“வாசிப்பு மனிதனை முழுமையானவனாக்குகின்றது”
– பிரான்ஸிஸ் பேக்கன் –
‘கற்றனைத்து ஊறும் அறிவு’ என்பது தமிழ்ப்புலவன் வள்ளுவன் வாக்கு. எந்தளவுக்கு நாம் படிக்கிறோமோ அந்தளவுக்கு அறிவு வளர்ச்சியும், முதிர்ச்சியும் அடைவோம் என்பது இதன் பொருள். வேதத்தில் நல்லறிவு பெறுவதற்கு நாம் வாசிக்கும் பயிற்சியை வளர்த்துக் கொள்ள வேண்டும். வேதத்தை அன்றாடம் ஊக்கத்தோடு வாசித்தல் அவசியம். அதே வேளை வேதசத்தியங்களைப் போதிக்கும் நல்ல நூல்களையும் நாம் வாசிக்க வேண்டும்.
வேதமும், வரலாறும் கிறிஸ்தவன் வாசிக்கும் பழக்கமுள்ளவனாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றன. வாசிக்க மறுப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் இழக்க வேண்டியது அநேகம். ஏனெனில் அவர்கள் கடந்த இரண்டாயிரம் வருடங்களாக கர்த்தர் தந்துள்ள அற்புதமான கிறிஸ்தவ இலக்கியங்களில் அறிவில்லாது வளர்சியடையாது இருக்க நேரிடும் இத்தகையோர் வேதம் மட்டுமே போதும் என்று வாதிடுவார்கள். ஆனால் வேதத்தைத் தந்த நல்லாண்டவரே அநேகரைப் பயன்படுத்தி பல நூல்கள் மூலம் அதற்கு விளக்கமும் தந்துள்ளார். இவற்றைத் தூக்கி எறிய நாம் யார்?
வாசிக்க மறுக்கிறவர்கள் ஒரே வழியில் மட்டுமே சிந்திக்க முடியும். இன்று நாம் கிறிஸ்தவம் என்ற பெயரில் சுற்றிவரப்பார்க்கும் பல சபைகளிலும் மக்கள் அறியாமையினால் அறிவைத் துறந்துவிட்டு அனுபவத்தை மட்டுமே சார்ந்து நிற்பதைப் பார்க்கிறோம். எதையாவது அறிந்துகொள்ள விரும்பினால் அவர்கள் அதைக்குறித்து வேதம் என்ன சொல்கிறது என்று ஆராய விரும்புவதில்லை. வேதத்தில் அறிவை வளர்த்துக் கொள்ளாததாலும், தேவன் தந்துள்ள நல்ல நூல்களைப் பயன்படுத்திக் கொள்ளாததாலும் அவர்கள் அறிவிழந்து நிற்கிறார்கள்.
நூல்களைப்பற்றிப் பேசுகின்றபோது இன்று எல்லா மொழிகளிலுமே நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு உதவாத நூல்களே அநேம். தமிழும் இதற்கு விதிவிலக்கல்ல. நூல்நிலையங்களை இன்று உப்புச்சப்பில்லாத புத்தகங்களே நிரப்புகின்றன. வேத அறிவும், ஆன்மீக வாழ்க்கையில் வளர்ச்சியும் அடைய வேண்டுமானால் அவற்றில் வளர்ச்சி அடைந்தவர்கள் எழுதிய நூல்கள் நமக்கு உதவலாம். அப்படிப் பார்க்கின்றபோது 16 ஆம், 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீர்திருத்தவாதிகள், பரிசுத்தவான்கள் எழுதிய நூல்களே நம்நினைவுக்கு வருகின்றது. இக்காலங்களில் வேதம் அற்புதமாக திருச்சபையை ஆசீர்வதித்ததை வரலாறு விளக்குகின்றது. வரலாற்றில் கிறிஸ்தவம் பெருமையோடு விளங்கிய காலங்களில் எல்லாம் சிறப்பான நூல்கள் எழுந்துள்ளதைக் காணலாம். மார்டின் லூதர், ஜோன் கல்வின் ஆகியோருடைய எழுத்துகளில் உள்ள தேவ பக்தியூட்டும் போதனைகளை இன்று எதில் காணமுடியும். இக்காலங்களில் கிறிஸ்தவம், எழுத்துத்துறையில் விசேடமான ஆசீர்வாதத்தைப் பெற்றிருந்ததை எவரால் மறுக்க முடியும்.
17 ஆம் நூற்றாண்டு பிரசித்தி பெற்ற ஒரு நூற்றாண்டு. திருச்சபைச் சீர்திருத்தத்திற்காகப் பாடுப்பட்டவர்கள் ‘பரிசுத்தவான்கள்’ (Puritans) என்று பிறரால் கேலியாக அழைக்கப்பட்ட காலமிது. இக்காலகட்டத்தில்தான் போலிப் போதனைகளில் இருந்து திருச்சபையைக் காப்பதற்காகத் திருமறையின் கோட்பாடுகளைத் திறம்பட எடுத்து விளக்கும் ‘விசுவாச அறிக்கைகளும்’, வினாவிடைப் பயிற்சி நூல்களும் வெளிவந்தன. ஜோன் ஓவன், தொமஸ் குட்வின், பிளேவல், சிப்ஸ், போன்றோருடைய ஆழமான ஆன்மீகக் கருத்துக்களும், தேவபக்திரசம் சொட்டும் போதனைகளும் நூல்களாக வெளிவந்தன. திருமறையைத் தேன் சொட்டச் சொட்டத் தெளிவாக, அனுபவரீதியாகப் பயன்படும் விதத்தில் எழுத்தில் வடிக்கும் வல்லமை இவர்களிடம் இருந்தது. ஜோன் கல்வினுடைய ‘திருச்சபைக் கோட்பாடுகள்’, ஜோன் ஓவனின் ‘மரணத்தினால் உண்டாகும் வாழ்வு’, கார்டினர் ஸ்பிரிங்ஸினுடைய ‘கிறிஸ்தவன் யார்’ ஆகிய மூன்று நூல்களும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் கட்டாயம் வாசிக்க வேண்டிய சிறப்பான நூல்கள். இவர்களுடைய எழுத்துக்களின் சிறப்பம்சங்களை இன்றைய நூல்களில் நாம் காண முடிவதில்லை. ‘லோர்ட் மெக்கோலி’ என்ற வரலாற்று ஆசிரியர் ‘பியூரிட்டன்’ காலத்தைக் குறித்துப் பேசும்போது ‘இக்காலத்து கிறிஸ்தவ ஜாம்பவான்களின் மனம் கர்த்தரோடு அன்றாடம் தொடர்பு கொண்டு அவ்வனுபவத்தில் திளைப்பதில் விசேட கவனம் செலுத்தியது. உலக வரலாற்றில் தோன்றிய மிகச்சிறப்பான மனிதர்களாக இவர்கள் கருதப்பட வேண்டும்’ என்று கூறினார். இதேவிதமான கிறிஸ்தவ எழுப்புதலையே 18, 19 ஆம் நூற்றாண்டுகளிலும் நாம் அவதானிக்கலாம். இவற்றின் மூலம் கிறிஸ்தவ எழுப்புதல் ஏற்பட்ட காலப்பகுதிகளில் கிறிஸ்தவ இலக்கியங்களின் வளர்ச்சியும், வாசிக்கும் பழக்கமும் உச்சக்கட்டத்தில் இருந்ததை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.
வில்லியம் பார்க்ளே
(1895-1960)
வில்லியம் பார்க்ளே கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக இருந்த வேத வல்லுனர். அவரது புதிய ஏற்பாட்டு ‘அன்றாட வேத பாடங்கள்’ பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு லட்சக்கணக்கில் விற்பனையாகியது. இருந்தபோதும் பார்க்ளே, கிறிஸ்துவின் பதிலீட்டுப் (Substitutionary) பாவ நிவாரணப்பலியை ஏற்றுக் கொள்ளவில்லை. அத்தோடு வேதத்தில் காணப்படும் அற்புதங்களையும் வெறும் அடையாளங்களாகவே கருதினார். வேதம் அருளப்பட்ட விதத்தையும் சந்தேகித்த பார்க்ளே இயேசு கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பைக் குறித்தும் கேள்வி எழுப்பினார். பார்க்ளேயின் நூல்கள் இன்று வேதாகமக் கல்லூரிகள் பலவற்றை அலங்கரிக்கின்றன. இவற்றைப் படிப்பவர்களின் ஆவிக்குரிய வாழ்வு என்னாவது?