அருளுரைக்கு ஏன் இன்று ஆபத்து

பாரம்பரியமாகவும், வேத அடிப்படையிலும் காலங்காலமாக சபைகளில் இரட்சிப்பின் வழிகளை எடுத்துரைக்கவும், கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்குள் வளம்பெறத் தேவையான போதனைகளை அளிக்கவும் பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் அருஞ்சாதனமான அருளுரைக்கு இன்று பலவிதத்தில் ஆபத்து ஏற்பட்டுள்ளதை சபை சீர்திருத்தத்திலும் அருளுரையிலும் நம்பிக்கை வைத்துள்ளவர்கள் நிச்சயம் மறுக்க மாட்டார்கள். அருளுரை என்ற பெயரில் கதைகளையும், கேட்பவர்கள் உணர்ச்சி வசப்படும் விதத்தில் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி, இடையிடையே பாடல்களும் நூழைந்துவரும் ஒரு கலவையைக் கேட்டு செவிமடல்கள் புளித்துப் போய் நிற்கிறார்கள் இன்றைய தமிழ்க் கிறிஸ்தவர்கள். இது போதாதென்று பரவசக்குழுக்களைச் சார்ந்த பிரசங்கிகள் திருமறையைத் தூக்கி எறிந்துவிட்டு தம் மனதுக்குத் தோன்றும் எதையும் சொல்லிக் கேட்பவர்களின் உணர்ச்சியைத் தூண்டி அவர்களை நர்த்தனமாடச் செய்து வருகிறார்கள். இது ஒரு பத்தாம் பசலிப் பாரம்பரியம் என்று அருளுரையையே ஒதுக்கிவிட்டு வேறு சாதனங்களுக்காக அலையும் பேர்வழிகளும் சபைகளும்கூட உண்டு.

இத்தகைய நிலைமைக்குக் காரணம் என்ன? அருளுரை தரங்குன்றி, ஆண்டவரின் செய்தியைக் கேட்க வழியில்லாமல் நம் மக்கள் வாழும் நிலைக்கு விமோசனம்தான் உண்டா? திருமறை இதற்குத் தகுந்த பதில்களைத் தருகின்றது. எக்காரணங்கள் பழைய ஏற்பாட்டுக் காலத்தின் சில பகுதிகளிலும் அதன்பின்பு வரலாற்றில் சில நூற்றாண்டுகளிலும் அருளுரையைத் தரங்குன்றச் செய்தனவோ அதே காரணிகள்தாம் இன்றும் நம்மத்தியில் அதனைத் தரங்குன்றச் செய்துள்ளன. இதை வாசிக்கும் போதகர்களும், கிறிஸ்தவ வாசகர்களும் பின்வரும் காரணங்களை ஜெபத்தோடு சிந்தித்து ஆராயுமாறு வேண்டுகிறேன். ஜோர்ஜ் விட்பீல்ட், மெக்சேயின், எட்வர்ட்ஸ் பெக்ஸ்டர், ஸ்பர்ஜன் போன்றவர்கள் தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் தோன்றி சண்டமாருதப் பிரசங்கம் செய்யும் நாளுக்காக ஜெபிப்போமாக!

அருளுரையாளனின் வாழ்க்கை

சாதாரண வேலைக்கு ஆள் எடுப்பவர்கள் கூட அவ்வேலைக்குத் தேவையான தகுதிகள் ஒருவரிடம் இருக்கிறதா என்று பார்க்கத் தவறுவதில்லை. ஆனால் போதக ஊழியத்திற்குத் தேர்ந்தெடுக்கப் படுபவர்களிடத்தில் இன்று ஆவிக்குரிய தகுதிகள் இருக்கின்றனவா என்று ஆராய்ந்து பார்க்கப்படுவதில்லை. அவரால் பேச முடியுமா, பாட முடியுமா என்று தான் ஆராய்கிறார்களே தவிர அவரது வாழ்வில் இயேசு மகிமைப்படுத்தப்படுகிறாரா? சபை மக்கள் மத்தியில் அவருக்கு சிறந்த கிறிஸ்தவன் என்ற மதிப்பும், மரியாதையும் இருக்கின்றதா? என்றெல்லாம் ஆராய்வதில்லை. “ஒரு போதகனுடைய வாழ்க்கையே அவனது ஊழியத்தின் வாழ்க்கையாக அமையும்” என்று ஒருவர் சரியாகவே கூறியிருக்கிறார் சிறப்பான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்ந்து சபையார் மத்தியில் மதிப்புப் பெறாதவர்கள் பிரசங்க ஊழியத்திற்குத் தகுதியுள்ளவர்களல்ல.

தீமோத்தேயு, தீத்து புத்தகங்கள் அருளுரையாளனுக்கு இருக்க வேண்டிய தகுதிகளைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. 1 தீமோத்தேயு 4:16 இல் பவுல், “உன்னைக்குறித்து. . . எச்சரிக்கையாயிரு” என்று வலியுறுத்திக் கூறவதைப் பார்க்கிறோம். தனது ஆவிக்குரிய வாழ்க்கையில் கவனம் செலுத்தி, அது மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கும்படியாக பார்த்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு அருளுரையாளனதும் முக்கிய கடமையாகும். “விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையுமாய் நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி” என்று பவுல் தெசலோனிக்கேயருக்கு நினைவூட்டுகிறார்.

கர்த்தரோடு இடைவிடாத ஐக்கியம், திருமறையில் தெளிந்த ஞானம், பரிசுத்தமான வாழ்க்கை, ஜெபத்தில் உறுதி, ஊழியம் பற்றிய உயர்ந்த சுயநலமற்ற நோக்கம் என்பவையே ஒரு போதகனின் பிரசங்க ஊழியத்தை மேன்மையடையச் செய்யும் சாதனங்கள். அவருக்குப் பாட முடியுமா? அல்லது எவ்வளவு பெரிய மனிதனாக இருக்கிறார் என்பதல்ல முக்கியம். மேலை நாட்டிலும் சரி, தமிழர்கள் மத்தியிலும் சரி இன்று அருளுரை அலட்சியப்படுத்தப்படுவதற்கு அதில் ஈடுபட்டுள்ளவர்களின் தகுதிக்குறைவே காரணமென்பதில் எந்தளவும் சந்தேகமிருக்க முடியாது. போதக ஊழியம் தனக்கு பெருமை சேர்க்கும் என்று அதில் ஈடுபடுபவர்கள் தான் எத்தனை பேர்! பணம் சேர்க்க நல்லவழி என்று நெஞ்சிலீரமில்லாமல் அதில் நுழையப்பார்க்கிறவர்கள்தான் எத்தனை பேர்! போதக ஊழியத்தில் தன்னைக்குறித்து எச்சரிக்கையாக இல்லாமல் உள்ளத்தையும், உடலையும் தூய்மையாக வைத்திராமல் மனந்தடுமாறிப் பெண்களின் தொடர்பால் பெயர் கெட்டுப் போனவர்கள்தான் எத்தனை பேர்! சினிமா நடிகர்களைப் போல அருளுரையாளர்கள் உள்ளொன்றுவைத்துப் புறமொன்றுபேசி வாழ்க்கை நடத்த முடியாது. இவ்வூழியத்திற்குத் தம்மைத் தயார் செய்துகொண்டிருக்கும் இளம் வாலிபர்களும், ஏற்கனவே போதகர்களாக இருக்கும் இளைஞர்களும் இன்று இவற்றைக் கருத்தோடு சிந்தித்துப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

அருளுரைக்கு இன்று ஏற்பட்டுள்ள பேராபத்திற்கு இன்றைய அருளுரையாளர்களில் பலரும் காரணமாகவிருப்பதை நம்மால் நிச்சயமாக மறுக்க முடியாது.

அருளுரையின் தரம்

கிறிஸ்தவ அன்பர் ஒருவர் ஒருமுறை என்னிடம், “உங்களால் கதை சொல்லாமல், கண்ணீர் விடாமல், பாட்டுப் பாடாமல் ஒரு மணி நேரம் வேதத்தை மட்டும் வைத்து எப்படிப் பேச முடிகின்றது” என்று கேட்டார். அவரது கேள்வியே அவருக்குப் பரிச்சயமான அருளுரை எப்படி இருந்திருக்கும் என்பதைத் தெளிவாக விளக்கியது. இன்று இதைத்தான் அநேகர் அருளுரை என்ற பெயரில் வாராவாரம் கேட்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்நிலை மாறாதா என்று ஏங்கும் நெஞ்சங்களும் இல்லாமலில்லை.

இன்று அருளுரையின் தரங்குன்றியிருப்பதற்கு நாம் பல காரணிகளைச் சுட்டிக் காட்டலாம்.

வேதபூர்வமான அருளுரை

அருளுரை என்ற பெயரில் வழங்கப்படும் செய்திகளில் இன்று திருமறை குறைவாகக் காணப்படுகின்றது. வேதத்தில் இருந்து ஒரு வசனத்தை எடுத்துப் பேச முயற்சிக்கிறார்களே தவிர அவ்வசனத்தை அது அப்பகுதியில் எப்படிப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது? அதைக்குறித்து முழு வேதமும் என்ன சொல்கிறது? பேசுமுன் அவ்வசனத்தை சரிவரப் புரிந்து கொண்டிருக்கிறோமா? என்றெல்லாம் சிந்தித்துப் பார்க்கும் பிரசங்கிகள் மிகக் குறைவு. ஆரம்ப முதல் இறுதி வரை வேதம்தான் போதிக்கப்படுகின்றது என்ற உணர்வு கேட்பவர்களுக்கு ஏற்பட வேண்டும். ஓர் அருளுரை எவ்வளவுதான் அழகாக, காதைக்குளிர வைப்பதாக இருந்தாலும் அது தொடக்கமுதல் முடிவுவரை வேதபூர்வமானதாக இல்லாவிட்டால் அது அருளுரையாகவே அமையாது. இன்றைய பிரசங்கிகள் வேதத்தை முறையாகப் படிப்பது குறைவு. அதில் கவனம் செலுத்தாது ஊழியம் என்ற பெயரில் ஊர்க்காரியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் கர்த்தர் தம் மக்களை ஆசீர்வதிப்பது எப்படி? தனது சிந்தையை திருமறையால் நிரப்ப மறுக்கும் அருளுரையாளன் பரிசுத்த ஆவியின் துணையை எவ்வாறு நாட முடியும்?

அருளுரையாளர் ஒருவர் என்னிடம், நீங்கள் பிரசங்கத்தை எவ்வாறு தயார் செய்வது வழக்கம் என்று ஒருமுறை கேட்டார். நான் அதே கேள்வியை அவரையே திருப்பிக் கேட்டேன். தான் பிரசங்கிக்குமுன் ஒவ்வொருமுறையும் உபவாசமெடுத்து அதன்பின் பேசுவது வழக்கம் என்று பதிலளித்தார். இவ்வன்பர் வேதத்தை முறையாகப் படிக்காமல் அதில் நேரம் செலவிடாமல் தனது அருளுரைக்கு ‘உபவாசத்தை’ மட்டுமே நம்பி வந்தார். இப்படி அற்புதமாக, நேரடியாக, எந்தவிதத்திலும் உடல் நோகாமல் விண்ணிலிருந்து ‘அருளுரை’யைப் பெற்றுக் கொள்ள முயலும் போதக அன்பர்கள் இன்று சபைகளை அலங்கரித்து வருகிறார்கள்.

அருளுரை, அருளுரையாக அமைய முதலில் அது திருமறையால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஜெபமும், உபவாசமும்கூட அவசியம்தான். ஆனால் வாராவாராம் வேதத்தைப் படிக்காமல், அதை ஆராயாமல், அதை மட்டுமே போதிக்க வேண்டும் என்ற உணர்வில்லாமல் வெறுமனே ஜெபத்தையோ, உபவாசத்தையோ மட்டும் நாடி நிற்பது திருமறை போதிக்கும் பிரசங்க ஊழியமல்ல.

இறையியல்பூர்மான அருளுரை

கோட்பாடுகளின் அவசியத்தை திருச்சபை குறித்த கட்டுரையில் இவ்விதழில் வலியுறுத்தியுள்ளோம். இன்று கோட்பாடுகளுக்கும் திருமறைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போல் கிறிஸ்தவர்கள் நடந்து கொள்கிறார்கள். இதற்குக் காரணமே சபைகள் அவற்றை நிராகரித்துவிட்டதுதான். சுருங்கக் கூறினால் கோட்பாடுகளை வெறுப்பவர்கள் திருமறையை வெறுக்கிறார்கள். திருமறை முழுவதும் கோட்பாடுகள் பரவி நிற்கின்றன. கடவுள் யார்? இரட்சிப்பு என்றால் என்ன? ஆவியானவர் யார்? அவர் எவ்வாறு செயல்படுகிறார்? திருச்சபை யாது? என்பது போன்ற வினாக்களுக்கெல்லாம் விடை தெரிய வேண்டுமானால் இறையியலும் கோட்பாடுகளும் அறிந்திருப்பது அவசியம். இவற்றையும், நமது மூதாதையர்கள் விளக்கமாக எழுதிவைத்துள்ள விசுவாச அறிக்கைகளையும் புறக்கணித்துவிட்டு நாமே விடைகளைத் தேடிக் கொள்ளலாம் என்று மார்தட்டுவது இறுமாப்பைத் தவிர வேறில்லை. தாழ்மையுணர்வுடைய எந்தப் பிரசங்கியும் தான் தன் மக்களுக்கு திருமறையைத் தவிர வேறெதையும் போதிக்கக்கூடாது என்ற தேவபயத்துடன் இவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி தனது கிறிஸ்தவ வாழ்விலும், ஊழியத்திலும் வளம் பெற முயற்சி செய்வான்.

அதுமட்டுமல்லாது கோட்பாடற்ற அருளுரை அருளுரையே அல்ல. ஏனெனில் அது சதையற்ற எலும்புக்கூட்டிற்கு சமமானதாகும். அருளுரையைத் திருமறைபூர்வமான கோட்பாடு அலங்கரிக்கின்றபோது பேசப்படுகின்ற பொருள் தரமானதாகவும், சத்தியமானதாகவும் அமைகின்றது. அதேவேளை நமது கோட்பாடுகளும், இறையியலும் திருமறையின் அடிப்படையில், திருமறையில் இருந்து மட்டுமே பெறப்பட்டதாக இருக்க வேண்டும். இவ்விதமாக அமைந்த 1689 விசுவாச அறிக்கையைப் படித்து அதில் தெளிவு பெறுவது, திருமறையில் முறையான இறையியல் அறிவு பெற உதவும்.

நடைமுறைக்குதவும் அருளுரை

அருளுரை நடைமுறைக்குப் பயன்படுவதாக அமைய வேண்டும் அதாவது நாம் திருமறையிலிருந்து எடுத்து விளக்கும் சத்தியங்கள் எந்தவகையில் நடைமுறைக்கு அவசியம், அதைக்கேட்பவர்கள் அதைக் குறித்துத் தங்கள் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்று ஆணித்தரமாக எடுத்துரைப்பதாக இருக்க வேண்டும். இன்று பல பிரசங்கிகள் கேட்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதில் துடியாய் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் செய்யச்சொல்லும் காரியங்களை வேதத்தின் மூலம் நிரூபிப்பதில்லை. இதற்கு மாறாக திருமறையைக் கோட்பாடுகளுடன் திறம்படப் போதிப்பவர்கள் அது நடைமுறைக்குப் பயனுள்ளதாக அமையும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக இரட்சிப்பைக் குறித்து வேதபூர்வமாக விவரித்துவிட்டு கேட்பவர்கள் அதைக்குறித்து என்ன செய்ய வேண்டும் என்று கூறாமல் விட்டுவிட்டால் அந்தப் பிரசங்கத்தால் எந்தப்பயனுமில்லை. பரிசுத்த வாழ்க்கையின் அவசியத்தைப் பற்றி எடுத்துரைத்துவிட்டு அத்தகைய வாழ்க்கையை வாழ என்ன செய்ய வேண்டும் என்று எடுத்துரைக்காவிட்டால் அது அருளுரையாகாது. பவுல் அப்போஸ்தலன் கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில், நமது பிதாக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்று விளக்கி அவர்களில் பலர் தேவனிடத்தில் பிரியமாயிராததால் அழிக்கப்பட்டார்கள் என்று கூறி அத்தோடு நிறுத்திவிடாமல் “அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு இவைகள் நமக்கும் திருஷ்டாந்தங்களாயிருக்கின்றது” என்று கூறுவதைப் பார்க்கிறோம் (1 கொரி. 10:1-6). இங்கே பவுல் வரலாற்று உண்மைகளை மட்டும் விவரிக்காது அவ்வுண்மைகளின் மூலம் நாம் படிக்க வேண்டிய பாடம் என்ன, அவற்றை நினைவுகூரி செய்ய வேண்டிய காரியங்கள் என்ன என்றும் போதிக்கிறார். வேதபூர்வமான அருளுரைகள் இவ்வாறே அமைய வேண்டும். சத்தியத்தை விளக்குவதோடு அச்சத்தியங்கள் கேட்போர் இருதயத்தைப் பிளந்து அதைக்குறித்து அவர்கள் நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதாக அமைய வேண்டும்.

அருளுரை என்ற பெயரில் இன்று சபைகளையும் மேடைகளையும் அலங்கரித்து வரும் அநேக வார்த்தை ஜாலங்கள் திருமறையின் அடிப்படையில் அமையாததோடு நடைமுறைக்கு உதவாததாகவும் உள்ளன. மேற்குறிப்பிட்ட அடையாளங்களைக் கொண்ட அருளுரையாளர்களும், அருளுரையும் திருச்சபைகளில் அன்றாடம் திருமறையை மகிமைப்படுத்தும் நாளுக்காக நாம் கர்த்தரிடம் மன்றாடுவது அவசியம். திருமறைபூர்வமான திருச்சபை வளர்ச்சியிலும், வளத்திலும் ஆர்வமுள்ளவர்கள் இவற்றைத் தவிர வேறெதையும் தம் வாழ்விலும், சபையிலும் அனுமதிக்கமாட்டார்கள்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s