இச்சஞ்சிகை ஆசிரியரிடம் பொதுவாகக் கூட்டங்களில் பலர் கேட்ட முக்கியமான கேள்விகளையும் பதிலையும் ஏனையோரது பயன்கருதி இப்பகுதியில் வெளியிடுகிறோம்.
1. கிறிஸ்தவன் இவ்வுலக வாழ்க்கையில் பின்வாங்கி இரட்சிப்பை இழந்து போகலாம் என்று கூறுகிறார்களே, இது சரியா? எபிரெயர் 6:4-8ஐ விளக்கவும்.
வேதத்தின் ஒருசில பகுதிகளை மேலெழுந்தவாரியாக வாசிக்கும்போது, அவை கிறிஸ்தவன் இரட்சிப்பை இழந்துபோகமுடியும் என்று பொருள் கொள்ளக்கூடிய விதத்தில் அமைந்துள்ளன. குறிப்பாக எபிரெயர் 6:4-8; 10:26-27 ஆகிய வேதப் பகுதிகளை இங்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இவ்வேதப்பகுதிகளைக் கொண்டுதான் சிலர் கிறிஸ்தவன் இரட்சிப்பை இழந்து போகலாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள். ஆனால், விவரமாக இப்பகுதிகளை நாம் ஆராய்ந்து பார்க்கும் போது இதற்கு எதிர்மறையான விளக்கத்தைத்தான் பார்க்கிறோம். வேதம், கிருபையின் மூலம் இரட்சிப்பைப் பெற்றுக்கொண்ட எவரும் அதை இழந்து போகமாட்டார்கள் என்று தெளிவாகப் பல இடங்களில் போதிக்கின்றது. (யோவான் 6:35-40; 10:27-30; 17:11, 12, 15; ரோமர் 8:1, 29, 30, 35-39; 1 கொரிந்தியர் 1:7-9; எபேசியர் 1:5, 13, 14; 4:30; கொலோசெயர் 3:3, 4; 1 தெசலோ. 5:23, 24; எபிரெயர் 9:12, 15; 10:14; 1 பேதுரு 1:3-5; யூதா 24ப் பார்க்கவும்).
வேதத்தை வேதத்தோடு ஒப்பிட்டு விளக்கம் பெற வேண்டும் என்பதும். வேதம் தனக்கு முரணாக ஒருபோதுமே பேசாது என்பதும், தெளிவற்ற வேதப்பகுதிகளைத் தெளிவான பகுதிகளைக் கொண்டே விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதும் திருமறையின் விளக்கத்திற்கு இன்றியமையாத விதிகள். இவ்விதிகள் வேதத்தைத் தவறான விதத்தில் புரிந்துகொள்ளக் கூடிய ஆபத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். இவ்விதிகளைப் பயன்படுத்தி வேதத்தை ஆராய்கின்றபோது, திருமறையின் வேறெந்தப் பகுதியுமே இரட்சிப்பை ஒருவன் இழந்து போகலாம் என்ற போதனையைக் கொண்டிராததை நாம் அவதானிக்கலாம்.
அப்படியானால், இப்பகுதிகள் உண்மையிலேயே போதிப்பதென்ன? இப்பகுதிகள், கிறிஸ்தவர்களைப்போல் தோற்றமளித்த சிலரைப்பற்றி பேசுகின்றனவே தவிர உண்மைக் கிறிஸ்தவர்களைப்பற்றியல்ல. இவர்கள், ஆரம்பத்தில் கிறிஸ்தவர்களைப்போல் தோற்றமளித்து, தம்மில் ஆவிக்குரிய சில கிரியைகளையும் கொண்டிருந்தபோதும், அவர்களில் தொடர்ந்து அவற்றைக் காண்பது அரிதாக இருந்தது. இவர்கள் மற்றவர்களோடு ஐக்கியத்தில் கூடிவருவதையும் முற்றாக நிறுத்தி விட்டார்கள் (10:24-25). இவ்வாறான வாழ்க்கையைக் குறித்து கிறிஸ்தவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி, இந்நிருபத்தின் ஆசிரியர் மேற்குறித்த வேதப்பகுதிகளில் சில உண்மைகளைத் தெரிவிக்கின்றார். அவர் கூறுவதென்னவென்றால், நற்செய்தியைக் கேட்கும் வாய்ப்பையும் பெற்று, பரிசுத்த ஆவியின் அருளினால் பல நல்ல காரியங்களை வாழ்வில் ருசி பார்த்தும், மனந்திருந்தி பாவத்திலிருந்து விடுபட்டுத் தேவனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்காதவர்களை, மனந்திரும்பச்செய்யும் பொருட்டு கர்த்தர் செய்யக்கூடியது வேறெதுவுமே இல்லை என்பதுதான் (மத்தேயு 7:22-23). இவர்கள் நற்செய்தியின் பேருண்மைகளை மனத்தளவில் புரிந்து கொண்டிருந்த போதும், கர்த்தருடைய கிருபையின் மூலம், அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய மெய்யான விசுவாசத்தை நாடாமலும், பெறாமலும் இருந்தார்கள். இவர்களுடைய இருதயத்தில் பரிசுத்த ஆவி, ஒருபோதுமே வல்லமையோடு கிரியை செய்யவில்லை. இத்தகையோரைக் குறித்துத்தான் இயேசு விதைக்கிறவனின் உவமையின் மூலமும் தெளிவுபடுத்துகிறார் (மத்தேயு 13:39; 18-23). இவர்கள் இயேசு கிறிஸ்துவை அறிந்து கொண்டது போல் தோற்றமளித்தார்களே தவிர உண்மையில் அவரது மந்தையைச் சேர்ந்தவர்களல்ல. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் காட்டிக்கொடுத்த யூதாசு, பவுல் அப்போஸ்தலன் விட்டுப்பிரிந்த தேமா (2 தீமோ. 4:10), தீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபத்தில் பவுல் குறிப்பிடும் இமெனேயு, அலெக்சந்தர் (1 தீமோ. 1:20) ஆகியோரை இவர்களுக்கு உதாரணமாகக் கூறலாம். ஆகவே, இவ்வேதப்பகுதி உண்மைக் கிறிஸ்தவர்களையல்ல, வெளித்தோற்றத்திற்கு அவ்வாறு தோற்றமளித்தவர்களைப்பற்றியே எடுத்துச்சொல்கிறது.