‘கிருபையின் போதனைகள்’ என்ற சொற்றொடர் பலருக்குப் புதிதாக இருக்கலாம். சிலர் அது குறித்துக் கேள்விப்பட்டிருக்கலாம். ஒரு சிலர் அதைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தும், அதில் தெரிவில்லாது இருக்கலாம். இக்கட்டுரை இப்போதனைகளை சரித்திர பூர்வமாக ஆராய்ந்து அறிமுகப்படுத்துகிறது.
இதைப்பற்றி நாம் சரிவர அறிந்துகொள்ள வேண்டுமானால் முதலாவது ‘கிருபை’ என்ற வார்த்தையின் பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும். பழைய, புதிய ஏற்பாட்டிலே காணப்படும் இவ்வார்த்தை, நமக்கு மேல் உள்ள ஒருவர், நாம் அடையத் தகுதியற்ற தயவின் மூலம் நம்மோடு ஓர் உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்பதைக் குறிக்கும். ஆகவே, தேவ கிருபை கர்த்தர் நம்மோடு ஏற்படுத்திக் கொண்டுள்ள ஓர் உடன்படிக்கையையும், தெரிந்து கொள்ளுதலையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. கர்த்தருடைய நேர்பயனுடைய (Effectual) அழைப்பின் மூலம் (கலா. 1:15) பாவியாகிய மனிதன் தன் வாழ்வில் மாறுதல் அடைந்து, இத்தேவகிருபையின் மூலம் மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும் அனுபவிக்கிறான் என்று திருமறை கூறுகின்றது (எபே. 2:8-9; 2 தீமோ. 2:25). இக்கிருபையைத் தேவகுமாரனாகிய இயேசு மட்டுமே அளிக்கக் கூடியவராக இருக்கிறார் என்றும் வேதம் போதிக்கின்றது (யோவான் 1:14, 16-17; ரோமர் 5:21; 1 கொரி. 1:4).
கிருபை என்ற வார்த்தையின் உள்ளடக்கம், அதன் மூலம் நாம் பெற்றுக் கொள்ளும் விடுதலையைக் குறிப்பதாக இருக்கின்றது. இவ்விடுதலையை நாம் நமது சுய முயற்சிகளின் மூலமாகவோ, தகுதியின் அடிப்படையிலோ பெற்றுக் கொள்ள முடியாது (எபே. 3:1-10; தீத்து 3:3-7). 2-ம் நூற்றாண்டு காலப்பகுதியில் தேவ கிருபையை அடையும் வழிமுறைகளில் மனிதனுடைய முயற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதனால் பரிசுத்த ஆவியின் செயற்பாடே நிராகரிக்கப்பட்டது. பாவம் என்ற ஒன்றில்லை என நிராகரித்த பெலேஜியஸ் (Pelagius) என்ற பிரிட்டிஷ் துறவிக்கு எதிராக ஆகஸ்டின்தான் (Augustine) கிருபையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இது இவருடைய சொந்தப் போதனையல்ல. ஆவியின் அருளினால், ஆகஸ்டினால் இவ்வுண்மையைத் திருமறையில் தெளிவாக அவதானிக்க முடிந்தது. மனிதனை சிறைபிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் பாவத்திலிருந்து, அவனுக்கு விடுதலை தந்து, மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும் அளிக்கக்கூடியது கிருபை மட்டுமே என்று ஆகஸ்டின் போதித்தார். அவரைப் பொறுத்தவரையில் தேவ கிருபையே மனிதனைப் பாவத்தின் அடிமைத்தளையில் இருந்து அகற்றி கர்த்தருடைய சித்தப்படி நடக்கச் செய்யக்கூடியதாக இருக்கிறது.
அதன் பிறகு பல நூற்றாண்டுகள் கிருபையைப்பற்றி பல தவறான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வந்தன. ஆனால் கடவுளின் காருணியத்தினால் 16-ம் நூற்றாண்டு காலப்பகுதியில்தான் இதைச் சூழ்ந்திருந்த இருள் விலக்கப்பட்டு, தெளிவாக தேவகிருபையின் பொருள் விளக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் ‘சீர்திருத்தவாதிகள்’ (Reformers) என்று அழைக்கப்படும் கர்த்தரால் எழுப்பப்பட்ட தேவஊழியர்கள் தங்கள் அருளுரைகள் மூலம் கிருபையின் போதனைகளுக்குப் புத்துயிர் கொடுத்தார்கள். இவர்களுடைய போதனையில் தனி மனிதனின் செயலுக்கல்லாது தெய்வீகக் கிருபைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. திருச்சபையின் கைங்கரியத்தினாலும், மதபோதகர்களின் தயவினாலும் மட்டுமே இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று இருந்த நிலைமைக்கு சாவுமணியடிக்க கர்த்தரால் எழுப்பப்பட்ட மார்ட்டின் லூதரும், ஜோன் கல்வினும் கிருபையின் மூலமாகவே ஒருவன் கிறிஸ்தவனாக மாறுவது மட்டுமல்லாது, தொடர்ந்தும் அவன் கிறிஸ்தவ வாழ்க்கையையும் வாழ முடியும் என்று ஆணித்தரமாகப் போதித்தார்கள். ஒருவனது சுய முயற்சியாலும், சித்தத்தினாலும் தேவனை அறிந்து கொள்ளலாம் என்று அக்காலத்தில் பொதுவாக நம்பப்பட்ட போதனையின் அடித்தளத்தையே இவர்கள் அசைத்து சுக்குநூறாக்கினார்கள். கிருபையைத் தேவன் தன் திட்டப்படி, தன்னால் தெரிந்து கொள்ளப்பட்ட மனிதனுக்கு இலவசமாக அளிக்கிறார் என்ற போதனைக்குக் கல்வினே முறைபடுத்தி வடிவம் கொடுத்தார். இதன் அடிப்படையில் அமைந்த போதனைகளைத்தான் ‘கிருபையின் போதனைகள்’ என்று அழைக்கிறோம்.
இதனால், மனிதன் கடவுளை அறிந்து கொள்வதற்கு செய்ய வேண்டிய காரியம் ஒன்றுமே இல்லை; நாம் நினைத்தபடி வாழ்ந்து விடலாம்; அவர் தனக்குத் தேவையான நேரத்தில் நம்மைத் தெரிந்து கொள்வார் என்று எண்ணிவிடக்கூடாது. கிருபையின் போதனைகள், பாவத்தின் பிடியில் இருக்கும் மனிதன் தனது சுயமுயற்சியால் கடவுளை அறிந்து கொள்ள முடியாது என்றுதான் கூறுகின்றதே தவிர, மனிதன் அதற்கான முயற்சிகளில் ஈடுபடமாட்டான், ஈடுபடமுடியாது என்று கூறுவில்லை (ரோமர் 1:18-23). பாவியாகிய மனிதன் என்ன செய்தாலும், எதைச் செய்தாலும் அவனது இருண்டுபோன கண்களுக்கு அவர் தென்படமாட்டார் என்பதுதான் வேதவாக்கு. ஆகையால், ஆவியின் அநுக்கிரகத்தினாலும், தேவகிருபையினாலும் மட்டுமே அவன் அவரை அறிந்து கொள்ள முடியும்.
இக்கிருபையின் அடிப்படையில் அமைந்த போதனைகளை நாம் தெளிவாகப் பார்ப்பதற்கு முன்னால் இப்போதனைகளுக்கு எப்படி, ஏன் எதிர்ப்புத் தோன்றியது, இன்று உலகின் பல பாகங்களிலும் இதற்கெதிரான கொள்கைகளின் வழியில் கிறிஸ்தவர்களும் திருச்சபைகளும் போய்க்கொண்டிருக்கும் காரணம் என்ன என்றும் நாம் ஆராய்தல் அவசியம். அடுத்த இதழில் இதைக்குறித்து நாம் விவரமாகப் பார்ப்போம்.
சிரிப்பலைகள்
கெரிஸ்மெட்டிக் இயக்கத்தினர் மத்தியில் இன்று புதிதாக எழுந்துள்ள ஓர் எழுச்சி ஆராதனைக் கூட்டங்களில் ஒன்று ‘சிரிப்பலை’ எழுப்புதல். தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த கெரிஸ்மெட்டிக் இவாஞ்செலிஸ்ட் ரொட்னி ஹாவார்ட் பிரவுன் (Rodney Howard Browne) இக்கைங்கரியத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். ‘ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று பலமுறை சத்தமிட்டுச் சொல்லி கூட்டத்தில் இருப்பவர்களை இவர் தொட்டவுடன் அவர்கள் நிலத்தில் திடீரென விழுகிறார்கள். விழுந்த பலரின் வயிற்றை இவர் தொட அவர்கள் நிறுத்தமுடியாத கட்டுக்கடங்காத ‘சிரிப்பலைகளை’ எழுப்புகிறார்கள். அமெரிக்காவில் ‘கார்பென்டர்ஸ் ஹோம் சர்ச்சில்’ நிகழ்ந்த இந்நிகழ்ச்சியை அச்சபை வீடியோ படமெடுத்து எல்லாக் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் இவ்வெழுச்சி பரவும் முகமாக, அனுப்பிவைத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் ‘சிரிப்பலை’ எழுப்பும் செயலை அவர்கள் பரிசுத்த ஆவியால் அடையும் ஆனந்தம் என்று கூறிக்கொள்கிறார்கள்.
திருமறையில் எங்குமே போதிக்கப்படாத புதிது புதிதான சிரிப்புக்கிடமான செயல்களையெல்லாம் ‘ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக் கொண்டு’ உலவிவரும் சாத்தானின் கைப்பாவைகளாக இருந்து பலரும் செய்து வருகிறார்கள். அதில் இன்னுமொன்றுதான் இந்தச்சிரிப்புக் கிடமான ‘சிரிப்பலை’யும். இது தமிழ்க் கிறிஸ்தவர்களைப் பாதிக்கப் போகும் நாட்கள் அதிக தூரத்தில் இல்லை. இத்தகைய கோமளித்தனமான கூட்டங்களை நிராகரித்து ‘. . . .தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.’ (யாக்கோபு 4:7).