‘கெரிஸ்மெட்டிக்’ இயக்கம் – பாகம் 1

வேதாகமத்தின் அடிப்படையிலனே ஓர் ஆய்வு

இன்று உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களைக் குழப்பிக்கொண்டிருக்கும் ‘கெரிஸ்மெட்டிக்’ இயக்கத்தின் தோற்றத்தையும், போதனைகளையும், திருமறையின் அடிப்படையில் ஆராயும் இக்கட்டுரை, இதன் பிடியில் அகப்பட்டுத் தத்தளிப்பவர்களுக்கு மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் பயன்படும் என்று நம்புகிறோம்.- ஆசிரியர்.

இன்று உலகெங்குமுள்ள பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்களைப் பாதித்து, அலைக்கழித்துக் கொண்டிருக்கும் இயக்கந்தான் ‘கெரிஸ்மெட்டிக்’ (Charismatic) இயக்கம் என்று பொதுவாக அழைக்கப்படும் ஓர் இயக்கம். இவ்வியக்கம் இந்நூற்றாண்டிலே தோன்றி, இன்று உலகின் பல நாடுகளில் வேரூன்றி, கிறிஸ்தவர்களைக் குழப்பியடித்துக் கொண்டிருக்கின்றது. இதனை ‘நியோ-பெந்தக்கொஸ்தே’ இயக்கம் (Neo-Pentecostalism) என்ற பெயரிலும் அடையாளம் காணலாம். 1900களில் ஆரம்பித்த ‘பெந்தகொஸ்தே’ இயக்கத்திலிருந்து ‘நியோ-பெந்தகொஸ்தே’ இயக்கம் உருவாகியது. ஏப்ரல் 3, 1960ம் ஆண்டில், கலிபோர்னியாவின் ஒரு ‘எபிஸ்கொபெல்’ சபையைச் சேர்ந்த ‘டெனிஸ் பெனெட்’ என்ற போதகர், தன் சபையில், தான் ‘பரிசுத்த ஆவியின் திருமுழுக்கைப்’ பெற்றுக்கொண்டதாகச் செய்த அறிவிப்பைத் தொடர்ந்து இவ்வியக்கம் ஆரம்பமானது. இதன் ஆரம்ப வளர்ச்சிக்கு தீமோஸ் சகாரியன், ஓரல் ரொபட்ஸ் ஆகியோரால் அமைக்கப்பட்ட பூரண சுவிசேஷ வர்த்தக சர்வதேச ஐக்கியமும் பெருந்துணையாக இருந்தது. இவ்வமைப்பு எவ்வித வேதப்போதனையையும் அளிக்காமல், வெறும் அனுபவ சாட்சிகளை வைத்தே வளர்ந்தது.

அன்றுமுதல் காட்டுத்தீபோல் அமெரிக்காவின் எல்லா சபைகளிலும் இவ்வியக்கம் பரவத்தொடங்கியது. உலகம் முழுவதுமுள்ள சபைகளிலெல்லாம் இன்று இதன் பாதிப்பை நாம் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. ஜோன் விம்பர், யொங்கி சோ போன்றோர் இவ்வியக்கத்தோடு தொடர்புடைய பிரபலமான புள்ளிகள் தனக்கென்று ஓர் உறுதியான தெளிவான போதனையைக் கொண்டிராத இவ்வியக்கம், ஒரு சமயக்கிளையாக (Denomination) செயல்படாமல், எல்லா சமயக்கிளைகளிலும் பரவித் தனது செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இன்று ‘கெரிஸ்மெட்டிக் மறுமலர்ச்சி’ என்ற பெயரிலும் உலவிவரும் இவ்வியக்கம், வேதத்திற்கே புறம்பான பல புதுப்போதனைகளையும் உருவாக்கி எவ்வித கட்டுப்பாடுமில்லாமல் காட்டாற்றைப்போல ஓடிக் கொண்டிருக்கின்றது.

ஓர் ஆய்வு மதிப்பீடு

இவ்வியக்கம் வேதத்தின் அடிப்படையில் அமைந்த ஓர் இயக்கமா? இதன் முக்கிய தன்மைகள் என்ன? இவ்வியக்கத்தோடு நமக்குத் தொடர்பு இருக்கவேண்டியது அவசியமா? இத்தகைய வினாக்களுக்கான விடையை நாம் ஆராய்ந்து அறிவது அவசியம். வேதமே பூரணமானதும், போதுமானதுமான கர்த்தருடைய வார்த்தையாக இருப்பதால், அனைத்துக்காரியங்களையும் பற்றிய அதன் முடிவே இறுதியானதாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ‘வேத வசனங்களை ஆராய்ந்து பாருங்கள்’ (யோவான் 5:39) என்று இயேசு சொன்னார். 2 தீமோத்தோயு 3:16-17 வரையிலான வசனங்கள், வேதத்தின் அதிகாரத்தையும் அதன் போதுமான தன்மையையும் குறித்துத் தெளிவாகத் தெரிவிக்கின்றன. ஆகவே, வேதத்திற்குப் புறம்பான காரியங்களின் அடிப்படையில் அல்லாமல், வேதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இவ்வியக்கத்தைக் குறித்து நாம் ஆராயவேண்டும். அந்த அடிப்படையில் ஆராய்கின்ற போது, இவ்வியக்கத்தைக்குறித்த மூன்று முக்கியமான உண்மைகளை நாம் தெளிவாக அவதானிக்க முடிகின்றது. வாசகர்கள் இவற்றை ஜெபத்தோடு வேதத்தின் மூலம் ஆராய்ந்து, தங்கள் சுய முடிவிற்கு வரும்படியாகக் கேட்டுக்கொள்கிறேன்.

1. இவ்வியக்கம் வேதாகமத்தின் போதனைகளின் அடிப்படையில் அல்லாமல் வெறும் உணர்ச்சிகளையும், அனுபவத்தையுமே மையமாகக்கொண்டு உருவாகியது.

இதன் ஆரம்பமே அனுபவரீதியானது

ஏற்கனவே நாம் பார்த்ததுபோல இவ்வியக்கத்தின் ஆரம்பமே அனுபவத்தைச்சார்ந்துதான் எழுந்தது. பரிசுத்த ஆவியைப்பற்றிய தவறான நம்பிக்கையால் உணர்ச்சி வசப்பட்டு, இல்லாத ஒன்றை பெற்றுக்கொண்டதாகக்கூறி ஏற்பட்டது தான் இவ்வியக்கம். நமது எல்லா அனுபவங்களும் வேதாகமத்தினால் பரிசோதிக்கப்பட வேண்டுமென்பது மறுக்கமுடியாத ஒரு திருமறை விதி. அதுமட்டுமல்லாது, வேதசத்தியங்களையே, நாம் அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுத் திருமறையின் போதனை. அப்படியிருக்க, இத்தெளிவான போதனைகளையெல்லாம் புறக்கணித்து, வெறும் உணர்ச்சிவசப்படுத்தும் வேதத்திற்குப் புறம்பான அனுபவங்களை மட்டும் நாடி, அவற்றைப் பெற்றுக்கொண்டதாக, இவ்வியக்கத்தார் தம்மைத் திருப்திப்படுத்திக்கொள்வது மட்டுமன்றி மற்றவர்களையும் திருமறைக்கு எதிராகத் திருப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

சொந்த அனுபவத்தைச்சார்ந்த போதனை

இவ்வியக்கம் ‘பரிசுத்த ஆவியின் திருமுழுக்கு’ அபிஷேகத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. ஆவியின் அவ்வனுபவத்தை எப்படிப் பெற்றுக்கொள்வது என்பதை இவ்வியக்கத்தைச் சேர்ந்த பலரும் பலவிதமாகப் போதிக்கிறார்கள். வேதாகமத்தில் காணப்படாத, அதற்கு எதிரான இப்போதனையை, அவர்கள் எப்போதும் ஒரே நிலையில் இருக்காத தம் சொந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே ஏற்படுத்தினார்கள். உணர்ச்சிகளுக்கு மட்டும் தூபமிட்டு, உணவூட்டி வருகின்ற இத்தகைய போதனைகளை இனங்கண்டு கொள்ள வேண்டுமென்று கர்த்தர் தன் வார்த்தையிலே தெரிவிக்கிறார். மத்தேயு 7:13-24ல் தேவன் இதைக்குறித்துத்தான் எச்சரிக்கை செய்கிறார். அற்புதங்கள் செய்கிறவனும், பிசாசு விரட்டுகிறவனும் அல்ல, பரலோகத்தில் இருக்கின்ற பிதாவின் சித்தப்படி (திருமறையே அவரது சித்தத்தைத் தெரிவிக்கின்றது) செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பான் என்று இயேசு சொன்னார். அனுபவம் மட்டும் சோறு போடாது, எந்த அனுபவமும் கர்த்தரை மகிமைப்படுத்தும் விதத்தில், திருமறையின் வழி முறைகளின்படி அமைய வேண்டும் என்பதை இவ்வியக்கத்தார் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.

2. இவ்வியக்கம் வேதாகமமே பூரணமானதும், அனைத்துக் காரியங்கள் மீதும் சர்வ அதிகாரமுள்ளதும் போதுமானதுமானது என்ற உண்மையை ஏற்று, அதை உறுதியோடு பின்பற்றுவதில்லை.

வேதம் பூரணமானதும் போதுமானதுமானது.

இவ்வியக்கத்தில் நாம் அவதானிக்கும் இன்னுமொரு முக்கிய காரியம் என்னவெனில், இவர்கள் திருமறையே சர்வ அதிகாரமுள்ள, கர்த்தருடைய பூரணமானதும், போதுமானதுமான வார்த்தை என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. இவர்களில் பலர் திருமறையை நாள்தோறும் பயன்படுத்திய போதும், அது கர்த்தருடைய வார்த்தைதான் என்று நாக்கூசாமல் சொல்லத்தயங்காத போதும், உண்மையில் அதன் போதனைகளைச் சரிவரக் கவனிப்பதோ அதன் வழிகளின்படி மட்டும் நடக்க முற்படுவதோ இல்லை. இதுவே, இவ்வியக்கத்தைக் காட்டிக்கொடுக்கும் பேருண்மையாக இருக்கின்றது.

இவ்வுலகில் இரட்சிப்புக்கும், கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் தேவையான அனைத்தையும் தரக்கூடியதாக திருமறை மட்டுமே உள்ளது (2 பேதுரு 1:3). ஆண்டவராகிய கர்த்தர் வார்த்தையின் மூலம் மட்டுமே நம்மோடு பேசுகிறார். திருமறையே தேவனுடைய சித்தத்தை வெளிப்படுத்துகிறது. கிறிஸ்தவ வாழ்வை வாழ்வதற்கு உதவியாக நாம் திருமறைக்கு வெளியில் உள்ள எதையும் நாடிப்போக வேண்டிய அவசியமே இல்லை. திருமறையே எல்லாவற்றின் மேலும் சர்வ அதிகாரமுடையது (2 தீமோத்தேயு 3:16-17). இத்தகைய பெருந்தன்மைகளைக் கொண்ட திருமறை போதுமானதாகவும் உள்ளது (சங். 19). அதாவது, இவ்வுலகில் ஒரு மனிதனுக்கு ஆன்மீக வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் தரக்கூடியதாக திருமறையை மட்டுமே தேவன் தந்திருப்பதால், அதுவே அக்காரியங்களின் நிறைவேற்றுதலுக்குப் போதுமானதாக இருக்கின்றது. ஆனால், ‘கெரிஸ்மெட்டிக்’ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இதனை நடைமுறையில் எற்றுக் கொள்வதில்லை. திருமறையைக்குறித்த இந்த அடிப்படை உண்மையைப் புரிந்து ஏற்றுக்கொள்ளாவிட்டால் கிறிஸ்துவுக்குள்ளான அறிவைப் பெற்று, கிறிஸ்தவ வாழ்க்கையை ஒருவன் சரிவர வாழ்ந்து விட முடியாது.

வேதமே வேதத்திற்கு விளக்கமளிக்கின்றது.

அதுமட்டுமல்லாது, ‘கெரிஸ்மெட்டிக்’ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் திருமறையை சரிவர விளங்கி அறிந்துகொள்வதில்லை. திருமறையை விளங்கிப் புரிந்துகொள்ள, திருமறைக்குள்ளாகவே ஆண்டவராகிய கர்த்தர் தந்துள்ள விதிமுறைகள் அனைத்தையும் அலட்சியப்படுத்தி, தம்மனம் போனபோக்கில் அதற்கு விளக்கம் கொடுத்துத் தம்மையும், பிறரையும் ஏமாற்றி வருகிறார்கள். வேதமே வேதத்தை விளக்குகின்றது என்ற பேருண்மையை மறந்து தமது உணர்ச்சிகளுக்கும், சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றபடி வேத விளக்கமளிக்க முற்படுகின்றார்கள். வேதவசனங்களுக்கு அவை காணப்படும் சந்தர்ப்பங்களை ஆராயாமல், பொருள்கூற முற்படுகிறார்கள். திருமறையை ‘அலாவுதீனின் அற்புத விளக்கைப்’ போலத் தாம் நினைத்த காரியங்களை உடனடியாகச் செய்யும், ஒரு மந்திரவித்தை செய்யும் புத்தகம்போல் பயன்படுத்துகிறார்கள். இதை அவர்களுடைய ‘பரிசுத்த ஆவியின் திருமுழுக்கு அபிஷேகம்’, அந்நியபாஷை பேசுதல், தீர்க்கதரிசனம் சொல்லுமல், பிசாசு விரட்டுதல் போன்றவற்றைக் குறித்த போதனைகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது.

3. இவ்வியக்கத்தின் போதனைகளும் வேதாகமத்தின் அடிப்படையில் அமைந்தவையல்ல.

இவ்வியக்கத்தின் போதனைகளை நாம் வேதத்தோடு ஒப்பிட்டு ஆராய்ந்து பார்க்கும்போது, வேதத்தைவிட்டு எவ்வளவு தூரம் இவ்வியக்கம் விலகி இருக்கிறதென்று அறிந்து கொள்ள முடிகின்றது.

பரிசுத்த ஆவியின் திருமுழுக்கு அபிஷேகம்

இப்போதனை இவ்வியக்கத்தின் இறையியலின் முக்கியமான அம்சமாகும். சிலவேளைகளில் இப்போதனையை ‘இரண்டாவது அனுபவம்’ என்றும் அழைப்பார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை, ஒருவர் தமது ஆண்டவராக அறிந்துகொண்ட பின்பு, அவரது முழு ஆசீர்வாதத்தையும் அடைய, பரிசுத்த ஆவியின் ஈவாக அவரது ‘திருமுழுக்கு அபிஷேகத்தை’ இரண்டாம் அனுபவமாகப் போதிக்கிறது. இவ்விரண்டாம் அனுபவத்தைப் பெற்றுக்கொண்டதற்கு அடையாளமாக ஒருவர் அந்நியபாஷையில் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

‘இவ்விரண்டாம் அனுபவத்தைப்’ பெற்றுக் கொள்ள உதவும் பல வழிமுறைகளையும் இவ்வியக்கம் போதிக்கின்றது. ஆரம்பகால ‘பெந்தகொஸ்தே’ இயக்கத்தினர், இவ்வனுபவத்தைப் பெற்றுக்கொள்ள ‘காத்திருப்புக் கூட்டங்களை’ நடத்தினார்கள். இக்கூட்டங்களில் மக்கள் பலமணிநேரம் ஜெபத்தோடு கடுமுயற்சியுடன் இதற்காகக் காத்திருப்பது வழக்கம். இதைப்பெற்றுக்கொண்டதன் அடையாளமாக அந்நியபாஷை பேச வேண்டும் என்றும் இவர்களால் நம்பப்பட்டது.

‘கெரிஸ்மெட்டிக்’ இயக்கத்தார் ‘காத்திருப்புக் கூட்டங்களை’ நடத்தாவிட்டாலும், புதிதாக மனந்திரும்பியவர்களை, இவ்வனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாகத் தூண்டுகிறார்கள். இவ்வனுபவத்தை நாடுகிறவர்களின் மனதையும், உணர்ச்சிகளையும் பாதித்து தம்வயப்படுத்தும் முறையில் இவர்களுடைய கூட்டங்கள் அமைகின்றன. இக்கூட்டங்களில் ஆவியின் பெயரால் ‘பல்டியடித்தல்’, உணர்ச்சி வசப்பட்டு கட்டுக்கடங்காமல் அலறுதல், திடீரென நிலத்தில் வீழ்தல், பிசாசு பிடித்ததுபோல் ஆடுதல் ஆகியவற்றைப் பொதுவாகக் காணலாம்.

இவ்வனுபவத்திற்கு அடிப்படையாக இவர்கள் பயன்படுத்தும் வசனம், அப்போஸ்தலர் நடபடிகள் 2:38 ஆகும். இங்கே ‘பேதுரு, அவர்களை நோக்கி, நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்’ எனக் கூறுவதைப் பார்க்கிறோம். இவ்வியக்கப் போதகர்கள் இவ்வசனத்தைப் பயன்படுத்தி, ஒருவர் இயேசுவுக்குள் நீதிமானாக்கப்படுகின்றபோது, ஒருவேளை பரிசுத்த ஆவியை அவர் பெற்றுக் கொள்ளாமலும் போகலாம் என்று போதிக்கிறார்கள். மனந்திரும்பும்போது, பொதுவாக இரண்டுமே ஒருவனுடைய வாழ்வில் நிகழும் என எதிர்பார்த்தாலும், அவ்வாறு நிகழாமலும் போகலாம் என்று விளக்கமளிக்கிறார்கள். ஆகவே, மனந்திரும்பி நீதிமானாக்கப்பட்ட ஒருவர், பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள மேலும் சில காரியங்களைச் செய்ய வேண்டும் என்பது இவர்களுடைய போதனை.

ஆனால் திருமறை இதற்கு எதிரானதைத்தான் சொல்கிறது. பவுல் அப்போஸ்தலன் ரோமர் 8:9ல் ‘கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவன் அல்ல’ என்று அருதியிட்டுச் சொல்கிறார். பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளாமல் ஒருவரும் கிறிஸ்தவனாக முடியாது என்று திருமறை தெளிவாகக் கூறுகின்றது. இதையே மறுபடியும் பவுல், எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் 1:13ல், நீங்கள் ‘விசுவாசிகளானபோது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரை போடப்பட்டீர்கள்’ என்று கூறுகிறார். ஆகவே, கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே ஒருவருக்கு பரிசுத்த ஆவியானவர் ஆண்டவரால் அளிக்கப்பட்டுவிடுகிறார். ஆகவே, கிறிஸ்தவன், தான் ஏற்கனவே பெற்றுக்கொண்டுள்ள பரிசுத்த ஆவியை மறுபடியும் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை.

அந்நியபாஷை பேசுதல்

‘கெரிஸ்மெட்டிக்’ இயக்கத்தின் வாதத்திற்குரிய ஒரு பயிற்சி அவர்களுடைய அந்நியபாஷை பேசும் பழக்கம்தான். இதனால் இவ்வியக்கமே ‘அந்நியபாஷைகள் இயக்கம்’ என்ற பெயரையும் பெற்றுள்ளது. இவ்வியக்கத்தின் தலைவர்கள் அந்நியபாஷைகள் குறித்து ஒரேவிதமான கருத்தைக்கொண்டிருக்காமல் வெவ்வேறான விளக்கங்களைக்கொடுத்து வருகிறார்கள். அவர்கள் மத்தியிலேயே, அந்நியபாஷை உண்மையில் எத்தன்மை வாய்ந்தது என்பது குறித்து கருத்து வேறுபாடு நிலவுகிறது.

அப்போஸ்தலர் நடபடிகள் 2ஆம் அதிகாரத்தைவைத்து பரிசுத்த ஆவியின் திருமுழுக்கு அபிஷேகத்தை ஒருவர் பெற்றுக்கொண்டதற்கு அடையாளமாகத்தான் அந்நியபாஷை கிடைக்கின்றது என்று இவர்கள் போதிக்கின்றார்கள். ஆனால், பெந்தகொஸ்தே நாளில் அப்போஸ்தலரோடு இருந்தவர்கள் அந்நியபாஷையில் மட்டும் பேசாமல் வேறுபல அற்புதங்களையும் சந்தித்தார்கள் என்று அறிகிறோம்.  அதுமட்டுமல்லாது, இன்று அந்நியபாஷை என்று பலர் கூறுவது, புதிய ஏற்பாட்டுக்காலத்து அந்நியபாஷையைவிட வித்தியாசமானதாக இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. பலர் செய்துள்ள ஆய்வின்படி, இவை தெளிவான இவ்வுலக மொழிகளாக அல்லாமல், புரிந்துகொள்ள முடியாத வெறும் அலரல்களாக உள்ளன. இன்று இவ்வியக்கத்தார் தாம் பேசும் அந்நியபாஷையை, ‘மனிதவர்க்கமே இதுவரை அறிந்திராத தெய்வீகத்தன்மையுள்ள ஒரு மொழி’ என்று கூறுகிறார்கள். இதைப்பெற்றுக்கொள்ள இவர்கள் கடைப்பிடிக்கும் பல வழிமுறைகளும்கூட புதிய ஏற்பாட்டுக்காலத்தைவிட வித்தியாசமானதாக இருக்கின்றது.

இக்கட்டுரை ஆசிரியர் இங்கிலாந்து நாட்டில் ஒருமுறை, இவ்வியக்கத்தாரின் கூட்டத்திற்கு ஒரு நண்பரோடு போய் அவர்கள் செய்யும் காரியங்களை அவதானித்தார். அமெரிக்க நாட்டிலிருந்து வந்திருந்த ஒரு போதகர் அன்று அந்நியபாஷை பெற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு, அவர்கள் அதைப்பெற்றுக்கொள்ள தன்னால் உதவி செய்யமுடியும் என்று கூறி பலரை முன்னால் வரவழைத்தார். அவ்வாறு முன்னால் போன ஒரு பெண்ணால் அந்நியபாஷை பேச முடியவில்லை. உடனே அந்த போதகர் கூட்டத்தைநோக்கி, ‘அந்நியபாஷை பேசமுடிந்தவர்கள் முன்னால் வாருங்கள்’ என்று அழைத்தார். அவ்வாறு வந்தவர்களைப்பார்த்து அப்போதகர் அந்நியபாஷையில் பேசும்படியாகச் சொன்னதோடு, அந்தப் பெண்ணையும், அப்படிப் பேசுபவர்களைப் பின்பற்றி அதேமுறையில் பேசும்படியாகத் தூண்டினார். அப்பெண்ணால் தொடர்ந்தும் பேச முடியாமற்போக, அமெரிக்கப் போதகர் அப்பெண்ணைப் பிடித்து ஆட்ட, அவர் வியர்வை வடியக் களைப்படைந்து நிலத்தில் வீழ்ந்தார். இறுதிவரை அந்தப்பெண்ணால் அந்நியபாஷையில் பேசமுடியவில்லை. புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இம்முறையில் எவருமே அந்நியபாஷையைப் பெற்றுக்கொண்டதில்லை. அப்போஸ்தலர்கள் ஒருபோதும் இவ்வாறான வழிமுறைகளையும் கைக்கொள்ளவில்லை.

அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் நாம் பார்க்கும் செயல்களை, அப்புத்தகம் ஏன் எழுதப்பட்டது? எத்தகைய சந்தர்ப்பத்தில் எழுதப்பட்டது? என்றெல்லாம் ஆராயாமல், அன்றாட வாழ்க்கையில் அவை நடைபெறவேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவற்ற செயல். அப்போஸ்தலர் நடபடிகள், புதிய ஏற்பாட்டுக்காலத்து ஆதிசபையைக் கர்த்தர் எவ்வாறு எழுப்பினார் என்ற வரலாற்றுச் சம்பவத்தைத் தெரிவிக்கும் புத்தகம். அது வரலாற்றுப்புத்தகமாக இருந்தபோதும், நிச்சயமாக நாம் படித்தறியவும், வாழ்க்கையில் கைக்கொள்ளவும் வேண்டிய காரியங்கள் அதில் அநேகம் உண்டு. ஆனால், அப்புத்தகம் வரலாற்றில் நடந்ததைத் தெரிவிக்கின்றதென்பதை மறந்து அதில் காணப்படும் அனைத்தும் நிகழ் காலத்திலும் நடக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது வேதத்தைத் தவறான முறையில் பயன்படுத்தும் செயலாகும்.

(மிகுதி அடுத்த இதழில்)

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s