“சத்தியத்தை அறிந்து கொள்வதற்கு நாம் திருமறையையே நாடி வர வேண்டும்” இது “யெகோவாவின் சாட்சிகள்” என்று அழைக்கப்படும் கூட்டத்தார் தங்களுடைய பிரசுரத்தில் வெளியிட்டிருக்கும் ஒரு வாசகம். இதிலிருந்து நாம் அறிந்து கொள்வதென்னவென்றால் பிசாசும் உண்மையைத் தன் காரியத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளத் தயங்க மாட்டான் என்பதுதான். இந்நிலையில் வெறுமனே திருமறையை நாம் விசுவாசிக்கிறோம் என்று கூறுவது மட்டும் போதாது, நாம் விசுவாசிப்பது என்ன என்பதைத் தெளிவாக, அறிந்திருக்கவும் விளக்கவும் வேண்டும்.
இதனாலேயே நமது முன்னோர் தாம் இரத்தப்பலி கொடுத்து அடைந்த ஆன்மீக விடுதலையை நாம் இழந்து விடக்கூடாது என்ற நன்நோக்கில் வேத சத்தியங்களைத் திருமறைக் கோட்பாடுகளாக விளக்கமாக எழுதி வைத்தனர். இவ்வாறு முன்னூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு இன்றுவரை உலகெங்கும் சத்தியத்தைப் பின்பற்றும் நூற்றுக்கணக்கான சபைகளினால் விசுவாச அறிக்கையால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள திருமறைக் கோட்பாடுகள்தான் 1689 விசுவாச அறிக்கை.
1855 இல் ஸ்பர்ஜன் தனது சபையையும், சுற்றிவர இருந்த சபைகளையும் சத்தியத்தில் வளர்க்கவும், போலிப் போதனைகளின் பிடியிலிருந்து பாதுகாக்கவும் இவ்விசுவாச அறிக்கையை மீண்டும் வெளியிட்டார். இத்தோடு தன்காலத்தில் சபைகளும், சமயக் குழுக்களும் திருமறையை விட்டு விலகிச் செல்வதையும் உணர்ந்த ஸ்பர்ஜன் இத்திருமறைக் கோட்பாடுகள் தனது மூப்பர்களும், சபையாரும் சத்தியத்தில் நிலைத்திருக்க பேருதவி புரியும் என்று நம்பினார். அதுமட்டுமல்லாது, ‘இத்திருமறைக் கோட்பாட்டின் தெளிவான சத்தியங்களை விசுவாசிக்காது தெளிந்த மனச்சாட்சியுடன் சபையில் அங்கத்தவர்களாக இருக்க முடியாது’ என்றும் அவர் தன் சபை மக்களிடம் கூறத்தயங்கவில்லை.
இன்று உலகெங்கும் பல்வேறு மொழிகளிலும் இது மொழி பெயர்க்கப்பட்டு சீர்திருத்த பாப்திஸ்து சபைகளின் (கிருபையின் போதனைகளைப் பின்பற்றும் சபைகள்) விசுவாச அறிக்கையாக விளங்குகிறது. சீர்திருத்தக் கோட்பாடுகளினதும், கிருபையின் போதனைகளினதும் செல்வாக்கு இன்று கிறிஸ்தவர்களை சிந்திக்க வைத்து, தாம் விசுவாசிக்கும் சத்தியங்களில் மேலும் அறிவு பெற வேண்டும் என்ற வாஞ்சையை அவர்களில் ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது திருமறைக் கோட்பாடுகள் இன்றி சபை வளர முடியாது, சத்தியத்தைப் பாதுகாக்க முடியாது என்று பல நாடுகளிலும் சபைத்தலைவர்கள் உணர்ந்து வருகிறார்கள். பரவசக் குழுக்களிடமும், போலித் தீர்க்கதரிசிகளிடமும், சபை மக்களும், போதகர்களும் சிக்கி அல்லல்படாதிருக்க வேண்டுமானால் சபையாக சத்தியத்தை முறையாக அறிந்திருக்க வேண்டும் என்ற உணர்வு இன்று பலருடைய உள்ளங்களில் நெருப்பாக எரிந்து கொண்டிருக்கின்றது. திருமறையை மட்டுமே நம்பி வாழ வேண்டுமென்ற சீர்திருத்த அக்கினிகொழுந்து விட்டு எரியும் இக்காலத்தில் தமிழிலும் இவ்விசுவாச அறிக்கையை வெளியிடும் அவசியம் ஏற்பட்டு கூடிய விரைவில் நூலாக வெளிவரவிருக்கிறது. இதன் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் இதன் இன்றியமையாத் தன்மை ஆகியவற்றை விளக்கும் முன்னுரைகளுடன் அடுத்த இதழ் வெளிவருமுன் இதனை வெளியிட உத்தேசித்துள்ளோம்.
1689 விசுவாச அறிக்கைக்கு சி. பி. ஸ்பர்ஜன் எழுதிய முன்னுரை
“1689 இல் வெளியிடப்பட்ட இந்த அருமையான போதனைகளை சிறு நூலாக மறுபடியும் வெளியிடுவது முறையானதென்றே எண்ணுகிறேன். சத்தியத்தின் காரணமாக நமக்கு ஒரு கொள்கைச் சின்னம் தேவைப்படுகிறது; மகத்துவமான நற்செய்தியின் நோக்கத்தை நிறைவேற்றத் துணைபுரிய, அதன் முக்கிய கோட்பாடுகளுக்கு இச்சிறு நூல் தெளிவான சாட்சியாக விளங்கும்.”
“நம்மால் விசுவாசிக்கப்படும் சத்தியங்களின் மிகச் சிறந்த உதாரணமாக இவ்வறிக்கை விளங்குகிறது. மகிமை வாய்ந்த நற்செய்தியின் அரும் பெருஞ் சத்தியங்களுக்கு விசுவாசமாக இருக்கும்படியாக திரித்துவக் கடவுள் நம்மைப் பாதுகாத்து வருவதால் இவற்றைத் தொடர்ந்து பின்பற்றி வாழ்வதில் உறுதியாய் இருக்க வேண்டுமென்று உணர்கிறோம்.”
“கருத்து வேறுபாடுகள் ஏற்படும் போது உதவுமுகமாகவும், விசுவாசத்தை உறுதிப்படுத்தவும், நீதியான வாழ்க்கையில் நாம் வளரத் துணை புரியவுமே இச்சிறு நூல் வெளியிடப்படுகின்றதே தவிர அதிகாரமுள்ள விதிகளாகவோ அல்லது விசுவாச வாழ்க்கைக்குரிய ஒழுக்கக் கோர்வையாகவோ அமைவதற்காக அல்ல. இது நமது சபையின் இளைய சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டியாக அமைவதோடு, வேத ஆதாரங்களுடன் அவர்கள் தங்களுடைய நம்பிக்கைக்கான காரணத்தையும் எடுத்துக் கூற உதவும்”.
“உங்களுடைய விசுவாசத்தைக் குறித்து வெட்கப்படாதீர்கள்; இதுவே இயேசுவுக்காகத் தம்மை இரத்தப்பலி கொடுத்தவர்களுக்கும், சீர்திருத்தவாதிகளுக்கும், பரிசுத்தவான்களுக்கும் நற்செய்தியாக இருந்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, இது பாதாளத்தின் வாசல்களாலும் மேற்கொள்ளப்படமுடியாத கடவுளின் சத்தியமாக இருக்கிறது. உங்களுடைய உதாரணம் உங்கள் கோட்பாடுகளைப் பரிந்துரை செய்யட்டும். மேலாக, இயேசுவுக்குள்ளாக வாழ்ந்திருந்து, அவர் வழிப்படி நடந்து, அவரால் அங்கீகரிக்கப்பட்டவையல்லாத வேறெந்தப் போதனையிலும் நம்பிக்கை வைக்காது பரிசுத்த ஆவியினால் கிறிஸ்துவுக்கு சொந்தமாக்கப்பட்டிருங்கள். இங்கே விளக்கப்பட்டிருக்கும் கடவுளின் வார்த்தையை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்.”