அன்புள்ள வாசகர்களே,
‘கற்பவை கசடறக் கற்க’ என்பது பெரியோர் வாக்கு, எதைப்படித்தாலும் அதை முறையாக, உண்மைப் பொருள் அறிந்து படிக்க வேண்டும் என்பது இதன் பொருள், வேதத்தைப் பொறுத்தவரை இது எத்தனை உண்மை, வேதத்தின் மெய்ப்பொருளை அறியாமல் தவறாகப் புரிந்து கொண்டால் அது கிறிஸ்தவ அறிவில் வளர உதவாது. தேவன் தம்மைக்குறித்தும், நாம் வாழ வேண்டிய வழிமுறைகள் குறித்தும் வேதத்தில் மட்டுமே எழுத்துருவில் அளித்திருப்பதால் அதைக் கசடறக் கற்பது அவசியம். கர்த்தருடைய துணையோடும், ஆவியின் உதவியோடும் நாம் வேதம் போதிக்கும் உண்மைகளை அறிந்து கொள்ள முடியும். இருந்தபோதும், வேத அறிவில் நாம் வளரத் துணை செய்யும் பொருட்டு கர்த்தர் நமக்கு நல்ல நூல்களையும் தந்துள்ளார். கற்றறிந்த நல்லறிஞர்களை எழுப்பி திருமறையில் அவர்களுக்கு நல்ல ஞானத்தைத் தந்து, அவர்கள் மூலம் நாம் வேத அறிவில் வளரத்துணை செய்யும் நல்ல நூல்களைத் தந்துள்ளார். திருமறைக் கல்விக்குத் துணை செய்யும் அத்தகைய நூல்களை நாம் தேடிப் பெற்றுப் பயனடைய வேண்டும்.
நமது துர்பாக்கியம், அத்தகைய நூல்கள் ஆங்கிலத்தில் அநேகம். இருந்தாலும் வல்ல தேவன் நமது தேவை அறிந்து ஆங்கிலத்தில் உள்ள நல்லறிஞர்களின் நூல்களை பலவற்றைத் தமிழில் மொழி பெயர்த்துத் தந்துள்ளார். அநேகக் குப்பைகள் தமிழிலே எழுத்துருவில் மலையாகக் குவிந்து புத்தகக் கடைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கும் இந்நாட்களில், விடி வெள்ளிபோல் ஒளிவீசும் பலநூல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அநேகர் இவை இருப்பதும் தெரியாமல் இருக்கிறார்கள். வாசகர்களுக்கு அத்தகைய நூல்களை அறிமுகப்படுத்துவதோடு, வாசிப்பின் மேன்மையையும் பலாபலன்களையும் எடுத்துக்காட்டுவது பயனுள்ளதாக அமைய வேண்டுமென்பது எங்கள் இதயதாகம்.
மேலும் ஒரு புத்தம் புதிய வருடத்தைத் தேவன் நமக்குத் தந்திருக்கிறார். இப்புதிய வருடத்தில் அவர் மட்டுமே தரக்கூடிய ஆவிக்குரிய அனைத்து ஆசீர்வாதங்களையும் பெற்று வாசகர்கள் வளர வேண்டும் என்பது திருமறைத்தீபத்தின் உளமார்ந்த வாஞ்சை, உங்கள் கடிதங்கள் எங்களை இவ்வூழியத்தில் ஊக்குவிக்கின்றன. தொடர்ந்து தேவன் விசுவாசமுள்ள கிறிஸ்தவ அன்பர்கள் மூலம் இவ்வூழியத்திற்கான பல தேவைகளையும் பொறுப்பேற்று நடத்தி வருகின்றார். கர்த்தரை என்றென்றும் சேவிப்போம்.
அன்புடன்,
ஆசிரியர்.