்துவின் நாமத்தில் என் நல்வாழ்த்துக்கள். கர்த்தருடைய கிருபையின் உதவியால் நாம் ஆரம்பித்துள்ள இச்சிறிய முயற்சிக்குக் கிடைத்து வரும் ஆதரவிற்குத் தலை வணங்குகிறோம். உங்களுடைய அன்பான ஆதரவும், கருத்துக்களும் இவ்வூழியத்திற்குப் பேருதவியாக அமையும், பலவிதமான சபை ஊழியங்களுக்கு மத்தியில் இப்பத்திரிகைக்கும் நேரம் ஒதுக்க அனுமதித்து, ஆதரவளித்து ஜெபத்தோடு என்னை ஊக்குவித்து வரும் என் சபை மக்களுக்கு என் நன்றி என்றும் உரித்தாகும். அவர்களுடைய உதவியில்லாமல் இதை நான் ஆரம்பித்திருக்கவே முடியாது. முதலாவது இதழுக்குக் கிடைத்துள்ள ஆதரவு எமக்கு அதிக ஊக்கத்தை அளிக்கிறது. சந்தா எதுவும் இல்லாமல், பலரும் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை வெளியிடுகிறோம். ஆகவே, இதைப் பெறும் வாசகர்கள் மற்றவர்களுக்கு இதனை அறிமுகப்படுத்தி இவ்வூழியத்தில் பங்கு கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
இவ்விதழில் ‘கெரிஸ்மெட்டிக் இயக்கம்’ கட்டுரையில், இரண்டாம் பாகம் வெளிவருகிறது. அநேகர் முதல் பகுதியை வாசித்துப் பயடைந்ததாக எழுதியுள்ளார்கள். எந்தவொரு இயக்கத்தையும் சாடுவது எமது நோக்கமல்ல. ஆனால், போலித்தனமானதும். திருமறைக்குப் புறம்பானதுமான இவ்வியக்கப் போதனைகள் கிறிஸ்தவத்தின் அத்திவாரத்தையே அசைக்க முயற்சிப்பதால் மகுடியின் நாதத்தில் மயங்கி நிற்கும் நாகத்தைப்போல, இவ்வியக்கத்தின் பிடியில் அகப்பட்டுத் தள்ளாடிக் கொண்டிருக்கும் அநேகருடைய கண்கள் இக்கட்டுரை மூலம் திறக்கப்பட வேண்டுமென்பதுதான் எமது ஜெபம். இது சம்பந்தமான கட்டுரைகளை நீங்கள் தொடர்ந்தும் இப்பத்திரிக்கையில் எதிர்பார்க்கலாம்.
நம்மைத் தீண்டி வரும் இன்னுமொரு விஷம் போன்ற போதனைதான் கிறிஸ்தவமும், திராவிட சமயங்களும் ஒன்றே என்பது. எப்படியாவது கிறிஸ்துவிற்கு ஆள் சேர்க்க வேண்டும் என்று அலைவோருக்கு இச்செய்தி சர்க்கரைபோல் இனிக்கலாம். ஆனால், இது கிறிஸ்துவின் பெயருக்கே இழிவு தேடித்தரும் செயல். இதைக்குறித்து “கேள்வி – பதில்” பகுதி ஆராய்கிறது. இதுபற்றி அதிக தகவல் அறிந்த வாசகர்கள் எமக்கு எழுதலாம்.
தேவகிருபை அல்ல, சுயமுயற்சியே ஒருவர் கர்த்தரை அறிந்துகொள்ள உதவும் பேராயுதம் என்று போதிப்பதோடு, அந்த அடிப்படையிலேயே பெரும்பாலானோர் இன்று கிறிஸ்தவ ஊழியங்களையும் எம்மத்தியில் நடத்தி வருகின்றார்கள். எங்கு தனிமனித வல்லமையும், அதிகாரமும் சர்வ சக்தியாக போற்றப்படுகின்றதோ அங்கே திருமறைக்கு இடமில்லை. பாவத்தால் கறைபடிந்த மனித சித்தத்தின் சுய செயற்பாடல்ல, கிறிஸ்துவின் விலை மதிப்பில்லாத, சர்வ சுதந்திரமும், வல்லமையுமுள்ள கிருபையே மனிதனைப் பாவத்திலிருந்து கரை சேர்க்கிறது என்ற ‘கிருபையின் போதனை’களின் அறிமுகக்கட்டுரையும் இவ்விதழில் ஆரம்பமாகின்றது.
படித்துப் பயனடையுங்கள். கர்த்தரைத் துதியுங்கள்.