மகா பிரசங்கியான சார்ள்ஸ் ஹெடன் ஸ்பர்ஜனின் அருமை மனைவியார் சுசானா. ஸ்பர்ஜனின் அன்புக்குரிய வாழ்க்கைத் துணைவியாக இருந்தது மட்டுமல்லாமல் அவரது ஊழியத்திற்கும் பெருந்துணையாக இருந்தார் சுசானா. ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று கூறுவார்கள். அது ஸ்பர்ஜனைப் பொறுத்தவரை மிகப் பொருந்தும்.
ஸ்பர்ஜன் போதக ஊழியத்திற்கு அழைக்கப்படுபவர்களுக்கு அறிவுரைகூறி எழுதிய ‘என்னுடைய மாணாக்கருக்கான அறிவுரைகள்’ என்ற நூலை சுசானாவிற்குக் காட்டியபோது அவர், ‘இங்கிலாந்திலுள்ள ஒவ்வொரு போதகரும் இந்நூலை வாசிக்க வைக்க என்னால் முடியுமானால் எவ்வளவு நன்றாயிருக்கும்’ என்று உற்சாகத்தோடு கூறினார். உடனே ‘ஏன் அதை நீ செய்யக்கூடாது’ என்று ஸ்பர்ஜன் கேட்டது சுசானாவை சிந்திக்க வைத்தது. உடனடியாகத் தன்னிடமிருந்த நகைகளை விற்று அந்நூலின் நூறு பிரதிகளை அச்சேற்றினார் சுசானா. இவ்வாறாக நூல்கள் வாங்கப் பணமில்லாத போதகர்களுக்கான ‘திருமதி சுசானா ஸ்பர்ஜனின் நூல் நிதி’ தொடங்கியது. முதல் வருடத்திலேயே ஸ்பர்ஜனின் பிரசங்கங்கள், ஏனைய நூல்களை அவரால் விநியோகிக்க முடிந்தது. அவருக்கு நன்றிகூறி பலநூறு கடிதங்கள் வந்து குவியத் தொடங்கின. இச்சேவை சில வருடங்களுக்குள்ளாக மற்ற உலக நாடுகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டது. சுசானாவின் இறுதிக்காலங்களில் இந்நூல் நிதி ஊழியத்தின் மூலம் 200,000 நூல்கள்வரை போதகர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. சுசானாவின் ஊழியத்தின் மூலம் பலனடைந்த வசதியற்ற போதகர்கள் அநேகர். நல்ல நூல்களின் அவசியத்தையும், பலனையும் தன் கணவரின் ஊழியத்தின் மூலம் உணர்ந்திருந்த சுசானா ஏனையோரும் அவற்றின் மூலம் பயனடைய வேண்டும் என்ற ஆர்வத்தோடு தனது இறுதிக்காலம் வரை உழைத்தார். வரலாறுள்ளவரையும் கிறிஸ்தவ உலகம் அவரை மறக்காது.