கடந்த இதழில் திருமறைக்கு முரணானவகையில் வேத விளக்கமளித்து கர்த்தரின் கிருபையையே எள்ளி நகையாடும் ஆமீனியனின் போதனைகளையும் அவற்றிற்கு எவ்வாறு ஒல்லாந்து தேசீய சமயக்குழு முடிவு கட்டியது என்றும் பார்த்தோம். இருந்தாலும் காலத்தால் அழியாத சத்தியங்களைப் போலவே சில வேளைகளில் பொய்யும் தலை தூக்குவதுபோல் ஆமீனியனின் போதனைகள் இன்றும் பலரைப் பல நாடுகளிலும் ஆட்டிவைத்துக் கொண்டிருக்கின்றது.
ஆமீனியனுடைய ஐந்து கோட்பாடுகளிலும் (கடந்த இதழைப் பார்க்க) உள்ள தவறுகளை நாம் இங்கு சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது. அவரது முதலாவது கோட்பாட்டில் கடவுளின் முன்னறிவு (Foreknowledge) தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே மனிதன் எதிர்காலத்தில் என்ன செய்வான் என்று முன்னோக்கிப் பார்த்து (Foresight) அதன்படி கடவுள் அவனைத் தெரிவு செய்தார் என்பது ஆமீனியனின் வாதம். திருமறை கடவுளின் முன்னறிவைக் குறித்து விளக்கும்போது, அவரது முன்னறிவு மனிதனில் காணப்படும் நன்மை, தீமையிலோ, அவன் செய்யும் அல்லது அவனால் செய்யக்கூடிய எந்தவித செயல்களிலோ தங்கியிருக்கவில்லை என்று போதிக்கின்றது. இவை இரண்டிற்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. கடவுள் காலங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவராயிருந்து, மகா ஞானத்தைக் கொண்டிருப்பதால் அவரது முன்னறிவு அவரது பேரறிவைத்தான் விளக்குகிறதே தவிர வேறெதையுமல்ல.
தனது இரண்டாவது கோட்பாட்டில் இயேசு எல்லோருக்குமாகவே மரித்தார் என்ற ஆமீனியனின் போதனை திருமறைக்குப் புறம்பானது. பாவத்திலிருந்து மனந்திரும்பி தன்னை விசுவாசிப்பவர்களுக்காக மட்டுமே தன்னைப் பலி கொடுத்ததாக இயேசு திருமறையில் அறிவிக்கிறார். இதனால் பாவத்திலிருந்து மனந்திரும்ப மறுக்கிறவர்களுக்காக இயேசு மரிக்கவில்லை என்பது தெளிவு. இதைப்பற்றி பின்பு விபரமாகப் பார்ப்போம்.
தனது மூன்றாவது கோட்பாட்டில் ஆமீனியன் சொல்வது உண்மையைப் போலத் தோன்றினாலும் அதை அவனுடைய ஏனைய போதனைகளுடன் ஒப்பிடும்போது அதன் சுயரூபத்தைப் பார்க்க முடிகின்றது. தெய்வீகக் கிருபையின் அவசியத்தைப் பற்றி ஆமீனியன் போதித்தபோதும் அதனை அவன் இறைமையுள்ளதாகக் கருதவில்லை. தனிமனிதனுடைய துணையில்லாமல் தேவகிருபை அவனுள் ஒன்றுமே செய்யமுடியாது என்பதே ஆமீனியனின் போதனை. இது திருமறையின் போதனைக்குப் புறம்பானது.
இதைத் தொடரும் நான்காவது போதனை மனிதன் தெய்வீகக் கிருபையை நிராகரிக்கும் வல்லமை கொண்டுள்ளதாகக் கூறுகிறது. ஆனால் திருமறையோ கிருபையின் வல்லமையுள்ள கிரியையை மனிதனால் தவிர்க்க (நிராகரிக்க) முடியாது என்று போதிக்கின்றது.
ஆமீனியனிசம் சிலர் நினைப்பது போல் திருமறையை இன்னொரு விதமாகப் புரிந்து கொள்ளும் ஓர் இறையியல் கோட்பாடு அல்ல. இதற்கும் திருமறைக்கும் எந்தவிதத் தொடர்புமேயில்லை. இது போலிப் போதனை. கர்த்தரின் கிருபையையும், இயேசுவின் திரு இரத்தப் பலியினால் ஏற்படுத்தப்பட்ட இரட்சிப்பின் வழிமுறைகளையும் நிராகரித்துத் தனி மனித இரட்சிப்பிற்கு அவனது வல்லமையையே ஆதாரமாகவும், ஊன்றுகோலாகவும் காணும் அற்பப்போதனை.
இதனை எதிர்கொண்டு உண்மையை நிலைநாட்டவும் பொய்யை வேரோடு அழிக்கவுமே ‘டோர்ட்’ குழு இதற்கு எதிரான, எதிர்காலத்தில் ‘கிருபையின் போதனைகள்’ என்று பெயர் பெற்ற கிருபையின் அடிப்படையில் அமைந்த ஐந்து கோட்பாடுகளை வெளியிட்டனர். அக்கோட்பாடுகளாவன:
1. மனிதன் பாவத்தால் முழுமையாகக் கறை படிந்துள்ளான்.
2. கடவுளின் தெரிந்து கொள்ளுதல் எதன் கட்டுப்பாட்டிற்கும் உட்பட்டதல்ல. அது மனிதனில் காணப்படும் எதிலும் தங்கியிருக்கவில்லை.
3. கிறிஸ்துவின் மீட்பு குறிப்பிட்ட மக்களுக்காகவே பெறப்பட்டது.
4. பரிசுத்த ஆவியின் திட்ப உறுதியான அழைப்பு தவிர்க்க முடியாதது.
5. பரிசுத்தவான்களின் விடாமுயற்சி.
சுருக்கமாக இங்கே தரப்பட்டுள்ள இக்கோட்பாடுகளை பிற்பாடு நாம் விளக்கமாகப் பார்ப்போம். ஆனால் இவற்றிற்கும் ஆமீனியனின் போதனைகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை நாம் கவனிக்காமல் இருக்க முடியாது. வரலாறு சந்தித்த இக்கருத்து வேறுபாடுகளில் காணப்படும் வித்தியாசம் மிக முக்கியமானது. ஏனெனில் அது கடவுள், பாவம், இரட்சிப்பு ஆகிய கிறிஸ்தவக் கோட்பாடுகளை அடியோடு மாற்றியமைப்பவை. இறையியல் வல்லுனரான ஜே, ஐ. பெக்கர் இதைப்பற்றிக் குறிப்பிடும்போது, “இவை இரண்டுக்குமிடையில் காணப்படும் வேறுபாடு அவை முதன்மைப்படுத்தும் காரியங்களில் தங்கியிராமல் அவற்றின் உள்ளடக்கங்களிலேயே தங்கியுள்ளன. ஒன்று இரட்சிப்பைத் தரும் கடவுளைப் பற்றிப் போதிக்கிறது; இன்னொன்று மனிதன் தன்னை இரட்சித்துக் கொள்ளும்படியாக அவனுக்குத் துணை புரியும் கடவுளைப்பற்றிக் கூறுகிறது. இதில் கல்வினிசமோ, பிதாவின் தெரிந்து கொள்ளல், குமாரனின் மீட்பு, ஆவியின் அழைப்பு ஆகிய முப்பெருங் காரியங்களின் மூலமும் ஆவியானவர் இழந்துபோனவர்களின் இரட்சிப்பை உறுதிப் படுத்துவதாகக் கூறுகிறது. ஆனால் ஆமீனியனிசமோ இவற்றில் எதன் மூலமாகவும் ஒருவர் இரட்சிப்பை நிச்சயமாக அடைவதில்லை என்று போதிக்கின்றது. இவை இரண்டுமே இரட்சிப்பின் கோட்பாடுகளைக் குறித்த இரு வேறு விளக்கங்களைத் தருகின்றன. ஆகவே இவ்விரு இறையியல் கோட்பாடுகளும் இரட்சிப்பைக் குறித்த கடவுளின் திட்டத்தை வெவ்வேறு விதமாகப் புரிந்து கொண்டுள்ளன. ஒன்று இரட்சிப்பு கடவுளின் கிரியையில் தங்கியிருப்பதாகவும், இன்னொன்று அது மனிதனில் தங்கியிருப்பதாகவும் போதிக்கின்றது; ஒன்று, விசுவாசம் கடவுள் அளிக்கும் இரட்சிப்பாகிய ஈவின் ஒருபகுதியாக இருப்பதாகவும், இன்னொன்று அது இரட்சிப்பிற்கு மனிதனின் பங்களிப்பாக இருப்பதாகவும் கருதுகின்றது; ஒன்று விசுவாசிகளின் இரட்சிப்பிற்கு கடவுளுக்கே எல்லா மகிமையையும் அளிப்பதாகவும், இன்னொன்று அம்மகிமையை கடவுளுக்கும் மனிதனுக்குமிடையில் பங்கிடுவதாகவும் உள்ளது. இவ்வேறுபாடுகளை நாம் அவதானிப்பது மிக அவசியம்” என்கிறார். இதில் கல்வினிசமே கடவுளை மகிமைப்படுத்தி இரட்சிப்பு அவர் தரும் மார்க்கம் என்று தெளிவாகப் போதிக்கின்றது.
(வளரும்)