கர்த்தர் கட்டியெழுப்பும் திருச்சபை

கர்த்தர் கட்டியெழுப்பிக்கொண்டிருக்கும் சபையின் பல அம்சங்களை விவரமாக வேதபூர்வமாக ஆராய்ந்து வருகிறோம். இக்கட்டுரைகள் சபைக் கோட்பாடுகளை முழுமையாக விபரிப்பதை நோக்கமாகக் கொள்ளாது. இன்றைய சூழ்நிலையில் பலராலும் அலட்சியப்படுத்தப்படும் திருச்சபையின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாத அம்சங்களை மறுபடியும் கிறிஸ்தவ வாசகர்களின் நினைவிற்குக் கொண்டுவருவதையே பெரு நோக்கமாகக் கொண்டுள்ளது. அவ்வகையில் பல முக்கிய அம்சங்களைத் திருமறையின் துணையுடன் இதுவரை ஆராய்ந்தோம். இவ்விதழில் திருச்சபையின் வாழ்வுக்கும் வளத்துக்கும் அத்தியாவசியமான இன்னுமொரு அம்சத்தைக் கவனிப்போம்.

கொள்கைகளும், கோட்பாடுகளும் (Doctrine)

உலகெங்கும் காணப்படும் பல்வேறு கிறிஸ்தவ சமயக்கிளைகள், சபைகள் இன்று வெவ்வேறு கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி வருவது அனைவரும் அறிந்ததோர் உண்மை. சிலவேளைகளில் இத்தகைய கொள்கை வேறுபாடுகள் பலரது மனதைக் குழப்புவதாகவும் அமைந்துவிடுகின்றன. புதிதாக கிறிஸ்துவை அறிந்து கொண்டவர்கள் எது உண்மை எது போலி என்று அறிந்து கொள்ள முடியாது மனந்தடுமாறும் நிலைக்கும் இது வித்திடுகிறது. சிலர் இச் சூழ்சிலையைப் பயன்படுத்திக் கொள்கைகள், கோட்பாடுகளே தேவையில்லை, அவை கிறிஸ்தவர்களைக் குழப்பும் அவசியமற்ற வீண் பேச்சுக்கள் என்று முடிவெடுத்துக் கொள்கைகள் கோட்பாடுகள் என்பதறியாத ஒரு கிறிஸ்தவத்தை நிலைநாட்டக் கங்கணம் கட்டுகின்றனர். திருமறையை மட்டுமே நம்புகிறோம் என்று மார் தட்டுகின்ற வேறு சிலர் தாம் விசுவாசிப்பது என்ன என்று விளக்கவும் வழியில்லாது எதையும் பிரித்தறியும் பக்குவமற்ற நிலைமையிலுள்ளனர்.

 கோட்பாடுகள் கிறிஸ்தவ ஒற்றுமைக்கு எதிரியா?

திருமறையின் அடிப்படையிலான கொள்கைகள் கோட்பாடுகளை வரையறுத்துப் பின்பற்றுவதும், போதிப்பதும் தவறா? அவ்வாறு செய்வது சபைகளையும் கிறிஸ்தவர்களையும் பிரிக்கும் காரியமா? கிறிஸ்தவ ஒற்றுமைக்கு சாவு மணியடிக்கும் செயலா? என்பது போன்ற பலரது மனத்தையும் உறுத்திக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு நாம் விடையளித்தேயாக வேண்டும்.

ஆரோக்கியமான உபதேசம்

அப்போஸ்தலர் நடபடிகள் 2:42 இல் ஆதி சபைக்கிறிஸ்தவர்கள் அப்போஸ்தலரின் போதனைகளுக்குத் தம்மை ஒப்புக் கொடுத்ததாக வாசிக்கிறோம். ஆகவே அப்போஸ்தலரின் போதனைகள் யாவை என்பதை இவர்கள் கேள்விப்பட்டிருந்ததோடு அப்போதனைகளுக்கே தம்மை ஒப்புக் கொடுத்தார்கள். கிறிஸ்து இயேசு போதித்த அனைத்தையும் அப்போஸ்தலர் மட்டுமே அறிந்திருந்தார்கள்; அவையே புதிய ஏற்பாடாக நமக்குக் கிறிஸ்துவால் அருளப்பட்டிருக்கிறது. பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதியபோது ‘ஆரோக்கியமான’ உபதேசத்தைச் செய்யும்படியாகப் பலமுறை கட்டளையிடுவதைப் பார்க்கிறோம். இதிலிருந்து ஆரோக்கியமான, தெளிவான போதனைகளே கிறிஸ்தவர்கள் வாழ, வளரத்துணை செய்யும் என்று பவுல் விசுவாசித்ததைக் காண்கிறோம் (ரோமர் 16:17; யூதா 3; 2 தீமோ. 2:2; 2 தெசலோ. 3:6). அதுமட்டுமன்றி, எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் கர்த்தர் ஒருவரே விசுவாசமும் ஒன்றே என்று போதிக்கும் பவுல், அவ்விசுவாசத்திற்கும் சபை ஒற்றுமைக்கும் எதிரியாக இருப்பது ‘தந்திரமுள்ள போதனைகளே’ என்றும், அவற்றில் இருந்து கிறிஸ்தவர்கள் தம்மைக்காத்துக் கொள்ள ‘அன்புடன் சத்தியத்தைக்’ கைக்கொள்ள வேண்டும் என்றும் போதிக்கிறார் (எபே. 4:1-24). தீத்துவுக்கு புத்தி கூறும் பவுல், (தீத்து 1:9) ஆரோக்கியமான உபதேசத்தால் புத்தி கூறும்படியாகவும், உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக் கொள்ளுகிறவனாயும் இருக்க வேண்டும் என்று வலிந்துரைப்பதைப் பார்க்கிறோம். இவற்றிலிருந்து திருமறை அரைகுறைப் போதனைகளாக அல்லாமல், ஆரோக்கியமான தெளிவான கோட்பாடுகளைப் பின்பற்றும்படி போதிப்பதைப் பார்க்கிறோம். ஆதிசபையைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் தாம் விசுவாசித்தவை எவை என்பதைத் தெளிவாக அறிந்திருந்ததோடு அவற்றிற்கு மாறானவற்றை ஏற்க மறுத்தார்கள்.

சமய சமரச இயக்கம் (Ecumenical Movement)

ஆனால் இன்று தமிழ் பேசும் ஐக்கியம் என்ற பெயரில் கொள்கைகளும், திருமறைக் கோட்பாடுகளும் முற்றாக நிராகரிக்கப்படுகின்றன. இதற்கான காரணங்கள் பல; இவற்றில் ஒன்று; கிறிஸ்தவ ஒற்றுமை என்ற பெயரில் எல்லா சபைகளையும் சமயக்கிளைகளையும் நிறுவனங்களையும் ஒன்று சேர்க்கும் ‘சமய சமரச இயக்கத்தின்’ பணிகளாகும். இவ்வியக்கப்போதனைகளைப் பின்பற்றுபவர்கள், கொள்கைகளும் கோட்பாடுகளும் ஒற்றுமையைக் குலைக்கும் என்றும், மெய்யான ஐக்கியம் ஏற்பட வேண்டுமானால் எல்லோரையும் அனுசரித்துப்போக வேண்டும் என்றும் போதித்து, வெளிப்புறமான சபைகளினதும் நிறுவனங்களினதும் ஒற்றுமையை வலியுறுத்துகிறார்கள் இவர்களைப் பொறுத்தவரையில் ‘சத்தியம்’ பலராலும் பலவிதங்களில் புரிந்து கொள்ளப்படும் பல்வேறு சாயல்களைக் கொண்டது. இன்று நம்மத்தியில் காணப்படும் பல்வேறு சமயக்கிளைகளும், பரவசக்குழுக்கள் உட்பட. இத்தகைய வியாதியினால் பீடிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.

கிறிஸ்தவ நற்செய்திக் கோட்பாடு (Evangelicalism)

இரண்டாவதாக இன்று கிறிஸ்தவ நற்செய்திக் கோட்பாட்டிற்குப் (Evangelicalism) புதுவிளக்கம் தரப்படுவதை அவதானிக்கலாம். ஆரம்பத்தில் கிறிஸ்தவ நற்செய்திக் கோட்பாடு என்பது திருமறையின் அதிகாரத்தையும், போதுமான தன்மையையும் ஐயமின்றி விசுவாசித்தவர்களை மட்டுமே உள்ளடக்கியதாக இருந்தது. இன்று ரோமன் கத்தோலிக்கர்கள், திருமறையின் அதிகாரத்தையும், போதுமான தன்மையையும் தொடர்ந்து நிராகரித்து வரும் ‘பரவசக்குழுக்கள்’ நியோ-இவெஞ்சலிக்கள் (Neo-Evangelical) (இவ்வியக்கம் திருமறை முழுவதும் தேவனுடைய வார்த்தையல்ல, ஆனால் அதில் கர்த்தருடைய வார்த்தையும் அடங்கியுள்ளது என்று போதிக்கின்றது.) போன்றோரையும் உள்ளடக்கும் இயக்கமாகக் காணப்படுகின்றது. சமீபத்தில் ஆசிரியருக்கு நண்பரொருவரால் அனுப்பி வைக்கப்பட்ட ‘Aim’ என்ற ‘இவெஞ்சலிக்கள் பெயீலோசிப் ஒப் இந்தியா’வின் மாத இதழில் மறைதிரு. சுந்தர்ராஜ் என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை இதை உறுதிப்படுத்துகிறது. திரு. சுந்தர்ராஜ், மார்டின் லூதரின் பெயரைப் பயன்படுத்தி இப்புதுக் கருத்துக்களையே லூதரும் விசுவாசித்ததாக திரிபுபடுத்தி கிறிஸ்தவ நற்செய்திக் கோட்பாட்டிற்குப் புது விளக்கமளித்துள்ளார். புரட்டஸ்தாந்து சீர்திருத்தவாதம் பற்றிய சரியான ஞானமில்லாததால் வந்த வினை இது. மார்டின் லூதர் இன்று உயிரோடிருந்தால் இவற்றை வாசித்துக் கண்ணீர் வடித்திருப்பார். இன்றைய வேதாகமக் கல்லூரிகளில் பலவும் திரு. சுந்தர்ராஜ் விளக்கும் இக்கொள்கைகளின் அடிப்படையிலேயே இயங்கி வருகின்றன. ‘Aim’ இல் வெளிவந்த மேல்வரும் படம் இவர்களது மனக் குழப்பத்தைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைகின்றது.

கிறிஸ்தவ நற்செய்திக் கோட்பாட்டிற்கு (Evangelicalism) இன்று புது விளக்கமளிப்பவர்கள் கிறிஸ்தவ ஒற்றுமை என்ற பெயரில் திருமறையைத் தூக்கி எறிந்துவிட்டு திருச்சபையைக் கட்டி எழுப்ப முனைகிறார்கள். ஆரம்ப காலத்திலிருந்தே சீர்திருத்தவாதமும் (Reformation), கிறிஸ்தவ நற்செய்திக் கோட்பாடும் (Evangelicalism), ஒன்றாகவே கருதப்பட்டது. அத்தோடு 17 ஆம் நூற்றாண்டு ‘பியூரிட்டனிசமும்’ இதே கோட்பாடுகளையே தொடர்ந்து பின்பற்றியது. இன்று இதற்கு புது விளக்கம் கொடுக்க முனைபவர்கள்தான் இக்கோட்பாடுகளைக் கைவிட்டு ‘சந்தர்ப்பவாதிகளாய்’ மாறியிருக்கிறார்களே தவிர கிறிஸ்தவ நற்செய்திக் கோட்பாடுகள் ஒரு போதுமே மாற்றமடையவில்லை.

கோட்பாடுகளை விளக்கும் விசுவாச அறிக்கை

இவற்றிலிருந்து கோட்பாடுகளின் அவசியத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. வெறுமனே வேதத்தை விசுவாசிக்கிறேன் என்று கூறுவது மட்டும் போதாது. எதை விசுவாசிக்கிறோம் என்று தெளிவாக அறிந்திருப்பதோடு, அவற்றை விளக்கிக்கூற வேண்டியதும் அவசியம். அவ்வாறு செய்ய விரும்பாதவர்களும், இயலாதவர்களும், வேதத்தைப் பயன்படுத்திப் புரட்டுக்கள் செய்பவர்களுமே இன்று ‘வேதத்தை விசுவாசிக்கிறோம்’ என்ற போர்வையின் கீழ் மறைந்து நிற்கிறார்கள்.

குழறுபடியான கோட்பாடுகளைக் கொண்டிராது திருமறையின் தெளிவான சத்தியங்களை விளக்கும் விசுவாச சத்தியங்களை விளக்கும் விசுவாச அறிக்கை ஒரு சபை வேதபூர்வமாக அமைய மிக அவசியமாகும். இது பலவிதங்களில் உதவும்.

1. சத்தியத்தைப் பாதுகாக்கவும் தொடர்ந்து பின்பற்றவும் துணைபுரியும்.

இன்று எல்லா சபைகளுமே திருமறையைப் பின்பற்றுவதாக மார் தட்டுவதால் விளக்கமானதொரு விசுவாச அறிக்கை சபையாக நாம் பின்பற்றும் சத்தியங்களைத் தெளிவாக விவரித்துக் காட்டி அவற்றைப் பாதுகாக்கவும் உதவும்.

2. போலியானதும் ஆபத்தானதுமான கள்ளப்போதனைகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும், அவற்றை இனங்கண்டு எதிர்க்கவும் துணை புரியும்.

சத்தியம் எது என்று புரியாமல் அதை நாம் எவ்வாறு பாதுகாக்கவோ வளர்க்கவோ முடியும்? எந்த அடிப்படையில் ஒரு போதனையைத் தவறானது என்று நாம் தள்ளிவைப்பது? சாம்பாருக்குள் பலவித கறிகாய்களும் மிதப்பது போல் சத்தியம் என்ற பெயரில் அண்டிவரும் சகலத்தையும் அரவணைக்கும் சபைகளுக்கு மத்தியில் திருமறையின் போதனையைத் தெளிவாகக் கொண்டுள்ள விசுவாச அறிக்கையைப் பயன்படுத்தும் சபை போலிப் போதனைகளை இனங்கண்டு அவற்றின் நச்சுத்தன்மையிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். யெகோவாவின் சாட்சிகள், சிரிப்பலை மாயத்தில் கட்டுண்டு நடனமிடும் பரவசக் குழுக்கள் போன்றவற்றின் பாதிப்பிலிருந்து எம்மைக்காத்துக் கொள்ள இவ்விசுவாச அறிக்கை உதவும்.

3. சபை அங்கத்தவர்கள் எதை விசுவாசக்கிறார்கள் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளத் துணை செய்யும்.

சபையில் அங்கத்தவர்களாக சேர்பவர்கள் விசுவாச அறிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டியிருப்பதால் சபையாக போலிப்போதனைகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். சபை அங்கத்தவர்களாக சேர்பவர்கள் அவற்றை அறிந்து ஆதரித்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றுதான் சபை எதிர்பார்க்கிறதே தவிர அவர்கள் இறையியல் வல்லுனர்களாக மாற வேண்டுமென்று எதிர்பார்ப்பதில்லை. சபை அங்கத்தவர்கள் சபைக்குக் கட்டுப்படுவதோடு விசுவாசமாகவும் இருக்க வேண்டியது அவசியம். அவர்களிடம் இருந்து சபை எத்தகைய விசுவாசத்தை எதிர்பார்க்கிறது என்பதை விசுவாச அறிக்கை விளக்குவதாக அமையும்.

4. விசுவாச அறிக்கையை வேதபூர்வமாக விளக்கமாகப் படித்து ஏற்று அதன் அடிப்படையில் போதிப்பவர்களையே சபை போதகர்களாகக் கொள்வதால் சபையாக சத்தியத்தைக் காத்துக் கொள்ள முடியும்.

சமீபத்தில் என்னுடன் கடிதத் தொடர்பு கொண்ட ஒரு போதகர் பிற சபையைச் சேர்ந்தவர்களையும் நமது சபையில் போதிக்க அழைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இது முறையா? அவர்கள் தவறானதைப் போதித்துவிட்டால் என்னாவது? என்று கேட்டு பதிலளிக்கும்படி எழுதியிருந்தார். அப்போதக அன்பரும் இதை வாசிப்பார் என்று நினைக்கிறேன். சபையாகத் தெளிவான சத்தியத்தைப் பின்பற்றி அதை மட்டுமே போதிக்கும் சபைகள் எவரையும் பிரசங்கம் செய்யவிட்டு விடக்கூடாது. சபையை அழிக்க இதைவிட மோசமான வேறு வழியிருக்க முடியாது. விஷம் உடலில் பரவுவதுபோல நச்சுப்போதனைகள் பிரசங்கிகள் மூலம் இன்று பல இடங்களிலும் புகுந்துவிடுகின்றது. இதைத் தவிர்க்க விசுவாச அறிக்கை உதவும். அதை ஏற்றுப் பின்பற்றுபவர்களை மட்டும் பிரசங்கிக்க அனுமதித்து சத்தியத்தை மட்டுமே சபையார் கேட்க வாய்ப்பு ஏற்படுத்தித்தருவது போதகர்கள் கடமை. விசுவாசிக்கிறோம் என்று எடுத்துக் கூறுவதால் அதை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கும் நமக்கும் தொடர்பிருக்க முடியாது.

5. விசுவாச அறிக்கை எந்த அடிப்படையில் ஏனைய சபைகளோடு தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக்க உதவும்.

கர்த்தருடைய சபைகளோடு நாம் தொடர்பு வைத்துக் கொள்வது மிக அவசியம். ஐக்கியத்தில் வளரவும், இயன்றவரை கிறிஸ்தவ ஊழியங்களில் இணைந்து ஈடுபடவும் வேண்டுமென வேதம் எதிர்பார்க்கிறது. ஆனால் வேதத்தின் பெயரைக் கொண்டு எத்தனையோ சபைகளும், சமயக் கிளைகளும் காளான்கள்போல் பரவியிருக்கும் நிலையில் எச்சபைகள் மெய்யாகவே திருமறையின் அடிப்படையில் அமைந்து திருமறையின் கோட்பாடுகளின்படி நடப்பதைத் தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அறிந்து கொள்வது? சபையாக ஏற்றுக் கொண்டு விசுவாசித்து வரும் விசுவாச அறிக்கை இதற்குத் துணைபுரியும். இதனை ஏற்று இதன் அடிப்படையில் அமைந்துள்ள சபைகளோடு தொடர்பு கொண்டு வேதபூர்வமான மெய்யான ஐக்கியத்தில் வளர முடியும். திருமறையை அலட்சியப்படுத்தி பல்வேறு கோட்பாடுகளை மனம் போன போக்கில் பின்பற்றும் சபைகளோடு ஐக்கியத்தில் வளரும்படி திருமறை போதிக்கவில்லை. அவ்வாறு செய்வது கர்த்தருக்குப் பிடித்தமற்ற செயல். சமய சமரசக் கோட்பாட்டைப் பின்பற்றும் சமயக் கிளைகளும், கிறிஸ்தவ நற்செய்திக் கோட்பாட்டை அலட்சியம் செய்து ஏனோதானோவென்று சபைநடத்திக் கொண்டிருப்பவர்களுடனும் ஐக்கியத்தில் வருவது ஐக்கியத்தை உண்மையிலேயே அழிக்கும் செயலாகும்.

1689 விசுவாச அறிக்கை

கோட்பாடுகளின் அவசியத்தை இதுவரை நாம் ஆராய்ந்தோம். ஆனால் இவ்வாறு திருமறையின் தெளிவான கோட்பாடுகளை விளக்கி நமக்குத் துணைபுரியக்கூடிய விசுவாச அறிக்கை எது என்ற கேள்வி ஏற்கனவே எழுந்திருக்கும். இதைக்குறித்துக் கடந்த இதழில் நாம் எழுதியிருந்தோம். (“திருச்சபை வளர்ச்சிக்கு திருமறைக் கோட்பாடுகள்” என்ற ஆக்கத்தைப் பார்க்க) முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர்கள் சத்தியத்தையும், சபையையும் காக்கும் பொருட்டு இத்தகைய கோட்பாடுகளைத் தெளிவாக வேதபூர்வமாக ஆராய்ந்து எழுதிவைத்து தம் சந்ததிக்குப் பெருந் தொண்டாற்றியுள்ளனர். இதனையே பின்பு ஸ்பர்ஜன் தன் சபைக்கோட்பாடாக ஏற்று தாம் பின்பற்றும் சத்தியம் எது என்று உலகறிய அறிவித்தார். இன்று உலகெங்கும் நூற்றுக்கணக்கான சபைகள் 1689 விசுவாச அறிக்கை என்று அழைக்கப்படும் இவ்விசுவாச அறிக்கையைத் தமது சபை விசுவாச அறிக்கையாக ஏற்றுக்கொண்டுள்ளன. தற்காலத்தில் வழக்கிலிருக்கும் விசுவாச அறிக்கைகளில் இதுவே வேதசத்தியங்களைத் தெளிவாகவும், முறையாகவும் எடுத்து விளக்குவதாக உள்ளது. திருமுழுக்கு, சபைக்கோட்பாடுகள், நற்செய்தியை எடுத்துக் கூறுதலின் அவசியம் ஆகிய போதனைகளின் ஏனைய விசுவாச அறிக்கைகளைவிடச் சிறப்பான போதனைகளைக் கொண்டதாக இவ்விசுவாச அறிக்கை அமைகின்றது.

திருமறையின் தெளிவான அடிப்படை சத்தியங்களில் சபையார் கருத்தொற்றுமையற்றிருப்பதைக் கர்த்தர் அனுமதிப்பதில்லை. அடிப்படை சத்தியங்களல்லாதவற்றில் நமது தற்போதைய அறிவுக்கேற்ப நாம் கருத்து வேறுபாடு கொண்டிருக்கலாம் (1 கொரி. 11:19; பிலி. 3:15). அது கர்த்தருக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் நாம் முதிர்ச்சியடைந்து அவற்றில் உடன்பாடுகாண வேண்டுமென்பதே அவரது அவா. அதேவேளை அடிப்படை சத்தியங்களல்லாதவற்றில் நாம் கொண்டிருக்கும் கருத்து வேறுபாடு சபையில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது என்பது அவரது கட்டளையாகவுள்ளது.

விசுவாச அறிக்கை சபை வளர்ச்சிக்கும், சபை வாழ்க்கைக்கும், ஐக்கியத்திற்கும் அத்தியாவசியமாயிருந்த போதும் அது திருமறைக்கு இணையான அதிகாரத்தைக் கொண்டிருப்பதில்லை. அது நாம் விசுவாசிக்கும் வேதபூர்வமான ஐயமற்ற சத்தியங்களை முறைப்படுத்தி விளக்கி நாம் வேத போதனைகளில் வளர துணைபுரியுமொரு சாதனம்.

(வளரும்)

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s