“சுய வெறுப்பு” Self-denial
சுயவெறுப்பு ஆவிக்குரிய வாழ்க்கையின் மற்றொரு அறிகுறியாகும், தேவ மகிமைக்குப் பயன்படாத யாவற்றையும் மனப்பூர்வமாகத் துறப்பது சுய வெறுப்பாகும். இன்பத்தை விரும்புவதும், துன்பத்தை வெறுப்பதும் மனித இயற்கை. தன்னை நேசிப்பதற்கும் தன்னலம் பாராட்டுதலுக்கும் வித்தியாசமுண்டு. தன்னை நேசிப்பது பாவமன்று; மிதமிஞ்சித் தன்னை நேசிப்பதே பாவமாகும்.
சுய வெறுப்பும் தன்னலமும் ஒன்றுக்கொன்று எதிரானவை. ஒருவன் தன் வாழ்க்கையை மட்டுமே முக்கியமானதாகக் கருதினால் அது தன்னலம். ஒருவன் தனக்கு ஏற்றதாக மிகவும் சிறப்பானதைப் பற்றிக் கொள்ள வேண்டும். மிகச் சிறந்ததாக ஒன்று மட்டுமே இருக்கக் கூடும். ஆன்மாவானது, ஒன்று தன்னைப் பற்றிக் கொள்ளும் அல்லது கடவுளைச் சார்ந்திருக்கும். தன்னை விட மிக மேலானதை ஒருவன் நாடும்பொழுது, அவன் கடவுளைக் கண்டடைகிறான். கடவுளை விட்டுப் புறம்பே நோக்கும் பொழுது அவன் தன்னையே நோக்குவான். கடவுளைப் பற்றிக் கொள்ளாத அன்பு தன்னலமுள்ளது. இயேசு கிறிஸ்துவைத் தேடாத மனிதர் தங்கள் சொந்தக் காரியத்தையே நாடுகிறார்கள். தன்னலமுள்ள அன்பே அவர்கள் இருதயத்தின் நாட்டமாயிருக்கிறது. அதுவே அவர்களை இயக்குகிறது. அவர்கள் தங்களை மிதமாக நேசியாமல் தீவிரமாக நேசிக்கிறார்கள். தங்கள் நலனை மாத்திரம் தங்கள் வாழ்க்கையின் இலக்காகக் கருதுகிறார்கள்.
அவர்களது எண்ணம் கிறிஸ்தவ சுய வெறுப்பிற்கு மாறானது. தன்னலங்கருதாமல் பிறரை நேசிப்பது கிறிஸ்தவத்தின் சுயநலமற்ற அன்பு. ஒருவன் தன்னை வெறுத்தால் அவன் தேவ காரியத்தில் ஆர்வம் கொள்ளக்கூடும். அப்படிப்பட்டவன் தன் மகிமையைத் தேடாமல் கடவுளுடைய மகிமையைத் தேடுவான். முன்பு அவன் கடவுளை மறுதலித்தான். இப்பொழுதோ தன்னை மறுதலித்து, கடவுளுக்கு எக்கடமையையுஞ் செய்ய விருப்பமும் ஆயத்தமுள்ளவனுமாயிருப்பான். கடவுளுக்கு விரோதமான எப்பாவத்தையும் வெறுத்து விடுவான். கிறிஸ்துவின் மேன்மைக்காக மகிழ்ச்சியுடன் எத்தியாகமும் செய்வான். கடவுள் முன் தான் அற்பத்தூசியென்று உணருவான். கடவுள் அவனை உயர்த்தினாலும் தாழ்த்தினாலும் அவன் மகிழ்ச்சியுடன் இருப்பான். தன் முன்னேற்றத்தைப்பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், கிறிஸ்து மகிமைப்படுவதில் அக்கறை காட்டுவான்.
இதுவே தன்னை வெறுப்பதாகும். கடவுளுக்கு மகிமையைத் தராதது எதையும் துறந்துவிட வேண்டும். வேதத்தில் தங்களை வெறுத்தவர்கள் பலர் உண்டு. ஆபிரகாம் தனக்கு வாக்களித்துத் தரப்பட்ட மகனைப் பலியிட ஆயத்தமாயிருந்தான். கடவுளுக்காக மூவர் நெருப்புச் சூளையில் உயிர் துறக்கத் துணிந்து, வெற்றி வாகை சூடினார்கள். அப்போஸ்தலர்களும், இரத்தச் சாட்சிகளும் தங்கள் உயிரையும் வாழ்க்கையையும் துச்சமாக மதித்தார்கள்; பிறர் ஏளனத்தைக் கூசாது பொறுக்கும் சுய வெறுப்புற்றவர்களாயிருந்தார்கள். சத்துருக்கள் தங்களை அடித்துச் சிறைப்படுத்தினாலும் அச்சமின்றி இருந்தனர். தங்களைத் தீயில் எரித்தபொழுது வெற்றி முரசு கொட்டினார்கள். பட்டயத்தைப் பார்த்துப் புன்முறுவல் கொண்டார்கள். நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தியாகம் உச்ச நிலையிலுள்ளது. அவர் வானலோகத்தின் மகிமையைத் துறந்து அடிமையாகிச் சிலுவையில் சாகத் துணிந்தார். அவர் தம் விருப்பத்தின்படி வாழாமல், தன் சொந்த மகிமையைத் தேடாமல் தம்மை அனுப்பின பிதாவின் மகிமைக்காக உழைத்தார். “அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே” (2 கொரி. 8:9).
இயேசு தம் சாவை எதிர் நோக்கியிருந்தார். அவர் மனிதனாக வாழ்ந்ததினால், சாவிலிருந்து விடுபட விரும்பியது இயற்கையே. தம் எதிரிகள் தம்மை மிகவும் பகைத்ததினால் கொடிய பாடுபட நேரிடும் என்று அறிந்திருந்தார். ஆனால் அந்த இன்னல்களிலிருந்து பின் வாங்கவில்லை. எருசலேமை நோக்கி வீரத்துடன் நடந்தார். தம் பாடுகளை சீடர்களிடம் முன் அறிவித்தார். கெத்செமனேயில் தம் பாடுகளை நினைத்து அங்கலாய்த்தார். பிதாவின் மேன்மைக்காகத் தம்மை முற்றிலும் வெறுத்தார். அவர் இருதயம் நொறுங்குண்டவராக ஜெபித்ததாவது: “நான் தண்ணீரைப்போல ஊற்றப்படுகிறேன்; என்னுடைய எலும்புகள் எல்லாம் கட்டுவிடுகிறது. என் இருதயம் மெழுகு போலாகி என் குடல்களின் நடுவே உருகிப் போயிற்று. என் வேர்வை இரத்தமாக மாறிற்று; என் அப்பா, ஏன் உமது திருமுகத்தை மறைத்து என்னைக் காரிருளில் விட்டுவிடுகிறீர்? இவ்வுலகத்தின் பாவங்களைச் சுமந்து நான் பாதாளத்திற்குச் செல்கிறேன். அப்பா, உமக்குச் சித்தமானால் இந்த ஆபத்து நீங்கட்டும். என்னைக் காப்பாற்றும் என்று நான் கேட்பேனா? இப்பணியைச் செய்யத்தான் நான் இவ்வுலகத்திற்கு வந்தேன். பிதாவே உமது நாமத்தை மகிமைப்படுத்தும்” என்பதே. சுய வெறுப்புக்கு இதைவிடச் சிறந்த எடுத்துக் காட்டு வேறொன்றுமில்லை. (இப்பகுதி கார்டினர் ஸ்ப்ரிங்ஸ்ஸின் ஆங்கில மூலத்தைத் தழுவி ஈ. ஜே. ஆப்பில்பி தமிழில் எழுதிய ‘கிறிஸ்தவன் யார்?’ என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது. இந்நூல் பற்றிய விமர்சனத்தை முன்னைய இதழில் தந்துள்ளோம்.)