வாசிக்க மறுப்பவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள் என்பது நாமறிந்த உண்மை. 16 ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதம் தோன்றுவதற்கு முன்பாக கத்தோலிக்க சபை, மக்கள் சுயமாகச் சிந்திப்பதைத் தடை செய்திருந்தது. வேதத்தை வாசித்து சுயமாக விளங்கிக் கொள்வது அக்காலத்தில் ஆபத்தான காரியமாக இருந்தது. அத்தகைய ஆபத்திலிருந்து கடவுள் நமக்கு விடுதலை தந்திருக்கிறார். இச்சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் கிறிஸ்தவர்கள் சிந்திக்கப் பழக வேண்டும். அதற்கு சபைப்போதகர்கள் துணை செய்ய வேண்டும். சபை மக்கள் வாசிப்பதற்கு உதவிசெய்யும் வகையில் சபைப் போதகர்கள் நல்ல நூல்களை அடிக்கடி தம் மக்களுக்கு அறிமுகப் படுத்த வேண்டும். சில வேளைகளில் வேத பாட வகுப்புகளிலோ, விசேட வகுப்புகளிலோ ஒரு நல்ல நூலை அதில் கலந்து கொள்கிறவர்களை வாசிக்க வைத்து, அதை முறையாகப் படிக்கலாம்.
சபையில் ஒரு நூலகத்தை ஏற்படுத்துவது இதற்குத் துணை புரியலாம். எத்தனையோ காரியங்களுக்கு பணம் செலவிடும் நாம் ஏன் நல்ல நூல்களுக்குப் பணம் செலவிடக்கூடாது? நல்ல நூல்கள் தமிழில் குறைவாகவே இருக்கும் வேளையில் இருப்பதையாவது நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா? திருச்சபைகள் உயிருள்ளவையாக இருக்கவும், நமது மூதாதையர் பெற்றுத்தந்த விடுதலையைப் பாதுகாக்கவும், சபைச் சீர்திருத்தத்தைத் தொடரவும், அக்கோட்பாடுகள் கொள்கைகளைப் போதிக்கும் நூல்களைக் கொண்ட நூலகம் ஒன்றை சபையில் ஏற்படுத்தி சபை மக்கள் அவற்றை வாசிக்க நாம் ஊக்கப்படுத்த வேண்டும். இன்றே இதைக் குறித்து சிந்திப்பீர்களா?