இக்காலத்தில் ஐக்கியத்தைப்பற்றி பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது. திருச்சபைகள் கூடிவருவதற்குத் தடையாக இருக்கும் சுவர்களனைத்தையும் இடிக்கவேண்டும். சமயக் கிளைகளனைத்தையும் ஒன்று சேர்க்கவேண்டும் என்றும் பேசிவருகிறார்கள். ஐக்கியத்தைக்குறித்து நாம் இந்தவிதத்தில் சிந்திக்கக்கூடாது. நம்மால் விரும்பப்படுவதும் அல்லது இயலக் கூடியதுமான ஒரே ஐக்கியம். இயேசு கிறிஸ்துவின் பாதத்தினடியில் நாமனைவரும் ஒன்று கூடிவருவதுதான். சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, அதற்கு எதிரானவைகளையும் நம்மத்தியில் நாம் அனுமதித்தால் அது இயற்கைக்கே விரோதமானதாகும். அத்தோடு, அது கிறிஸ்துவுக்கு எதிரான நம்பிக்கைத் துரோகமுமாகும்.
போலித்தனமான அன்பின் பெயரில், கர்த்தருடைய சத்தியத்தில் ஓர் அணுவளவையும் விட்டுக்கொடுக்க நமக்கு அதிகாரமில்லை. சத்தியம் நமக்குச் சொந்தமான பொருளல்ல. நாம் அதன் காவலர்கள் மட்டுமே. ஆகவே, நம்மை நம்பிக் கொடுக்கப்பட்டதை நாம் விசுவாசத்தோடு பாதுகாக்க வேண்டும். எந்த ஒரு சபைக்கும் அதன் மெய்யான சாட்சியை இம்மியளவும் குறைவுபடுத்தக்கூடிய அதிகாரம் இல்லை. கிறிஸ்துவின் கட்டளைப் புத்தகத்தை மாற்ற முயல்வது தெய்வ நிந்தனைக்குரிய காரியம். அனைத்து சபைகளும் கிறிஸ்துவைப் பற்றி அறிந்துகொள்கிறபோதே, அவர்கள் மத்தியில் மெய்யான ஐக்கியம் ஏற்படுகின்றது. ஏனெனில், கிறிஸ்து ஒன்றுக்கொன்று முரணான இரு காரியங்களைப்பற்றி எப்போதுமே போதித்ததில்லை. வேதத்தில் இருவிதமான திருமுழுக்குகள் காணப்படுவதில்லை. ஒன்றுக்கொன்று முரணான இருவிதமான சமயக்கோட்பாடுகளும் காணப்படுவதில்லை. மனிதனால் ஏற்படுத்தப்படும் காரியங்களைனைத்தையும் கைவிட்டு, நாம் ஒவ்வொருவரும் கர்த்தருடையவைகளை மட்டும் உறுதியோடு கடைப்பிடித்தால்தான் கோட்பாட்டிலும், போதனைகளிலும் ஐக்கியப்படமுடியும்.
(இங்கிலாந்து நாட்டில் ‘மெட்ரபோலிட்டன் டெபர்நேக்கல்’ என்ற சபையின் போதகராக இருந்த மகா பிரசங்கியான ஸ்பர்ஜன் (1834 – 1892) ஒரு பிரசங்கத்தில் (1871 இல்) சபை ஐக்கியத்தைக்குறித்து பேசிய பகுதி. பலர், போலியான ஐக்கியத்தைத் தேடி அலையும் இன்றைய சூழ்நிலையில் இவ்வாலோசனை நிச்சயம் அவசியம்)