கடந்த இதழில் ஆர்மீனியக் கோட்பாடுகளுக்கு பதிலுரையாக டோர்ட் சமயப் பேரவையினால் கொண்டுவரப்பட்ட ஐங்கோட்பாட்டினை சுருக்கமாகப் பார்த்தோம். கிருபையின் போதனைகளை உள்ளடக்கி எழுந்ததே இவ்வைங்கோட்பாடு. ஆகவே, இதனைக் கிருபையின் போதனைகள் என்றும் அழைப்பது வழக்கம். கிருபையின் போதனைகளை விளக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள இப்பகுதி இவ்வைங்கோட்பாடுகளைப் பின்பு விளக்கமாக ஆராயவிருக்கிறது. அதற்கு முன்பாக நடைமுறையில் இருக்கும் சில தப்பபிப்பிராயங்களை நாம் தீர்த்துக் கொள்வது நல்லது.
கிருபையின் கோட்பாடுகளும், சீர்திருத்தக் கோட்பாடுகளும்
இன்று கிருபையின் கோட்பாடுகளைப் பின்பற்றும் அல்லது வரவேற்கும் சிலர் அவற்றையே சீர்திருத்தக் கோட்பாடுகள் என்றும் முடிவுகட்டிவிடுகின்றனர். சீர்திருத்தக் கோட்பாடுகளின் ஒரு பிரதான அங்கமாக கிருபையின் போதனைகள் அமைகின்றன என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் சீர்திருத்தக்கோட்பாடுகள் கிருபையின் கோட்பாடுகளைவிட மிகப் பெரியது. கிருபையின் கோட்பாடுகளை மட்டும் வரவேற்பதால் ஒருவர் சீர்திருத்தக் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கிறார் என்று கூறிவிட முடியாது.
கிருபையின் கோட்பாடுகள் இரட்சிப்பிற்கான வழிவகைகளை ஏற்படுத்தியதிலும், அதை அளிப்பதிலும் கர்த்தரே நூற்றுக்கு நூறுவீதம் இறைமையுள்ளவராக இருக்கிறார் என்று போதிக்கின்றது. ஆகவே அத்தகைய வாழ்க்கையை ஒருவருக்கு அளிக்கும் கர்த்தர்அதை இறுதிவரை கரை சேர்ப்பதிலும் இறைமையுள்ளவராக உள்ளார் என்று இப்போதனைகள் விளக்குகின்றன. ஆனால் இக்கோட்பாடு சீர்திருத்தவாதக் கோட்பாடுகளின் ஒரு பகுதி மட்டுமே. சீர்திருத்தக் கோட்பாடு இவற்றின் மீது மட்டுமல்லாது கர்த்தரின் பூரண அதிகாரம் பரந்தளவில் எல்லாவற்றின் மீதும் இருப்பதாக வலியுறுத்துகிறது. தனிமனித இரட்சிப்பு மட்டுமன்றி, திருச்சபை, இவ்வுலக நடவடிக்கை எல்லாவற்றின்மீதும் கர்த்தருக்குள்ள அதிகாரப்பரவலையும், அவரது வார்த்தையின்படி அனைத்துக் காரியங்களும் நடக்க வேண்டிய அத்தியாவசியத்தையும் சீர்திருத்தக் கோட்பாடுகள் வலியுறுத்துகின்றன. ஆகவே ஒரு சபையோ அல்லது ஒரு கிறிஸ்தவரோ தாம் இதுவரை பின்பற்றிய ஆர்மீனியப் போதனைகளைத் துறந்துவிட்டு கிருபையின் போதனைகளைப் பின்பற்றுவதால் அவர்கள் சீர்திருத்தவாதக் கோட்பாடுகளை முழுமையாக அறிந்திருக்கிறார்கள் என்றோ அல்லது அதைப் பின்பற்றுவதால் அவர்கள் சீர்திருத்தவாதக் கோட்பாடுகளை முழுமையாக அறிந்திருக்கிறார்கள் என்றோ அல்லது அதைப் பின்பற்றுகிறார்கள் என்றோ முடிவு கட்டிவிட முடியாது. உதாரணமாக கிருபையின் போதனைகள் கர்த்தரின் இரட்சிப்புக்குரிய அம்சங்களைத் தவிர வேறுவிடயங்களை விவரிப்பதில்லை. இன்று சிலர் கிருபையின் போதனைகளை அது திருமறை போதிக்கும் தெளிவான போதனை என்று இருகரம் நீட்டி வரவேற்ற போதும் சீர்திருத்தக் கோட்பாடுகளை அலட்சியப்படுத்தி வருவதைக் காண முடிகின்றது. இவர்களில் சிலர் கடவுளின் நியாயப்பிரமாணத்தையும் (The Law of God). திருச்சபைக் கோட்பாடுகளையும் அலட்சியம் செய்து கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அவை இன்று அவசியமில்லை என்றவிதத்தில் நடந்து வருகிறார்கள். ஆகவே கிருபையின் போதனைகளை ஒருவர் அறிந்திருப்பதாலோ அல்லது பின்பற்றுவதாலோ அவர் சீர்திருத்தக் கோட்பாடுகளைப் பின்பற்றுகிறார் என்று முடிவு கட்டிவிட முடியாது. சீர்திருத்தப்பாதையில் செல்வதற்கு இது முறையான ஆரம்பமாக இருக்கலாம், ஆனால் திருமறையின் அதிகாரத்திற்குட்பட்டு தன் வாழ்க்கையின் சகல துறைகளையும் சீர்திருத்தத்திற்கு உட்படுத்தாதவரை அவர் ஒரு சீர்திருத்தவாதியாகிவிட முடியாது.
ஜே. ஐ. பெக்கர் என்ற இறையியல் வல்லுனர் கிருபையின் போதனைகளைவிடப் பெரிதான சீர்திருத்தக் கோட்பாடுகள் பற்றி விளக்கும்போது, “சீர்திருத்தவாதக் கோட்பாடுகள் (பெக்கர் சீர்திருத்தக் கோட்பாடுகளை இங்கே ‘கல்வினிசம்’ என்று பெயரில் தொடர்ந்து அழைக்கிறார். சீர்திருத்த காலத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கல்வின் இருந்ததும், அதன் போதனைகளுக்கு வடிவம் தந்த சிற்பிகளில் முதன்மையானவராக அவர் அமைந்ததுமே இதற்குக் காரணம்.) ஐங்கோட்பாடுகள் குறிப்பிடுவதைப் பார்க்கிலும் அதிக விசாலமானது. முழு உலகத்தின் படைப்பாளியாகவும், ராஜாவாகவும் கடவுளைக் காண்கிற ஒரு தெளிவான தரிசனத்திலிருந்து தோன்றியதே இவ்வுலகளாவிய கோட்பாடான சீர்திருத்தவாதக் கோட்பாடு. தனது சித்தத்தின் ஆலோசனையின்படி அனைத்துக் காரியங்களையும் நிறைவேற்றும் சிருஷ்டிகரைக் கர்த்தாவாக முரண்பாடற்ற விதத்தில் அங்கீகரிக்கும் ஒரு முயற்சியே சீர்திருத்தவாதக் கோட்பாடாகும். முழு வாழ்க்கையும் கடவுளின் வார்த்தையின் கட்டுப்பாட்டிற்கும் வழிநடத்தலுக்கும் கீழானதாக இறைவனை மையமாகக் கொண்டு சிந்திக்கும் ஒரு வழிமுறையே இக்கோட்பாடாகும். இன்னொருவிதத்தில் கூறப்போனால், சீர்திருத்தக் கோட்பாடு திருமறையை அடிப்படையாகக் கொண்டு திருமறையின் இறையியலை அவதானிக்கின்றது எனக்கூறலாம். எல்லாவற்றிற்கும் ஆரம்பமாகவும், ஆதாரமாகவும், முடிவாகவும் கடவுளைக் காண்கிற அவரை மையமாகக் கொண்ட ஒரு கண்ணோட்டமே சீர்திருத்தக் கோட்பாடு” என்று விளக்குவதோடு “ஐங்கோட்பாடு தேவன் தனி மனிதனை மீட்பதில் இறைமையுள்ளவர் என்று மட்டுமே கூறுகிறது. ஆனால் சீர்திருத்தக் கோட்பாடோ பரந்த அளவில் அவரது அதிகாரம் எங்கும் உள்ளதாகப் பறைசாற்றுகிறது” என்றும் கூறுகிறார்.
இதிலிருந்து சீர்திருத்தக் கோட்பாடுகளுக்கும் கிருபையின் கோட்பாடுகளுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை நாம் உணர முடிகின்றது. இரட்சிப்பின் அம்சங்களைப் பற்றிப் போதிக்கும் கிருபையின் போதனைகள் நிச்சயமாக சீர்திருத்தக் கோட்பாடுகளின் ஒரு அங்கமாக இருந்த போதும் அவை மட்டுமே சீர்திருத்தக் கோட்பாடுகளாகிவிடாது. இத்தகைய தவறான அபிப்பிராயத்தை இன்று புதிதாகக் கிருபையின் போதனைகளை அறிந்து கொண்டுள்ளவர்கள் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. கர்த்தரை மகிமைப்படுத்தும் விதத்திலும், திருமறையின் அடிப்படையிலும் இரட்சிப்புப் பற்றிய கிருபையின் போதனைகள் அமைவது எந்தளவுக்கு அவசியமோ, அதேவகையில் திருமறை சார்பான கிறிஸ்தவத்தை நாம் பின்பற்ற சீர்திருத்தக் கோட்பாடுகளும் அவசியம். இவை இரண்டும் ஒன்றே அல்ல. சீர்திருத்தக் கோட்பாடுகளை முழுமையாகக் கைக்கொள்ளுகிறவர்கள் மத்தியில் கிருபையின் போதனைகள் காணப்பட்டாலும், கிருபையின் போதனைகளைக் கடைப்பிடிக்கும் எல்லோருமே சீர்திருத்தக் கோட்பாடுகளைப் பின்பற்றுகிறவர்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இதை நாம் தெளிவாக அறிந்திருப்பது சீர்திருத்தக் கோட்பாடுகளையும், கிருபையின் போதனைகளையும் சரிவரப் புரிந்து கொள்ளத் துணை செய்யும்.
(வளரும்)