கேள்வி? – பதில்!

வாசகர்கள் எமக்கு அனுப்பும் கேள்விகளில் தெரிவு செய்யப்பட்டவை ஏனையோரின் பயன்கருதி இப்பகுதியில் பிரசுரமாகும். – ஆசிரியர்

இசைவழி ஊழியங்களும் அருளுரையும் ? !

இசைவழி ஊழியங்கள் பற்றிய தங்கள் கருத்தென்ன? தமிழ்க் கலாச்சாரத்துடன் ஆழ்ந்த தொடர்புடைய இசை நிகழ்ச்சியான ‘வில்லுப்பாட்டு’ போன்றவற்றின் மூலம் கர்த்தரின் செய்தியை எடுத்துச் சொல்வது தவறா?

கேள்வி சுருக்கமாக அமைந்துவிட்டபோதும் இதற்கான பதில் சுருக்கமாக அமைவது கடினம். இன்று பலர் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இசைவழி ஊழியங்கள் மூலம் கர்த்தரைப்பற்றி எடுத்துச் சொல்லி வருகிறார்கள். பலர் தங்கள் தாலந்துகளைப் பயன்படுத்தி இவ்வூழியத்தின் மூலம் தங்களைப் பெருமைப்படுத்திக் கொள்ளும் வேளையில், பல சிரமங்களுக்கு மத்தியில் இவ்வூழியத்தைச் செய்து வருபவர்களும் உண்டு. ஆனாலும் இவ்வகை ஊழியங்களை எவ்வாறு நியாயப்படுத்த முடியும், இவற்றிற்கு வேதம் அனுமதி கொடுக்கிறதா? என்று நாம் ஆராய வேண்டியது அவசியம்.

கர்த்தருடைய வழிபாடு பற்றியும், ஊழியங்கள் பற்றியும் திருமறையில் தெளிவான போதனைகள் கொடுக்கப்படவில்லை என்ற விதத்தில் இன்று பலரும் நடந்து வருகிறார்கள். ஆனால் திருமறை இது குறித்து தெளிவாகப் போதிக்கின்றது. திருமறையை விளங்கிக்கொள்ள அவசியமான விதிமுறைகளைப் பயன்படுத்தி வேதத்தைப் படிக்கும்போது அத்தகைய வழிமுறைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இவ்விதி முறைகளைக் குறித்துக் கேள்வி பதில் பகுதியில் முன்னொரு தடவை எழுதியுள்ளோம். கேள்வி நேரடியாக வழிபாட்டு முறைகளைப்பற்றியதாக இல்லாததாலும் அத்தோடு விபரமாக அதைக் குறித்து விளக்கமளிக்க இப்பகுதியில் இடமில்லாததாலும் சுருக்கமாக அதைப்பற்றி விளக்கிய பின் ‘இசை வழி ஊழியங்களைப்’ பற்றிய கேள்விக்கு வருவோம். எதற்கெடுத்தாலும் வேதமா? என்று கேட்கும் கூட்டத்தார் மத்தியில் அதனை மட்டுமே அதிகாரமாக ஏற்று எழுதுவது இப்பத்திரிகையின் நோக்கமாதலால் வாசகர்கள் இதைக் குறித்து சிந்தித்துப் பொறுமையாக ஆராயும்படி வேண்டுகிறேன்.

முதலில் வழிபாட்டு முறைகள் பற்றியும், ஊழியங்கள் பற்றியும் திருமறை தெளிவாகப் போதிக்கின்றது என்பதை நாம் உணர வேண்டும். கடவுள் தம்மை வெளிப்படுத்தியதோடு நின்று விடாமல் நாம் எவ்வாறு அவரை வழிபட வேண்டும் என்றும் தனது நியாயப் பிரமாணங்களின் மூலம் தெளிவாகப் பழைய ஏற்பாட்டு மக்களுக்குத் தெரிவித்தார் (யாத்திரியாகமம் 20:4; 25; 25:8, 40; உபா. 4:2; நீதி. 30:6; உபா. 12:29-32; லேவி. 10:1-7; 2 சாமு. 6:7). இவ் வேதப்பகுதிகளின்படி கடவுளின் வார்த்தையோடு எதையும் சேர்க்கவோ அதிலிருந்து எதையும் நீக்கவோ கூடாது. அத்தோடு அவர் ஏற்படுத்தித் தந்துள்ள வழிபாட்டு முறைகளில் நாம் கை வைக்கவும் கூடாது. அதைப் பின்பற்றிப் புதிய ஏற்பாட்டிலும் கிறிஸ்துவின் அதிகாரம் பெற்ற அப்போஸ்தலர்கள் புதிய ஏற்பாட்டு வழிபாட்டு முறைகளை சபைகளில் ஏற்படுத்தினார்கள் (அப்போஸ். 2:40; எபேசி. 5:19; 1 தீமோ. 4:13; 2 தீமோ. 4:2). இதே அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் நியமனப்படி சபைகளும், ஊழியங்களும் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்றும் புதிய ஏற்பாடு முழுவதும் தெளிவாகப் போதித்துள்ளனர். பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபத்தில், 1.15 – தேவனுடைய வீட்டில் எப்படி நடக்க வேண்டுமென்று நீ அறியும்படி இவற்றை உனக்கு எழுதுகிறேன். அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபை – என்று அப்போஸ்தலப் பிரதிநிதியான தீமோத்தேயுவிற்க்கே அறிவுரை செய்வதைப் பார்க்கிறோம். திருமறைக்கெதிரான வழிமுறைகளை குறித்து தீமோத்தேயுவுக்கே அறிவுரை செய்வதைப் பார்க்கிறோம். திருமறைக்கெதிரான வழிமுறைகளை தீமோத்தேயு கூட தேவசபையில் அனுமதிக் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. இவற்றை மீறி கர்த்தருடைய காரியங்களைச் செய்தால் அவை அவரால் ஏற்றுக் கொள்ளப்படும் வழிபாட்டு முறைகளாகவோ ஊழியங்களாகவோ இருக்காது என்பது திருமறையின் முடிவு.

அடுத்து இசையைப்பற்றி நாம் பொதுவாக ஆராய்தல் அவசியம். இசை மனிதனுக்கு இதமளிக்கும் ஒரு சாதனம்; கலைகளில் ஒன்று இசை. முத்தமிழில் இசைத் தமிழும் ஒன்று. வேதம் இசையை நிராகரிக்கவில்லை. பழைய புதிய ஏற்பாட்டு மக்களின் சமுதாய வாழ்க்கையில் இசையின் பங்கை வேதத்தில் பரவலாகப் பார்க்கலாம். இருந்தபோதும் இசை என்ற பெயரில் காணப்படும் எல்லாக் கலை வடிவங்களையும் திருமறை அனுமதிப்பதில்லை. இசை மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் சாதனமாக இருப்பது மட்டுமல்லாமல் மாறும் மனித உணர்ச்சிகளைப் போல் தானும் மாறுதல்களுக்கு உட்படுகின்றது. சமுதாய மாறுதல்களுக்கு ஏற்ப இசையிலும் நல்லவையும் கேடானவையும் நுழைந்து விடுகின்றன. மேலை நாட்டு ‘பாப்’, ‘ரெப்’ இசை வடிவங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அதேபோல் தமிழ்க் கலாச்சாரத்தோடு தொடர்புடைய இசைக் கலை வடிவங்களிலும் தகுதியானவையும் தகுதியற்றவையும் உண்டு. அதாவது இறைவழிபாட்டுக்கும், இறை ஊழியத்திற்கும் தகுதியானவையும், ஏனைய சமயங்களில் கலை நிகழ்ச்சியாக மட்டும் பயன்படுத்தக் கூடியவையும் உண்டு. வேதம் நாம் எதையும் கிறிஸ்தவ வாழ்க்கைக்கும், கிறிஸ்தவ ஆராதனைக்கும், ஊழியத்திற்கும் ஏற்றவையா என்று ஆராய்ந்து பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் இசையில் நமக்குப் பொருந்தாவற்றை நாம் நிராகரிக்கப் பழக வேண்டும். இசை ஒரு கலை வடிவமாதலால் அது நமது உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் வல்லமை கொண்டது. திருமறை நமது உணர்ச்சிகளுக்குத் தடை போடாவிட்டாலும்  ஆராதனையிலும், ஏனைய ஊழியங்களிலும் இசையும் அதை வெளிப்படுத்தும் இசைக் கருவிகளும் அடக்கத்தோடு பயன்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஆராதனைக்கும், ஏனைய ஊழியங்களுக்கும் பங்கம் ஏற்படாத வகையில் இசை அமைய வேண்டும். இசை இறை ஆராதனைக்குத் துணையாகத்தான் இருக்க முடியுமே தவிர ஆராதனையிலோ, தேவ செய்தியளிக்கும் இடங்களிலோ பிரதான இடத்தைப் பெற முடியாது. நாம் இங்கு ‘இசைவழி ஊழியங்களைப்’ பற்றியே ஆராய்வதால் ஆராதனை பற்றிய விளக்கத்தை இத்தோடு நிறுத்திக் கொள்வோம்.

அடுத்ததாக, தமிழ்க் கலாச்சாரத்தோடு தொடர்புடைய இசை நிகழ்ச்சியான வில்லுப்பாட்டைப் பற்றிக் கவனிப்போம். வில்லுப்பாட்டு ஒரு இசைக் கலைச் சாதனம். இதைப் பற்றிப் பேசும்போது இன்னொரு கலைச்சாதனமான கதாப்பிரசங்கத்தைப் பற்றி எழுதுவதும் பொருந்தும். இந்துக்கள் மத்தியில் திருவிழாக் காலங்களில் கோவில்களில் கம்பராமாயணம், பாரதம் போன்ற கதைகளைப் பாட்டோடு எடுத்துச் சொல்லப் பயன்படுத்தப்படும் கலை வடிவம் இது. கிருபானந்தவாரியார் இதற்குப் பெயர் போனவர். வில்லுப் பாட்டும் இதைப்போன்றதே. ஆனால் வில்லுப்பாட்டில் வில்வடிவில் அமைந்த இசைக்கருவி பயன்படுத்தப்படுகிறது. அத்தோடு வில்லுப்பாட்டில் பாட்டோடு கதையைச் சொல்லும் பிரதான பாத்திரத்திற்கு ஒத்துப்பாடி ஆமோதிக்கும் கூட்டமொன்றிருக்கும். மிகமுக்கியமாக வில்லுப்பாட்டில் நகைச்சுவைக்கு பிரதான இடமுண்டு. ஒருவர் தான் சொல்லப்போகும் விஷயத்தை கற்பனைத்திறத்தோடு, உதாரணங்களுடன் இடையிடையில் பாட்டையும் கலந்து நகைச்சுவையோடு வில்லுப்பாட்டில் சொல்வது வழக்கம். கேட்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டி தேவையான வேளையில் அவர்களைச் சிரிக்க வைத்து மகிழ்ச்சியூட்டும் கலைச்சாதனம் வில்லுப்பாட்டு.

இத்தகைய அம்சங்களைக் கொண்ட வில்லுப்பாட்டு திருமறையின்படி நன்மையோ தீமையோ அல்லாத நடுநிலையில் அமைந்த (Things indifferent) ஒரு கலைச் சாதனம். வேதத்தில் ஒன்றை ஆதரித்தோ அல்லது அதற்கு எதிராகவோ எந்தவிதப் போதனையும் காணப்படாவிட்டால் அது Things indifferent ஆகக் கருதப்பட வேண்டும். அதாவது அதனால் ஒருவருக்கு நன்மையோ தீமையோ இல்லை. கலைச்சாதனங்கள் இந்தப்பிரிவில் அடங்கும். ஆகவே வில்லுப்பாட்டு கலைநிகழ்ச்சி என்ற அடிப்படையில் ஒரு சமுதாய கலைநிகழ்ச்சியாக அமைவதில் நாம் எவ்வித மறுப்பும் தெரிவிக்க முடியாது. ஆனால் தேவ செய்தியை அதிகார பூர்வமாக எடுத்துச் சொல்லும் கலைச் சாதனமாக இது பயன்படுத்தப்படலாமா என்பதுதான் ஆராயப்பட வேண்டிய கேள்வி.

ஆகவே, கர்த்தரின் சித்தத்தை அறிவிக்கும் வேதத்தை எடுத்துச் சொல்ல திருமறை ஏதாவது வழி முறைகளைக் காட்டுகிறதா என்று நாம் ஆராய வேண்டும். சிலர் வேதம் வில்லுப்பாட்டிற்கும், இசைவழி ஊழியங்களுக்கும் மறுப்புத் தெரிவிக்கவில்லை, ஆகவே அவற்றை அருளுரை வழங்கப் பயன்படுத்தலாம் என்று வாதாடலாம். வேதம் அநேக காரியங்களுக்கு வெளிப்படையாக மறுப்புத் தெரிவிக்கவில்லை என்பதற்காக அவற்றை எங்கேயும் எப்படியும் பயன்படுத்தலாம் என்று வாதாடுவது அறிவீனம். அதைவிட வேதம் அருளுரை வழங்குவதைப்பற்றி என்ன சொல்கிறது என்று ஆராய்வதே சரியான முறை. அவ்வாறு ஆராய்கிறபோது அதைப்பற்றி வேதத்தில் தெளிவான போதனை இருக்குமானால் அதை விடுத்து வேறு வழிகளை நாடுவது முறையல்ல.

திருமறை நற்செய்தியை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மட்டும் கூறாமல் அதை எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும், எத்தகைய சாதனத்தைக் கொண்டு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் போதிக்கிறது. எதைக் கொண்டு நற்செய்தி எடுத்துச் சொல்லப்பட வேண்டும் என்ற ஆராய்ச்சியை நம் கையில் விட்டுவிடாமல் கர்த்தரே அதற்கான வழிமுறையைக் காட்டியுள்ளார். திருமறையின் போதனையின்படி ‘பிரசங்கமே’ கர்த்தரால் தெரிவு செய்யப்பட்ட அருளுரை வழங்கும் பிரதான சாதனம். 1 கொரி. 1:18-20 இல் பவுல் சிலுவையைப் பற்றிய உபதேசத்தைக் குறித்துக் குறிப்பிடும்போது கெட்டுப்போகிறவர்களுக்கு அது பைத்தியமாக இருப்பதாகவும், பைத்தியமாகத் தோன்றுகிற இப் ‘பிரசங்கத்தினாலேயே’ (the thing preached) விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று என்றும் போதிக்கிறார். இவ்வசனங்கள் நற்செய்தியின் அவசியத்தை மட்டுமல்லாது விசுவாசிகளின் இரட்சிப்பிற்காக அதை எடுத்துச்சொல்லப் பயன்படுத்த வேண்டிய சாதனம் பிரசங்கம் எனவும் வலியுறுத்துகின்றன. ரோமர் பத்தாவது அதிகாரமும் இதைப் பற்றித் தெளிவாகப் போதிக்கிறது.

‘பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்’ என்று ரோமர் 10:14 இல் வாசிக்கிறோம். இங்கே பிரசங்கம் என்ற வார்த்தைக்கு (கிரேக்க மொழியில்) ‘அதிகாரபூர்வமாகவும், அதிகாரத்துடனும் தன் மக்களுக்குத் தெரிவிக்கும் முறையை இவ்வார்த்தை படம் பிடித்துக் காட்டுகிறது. இவ்வார்த்தை வேதத்தின்படி உரைநடையாக வார்த்தையை எடுத்துரைப்பதைத்தான்  விளக்குகிறதே தவிர இதில் கவிதைக்கோ அல்லது சங்கீதத்திற்கோ வேறு இசைவடிவங்களுக்கோ இடமில்லை. பழைய ஏற்பாட்டிலும் இவ்விதமாகவே இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கின்றது (நெகேமியா 6:7; ஏசாயா 61:1; யோனா 3:2). திருமறையில் 65 தடவைக்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ள இவ்வார்த்தைக்கு இதைத் தவிர வேறெந்த அர்த்தமுமில்லை. கர்த்தரைப் பொறுத்தவரையில் பிரசங்க ஊழியமே அதிகாரபூர்வமாக வேதத்தைப் போதிக்கும் முறை. அத்தகைய அதிகாரத்தோடு வேதத்தைப் போதிக்கும் சாதனமாக பிரசங்கத்தைத் தவிர வேறு எதுவும் தேவனால் தெரிவு செய்யப்படவில்லை (மாற்கு 3:14; லூக்கா 4:18; அப். 8:4, 5; 2 தீமோத்தேயு 4:2). ஒரு நாட்டை ஆளும் அரசன் அதிகாரபூர்வமாக தனது கட்டளையை மக்களுக்கு வெளிப்படுத்தும்போது அதை இசை நிகழ்ச்சி மூலமாக வெளியிட்டதாக வரலாறே இல்லை. பிரசங்கம் நித்திய மரணத்திலிருந்து ஒருவனுக்கு விடுதலை தரக்கூடிய தேவசெய்தியை அளிக்கத் தெரிவு செய்யப்பட்டது. பிரசங்கத்தில் நகைச்சுவைக்கு இடமில்லை, கற்பனைத் திறத்திற்கு இடமில்லை, அநாவசியக் கட்டுக்கதைகளுக்கும் அது நுழைவாயிலல்ல. பிரசங்கத்தின் பிரதான நோக்கம் கேட்பவர் மனத்திற்கு இதமளிப்பதோ, அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் கதைகள், புராணங்களைச் சொல்லி மகிழ்விப்பதோ அல்ல; கேட்பவர்களின் இதயத்தைக் கூறாக்கி கர்த்தரின் முன் கொண்டு வருவதுதான் அதன் பணி. பிரசங்கத்தில் கர்த்தரின் வார்த்தையின் அதிகாரமும், வல்லமையும் வெளிப்பட வேண்டும். இதை இசைவழி ஊழியங்கள் மூலமாகவோ, நாடகத்தாலோ செய்ய முடியாது. அத்தோடு பிரசங்கத்தையும் இத்தோடு தொடர்புடைய போதித்தலையும் தவிர வேறு முறைகளைப் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளோ, இயேசு கிறிஸ்துவோ, அப்போஸ்தலர்களோ கையாண்டதாக வரலாறில்லை.

இன்று கிறிஸ்தவ ஊழியங்கள் தேவவல்லமையற்றிருப்பதற்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரசங்கத்திற்கு மதிப்பில்லாமல் போனதும் ஒரு முக்கிய காரணமாகும். பவுல் தனது பிரசங்கத்தை ஆசீர்வதிக்கும்படியாகக் கடவுளிடம் ஜெபத்தில் மன்றாடுமாறு பலமுறை கிறிஸ்தவர்களைக் கேட்டதைத் திருமறையில் வாசிக்கிறோம் (எபேசி. 6:19; கொலோ. 4:3; 2 தெசலோ. 3;1). ஏனெனில் பவுலைப் பொறுத்தவரையில் கவிதையோ, கட்டுக்கதையோ அல்ல, மனுஷ ஞானமோ நய வசனமோ இல்லாது ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்ட பிரசங்கமே (1 கொரி. 2:4) கர்த்தரின் ஆசீர்வாதத்தோடு கேட்போர் இருதயத்தைப் பிளந்து அவைகளைத் தேவனிடம் கொண்டுவரக்கூடிய சாதனமாக இருந்தது. இன்று அத்தகைய பிரசங்கத்திற்காகவும், பிரசங்கிகளுக்காகவும் நாம் கடவுளிடம் மன்றாட வேண்டியவர்களாக இருக்கிறோம். பெடில்லா என்பவர், ‘பிரசங்கம் செய்வது எப்போது சபைகளில் நிறுத்தப்படுகிறதோ அன்றே சபைகளுக்கும் அழிவு காலம் ஏற்படுகின்றது’ என்று சரியாகவே சொன்னார்.

இந்த அடிப்படையில் பார்க்கின்றபோது தமிழ்க் கலாச்சாரத்தோடு தொடர்புடைய இசை நிகழ்ச்சிகள், கூத்துக்கள் சமூதாயக் கலாச்சார நிகழ்ச்சிகளாக அமைந்து கேட்போர் மனத்திற்கு மகிழ்ச்சியூட்டுபவையாக மட்டுமே அமைய முடியுமே தவிர தேவ செய்தியை எடுத்துரைக்கவும், கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்படுத்தும் சாதனங்களாகப் பயன்படவும் கர்த்தரால் தெரிவு செய்யப்படவில்லை என்பது எமது தாழ்மையான கருத்து. இது வில்லுப்பாட்டுக்கும் பொருந்தும். ஏனைய இசையோடு தொடர்புடைய கலை நிகழ்ச்சிகளுக்கும், நாடகத்திற்கும் பொருந்தும்.

(வாசகர்கள் இது குறித்து தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை எழுதி அனுப்பலாம். – ஆசிரியர்)

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s