‘டொரான்டோ ஆசீர்வாதம்’ பற்றிய ஒரு கண்ணோட்டம்
சிரிக்க வைக்கும் சிரிப்பலை மாயம் பற்றிய செய்தியை இப்பத்திரிகை மூலமாக முன்பே தந்திருந்தோம். கனடாவின் டொரான்டோ நகரில் உள்ள ‘ஏர்போர்ட் வினியட் சபை’யின் மூலம் 1994 ஆம் ஆண்டில் இம்மாயம் முதன் முதலாக தலைப்புச் செய்தியில் இடம் பிடித்தது. பெந்தகொஸ்தே, பரவசக்குழுக்கள் மத்தியிலேயே பிரசித்தி பெற்று ‘டொரொன்டோ ஆசீர்வாதம்’ என்று பெயர் பெற்றுள்ள இதனைச் சிலர் ஆவியின் எழுப்புதல் என்று கூறினாலும் ஆண்டவரை இதுவரை அறியாத யாருமே அவரை இதன் மூலம் அறிந்து கொண்டதாக செய்தியில்லை. இதன் இன்றைய முக்கிய தலைவர்களில் ஒருவரான ரொட்னி-ஹாவார்ட் பிரவுன் இதனை எதிர்ப்பவர்கள் கண்கள் குருடாகி பேசமுடியாமல் போவார்கள் என்று பயமுறுத்தி வருகிறார். டொரான்டோவின் ‘ஏர்போட் வினியட் சபை’யில் ஆரம்பிக்கு முன்பாகவே இம்மாயம் பெனி ஹின், ரொட்னி ஹாவார்ட் பிரவுன், கென்னத் கோப்லான்ட் ஆகிய மனிதர்களால் நடத்தப்பட்டு வந்தது. மொரிஸ் செரூல்லோ, போல் யொங்கி சோ ஆகியோரும் இதைக் குறித்து நூல்கள் எழுதியுள்ளனர்.
‘நற்பேறளிக்கும் நற்செய்தி’ (Prosperity Gospel) என்ற இயக்கத்தின் மத்தியிலேயே இம்மாயம் முதன் முதலாகத் தோன்றியது என்று இதுபற்றி ஆராய்ந்துள்ளவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இவ்வியக்கம் விசுவாச இயக்கம் என்றும் அழைக்கப்படுறிது. அமெரிக்காவில் ஆரம்பித்த இப்பரவசக்குழு கிறிஸ்து தனது திருஇரத்தப்பலியின் மூலம் விசுவாசிகளைக் கேட்டின் வல்லமையின் பிரதிபலிப்பான சகலநோய்களிலிருந்தும், வறுமையிலிருந்தும் விடுவித்திருக்கிறார்; ஆகவே விசுவாசிகள் இவ்வுலகில் பூரணமான உடல் நலத்துடனும் வறுமையே அறியாத வளத்துடனும் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று போதித்து வருகின்றது.
இச்சிரிப்பலை மாயம் இன்று கட்டுக் கடங்காது கீழைத்தேய நாடுகளிலும் வேமாகப்பரவி வருகிறது. பெனி ஹின் இதைக் கடந்த வருடம் மே மாதம் தமிழகத்திற்கும் ஏற்றுமதி செய்திருக்கிறார் (சென்னை சீரணி அரங்கில் பென்னி ஹின்னின் கூட்டம் நடந்தது). பரவசக்குழுக்களே இதனால் இன்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. எது கர்த்தர் தரும் ஆசீர்வாதம் என்று அறிய முடியாதபடி கண்கெட்டுப் போய் உள்ள இக்குழுக்கள் கண்களுக்கு அதிசயமாய்ப்படுகின்ற அனைத்தும் கர்த்தரின் ஆசீர்வாதமே என்று இச்சிரிப்பலை மாயத்தையும் இருகரமேந்தி வரவேற்கிறது. ஆனால் எல்லோருமே இவ்வலையில் விழுந்துவிடுகிறார்கள் என்று சொல்வதற்கில்லை. சமீபத்தில் அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரத்தில் உள்ள ஒரு சபை எமக்கு அனுப்பிய நிருபத்தில் அந்நகரத்தைச் சேர்ந்த ஒரு பெரிய கெரிஸ்மெட்டிக் சபையில் இருந்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இச் சிரிப்பலை சபையில் அனுமதிக்கப்பட்டதை முன்னிட்டு வெளியேறியுள்ளதாக வாசிக்கிறோம். பல குடும்பங்கள் இம்மாயத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதே வேளை குருட்டுக் கண்களுடன் கண் மூடித்தனமாக எதையும் பின்பற்றும் கூட்டம் இதை வரவேற்று அரவணைப்பதையும் பார்க்க முடிகின்றது. இவர்களுக்காக நாம் அனுதாபப்படுகின்ற அதேவேளை சிரிப்புருவில் சிந்தையைக் குழப்ப வரும் இவ்வாபத்தைப்பற்றி விளக்காமலும் இருக்க முடியாது. இச்சிரிப்பு மாயம் ஏன் கர்த்தரின் ஆசீர்வாதம் அல்ல, ஆனால் சாத்தானின் புதிய தந்திரம் என்பதற்கான காரணங்களைக் கீழே தருகிறோம்.
1. இது நடக்கும் கூட்டங்களில் வேதத்திற்கு இடமில்லை. வேத வாசிப்போ, வேத போதனையோ இடம்பெறுவதில்லை. கர்த்தரைப் பற்றியும் நகைச்சுவையாக அடிக்கடி பேசப்படுகின்றது. இதை ஆரம்பித்து வைத்த கனடாவில் உள்ள ஒரு சபை விநியோகிக்கும் வீடியோ நிகழ்ச்சியில் இதைத்தான் நாம் பார்க்க முடிந்தது. மொத்தத்தில் இக்கூட்டங்களில் ஒரு நகைச்சுவை விருந்தே கிடைக்கிறது.
2. இக்கூட்டங்களில் பார்வையாளரின் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு நிலத்தில் புரளுதல், சிங்கத்தைப் போலக் கர்ச்சனை செய்தல், கட்டுக் கடங்காமல் சத்தமிட்டு சிரித்தல், வலிப்பு வந்ததுபோல ஆடுதல் போன்றவையே இடம் பெறுகின்றன. முதலில் இதைச் செய்பவர்கள் ஆழ்ந்த நித்திரைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். ஹிப்னோடிசத்துக்கு உட்படுத்தப்பட்டவர்கள் போல் அதன்பின் அவர்கள் நிலைமாறிவிடுகின்றது. ஒரு பிரபலமான ‘கெரிஸ்மெட்டிக்’ போதகர்களை மேடைக்கழைத்து அவர்களைப் பேச முடியாதபடி செய்து, அவர்கள் பேசுவதற்கு எடுக்கும் பிரயத்தனங்களை ஒரு நாடகம் பார்ப்பது போல் பார்த்து கூட்டத்தார் கைகொட்டிச் சிரிக்கும்படிச் செய்தார். பரிசுத்த ஆவியே இவர்களைப் பேசமுடியாதபடி செய்தார் என்று கூட்டத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டது. வல்லமையோடு பிரசங்கம் செய்யும் வரத்தைக் கொடுக்கும் பரிசுத்த ஆவி, போதகர்களைக் கூட்டங்களில் பேசமுடியாதபடிச் சிரிக்கும் நிலைக்கு கொண்டு வருவார் என்று வேதத்தில் எங்கே எழுதியிருக்கிறது? இதை தேவ ஆசீர்வாதம் என்று நம்புபவர்கள் கண்களும் சிந்தையும் நிச்சயம் குருடாய்த்தான் இருக்க வேண்டும்.
3. இதை எழுப்புதல் என்று கூற முடியாது. ஏனெனில் இத்தகைய கோமாளித்தனங்களுக்கும் எழுப்புதலுக்கும் சம்பந்தமேயில்லை. மெய்யான எழுப்புதல் நிகழ்ந்த காலங்களில் மக்களிடம் தேவ பயமிருந்தது. அங்கே வேதத்திற்கும் பிரசங்கத்திற்கும் பெருமதிப்பிருந்தது. பிரசங்கத்தின் மூலம் மக்களுடைய பாவம் உணர்த்தப்பட்டு மனந்திரும்புதல் ஏற்பட்டது. ஆனால் இக்கூட்டங்களில் கிறிஸ்தவர், கிறிஸ்தவர் அல்லாதவர் என்ற எந்தவித வேறுபாடுமின்றி எல்லோரும் சிரிக்கவும், மிருகங்களைப்போல் சத்தமிடும் அதிசயத்தை நாடும்படி மட்டுமே வற்புறுத்தப்படுகிறார்கள். வரலாறு சந்தித்துள்ள எழுப்புதல்கள் எவற்றிலுமே இத்தகைய செயல்கள் நிகழ்ந்ததில்லை. இவற்றிற்கு வேதத்திலும் எந்தவித ஆதாரமுமில்லை.
4. இதை பரிசுத்த ஆவியின் செயல் என்று கூற முடியாது. வேதத்தில் ஓரிடத்திலாவது இத்தகைய காரியங்களைப் பரிசுத்த ஆவி செய்வார் என்று நாம் வாசிப்பதில்லை. ஆவியானவருக்கும் இக்கோமாளித்தனத்திற்கும் எந்த சம்பந்தமுமிருக்க முடியாது. ஆவியானவர் பரிசுத்தமானவர்; அவர் ஆண்டவர் இதை மறந்து அவர் பெயரில் கூத்தாடுவதை கர்த்தர் மன்னிக்க மாட்டார். இத்தகைய செயல்களைப் புறமதங்களில்தான் பார்க்கலாம். சாத்தானின் கைங்கரியத்தால் சாமி வந்து ஆடும் நிலை கர்த்தரின் குழந்தைக்கு ஒருபோதும் ஏற்படாது. தூய ஆவியின் பெயரில் அவரால் நிரப்பப்பட்டிருக்கிறோம் என்று கூறி சாத்தானின் பிடியில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறவர்களின் கூத்தின் இன்னுமொரு காட்சியே இச்சிரிப்பலை மாயம். உண்மையிலேயே ஆவியால் நிரப்பப்பட்டிருப்பவர்களிடத்தில் அமைதி காணப்படும்; அலங்கோலம் இருக்காது. இந்நிரப்புதலை ஒருவர் மற்றவருக்குக் கொடுக்க முடியாது. ஆவியானவர் தமது பணியை ஒருபோதும் ஒருவருக்கும் குத்தகைக்கு விடவில்லை. ஆவியால் நிறைந்திருப்பவர்களிடத்தில் ஆவியின் கனிகளின் வளர்ச்சியே காணப்படுமே தவிர ஆவியானவரை அவமதிக்கும் செயல்கள் காணப்படாது.
5. இச்சிரிப்பலை மாயத்தை வளர்ப்பவர்களின் போதனைகள் திருமறைக்குப் புறம்பானவை. ‘விசுவாச இயக்கம்’ என்றும் ‘நற்பேறளிக்கும் நற்செய்தி இயக்கம்’ என்றும் அழைக்கப்படும் கூட்டத்தினரின் வழி வந்த இச்சிரிப்பலை மாயத்தலைவர்கள் நோய்களும், துன்பமும், வறுமையும் பிசாசினால் அனுப்பப்பட்டவை எனவும் அவற்றில் இருந்து விசுவாசிகளுக்கு கிறிஸ்து விடுதலை கொடுத்திருப்பதாகவும் போதிக்கின்றார்கள். கிறிஸ்தவர்கள் தாம் விரும்புவதைத் தம் மனத்தில் உருவகப்படுத்தி அதைத் தமது விசுவாசத்தால் பெற்றுக் கொள்ள முயல வேண்டும் என்றும் போதனை செய்கிறார்கள். இவர்களைப் பொறுத்வரையில் விசுவாசம் கடவுள் நமக்குத் தரும் ஈவல்ல; அது ஒரு இயற்கை நியதி; இதைப் பயன்படுத்தி மனிதன் தான் நினைத்ததைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது இவர்களது நம்பிக்கை. இவையெல்லாம் திருமறைக்கு ஒவ்வாத மனித சிந்தனையில் முளைத்த களைகள். இத்தகைய போதனைகளைப் புறமதங்களில் உள்ள மூடநம்பிக்கைகளோடு மட்டுமே நம்மால் தொடர்புபடுத்த முடிகின்றது. இதற்கும் திருமறைக்கும் எந்த சம்பந்தமுமில்லை.