அன்புள்ள வாசகர்களுக்கு,
கிறிஸ்துவின் நாமத்தில் என் நல்வாழ்த்துக்கள். இதைப் படிக்கின்றபோது, சஞ்சிகையோடு சஞ்சிகையாக இன்னொரு சஞ்சிகையா என்ற எண்ணம் உங்களுக்கு எழலாம். எத்தனையோ சஞ்சிகைகள் இருக்கின்ற நேரத்தில் ஏன் இன்னொன்று என்ற வினாவிற்கு நான் நிச்சயம் பதிலளித்தேயாக வேண்டும். வெறுமனே, ஏற்கனவே இருக்கின்ற கூட்டத்தோடு கூட்டமாக நாமும் சேர வேண்டுமென்ற நோக்கத்துடன் அல்லாமல், கிறிஸ்தவ இலக்கிய வளர்ச்சியையும், தெளிவான வேத விளக்கங்களைப் பெற்று, கர்த்தருடைய பிள்ளைகள், அவருடைய கிருபையிலும், அறிவிலும் வளரவேண்டுமென்ற நோக்கத்தையும் மனதில் கொண்டே இந்தச் சிறு சஞ்சிகை தொடங்குகிறது.
காலாண்டிதழாக வெளிவரப்போகும் “திருமறைத்தீபம்”, நான் இதுவரை தமிழ்கூறும் நல்லுலகில் சந்தித்த கிறிஸ்தவத் தமிழன்பர்களை நாடி வரும். வேதத்தில் தெளிவான நல்லறிவு பெறவேண்டும் என்ற அடங்காத்தாகம் கொண்ட, எனக்கு அறிமுகமான பல நண்பர்களின் பயன்கருதியே இச்சிற்றிதழ் வெளியிடப்படுகிறது.
மிகுந்த ஜெபத்தோடு, கர்ததருடைய மகிமைக்காக வெளிவரும் இச்சஞ்சிகை இன்னுமொரு பெரு நோக்கையும் கொண்டுள்ளது. கிறிஸ்தவம் என்ற பெயரில் தமிழர்கள் மத்தியில் தவறான பல கொள்கைகள் உலவி வரும் இந்நாட்களில், அநேகருக்குத் தெரிந்திராத, சிலருக்கு மட்டுமே பரிச்சயமான, “கிருபையின் போதனைகள்” (The Doctrines of Grace) என்று அழைக்கப்படுகின்ற வேத சத்தியங்களையும் எல்லோரும் அறிந்து பயனடைய வேண்டும் என்பதும் இச்சஞ்சிகையின் நோக்கமாகும்.
இந்த முதலாவது இதழில், கிறிஸ்தவர்கள் இன்று சந்திக்கும் மிக முக்கியமான ஒரு பிரச்சனையைக் குறித்து ஆராயப் போகிறோம். பல நாடுகளிலும், கிறிஸ்தவர்கள் மத்தியில் புகுந்து, அவர்களைக் கறையான போல் அரித்துக் கொண்டிருக்கும் ஓர் இயக்கம்தான் “கெரிஸ்மெட்டிக்” (Charismatic) இயக்கம். இவ்வியக்கத்தின் தவறான போதனைகளுக்கு தம்மை ஒப்புக்கொடுத்து வீணாய்ப் போனவர்கள் அநேகர். பல நல்ல கிறிஸ்தவர்களும்கூட, உணர்ச்சிகளுக்கு உணவிட்டு மயக்கும் இவ்வியக்கத்தின் வழிமுறைகளுக்கு தம்மை ஒப்புக்கொடுத்து அழிவைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வியக்கம் பற்றிய, வேதத்தின் அடிப்படையில் அமைந்த இவ்வாய்வுக் கட்டுரை வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். முடிந்தால் உங்கள் கருத்துக்களை எழுதி அனுப்புங்கள். உங்கள் ஒவ்வொருவரையும் நேரிலும், இப்போது இவ்விதழ் மூலமும் சந்திக்கத் கர்த்தர் எனக்குக் கொடுத்துள்ள வாய்ப்பிற்காக அவருக்குத் தொடர்ந்து நான் நன்றி தெரிவிக்கிறேன். படியுங்கள். பயனடையுங்கள். பதில் எழுதுங்கள்.
என்றும் உங்கள் நண்பன்,
ஆர். பாலா.