கடவுள் எத்தனையோ வழிகளில் தன்னை வெளிப்படுத்தியிருக்க முடியும்; இருந்தபோதும் அவர் எழுத்தையே தெரிவு செய்தார். அப்படியானால் அவ்வார்த்தையை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?
எழுத்தில் தெளிவான வெளிப்படுத்தல்
கடவுள் எழுத்தின் வடிவில் தன்னை வெளிப்படுத்தியுள்ள உண்மையை எவருமே மறுதலிக்க முடியாது. அவர் தன்னை நாட்டியத்தின் மூலமாகவோ, நாடகத்தின் மூலமாகவோ, அடையாளங்கள் மூலமாகவோ அல்லது சங்கீதத்தின் மூலமாகவோ வெளிப்படுத்தியிருக்க முடியும். இருந்தபோதும், கடவுள் எழுத்தையே நாடினார்.
அவர் ஆதியில் எமது மூதாதையர்களோடு பேசியிருக்கிறார். ஒருதடவையல்ல பல தடவைகள் கடவுள் தனது சித்தத்தை அவர்கள் அறிந்து கொள்ளும்படியாகப் பேசியிருக்கிறார். அவர் தொடர்ந்து அவ்வாறு செய்திருக்கலாம். ஆனால், மற்ற எல்லா வழிமுறைகளையும்விட எழுத்தையே கடவுள் விசேடமாக நாடினார் என்றால் அதற்கு முக்கிய காரணம் இருக்க வேண்டும். எழுத்தில் இல்லாத ஒலியை நாம் காதால் கேட்க முடிந்தாலும் அதை மறந்து போய்விடக்கூடிய வாய்ப்புண்டு. சாதாரண மனிதர்களான நம்மை தொடர்ந்து பார்க்கவும், வாசிக்கவும் சிந்திக்கவும் வைக்கக் கூடியது எழுதப்பட்ட வார்த்தை மட்டுமே. மற்ற வழிகளின் மூலம் கடவுளால் தொடர்ந்து தம்மை வெளிப்படுத்தியிருக்க முடிந்தாலும் அவற்றை அவர் கடைப்பிடிக்காததற்கு காரணம் இதுதான். அதுமட்டுமல்லாது கடவுள் நாம் சிந்திக்க வேண்டுமென்று விரும்புகிறார். அவர், தான் இதுவரை அடையாளங்கள், தீர்க்கதரிசனங்கள், நடைமுறைச் சம்பவங்கள், அற்புதங்கள், இரட்சிப்பிற்காகக் கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் ஏற்படுத்திய வழிமுறைகள் அனைத்தையும் எழுத்தில் கொடுத்த காரணமே நாம் சிந்தித்து அவற்றின் மூலம் அவரது சித்தத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் (1 கொரி. 10:1-11). ஆவியின் துணையோடு இவற்றை வாசித்து, சிந்தித்து வாழ்க்கையில் கடைப்பிடிப்பவர்கள் தேவனைப் பிரியப்படுத்துகிறார்கள்.
கிறிஸ்தவன் வாசிப்பவன்
இவற்றின் மூலம் நாம் எதைப் புரிந்து கொள்கிறோம்? அதாவது வேதம் ஒரு நூல்நிலையம் என்பதைத்தான். வேதத்தில் உள்ள அனைத்துப் புத்தகங்களும் கடவுளின் வரலாற்றையும், அவர் தன் சித்தப்படி செய்கின்ற காரியங்கள் அனைத்தையும் நமக்குத் தெரிவிக்கின்றன. கடவுளை அறிந்துகொண்ட அறிவில் வளரவேண்டிய அனைவரும் இந்நூல்நிலையத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வேதமாகிய நூல்நிலையத்தில் பயிலும் கிறிஸ்தவன் நல்ல பயனுற்ற கிறிஸ்தவ இலக்கியங்கள் இவற்றில் நாம் மேலும் விளக்கம் பெறத் துணையாக அமையும். மெய்யான கிறிஸ்தவன் வாசிப்பதில் ஊக்கம் காட்டுவான். வாசிக்க மறுக்கும் கிறிஸ்தவனுக்கும் வேதத்திற்கும் எந்தத் தொடர்புமேயில்லை.