கேள்வி 21: கடவுள் முழு மனித இனத்தையும் பாவத்தாலும் அவலத்தாலும் அழிந்து போகும் நிலையில் விட்டாரா?
பதில்: கடவுள் அநாதிகாலமுதல் தனது நன் நோக்கத்தின்படி சிலரை நித்திய ஜீவனுக்காகத் தெரிந்துகொண்டதோடு, அவர்களைப் பாவம் அதனால் ஏற்பாடும் அவலம் ஆகியவற்றிலிருந்து விடுவித்து, இரட்சிப்பை அடைவதற்கான வழிமுறையை மீட்பரொருவரின் மூலமாக ஏற்படுத்தினார்.
(எபேசி. 1:4; ரோமர் 3:21-22)
விளக்கக்குறிப்பு:
இவ்வினாவிடை கடவுளின் நிபந்தனையற்ற தெரிந்துகொள்ளுதலைப்பற்றிப் போதிக்கின்றது. 1. கடவுள், பாவத்தில் வீழ்ந்துள்ள மனிதரின் மொத்தத் தொகையில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையினரை இரட்சிப்பைப்பெறும்படியாக தெரிந்துகொண்டுள்ளார் என்றும், 2. இவர்களில் காணப்பட்ட எந்தவித நன்மைகளின் அடிப்படையிலும் கடவுள் இவர்களைத் தெரிந்துகொள்ளவில்லை என்றும், கடவுளின் தெரிந்துகொள்ளுதல் நிபந்தனையற்றது, ஏனெனில் அவர் தெரிந்துகொள்ளப்படாதவர்களில் காணப்படாத எதையும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் காணவில்லை என்றும், 3. கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே இரட்சிக்கப்பட முடியும் என்றும், 4. இறுதியாக அநாதி காலத்திலிருந்தே இத்தெரிந்துகொள்ளுதலானது கடவுளால் நிர்ணயிக்கப்பட்டது என்றும் இப்போதனை விளக்குகின்றது. இவை ஒவ்வொன்றையும் விளக்க இங்கே இடமில்லாவிட்டாலும் இவை வேதத்தில் தெளிவாகப் போதிக்கப்பட்டுள்ள உண்மைகள்.
கேள்வி 22: கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் மீட்பர் யார்?
பதில்: மனித உருவெடுத்து, ஒரே ஆளில் கடவுள், மனிதன் ஆகிய இருவேறு தன்மைகளைக் கொண்டு அன்றும் இன்றும் என்றும் தொடர்ந்து நித்திய தேவகுமாரனாக இருக்கும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஒருவரே கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் மீட்பர்.
(1 தீமோ. 2:5; யோவான் 1:14; ரோமர் 9:5; எபிரேயர் 7:24)
விளக்கக்குறிப்பு:
இயேசு ஒருவரே என்ற பதத்தை நாம் முக்கியமாக இங்கே அவதானிக்க வேண்டும். எல்லா மதங்களிலும் உண்மை இருக்கிறது என்று போதிக்கப்பட்டு வரும் இக்காலத்தில் வேதம் இயேசு ஒருவரே தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் மீட்பராகவுள்ளார் என்று வலியுறுத்துகிறது (மத்தேயு 4:10; யோவான் 17:3; 3:16; அப்போஸ்தலர் 4:12; யோவான் 14:6; 1 யோவான் 2:23). உடன் தொடர்புடையவர்கள் இன்று நற்செய்தியை எடுத்துச் சொல்வதைப் பணியாகக் கொள்ளாமல் “தத்துவக் கலந்துரையாடலில்” ஈடுபட்டு வருகிறார்கள். அதாவது மற்றவர்களுடைய மதத்திலும் உண்மை இருக்கிறது என்ற அடிப்படையில் அவர்கள் சொல்வதையும் நாம் கேட்க வேண்டும் என்பது இவர்களது வாதம். இவ்விருமுகக் கலந்துரையாடலின் மூலம் ஒரு புது மதத்தைத் தோற்றுவிப்பது இவர்களின் நோக்கமாகவுள்ளது. இப்புது மதம் எல்லா மதங்களிலும் உள்ள “நன்மைகளை” உள்ளடக்கியதாக இருக்கும் என்பது இவர்களுடைய எதிர்பார்ப்பு. இப்போலிப்போதனைக்கு எதிரான திருமறையின் நலயை இவ்வினாவிடை விளக்குகிறது. இயேசு கிறிஸ்துவை மட்டுமே ஆண்டவராக ஏற்றுக்கொள்ள மறுக்கும் அனைவரும் விரிவும், விசாலமுமான வாசலின் வழியில் கேட்டை நோக்கிப் போகிறவர்களாக இருக்கிறார்கள். இதையே இவ்வினாவிடை வலியுறுத்துகிறது.
அத்தோடு கிறிஸ்துவில் கடவுள், மனிதன் ஆகிய இரு தன்மைகள் இருப்பதாக திருமறை கூறுகின்றது. “ஜெகோவாவின் சாட்சிகள்” கிறிஸ்துவில் “தெய்வீகத் தன்மை” மட்டுமே இருப்பதாகப் போதிக்கிறார்கள். “லிபரல்” கொள்கையுடையோர் கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையை ஒப்புக் கொண்டாலும், அவர் பிதாவுக்கும் பரிசுத்த ஆவிக்கும் சமமானவரல்ல என்று நம்புகிறார்கள். வேறு சில அவரது மானிடத்தன்மையை மறுதலிக்கிறார்கள். ஆனால் தேவமோ கிறிஸ்து ஒரே ஆள் என்பதோடு, அவரில் பூரணமான ஒற்றுமையுடன் போதிக்கின்றது. இதைக் கிறிஸ்தவர்கள் வெறும் மனித ஞானத்தைப் பயன்படுத்திப் புரிந்து கொள்ள முயலாமல் விசுவாசத்தோடு நம்புதல் அவசியம். நான்காம் நூற்றாண்டில் “பிசப்பாக இருந்த “ஏரியன்” என்பவன் கிறிஸ்துவின் ஆள்தன்மையை இவ்வாறாகத் திரிபுபடுத்தியதை திருச்சபை வரலாறு விளக்குகிறது. “அத்தனேஸியஸ்” என்ற மனிதனால் திருச்சபைக்கு வரவிருந்த ஆபத்தும் அக்காலத்தில் தவிர்க்கப்பட்டது. இத்தகைய போலிப்போதனைகள் இன்றும் நம்மைச்சுற்றி வலம் வருகின்றன.
கேள்வி 23: தேவகுமாரனாகிய கிறிஸ்து எவ்வாறு மனித உருவெடுத்தார்?
பதில்: தேவகுமாரனாகிய கிறிஸ்து மெய்யான சரீரத்துடனும், நேரிய ஆவியுடனும், பாவமற்று, பரிசுத்த ஆவியின் வல்லமையால், கன்னித் தன்மையுடனிருந்த மரியாளின் உதரத்தில் மனிதனாகப் பிறந்தார்.
(எபிரேயர் 2:14; மத்தேயு 26:38; லூக்கா 1:31, 35; எபிரேயர் 7:26)
விளக்கக்குறிப்பு:
இங்கே நாம் ரோமன் கத்தோலிக்க சபையின் போதனையை திருமறையின் போதனையோடு ஒப்பிட்டுப் பார்த்தல் அவசியம். ரோமன் கத்தோலிக்க சபை கன்னித் தன்மையைப் பெரிதுபடுத்தி மரியாளைத் தெய்வமாக்குகிறது. ஆனால் திருமறையோ கிறிஸ்துவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. கிறிஸ்து பிறந்த விதத்தின் சிறப்பைப் பற்றித்தான் வேதம் வலியுறுத்துகிறதே தவிர மேரியைப் பெருமைப்படுத்தவில்லை. தேவ மனிதனாகிய இயேசுகிறிஸ்துவை மரியாள் பெற்றேடுத்திருந்தாலும் அவள் தெய்வமல்ல. கத்தோலிக்க மதம் மரியாளின் கன்னித் தன்மையை பாவமற்றதாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. அதாவது மரியாள் பிறந்தது முதல் தொடர்ந்து கன்னித்தன்மையுடன் இருந்ததாக அது போதிக்கின்றது. அது திருமறைக்கு எதிரான போதனை. இயேசு பிறக்கும்வரை மரியாள் கன்னித் தன்மையுடன் இருந்ததாகவே வேதம் போதிக்கிறது (மத்தேயு 1:25)
“இத் திருமறைக் கல்வியை வேதபாட வகுப்புகளிலோ, ஞாயிறு பாடசாலைகளிலோ முறையாகப் போதிப்பது சபைமக்கள் ஆவிக்குரிய வாழ்வுக்கான வேத அறிவு பெற்று வளரத் துணைபுரிவதாக அமையும்”.
பாவமற்ற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கன்னித்தன்மையுடன் இருந்த மரியாளின் வயிற்றில் பிறந்தார் என்று அறிவிப்பதற்காகவே திருமறை, மரியாளின் கன்னித்தன்மையைப் பற்றிக் குறிப்பிட்டுக் கூறுகின்றது. தேவ மனிதனாகிய கிறிஸ்து அற்புமாக பரிசுத்த ஆவியின் செயலால் கன்னி மேரியின் வயிற்றில் பிறந்து மனிதத் தன்மையை ஏற்றார். இருந்த போதும் மரியாளின் பாவம் அவரைப் பற்றவில்லை. அத்தோடு கிறிஸ்து ஏனைய மனிதரைப்போலத் தாமும் அதேவிதமான சரீரத்தையும், ஆவியையும் உடையவராக இருந்தார், (எபிரெயர் 2:17, 18) ஆனால் அவரில் பாவம் மட்டும் காணப்படவில்லை. கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பை உள்ளடக்காமல் பாவிகளுக்கு இரட்சிப்பைப் கூறும் நற்செய்தி அமைய முடியாது.
கேள்வி 24: கிறிஸ்து எமது மீட்பராக எத்தகைய பணிகளைச் செய்கிறார்?
பதில்: கிறிஸ்து எமது மீட்பராக தீர்க்கதரிசி, ஆசாரியர், அரசன் ஆகிய பணிகளைத் தனது தாழ்த்தப்பட்ட நிலையிலும், உயர்த்தப்பட்ட நிலையிலும் நிறைவேற்றுகிறார்.
(அப்போஸ்தலர் 3:22; எபிரேயர் 5:6; சங்கீதம் 2:6)
விளக்கக்குறிப்பு:
கடவுள் மனிதனை உருவாக்கியபோது அவனைத் தன் சாயலில் உருவாக்கினார். அப்போது மனிதன் மெய்யான அறிவையும், நீதியையும், பரிசுத்தத்தையும் கொண்டிருந்தான். ஆகவே அவர் ஒரு தீர்க்கதரிசியாகவும், ஆசாரியனாகவும், அரசனாகவும் இருந்தான் என்று கூறலாம். ஆதாம் பாவம் செய்து தன் நிலையிலிருந்து வீழ்ந்தபோது நாமும் அவனோடு வீழ்ந்தோம். ஆகவே நாமனைவருமே அறிவீனராய், குற்ற உணர்வுடையவராய், பாவிகளாய் மாறினோம். இத்தகைய நிலையிலிருந்து சிலரைக் காப்பாற்றுவதற்கு கடவுள் என்ன செய்துள்ளார் என்பதையே திருமறை அறியத்தருகின்றது.
பழைய ஏற்பாடு கடவுள் தன் ஒரே குமாரனை அனுப்பி தன் மக்களை இரட்சிக்கும் நாளுக்காகத் தயார் செய்துள்ள வழிமுறைகளைத் தெரிவிக்கிறது. பழைய ஏற்பாட்டு வரலாறு கடவுளால் தெரிவு செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்ட தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள், அரசர்கள் ஆகியோரைச் சுற்றி வலம் வருகிறது. இய«சுகிறிஸ்து இவ்வுலகிற்கு வரும்வரை இவ்வழிகளில் கடவுள் தம் சித்தத்தை வெளிப்படுத்தினார். கிறிஸ்துவின் வருகையோடு இம்மூன்று பணிகளும் அவரில் நிறைவடைந்தன. கிறிஸ்து மீட்பாகிய பெருங்காரியத்தில் இம்மூன்று பணிகளையும் ஒன்றிணைத்தார். இவ்வுலகில் இருந்த காலத்தில் மட்டுமல்லாமல் கிறிஸ்து இன்றும் இம்மூன்று பணிகளையும் விண்ணுலகில் இருந்து நிறைவேற்றுகிறார்.
இரட்சிப்பை அடைவதற்கு இன்று ஒருவன் கிறிஸ்துவை இம்மூன்று விதத்திலும் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. 1. முதலில் கிறிஸ்துவை ஒருவன் வார்த்தையின் மூலமும், ஆவியினாலும் அறிந்து கொள்ளல் வேண்டும். தனது பாவத்தையும், கிறிஸ்துவைப் பாவநிவாரணியாகவும் அறிந்துணர வேண்டும். 2. தான் கிறிஸ்துவின் இரத்தத்தினால் சுத்தப்படுத்தப்பட வேண்டுமென்பதை உணர வேண்டும். இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பலி சகல பாவங்களையும் சுத்திகரிக்கப் போதுமானது என்று விசுவாசிக்க வேண்டும். 3. பாவத்தில் இருந்து விடுபட்டு அதற்கு அடிமைப்படாத வாழ்க்கை வாழ்தல் வேண்டும். ஆகவே இன்று உண்மையில் இரட்சிக்கப்படும் எவருடைய வாழ்விலும் கிறிஸ்து தீர்க்கதரிசியாகவும், ஆசாரியராகவும், அரசனாகவும் இருக்கிறார்.
இவ்வினாவிடை இம்மூன்று பணிகளையும் நாம் நினைத்தவாறு பிரித்துப் பயன்படுத்த முடியாது என்ற உண்மையையும் போதிக்கிறது. ஒரு பணியை மேன்மைப்படுத்தி மற்றதைக் குறைவுபடுத்த முடியாது. சிலர் தமக்கு வேதத்தில் ஒரளவு அறிவு இருப்பதால் தாம் கிறிஸ்தவர்கள் என்று எண்ணிக் கொள்கிறார்கள். வெறும் அறிவு மட்டும் ஒருவனில் மனந்திரும்புதலை ஏற்படுத்தாது. வேறு சிலர் அனுபவத்தையும், உணர்ச்சிகளையும் மட்டும் விசுவாச வாழ்கிகையாகக் கருதுகிறார்கள். ஆனால் வெறும் அறிவு, அனுபவம், அல்லது உணர்ச்சிகள் மட்டும் ஒருவனைக் கிறிஸ்தவனாக்கிவிடாது. கிறிஸ்து தீர்க்கதரிசியாகவும், ஆசாரியராகவும், அரசராகவும் ஒருவரது வாழ்வில் அமைய வேண்டுமானால் அவனில் கிறிஸ்துவைப்ற்றிய மெய்யான அறிவு ஏற்பட்டு அதன்மூலம் உள்ளுணர்வுகள் மாற்றமடைந்து, சித்தம்திரும்பி, மனந்திரும்புதல் ஏற்படல் வேண்டும்.
இம்மூன்று பணிகளுடன் கிறிஸ்துவை எற்றுக்கொண்டு, செயற்படாத எந்த சபையுடனும் இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் இருக்காது என்பதையும் நாம் உணர வேண்டும். திருமறையைக் களங்கமில்லாது குற்றமறப் போதிப்பதன் மூலமும், திருவருட்சாதனங்களை விசுவாசத்தோடு செயற்படுத்துவதன் மூலமும், சபை ஒழுங்குமுறையைக் கடைப்பிடிப்பதன் மூலமும் மட்டுமே திருச்சபைகள் இன்று தீர்க்கதரிசி, ஆசாரியர், அரசர் ஆகிய பணிகளைச் செய்ய முடியும். இவற்றில் ஒன்றை மட்டும் கொண்டிருப்பதால் எந்ததக் குழுவும் சபையாகிவிட முடியாது. இன்று அநேக சபைகள் திருமறையை முறையாகப் போதிக்கத் தவறுவது மட்டுமல்லாமல், சபை ஒழுங்கு முறையையே உதாசீனம் செய்து வருகிறார்கள். கிறிஸ்து ஆட்சி புரியும் சபைகளில் போலிப் போதனைகளுக்கோ, தவறான உலகப்பிரகாரமான ஆராதனை முறைகளுக்கோ, சட்டசபைகளில் நாம் காணும் மக்களாட்சி முறறைக்கோ இடமிருக்காது. கிறிஸ்து ஆட்சிபுரியும் சபைகளில் கிறிஸ்துவின் வார்த்தைக்கு மட்டுமே மதிப்பிருக்கும்; மாண்பிருக்கும்.