அருளுரை – ஒரு விளக்கம் –

அருளுரை பிரசங்கம் எனவும் அழைக்கப்படும். பிரசங்கம் என்பது உலகம் தோன்றிய நாள்முதல் மனிதர்களின் வழக்கில் இருக்கும் ஓர் செய்தித் தொடர்புச் சாதனம். உலகம் பெரும் பிரசங்கிகளைச் சந்தித்துள்ளது. இதில் நல்லவர்களும் கூடாதவர்களும் அடங்குவர். நல்ல நோக்கத்திற்காகவும், தீய நோக்கத்திற்காகவும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாம் வித்தியாசமான ஒரு பிரசங்கத்தை இங்கே கவனிக்கிறோம். சாதாரணமாக உலக வழக்கிலிருக்கும் பிரசங்கத்தையல்ல, கர்த்தரால் பயன்படுத்தப்படும் ஓர் அற்புத சாதனத்தை, அருளுரையைக் குறித்து சிந்திக்கிறோம்.

மக்கள் மத்தியில் வழக்கிலிருக்கும் பிரசங்கத்திற்கும் அருளுரைக்கும் அப்படி என்ன வித்தியாசம்? இவ்வித்தியாசம் அச்சாதனத்தில் தங்கியிராமல் அதைப் பயன்படுத்தும் கர்த்தரிலேயே தங்கியுள்ளது. சாதாரணமான பிரசங்க வல்லமையைப் பயன்படுத்தி பல பொய்களைக்கூறி மக்களை ஏமாற்றி ‘கொயபல்ஸ்’ ஹிட்லருக்குப் பெரும் வெற்றிகள் ஈட்டித்தந்தான். பாவமுள்ள மனிதனால் பயன்படுத்தப்படும்போது பிரசங்கம் பெருமையற்று நிற்கிறது. ஆனால் இதையே கர்த்தர் பயன்படுத்தும்போது அதற்கும் அதைப் பயன்படுத்துபவருக்கும் பெருமை தேடி வருகிறது.

பிரசங்கத்திற்கு வேதத்தில் ‘அதிகாரபூர்வமாக எடுத்துச் சொல்லுதல்’ என்று பொருள். அவ்வதிகாரம் பேசுபவரிடத்தில் இல்லாமல் கர்த்தரிடத்தில் இருந்து வருவதாகவும், பேசப்படும் வார்த்தையிலும் உள்ளது. தனது வார்த்தையை அதிகாரபூர்வமாகப் பயன்படுத்துவதற்கு கர்த்தர் பிரசங்கத்தையே தெரிந்தெடுத்துள்ளார் (ரோமர் 10). அவரது வார்த்தையை எடுத்துச்சொல்ல பிற சாதனங்களையும் நாம் பயன்படுத்த முடிந்தாலும் (கலந்துரையாடல், போதித்தல்) இதையே பிரதானமானதாக கர்த்தருடைய வார்த்தை கருதுகின்றது. போதகர்கள் திருமறையில் அதிக கவனம் செலுத்திக் கருத்துடன் வாசித்து அருளுரை செய்வதையே கர்த்தர் விரும்புகிறார். அவர்கள் தமது ஊழியக்கால முழுவதையும் இதற்கே அர்ப்பணிக்க வேண்டுமென்பது அவரது விருப்பம். ஏனெனில் அவ் ஊழியத்தின் மூலம் கிறிஸ்தவ வாழ்வில் அவரது குழந்தைகள் வளம்பெற இடையறாது தொடர்ந்து பிரசங்கத்தை அவர்கள் கேட்க வேண்டியது அவசியம். அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நடைமுறைக் கலாச்சாரத்திற்கு ஏற்புடையதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதன் மூலமே கர்த்தர் தன் சபையைக் கட்டியெழுப்புகிறார்.

இன்று பிரசங்க ஊழியத்தில் பலர் நம்பிக்கையிழந்து காணப்படுகிறார்கள். அதற்குக் கொடுக்க வேண்டிய நேரத்தைக் கொடுக்காமல் வேறுகாரியங்களில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். சபை மக்களை நாடிச்சென்று அவர்கள் நலன்களைக் கவனிப்பது, தேவையானபோது முறையான அறிவுரைகளை வழங்குவது போன்றவை அவசியமே எனினும் பிரசங்க ஊழியமே இவற்றிற்கெல்லாம் ஆதாரமாகவும், முதன்மையானதாகவும் அமைய வேண்டுமென்பது திருமறையின் எதிர்பார்ப்பு. பிரசங்கத்தால் செய்ய முடியாத தொன்றை வேறு வழிகளில் செய்ய முயல்வது கர்த்தருடைய வழிகள் சரியல்ல என்று கூறுவதற்கு ஒப்பானது. சபை மக்களின் நலன்களைக் கவனிக்க அவசியமான ஏனைய வழிகளின் பயன்களனைத்தும் அம்மக்கள் இடையறாது பெறும் முறையான, விசுவாசமுள்ள பிரசங்கத்திலேயே தங்கியுள்ளது. கிறிஸ்து தன் வாழ்நாள் முழுதும் பிரசங்கத்தில் அதிக கவனம் செலுத்தினார். இதையே அப்போஸ்தலர்களும் தொடர்ந்து கடைப்பிடித்தனர் இன்று பல சபைகளில் பரிசுத்த ஆவியின் உண்மையான வல்லமையில்லாது காணப்படுவதற்கு அங்கெல்லாம் வல்லமையுள்ள, திருமறையின் அடிப்படையில் அமைந்த அருளுரையில்லாததே காரணம்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s