கடந்த இதழில் வேதம் திருச்சபையைக் குறித்து என்ன சொல்கிறது என்றும், திருச்சபை அங்கத்துவதின் அவசியத்தைக் குறித்தும் பார்த்தோம். இவ்விதழில் கர்த்தர் கட்டியெழுப்பும் அத்திருச்சபையின் ஊழியத்தைப்பற்றி ஆராய்வோம்.
எங்கும் ஊழியம் மயம்
கர்த்தர் இவ்வுலகில் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் திருச்சபையை, இன்று என்றுமே இல்லாத அளவிற்குப் பேராபத்து சூழ்ந்துள்ளது. இந்தப் பேராபத்து திருச்சபையை தீவிரத்தோடு அழித்தொழிப்பதாக இல்லாமல், அதை ஒரு பொருட்டாகக் கருதாமல், அலட்சியப்படுத்துவதாக அமைந்துள்ளது. திருச்சபைக்கும், அதுபற்றித் திருமறை தரும் போதனைகளுக்கும் இன்று எங்கும் மதிப்பில்லை. திருமறையை அலட்சியம் செய்து, திருச்சபை என்ற பெயரில் கேலிக்கூத்துகள் நடத்துபவர்களும், திருச்சபையே தேவையில்லை என்று ஆணவத்தோடு அலைபவர்களுமே இன்று அவனியிலே பவனி வருகிறார்கள். திருமறை தெளிவோடு போதிக்கும், கர்த்தரின் அன்புக்குப் பாத்திரமான திருச்சபையைப் பற்றிய திருமறையின் போதனையை இத்தொடர் கட்டுரை அலசுகிறது. – ஆசிரியர்.
திருச்சபை ஊழியம் மகிமையுள்ளது. அதன் மேன்மையைக்குறித்துப் பேசும்போது வேதம், ‘சமாதானத்தைக் கூறி நற்காரியங்களை அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே’ (ரோமர் 10:15) என்று கூறுவதைப் பாக்கிறோம். அத்தகைய மேன்மை வாய்ந்த ஊழியத்தின் மூலம் கர்த்தர் தன் சபையைக் கட்டியெழுப்புகிறார். திருச்சபை வளர்ச்சிக்கு தேவபயமுள்ள ஊழியக்காரர்கள் இன்று தேவையாக உள்ளனர். அதேவேளை திருமறைக்கு ஒவ்வாத ஒருவித ‘ஊழியப்பிரேமை’ பலரைப் பிடித்தாட்டி வைப்பதையும் நாம கண்கூடாகக் காண்கிறோம்.
கிறிஸ்தவ ஸ்தாபனங்களும். ஊழியமும்
இன்று ‘ஊழியம்’ தேவனுடைய வார்த்தைக்குப் புறம்பானவிதத்தில் நடைமுறையில் எங்கும் காணப்படுகின்றது. ‘ஊழியத்தை’ தேவ பயத்தோடு திருமறையின் அடிப்படையில் புரிந்துக்கொள்ளாமல் சுய மகிமைக்காகப் பலரும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். முழு நேர ஊழியத்தை, மற்றவர்கள் மத்தியில் தங்களுக்குப் ‘பிரஸ்டீஜ்’ அளிக்கும் தொழிலாகப் பலரும் கருதுவதை இன்று நாம் நடைமுறையில் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. வேதம் ஊழியத்தைப்பற்றி என்ன சொல்கிறது என்றெல்லாம் சிந்திக்காமல் தாம் நினைத்தபடி மனம் போன போக்கில் ‘ஊழியத்தில்’ ஈடுபடுபவர்கள் பரந்து காணப்படுகிறார்கள். ஊழியம் செய்வது என்பது, புடவைக் கடையில் வேலை வாங்குவதைவிட இன்று இலகுவான காரியமாக இருக்கின்றது.
ஊழியத்தை தரக்குறைவான நிலைக்குக் கொண்டு வந்ததில் கிறிஸ்தவ ஸ்தாபனங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. கிறிஸ்தவ வாழ்க்கையில் முதிர்ச்சி பெற்றுள்ளானா?என்றெல்லாம் ஆராயாமல் எதைச் செய்தாவது ஒருவன் ஊழியத்தில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தை எல்லோருடைய இதயத்திலும் இவர்கள் ஏற்படுத்துகிறார்கள். இக்கிறிஸ்தவ ஸ்தாபனங்களின் கைங்கரியத்தினால் வெளியில் உடல் வருத்தி வேலை செய்ய மனமில்லாதவர்களுக்கும், கிறிஸ்தவ வாழ்வில் அரிச்சுவடிகூட தேறாதவர்களுக்கும், ஊழியத்தையே தங்கள் வாழ்வில் நினைத்தும் பார்க்கத்தகுதியில்லாதவர்களுக்கும் ‘ஊழியம்’ இன்று சோறுபோடுகிறது.
இன்று சிரிப்புக்கிடமான நிலையில் கர்த்தருடைய திருச்சபை ஊழியம் காணப்படுவதற்கு, இவர்கள் வேதம் ஊழியத்தைப்பற்றி என்ன சொல்கிறது என்று ஆராயமறுத்ததும், சுயநலமுமே காரணமாகும். கிறிஸ்தவர்கள் ஊழியத்திற்கு தங்கள் பிள்ளைகளை அர்ப்பணிக்கும் அதிசயமும், எந்தவொரு திருச்சபைக்குக் கட்டுப்படாமலும், அவற்றோடு தொடர்பில்லாமலும் பலர் கர்த்தருக்கு ஊழியம் செய்கிற அவலமும் இன்று வியாதியைப்போல் எங்கும் பரவியுள்ளது. வேதத்தைத் தெளிவாகப் படிக்கின்ற போது, திருச்சபை சம்பந்தமான எந்தவொரு ஊழியமும் சபையில் தோன்றி, சபையால் அங்கீகரிக்கப்பட்டு, சபை வளர்ச்சிக்காகப் பயன்பட வேண்டும் என்று பார்க்கிறோம். இன்று திருச்சபையையே தம் வாழ்வில் கண்ணால் கூடக்காணாமல் எங்கோவொரு வேதாகமக் கல்லூரியில் ஏதோவொரு பட்டத்தைப்பெற்றுக் கொண்டு வேடன் மானைத் தேடித்திரிவதுபோல் ஊழியத்தைத் தேடி அலையும் பேர்வழிகள்தான் எத்தனைபேர். கர்த்தரை அறிந்து கொண்டு சபை வாழ்க்கைக்குத் தம்மை ஒப்புக்கொடுத்து, மூப்பர்களின்கீழ் வளராமல் வெறுமனே வேதாகமக் கல்லூரியொன்றில் பட்டம் பெற்று விடுவதால் ஒருவன் போதகனாகிவிட முடியாது. சபையில் வளராத ஒருவன் சபை நடத்தமுற்படுவது, மோட்டார் வாகனம் செய்வதெப்படி என்று புத்தகத்தில் மட்டும் படித்த ஒருவன் அதைச் செய்ய முற்படுவது போலாகும். ஏனெனில், ‘பள்ளிக் கணக்கு எப்படி புள்ளிக்குதவாதோ’ அதேபோல் வெறும் வேதாகமக் கல்லூரிப் படிப்பு மட்டும் சபை நடத்த உதவாது. ஒருவருடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் முதிர்ச்சியையும், கிறிஸ்தவ ஊழியத்திற்குத் தேவையான சகல தகுதிகளையும் சோதித்து அறியக்கூடிய பக்குவத்தைத் தேவன் திருச்சபைக்கு மட்டுமே அளித்துள்ளார் (எபேசியர் 4: 11-16).
இந்த ‘ஊழியப்பித்து’ இன்று நம்மைவிட்டு அகல வேண்டும். கிறிஸ்தவர்கள் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தங்களுடைய தாலந்துகளையும், ஆவிக்குரிய வரங்களையும் சபைக்குக் கட்டுப்பட்டு சபையில் எல்லோரும் பயன்பெறப் பயன்படுத்த வேண்டும். சபையைவிட்டு ஓட முற்படாமலும், எங்கே தான் அதிகம் பயன்பட முடியும் என்று வாய்ப்புத் தேடி அலையாமலும் கர்த்தரின் வழிநடத்தலுக்குக் காத்திருக்க வேண்டும். தேவன் உண்மையிலே ஒருவனை ஊழியத்திற்கு அழைப்பாரானால் அதை சபை மூலமாகத் தெளிவாக விளக்குவார். பவுல் அப்போஸ்தலன் எப்படி சபைக்குத் தன்னை ஒப்புக் கொடுத்து, சபையின் அங்கீகாரத்தைப் பெற்று, சபை ஊழியங்களில் ஈடுபட்டானோ அதேபோல் நாமும் செய்ய முற்பட வேண்டும். திருமறை அதிகார பூர்வமானது, போதுமானது என்று நம்புகிறவர்கள் திருமறையின் திருச்சபை ஊழியங்கள் பற்றிய போதனைகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்.
விசுவாசிகளின் ஆசாரியத்துவம்
(The Priesthood of All Believers)
16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீர்திருத்தவாதிகள் கத்தோலிக்க மதத்திற்கெதிராகப் போர் தொடுத்தபோது, அவர்கள் தீவிரமாகப் போதித்த ஒரு வேத சத்தியம் ‘விசுவாசிகளின் ஆசாரியத்துவமாகும்’. அதாவது கடவுளுக்கும் விசுவாசிகளுக்குமிடையில் இயேசு கிறிஸ்துவைத்தவிர வேறு எவருமே ஆசாரியர்களாக நியமிக்கப்படவில்லை. விசுவாசிகள் நேரடியாகவே தேவனிடத்தில் மன்றாட முடியும், தங்களது தேவைகளைக் கொண்டுவர முடியும் என்பது இதன் பொருள். போப்பாண்டவரும், கத்தோலிக்க மதமும் இதை மறுத்துத் தமது சபை மூலமாகவே ஒருவன் தேவனிடத்தில் வரமுடியும என்று போதித்தார்கள்,. ‘விசுவாசிகளின் ஆசாரியத்துவம்’ இன்றைய சூழ்நிலையில் மறுபடியும் தெளிவாகப் போதிக்கப்பட வேண்டியதொரு பேருண்மை. இருந்தபோதும் சீர்திருத்தவாதகாலத்தில் புதுப்பிக்கப்பட்ட இச்சத்தியம் இக்காலங்களில் திரிபுபடுத்தப்பட்டு வித்தியாசமாக அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. அதாவது கடவுளுக்கும் விசுவாசிக்கும் இடையில் எவரும் ஆசாரியனாக வரக்கூடாது என்று வேதம் போதிக்கும்போது, இயேசு கிறிஸ்துவைத்தவிர வேறு எவரும் கடவுளை வெளிப்படுத்தக்கூடிய ஆசாரியத்துவச் செயலைச் செய்ய முடியாது என்ற உண்மையையே அது போதிக்கின்றது. இதைத் திரிபுபடுத்திச் சிலர், விசுவாசிகள் அனைவருமே ஆசாரியர்கள் ஆகவே, திருச்சபையில் அவர்கள் அனைவருமே எல்லா ஊழியத்திலும் ஈடுபட அதிகாரமுண்டு அதை நிர்ணயிக்கும் அதிகாரம் தேவனுக்கு மட்டுமே உண்டு என்று வாதிடுகிறார்கள். இது சீர்திருத்தவாதிகள் போதித்த விசுவாசிகளின் ஆசாரியத்துவத்தைத் தவறாகப் புரிந்து கொண்டதால் ஏற்பட்ட விளைவு. விசுவாசிகள் அனைவருமே ஆசாரியர்கள்தான். சபையின் எல்லா அங்கத்துவர்களுக்கும் சம அந்தஸ்தும், கடவுளை ஆராதிப்பதில் வரையறையற்ற சுதந்திரமும் இருந்தபோதும், ஊழியத்தைப் பொறுத்தளவில் தேவன் தம் வார்த்தையில் மூப்பர்களையே சபைத் தலைவர்களாக நியமித்து ‘பரலோக இராஜ்யத்தின் திறவுகோல்களை’ப் பயன்படுத்தும் அதிகாரத்தையும் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரத்தையும் அவர்களிடத்தில் தந்திருக்கிறார். ஆகவே சபையில் அதிகாரபூர்வமான எந்த ஊழியமும் மூப்பர்கள் தலைமையில் சபை அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டுத் தான் நிகழ வேண்டுமே தவிர விசுவாசிகள் ‘ஆசாரியர்களாக’த் தாம் நினைத்தபடி செயல்படக்கூடாது. விசுவாசிகள் தங்களுடைய பலவித ஆவிக்குரிய வரங்களையும் சபையின் நலனுக்காக எவருடைய வற்புறுத்தலோ, அங்கீகாரமோ இல்லாமல் பயன்படுத்த முடிந்தாலும், அதிகாரபூர்வமான ஊழியங்கள் (உதா: பிரசங்கம் செய்தல், குழுக்களில் வேதபாடமெடுத்தல், சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபடுதல் போன்றவை) சபை மூப்பர்களின் அங்கீகாரத்துடனேயே செய்யப்பட வேண்டும். இதைவிடுத்து எவ்விதக் கட்டுப்பாட்டுக்கும் உட்பட மறுத்துத் தான்தோன்றித்தனமாக செயல்படுவதற்கும் ‘விசுவாசிகளின் ஆசாரியத்துவத்திற்கும்’ எந்தவித சம்பந்தமுமில்லை.
திருச்சபையின் நிரந்தர ஊழியங்கள்
ஊழியத்தைப்பற்றிப் பேசுகின்ற கர்த்தருடைய வார்த்தை, இன்று திருச்சபையில் இருவித நிரந்தரமான ஊழியங்கள் மட்டுமே இருப்பதாகப் போதிக்கின்றது. அதாவது மூப்பர்களும், உதவியாளர்களும் மட்டுமே திருச்சபை ஊழியத்தைக் கொண்டு நடத்த இன்று சபைகளில் நியமிக்கப்பட வேண்டும். கர்த்தருடைய வார்த்தை முழுமையாகப் பழைய, புதிய ஏற்பாடுகளாக எழுதி முடிக்கப்படுவதற்கு முன்பாக கர்த்தர் திருச்சபைக்கு அப்போஸ்தலரையும், தீர்க்கதரிசிகளையும், சுவிசேஷகர்களையும் கொடுத்தார். வேதம் எழுத்துவடிவில் எழுதப்பட்டு மூன்று ஊழியங்களும் நிறைவு பெற்றன. இவ்வூழியங்களைத் திருச்சபையின் அடிக்கல்லாகத் திருமறை கருதுகின்றது (எபேசியர் 4: 11-12). ஆகவே இன்று சபையில் நிரந்தர ஊழியர்களாக மூப்பர்களும், உதவிக்காரர்களுமே உள்ளனர். சிலர் இன்று சுவிசேஷ ஊழியத்தோடு இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றது. அதாவது இன்று சபைகளில் நிரந்தரமாக சுவிசேஷ ஊழியக்காரர்களை நாம் கொண்டிராவிட்டாலும் ஒவ்வொரு போதகரும் சுவிசேஷகராகவும் செயல்பட வேண்டும் (2 தீமோத்தேயு 4:5). நற்செய்தியை எடுத்துச் சொல்லாமல் எவரும் போதக ஊழியத்தில் ஈடுபட முடியாது. இதையே பவுல் தீமோத்தேயுவுக்கு நினைவுபடுத்துகிறார்.
திருச்சபையின் நிரந்தர ஊழியர்களான மூப்பர்களில் இரு பிரிவுகளை நாம் அவதானிக்கின்றோம். அதாவது வேதவியாக்கியானம் செய்யும் முழு நேரப்போதகர்களும், அவர்களுக்குத் துணை புரியும் சக மூப்பர்களும் இதில் அடங்குவர். இவ்விரு ஊழியங்களும் ஒரே பணியில் (Office) அடங்கியுள்ளன (தீமோத்தேயு 2:17; வெளி. 2:1). இவர்களில் போதகர்கள் வேதத்தை சபைகளில் வழமையாகப் போதிப்பவர்களாக (Regular preachers) இருப்பர். ஏனைய மூப்பர்கள் போதக ஊழியத்தில் பங்கேற்று முழுநேரப் போதகர்களுக்கு ஊழியத்தில் துணை புரிவார்கள். ஆனால் இன்று பல நாடுகளிலும், வேதம் போதிக்கும் இந்த ஊழியப்பிரிவை புரிந்து கொள்ளாமல் மூப்பர்கள் திருச்சபையில் ஊழியப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது வருந்தத்தக்கது. எல்லா மூப்பர்களும் சமமானவர்கள் என்ற போர்வையில் அனைவரும் பிரசங்கம் செய்ய வேண்டும் என்ற போராட்டத்தில் சிலர் குதித்துள்ளார்கள். இதனால் பல சபைகள் பாதிக்கப்பட்டு இன்று இருந்த இடம் தெரியாமல் போயிருக்கின்றன. மூப்பர்கள் அனைவருக்கும் தேவ ஆடுகளை வழிநடத்தும் போதக ஊழியத்தில் பங்கிருப்பதாகத்தான் வேதம் போதிக்கின்றதே தவிர, எல்லா மூப்பர்களும் பிரசங்கிகளாக இருக்க வேண்டும் என்று வேதம் எதிர்பார்க்கவில்லை. மூப்பர்களில் சிலர் பிரசங்க ஊழியத்திற்காக விசேடமாக அழைக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். பிரசங்க ஊழியத்திற்கும், போதனைக்கும் அவர்கள் தங்கள் நேரத்தின் அநேக பகுதியை செலவிட வேண்டியிருப்பதால் சபைகள் அவர்களை முழு நேர ஊழியத்தில் ஈடுபடுத்தி அவர்களுடைய தேவைகள் அனைத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். போதகர்களும் ஏனைய மூப்பர்களும் சமமானவர்களாகவும், சேர்ந்து ஒற்றுமையோடு பணிபுரிய வேண்டியவர்களாக இருந்தபோதும், அவர்கள் செய்யும் பணியில் வித்தியாசம் உண்டு. முழு நேரப் போதகர்கள் செய்யும் பணிக்குத் துணையாகவே மற்ற மூப்பர்கள் இருக்க வேண்டுமேயல்லாது, போதகர்களோடு தாம் சமம் என்று கூறி அவர்கள் பணியில் இச்சை வைத்து அதை நாடிப் போராடக்கூடாது. வேதம் மூப்பர்களுக்கிடையில் இருக்க வேண்டிய ஒற்றுமையைத்தான் வலியுறுத்துகிறதே தவிர அவர்கள் சமம் என்றும், அனைவரும் ஒரே காரியத்தைச் செய்து அச்சமத்துவத்துவம் வெளியில் தெரியும்படியாக இருக்க வேண்டும் என்றும் போதிப்பதில்லை. மூப்பர்களிடம் இருக்க வேண்டிய சமத்துவம் அவர்கள் செய்யும் ஊழியத்தில் அல்லாது அவர்களுடைய பணியிலேயே (Office) தங்கியுள்ளது. ஒரே பணியான மூப்பர் ஊழியத்தில் காணப்படும் இவ்விரு முக்கிய பிரிவுகளையும் நாம் மறந்துவிடக் கூடாது. தாழ்மையுணர்வோடு, மற்றவர்களோடு சேர்ந்து பணிபுரியும் பக்குவமில்லாதவர்களை மூப்பர்களாக நியமிப்பதாலேயே இத்தகைய வீண் பிரச்சனைகள் சபையில் தோன்றுகின்றன. (வளரும்)
Dear brother, Praise the Lord! Please link articles that has more than one part. Provide a link to the next and previous parts. This will make reading more easy. Thank you!
LikeLike