கிறிஸ்தவன் யார்?
கார்டினர் ஸ்பிரிங், D.D.
தமிழ் பாப்திஸ்து வெளியீடு, கீழ்ப்பாக்கம்,
சென்னை 600 010. 83 பக்கங்கள்.
இப்புத்தகம் கார்டினர் ஸ்பிரிங் (Gardiner Spring) என்பவர் எழுதிய ‘TheDistinguishing Traits ofChristian Character’ என்ற நூலின் தமிழாக்கம், கார்டினர் ஸ்பிரிங், அமெரிக்காவில், நியூயோர்க் நகரில் ஐம்பத்து ஐந்து வருடங்கள் போதராக பணிபுரிந்து வந்தவர். இந்நூலை இவர் ஜொனத்தன் எட்வர்ட்ஸின் (Jonathan Edwards) ‘The Religious Affections’ என்ற புத்தகத்தைத் தழுவி எழுதியுள்ளார். எட்வர்ட்ஸின் அழியாப் புகழ் பெற்ற எழுத்துக்களின் சாரத்தை ஒவ்வொரு கிறிஸ்தவனும் வாசித்துப் பயனடையக்கூடிய முறையில் ஸ்பிரிங் தனது சொந்த நடையில் தந்துள்ளார் (இவ்விரு புத்தகங்களும் ஆங்கிலத்தில் தொடர்ந்தும் பதிப்பிலிருக்கின்றன). தமிழ் பாப்திஸ்து வெளியீடு அதனைத் தமிழ்க்கிறிஸ்தவர்களும் பயனடையும் விதத்தில் தமிழில் வெளியிட்டுள்ளது.
ஸ்பிரிங்கின் இந்நூல் எதைப்பற்றி ஆராய்கிறது?
இரட்சிப்பைப் பெற்றுக் கொள்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறேன் என்பதை நான் அறிவதெப்படி? இவை இரண்டுமே வெவ்வேறான கேள்விகளாக இருந்தபோதும், வேதம் இவ்விரண்டிற்கும் தெளிவான பதிலைத் தருகின்றது. முதலாவது கேள்விக்குப் பதில், ஒருவன் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்வதற்கு தன் பாவத்தில் இருந்து மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக விசுவாசிக்க வேண்டும் (அப்போஸ். 20:21) என்பதுதான். ஆனால் இரண்டாவது கேள்விக்கு வித்தியாசமான பதில் தேவைப்படுகிறது. முதலாவது கேள்வி இரட்சிப்பைப்பெற்றுக்கொள்வதற்கான வழியைத் தேடுகிறதாகவும், இரண்டாவது கேள்வி, ஒருவன் இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறான் என்பதற்கு என்ன ஆதாரம் என்று ஆராய்கிறதாகவும் இருக்கிறது. வேதம் இந்த இரண்டாவது கேள்விக்கு விடையாக, நீங்கள் விசுவாசம் உள்ளவர்களோ என்று நீங்களே உங்களை சோதித்து அறியுங்கள். உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள் என்று கூறுகின்றது. இந்த இரு கேள்விகளுக்கும் வேதம் தருகின்ற பதிலை வேறுபடுத்தி அறிந்துகொள்ளத் தவறியதால் இன்று கிறிஸ்தவர்களையும், திருச்சபைகளையும் ஒரு பெருங்குழப்பமே கடல் போலச் சூழ்ந்துள்ளது.
இன்றைய கிறிஸ்தவர்கள் மத்தியில், யாராவது, நான் இரட்சிப்பை உண்மையிலேயே பெற்றுக்கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்து கொள்வதெப்படி என்று கேட்டால், அவர்களுக்கு, கிறிஸ்தவகள் இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று வேதம் போதிப்பதை விசுவாசிக்க வேண்டும் என்ற பதில் மட்டும்தான் கிடைக்கிறது.
இக்கேள்விக்கு, இந்நூலில் ஸ்பிரிங் திருமறையின் அடிப்படையில் ‘வரலாற்றுப் பூர்வமான கிறிஸ்தவத்தை’ சான்றாகக் கொண்டு பதில் தருகிறார். கிறிஸ்துவின் பிள்ளைகளின் வாழ்க்கையில், தேவனுடைய கிருபையின் செயலின் அடையாளமாக ‘வேறுபடுத்திக் காணக்கூடிய நேர்முக அடையாளங்கள்’ காணப்படும் என்பது இவரது வாதம். இதை நிரூபிக்குமுகமாக முதலாவது ஒருவன் கிறிஸ்துவின் பிள்ளையல்ல என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டும் அடையாளங்களை நம்முன் வைத்து, அதன்பின் ஒருவனுடைய வாழ்வில் கர்த்தருடைய கிரியை நிகழ்ந்திருப்பதைக் காட்டும் தெளிவான அடையாளங்களையும் எடுத்து விளக்குகிறார்.
கிறிஸ்தவர்கள் என்று நாம் வெறுமனே சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் விண்ணுலகடைந்து விட முடியாது. திருமறை காட்டும், கிறிஸ்தவனுடைய வாழ்வில் இருக்க வேண்டிய அடையாளங்களோடு, எமது வாழ்க்கையை ஒப்பிட்டுப் பரிசோதித்து அறிந்து கொள்வதால் மட்டுமே நாம் தேவசமாதானத்தில் நிலைத்திருக்க முடியும். அப்படிச் செய்ய மறுக்கிறவனோ, இத்தகைய உணர்வே இல்லாதவனோ, கர்த்தருடைய பிள்ளையாக இருக்க முடியாது. இத்தகைய சுயபரிசோதனையின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் திருமறை பல இடங்களில் போதிக்கின்றது (மத்தேயு 7:21; யோவான் 10:27; 1 கொரி. 6:9; 2 தீமோ. 2:19; கலா. 5:19-21; எபி. 5:9). அத்தோடு யோவான் எழுதிய முதலாவது நிருபத்திலும் குறிப்பாக இதைப்பற்றிய தெளிவான போதனை தரப்பட்டுள்ளது (1 யோவான் 2:3; 3:14).
எப்படியாவது, எதைச்செய்தாவது நாலுபேரை கிறிஸ்துவிடம் கொண்டுவந்துவிட வேண்டும் என்று, இயேசுவுக்கு ஆள் சேர்க்கும் பட்டாளம் மலிந்திருக்கும் இன்றைய சூழ்நிலையில், வழிதவறிப்போன பலரும் வேதத்தின் அடிப்படையில் தங்களை சோதித்து அறிந்து கொள்ள இப்புத்தகம் நிச்சயம் உதவும். இதை வாசிப்பவர்களின் வாழ்க்கையில் கீழ்வரும் நோக்கங்கள் நிறைவேற வேண்டுமென்பது எமது தாழ்மையான ஜெபம்.
- விசுவாசத்தில் உறுதிக்குறைவுடைய கர்த்தருடைய பிள்ளைகளின் விசுவாசம் உறுதியடைய வேண்டும்.
- திருமறையில் காணப்படாத போலியான ஒரு விசுவாசத்தைக் கொண்டிருப்பவர்கள் அதிலிருந்து விடுதலை பெற்று கர்த்தரை அறிந்து கொள்ள வேண்டும்.
- கிறிஸ்துவை பிரசங்கிப்பவர்கள் சத்தியத்தில் தெளிவான அறிவு பெற்று, ஆவியின் அநுக்கிரகத்தோடும், வல்லமையோடும் வேதத்தைப் போதிக்க வேண்டும்.
இது கிறிஸ்தவர்கள் அனைவரும் தவறாது வாசித்துப் பயனடைய வேண்டிய புத்தகம்.