புத்தக விமர்சனம்

The Charismatics and the Word of God
(கெரிஸ்மெட்டிக்கும் கர்த்தருடைய வார்த்தையும்)

Victor Budgen
Evangelical Press. U.K. 313 pages.

இங்கிலாந்து நாட்டில் லங்காஷயர் என்ற இடத்தில் மின்றோ திருச்சபையின் போதகராகயிருந்த இப்புத்தக ஆசிரியர் கடந்த வருடம் இறைவனடி சேர்ந்தார். ‘கெரிஸ்மெட்டிக்’ இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, அதன் போதனைகள், குறித்து வரலாற்றுப் பூர்வமாகவும், திருமறையின் அடிப்படையிலும் ஆய்வுகள் புரிந்து, தெளிவாகப் பலரும் பயன்படும்படி அவர் இப்புத்தகத்தை முதன்முறையாக 1985 இல் வெளியிட்டார். ‘இவாஞ்செலிக்கல் பிரஸ்ஸினால்’ 1989ல் இதன் மறுபதிப்பு வெளியிடப்பட்டது.

இப்புத்தகம் ஆங்கிலத்திலே எழுதப்பட்டிருந்தபோதும் இச்சஞ்சிகையை வாசிக்கும் ஆங்கிலம் தெரிந்த போதகர்கள், ஊழியக்காரர்கள் மற்றும் அன்பர்கள் நலன்கருதி அதன் விமர்சனத்தைத் தருகிறோம். உபயோகமற்ற குப்பைகளைப் பிரசுரித்து வரும் பல வெளியீட்டாளர்களுக்கு மத்தியில் இன்று ‘பேனர் ஆப் ட்ருத’ (The Banner of Truth), இவாஞ்செலிக்கல் பிரஸ் (Evangelical Press) ஆகிய புத்தக வெளியீட்டு நிறுவனங்கள். ஆங்கிலத்தில் தரமான, திருமறையின் அடிப்படையில் அமைந்த நூற்றுக்கணக்கான புத்தகங்களை வெளியிட்டு கிறிஸ்தவ அன்பர்களுக்கும், திருச்சபைக்கும் பேருதவி செய்து வருகிறார்கள். விக்டர் பஜ்ஜனின் (Victor Budgen) இப்புத்தகத்தை வெளியிட்ட ‘இவாஞ்செலிக்கல் பிரஸ்’ நிறுவனத்தாருக்கு எம் நன்றியை முதலாவது தெரிவித்துக்கொள்கிறோம்.

(இவ்விதழில் ஏற்கனவே ‘கெரிஸ்மெட்டிக் இயக்கத்தைப்’ பற்றி ஒரு கட்டுரை காணப்படுகின்றது. அக்கட்டுரை சுருக்கமானமுறையில் பலரும் பயனடைய எழுதப்பட்டுள்ளது). ஆனால், விக்டர் பஜ்ஜன் இப்புத்தகத்தில், இவ்வியக்கத்தைப்பற்றிப் பல ஆய்வுகளோடுக்கூடிய தெளிவான விளக்கங்களைக் கொடுக்கிறார். கர்த்தருடைய வார்த்தையின் வெளிப்படுத்தலோடு தொடர்புடைய அற்புத ஈவுகளை, தொடர்ந்தும் கர்த்தர் இக்காலத்தில் கொடுப்பதில்லை என்பதையும் இப்புத்தகம் தெளிவாக விளக்குகின்றது. அதற்கான தகுந்த பல ஆதாரங்களை ஆசிரியர் வேதத்தில் இருந்து அடுக்கடுக்காக எடுத்துத் தருகிறார்.

புதிய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்கள் எத்தகையது என்பதையும், அவற்றிற்கும், நாம் இன்று அவதானிக்கக் கூடிய போலித்தீர்க்கதரிசனங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் புத்தக ஆசிரியர் மிகத்தெளிவாக விளக்குகிறார். இது ஆங்கிலம் தெரிந்த அனைவரும் தவறாது படிக்க வேண்டிய புத்தகம். போதகர்களும், ஊழியக்காரர்களும் மற்றோரும் இதைப்படிப்பதன் மூலம் நிச்சயமாக ஆவிக்குரிய வாழ்வில் பயன்பெறுவதோடு தவறான போதனைகளிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

கிறிஸ்துவின் மரணத்தினால் உண்டாகும் வாழ்வு

‍ஜான் ஓவன் (1616-1683)

தமிழ் பாப்திஸ்து வெளியீடுகள், சென்னை – 10.

தமிழாக்கம் – K.H. கர்ட் 114 பக்கங்கள்.

‍ஜான் ஓவன் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பியூரிட்டன் பிரிவைச் சேர்ந்த அருளுரையாளர். இவருடைய நூல்களின் பெரும்பகுதி 16 புத்தகங்களாக வெளியிடப்பட்டு இன்றும் ஆங்கிலத்தில் பதிப்பிலிருக்கின்றன. இவர் 1647 ஆம் ஆண்டில் வெளியிட்ட மிகப் புகழ் பெற்ற ‘The Death of Death in The Death of Christ’ என்ற ஆங்கில நூலின் தமிழாக்கமே இப்புத்தகம். ஜிம் பெக்கர் (J.I. Packer) என்ற ஆங்கில இறையியலாளர். ஆங்கிலத்திலே இப் புத்தகத்திற்கு 25 பக்கங்கள் கொண்ட ஓர் அருமையான முன்னுரையை எழுதியுள்ளார். இதன் தமிழாக்கத்தைக் கூடிய விரைவில் ‘திருமறைத்தீபத்தில்’ தரவிருக்கிறோம்.

இதை எழுதத்தூண்டியது எது, எதைப்பற்றியது இந்நூல் என்று ஆரம்பத்தில் விளக்குகிற ‍ஜான் ஓவன், இதைக்குறித்து ஏழு ஆண்டுகள் தியானத்தோடு படித்த பின்பே, இதை எழுத முற்பட்டதாகக் கூறுகிறார். இந்நூல் கிறிஸ்து எல்லா மனிதரையும் பாவத்திலிருந்து விடுவிக்க மரித்தாரா? அல்லது அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட மக்களுக்காக மட்டுமே மரித்தாரா? என்ற வினாக்களுக்கு விடையளிக்கின்றது. கிறிஸ்தவர்கள் இன்று இதில் கருத்துவேறுபாடுள்ளவர்களாக இருக்கிறார்கள். சிலர் இதைக்குறித்து முடிவெடுக்க வேண்டியதே அவசியமில்லை என்று கருதுகிறார்கள். ஆனால், கர்த்தருடைய வார்த்தை தெளிவாகப் போதிக்கும் எந்த ஒரு காரியத்தையும் அப்படி சுலபமாக அலட்சியப்படுத்திவிட முடியாது.

கி. பி, 350-ல் பெலேஜியஸ் என்ற ஆங்கிலேயத் துறவி ‘கிறிஸ்துவின் மரணம் யாவருக்கும் உரியது என்ற கருத்தைக் போதித்தார்’. பின்பு கி. பி. 1560-ல் பிறந்த ஆர்மீனியஸ் என்ற டச்சு இறையியலாளரும் இதையே போதித்தார். பின்பு, திருச்சபை சீர்திருத்தக் காலத்தில் லூத்தரும், ‍ஜான் கல்வினும், ‘கடவுள் தேர்ந்தெடுத்த குறிப்பிட்ட மக்களுக்காகவே கிறிஸ்து மரித்தார்’ என்று போதித்தனர். கிறிஸ்து, எல்லோருக்காகவும் மரித்திருந்தால், அவரது வல்லமையுள்ள செயலின் அடிப்படையில் அனைவருமே பரலோகத்திற்கு நிச்சயமாக சென்றுவிட முடியும். ஆனால், எல்லோருமே பரலோகத்திற்கு சென்றுவிட முடியாதபடி, சிலரை அவர்களுடைய பாவம் தடை செய்கிறது என்றும் வேதம் போதிக்கின்றது. இப்போதனைகளை சரியாகப் புரிந்துகொள்ளாமல் எவருமே உண்மையோடும், உறுதியோடும் நற்செய்தியைப் பிரசங்கிக்க முடியாது. இதைப் புரிந்துகொள்ளத் தவறியதால்தான் இன்று அநேகர் நற்செய்தியை வேதத்திற்கே முரணான முறையில் பிரசங்கிப்பதோடு, அதைக்கேட்க வருபவர்களையும் எவ்வாறாவது கர்த்தரிடத்தில் கொண்டு வந்துவிடவேண்டுமென்ற ஆவலில் தவறான வழிமுறைகளையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, வேதத்தில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்கே அடித்தளமாக அமைந்திருக்கும் கிறிஸ்துவின் மரணத்தைக்குறித்த தெளிவான போதனைகளை நாம் புரிந்துகொள்ள உதவுமுகமாகத்தான் ‍ஜான் ஓவன் இந்நூலை எழுதினார்.

இந்நூல் நான்கு பிரிவுகளைக் கொண்டது. முதலாவது பகுதி, கடவுள் இயேசு கிறிஸ்துவை மரிப்பதற்காக அனுப்பிய நோக்கத்தையும்; இரண்டாம் பகுதி, கிறிஸ்துவின் மரணத்தின் உள்நோக்கத்தையும்; இதன் மூன்றாம் பகுதி, எல்லா மனிதரையும் மீட்க கிறிஸ்து மரிக்கவில்லை என்பதை நிரூபிக்கும் பதினாறு காரணங்களையும்; நான்காம் பகுதி, மக்கள் யாவரையும் மீட்க கிறிஸ்து மரித்தார் என்ற வாதத்திற்கு எதிரான காரணங்களையும் தருகின்றன.

சிந்தனையை அநாவசியமாக சிறகடித்துப் பறக்கவிடாது, அடுக்கடுக்காக வேத வசனங்களை மட்டும்தந்து, திருமறைக்குட்பட்டு, மீட்பின் விலைக் கிரயமான, கிறிஸ்துவின் மரணத்தின் பெருநோக்கத்தை ஓவன் தெளிவுபடுத்துகிறார். இதைக்குறித்து ஓவன் சொல்வதைக் கேளுங்கள், ‘கருத்து வேறுபாடுகளில் ஈடுபடுவதை நான் சிறிதும் விரும்புவதில்லை. ஆனால், ‘கடவுளுடைய மக்களிடம் எல்லாக் காலத்திற்குமென ஒப்படைக்கப்பட்ட கோட்பாட்டில் திரிபு ஏற்படாமல் பாதுகாக்க நீங்கள் போராட வேண்டுமென்று’ திருமறை கூறுகின்றது (யூதா 3). எனவே இந்தப்புத்தகத்தை நீங்கள் கருத்துடன் வாசிக்க வேண்டுகிறேன்’. ‘திருமறைத்தீபம்’ மூலம் வாசகர்களுக்கு இந்நூலை சிபாரிசு செய்வதில் நாம் பெருமிதமடைகிறோம்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s