கேள்வி 26: கிறிஸ்து எவ்வாறு ஆசாரியராகிய பணியினைச் செய்கிறார்?
பதில்: கிறிஸ்து தேவநீதியைச் சமாதானப்படுத்தும் பலியாகத் தன்னை ஒப்புக் கொடுப்பதன் மூலமும், கடவுளோடு நம்மை ஒப்புரவாக்குதலின் மூலமும், நமக்காகத் தொடர்ந்து மன்றாடுதலின் மூலமும் ஆசாரியராகிய பணியினைச் செய்கிறார்.
(எபிரேயர் 9:28; 2:17; 7:25)
விளக்கக்குறிப்பு:
இவ்வினாவிடை மூலம் நாம் பலராலும் தவறாகப்புரிந்து கொள்ளப்பட்டுள்ள திருமறை போதிக்கும் சீர்திருத்தக் கோட்பாடான ‘வரையறுக்கப்பட்ட (Limited) என்ற வார்த்தை பலருக்கு ஏற்புடையதாக இல்லாமிருக்கின்றது. இருந்தாலும் இவ்வார்த்தை வேதத்தின் முக்கிய போதனைகளில் ஒன்றான, கிறிஸ்து பரிகாரப் பலியாக எல்லா மனிதர்களுக்காகவும் அல்லாமல் சிலருக்காகவே மரித்தார் என்பதைக் குறிப்பிடுகின்றது. இதை விளக்க வேறொரு வார்த்தையான ‘குறிக்கப்பட்டவர்களுக்கான’ (Particular) என்ற பதமும் பயன்படுத்தப்படுகின்றது.
சீர்திருத்தக் கோட்பாட்டின் இப்போதனையை விளங்கிக்கொள்ள வேண்டுமானால் முதலில் கிறிஸ்துவின் பிராயச்சித்தம் அல்லது பரிகாரப்பலியின் வரையறுக்கப்பட்ட தன்மை அதன் மதிப்பிலல்லாது அதன் வடிவத்திலேயே உள்ளது என்பதை உணர வேண்டும். அதாவது கிறிஸ்துவின் திரு இரத்தம் வரையறுக்கப்படமுடியாத மதிப்புள்ளது. அத்தோடு அவரது மரணத்தின் பயன்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், தெரிந்து கொள்ளப்படாதவர்கள் என்ற வேறுபாடில்லாமல் நற் செய்தியின் வாயிலாக அதை கேட்கும் எல்லோருக்குமே இலவசமாக வழங்கப்படுகின்றது. எல்லா மனிதர்களுமே இரட்சிப்பைப் பெற்றுக் கொள்வதாயிருந்தாலும் கிறிஸ்துவின் பரிகரப்பலியின் மதிப்பு ஒருபோதும் எந்தளவும் குறைவடையாது. இருந்தாலும் பிதாவானவர் கிறிஸ்துவின் பிராயச்சித்தத்தின் வடிவத்தின் மீது ஒரு வரையறையை எற்படுத்தியுள்ளார். அது என்னாவெனில், பிதாவானவர் எவரை இரட்சிக்க வேண்டுமென்று சித்தங்கொண்டாரோ அவர்களையே கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் இரட்சித்தார் என்பதாகும்; அவர்களுக்குப் பதிலாகவே கிறிஸ்துவும் தம்மைப் பலியாகக் கொடுக்கச் சித்தங் கொண்டார். தனது மரணத்தின் பயன்கள் பிதாவினால் தம்மிடம் கொடுக்கப்பட்டவர்களுக்காக மட்டுமே வரையறுக்கப்பட வேண்டுமென்று கிறிஸ்து சித்தங் கொண்டார் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை (யோவான் 17:2,5,9,10; 10:15; 6:38,39)
திருமறையின் இப்போதனைக்கு எதிரான கருத்துக்கள் உலவுகின்றன இவற்றில் ஒன்று, ‘தனிமுதல் மன்னுய்திக் கோட்பாடகும்’ (Absolute Universalism) இக்கருத்து கடவுள் எல்லா மனிதர்களையுமே இரட்சிக்கச் சித்தங்கொண்டிருப்பதால், கிறிஸ்துவால் எல்லோருமே இறுதியில் இரட்சிக்கப்படுவார்கள் என்று போதிக்கிறது. ஆனால் திருமறையோ சிலர் ஒருபோதுமே இரட்சிப்பை அடையமாட்டார்கள் என்று தெளிவாகப் போதிக்கின்றது (மத்தேயு 25:31-46). இது திருமறைக்கு எதிரான கருத்து என்பதால் கிறிஸ்தவர்கள் எப்போதுமே இக்கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்று World Council of Churches1 உடன் தொடர்புடைய சபைகளும், நிறுவனங்களும், ‘புதுக்கருத்துக் கோட்பாட்டுமுறையை’ (Modernism2) பின்பற்றுபவர்களுமே இக்கருத்தைக் கொண்டுள்ளார்கள்.
இதைவிட இன்னுமொரு கருத்தும் பரவலாகக் காணப்படுகின்றது. கிறிஸ்தவர்களிடையெ இதை இன்று பெருமளவில் அவதானிக்கலாம். இதனைக் ‘கட்டுப்பாடுடைய மன்னுய்திக்கோட்பாடு’ (Conditional Universalism) என்று அழைப்பர். இக்கருத்துப்படி கடவுள் குறிப்பிட்ட வேண்டுமென்று ஒருபோதுமே சித்தங்கொள்ளவில்லை. அதுமடடுமன்றி கடவுள் மனிதன் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும் செயலின் ஒருபாகத்திற்கு மட்டுமே காரணகர்த்தாவாக இருந்து அதன் மறுபாகத்தை நிறைவு செய்யும் பொறுப்பை மனிதனிடமே விட்டுவிட்டார் என்றும் போதிக்கின்றது. இன்னொருவிதத்தில் கூறப்போனால் கிறிஸ்துவாலன்றி ஒருவருமே இரட்சிப்பை அடைய முடியாது; அதேவேளை மனிதனின் துணையின்றி அல்லது அவனது பங்கில்லாமல் கிறிஸ்து ஒருவரையும் இரட்சிக்கவும் முடியாது. மனிதன் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்க அவனுக்குதவுவதாக இக் கருத்து போதிக்கும் ‘சுயாதீனமான அவனது சித்தமே’ இப் ‘பங்காகக்’ கருதப்படுகிறது. சுருக்கமாகக் கூறப்போனால் தன்னை இரட்சித்துக் கொள்ளக்கூடிய சுயமான வல்லமையை மனிதன் கொண்டிருக்கிறான் என்பது இப்போதனையின் சாராம்சம்.
இப்போதனை மிகவும் ஆபத்தானதாகும். ஏனெனில் இது இரட்சிப்பை தங்களுடைய சுய முயற்சியால் ‘எல்லோருமே’ அடைந்துவிடாலாம் என்று போதிக்கின்றது. இப்போதனையைப் பின்பற்றும் சிலர் இரட்சிப்பை ‘எல்லோரும்’ தங்களுடைய சுய முயற்சியால் அடைந்து விடலாம் என்று போதிக்கும் ஆர்வத்தில் இயேசு கிறிஸ்து ‘மட்டுமே’ இரட்சிப்பிற்கு காரண கர்த்தாவாக இருக்கிறார் என்ற திருமறையின் போதனையை இது நிராகரிக்கின்றது.
இப்போதனையைப் பின்பற்றுபவர்களே இன்று நற்செய்தியை இலவசமாக வழங்கும் ஆர்வத்தில் அதனை ‘மலிவான’தாக மாற்றியுள்ளனர். கூட்டத்தில் கை தூக்கினால் போதும் கர்த்தரை இலகுவாக அடைந்துவிடாலாம் என்று பலர் விசுவாசிப்பதற்கும் இப்போதனையே காரணம். இதை விசுவாசிப்பவர்கள் பாவிகள் இரட்சிப்பை அடைய கர்த்தரின் வல்லமையை நம்பியிருக்காமல் தனி மனிதர்கள் எடுக்கும் தீர்மானங்களை நம்புகிறார்கள். ‘கர்த்தருக்காகத் தீர்மானம் எடு’ என்று பல பிரசங்கிகள் கூட்டங்களில் கதறுவதற்கும் இப்போதனையே காரணம். இவலசமாக நற்செய்தியை வழங்கும் படியாகத்தான் வேதம் போதிக்கின்றதே தவிர இரட்சிப்பை மனிதன் தன்முயற்சியால் அடைந்துவிடாலாம் என்று போதிப்பதில்லை.
இப்போதனைக்கு மாறான திருமறையின் தெளிவான போதனையை குறிக்கப்பட்டவர்களுக்கான அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான மீட்பு என்று அழைப்பர். இது இயேசு கிறிஸ்த குறிப்பிட்ட விளக்குகின்றது. இதை சரியாக நாம் விளங்கிக் கொள்ளக் கிறிஸ்துவின் மரணத்தின் வடிவத்தை, அதன் தகுதியைப் பற்றி முதலில் புரிந்து கொள்ளல் அவசியம். கிறிஸ்து சிலுவையில் மரித்தபோது அவர் குறிக்கப்பட்டவர்கள் அல்லது தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்காகவே மரித்தார் என்பது திருமறையின் போதனை. ஆனால் இவ்வாறாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எல்லா நாடுகளையும், எல்லா இனத்தையும் சேர்ந்தவர்கள். உலகெங்கும் இவர்கள் பரந்து காணப்படுகின்றார்கள்.
இதனையே யோவானும், ‘நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற ‘பலியாயிருக்கிறார்’ என்று குறிப்பிடுகிறார். யோவான், கிறிஸ்து எந்தவித விதிவிலக்குமின்றி எல்லா மனிதர்களுக்காகவும் மரித்தார் என்று போதிக்கவில்லை. ஆனால் கிறிஸ்து சர்வலோகத்திலுள்ள அநேக மனிதர்களுக்காகவும் மரித்தார் என்றே போதிக்கிறார். இது திருமறையன் ஏனைய பகுதிகளின் போதனைகளுடன் ஒத்துப் போவதாகவுளள்து. ஜோன் ஓவன் ‘மரணத்தினால் உண்டாகும் வாழ்வு’ என்ற தனது நூலில் (புத்தக விமர்சனம், இதழ் 2, 95) இதனை விரிவாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார்.
திருமறை பொதுவான மன்னுய்திக் கோட்பாட்டைப் போதிப்பதில்லை. ஒவ்வொரு மனிதனுக்குமாகவே கிறிஸ்து மரித்தார் என்ற போதனைக்கும் வேதத்திற்கும் தொடர்பில்லை. ஆனால் திருமறையின் குறிக்கப்பட்டவர்களுக்கான மன்னுய்திக் கோட்பாட்டின்படி நாம் சர்வலோகத்திலுள்ள எல்லா மனித இனங்களுக்கும் முழுமையான இரட்சிப்பைத் தரக்கூடிய நற்செய்தியை அறிவக்க முடியும். நாம் இந்நற்செய்தியை அனைவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டியது நமது கடமையாயிருக்கிறது. தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனையும் மனந்திரும்பி கிறிஸ்வை விசுவாசிக்கும்படியாக அழைக்க வேண்டியது நமது கடமை. ஏனெனில் ஜீவபுத்தகத்தில் பெயர் குறிக்கப்படுள்ளவர்கள் யார் என்பதை அறிந்தவர் ஒருவருமேயில்லை. ஸ்பர்ஜன் கூறுவதுபோல, ‘கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு பாவியாகிய மனிதன் அவர் தனக்காகவே மரித்தார் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் அவர்களுக்கு இரட்சிப்போடு தொடர்புடைய விசுவாசம் இன்னும் கொடுக்கப்படவில்லை. ஆனால் ஒவ்வொரு மனிதனும் அவரை விசுவாசிப்பது அவசியம், ஏனெனில் அதன் மூலம் மட்டுமே கிறிஸ்து ஒருவரை இரட்சிப்பதாக வேதம் கூறுகிறது’. கிறிஸ்துவின் இரட்சிப்பை அதற்காகக் குறிப்பிடப்படாதவர்களுக்கு எவ்வாறு வழங்க முடியும்? என்ற வினாவுக்கு விடையளிக்கும் ஸ்பர்ஜன், ‘ஒவ்வொரு மனிதனும் கிறிஸ்து எல்லோருக்குமாக நற்செய்தியின் மூலம் தம்மை வழங்குகிறார் என்ற வினாவுக்கு விடையளிக்கும் ஸ்பர்ஜன், ‘ஒவ்வொரு மனிதனும் கிறிஸ்து எல்லோருக்குமாக நற்செய்தியின் மூலம் தம்மை வழங்குகிறார் என்று அறிந்திருந்தால் போதும்; நற்செய்தி எல்லோருக்கும் செந்தமானது, அவரிடம் விசுவாசத்தோடு வருபவர்கள் இரட்சிப்பை அடைவார்கள்; அவரை நிராகரிப்பவர்கள் எந்தவிதமான சாக்குப் போக்கும் சொல்ல முடியாது’ என்று கூறுகிறார்.
திருமறை போதிக்கும் இந்த வரையறுக்கப்பட்ட பிராயச்சித்தக் கோட்பாட்டை விசுவாசிக்கும்போதே நமக்கு இரட்சிப்பின் ஆனந்தமும் நிச்சயமும் கிடைக்கின்றது. ‘என்னில் அன்பு கூர்ந்து எனக்காகத் தம்மைத் தாமே ஒப்புக் கொடுத்தார் தேவகுமாரன்’ என்ற முடிவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் கிறிஸ்து குறிக்கப்பட்டவர்களுக்காகவே மரித்து, அன்போடு இரட்சிப்புக்குரிய நற்செய்தியை முழு உலகெங்கும் எல்லா நாடுகளும, எல்லா இனமும், ஒவ்வொரு மனிதனும் கேட்கும்படியாகப் பிரசங்கித்து மனந்திரும்பி தன்னை விசுவாசிப்பவர்களுக்கு இரட்சிப்பை அளிக்கிறார். இத்தெளிவான திருமறையின் போதனையைப் பின்பற்றி போலித்தனமான போதனைகளில் இருந்து எம்மைக் காத்துக் கொளவாம்
1. இதைச் சேர்ந்த சபைகள் சத்தியத்தின் அடிப்படையிலல்லாது வெறும் நிறுவன அடிப்படையில் ஒன்று செர்ந்து இயங்குகின்றன. பிற மதங்களின் மூலமாகவும் சத்தியம் வெளிப்படுத்தப்படுவதாக இவர்கள் நம்புகிறார்கள்.
2. இதுவும் ‘லிபரலிசமும்’ ஒன்றே. வேதம் பல தவறுகளைக் கொண்டுள்ளதாகவும், கலாச்சாரத்தின் அடிப்படையில் எழுதப்பட்டிருப்பதால் அது காலத்திற்குத் தகுந்தபடி பயன்படுத்தப்பட வேணடியதென்றாகவும் இது கருதுகின்றது, வேதத்தைவிட மனிதசிந்தனைக்கும், ஞானத்திற்கும் இது அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.