வாசகர்கள் எமக்கு அனுப்பும் கேள்விகளில் தெரிவு செய்யப்பட்டவை ஏனையோரின் பயன்கருதி இப்பகுதியில் பிசுரமாகும் – ஆசிரியர்
திருமறையும் தமிழ்க் கலாச்சாரமும்!
ஒருவர் கிறிஸ்தவராக மாறியபின் எந்தளவுக்கு தமது கலாச்சாரத்தைத் தொடர்ந்து பின்பற்ற முடியும்?
முதலில் கலாச்சாரம் என்றால் என்ன என்று சிந்திக்க வேண்டும். கலாச்சாரம் என்பது ஒரு இனத்தின் வாழ்க்கைமுறை அல்லது பண்பாடு. கலாச்சாரம் இல்லாத இனமே இல்லை. சமுதாயத்தோடு ஊறிப்போயிருப்பது கலாச்சாரம். ஒருவிதத்தில் ஒவ்வொரு இனத்திற்கும் ஒளியூட்டுவது அதன் கலாச்சாரம் என்று கூறலாம். ஆகவே எந்த இனத்திலிருந்தும் அதன் கலாச்சாரத்தைப் பிரிக்க முடியாது. ஓரினத்தின் கலாச்சாரத்தை அழிப்பதன் மூலம் அந்த இனத்தையே அழித்துவிடலாம். எனவே கலாச்சாரம் என்பது தீமையானதல்ல.
திருமறையின்படி எல்லா இனங்களும் பாவத்தின் குழந்தைகளாக இருப்பதால் அவ்வினங்களின் கலாச்சாரமும் பாவத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. பாவத்தினால் பாதிக்கப்படாத பண்பாடே இல்லையெனலாம். ஆகவே எந்த இனக்கலாச்சாரமாக இருந்தாலும் அதில் நல்லதும், கெட்டதும் சேர்ந்தே காணப்படும். கர்த்தரின் வார்த்தையே நம் பண்பாட்டில் எது அவரது நியாயப்பிரமாணத்திற்கு முரணானது என்று விளக்கிக் காட்டுவதாக இருக்கிறது. கர்த்தரின் வார்த்தைக்கு முரணான எதையும், அது நாம் வழிவழி வந்த பண்பாடாக இருந்தாலும் கிறிஸ்தவர்கள் பின்பற்றக் கூடாது. வேத வாழ்க்கை நடத்தும்போது வேதத்திற்கு முரணானவற்றை நாம் பின்பற்றக் கூடாது. அத்தோடு தமிழ்க் கலாச்சாரத்தோடு இந்துமத சடங்குகளும், சம்பிரதாயங்களும் ஒன்றிணைந்து காணப்படுவதால் புறமதத் தொடர்புடைய பழக்க வழக்கங்களை நாம் பண்பாடென்ற பெயரில் பின்பற்ற முடியாது. இதற்கு உதாரணமாக பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது, சில வகைப் பண்டிகைகளைக் கொண்டாடுவது ஆகியவற்றைக் குறிப்பிடலாம். திருமறையைக் கொண்டு நம் கலாச்சாரத்தில் எவை பின்பற்றத்தகாதவை என்பதை நாம் ஆராய்தல் அவசியம். இது எல்லா இனங்களுக்குமே பொருந்தும்.
சமய சார்பற்ற சில வழக்கங்கள் இனங்களிடம் காணப்படலாம். உதாரணமாக நான் வாழும் நாட்டிலுள்ள ‘மவொரி’ (Maori) என்ற இனத்தவர் ஒருவரை வரவேற்கும்போது அவர்கள் மூக்கைத் தமது மூக்கால் தொட்டு வரவேற்பது வழக்கம். இதே விதமாக வேறு இனத்தவர் ஒருவரைக் கட்டி அணைத்து வரவேற்பதை வழக்கமாகக் கொண்டிருக்கலாம். மேலைநாட்டினர் கைகளைக் குலுக்கி வரவேற்பர். நாம் கைகூப்பி வரவேற்பதைப் பண்பாடாகக் கொண்டிருக்கிறோம். இவற்றிற்கும் சமயத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லாததால் இவற்றை நாம் தொடர்ந்து பின்பற்றலாம். இவ்வாறு திருமறையைப் பயன்படுத்தி நாம் நமது காலாச்சாரத்தை ஆராய்வது அவசியம்.
கலாச்சாரம் என்பது வெறும் சடங்குகளையோ, சம்பிரதாயங்களையோ மட்டும் குறிப்பதாகாது. ஒழுக்கம் சம்பந்தமான காரியங்களிலும் சமுதாயத்தில் கலாச்சாரம் என்ற பெயரில் தவறான பழக்க வழக்கங்கள் காணப்படலாம். உதாரணமாக உண்மையை உண்மையென்றும், பொய்யைப் பொய்யென்றும் கூறாமல் மற்றவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும், நம்மைப் பற்றி அவர்கள் தவறாக நினைத்துவிடக்கூடாது என்பதற்காகவும் உண்மையைப் பொய்யாக்குவதும், பொய்யை உண்மையாக்குவதும் வழக்கம். இது பார்வைக்குத் தீமையற்றதாகப்பட்டாலும் திருமறையைப் பொறுத்தவரையில் போலித்தனமானதும் வெறுக்கத்தக்கதுமான செய்கையாகும். அல்லது இதே விதமாக திருமறைக்குப் புறம்பான ஒழுக்கக் குறைவான எதையும் அதுவே நடைமுறைப் பண்பாடாக மாறியிருந்தாலும் கூட நாம் பின்பற்றக்கூடாது.
கிறிஸ்தவ ஒழுக்கம் . . .
கிறிஸ்தவ ஒழுக்கத்தைப்பற்றி விளக்கிக் கூறுவீர்களா?
கிறிஸ்தவ ஒழுக்கம் என்று நாம் கூறுவது, கிறிஸ்துவுக்குள் நாம் வாழவேண்டிய புது வாழ்க்கையின் நடைமுறைப் பண்புகளைக் குறிக்கும். இதற்காக நமது பழைய வாழ்க்கையில் நாம் ஒழுக்கமே இல்லாதவர்களாக இருந்தோம் என்று அர்த்தமல்ல. ஏனெனில் ஒழுக்கத்தைப் பற்றிய எண்ணங்கள் நமக்கு ஏற்பட்டதற்குக் காரணமே கடவுளுடைய நியாயப்பிரமாணம் நம்மிருதயத்தில் எழுதப்பட்டிருந்ததுதான். ஆனால் உண்மையில் கூறப்போனால் திருமறையைப் பொறுத்தவரையில் கடவுளை அறியாமல் இருப்பதே ஒழுக்கக் குறைவு. கிறிஸ்தவ ஒழுக்கத்திற்கு அடிப்படையே கடவுளை அறிந்து கொள்ளும் அறிவுதான். ஒருவர் கிறிஸ்தவனாக மாறியபின் அவர் முதன் முதலாகக் கர்த்தர் தாம் எவ்வாறு வாழ வேண்டுமென்று தன் வார்த்தையில் கூறியிருக்கிறார் என்பதை அறிந்து கொள்கிறார். திருமறையே கிறிஸ்தவ ஒழுக்கத்தை விளக்கிக் கூறுகிறது.
யாத்திராகமம் 20 ஆம் அதிகாரத்தில் காணப்படும் பத்துக் கட்டளைகளும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய சுருக்கமான ஒழுக்கப் போதனைகளாக உள்ளன. புதிய ஏற்பாடு உட்பட முழுவேதமும் இவற்றின் அடிப்படையிலேயே அமைந்து இவற்றையே மேலும் விளக்கிக் கூறுகின்றது. இதனாலேயே இப்பத்துக்கட்டளைகளும் ‘ஒழுக்க நீதிச்சட்டங்கள்’ என்று அழைக்கப்படுகின்றது. இவ்வொழுக்க நீதிச் சட்டங்கள் கடவுளால் முழு மனித இனத்துக்கும் வழங்கப்பட்டது. இவற்றில் முதல் நான்கும் கடவுள் யார்? அவரை நாம் எவ்வாறு எந்நாளில் ஆராதிக்க வேண்டும் என்று போதிக்கின்றன. இறுதி ஆறும் நாம் கடவுளை அறிந்து கொண்ட அறிவோடு சக மனிதர்கள் மத்தியில் எத்தகைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்று போதிக்கின்றன. (குறிப்பாக சலுகைகளைப் பயன்படுத்தி முன்னுக்கு வருவது பற்றி வாசகர் கேட்ட வழக்கத்தை இக்கட்டளைகளின் 8 ஆம் 9 ஆம் கட்டளைகள் எதிர்க்கின்றன) ஆகவே இப்பத்துக் கட்டளைகளுக்குள் அடங்க முடியாத ஒழுக்கங்களே இல்லையெனலாம். அதுமட்டுமன்றி இவற்றின் அடிப்படையிலேயே புதிய ஏற்பாடும் ஒழுக்கம் பற்றிய அநேக போதனைகளைத் தருகின்றது. இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இக் கட்டளைகளின்படியும், புதிய ஏற்பாட்டின் போதனைகளின்படியும் வாழும் வல்லமையைத் தனது ஆவியின் மூலமாகக் கர்த்தர் அளிக்கிறார். அது மட்டுமல்லாது இவற்றை நாம் தவறாது கருத்தோடு பின்பற்றவேண்டுமென அவர் எதிர்பார்ப்பதோடு, இவற்றை மீறுபவர்கள் பாவம் செய்தவர்களாவார்கள் என்றும் விளக்கியுள்ளார் (மத்தேயு 5:17-20; யோவான் 2:3, 4; 1 யோவான் 3:4).
சிலர் இவை கடுமையானவையாக இருக்கின்றதென்றும் இவ்வாறெல்லாம் யாரால் வாழ முடியும் என்றும் வாதம் செய்யலாம். ஆனால் நாம் ஏற்கனவே கூறியபடி கடவுளுடைய அன்பை அறியாதவர்கள் இத்தகைய வாழ்க்கையை வாழ முடியாது. எங்கு உண்மையான தேவ அன்பிருக்கிறதோ அங்குதான் கடவுளின் கட்டளைகளுக்கு உட்படும் ஆர்வமும், அவரைப் பிரியப்படுத்தும் வேகமும் இருக்கும். கிறிஸ்தவர்கள் இக்கட்டளைகளை அடிமைத்தனத்தோடல்லாமல் அன்போடு நிறைவேற்றுகிறார்கள். ஏனெனில் கிறிஸ்தவ வாழ்க்கையில் அன்பு முக்கிய இடத்தை வகிக்கிறது. தேவ அன்பில்லாமல் அவரது கட்டளைகளை நாம் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது. அத்தோடு அவரது கட்டளைகளை நிறைவேற்ற மறுக்கிறவர்களும் தேவ அன்பையே அறியாதவர்கள் ஆவர் (யோவான் 15:10; யோவான் 5:2, 3).
சிலர் இப்பத்துக் கட்டளைகள் பழைய ஏற்பாட்டு மக்களுக்குக் கொடுக்கப்பட்டவை; புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்கள் இவற்றைப் பின்பற்றத் தேவையில்லை, ஏனெனில் கிறிஸ்து இவற்றைத் தம்மில் நிறைவேற்றி இவற்றில் இருந்து நமக்கு விடுதலை தேடித் தந்துள்ளார் என்று போதிக்கின்றனர். இவர்களை ‘Antinomians’, நியாயப்பிரமாணத்திற்கு எதிரானவர்கள் என்று அழைப்பர். திருமறையைத் தவறாகப் புரிந்து கொண்டதனால் பழைய, புதிய ஏற்பாடுகளுக்கிடையில் உள்ள தொடர்பை அறியாது இவர்கள் இத்தகைய முடிவுக்கு வந்துள்ளனர். கிறிஸ்து நியாயப்பிரமாணம் முழுவதையும் கடைப்பிடித்து தமது வருகையையும், சிலுவை மரணத்தையும், கிருபாதாரப்பலியையும் படம் பிடித்துக் காட்டும் பழைய ஏற்பாட்டு சடங்குகள், சம்பிரதாயங்களில் இருந்துதான் நமக்கு விடுதலை தேடித்தந்துள்ளார் (எபிரேயர்). ஆனால், பத்துக் கட்டளைகள் என்றுமே நிரந்தரமானவை. முழு மனித இனமும் அவற்றைப் பின்பற்ற வேண்டியது அவசியம். கிறிஸ்தவர்களுக்கு இவ்வுலகில் அது நிரந்தரமான வாழ்க்கை நியதி. ஒழுக்க வழிகாட்டி.
யெகோவாவின் சாட்சிகள்!
‘யெகோவாவின் சாட்சிகள்’ குறித்து விளக்குவீர்களா?
சுருக்கமாகக் கூறப்போனால் யெகோவாவின் சாட்சிகள் வழமையான கிறிஸ்தவ சமயக்குழுக்களில் ஒன்றல்ல. 1931 ஆம் ஆண்டில் இப்பெயரை ஏற்படுத்திக் கொண்ட இவ்வியக்கம் இதற்கு முன் வேறு நான்கு பெயர்களைக் கொண்டிருந்தது. இதற்கும் கிறிஸ்தவத்திற்கும் எந்தவிதத் தொடர்புமுமில்லை. இவர்கள் கடவுளின் பழைய ஏற்பாட்டுப் பெயர்களில் ஒன்றான யெகோவாவின் பெயரைப் பயன்படுத்தி திருமறைக்கு முற்றிலும் புறம்பான போதனைகளை ஏற்படுத்தியுள்ளனர். இதனை நாம் ஒரு சமயமாகக் கூட கருதுவதில்லை. இது தனியொரு மனிதனால் கிறிஸ்தவத்தின் பெயரில் ஏற்படுத்தப்பட்ட சமயத்தின் பெயரில் உலவிவரும் போலிக் கோட்பாடு. இப்போதனை இயேசு கிறிஸ்துவைக் கடவுளாக ஏற்றுக் கொள்வதில்லை. கிறிஸ்து யெகோவாவிலும் கீழானவர் என்று போதித்து கிறிஸ்தவ திரித்துவப் போதனையை இவ்வியக்கம் நிராகரிக்கிறது. யோவான் 1:1 ஐ இவர்கள் மாற்றிப் பயன்படுத்தி கிறிஸ்துவாகிய வார்த்தையின் தெய்வீகத்தை மறுதலிக்கிறார்கள். கிறிஸ்துவின் பிராயச்சித்தப் பலியை முழுமையானதாகக் கருதாமல், அதன் அடிப்படையில் மனிதன் தன்னைத்தானே இரட்சித்துக் கொள்ள முடியும் என்றும் இவ்வியக்கம் போதிக்கின்றது. கிறிஸ்து தனது சரீரத்தோடு உயிர்த்தெழாமல் ஆவியாகவே உயிர்த்தெழுந்தாரென்றும், அவரது சரீரத்திற்கு என்ன நடந்ததென்று தெரியாதென்றும் இது கருதுகின்றது. மேலும் வேதத்திற்குப் புறம்பான பல போதனைகளைக் கொண்ட மொத்தத்தில், கிறிஸ்தவத்தையே இழிவுபடுத்தும் ஓர் இயக்கம்.