வரலாறும் வேத சத்தியங்களும் ஒன்றோடொன்று இணைந்தவை. கர்த்தர் வரலாற்றின் தேவனாக இருப்பதோடு அவ்வரலாற்றின் மத்தியிலேயே தன்னைப்பற்றிய சத்தியங்களை வெளிப்படுத்தினார். ஆகவே வரலாற்றில் சத்தியத்திற்கு எதிராக எழுந்த போலிப்போதனைகளை அடையாளம் காண்பது சத்தியத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கும், அதைக்காப்பதற்கும் உதவும். அந்த அடிப்படையில்தான் இதுவரை பெலேஜியனிசம், செமி-பெலேஜியனிசம் ஆகிய சத்தியத்திற்கெதிரான போலிப்போதனைகளைக் குறித்துப் பார்த்தோம். வரலாற்றையோ வரலாறு சந்தித்த சத்தியத்திற்கெதிரான எதிர்ப்புகளையோ நாம் நிராகரித்துவிட முடியாது. இவ்விதழில், திருச்சபையினால் தூக்கியெறியப்பட்ட இப்போதனைகள் பல நூறு ஆண்டுகளுக்குப்பின் மறுபடியும் எவ்வாறு மறுரூபம் அடைந்தன, திருச்சபையை ஆட்டிப்படைக்கக் கங்கணம் கட்டின என்று பார்க்கலாம்.
பலநாடுகளிலும் இன்று கிறிஸ்தவ உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஒரு போலிப்போதனை ‘ஆமீனியனிஸம்’. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீர்திருத்தவாதியாகிய ஜோன் கல்வினுடைய சீடராகிய ‘பீசா’ என்பவரின் சீடராக இருந்தவர் ஒல்லாந்து நாட்டைச் சேர்ந்த யெகோபஸ் ஆமினியன். சீர்திருத்தவாதத்தின் மூலம் எழுந்த போதனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்த ஆமீனியஸ் அதற்கு எதிரான போதனைகளை ஒல்லாந்து நாட்டில் பரப்பத் தொடங்கினார். ஆமீனியஸ் இறந்த ஒரு வருடத்திற்குப்பின்பு 1610 ஆம் ஆண்டில் அவரது சீடர்கள் ஆமீனியனுடைய போதனைகளை விசுவாச அறிக்கையாக வெளியிட்டனர். ஐந்து கோட்பாடுகளைக் கொண்ட இவ்வறிக்கையை அவர்கள் ஒல்லாந்து அரசிடம் சமர்ப்பித்தனர். இதன் மூலம் இவர்கள் ‘பெல்ஜிக்’ விசுவாச அறிக்கையிலும், ‘எஹயிடில் பேர்க்’ வினாவிடைத் திருமறைக் கல்வியிலும் போதிக்கப்பட்ட, ஒல்லாந்து திருச்சபையின் போதனைகளை உறுதிப்படுத்தினார்.
இவர்கள் கொண்டு வந்த ஐந்து கோட்பாடுகளாவது:
1. ஒருவன் தன்னை விசுவாசிப்பானா அல்லது நிராகரிப்பானா என்பதை ஏற்கனவே அறிந்திருக்கும் அறிவைக் கொண்டே கடவுள் ஒருவனைத் தெரிவு செய்கிறார் அல்லது நிராகரிக்கிறார்.
2. விசுவாசிகள் மட்டுமே இரட்சிக்கப்பட்டாலும் இயேசு கிறிஸ்து எல்லோருக்காகவும், ஒவ்வொரு மனிதனுக்காகவுமே மரித்தார்.
3. மனிதன் பாவியாதலால் அவன் விசுவாசிப்பதற்கும், நீதியானவற்றைச் செய்வதற்கும் தெய்வீகக் கிருபையானது அவசியமாக இருக்கின்றது.
4. இத்தெய்வீகக் கிருபையை மனிதனால் நிராகரித்துவிட முடியும்.
5. மறுபிறப்படைந்த அனைவருமே தங்களுடைய விசுவாச வாழ்க்கையில் தொடர்ந்திருப்பார்கள் என்ற கூற்று மேலும் ஆராயப்பட வேண்டும்.
கடைசிக் கோட்பாடு பின்பு திருத்தப்பட்டு ஒரு விசுவாசி தனது விசுவாசத்தை இழந்து இரட்சிப்பையும் இழந்து போகலாம் என்று மாற்றப்பட்டது. ஆமீனியனுடைய கொள்கையைப் பின்பற்றுகிற அனைவருமே இந்தக் கடைசிக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களில் சிலர் இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் அதை ஒருபோதுமே இழந்து போகமாட்டார்கள் என்று விசுவாசிக்கிறார்கள்.
ஒல்லாந்து அரசால் நியமிக்கப்பட்ட ஒரு தேசிய சமயக்குழு 1618 ஆம் ஆண்டு நவம்பர் 13 இல் ‘டோர்ட்’ என்ற இடத்தில் கூடி இவ்வைந்து கோட்பாடுகளையும் அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்தது. மனிதன் பாவத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக் கொண்டாலும், அவன் இரட்சிக்கப் படுவதற்கு கடவுளுடைய கிருபை மட்டும் போதாது அவனது சுய தீர்மானமும் அவசியம் என்ற செமி-பெலேஜியனிஸமே மறுபிறவி எடுத்திருப்பதை இக்குழு உணர்ந்தது. பல நாடுகளையும் சேர்ந்த 84 பேர் இக்குழுவில் அங்கத்தவர்களாக இருந்தனர். ஏழு மாதங்கள்வரை 154 தடவைகள் கூடிய இக்குழு தனது இறுதிக் கூட்டத்தை 1619 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் தேதி நடத்தியது. திருமறையின் அடிப்படையில் ஆமீனியஸின் போதனைகளை ஆராய்ந்த ‘டோர்ட் சினட்’ அவற்றை வேதத்திற்குப் புறம்பான போதனைகள் என்று தீர்மானித்துக் கண்டனம் செய்து, அதைப்போதித்தவர்களை நாடு கடத்தியது. அத்தோடு இத்தகைய போலிப் போதனைகளில் இருந்து திருச்சபையைக் காப்பதற்காக இவற்றிற் கெதிரான வேதசத்தியங்களை ஐந்து அதிகாரங்களாக இக்குழு வெளியிட்டது. அவை ஏற்கனவே சீர்திருத்தவாதிகளால் முக்கியமாக பிரான்ஸைச் சேர்ந்த ஜோன் கல்வினால் (1509-1564) போதிக்கப்பட்டு வந்ததால் ‘ஐந்து கல்வினித்துவக் கோட்பாடுகள்’ என்ற பெயரையும் பெற்றன. இவையெல்லாம் நிகழ்ந்தபோது கல்வின் உயிரோடு இல்லை.
வேதத்திற்கு முரணானதும், திருச்சபையினால் போலிப்போதனைகள் என்று நிராகரிக்கப்பட்டதுமான ஆமீனியனின் பெயரைத்தாங்கிய ‘ஆமீனியனிஸம்’ இன்று உலகெங்கும் எல்லா சமயக்குழுக்களிலும் பரவி செல்வாக்குப் பெற்றுள்ளது. பொய்யை உண்மையைப் போலத்தோற்றமளிக்கச் செய்வதில் ஒளியின் தூதனைப்போல் வேஷம் தரிக்கும் சாத்தான் வல்லவன்.
போலிப்போதனையான ‘ஆமீனியனிசம்’ கிறிஸ்தவர்களை மயக்கிச் செல்வாக்குப் பெற்றதற்குக் காரணமென்ன? யார் இதற்குப் பொறுப்பு? ஜோன் வெஸ்லியும் அவர் ஏற்படுத்திய மெத்தோடிசமும், சார்ள்ஸ் பினியும்தான் இதற்குத் தூபம் போட்டவர்களில் முக்கியமானவர்கள். சார்ள்ஸ் பினி நமக்கிழைத்திருக்கும் பெருந்தீங்கு இன்று அநேகர் கண்களுக்குப் புலப்படுவதில்லை. கடவுளின் கையை மடக்கிக் காரியம் சாதிக்கலாமெனப் போதித்த மனிதத் துவவாதி பினி. ஆமீனியனிஸத்தைப் பின்பற்றிய இவர்களுடைய போதனைகளாலேயே இன்று அநேகர் சத்தியம் தெரியாமல் மயங்கிக் கிடக்கிறார்கள். கிறிஸ்தவ உலகெங்கும் பாசி போல் படர்ந்திருக்கும் பல கிறிஸ்தவ ஸ்தாபனங்களும் இப்போதனையின் அடிப்படையிலேயே தங்கள் ஊழியத்தை நடத்தி வருகின்றன.
(வளரும்)